.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்!

LGBT_flag
ஓரினச்சேர்க்கையாளர் குழுமக் கொடி
முன்னேற்றம் என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை, சமூகத்துக்கும் பொருந்தும்!

ஓரினச் சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.

அமெரிக்காவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...?

அகநானூறு முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல் நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.

ஒரு புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.

ஆணும் பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.

மறுபுறம், காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன! (எதிரெதிர் பாலினரோடுதான்!)

நம் பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன், ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப் பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல் அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு இல்லை.

இப்படி, பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாவா?

அதே நேரம், ‘இந்தியப் பண்பாடு எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள்! எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு! தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று இருக்கிறதா?

தமிழ்ப் பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு, மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள் இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப் பொய்!

பண்பாடு என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும், மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும்? கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு என்பார்கள். அதுவும் பொய்! ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது, கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும் ‘இந்துக்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி, ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும் அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள் இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும் உண்மையில்லாதது!

சரி, மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்!

அண்மைக்காலமாகத்தான் இந்தியாவில் பெண் விடுதலை ஓரளவு முன்னேறியிருக்கிறது. அஃது இன்னும் முழுமையடைந்தபாடில்லை. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணம் என்ன எனப் பார்த்தோமானால், அது பெண் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, பெண் ஆணோடு சேர்ந்தால் கெட்டுவிடுவாள் என்கிற தவறான கருத்தே பல விதமான பெண்ணிய அடக்குமுறைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

பெண்ணை ஏன் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள்? படித்தால் அறிவு பெற்று ஆணுக்குச் சமமாக உரிமை கேட்பாள் என்பதற்காக மட்டுமா? இல்லை; படிக்கப் போகும் இடத்தில் ஆண் பிள்ளைகளைப் பார்த்துக் காதல் வயப்பட்டு விடுவாள் என்பதே முதற் காரணம்.

பெண்ணை ஏன் வெளியிடங்களுக்குத் தனியே அனுப்பத் தயங்குகிறார்கள்? ஆண்கள் யாராவது அவளைக் கவர்ந்து விடுவார்களோ எனும் அச்சத்தின் காரணமாக.

கணவனுக்கு அடங்கியே நடக்க வேண்டும், ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கக்கூடாது – இப்படி, பெண்களுக்கு எதிரான இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான அடக்குமுறைகள் ஏதோ ஒரு விதத்தில் ஆணோடு பெண் பழகுவதைத் தடுக்கும் விதத்திலேயே அமைந்திருப்பதைக் கூர்ந்து பார்த்தால் உணர முடியும். தம் வீட்டுப் பெண்கள் மீது அவ்வ...ளவு நம்பிக்கை இந்தியச் சமூகத்துக்கு! (ஆனால், இது கூடப் பார்ப்பனர் வருகைக்குப் பின், இந்து மத எழுச்சிக்குப் பின் ஏற்பட்டதுதான், அதற்கு முன்பு வரை, காசுமீரம் வரை பரவியிருந்த தமிழர் நாகரிகத்தில் பெண்களின் நிலை இப்படியிருக்கவில்லை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து தமிழறிஞர்கள் எழுதியுள்ள நூல்களின் வாயிலாக அறியலாம்.)

இந்த நிலைமைகள் இன்னும் முழுமையாக மாறவில்லை. பெண் குழந்தைக் கொலை, வரதட்சணை, குழந்தைத் திருமணம் என அனைத்தும் தமிழ்நாடு முதல் காசுமீர் வரை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு ஏற்பிசைவு வழங்கினால் என்ன ஆகும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

முதலில், நாட்டிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக நடமாடத் தொடங்குவார்கள். ஓரினத் திருமணங்கள் நடைபெறும். ஓரின இணையர்களின் (தம்பதிகளின்) நேர்காணல்கள் போன்றவை வெளிவரத் தொடங்கும். இப்படி ஓரிரு இடங்களில் நடந்தாலே போதும். இந்தியா முழுக்க இப்படி ஒரு நாகரிகம் பரவி விட்டதாக ஊடகங்கள் பெரிதுபடுத்தும்.

இப்படியெல்லாம் நடந்தால், இத்தனை நாட்களாக ஆணோடு பழகினால் மட்டுமே பெண்ணைச் சந்தேகித்த சமூகம் இனி பெண்ணோடு பெண் பழகினாலும் சந்தேகப்படத் தொடங்காதா? அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்! பெண்கள் ஆண்களோடு பழகிக் காதல் கொண்டுவிடக்கூடாது, மணம்புரிந்து விடக்கூடாது, உடலுறவு கொண்டுவிடக்கூடாது என ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கும் ஒரு சமூகத்தில், பெண்ணும் பெண்ணும் கூடக் காதல் கொள்ளலாம், மணம்புரியலாம், உடலுறவு கொள்ளலாம் என ஏற்பிசைவு வழங்கினால் என்ன கதி ஆகும்? அப்படிப்பட்ட பெண்கள் யாருடனாவது சேர்ந்து தன் பெண்ணும் கெட்டுப் போய்விடுவாளோ எனப் பெற்றோர்கள் அஞ்ச மாட்டார்களா? அப்புறம் பெண்களை எப்படி வெளியில் அனுப்புவார்கள்? அட, வெளியில் அனுப்புவது கிடக்கட்டும். பெண்களோடு பெண்கள் பழகவே இனி தடை விதிக்க மாட்டார்களா?

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! ஆணோடு பெண் பழகக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, தொடக் கூடாது, வெளியில் போகக் கூடாது எனவெல்லாம் கட்டுப்பாடுகள் இருப்பது போல் பெண்ணோடு பெண் பழகக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, தொடக் கூடாது எனவெல்லாம் எழத் தொடங்கினால்... ஐயையோ! கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை!! பெண்களுக்கு எதிரான இத்தனை ஆண்டுக்கால அடக்குமுறைகளும் ஒன்றுமே இல்லை எனச் சொல்லக்கூடிய அளவிலான ஒரு பெருங்கொடூர அடக்குமுறையாக இஃது இருக்கும். இத்தனை ஆண்டுக்காலமாகப் பெண்கள் ஆண்களோடு பழக எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் பெண்களோடு பழகுவதற்கு எந்தவித வரைமுறையும் இல்லாமலிருக்கிறது. இரண்டு பெண்கள் ஒன்றாகக் கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாக உலவத் தொடங்கி, இனி பெண்ணோடு பெண் பழகுவதும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டால் பெண்களின் நிலைமை என்ன ஆகும்? பெண்களோடு பெண்கள் சிரித்துப் பேச முடியுமா? உடன் பயிலும் தோழிகளோடு தொட்டு விளையாட முடியுமா? ஒன்றாகத் தூங்க, குளிக்க, அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? பெண்ணுக்குப் பெண் துணையாக இரவில் தங்க முடியுமா? மகளிர் விடுதிதானே என இன்று பெண்களை வெளியூரில் தங்கிப் படிக்கவும், பணியாற்றவும் அனுப்புவது தொடருமா? மொத்தத்தில், பெண்களோடு பெண்கள் இயல்பாகப் பழக முடியுமா? எந்த அளவுக்கு இது பெண்களின் உளநிலையைப் பாதிக்கும் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எனவே, பெண்ணியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோர் சிந்திக்க வேண்டும்! ஓரினச் சேர்க்கை சரியோ தவறோ, ஆனால் அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு வழங்கும் அளவுக்கு இந்தச் சமூகம் இன்னும் முன்னேறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே இதை இப்பொழுதைக்கு நிறுத்தி வைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்! இல்லாவிட்டால், இந்தியப் பெண்கள் சமூகம் கற்பனைக்கெட்டாத ஒரு கொடுமைக்குள் தள்ளப்படும்!

தகுதியை வளர்த்துக் கொண்டுதான் முன்னேற வேண்டும். தகுதியில்லாத முன்னேற்றம் அழிவைத்தான் தரும். விழிப்புணர்ச்சி இல்லாத ஒரு சமூகத்துக்கு விடுதலையை வழங்கினால் அந்தச் சமூகம் அதை விடுதலையாகப் பார்க்காது; தங்கள் பன்னெடுங்கால நம்பிக்கையை, பண்பாட்டைச் சீரழிக்க வந்த ஏற்பாடாகத்தான் பார்க்கும். அந்தச் சீரழிவு தன் பிள்ளைகளைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காகப் பிள்ளைகளைக்கு ஏற்கெனவே இருக்கிற விடுதலையையும் அந்தச் சமூகம் சுருக்கும். எனவே, முதலில் பாலியல் விழிப்புணர்வை ஊட்டுவோம்! கற்பு என்பது உடலில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துவோம்! ‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை (சொன்ன சொல் தவறாமல் இருத்தல்) எனும் ஔவைக் கூற்றே நம் பழம்பெரும் பண்பாடு என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம்! அதன் பின், பேசலாம் இந்தப் பாலியல் விடுதலை.

படம்: நன்றி Ludovic Bertron.

இந்தப் பதிவைப் பரப்பி, சமூக ஆர்வலர்கள், பெண்ணியலாளர்கள் முதலானோர் பார்வைக்கு இந்தப் புதிய கோணம் சென்றடைய உதவுவீர்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. இவ்வளவு தூரம் ஓரின சேர்க்கை பற்றிய விழிப்புனர்வெல்லாம் பேசுபவர்கள் இளைஞர்களை பயமுறுத்தி கோடி கோடியாக காசு பார்க்கும் சேலம் சிவராஜ் சித்தவைத்தியரை பற்றி விழிப்புணர்வை குறைந்தபட்சம் தமிழக இளைஞர்களுக்காகவாவது ஏற்ப்படுத்துங்கள்.

    அறிவுறை சொல்வதுபோல் தொலைக்காட்சியில் புளுகி இளைஞர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செக்ஸ் சித்தவைதிய மாப்பியாக்களிடம் இருந்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால், இந்தப் பதிவில் 'ஓரினச் சேர்க்கை' பற்றி எதுவுமே பேசப்படவில்லையே நண்பரே! 'இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்குவது' பற்றி மட்டும்தான் இதில் அலசப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை என்பது உண்மையில் உணர்வா, நோயா? நோய் என்றால் சொந்த நோயா, தொற்று நோயா? உணர்வென்றால் சொந்த உணர்வா, தொற்று உணர்வா? இது சரிப்படுத்தப்பட வேண்டியதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதா என்பது பற்றியெல்லாம் பல குழப்பங்கள் உள்ளன. எனவேதான் அது பற்றி நான் பதிவில் வாயே திறக்கவில்லை. கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. பச்சைப் பொய் என்பது உண்மை... சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஐயா...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்