விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே
பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை
அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித
உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது!
பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு
வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப்
பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப்
பொருளாகியிருக்கிறது!
விடுதலைப்புலிகள் போலத் தோற்றமளிக்கும் சிலர் தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்வது போல் வெளியான காணொலி (வீடியோ) ஒன்று
முதன்முதலாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன் பிறகு வெளிவந்த, ஈழத் தமிழினப் படுகொலை பற்றிய ஐ.நா வல்லுநர் குழுவின் தொடக்க நிலை விசாரணை அறிக்கையிலும் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றது. அதை
அடுத்து வெளிவந்த, உலக மன்னிப்பு கழகம் (Amnesty) முதலான
எல்லா மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலும் இதே குற்றச்சாட்டு
குறிப்பிடப்பட்டது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து எல்லா மட்டங்களிலும் இந்தக்
குற்றச்சாட்டு பேசப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஆனால், இன்று வரை இதற்குத்
தமிழர் தரப்பிலிருந்து யாருமே பதிலளிக்காமல் இருப்பது இந்தக் குற்றச்சாட்டை விடக்
கொடுமையான ஒன்று!
தலைவர்.வைகோ அவர்களோ, ஐயா பழ.நெடுமாறன் அவர்களோ, அண்ணன்.சீமான்
அவர்களோ, அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களோ... யாருமே இந்தக் குற்றச்சாட்டு பற்றி இதுவரை
எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிப்படையான
ஆதரவாளர்களும், உண்மையான தமிழ்த் தலைவர்களுமான இவர்களே விடுதலைப்புலிகளுக்கு எதிரான
இந்தச் சகிக்க முடியாத குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல் இருப்பதுதான் இந்தக்
குற்றச்சாட்டின் மீதான நம்பகத்தன்மையையே உறுதிப்படுத்தி வருகிறது என்பதைக் கனிவு
கூர்ந்து இவர்கள் முதலில் உணர வேண்டும்!
தமிழினப் படுகொலை பற்றி உலக நாடுகளும், அதன்
பிரதிநிதிகளும்
பேசும்பொழுது, பன்னாட்டு அமர்வுகளில் இது பற்றி விவாதம் எழும்பொழுது, வடநாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் இது குறித்து உரையாடப்படும்பொழுது – இப்படி உலகில் யார், எங்கே இந்த இனப் படுகொலை குறித்துப் பேசினாலும் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டைப் பற்றியும் சேர்த்துத்தான் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால், நம் தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ்நாட்டு ஊடகங்களும் மட்டும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றிய தங்களுடைய எந்த ஒரு பேச்சிலும், எழுத்திலும் இது பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இது, மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அளவிட முடியாத வலிமையைச் சேர்க்கிறது!
பேசும்பொழுது, பன்னாட்டு அமர்வுகளில் இது பற்றி விவாதம் எழும்பொழுது, வடநாட்டு, வெளிநாட்டு ஊடகங்களில் இது குறித்து உரையாடப்படும்பொழுது – இப்படி உலகில் யார், எங்கே இந்த இனப் படுகொலை குறித்துப் பேசினாலும் இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டைப் பற்றியும் சேர்த்துத்தான் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால், நம் தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ்நாட்டு ஊடகங்களும் மட்டும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றிய தங்களுடைய எந்த ஒரு பேச்சிலும், எழுத்திலும் இது பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இது, மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அளவிட முடியாத வலிமையைச் சேர்க்கிறது!
இப்பொழுதுதான் ஈழப் பிரச்சினை பற்றியும்,
விடுதலைப்புலிகள் பற்றியுமான நல்ல ஒரு விழிப்புணர்வு தமிழ்நாட்டிலும், உலகத்
தமிழர்களிடையிலும் பரவி வருகிறது. விடுதலைப்புலிகள் என்றாலே தீவிரவாதிகள் என்றும்,
இராஜீவ் காந்தி எனும் தர்மத்தின் தலைவனைக் (!) கொன்றவர்கள் என்றும், உலக நாடுகள் அனைத்தாலும்
தடை செய்யப்பட்ட கொடும் குற்றவாளிகள் என்றும்தான் பெரும்பாலான மக்கள் கருதி
வந்தார்கள். ஆனால், நடந்த தமிழினப் படுகொலையும், அது பற்றித் தலைவர்.வை.கோ,
அண்ணன்.சீமான் முதலானோர் தொடர்ந்து மக்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளும், இனப்படுகொலை
பற்றி இணையத்தில் தமிழ்ப் பற்றாளர்களும் அறிஞர்களும் பரப்பிய விழிப்புணர்வுத்
தகவல்களும்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கின்றன.
விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்புக்கு எப்பேர்ப்பட்ட ஒரு கட்டாயத் தேவை
இலங்கையில் நிலவுகிறது என்பது மக்களுக்கு இப்பொழுது தெரிய வந்திருக்கிறது. அவர்கள்
மீது எத்தனை பொய்க் குற்றச்சாட்டுகள் யார் யாரால், எந்தெந்த நாடுகளால், என்னென்ன
நோக்கத்துடன் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் புரியத் தொடங்கியிருக்கிறது.
இந்தப் புரிதல்தான் அண்மையில் உலகமே திரும்பிப்
பார்க்கும்படியான அவ்வளவு பெரிய மாணவர் கிளர்ச்சியைத் தமிழ்நாட்டில் மலர வைத்தது!
இந்நிலையில், ஈழத் தமிழர்கள் சார்பானவராக நம்பப்படுகிற,
ஈழத் தமிழர்களுக்காக ஐ.நா-வில் முழங்கும் தமிழராகத் திகழ்கிற நவநீதம் பிள்ளை
அவர்களால் மீண்டும் புலிகள் மீதான இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
கிளம்பியிருப்பதும், ஆனாலும் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழ்த் தலைவர்கள்
பதிலளிக்காமல் இன்னமும் அமைதி காப்பதும் ஈழப் பிரச்சினை, விடுதலைப்புலிகள் ஆகியவை பற்றி
இப்பொழுது நிலவும் நல்ல விழிப்புணர்வுச் சூழ்நிலையைக் கண்டிப்பாகப் பாதிக்கும்
என்பதை அருள்
கூர்ந்து அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்! மேலும், இந்தக்
குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளை மட்டுமின்றி அவர்களை ஆதரிக்கிற தமிழ்நாட்டுத்
தலைவர்கள், இயக்கங்கள் ஆகியோரையும் இவர்களைப் பின்தொடரும் இலட்சக்கணக்கான தமிழ்
இளைஞர்களையும் கூட இழிவுபடுத்துவதாக இருக்கிறது! எல்லாவற்றுக்கும் மேலாக, நமது இனப்படுகொலைக்கான
நீதி கோரும் முயற்சிக்கும், தமிழீழக் கோரிக்கைக்கும் கூட இந்தக் குற்றச்சாட்டு
பலவீனம் சேர்க்கிறது.
ஒருபுறம், நம் இனத்தை அழித்த இலங்கை
ஆட்சியாளர்களைத் தண்டிக்கக் கோரித் தமிழர்கள் நாம் உலகெங்கும் போராடிக்
கொண்டிருக்கையில், மறுபுறம் உலகமே ஓரணியில் நின்று விடுதலைப்புலிகள் மீதும் இதே
போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது கண்டிப்பாக நம் தரப்புக் குற்றச்சாட்டை வெகுவாகப்
பலவீனப்படுத்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல, தமிழீழம் கோரிய
விடுதலைப்புலிகளைத் தவறானவர்களாகவும், தமிழர்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும்
இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ‘தமிழீழம் என்கிற கோரிக்கையே தவறானது, தமிழர்களுக்கு
எதிரானது’
என்கிற தோற்றம் உருவாகிறது; படிப்படியாக உருவாக்கப்பட்டும் வருகிறது. தனி நாடு
கேட்ட ஒரே காரணத்துக்காகத் தமிழ் இனத்தையே அழிக்கப் பேரழிவு ஆயுதங்களைக்
கையிலெடுத்த இலங்கை முதலான உலக நாடுகள், அந்தக் கோரிக்கையையும் அழிக்க இப்பொழுது
இந்த அரசியல்ரீதியான நச்சு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை!
இந்த உலக மகா அரசியல் தந்திரத்தைப் புரிந்து
கொள்ளாமல், இந்தக் குற்றச்சாட்டுக்குத் தக்க பதிலளிக்காமல் வெறுமே
தமிழீழத்துக்காகவும், இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் நாம் போராடுவது எந்த
விதத்திலும் பலனளிக்காது என்பதை நம் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது
இன்றியமையாதது!
எனவே, இனிமேலாவது தமிழ்நாட்டுத் தலைவர்களும்,
தமிழ் ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டு குறித்த தங்கள் மௌனத்தை உடைத்துக் கொள்ள
வேண்டும்! உலகமே சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது சுமத்தும் இந்தக் கொடிய
குற்றச்சாட்டுக்குச் சரியான பதிலை, விளக்கத்தை இப்பொழுதாவது முறைப்படி அளிக்க
வேண்டும்!
அந்த
அளவுக்கு இது ஒன்றும் பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டும் இல்லை.
விடுதலைப்புலிகள் பற்றியும், அவர்கள் நற்பெயரைக் குலைப்பதற்காக இலங்கை அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் திட்டமிட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவு நன்றாகவே அறிந்தவன் என்னும் முறையில் இந்தக் குற்றச்சாட்டு பற்றி எனது கருத்து என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கெனவே இலங்கை இராணுவத்தில் ‘பச்சைப் புலிகள்’ என ஒரு தனிப் பிரிவே இயங்கி வருகிறது. இது அவர்கள் செயலாகத்தான் இருக்க வேண்டும்.
ஒழுக்கமின்மை, துரோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்துக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை விலைக்கு வாங்கி, மூளைச் சலவை செய்து, அவர்களுடன் சிங்கள இராணுவத்தினர் பலரையும் கலந்து தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவு. விடுதலைப்புலிகள் தோற்றத்திலேயே சென்று தமிழ்த் தலைவர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகியோரைக் கொல்வதன் மூலம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் போலக் காட்டுவதும், அதே போல் ஈழத் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்குள் விடுதலைப்புலிகள் தோற்றத்தில் புகுந்து அவர்களைக் கொல்வதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் மீது இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதுமே இவர்கள் பணி! அந்தக் காலத்தில் இலங்கைத் தமிழர் தலைவர்.உயர்திரு.அமிர்தலிங்கம் அவர்களைக் கொன்று அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியதுதான் இவர்கள் செய்த முதல் வேலை. அதன் பின் இப்படி இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், சிங்களப் பொதுமக்கள் ஆகிய பலரை இவர்கள் இப்படி விடுதலைப்புலிகள் தோற்றத்தில் போய்க் கொன்றிருக்கிறார்கள்!
இவ்வாறு பல்லாண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரைக் கெடுப்பதற்கான இத்தகைய செயல்களில் ஈடுபட்ட இவர்கள் நடந்த அந்த இனப்படுகொலையின்பொழுது மட்டும் தமது கைவரிசையைக் காட்டாமலா இருந்திருப்பார்கள்? அதுவும் விடுதலைப்புலிகள் எல்லா வல்லமைகளோடும் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பல கொடுமைகளில் அவர்களால் ஈடுபட முடிந்தது என்றால், இனப்படுகொலையின்பொழுது, அந்த உச்சக்கட்டப் போர்ச் சூழலில், விடுதலைப்புலிகளின் முழுக் கவனமும் எல்லைப் பாதுகாப்பிலேயே குவிந்திருந்த நேரத்தில் இவர்களால் வெகு எளிதாகத் தமிழர் பகுதிக்குள் ஊடுருவி அவர்களைக் கொன்றிருக்க முடியாதா? எனவே, கண்டிப்பாக இது அந்தப் ‘பச்சைப் புலிகள்’ பிரிவினருடைய வேலையாகத்தான் இருக்க முடியும்.
விடுதலைப்புலிகள் தோற்றத்தில் அவர்கள் செய்த இந்தக் கொடும் செயல்களைக் காணொலியில் பார்த்து விட்டும், அவர்களை விடுதலைப்புலிகள் என்று நம்பி ஏமாந்த ஈழத் தமிழர்களின் வாக்குமூலத்தைக் கொண்டும்தான், ‘இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக’ ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளும், உலகத் தலைவர்களும், ஊடகங்களும்
குற்றஞ்சாட்டி வருகின்றன என்பதுதான் என் வாதம்.
ஆக, கொலையும்
செய்துவிட்டு, கொலைக்கான பழியையும் செத்தவன் மீதே போடும் வேலை இது! ஓர் இனத்தையே
அழித்து ஒழித்துவிட்டு, அதற்கு நியாயம் கேட்டுக் குரல் எழுப்பினால் அழித்தவர்களே
உங்கள் ஆட்கள்தான் என்று மகா மட்டமான திசை திருப்பல் வேலையைச் செய்ய முயல்கிறது
இலங்கைச் சிங்கள அரசு.
ஆனால், இது நான்
சொன்னால் எத்தனை பேருக்குப் போய்ச் சேரும். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதைப்
படிக்கும் ஓர் ஐந்நூறு அறுநூறு பேருக்குப் போய்ச் சேருமா? அதுவே பெரிது! தவிர,
இப்படி வலைப்பூவில் விளக்கமளிப்பதெல்லாம் பன்னாட்டுக் குற்றச்சாட்டு ஒன்றுக்கான
முறையான விளக்கமும் ஆகாது!
எனவே, முன்னரே
கூறியபடி, பேரன்புக்கும் தனிப்பெருமதிப்புக்கும் உரிய தலைவர்.வை.கோ
அவர்களே! ஐயா பழ.நெடுமாறன் அவர்களே! அண்ணன்.சீமான் அவர்களே! அண்ணன்.கொளத்தூர் மணி அவர்களே!
அருள் கூர்ந்து இது பற்றிப் பேச நீங்கள் முன்வர வேண்டும்! விடுதலைப்புலிகளின்
இத்தனை ஆண்டுக்காலத் தியாக வாழ்க்கைக்குக் களங்கம் கற்பிக்கும் இந்த உலகளாவிய
குற்றச்சாட்டுக்கு நீங்கள்தான் தக்க பதிலடி தர வேண்டும்! விடுதலைப்புலிகளைக்
குற்றஞ்சாட்டும் சாக்கில் தமிழீழக் கோரிக்கையை ஒடுக்கவும், இனப்படுகொலைக்
குற்றச்சாட்டைத் திசை திருப்பவுமான இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழீழ
மலர்ச்சிக்கும் இனப்படுகொலைக்கான நீதி கிடைப்பதற்கும் இன்றியமையாதது என்பதால் இதற்கான
தக்க விளக்கத்தை முறைப்படி ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளுக்கு நீங்கள் உடனே அனுப்பி
வைக்க வேண்டும்! விடுதலைப்புலிகள்
அமைப்பின் மீதான தடையை நீக்குவதை விட இந்தப் பழியை நீக்குவதுதான் அவர்களுக்கு நாம்
செய்ய வேண்டிய முதற் கடமை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அதுவும் விடுதலைப்புலிகளும், அதன் தலைவர்களும் தலைமறைவாக இருக்கும் இன்றைய சூழலில் அவர்கள் மேல் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை இல்லையா? நீங்களே
செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்வார்?!
பி.கு: இதற்கு
முன், ஈழத் தமிழினப் படுகொலை பற்றிய ஐ.நா வல்லுநர் குழுவின் தொடக்கநிலை விசாரணை அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றபொழுதும்
இதே விளக்கத்தை நான் வெளியிட்டிருந்தேன். பார்க்க http://tinyurl.com/l9a36ep.
படங்கள்: நன்றி virakesari.lk, eutamil.com, ungalrajiv.blogspot.com, periyarthalam.com, envazhi.com.
படங்கள்: நன்றி virakesari.lk, eutamil.com, ungalrajiv.blogspot.com, periyarthalam.com, envazhi.com.
(இந்தக் கட்டுரையைப் பின்னாளில் ஈழம் செய்திகள் தளத்தில் வெளியாக வைத்த புகழ்பெற்ற தமிழ்ப் பற்றாளர் உயர்திரு.பரணி கிருஷ்ணரஜனி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக!).
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக