.

புதன், மார்ச் 25, 2020

“மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா?

The New Love Birds seperated by caste
காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை.

தருமபுரியின் இளவரசன்-திவ்யா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடக் கதையாகி விட்டது.

போதாததற்கு, தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துக்களையும் வன்முறைகளையும் பரப்ப இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!

இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள். 
 
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?...

காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?...

காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?...


எனும் கேள்விகள் இதனால் இயல்பாகவே எழுகின்றன!

இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்கு உதவும் என நினைக்கிறேன்.

சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.

அப்படிப்பட்ட தமிழர் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.

காதலனுடன் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்காகத் தாய்-தந்தையைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் தலைவி. இந்தக் காலத்தில் நாம் இதை ‘ஓடிப் போதல்’ என்கிறோம். ஆனால் சங்கத் தமிழ் இதை ‘உடன்போக்கு’ எனும் அழகிய சொல்லால் குறிக்கிறது. அதாவது இணைந்து வெளியேறுதல்! யாருடன் இணைந்து எங்கிருந்து வெளியேறுதல்? காதலனுடன் இணைந்து பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுதல்!

அப்படி உடன்போன தன் மகளைக் காணாமல் தேடிக் கொண்டு வரும் தாய், எதிரில் வரும் அறம் உணர்ந்த சான்றோர்களைப் பார்த்து, “கொள்கையும் ஒழுக்கமும் உடைய சிறந்தவர்களே! மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுநாள் வரை கூடி வாழ்ந்த என் மகளும் இன்னொருத்தியின் மகனும் இந்த வழியாகப் போனதைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறார்.

அதற்கு அவர்கள், “பார்த்தோம்! சிறந்த நகைகளை அணிந்த அந்த இளம்பெண்ணின் தாயே, அழகிய பெருமகனுடன் பாலைவனத்தையும் கடந்து போகத் துணிந்து இந்தக் காட்டின் வழியே செல்கிறாள் உங்கள் மகள். அவள் மிகுந்த கற்புடையவள்! சிறந்த ஒருவன் பின்னால்தான் அவள் சென்றிருக்கிறாள். அவளுக்காக நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவள் எடுத்த இந்த முடிவுதான் சிறந்த அறவழியும் கூட!” என்று அறிவுரை கூறி அந்தத் தாயைத் திரும்பி வீட்டுக்குப் போகுமாறு வழிநடத்துகிறார்கள். (கலி: பாலை-9).

“காதலிப்பவனையே மணப்பவள்தான் கற்பில் சிறந்தவள். அப்படித் திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் தன் வீட்டை விட்டு வெளியேறுவது கூடத் தவறில்லை. மாறாக அதுவே அறம் சார்ந்த வழி” என இன்றைய சாதி வெறியர்களின் கன்னத்தில் அறைகிறது இந்தச் சங்கத் தமிழ்ப் பாடல்.

அது மட்டுமில்லை, “மற்றவர்களுக்குத் தெரியாமல் இதுவரை சேர்ந்து வாழ்ந்தவர்கள் (தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்)” என அந்தத் தாய் குறிப்பிடுவதிலிருந்து அந்தக் காலத்தில் பெண்ணும் ஆணும் திருமணத்துக்கு முன்பே கூடும் (sex) வழக்கம் இருந்திருப்பதும் தெரிய வருகிறது.

“கற்பை உடலுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள்! அது மனம் சார்ந்தது; ஒழுக்கம் சார்ந்தது” என இன்று கரடியாய்க் கத்துகிறோம். ஆனாலும் பெரும்பாலானோருக்கு அது சென்று சேரவில்லை. ஆனால் இந்தத் தெளிவு தமிழர்களுக்கு அன்று இருந்திருப்பது இந்தப் பாடலிலிருந்து புரிகிறது. அதனால்தான் உடலை ஒரு பொருட்டாகக் கருதாமல் மணம் புரியும் முன்பே கூடுவது அவர்களால் முடிந்திருக்கிறது.

மொத்தத்தில், தனக்குப் பிடித்தவனைக் காதலிக்கும் உரிமையும் காதலித்தவனையே கரம் பற்றும் துணிவும் தமிழ்ப் பெண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்திருப்பதைக் கிறித்துப் பிறப்புக்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் உறுதிப்படுத்துகிறது. தவிர, மக்களுக்கு அறநெறிகளை எடுத்துரைக்கும் இடத்திலிருந்த அந்தக் காலத்துப் பெரியவர்கள் – சான்றோர்கள் கூட இதை ஆதரிப்பவர்களாகத்தாம் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

இந்த ஒன்று மட்டுமில்லை, சங்க இலக்கியங்களில் பண்டைத் தமிழகத்தின் காதல் வாழ்வுமுறை பற்றி இப்படிப் பற்பல பாடல்கள் உள்ளன.

தலைவனும் தலைவியும் வீட்டுக்குத் தெரியாமல் காதலிப்பது, பிறர் அறியாமல் சந்திப்பது, அதற்குத் தோழி உதவுவது, தலைவன் பணம் ஈட்டுவதற்காக (சம்பாதிப்பதற்காக) ஊரை விட்டு வெளியேறினால் தலைவியும் அவனுடனே சென்று விடுவது போன்றவை அப்பாடல்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Love in Sangam Age

உலகில் தமிழர்களைப் போலவே நீண்ட நெடிய வரலாறு கொண்ட இனங்கள் மேலும் சில உண்டு. அவர்களுடைய ஆதிகால இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் அனைத்தும் கடவுளைப் போற்றுபவையாகவும் ஏதோ ஒரு வகையில் கடவுள் தொடர்பானவையாகவும்தாம் இருக்கின்றன. கிரேக்கக் காப்பியங்கள், ஆப்பிரிக்க நாடோடிக் கதைகள், ஆரியத் தொன்மங்கள், எகிப்தியப் பழங்கதைகள் என அனைத்தும் இப்படித்தாம்.

ஆனால் தமிழர்களின் பழம்பெரும் நூல்களான சங்க இலக்கியங்களோ காதலையும் வீரத்தையுமே பெரிதும் பாடுகின்றன. மொத்தமாகவே அகம் (காதல்) – புறம் (வீரம்) என்கிற இரு பெரும் பிரிவுகளாகத்தாம் அவை பகுக்கப்பட்டுள்ளன. அதிலும் புறத்திணையை விட அகத்திணையே அதிகம்!

சங்க இலக்கியத்தின் மொத்தப் பாடல்கள் 2381. அவற்றுள் 1862 பாடல்கள் அகம் பாடுகின்றன. அதாவது தமிழர் வாழ்வியல் – வரலாற்று – பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்கள் அதிகம் போற்றுவதே காதலைத்தான்!

“அப்படியானால் காதல் திருமணம் மட்டும்தான் தமிழர் வழக்கமா? மாமன் மகள், அத்தை மகன் எனக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் நமது பண்பாடில்லையா?” என நீங்கள் கேட்கலாம். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அது கூட ஒரு வகையில் காதல் திருமணம்தான் என்பதை உணர முடியும்.

அடிப்படையில் காதல் திருமணம் என்பது என்ன? ஒருவரோடு பழகி, புரிந்து கொண்டு, அதன் பின் மணப்பதுதானே? அப்படிப் பார்த்தால் சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடி, உறவாடி, பழகிய அத்தை மகனையோ மாமன் மகளையோ கட்டிக் கொள்வதும் காதல் மணம்தானே?

இப்படிப்பட்ட மண்ணில் உட்கார்ந்து கொண்டு காதலை நம் பண்பாட்டுக்கு எதிர், கற்பு நெறிக்கு முரண், ஒழுக்கமில்லாத செயல் எனவெல்லாம் சிலர் பிதற்றுகிறார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்குத் தமிழர் வரலாறு பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படிக் காதலுக்கு எதிராக மீசை முறுக்கும் அனைவரும் சொல்லும் இன்னொரு காரணம், “எங்கள் சாதியில் இதுவரை வேற்று சாதி இரத்தம் கலந்ததே இல்லை; இனியும் கலக்கக்கூடாது” என்பது.

ஆனால் சங்கக் காலத்திலோ பெண் தான் விரும்பிய எந்த ஆணையும் காதலிக்கலாம், கைப்பிடிக்கலாம் எனும் உரிமை இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சமுகத்தில் கலப்பில்லாத சாதி என்கிற ஒன்று எப்படி இருந்திருக்க முடியும்?

சொல்லப் போனால், சாதி என்பதே அன்று இல்லை! தமிழர்களை மேல் – கீழ் எனப் பிரித்து நம் இனத்தின் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மூலக் காரணமான சாதி என்பது பார்ப்பனர்கள் வருகைக்குப் பிறகுதான் புகுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை தமிழ் மண்ணில் வெறும் குடிகள் மட்டுமே இருந்தன. “துடியர், பாணர், பறையர், கடம்பர் ஆகிய நான்கு தவிர வேறு எதுவும் குடி இல்லை” எனச் சங்க இலக்கியமான புறநானூறு கூறுவது இதற்குச் சான்று (பாடல் 335). ஆனால் அவரவர் குடிகளுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் அன்று கிடையாது.

இப்படிக் குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள்தாம் பின்னாளில் சாதியினராக மாற்றப்பட்டிருக்கிறார்கள் எனும்பொழுது இதில் எது கலப்பில்லாத சாதியாக இருக்க முடியும்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடி விட்டுக் குடி காதலித்தும் மணம் புரிந்தும் வாழ்ந்த நம் முப்பாட்டன்-முப்பாட்டிகளின் அதே உதிரம்தானே சாதியாக மாறிய பின்பும் நம் உடம்பில் ஓடுகிறது? அப்படியிருக்க இதில் எதுதான் கலப்பில்லாத உதிரம் எனச் சொல்ல முடியும்? அப்படிச் சொன்னால் அதை விட முட்டாள்தனம் வேறெது இருக்க முடியும்?

எனவே தமிழர்களே!
உண்மையிலேயே நீங்கள் தமிழ்த் தாய்க்கும்-தகப்பனுக்கும் பிறந்தவர்களாக இருந்தால் காதலை எதிர்க்காதீர்கள்! காதலர்களை வாழ விடுங்கள்! தமிழ்ப் பண்பாட்டை வாழ விடுங்கள்!

ஆம்!
காதலே நம் பண்பாடு! காதலே நம் ஒழுக்கம்! காதலே நம் கற்பு நெறி!
வாழ்க காதல்! வாழ்க தமிழ்! 
Dinacheithi format of the above article
(நான் ௨௪-௦௩-௨௦௨௦ நாளிட்ட தினச்செய்தி நாளிதழில் எழுதியது).
புகைப்படம்: நன்றி டாப் தமிழ் நியூசு
ஓவியம்: நன்றி ஓவியர் மாருதி

தொடர்புடைய பதிவுகள்:
 பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் இராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு? | தேர்தல் - 2016 (2)

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

  1. சாதி - பலரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... ஆனால் உண்மை... சாதி என்ற சொல்லே தமிழ் அல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பலரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்// - உண்மைதான் ஐயா! கடும் எதிர்ப்புகளையும் கீழ்த்தரமான வசவுகளையும் வாரி இறைப்பார்கள் என்று தெரிந்தேதான் எழுதியிருக்கிறேன். எந்த நாட்டிலும் பெரும்பான்மை மக்களை ஒருபொழுதும் திருத்த முடியாது. ஆனால் அவர்களை எதிர்த்து வாய்மையின் பக்கம் நிற்கும் சிறு கூட்டத்துக்கு வலிமை சேர்க்கும் குட்டிக் குட்டி முயற்சிகளே என் பதிவுகள். உங்களைப் போல் பார்த்த மாத்திரத்தில் ஓடி வந்து ஊக்குவிக்கும் நல்லுள்ளங்கள் இருக்கும் வரை சிறியேனின் இந்த முயற்சிகள் தொடரும்.

      //சாதி என்ற சொல்லே தமிழ் அல்ல// - சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

      வழக்கம் போல் முதல் ஆளாக வந்து ஊக்குவித்த உங்கள் அன்புக்கு நன்றி!

      நீக்கு
  2. எது தமிழர் பண்பாடு என்பதற்கு எடுத்துக்காட்டோடு விளக்கிய விதம் தெளிவு சகா!! ஆனா எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஈணவக்கொலை க்ரூப் யாரும் காதல் கீதங்கள் கேட்பதில்லையா? அட்லீஸ்ட் இளையராஜா பாடல்!! So காதல் பாடல் முதுகில் சிறகு ஒட்டுபவை. உணர்வுகளை சிலிர்க்க வைப்பவை. எனவே நமக்கு காதல் கதைகள் படிக்கப்பிடிக்கும், காதல் படங்கள் பார்க்கப் பிடிக்கும், பாடல்கள் கேட்கப்படிக்கும்.
    மேலும் நிஜவாழ்க்கை என வழும் போது பக்கத்து வீட்டுக்காரன் அசிங்கப்படுத்திடுவானோ என்பது தான் பெரிய கவலை. அதற்குத்தான் இத்தனை ஆற்பாட்டம்!! மீண்டும் சமூக அக்கறை உள்ள தெளிவான கட்டுரை!! வாழ்த்துகள் சகா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி சகா!

      உங்கள் ஐயம் சுவையானது! எனக்கென்னவோ ஆணவக்கொலை செய்யும் அளவுக்குக் காதல் வெறுப்புணர்வு கொண்டவர்கள் காதல் பாடல்கள் கூடக் கேட்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. காதல் படங்கள் பார்த்தாலே "இந்த மாதிரி கண்ட படமெல்லாம் ஏன் பார்க்கறீங்க?" என முகம் சுளிக்கும் பெரியவர்கள் என் வீட்டிலும் உண்டு. இத்தனைக்கும் அவர்கள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர்கள். அவர்களே அப்படி என்றால் ஆணவக்கொலை செய்யும் அளவுக்குக் காதல் வெறுப்புணர்வுச் சாக்கடையில் அமிழ்ந்திருக்கும் கொடூரர்களால் கண்டிப்பாகக் காதல் பாடல்களைக் காதால் கூடக் கேட்க முடியாதென்றுதான் நினைக்கிறேன். விடுங்கள்! அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். :-)

      தவிர, பக்கத்து வீட்டுக்காரன் இழிவுபடுத்துவதோடு மட்டுமா நின்று விடுகிறான். அன்றாட வாழ்க்கையே பாதிக்கும் அளவுக்குச் செய்து விடுகிறானே! இன்னும் ஊரகப் பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வில் சாதிய அமைப்புகளின் தாக்கம் இருப்பதாக அறிகிறேன். இப்படிப்பட்ட சமுகத்தில் பிள்ளைகள் காதலிப்பது பெற்றோருக்குப் பிடித்திருந்தாலும் அதை ஏற்பது அவர்கள் கையில் இல்லையே!

      //காதல் பாடல் முதுகில் சிறகு ஒட்டுபவை// - கருத்துரையிலும் உங்கள் கவித்தன்மை அருமை சகா!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்