.

திங்கள், ஏப்ரல் 27, 2020

ஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’


Seventh Birthday of Aga Sivappu Thamizh

நேசத் தமிழ் நெஞ்சங்களே!

இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!!

இந்தக் கொலைகார நோய் ஒழிய வேண்டும்! பூமியின் எந்த மூலையிலும் ஒற்றைத் தீநுண்மி (virus) கூட மிச்சமில்லாமல் இது அழிய வேண்டும்! வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பமோ மாறாப் புகழ் கொண்ட மரபு மருத்துவமோ ஏதாவது ஒன்று இதைச் சாதித்தே தீரும் எனும் நன்னம்பிக்கையுடன் இந்தப் பிறந்தநாள் பதிவைத் துவக்குகிறேன்.

முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்த ஏழு ஆண்டுகளில் எழுதப்பட்ட பதிவுகள், கருத்துக்கள், பார்வைகள், அகத்தினர்கள் (followers) எண்ணிக்கை பின்வருமாறு:

காலக்கட்டம்
பதிவுகள்
கருத்துகள்*
பார்வைகள்
அகத்தினர்கள்**
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
ஏப்ரல் 2019 -
ஏப்ரல் 2020
18
103
28298
17
மொத்தம்
143
1628
3,37,863+
2026
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.


தளத்தை அதிகம் படிக்கும் நாடுகள்:

நாடுகள்
பக்கக்காட்சிகள்
இந்தியா
138000
அமெரிக்கா
90400
இரசியா
14700
அறியப்படாத பகுதி
11900
பிரான்சு
8930
வழக்கமாக, புள்ளிவிவரங்களுக்குப் பின் அந்த ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடுவேன். ஆனால் முந்தைய ஆண்டில் அதிகப் பார்வைகளைப் பெற்ற அதே பதிவுகள்தாம் கடந்த ஆண்டும் முன்னணி வகித்திருக்கின்றன. தரநிலைதான் கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக மாறியிருக்கிறதே தவிர புதிதாக எந்தப் பதிவும் அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பதால் நேராக அடுத்த பகுதிக்குத் தாவுகிறேன்.


நினைவகத்தில் சில நிகழ்வுகள்

Some Events in my Memory
கடந்த ஆண்டின் பதிவுகளிலேயே முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்தது தாய்மொழி –சிறுகதை. பெரியவர்களுக்கான என் கதைகளில் முதன் முதலில் வெளியானது இதுதான். 24.10.2016 அன்று திண்ணை இதழில் வெளிவந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் இந்தித் திணிப்பை எதிர்த்து துவிட்டரில் #StopHindiImposition எனும் சிட்டை (tag) பெரும் சூறாவளியாய்ப் பரவியபொழுது அதுதான் சமயம் என்று இந்தக் கதையை வலைப்பூவில் வெளியிட்டு, குறிப்பிட்ட சிட்டையில் பகிர்ந்தேன். நல்ல வரவேற்பு!

தோழர்களும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். தவிர, நண்பரும் உறவினருமான சியாம் சுந்தர் அவர்கள் தன் நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து பலரும் தொடர்ந்து பாராட்டியபடி இருப்பதாகத் தெரிவித்தார். யாரிடம் இது சென்றடைய வேண்டும் என த்தனை நாள் காத்திருந்தேனோ அந்த இளைய தலைமுறையிடம் ஓரளவாவது கதை சென்று சேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.

முதன் முறையாகக் கடந்த ஆண்டு பகடிக் காணொலி (troll video) ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் எனும் தலைப்பிலான இந்தப் பகடி, நாட்டின் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவின் பொருட்டு ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட அறச்சீற்றத்தைத் தணித்துக் கொள்ள உதவியது. இதற்காக நான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப விதயங்கள் சுவையானவை என்பதால் எந்த வரவேற்பும் கிடைக்காவிட்டாலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பதிவுகளில் இதுவும் ஒன்று.


கடந்த ஆண்டுப் பதிவுகள் பலவற்றின் இறுதியில் தினச்செய்தி நாளிதழில் வெளியானது என்ற குறிப்பைப் பார்த்திருப்பீர்கள். என்னதான் இணையத்தில் விருப்பக்குறிகளும் பாராட்டுகளும் சுவைத்தாலும் அச்சு ஊடகத்தில் அதுவும் நாளிதழில் நம் படைப்புகளைப் பார்ப்பது தனி உணர்வுதான் நண்பர்களே! என்னை விட எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் நம் பதிவுலகில் இருக்கிறீர்கள். நான் பெற்ற அந்த இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

தினச்செய்திக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்! படிப்போர் (வாசகர்) பகுதிதான் என்றாலும் பார்க்க அப்படி இருக்காது. நடுப் பக்கத்தில், அதுவும் அறிஞர்கள், புகழாளர்கள் படைப்புகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்தும் இடம்பெறும். அது மட்டுமில்லை, மாநகரின் முக்கிய பகுதிகளில் உங்கள் கட்டுரை பற்றிய அறிவிப்பை உங்கள் பெயர் மற்றும் படத்துடன் சுவரொட்டியாக ஒட்டுவார்கள்! தவிர வெகுமதியும் உண்டு! அனுப்ப: editorial@dinacheithi.com.

தமிழர் வரலாற்றிலேயே மிகவும் பொன்னான ஆண்டு கடந்த 2019. காரணம் கீழடி! ஒரே நாளில் சங்கக் காலத்தின் தொன்மையை முந்நூறு ஆண்டுகள் முன்தள்ளி வைத்தன கடந்த ஆண்டு வெளிவந்த கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். உலகத் தமிழர்கள் அனைவரும் பெருங்களிப்பில் வான்முட்ட எகிறிக் குதிக்க வேண்டிய தறுவாய் அது. ஆனால் அப்பொழுதும் நம் மக்கள் திராவிட–தமிழ்த் தேசியச் சண்டையிட்டது சொற்களைத் தோற்கடிக்கும் வேதனையின் உச்சம்.

அந்தச் சர்ச்சையை முடித்து வைப்பது கண்டிப்பாக என்னால் முடியக் கூடியது இல்லை என்றாலும் எத்தனையோ கோடித் தமிழ் மக்களில் எங்கேயாவது யாரேனும் ஒருவரையாவது தொடட்டுமே எனும் எண்ணத்தில் கீழடி!– தமிழ் நாகரிகமா, திராவிடநாகரிகமா? எனும் கட்டுரையை எழுதினேன். எழுதியவன் மட்டும்தான் நான். ஆனால் முடித்த பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுதினால் இன்றைய தமிழ் அரசியல் சூழலில் இதற்கான எதிர்ப்பு எப்படி இருக்குமோ என நான் பெரிதும் தயங்கிய பொழுது எனக்கு இணையில்லாத் தெம்பூட்டி அதைத் தன் நாளிதழில் வெளியிட்டுத் தந்தவர் கனிவுமிகு மாமனிதரான தினச்செய்தி ஆசிரியர் இரியாசு அகமது அவர்கள்.

பின்னர் வலைப்பூவில் வெளியிட்ட பிறகும் இது பெரிய வெற்றி பெற்றது. துவிட்டர் தி.மு.க-வினர் அளித்த ஆதரவு அதற்கு இன்றியமையாக் காரணம் என்பதையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விடப் பதிவுலகில் கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்ததிலேயே மிக மிக முக்கியமானது பதிவுலகப் பெருமக்களின் நேசம்! ❤ ❤

கடந்த ஆண்டு நான் அமேசானின் கிண்டில் நடத்திய பென் டூ பப்ளிசு 2019 போட்டியில் கலந்து கொண்டு 13ஆம் உலகில் ஒரு காதல் எனும் புதினத்தை எழுதியிருந்தேன். அன்பிற்கினிய பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் என் நூலைப் படித்துப் பார்த்து அது பற்றி வலைப்பதிவும் எழுதியது கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன். என் முதல் நூலுக்குக் கிடைத்த முதல் மதிப்புரையாக (விமர்சனம்) அஃது அமைந்தது!

அதில் அவர் நூலைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் நான் அளவிலா நன்றிக்கடன் பட்டுள்ளேன். மாபெரும் தமிழ்த் தொண்டர்களையும் பேரறிஞர்களையும் பற்றித் தொடர்ந்து தன் வலைப்பூவில் எழுதி வந்தவர் மதிப்புரையின் இறுதியில் என்னையும் அறிமுகப்படுத்தி அதே பாணியில் எழுதியது எனக்குக் கிடைத்த பெரும் பேறு!

அந்தப் பதிவிலும், புதினத்தைப் படிக்க வருமாறு அழைத்து நான் இங்கு எழுதிய பதிவிலும் கருத்துரைப் பகுதியில் பதிவுலகத் தோழர்கள் எனக்கு அளித்த பாராட்டும் வாழ்த்தும் ஊக்கமும் என்னை உண்மையில் திக்குமுக்காடச் செய்து விட்டன. குறிப்பாக ஜோதிஜி அவர்கள் அளித்த பாராட்டெல்லாம் மறதி நோயே (amnesia) வந்தாலும் என்னால் மறக்க இயலாதவை! அன்புமிகுந்த அந்தப் பதிவுலக அன்பர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிரம்பித் ததும்பும் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்!

Wishes from blogger friends for my novel release

அடுத்து, பதிவுலகின் சிகரப்புகழ்ப் பதிவர்களில் ஒருவரும் சீரிய சிந்தனையாளருமான மது கஸ்தூரிரங்கன் அவர்களும் கதையைப் படித்து விட்டுத் தனக்கே உரிய பாணியில் அமர்க்களமான ஒரு திறனாய்வை வழங்கினார். வெறும் பாராட்டு மட்டுமின்றி நூலின் நிறைகள் குறைகள் என இரண்டையும் எடுத்துக்காட்டும் நல்லதொரு திறனாய்வாக அஃது இருந்தது. மது அவர்கள் எப்பேர்ப்பட்ட படிப்பாளி என்பதை நானறிவேன். அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது எனக்குக் கிடைத்த சிறந்த ஏற்பிசைவு (recognition).

ஆனால் அதை நான் உரிய நேரத்தில் பார்க்கத் தவறி, அளவு கடந்த தாமதமாகக் கடந்த வாரம்தான் பார்த்தேன். அதுவும் அவரே தெரிவித்த பிறகு. மிகவும் வெட்கமாகி விட்டது. அதனால் இந்த ஆண்டிலிருந்தாவது உங்கள் எல்லார் வலைப்பூக்களுக்கும் தவறாமல் வந்து விட உறுதி பூண்டுள்ளேன்!

கடந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகள் தொடர்பாகவும் பதிவுலகம் தொடர்பாகவும் நடந்த முக்கிய நிகழ்வுகளைத்தாம் இங்கே எழுதி வருகிறேன் என்றாலும் ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ நூலுக்குத் தேமொழி அவர்கள் தந்த மதிப்புரையையும் இதே தளத்தில் நான் வெளியிட்டிருந்தேன் எனும் வகையில் அதையும் இங்கே குறிப்பிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.

தமிழறிஞர்கள் மட்டத்தில் பெரும் புகழ் பெற்ற மடலாடற்குழுவான மின்தமிழின் உறுப்பினரும் எழுத்தாளருமான தேமொழி அவர்கள் என் புதினத்துக்கு அளித்திருந்த மதிப்புரை என்றென்றும் நான் நன்றியுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. கதையின் போக்கு, கதைமாந்தர்களின் குணநலன், உரையாடல், காட்சி அமைப்பு என நூலை எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி அவர் வழங்கியிருந்தது தரமான துறைசார் (professional) திறனாய்வு! அவர் அதில் என்னைப் பற்றி எழுதியிருந்த வரிகளுக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும் என்பது உறுதி! தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்துருகும் நன்றி!

இவ்வரிசையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு பதிவு, கடந்த மாதம் எழுதிய “மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? எனும் கட்டுரை. வெகுநாட்களாக நான் உள்ளத்தில் மட்டுமே வடித்து வைத்திருந்த இக்கட்டுரையைக் காதல் இணையர் இளமதி-செல்வன் பிரிக்கப்பட்டதை ஒட்டி எழுத்தாக்கினேன். காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுவது சங்கக் காலத்திலிருந்தே தமிழ் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறைதான் என வரலாற்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். கூடவே தூய்மையான சாதி உதிரம் என்பது இங்கு யார் உடம்பிலும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதையும் ஏரணத்துடன் (logic) விளக்கியிருந்தேன்.

ஆனால் இதைப் படிக்கக் கூடச் செய்யாமல் பேசுபுக்கில் சாதி வெறியர்கள் என்னைக் கழுவி ஊற்ற, மறுகையாக (பதிலுக்கு) என் தோழர்கள் அவர்களை வதக்கி எடுக்க, என் பேசுபுக்கு காலக்கோடு கலவரமானது. அதே நேரம், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களிடமும் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர்களிடமும் இக்கட்டுரை சிறந்த பாராட்டுக்களைப் பெறத் தவறவில்லை.

கடந்த ஆண்டின் பதிவுலகத் துயரம் ‘தமிழ்மணம்’ தன் சேவையை முற்றிலுமாக நிறுத்தியதுதான். தமிழ்ப் பதிவுலகுக்கே ஒரு பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ்மணம் திரட்டி, மாறி வரும் காலச் சூழல் காரணமாக ஏப்ரல் 2017-18 காலக்கட்டத்திலேயே தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தி விட்டது. அதற்கு மாற்றாக, தளத்துக்கு நேரிடையாகச் சென்றாவது பதிவுகளைப் பார்வைக்கு வைக்க வாய்ப்பளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சூலை 26, 2019-உடன் அந்தச் சேவையையும் தமிழ்மணம் நிறுத்தி விட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது.

ஒரு காலத்தில் தமிழ்ப் பதிவுலகம் என்பது ஒரு மாற்று ஊடகமாகவே திகழ்ந்தது என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். திரைப்படப் பாடலாசிரியர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இதழாளர்கள் என அன்று தனக்கென வலைப்பூ வைத்துக் கொள்ளாத ஆளே படைப்புலகில் இல்லை.

ஆனால் பேசுபுக்கு, துவிட்டர் எனச் சமுக ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய பிறகு எழுத்தார்வம் உள்ளவர்கள் கரை ஒதுங்கப் பதிவுலகம் மட்டுமே தேர்வு எனும் சூழல் மாறிப் போயிற்று. வலைப்பூ நடத்திய பெரும்புள்ளிகள் முதல் வலைப்பூ நடத்தியே பெரும்புள்ளி ஆனவர்கள் வரை எல்லாரும் அக்கரைக்குச் சென்ற பின் தமிழ்மணம் போன்ற ஆலமரங்களின் வீழ்ச்சியை எப்படித் தடுக்க முடியும்!

ஆனால் இது காலத்தின் மாற்றம்; ஏற்றுக் கொண்டுதானே      ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே “அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டா! ஓர் ஆலமரம் வீழ்ந்தால் என்ன? இந்தா, பிடித்துக் கொள் இன்னொன்று!” என்று பதிவுலகைத் தாங்க இன்னோர் அசத்தல் திரட்டியைப் படைத்திருக்கிறார்கள் தமிழ்ப் பதிவுலகின் தொழில்நுட்பப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்களும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களும் இணைந்து. பதிவுலகில் கடந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன்.
Tamilcharam

ஒரு தடவை நம் தளத்தை இணைத்தாலே தானாகவே ஒவ்வொரு தடவையும் நம் வலைப்பதிவுகளை இற்றைப்படுத்திக் கொள்ளும் (update) திறன், செயற்கை நுண்ணறிவால் (artificial intelligence) பதிவுகளைத் தானே வகை பிரித்துக் காட்டும் வசதி, கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளுக்கு உகந்த பயனர் இடைமுகம் (user interface) எனப் பல நுட்பங்களோடு வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளம் பதிவுலகில் புதுக் குருதி பாய்ச்சும் என நம்புவோம்.

மேலும் பிளாகர் அண்மையில் புதிய பயனர் இடைமுகத்தை (New User Interface) அறிமுகப்படுத்தியுள்ளது. எப்பொழுதிலிருந்து என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்திலும் இது பற்றித் தகவல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் நேற்றைக்கு முன்நாள்தான் தற்செயலாகக் கவனித்தேன். என்னென்ன மாற்றங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. புள்ளிவிவரங்கள் பகுதி மட்டும் மிகவும் புதுவிதமாக, அழகாக இருக்கிறது. அதிகத் தகவல்களையும் வழங்குகிறது. முக்கியமாக இது கைப்பேசியிலிருந்து பிளாகர் கணக்கை அணுக மிகவும் உகந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்களும் இந்தப் புதிய இடைமுகத்துக்கு மாற உங்கள் பிளாகர் கணக்குக்குள் சென்று இடப்பக்கப் பட்டியின் முடிவில் உள்ள ‘புதிய Bloggerஐப் பயன்படுத்து’ எனும் பொத்தானை அழுத்துங்கள். உதவிப் படம் கீழே: 

Blogger New User Interface Button loction

நனி நன்றி!

இணைய உலகமே சமுக ஊடகங்களை மையமாய்க் கொண்டு சுழலத் துவங்கி விட்ட இற்றை நாளிலும் பதிவுலகை மறவாமல் தமிழில் பதிவுகளை எழுதியும் படித்தும் வரும் தமிழார்வலர்களுக்கு…

இன்றளவும் என் தளத்தைப் படித்துப் பகிர்ந்து ஆதரவளிக்கும் அன்பு அகத்தினர்களுக்கு...

தங்கள் விருப்பத்துக்குரிய வலைப்பூக்களின் பட்டியலில் இந்தப் பூவையும் தொடுத்து உதவும் எனதருமைப் பதிவுலகப் பெருமக்களுக்கு...

தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், எழுதிய பின் அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறி என்னைச் செழுமைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல, தினச்செய்தி இதழ்களின் ஆசிரியர்களுக்கு...

வாழ்விலேயே முதன்முறையாக நாளிதழில், அதுவும் தொடர்ந்து எழுத அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, என் எழுத்துக்கும் பணமதிப்பு ஒன்று உண்டு என்பதைப் புரிய வைத்த, பெருமதிப்புக்கும் என் பேரன்புக்கும் உரிய திரைப்படைப்பாளி இயக்குநர் உயர்திரு.புகழேந்தி தங்கராசு அவர்களுக்கு…

என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு...

இப்படியெல்லாம் திட்டினால் இவன் இன்னும் இது போல் அதிகம் எழுதுவான் என்பது தெரியாமல் என்னை உசுப்பி விடும் என் அறிவுகெட்ட எதிரிகளுக்கு...

பதிவுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திரட்டிகள், முக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு...

வலைப்பூவின் ஓட்டமும் வாட்டமும் அறிந்து சீர் செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்களுக்கு (Data Analyzing Sites)...

பதிவுகளுக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்துக்கு...

பதிவுகளைக் கண்கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப் படங்களையும் இன்ன பிறவற்றையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு...

பதிவுகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட உரிய தகவல்களை வழங்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் போன்றவற்றுக்கு...

எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு...

என அனைவருக்கும்...

யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...
Thanks

காணிக்கை

என் உச்சக்கட்ட இயலுமைகளை
எனக்கே எடுத்துக்காட்டிய
பேராசான்

சுணங்கிப் படுக்கும் பொழுதெல்லாம்
எழுந்து ஓட வைக்கும்
எரிபொருள்

புதிய உயரங்களை நான் எட்ட
முதல் தூண்டுதலாய்த் திகழும்
பெருங்காரணன்

என் பிறவித் தோழன்
ஆருயிர் மைத்துனன்
பிரகாஷ் சங்கர் அவர்களுக்கு
இந்த ஆண்டின்
பதிவுலகப் பயணத்தைக்
காணிக்கையாக்குகிறேன்!
Hearty Friend Prakash Shankar
படங்கள்: நன்றி அனிமோகிராபி.நெட், ஆட்லிசேட்டிசுவையிங், தமிழ்ச்சரம், தமிழ் சுடேட்டசு டி.பி, சாண்டி போட்டோகிராபி.

முந்தைய ஆண்டுகளில்:
ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!
ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

சனி, ஏப்ரல் 11, 2020

ரகுராம் ராசன் எனும் திறமைசாலி!

மது முன்னாள் சேமவங்கி ஆளுநர் (Reserve Bank Governer) இரகுராம் ராசன் அவர்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிவுரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனும் செய்தியைக் கேட்டதும் எனக்குப் பழைய ‘எதிர்நீச்சல்’ படத்தில் வரும் உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.

அதைக் கொஞ்சம் மாற்றி இதோ ஒரு போன்மி (meme) இங்கே உங்கள் பார்வைக்கு!

Raghuram Rajan selected as a consultant in IMF

புதன், மார்ச் 25, 2020

“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா?

The New Love Birds seperated by caste
காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை.

தருமபுரியின் இளவரசன்-திவ்யா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடக் கதையாகி விட்டது.

போதாததற்கு, தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துக்களையும் வன்முறைகளையும் பரப்ப இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!

இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். 
 
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?...

காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?...

காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?...


எனும் கேள்விகள் இதனால் இயல்பாகவே எழுகின்றன!

இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்கு உதவும் என நினைக்கிறேன்.

சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.

அப்படிப்பட்ட தமிழர் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.

சனி, ஜனவரி 25, 2020

Pen to Publish போட்டியில் தி.மு.க-வினர் மட்டும் தேர்வானது எப்படி? - தி.மு.க-காரரே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

Amazon Pen to Publish 2019 controversy

மேசான் நடத்திய ‘பென் டூ பப்ளிஷ் 2019’ போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கதைகளை ஊருக்கே தெரியும். ஆனால் அவை எப்படித் தேர்வாயின என்ற கதை தெரியுமா? இதோ தி.மு.க., எனும் மாபெரும் கட்சியின் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் வென்ற கதையைத் தி.மு.க-காரர் ஒருவரே நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் விவரித்திருக்கிறார். 

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட உடனேயே இலக்கிய உலக அரசியல் தெரிந்த என் தோழியார் ஒருவர் என்னை எச்சரித்தார், "இந்தப் போட்டியில் தி.மு.க-வினரின் உள்ளடியரசியல் (lobby) அதிகம். எச்சரிக்கையாக இருங்கள்" என்று. அப்பொழுது எனக்கு அதன் தீவிரம் உரைக்கவில்லை. 

எனக்குத் தெரிந்த, என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்பும் நண்பர் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர் நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை அறிந்து இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் முகநூல் குழு ஒன்றில் என்னைச் சேர்த்து விட்டார். உள்ளே போன பிறகுதான் அது முழுக்க முழுக்க தி.மு.க எழுத்தாளர்களின் குழு என்பது தெரிந்தது. என் நூலை அந்தக் குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட நான், கைம்மாறாக அவர்களின் நூல்களையும் படித்துப் பார்த்தேன். தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்ற அந்தக் குழுவினரின் பல கதைகள் உண்மையில் நன்றாகவே இல்லை. சொல்லப் போனால், கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களுடன்.

போகப் போக, போட்டியில் முன்னணியிலிருந்த எல்லாப் படைப்புகளையும் - புகழ் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களின் நூல் உட்பட - அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிக் குறிப்பிட்ட முகநூல் குழு உறுப்பினர்களின் நூல்கள் முன்னணிக்கு வந்தன. 

அப்பொழுது கூட நான் அதை ஓரளவுக்கு மேல் தவறாக நினைக்கவில்லை. "என்ன இருந்தாலும் அவர்கள் கட்சிக்காரர்கள். அவர்கள் நட்பு வட்டம் பெரிது. ஆகவே அவர்கள் நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ள முடிகிறது. நம்மைப் போன்ற தனி ஆட்களால் அஃது எப்படி முடியும்?" என்றுதான் நினைத்தேன். என் நண்பர்களிடம் கூட அப்படித்தான் புலம்பினேன். அதனால்தான் இறுதிச்சுற்றுப் பட்டியல் வெளியானபொழுது கூட என் முகநூல் பதிவு, இவர்கள் செய்த வேலையால் தரக்குறைவான படைப்புகளிடம் தோற்க வேண்டியதாகி விட்டதே என்பதாக அமைந்திருந்ததே தவிர, இவர்கள் செய்தது தவறு என வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. காரணம் இவர்கள் எப்படி இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என விவரமாகத் தெரியாததால் அது தவறுதான் என என்னால் உறுதியாக எண்ண முடியவில்லை. 

ஆனால் இப்பொழுது இணையத்தில் வரும் குறிப்பிட்ட பதிவைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது, இவர்கள் எப்பேர்ப்பட்ட கீழ்த்தர வேலையில் ஈடுபட்டு இந்த வெற்றியைக் களவாடியிருக்கிறார்கள் என்று. 

தி.மு.க., தலைவருக்கு முகவரியிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடித வடிவிலான பதிவில், தி.மு.க., எனும் பெரிய கட்சியின் மாநிலம் தழுவிய வலையமைப்பைப் (network) பயன்படுத்தி அதில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியையே அப்படியே கபளிகரம் செய்தது பற்றிச் சுளிரிடும் சொற்களால் குமுறித் தள்ளியிருக்கிறார் முகம் தெரியாத அந்த மனிதர். 

"தலைவர் அவர்களுக்கு, ஒரு பாமர தி.மு.க தொண்டன் எழுதிக் கொள்வது" என்று தொடங்கும் அவர், "அமேசான் நிறுவனம் உலக அளவில் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டியில், இந்தியப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் போட்டி நடக்கிறது. முதல் பரிசு ஐந்து லட்சம், தேர்வாகும் கதைகள் அமேசான் பிரைமில் தொடராக வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் மற்ற நாடுகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ, ஓர் அரசியல் கட்சி போட்டியைக் கையகப்படுத்தியுள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. தமிழகத்தில் இரண்டாவது முறையாக நமது திராவிட முன்னேற்றக் கழகம் இதைச் செய்கிறது" என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டார். 

"...படைப்பாளிகளாக இவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான புரிதல் இருக்கிறது. ஆனால் கட்சிப் பதவிகளையோ, உறுப்பினர்களையோ வைத்துக் கூட்டம் நிகழ்த்தி, குழு சேர்ந்து, விதிகளை வளைத்து, வெற்றியை அடித்துப் பறிப்பது அறமல்ல. இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒரு பரிசுத் தொகைக்காகத் தமிழின் பிற எழுத்தாளர்களை ஒதுக்கி, இலக்கியவாதிகளை அவமானப்படுத்தி, மூர்க்கத்தனமான கும்பலாய் நகர்வது அழகல்ல" என்று நடுநிலை தவறாமல் குறிப்பிடும் அவர், "...தி.மு.க மட்டுமே பென் டூ பப்ளிஷ் போட்டியின் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இதை எழுத்தால் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கட்சியின் உதவியின்றி, நாம் தந்த பதவிகளின் செல்வாக்கின்றி இவர்களால் நிச்சயம் இந்த இடத்தை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது" என்று தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். 

மேலும் "...போட்டிக்கான இளைஞரணிப் புத்தகங்களைப் பரிந்துரைத்து, திரு.உதயநிதி அவர்களே இணையப் பிரச்சாரம் செய்கிறார். இதுதான் வேதனையின் உச்சம். ஒரு நல்ல புத்தகத்தைப் பாராட்டுவது தவறா என்றால், போட்டியில் இருக்கும் புத்தகத்தைத் தலைமை பரிந்துரைப்பது அறமன்று. இது பாரபட்சம்!" என்றும் சாடுகிறார். 

அதைத் தொடர்ந்து, "மக்கள் போட்டியின் அடிப்படைப் புரிதலே சிதைக்கப்பட்டு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், இளைஞரணி என மொத்தமாக இறங்கியதால், ஓர் எழுத்துப் போட்டியை இப்போது தேர்தலாக மாற்றியிருக்கிறோம். இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய வெளியை, வாய்ப்பை இவர்கள் அரக்கத்தனமாய்த் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இதனால் வரும் ஆபத்து என்னவெனில் வரும் வருடங்களில் பிற அரசியல் கட்சிகளும், ஆள் பலமும், அதிகாரமும் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். ஒரு சாமான்ய எழுத்தாளன் போட்டியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்தத் துயர வரலாற்றைத் துவங்கி வைத்தவர்கள் நிச்சயம் நாமாகத்தான் இருப்போம்" என்றும் வேதனைப்படுகிறார். 

"...நல்ல படைப்புகளுக்கான வியாபாரமும் வெளியும் என்றும் இருக்கிறது. பிறகு ஏன் மக்கள் போட்டியை ஒரு பெரும் அரசியல் கட்சி கைப்பற்ற வேண்டும்? உங்களை உயரத்தில் அமர்த்த வேண்டும் எனக் காத்திருக்கும் கைகளைத்தான் இவர்கள் உடைக்கிறார்கள். போட்டி தர்மங்களையும் அறத்தையும், கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி நசுக்கி மிதித்து முன்னேறுகிறார்கள்" என்று மிகக் கடுமையான சொற்களால் விளாசியிருக்கிறார். 

இவ்வளவு எழுதிய அவர் இடையில் முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடுகையில் "தலைவர் கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக இதை அனுமதித்திருக்க மாட்டார். மாற்றானுக்குப் போட்டியாக நாம் இருக்க வேண்டுமே அன்றி, நம் மக்களிடத்தில் போட்டியிடக்கூடாது என்றிருப்பார். மேலும் கட்சி எழுத்தாளர்கள் பரிசு பெறுவதற்குக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்த அவர் அனுமதித்திருக்கவே மாட்டார்" என்றும் கூறியுள்ளார். 

இவ்வளவு தீவிரமான கருணாநிதி விரும்பியாக இருந்து கொண்டு, அந்தக் கட்சியின் உள்ளேயே அமர்ந்தபடி அவர்களின் முறைகேட்டை நடுநிலை தவறாமல் இவ்வளவு வெளிப்படையாகவும் கடுமையாகவும் சாடிப் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் முகம் தெரியாத அந்த நண்பரின் பண்புநலன் போற்றுதலுக்குரியது. அவருக்கு என் நெஞ்சம் நெகிழும் நன்றி! 

அவரது பதிவை முழுமையாகப் படிக்க: 

 

ஆனால் இவ்வளவு அம்பலப்படுத்திய பிறகும் தி.மு.க-வினர் கொஞ்சமும் வெட்கமின்றி இதைச் சரி என வாதாடுகிறார்கள். இதோ கீழே உள்ள பதிவு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அதாவது பார்ப்பனர்கள் சொல்வார்கள் இல்லையா? "நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் நாங்களே வகிக்கிறோம், எல்லா உயர்கல்விகளிலும் நாங்களே முதலிடத்தில் இருக்கிறோம், எல்லாக் கோயில்களிலும் நாங்களே வழிபாடு நடத்துகிறோம் என்றால் அவையெல்லாம் காலம் காலமாக எங்களுக்கு இருந்து வரும் உரிமை, தகுதி. அவை உங்களுக்கு வாய்க்காவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று? அதையேதான் இவர்களும் சொல்கிறார்கள்.

இதற்கு எதற்கடா கருப்புச் சட்டையுடன் திரிகிறீர்கள்? காவி கட்டிக் கொண்டே பா.ச.க-காரன் போல் திரிவதுதானே? ஏனடா, இப்படி எல்லாரும் அவரவர் செல்வாக்கை, ஆற்றலை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால் அப்படிச் செய்ய எங்களுக்கு மட்டும் தெரியாதா? இது என்ன பெரிய ஊரில் இல்லாத அதிசய ஆற்றலா? உன்னிடம் கட்சி என ஓர் ஆயுதம் இருக்கிறது என்றால் உடனே அதைப் பயன்படுத்திப் போட்டியில் வென்று விட்டு அதுவே சரி என வாதாடுகிறாயே! இதே போல் நான் செய்யட்டுமா? அதற்கு இந்தக் கட்சிக் கழிசடையெல்லாம் தேவையேயில்லை. ஒற்றை வரி விளம்பரம் போதும்!

"வீட்டிலிருந்தபடியே வேலை! அரை மணி நேரம் பணியாற்றினால் ரூ.1500/- ஒரு முறை மட்டுமே வாய்ப்பு" என்று சொன்னால் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தொடர்பு கொள்வான். அனைவரையும் என் நூலைத் தரவிறக்கச் சொல்லி, கருத்துரையும் தரக்குறியீடும் அளித்துத் திரைச்சொட்டை (screenshot) எனக்கு அனுப்பினால் 1500 ரூபாய் தருவதாகக் கூறினால் முடிந்தது வேலை.

ஒற்றை ஆள் நான்! வீட்டு வாசற்படியைக் கூடத் தாண்டாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து இதைச் செய்து காட்டவா? ஒரு மாபெரும் கட்சியின் செல்வாக்கை இத்தனை பேர் சேர்ந்து பயன்படுத்தி நீங்கள் வென்றீர்களே! உங்கள் அத்தனை பேரையும் அரை நூற்றாண்டு தாண்டிய உங்கள் மாபெரும் கட்சியையும் நான் ஒற்றை மனிதன் அடுத்த ஆண்டுப் போட்டியில் வீழ்த்திக் காட்டவா? 

மிரளாதீர்கள்! அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் உங்களைப் போல் மானங்கெட்டவன் இல்லை.

இவ்வளவுக்கும் பிறகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களில் யாருக்காவது நான் சொல்வது உண்மைதானா என ஐயம் ஏற்பட்டால் அவர்களுக்காகக் கடைசியாக ஒரு தகவல்! 

இப்பதிவின் தொடக்கத்தில், "கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது" என்று கூறியிருந்தேன் இல்லையா? அதுவும் இப்பொழுது போட்டியின் இறுதிச்சுற்றில் இருக்கிறது. 

இந்த ஒன்றை வைத்தே, இந்தப் போட்டி எந்த அழகில் நடந்திருக்கும் என்பதையும் அந்தத் தி.மு.க., தொண்டர் சொன்னது உண்மையா இல்லையா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி அமேசான்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கு உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்