.

புதன், அக்டோபர் 02, 2019

கீழடி! – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா?

Is Keezhadi a Tamil civilization or Dravidian civilization
மிழ் வரலாற்றுத் துறையிலேயே ஒரு நன்னம்பிக்கை முனையாக வெளியாகியிருக்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட ஆய்வு அறிக்கை!

இதுவரை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், சில பல அகழ்வாராய்ச்சிகள் மூலமாக மட்டுமே தமிழின் பழமையை நிலைநாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இவை அனைத்துக்கும் ஆதாரமாக, இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு நகரமே கிடைத்திருக்கிறது கீழடியில்! தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது! இதுவே இந்துச் சமயத்துக்கு ஆதரவாக இப்படி ஏதாவது ஓர் ஆய்வு முடிவு வெளியாகியிருந்தால் இந்நேரம் அவர்கள் தங்களுக்குள் உள்ள எல்லா வேறுபாடுகளையும் மறந்து கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் நாமோ இப்பொழுதும் திராவிட – தமிழ்த் தேசியச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அதுவும் கீழடியை வைத்தே!

திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி நம் மக்களுக்குப் பாடத்திட்டத்திலேயே கற்பித்திருந்தால் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தறுவாயில் அதைச் சீர்குலைக்கும் அளவுக்கு இப்படி ஓர் அடையாளக் குழப்பமும் தலைக்குனிவும் நமக்கு ஏற்பட்டிருக்காது. எனவே இப்பொழுதாவது திராவிடம் எனும் கோட்பாடு பற்றி, கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்வது சரியா என்பது பற்றித் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்.

திராவிடம் என்பது என்ன?

தமிழ் மொழியின் இன்னொரு பெயரே திராவிடம். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்கள் அயல்நாடுகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது நாம் அறிந்ததே. அதனால் அந்தக் காலத்திலேயே தமிழ் இனம் உலகெங்கும் அறிமுகமாகி இருந்தது. ஆதலால் அன்றைக்கே வெளிநாடுகளில் தமிழர்களையும் தமிழகத்தையும் குறிக்கச் சொற்கள் உருவாயின. ஆனால் ழகரம் அயல்நாட்டு மொழிகளில் இல்லாததால் அவர்கள் மொழியின் பலுக்கலுக்கேற்பத் (உச்சரிப்புக்கேற்ப) தமிழகம் என்பதை ‘தமிரிகா’ (Damirica), ‘திமிரிகே’ (Dimirike) என்று பலவாறாகவும் தமிழர் என்பதை ‘திரவிடா / திராவிடர்’ (Dravida / Dravidians) என்றும் குறிப்பிட்டனர். இதையொட்டி திராவிடர்கள் பேசும் மொழியான தமிழும் அவர்கள் பலுக்கலில் ‘திரவிடம் / திராவிடம்’ ஆனது!

ஆக திராவிடம் - தமிழ் இரண்டும் ஒன்றே! தமிழின் இன்னொரு பெயர்தான் அது!

இதற்கு ஆதாரம்...?

நிறையவே உண்டு!

முதலில் மொழி அடிப்படையில் பார்ப்போம். மொழியியலில் சொற்பிறப்பியல் (Etymology) என்பதாகவே ஒரு துறை உண்டு. ஒரு சொல் எப்படி, எதிலிருந்து, எவ்வாறு உருவாகிறது என்பதை ஆணி வேர் வரை சென்று அலசும் மொழி அறிவியல் இது.

இதன் அடிப்படையில் தமிழ் எனும் சொல்தான் வெளிநாட்டுப் பலுக்கல்களுக்கேற்ப தமிசு > தமிள் > தமிளா > தமிலா எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மருவிக் காலப்போக்கில் ரகர ஒலிப்பு இடையில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டும் மகரம் வகரமாகத் திரியும் திராவிட ஒலிப்பியல்பு காரணமாகவும் ‘திராவிடம்’ ஆனது என்று எழுத்து வேறு ஒலிப்பு வேறாக – அக்கு வேறு ஆணி வேறாக – பிட்டுப் பிட்டு வைக்கிறார் உலகப் புகழ்மிகு இந்திய இலக்கிய மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் கமில் சுவலபில் அவர்கள்.

இது, இன்ன பிற அறிஞர்களின் இது போன்ற விளக்கங்கள் காரணமாய்த் தமிழ் எனும் சொல்தான் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு மூலம் என்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.¹

அடுத்து வரலாற்று ஆதாரங்கள்!

²பொ.ஊ. 1ஆம் (1st CE / கி.பி. 1) ஆண்டைச் சேர்ந்த ‘செங்கடல் செலவு’ (Periplus of the Erythraean Sea) எனும் கிரேக்கக் கடல் வழிப் பயணக் கையேடு அதன் பழமை காரணமாக உலகளவில் அரிய வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது. செங்கடல் பகுதியில் உள்ள நாடுகளையும் அரசாட்சிகளையும் பற்றிப் பல குறிப்புகள் கொண்ட இந்நூலில் சேர நாட்டைச் சேர்ந்த தொண்டி, முசிறி ஆகிய பண்டைத் தமிழகப் பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடத்தில் தமிழகம் எனும் சொல் ‘தமிரிகா’ (Damirica) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த தமிரிகா என்பது தென்னிந்திய திராவிடர்களான தமிழர்களின் நாடு” என்றே ஒரு குறிப்பும் 1912ஆம் ஆண்டு வெளிவந்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது.

Names, routes and locations of the Periplus of the Erythraean Sea


இதே போல் பொ.ஊ. 150ஆம் ஆண்டைச் சேர்ந்த கிரேக்கப் புவியியல் கணித மேதை தாலமி (Ptolemy) தனது ‘புவியியல் வழிகாட்டி’ (Geōgraphikḕ Hyphḗgēsis) எனும் நூலில் தமிழ்நாட்டை ‘திமிரிகே’ (Dimirike) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக, ³பொ.ஊ.மு. 425ஆம் (425 BCE / கி.மு. 1) ஆண்டில் – அதாவது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் – வரலாற்று ஆசிரியர் எரடோடசு (Herodotus) அவர்கள் “திராவிடர்களின் நிறம் எத்தியோப்பியர்களைப் பெரிதும் ஒத்திருக்கிறது” என்று ஓர் ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாக அதன் மொழிபெயர்ப்புகள் காட்டுகின்றன.

அவ்வளவு ஏன், சேர – சோழ – பாண்டியர் ஆகிய தமிழ் மூவேந்தர்களே தங்கள் ஆவணங்களில் நம் தமிழ் நிலத்தை திராவிட தேசம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ‘செங்கடல் செலவு’ நூலின் குறிப்புகள் பகுதி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளது. (பார்க்க

Damirica means the "country of the Tamils," that is, the Southern Dravidians as they existed in the first century, including particularly the Chēra, Pāndya and Chola kingdoms; known in their own records as the Drāvida-dēsam

யாரோ வெளிநாட்டுக்காரன் நம் மொழியின் பெயர் அவன் வாயில் நுழையாததால் திராவிடம் எனச் சொன்னால் அதையே நாமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

அப்படியில்லை. உலகெங்கும் வழக்கத்தில் இருக்கும் முறைதான் இது. மொழியியலில் இதைப் புறப்பெயர் (exonym) என்பார்கள். இடம், மக்கள் குழு, தனி மனிதர், மொழி, இனம் போன்றவற்றைக் குறிக்க வெளியில் உள்ளவர்கள் பயன்படுத்தும் பெயர் இப்படிச் சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, சப்பான் (Japan) நாட்டுக்கு அவர்கள் மொழியில் நிப்பான் என்பதுதான் பெயர். ஆனால் உலகத்துக்கு அது சப்பான்தான். அப்படித்தான் இதுவும். “எங்கள் நாட்டுக்கு நீங்கள் என்ன பெயர் வைப்பது” என சப்பானியர்கள் அந்தச் சொல்லைப் புறக்கணிக்கிறார்களா? இல்லை. மாறாக, தங்கள் அரசு இணையத்தளத்திலேயே ‘The Government of Japan’ என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். சீனம், மலேசியா, இந்தோனேசியா, கிரீசு, இத்தாலி எனப் பல நாடுகளுக்கு இப்படிப் புறப்பெயர் உண்டு என்பதை அந்தந்த நாடுகளுக்கான விக்கிப்பீடியா பக்கங்களில் பார்த்து அறியலாம்.

தெலுங்கர்கள்தாம் திராவிடர்கள் என்றும் தமிழர்களுக்கு அந்தச் சொல் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்களே?

அந்தச் சிலர் எந்த அடிப்படையில் அப்படிக் கூறுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது சி.பா.ஆதித்தனார் அவர்களின் கூற்றை. “ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்த ‘திரி-வடுகர்களே’ திராவிடர்கள்” – அதாவது தெலுங்கர்களே திராவிடர்கள் – தமிழர்களுக்கு அந்தச் சொல் பொருந்தாது என்று சி.பா.ஆதித்தனார் கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனார் நல்ல தமிழ்ப் பற்றாளர், அரசியலாளர், தமிழுக்காகவும் தமிழருக்காகவும் நிறைய போராட்டங்கள் நடத்தியிருக்கிறார், தினத்தந்தி நாளிதழைத் தொடங்கித் தமிழ் இதழியலின் தந்தையாகப் போற்றப்படுகிறார். ஆனால் திராவிடர்கள் யார் என்பதை வரையறை செய்யும் அளவுக்கு அவர் தமிழறிஞரா அல்லது வரலாற்று ஆராய்ச்சியாளரா என்றால் இல்லை. மாறாக, தமிழே திராவிடம் எனச் சொல்பவர்கள் யார் எனப் பார்த்தால், அத்தனை பேரும் தமிழின் ஆழம் கண்ட மாபெரும் மொழியியல் வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்.

எடுத்துக்காட்டாக, ஆதித்தனாரைப் போற்றும் அதே தமிழ்த் தேசியவாதிகளாலும் திராவிடவாதிகளாலும், ஏன் உலகத் தமிழறிஞர்கள் அனைவராலும் போற்றி வணங்கப்படுபவர் அறிஞர்களுக்கெல்லாம் அறிஞரான ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர். அவரே தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை விளக்கும் நோக்கில் ‘திரவிடத்தாய்’ என நூல் எழுதியவர்தாம்! நூலின் முகவுரையிலேயே “தமிழே திரவிடத்தாய் என்பது மிகத் தெளிவான ஒன்று” என்றும் “தமிழ்ப் புலவர்கள் அதை எடுத்துக்காட்டாததனால் தமிழின் திரவிடத்தன்மை பொதுமக்களால் அறியப்படாமல் போயிருக்கிறது” என்றும் நெற்றியடியாகக் குறிப்பிட்டிருப்பார் பாவாணர் அவர்கள்.

எனவே இதில் யார் சொல்வது சரியாக இருக்கும்? தமிழறிஞர்கள் அனைவரும் சொல்வதா அல்லது வெறும் அரசியல்வாதி ஒருவர் சொல்வதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உலகம் ஒப்புக் கொள்கிறதா? பிற திராவிட மக்கள் ஒப்புக் கொள்கிறார்களா?

இல்லைதான். திராவிடம் எனும் சொல்லின் தாய் தமிழ் எனும் சொல்தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள உலகம் திராவிட மொழிகளின் தாய் தமிழ்தான் எனும் கூற்றை இன்னும் ஏற்கவில்லை. அதே நேரம், திராவிட மொழிகளிலேயே முதன்மையானது என்று தமிழை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. திராவிட மொழிகளின் பட்டியலில் தமிழை முதனிலை மொழியாக வைத்துள்ளது.

Tamil's place in Dravidian languages list
உலகம் ஏற்காததால் தமிழிலிருந்துதான் பிற திராவிட மொழிகள் பிறந்தன எனும் கோட்பாடு தவறு என ஆகிவிடாது. இராபர்ட்டு கால்டுவெல் போன்ற வேற்றுமொழி அறிஞர்கள் முதல் பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் வரை எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தமிழ்தான் திராவிட மொழிகள் அனைத்துக்கும் அன்னை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். எத்தனையோ மொழியியல் சான்றுகள், வரலாற்று ஆவணங்கள் இதற்கு ஆதாரமாய் உள்ளன. வெறுமே நூல்களில் தேங்கியிருக்கும் இந்த உண்மையை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஏற்கச் செய்ய வேண்டியது தமிழர் நமது கடமை. மாறாக, இந்த ஓர் உண்மையை உலகம் ஒப்புக் கொள்ளாததால் மொத்தமாக திராவிடம் எனும் அடையாளமே வேண்டா என விலகுவது சரியாகாது.

தெலுங்கர்களே திராவிடர்களாக இருந்து விட்டுப் போகட்டுமே; நாம் தமிழர்களாக மட்டுமே வாழ்ந்து விட்டுப் போவோமே! இதனால் என்ன குடி முழுகிப் போய்விடும்?

நம் மொழிக்குத் தமிழ் எனும் பெயரில் எப்படி ஒரு பெரும் வரலாறு இருக்கிறதோ, அதே போல திராவிடம் எனும் பெயரிலும் ஒரு வரலாறு இருக்கிறது. கிரேக்கம், உரோமானியம் எனப் பல அயல்நாட்டு மொழிகளுடைய பழங்கால ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள் தமிழர்களையும் தமிழையும் திராவிடர், திராவிடம் என்றுதான் குறிப்பிட்டுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டைத்தாம் நாம் மேலே பார்த்தோம்.

அவை அனைத்தும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகள். அந்தக் காலத்திலேயே நாம் நாடு விட்டு நாடு கப்பல் ஓட்டியிருக்கிறோம், கடல் வழி வணிகம் செய்திருக்கிறோம், செழிப்பும் நாகரிகமும் மிக்க சமுகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பவற்றுக்கு அவையெல்லாம் அத்தாட்சிகள்.

திராவிடர் எனும் சொல்லை, அடையாளத்தை விட்டுக் கொடுத்து அந்தப் பெருமைகளையெல்லாம் நாம் இழக்க வேண்டுமா?

தெலுங்கர்களே திராவிடர்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லி, திராவிடம் – திராவிடர் போன்ற சொற்களின் மூலமாக நமக்குக் கிடைக்கும் இந்தப் பெருமைகளைத் தெலுங்கர்கள் பெயருக்கு எழுதி வைக்க வேண்டுமா?

திராவிட அரசியலின் பின்னால் இத்தனை ஆண்டுகள் சென்றுதானே ஈழத்தில் தமிழர்களை இழந்தோம்? அப்படிப்பட்ட திராவிட அடையாளத்தைப் புறக்கணிப்பதில் என்ன தவறு?

திராவிட அரசியல் என்பது வேறு; திராவிடர் எனும் மொழிக் குடும்ப அடையாளம் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது! நமக்கு திராவிட அரசியல் பிடிக்கவில்லையா? தமிழ்த் தேசிய அரசியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்! அல்லது நமக்குப் பிடித்த வேறு எந்த அரசியல் வழியை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அது நமது தனிப்பட்ட விருப்பம். ஆனால் திராவிடர் எனும் நம் அடையாளம் மொழிக் குடும்பத்தின் அடிப்படையிலானது. தமிழர்களான நம் தாய்மொழி தமிழ். அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால்தான் நாம் திராவிடர். இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைக்கு ஓர் அரசியல் முறை செல்வாக்கில் இருக்கும். நாளைக்கே வேறு அரசியல் அந்த இடத்துக்கு வரும். இது மாறக்கூடியது. ஆனால் இனம், மொழி, மொழிக்குடும்பம், இவற்றின் அடிப்படையிலான அடையாளங்கள் என்றும் மாறாதவை, நிலையானவை. அவ்வப்பொழுதைய அரசியல் மாற்றங்களுக்கேற்ப அடிப்படை அடையாளங்களை மாற்ற முடியாது, கூடாது.

அப்படியே மாற்றுவது சரி என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் 2009-இல் நடந்த இனப்படுகொலைக்காக எந்தக் காலத்திலுமே தமிழர்கள் திராவிடர்களாக இருந்ததில்லை என முன்காலத்தையும் சேர்த்துச் சொல்வது எப்படிப் பொருந்தும்? சிந்திக்க வேண்டாவா?

தமிழே திராவிடம் என வைத்துக் கொண்டாலும் அதற்காகக் கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன?

keezhadi pictures

சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில்லை. அப்படிச் சொல்வதில் தவறில்லை, அவ்வளவுதான். நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், திராவிட மொழிகளின் பட்டியலில் தமிழ் இருப்பதால் கீழடியின் மூலம் தமிழுக்குக் கிடைக்கும் பெருமைகள் திராவிட மொழிக் குடும்பத்தின் பெருமைகளாகவும் சேர்த்துத்தாம் புரிந்து கொள்ளப்படும். இஃது இயல்பான ஒன்று.

மற்ற தென்னிந்திய மாநிலங்களில் நடக்கும் அகழாய்வு முடிவுகளை அவர்கள் தங்கள் இனத்தின் பெருமையாக மட்டுமே பதிவு செய்யும்பொழுது நாம் மட்டும் ஏன் திராவிடம் எனும் மொழிக் குடும்பத்துக்கானதாகப் பதிவு செய்ய வேண்டும்?

நம் நாட்டில் இருப்பவையே மொத்தம் இரண்டு நாகரிகங்கள்தாம். ஒன்று திராவிடம், மற்றது ஆரியம் (இவற்றுள் ஆரியர்கள் வந்தேறிகள் என்பதும் திராவிடர்கள் மட்டும்தாம் இந்த மண்ணின் ஆதிக்குடிகள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அண்மையில் நடந்த மரபணு ஆய்வுகள் மூலமும் இது உறுதிபட நிலைநாட்டப்பட்டுள்ளது). எனவே நம் நாட்டில் அகழாய்வு என நடந்தாலே அஃது இந்த இரண்டில் எந்த நாகரிகத்தைச் சேர்ந்தது என்பதுதான் முதலில் பார்க்கப்படுகிறது. பிறகுதான் மொழி, இனம் எல்லாம். எனவே மற்ற மாநிலங்கள் தங்கள் பகுதியின் அகழாய்வு முடிவுகளை இனப் பெருமையாக மட்டுமே பதிவு செய்தாலும் அவையும் திராவிட இனங்களாக இருப்பதால் திராவிட நாகரிகமாகத்தாம் அவை கருதப்படும். கீழடியும் அப்படியே! தமிழர் பெருமை என நாம் பதிவு செய்யும்பொழுதே அதன் மூலம் அது திராவிட நாகரிகம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் பொருள். எனவே இதில் அவர்கள் அப்படிப் பதிவு செய்யவில்லை; நாம் மட்டும் செய்ய வேண்டுமா என்பவையெல்லாம் இந்த அடிப்படை நடைமுறைகள் அறியாததால் எழும் வாதங்கள்.

இப்படிச் செய்வது தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய பெருமையை மற்ற திராவிட இனங்களோடு பங்கிட்டுக் கொள்வதாக ஆகாதா?

கீழடியை நாம் திராவிட நாகரிகம் என மட்டுமே பதிவு செய்தால்தான் அப்படி ஆகும். ஒருபொழுதும் நாம் அப்படிச் செய்யப் போவதில்லை. திராவிட நாகரிகம் எனக் கீழடியைக் குறிப்பிடுபவர்களும் அப்படிச் செய்யச் சொல்லவில்லை. தெள்ளத் தெளிவாகத் தமிழர் நாகரிகம் என்பதாகத்தான் பதிவு செய்யப் போகிறோம். அதன் மூலம் தானாகவே திராவிட மொழிக் குடும்பத்துக்கும் அந்தப் பெருமை கிடைக்கிறது. எப்படிக் கிடைக்கிறது எனக் கேட்டால், ஒருவர் விருது பெறும்பொழுது பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் என அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதன் பெருமை சென்று சேர்வது போல. ஆனால் விருது என்னவோ கடைசி வரையில் அந்த ஒருவர் பெயரில்தான் இருக்கும். ஏனெனில் விருது அவர் பெயருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அது போலத்தான் கீழடியின் பெருமைகளும் தமிழர்க்கு மட்டும்தான். காரணம், தமிழின் பெயரால்தான் அது திராவிட மொழிக் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கிறது.

எடுத்துக்காட்டாக, கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகத் திகழ்வதால் தமிழின் வயது 2600 ஆண்டுகளாக உயரும். திராவிட மொழிகளில் தமிழ்தான் மூத்தது என்பதால் திராவிட மொழிக் குடும்பத்தின் வயதும் 2600 ஆக உயரும். மற்ற திராவிட மொழிகளின் வயது இதனால் உயர்ந்து விடாது. அவை அந்தந்த இடத்திலேயேதான் இருக்கும். பிற பெருமைகளும் இப்படித்தான். கீழடி திராவிட நாகரிகமாகப் பதிவாவதால் திராவிட மொழிக் குடும்பத்துக்குக் கிடைக்கும் பெருமை இவ்வளவுதான்.

அப்படிப் பார்த்தாலும் திராவிட மொழிக் குடும்பத்துக்கு மட்டும்தானே இதனால் பயன்? தமிழுக்கு இதனால் கிடைக்கப் போவது என்ன?

திராவிட மொழிகளில் தமிழ்தான் முதனிலை மொழி என்பது இதனால் மேலும் உறுதிப்படும். வருங்காலத்தில் திராவிட மொழிகளின் தாய் எனத் தமிழுக்கு உரிமை கோரவும் உதவும். இவையெல்லாம் கீழடியின் பெருமையை திராவிட மொழிக் குடும்பத்துடன் - மேற்சொன்ன வகையில் - நாம் பகிர்ந்து கொள்வதால் மட்டும்தான் நடக்கும். திராவிடர் எனும் அடையாளத்தைப் புறக்கணித்தாலோ திராவிட மொழிகளின் பட்டியலிலிருந்து தமிழை நீக்கி விட்டாலோ இவை எதுவும் நடக்காது.

எனவே தமிழர் நாம் என்றும் தமிழராகவே வாழ்வோம்!
அதே நேரம், திராவிடர் எனும் நம் பழம்பெருமையும் காப்போம்!
அரசியல் மாற்றத்துக்காக வரலாற்றுப் பெருமைகளை இழக்க வேண்டா!
என்றும் தமிழர் தாய்மடியே கீழடி!
 வாழ்க தமிழ்!
❀ ❀ ❀ ❀ ❀
(நான் ௦௧-௧௦-௨௦௧௯ மற்றும் ௦௨-௧௦-௨௦௧௯ நாளிட்ட தினச்செய்தி நாளிதழ்களில் எழுதியது).

படங்கள்: இந்து தமிழ் திசை, சார்ச்சு சியாகலாகிசு (George Tsiagalakis) - காப்புரிமை CC-BY-SA-4, விக்கிசோர்சு, விக்கிப்பீடியா, பி.பி.சி தமிழ்.

அடிக்குறிப்பு:
1. Etymology of the word Dravida
2. பொ.ஊ = பொது ஊழி (Common Era)
3. பொ.ஊ.மு = பொது ஊழிக்கு முன் (Before Common Era)

உசாத்துணை:
அறியப்படாத தமிழ்மொழி – முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS | கரச)
ஆங்கில - தமிழ் விக்கிப்பீடியா
தொல்லியல் ஆர்வலர் மது கஸ்தூரி ரங்கன்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து இந்த உண்மைகள் மற்றவர்களையும் சென்றடைய உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. திராவிட அரசியல் என்பது வேறு; திராவிடர் எனும் மொழிக் குடும்ப அடையாளம் வேறு. ஒத்துக்கொள்கிறேன். இங்கு அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்தை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ஐயா! உங்களைப் போல் பெரியவர்களுக்கு இது புரிகிறது. ஆனால் இளைஞர்கள் இந்த இரு தரப்பு அரசியலுக்கும் இடையில் பலியாகிறார்கள் என்பதுதான் வேதனை! மிக்க நன்றி!

      நீக்கு
  2. ஜி.யு.போப், கால்டுவெல் போன்ற உலக வரலாற்று ஆய்வாளர்கள் உலக இனங்களைக் குறிப்பிடும்போது சுமேரியம், ஆரியம் என்ற வரிசையில் திராவிடம்  என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 
    குழந்தை அழ.வள்ளியப்பா எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சில திரைப்படங்களில் திராவிடம் என்ற வார்த்தை இடம் பெற்று விட்டது.
    இவற்றைத் தொடர்ந்து மற்றவர்களும் குறிப்பாக அரசியல்வாதிகள் பயன்படுத்த ஆரம்பித்து... இப்போ பெரிய தொல்லை...
    தமிழ், தமிழர்கள் என்பதுதான் சரியானது. 
    உலகின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் இனம் தமிழர்கள் எனும்போது கீழடி உள்ளிட்ட ஆய்வுகளை பல ஆயிரங்கள், இலட்சங்களில் குறிப்பிடாமல் வெறும் 2600 வருடங்கள் என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
    சிந்து சமவெளி உள்ளிட்ட உலக அளவிலான கண்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும்.
    இவற்றை வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும், ஏனெனில் இங்கே தமிழ்நாட்டில் அடிமைகள் ஆட்சி, வெறும் அரசியல் சார்ந்த ஆட்சிகள் நடைபெறுகின்றன. அவர்களை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. 
    வே.பழனி.சென்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் எதையுமே கொஞ்சமாவது அடிப்படை அளவிலாவது அறிந்து கொண்டு பிறகு பேச வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள்; குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இல்லை!

      அறியாமையையாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு கட்டுரையில் கருத்துச் சொல்ல வருகிறோமே, அந்த வெங்காயத்தான் அப்படி என்னதான் கட்டுரையில் எழுதியிருக்கிறான் என்று படித்துப் பார்த்துவிட்டாவது கருத்துச் சொல்ல மாட்டீர்களா? சி.யு.போப்பு, கால்டுவெல் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே தமிழ் மூவேந்தர்களே தமிழகத்தை ‘திராவிட தேசம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கட்டுரையில் ஆதாரத்தோடு காட்டியிருக்கிறேன். அதைக் கூடப் பார்க்காமல் வழக்கமான அதே பல்லவியைப் பாடுகிறீர்கள்.

      உலகின் முதல் மொழி தமிழ், முதல் இனம் தமிழர் என்றால் தமிழர் வரலாற்றை இலட்சங்களில் சொல்ல வேண்டும் என்கிறீர்கள்! எந்த ஆதாரமும் காட்டாமல் நாம் பாட்டுக்கு அப்படிச் சொல்லிக் கொண்டு திரிந்தால் நம்மைக் கிறுக்கர்கள் என்றுதான் உலகம் நினைக்கும். நீங்களே சொல்வது போல், தமிழ்நாட்டிலும் உலக அளவில் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்த நாடுகளிலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டி உள்ளன. அவற்றையெல்லாம் நடத்தப் பெரிய அளவில் நிதி வேண்டும்; அதுவும் பெரும்பான்மை வரலாற்றுத் தடயங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வர மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். தமிழர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வரலாற்றையும் தனித்தன்மையையுமே சிதைக்கப் பார்க்கும் மத்திய அரசுகள் இன்னும் நம்மைப் பழமை வாய்ந்தவர்கள் என உறுதிப்படுத்தும் இந்த ஆய்வுகளுக்கு ஒப்புதல் வழங்குவது கடினம். அப்படி வழங்கினாலும் நிதி ஒதுக்குவது குதிரைக் கொம்பு. அப்படி நீங்கள் சொல்வது போல் வெளிநாட்டுத் தமிழர்கள் உதவியால் செய்வதாயிருந்தாலும் அதிலும் நிறைய தடைகள் உள்ளன. இவற்றையெல்லாம் நிறைவேற்ற உலக அளவில் தமிழர்கள் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒரு குடையின் கீழ் திரட்ட வேண்டும்!

      இன்னும் போக வேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது. போவோம்! உங்கள் ஆர்வத்துக்கு நன்றி!

      நீக்கு
  3. தோழரே...

    தாங்கள் எழுதிய திராவிடம் பற்றிய கட்டுரை பதிவு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை பதிவு...

    சில அரவேக்காடுகள் திராவிடம் வேறு, தமிழ் வேறு, என்று பிதற்றுகிறாா்கள்...

    மொழிஞாயிறு தேவநேயபாவணாா் அவா்கள் கூறிய பிறகும் இவர்கள் அரசியலுக்காக திராவிடத்தை எதிர்க்கிறாா்கள் என்று தெள்ள தெளிவாக தற்போது புரிகிறது...

    மேலும் திராவிடத்தை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள எளிமையான வடிவில் ஒரு புத்தகம் எழுதுங்கள்...
    அப்போது தான் வருங்கால தலைமுறை உண்மை எது என்று அறிந்து கொள்வார்கள்...

    திராவிடமும்,தமிழும் ஒன்றே என்ற கருத்தினை அனைவரும் வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்...

    என்றும் அன்புடன்,
    டி.கே.எஸ்.பாண்டியன்,
    மதுரை.
    மின்அஞ்சல்:−tkspandian@yahoo.co.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் விரிவான இசைவான கருத்துக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் அகமார்ந்த நன்றி! திராவிடத்தைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள எளிமையான வடிவில் என நீங்கள் கூறியிருக்கும் இதே பாணியில் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் அண்மையில்தான் ஒரு நூலை எழுதியுள்ளார். Humanism & The Dravidian Movement - A Success Story எனும் அந்த நூலை PI-AHA (Periyar International-American Humanist Association) அமைப்பு அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பெரியார் விழாவில் வெளியிட்டுள்ளது. பெரியார் புக்சு பதிப்பகத்தில் கிடைக்கும். படித்துப் பாருங்கள்! திராவிடமும் தமிழும் ஒன்றே எனும் கருத்து விரைவில் நம் இளைஞர்களுக்குப் புரியும் என்பதே என் எதிர்பார்ப்பும். மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடுவதில் வல்லவர்கள். எனவேதான் திரமிலர் என்றழைக்கப்பட்டு, அது மருவி திமிலர் ஆகி, பின் தமிழர் ஆனது என்றும் ஒரு தமிழறிஞரின் ஆய்வு படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இசைவான கருத்துக்கு நன்றி ஐயா!

      நீங்கள் கூறியது சரிதான். இன்னும் சொன்னால், திரை என்றால் அலை; அலையில் படகும் கப்பலும் விட்டுத் திரைகடலோடித் திரவியம் தேடி மீண்டு வர வல்லவர்கள் என்பதால் திரைமீளர்கள் எனப்பட்டு, அதுவே பின்னர் திரமிளர், திரவிடர், தமிழர் ஆனதாக ஒரு கோட்பாடு அண்மைக்காலமாகச் சொல்லப்படுகிறது.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்