.

சனி, ஏப்ரல் 28, 2018

ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

5th Birthday of AgaSivappuThamizh
தோழமைசால் நேயர்களே!

இதோ, உங்கள் அகம் கவர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஐந்தாண்டுகளை நிறைவு செய்து தற்பொழுது (23.04.2018 முதல்) ஆறாமாண்டில் பேரடி வைத்திருக்கிறது. இந்த இன்னேரத்தில் ஐந்தாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மகிழ்ந்து விழைகிறேன்! முதலில், தளத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள் இதோ உங்கள் நட்பார்ந்த பார்வைக்கு. 


பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
மொத்தம்
112
1405
2,70,616+
2192
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் மறுமொழிகளும் உட்பட.
** சமூக ஊடகங்களிலும் சேர்த்து.

 
நம் நேச(ர்) நாடுகள் 

இந்தியா
118885
அமெரிக்கா
71755
இரசியா
12918
பிரான்சு
7121
ஐக்கிய அரபு நாடுகள்
5362

ஐந்தாமாண்டின் தலையாய ஐந்து பதிவுகள்

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (10679 பார்வைகள்)

2016-இல் எழுதியது இது. கடந்த ஆண்டு இரண்டாம் இடம், அதற்கு முந்தைய ஆண்டு மூன்றாம் இடம் எனப் படிப்படியாக முன்னேறி வந்தது என்றாலும் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வந்த ‘சென்னைத் தமிழ்’ பற்றிய பதிவையே பின்னுக்குத் தள்ளி இது முதலிடம் பிடித்து விடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூடி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னும் ‘இன்ட்லி’ திரட்டிக்கு மக்களிடையே எவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. (‘இன்ட்லி’ தளத்தினர் கவனத்துக்கு!)

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10535 பார்வைகள்)
கடந்த ஆண்டு எழுதிய இந்தப் பதிவுக்கு நினைத்துக் கூடப் பாராத வெற்றி! நடப்பாண்டிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுப் பெருவெற்றியை ஈட்டியுள்ளது. ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகளை விட மக்களில் ஒருவனாக இருந்து எழுதும் எளிய உண்மைகளே சிகரம் தொடும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்!

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (10419 பார்வைகள்)
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் அசைக்க முடியாதபடி கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த இப்பதிவு இம்முறை ஒரேயடியாக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சமூகமே கொந்தளித்துக் கிடக்கும் இன்றைய சூழலில், மொழி சார்ந்த பதிவுகளை விட அரசியல் சார்ந்த பதிவுகளைப் படிக்கவே நம் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியோ இது என எண்ணத் தோன்றுகிறது!

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9588 பார்வைகள்)
இதுவும் புதுப் பதிவுதான். நடப்பாண்டிலேயே ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள். ஆனால், அதில் மகிழ ஏதும் இல்லை. இல்லுமினாட்டி குறித்து நானும் நிறையவே படித்திருக்கிறேன். அது தொடர்பான பல குற்றச்சாட்டுகளும் தகவல்களும் உண்மை என நானும் நம்பத்தான் செய்கிறேன். ஆனால், இல்லுமினாட்டி எனும் பெயரை வைத்து வாய்க்கு வந்தபடி கட்டி விடப்படும் கதைகள் இங்கு ஏராளம் ஏராளம்! பெரியார் முதல் பக்கத்து வீட்டுப் பெரியம்மா வரை எல்லாரும் இல்லுமினாட்டிகள்தாம் எனக் குற்றம்சாட்டும் பாரிசாலன் போன்றோரின் அண்மைக்காலப் புரட்டுகளால் இல்லுமினாட்டி எனும் சொல் கற்பனைக்கெட்டாத அளவுக்கு விளம்பரம் பெற்றுள்ளது. அதன் விளைவாகத்தான் இந்தக் கட்டுரையும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தேவையில்லாத பதிவு ஒன்றை எழுதி விட்டோமோ என வருந்துகிறேன்!

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (6509 பார்வைகள்)
எழுதி மூன்று ஆண்டுகள் ஆன பதிவு. மிகவும் சிந்தித்து எழுதிய இது உரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிற மனக்குறை இருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாய்க் கடந்த ஆண்டில் ஒரு நாள் திடீரென இப்பதிவு ஒரே நாளில் 4000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. ஏன், எப்படி என இன்றும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், காலம் கடந்தாவது இப்பதிவு ஓரளவுக்கு மக்களைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

மனம் கமழும் நினைவுகள்

The Memories which make the Heart to be fragrance
கடந்த ஆண்டின் குறிப்பிட வேண்டிய முதல் நிகழ்வு, பார்வை எண்ணிக்கையின் திகுதிகு முன்னேற்றம்! வலைப்பூவின் மொத்தப் பார்வை எண்ணிக்கையே 2,70,616-தான். இதில் ஏறக்குறைய பாதியளவு பார்வை – அதாவது, 1,02,224 பார்வைகள் - கடந்த ஒரே ஆண்டில் கிடைத்திருக்கின்றன. கனவிலும் காணாத முன்னேற்றம் இது!

பெரும்பாலான பதிவுகள் நாட்டு நடப்புத் தொடர்பானவையாக இருந்ததும், அதுவும் நிகழ்வு நடந்ததை ஒட்டி ஓரளவுக்கு உடனுக்குடன் எழுதியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி இருந்தால், எழுத்துத்திறமையில் நான் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் எனப் பொருள். ஒருவேளை கமல், ரஜினி என நடிகர்களைப் பற்றிய பதிவுகளை அதிகம் எழுதியதால்தான் இவ்வளர்ச்சி என்றால் நம் சமூகம் இன்னும் முன்னேறவில்லை எனப் பொருள்.

அடுத்ததாக, ‘கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?’ கட்டுரை தொடர்பாகச் சுவையான ஒரு நிகழ்வு. இந்தப் பதிவை நான் வலைப்பூவில் எழுதியதும் ‘பாக்யா’ இதழில் பணியாற்றும் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் படித்துவிட்டு மிகவும் பிடித்துப் போய், இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் சிறப்பு ஒப்புதல் பெற்று அடுத்து வந்த பாக்யா இதழில் இதை வெளியாகச் செய்தார். என் வலைப்பூவில் வந்த ஒரு கட்டுரை, அதன் பின் அச்சு இதழ் ஒன்றால், அதுவும் நான் சிறு வயதில் விரும்பிப் படித்த இதழால் ஏற்று வெளியிடப்பெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது!

இதற்கு அடுத்ததும் ‘பாக்யா’ இதழ் தொடர்பானதுதான். கடந்த ஆண்டு, வாட்சப்புக் குழு ஒன்றின் மூலம் அறிமுகமான ஸ்ரீராம் அவர்கள் பாக்யாவுக்காகச் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார். உடனே எழுத ஏதும் தோன்றாததால், ஏற்கெனவே எழுதிக் குறிப்பேட்டில் இருந்த புத்தம் புதிய பூமி எனும் ஒரு பக்கக் கதையைச் செதுக்கி, நீட்டித்துச் சிறுகதையாக அனுப்பி வைத்தேன். ஏப்ரல் 28 – மே 4, பாக்யா இதழில் வெளியான இக்கதை, பின்னர் ஆகஸ்டு மாதம் நம் வலைப்பூவிலும் வெளியாகி நண்பர்கள் பலரிடமும் பாராட்டுப் பெற்றது.

அடுத்து, என் பல்லாண்டுக் கால ஆராய்ச்சியைக் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக உங்கள் பார்வைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது பற்றிச் சொல்ல வேண்டும்.

“தமிழர்கள் இந்துக்களா?” - இந்தக் கேள்விக்கான விடையை நான் மிகச் சிறு வயதிலிருந்தே தேடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பதினான்கு வயதாக இருந்தபொழுது என் பெரியப்பா மறைந்தார். அப்பொழுது வீட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுச் சடங்குகள் பல இது தொடர்பான விடைகளுக்கு வாசல் திறந்து வைத்தன. அப்பொழுது தொடங்கிய அக ஆராய்ச்சி துளித் துளியாக முன்னேறி, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முடிவான விடை கிடைத்தது. அதைப் பற்றி எழுத நினைத்து, சரியாக இருக்குமோ இல்லையோ என்று தயங்கிக் கொண்டே இருந்தேன். அப்பொழுதுதான் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ எனும் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கில் 2015ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதையடுத்து, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்கள் தான் நடத்தி வரும் ‘தமிழ்க் காப்புக் கழகம்’ மூலம் தனது ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழில் ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.

என் ஆராய்ச்சி முடிவை அமிலச் சோதனை செய்வதற்கான வாய்ப்பாக அந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டேன். இதற்காக நான் எழுதி அனுப்பிய கட்டுரை இரண்டாம் பரிசை வென்றது. ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் பரிசிலாக ரூ.3000/- தொகையை வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்; திருவள்ளுவர் ஐயாவும் பாராட்டினார். இந்தக் கட்டுரையைத்தான் கடந்த ஆண்டு ‘எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு எனும் தலைப்பில் வெளியிட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு வரவேற்பைப் பெற்ற இப்பதிவு, எனக்கு மிகவும் பிடித்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் பாராட்டையும் பெற்றது.

இதுவரையான வாழ்வில் நான் எழுதியவற்றிலேயே மிக மிக முக்கியமானது என்றால் அஃது இதுதான்! தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதற்கான சான்றாக, இதுவரை யாருமே சொல்லாத ஒன்றை இதில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களின் அன்றாட வாழ்விலிருந்தே இதற்கான அசைக்க முடியாத அத்தாட்சியை எடுத்துக் காட்டியிருக்கிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருமுறை இதைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறேன்!

அடுத்து நான் சொல்ல விழைவது, ‘காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்’ எனும் பதிவு பற்றி. கடந்த ஆண்டு, சென்னை இராதாகிருட்டிணன் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நடந்த முறைகேடான பணப்புழக்கமும் அதையே அடித்தளமாகக் கொண்டு தினகரன் பெற்ற மாபெரும் வெற்றியும் மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ள அனைவரையுமே முகம் சுளிக்கச் செய்தன. எனக்கும் அதில் மாற்றுக் கருத்து அறவே இல்லை. அதே நேரம், நடந்த குற்றத்துக்கு அந்தப் பகுதி மக்கள் மீதே முழுப் பழியையும் சுமத்தியது பொறுப்பற்றதனமாகவும் தப்பித்துக் கொள்ளும் போக்காகவும் எனக்குத் தோன்றியது. அதற்காகவே நான் எழுதிய இந்தப் பதிவு இதுவரை வேறெந்தப் பதிவும் அடையாத அளவுக்கு ஆகப் பெரும் வெற்றியைக் கொய்தது! எழுதிய ஓரிரு மாதங்களிலேயே 9000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்தது! மூளையிலிருந்து வரும் சொற்களை விட நெஞ்சத்திலிருந்து வரும் சொற்களே அடுத்த நெஞ்சத்தை எளிதில் கவரும் என்பதை உணர வைத்த வெற்றி இது.

இதற்கு அடுத்து, கடந்த ஆண்டு வந்த முக்கியமான ஒரு கருத்தைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்! எனும் தலைப்பில் ஒரு பதிவை இக்காலக்கட்டத்தில் வெளியிட்டிருந்தேன். குறட்பா வடிவிலான (அப்படி நானாக நினைத்து எழுதிய) இந்தப் பதிவு குறித்துக் கருத்துரைத்த புகழ் பெற்ற பேச்சாளரும் எழுத்தாளருமான நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் அது குறள் வெண்பாவே இல்லை என்றும் அப்படி இலக்கணம் பிறழ எழுதுவது தவறு என்றும் உரிய காரணங்களோடு விளக்கினார். ஐயாவின் அன்பான வழிகாட்டுதலுக்குத் தலைவணங்கி உடனே அப்பதிவில் உரிய விளக்கத்தைச் சேர்த்தேன். அவர் மட்டும் அதை அத்தனை தீவிரமாக எடுத்துரைத்திராவிட்டால் தொடர்ந்து அத்தவற்றை நான் கண்டிப்பாய்ச் செய்து கொண்டிருந்திருப்பேன்; என்னைப் பார்த்துப் பலரும் அதையே செய்திருக்கவும் வாய்ப்புண்டு. பெரிய கெட்ட பெயருக்கும் தலைக்குனிவுக்கும் ஆளாகாதபடி என்னைக் காப்பாற்றிய ஐயா அவர்களின் அந்த அறிவுரையை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

பதிவுலகில் கடந்த ஆண்டு நடந்ததிலேயே நான் பெரிதும் வருந்தும் நிகழ்வு, ‘தமிழ்மணம்’ திரட்டி தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தியதுதான். தமிழ்த் திரட்டிகளின் துருவ விண்மீனாக என்றென்றும் திகழ்ந்த ‘தமிழ்மணம்’ கூடத் தன் சேவையை நிறுத்தும் என இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். ஆனால், தமிழ்ப் பதிவுலகின் திரட்டிச் சேவையைப் பீடித்த தோல்வி கடைசியில் தமிழ்மணத்தையும் கொஞ்சம் பதம் பார்த்துத்தான் விட்டது எனத் தோன்றுகிறது. அதே நேரம், வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தினாலும், தமிழ்மணம் தளத்தில் அவரவர் கணக்குக்குள் நுழைந்து இடுகைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதி மட்டும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்குப்பட்டை மூலம் அவரவர் தளத்திலிருந்தே இடுகைகளைப் பகிர்ந்து விட்டுத் தமிழ்மணம் தளத்துக்கே நாம் செல்லாமல் இருக்கும் சூழலை மாற்றுவதற்கான நடவடிக்கை மட்டுமே இது; மற்றபடி, தமிழ்மணம் தொடர்ந்து இயங்கும் என நம்புவோமாக!

முத்தாய்ப்பாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இந்தாண்டு நம் வலைப்பூவுக்கு கூகுள் ஆட்சென்சு கிடைத்தது. அதுவும் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் கிடைத்து விட்டது எனக்கு அளவிலா மகிழ்ச்சி! இந்த மகிழ்ச்சி, இனி பணம் கிடைக்கும் என்பதால் இல்லை. அப்படிப் பணத்துக்காக நான் இந்த வலைப்பூவை எழுதுவதாக இருந்தால் தமிழுக்கு ஆட்சென்சு ஏற்பிசைவு கிடைக்கும் வரை நான் காத்திருந்திருக்க வேண்டியதில்லை; வேறு வழிமுறைகள் உண்டு. மகிழ்ச்சிக்குக் காரணம் தமிழுக்கு ஆட்சென்சு சேவை கிடைத்த புதிதிலேயே, எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில் எனக்கு மூன்றே நாளில் ஏற்பு கிடைத்து விட்டதே என்பதால்தான். மேலும், இதுவரையில் என் படைப்புகள் என் மீதான அன்பின் அடிப்படையிலும் படைப்பின் திறம், தரம் சார்ந்தும் பலமுறை பல மதிப்பீடுகளைப் பெற்றிருக்கின்றன. இப்பொழுது கூகுள் ஆட்சென்சு கிடைத்ததன் மூலம் பொருளாதார அடிப்படையிலும் என் படைப்புகளுக்கு மதிப்பு உண்டு என உறுதியானதில் மிகுந்த மகிழ்ச்சி!

இதே மகிழ்ச்சி மற்ற தமிழ்ப்பதிவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம்! தமிழின் பிற வடிவங்களான இயல், இசை, நாடகம், ஊடகம் போன்றவற்றுக்கெல்லாம் பெரிய பொருளாதார மதிப்புகள் உள்ளன. ஆனால், நான்காம் தமிழான இணையத்தமிழுக்கு அப்படி ஒன்று இதுவரை இல்லாமல் இருந்த குறையைப் போக்கும் விதமாக கூகுள் ஆட்சென்சு சேவை தற்பொழுது தமிழுக்குக் கிடைத்துள்ளது. எனவே தாங்கள் வளம் பெறுவதற்காக இல்லாவிட்டாலும் நான்காம் தமிழ் நலம் பெறுவதற்காகவாவது நம் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கூகுள் ஆட்சென்சுக்கு விண்ணப்பிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்!

இவை தவிர, இதுதான் ரஜினி அரசியலா? கட்டுரையில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் அதைச் ‘சிறந்த அலசல் பதிவு’ என்று பாராட்டியது, இதற்கு முன் நம் வலைப்பூவில் வேறெந்தப் பதிவும் பெற்றிராத அளவுக்குத் ‘தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!’ பதிவு கடந்த ஆண்டில் ஒரே நாளில் 4000+ பார்வைகளை அள்ளியது, இப்பதிவுகள் வெளியானபொழுது வலைப்பூவிலும் கீற்று இதழிலும் நேயர்களோடு நடந்த உரையாடல்கள் - கருத்து மோதல்கள் ஆகியவையும் என் மனம் கமழும் நினைவுகள்!

நவில்கிறேன் நனி நன்றி!

இணையத்தில் எத்தனையோ வலைமலர்கள் இருக்க இந்த மலரையும் நாடி வந்து சுவை பார்த்து மகரந்தம் பரப்பும் தமிழ்த் தேன்சிட்டுக்களே!

இந்த மலரைத் தொடர்ந்து முகர்ந்து வரும் புதிய, பழைய அகத்தினர்களே!

தங்கள் வலைப்பூப் பட்டியலில் இந்தப் பூவையும் சரம் கோத்து மணம் பரப்பித் தரும் எனதருமை வலையுலகத் தோழர்களே!

தொடர்ந்து என் படைப்புக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைத்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்களே!

பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என் பெயரை அச்சு இதழொன்றில் கண்டு மகிழ வாய்ப்பளித்த ‘பாக்யா’ ஸ்ரீராம் அவர்களே!

சரியான நேரத்தில் என் தவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்திய முத்துநிலவன் ஐயா அவர்களே!

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவியும் ஊக்கமும் அளித்த நண்பர்களே, உறவினர்களே, குடும்ப உறுப்பினர்களே!

எதிர்ப்பு எனும் பெயரில் என்னை மேன்மேலும் உசுப்பி விடும் இனிய எதிரிகளே!

இப்படி மக்கள் பார்வை கொட்டிக் கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றை நடத்துபவர்களே!

தளத்தின் ஆக்கமும் தேக்கமும் அறிந்து சீர்தூக்க உதவும் தரவகச் சேவைத் தளங்களை (Data Analyzing Sites) நடத்துபவர்களே!

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்தினரே!

பதிவுகளை மெருகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் ஆக்குநர்களே!

எல்லாவற்றுக்கும் மேலாய், அருந்தமிழ்த் தாய் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருமையான சேவையை, தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி, போதாததற்குக் கடந்த ஆண்டு முதல் இதற்குப் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும் அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினரே!

உங்கள் அனைவருக்கும்...

இன்னும் இங்கு நான் யாரையாவது குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...

Hearty and Sweety Thanks!

காணிக்கை!

படைப்பாற்றல் வளர்க்க இதழ்களும்

அறிவாற்றல் வளர்க்க நூல்களும்

வாங்கி வாங்கிக் கொடுத்து

என் திறமையை உலகுக்குக் காட்ட

கணினி, இணையம் என

எல்லா ஏற்பாடுகளும் செய்தளித்து

இவ்வளவும் போதாதென

என் படைப்புகளுக்கான

ஆகச் சிறந்த திறனாய்வாளனாகவும் விளங்கும் 

எனதருமை இளவல்...

என்னைக் காட்டிலும்

என் மீது

அதிக அக்கறை கொண்ட

பிறவித் தோழன்...

நான் எழுதும்

ஒவ்வோர் எழுத்துக்கு முன்னாலும்

தலைப்பெழுத்தாய்த் திகழும்

என் உயிரினும் இனிய உடன்பிறப்பு...

ஜெயபாலாஜிக்கு

இவ்வாண்டின் பதிவுலகப் பெருவெற்றியைக்

காணிக்கை ஆக்குகிறேன்! 

My Brother E.Jayabalaji

படங்கள்: நன்றி ஷபிகுல் வீடியோ ஸ்டுடியோ, வால்பேப்பர் ஸ்டாக், யாழ் மடலாடற்குழு.

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே!

புதன், ஏப்ரல் 18, 2018

தீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா? போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு!

Is self-immolatioan a form of protest?
நீருக்காக நெருப்பாய் எரிகிறது தமிழ் மண்! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மொத்தத் தமிழ்நாடும் பிடரி சிலிர்த்து நிற்கிறது! தமிழன் எனச் சொல்லிக் கொள்ளப் பெருமை தரும் இன்னொரு வரலாற்றுத் தறுவாய் இது!

ஆனால் இதே நேரத்தில், போராட்டம் எனும் பெயரில் நம்மைத் துணுக்குறச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை.

காவிரிக்காகச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம், தீக்குளிப்பு போன்ற செய்திகளைப் பார்க்கும்பொழுது, நடக்கும் போராட்டங்கள் சரியான திசையில்தான் செல்கின்றனவா எனும் ஐயம் எழாமல் இல்லை.

கடந்த 2016ஆம் ஆண்டுக் காவிரிப் பிரச்சினையின்பொழுது கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துச் சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சிப் பேரணியில் அக்கட்சி மாணவர் அணி மேலாளர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம், சித்தோட்டைச் சேர்ந்த பொம்மை விற்பனையாளர் தருமலிங்கம் என்பவர் கடந்த வாரத்தில் (12.04.2018) தீக்குளித்து இறந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதற்கு அடுத்த நாள் (13.04.2018) விருதுநகரில் சரவண சுரேஷ் என்பவரும் தீக்குளித்தார்.

இவர்கள் தவிர, புகழ் பெற்ற சமூக ஆர்வலரான டிராபிக் இராமசாமி அவர்கள் முதற்கொண்டு பலரும் இதே கோரிக்கைக்காக ஆங்காங்கே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.

கொண்ட கொள்கைக்காக உயிரையே அளிப்பது என்பது சிரமேற்கொண்டு வணங்க வேண்டிய ஈகைதான் (தியாகம்தான்); அதில் அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஈகையர்களே! இப்படி உயிரைத் தருவதால் காவிரி கிடைத்து விடும் என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அப்படிக் கிடைத்து விடும் என்றால் சொல்லுங்கள், நீங்கள் மட்டுமில்லை இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் வரிசை கட்டி வரக் காத்திருக்கிறோம் காவிரிக்காகவும் நம் வேளாண் பெருமக்களுக்காகவும் உயிரைக் கொடுக்க. ஆனால், தமிழர்கள் நாம் எத்தனை இலட்சம் பேர் உயிர் விட்டாலும் அதையெல்லாம் ஒரு செய்தியாகக் கூட யாரும் இன்று மதிக்க மாட்டார்கள் என்பதே வலிக்க வைக்கும் உண்மை.

“உணவு இல்லாமல் தமிழர்கள் செத்தாலும் கவலையில்லை, நாட்டுக்கு எரிபொருள் கிடைப்பதுதான் முக்கியம்” எனச் சொல்லாமல் சொல்லும் விதமாகத்தான் இவ்வளவு எதிர்ப்பையும் மீறிச் சாணவளித் திட்டம் (மீத்தேன் திட்டம்) கொண்டு வருகிறார்கள்!

“குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தமிழினம் செத்து மடிந்தாலும் சரி, கருநாடகத்தின் நாற்காலியை விட்டுக் கொடுக்க முடியாது” எனக் குறிப்பால் உணர்த்தும் வகையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தவிர்த்து வருகிறார்கள்!

அவ்வளவு ஏன், ஸ்டெர்லைட் வழக்கில், தமிழ் மக்கள் உயிரை விடத் தாமிரமே இந்நாட்டுக்குத் தேவை எனத் தீர்ப்பே எழுதிய வரலாறு இங்குண்டு!

இப்படி, தமிழர் இனமே அழிந்தாலும் தங்கள் பேரழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பவர்கள், நம்மில் சிலர் தீக்குளிப்பதாலோ, உண்ணாநிலை இருந்து உயிரை விடுவதாலோ மட்டும் மனமிரங்கித் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது எனக்கு இம்மியளவும் புரியவில்லை போராளிகளே!

அதற்காக நான் உங்களை வன்முறையில் ஈடுபடச் சொல்லவில்லை; அறவழிப் போராட்டங்களைக் கைவிட்டுப் போர்க்கருவிகளை நாடச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அதை விடப் பித்துக்குளித்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனெனக் கேட்டால்...

செவ்வாய், மார்ச் 13, 2018

பெண்ணியம் - இது திருக்குறளில் இல்லாத புதிய அதிகாரம்!

Feminism Couplets

பால்: பொதுப்பால்                                                                                                                                                  இயல்: உரிமையியல்
அதிகாரம் 
பெண்ணியம்

கற்க கசடற அதுமட்டும் போதாது
நிற்க எவரையும் எதிர்த்து!
 

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம்

திங்கள், ஜனவரி 29, 2018

சங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன?

Vijayendra Saraswathy Insulting Tamil Goddess and Respecting Indian National Anthem
ங்கர மட இளைய பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருப்பது தமிழ் மக்கள் அனைவரையும் கொதிக்கச் செய்திருக்கிறது.

அதே நேரம், தமிழ்த்தாயை அவர் அவமதிக்கவே இல்லை; கடவுளாக மதித்து நடந்து கொண்டார் எனவும், ஆண்டாள் சர்ச்சையை மறக்கடிக்கவே இது ஊதிப் பெருக்கப்படுகிறது எனவும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த விளக்கங்களைத் தோலுரித்து உள்ளே இருக்கும் உண்மை நிறத்தை வெளிக்காட்டவே வினா-விடை பாணியிலான இப்பதிவு! அறத்தின் துணிவிருந்தால் திறத்தின் உரமிருந்தால் எதிர்த் தரப்பு இதற்கு விடையளித்துப் பார்க்கட்டும்!

கேள்வி-௧: தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விசயேந்திரர் எழுந்து நிற்காதது தற்செயலாகக் கூட இருக்கலாமே? அதை ஏன் ஒரு பிரச்சினையாக ஆக்க வேண்டும்?

சனி, ஜனவரி 13, 2018

தைப்புரட்சியை அடுத்து வரும் தலைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Boghi, Pongal, Maattu Pongal, Tamil New Year, Thiruvalluvar Day, Kaanum Pongal Greetings for all the Tamils

பாரெங்கும் பரந்திருக்கும்
உயிர்த்தமிழ் உறவுகளே!
இதோ வந்து விட்டது பொங்கல்!
இது நாம்
கடந்த ஆண்டு வைத்தது போல்
கருப்புப் பொங்கல் இல்லை;
தமிழர் மரபை நிலைநாட்டிய
சிறப்புப் பொங்கல்!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்று
பயிர்நேயம் பேசிய தமிழர்களுக்கே
உயிர்நேயம் கற்பிப்பதாய்ச் சாக்கிட்டு
வணிகவெறி பிடித்த
வல்லூறுகள்
இம்மண்ணின்
பொருளாதார மையமாம்
பண்பாட்டுச் சின்னமாம்
சல்லிக்கட்டு விளையாட்டை
சட்டத் துணை கொண்டு
ஒடுக்கத் துணிந்தபொழுது...
தொல்பெரும் அடையாளத்தை
அழிக்க அலைந்தபொழுது...
குமுறி எழுந்த தமிழ்ப் பிள்ளைகள்
குமரிக் கடலோரம் திரள...
அதிகார மையங்கள்
அதைப் பார்த்து மிரள...
பன்னாட்டுத் தமிழரும்
ஒரு குரலாய் இணைய...
அரசுகள் எல்லாமே
அதைக் கண்டு பணிய...
உணவு அரசியலுக்கு எதிரான
உலகின் முதற்பெரும் போராட்டத்தை
வரலாற்றின் பொன்னேடுகளில்
தமிழினம் தன்
உதிரத்தால் பொறித்து
தைப்புரட்சியால் தன்
உரிமைமீட்(டு) எடுத்து
அதை அடுத்து
வந்தினிக்கும்
தலைப்பொங்கல் இது!

எத்தனையோ இழந்தோம் இதுவரை
அதில் ஒன்றை மீட்டதிந்த தலைமுறை!
இது வெறும் தொடக்கம்!
இனி அடுத்தடுத்தும் நடக்கும்!
ஒவ்வொன்றாய் மீளும்!
மீண்டும் இக்கூட்டம்
இப்பேருலகை ஆளும்!
இந்தத் தன்னம்பிக்கையோடு
இந்தாண்டுப் பொங்கலை
கொண்டாடுவோம் குலவையிட்டு!
பண்பாடுவோம் பறையிசைத்து!
அனைவருக்கும் அன்பு வழியும்
போகி, பொங்கல்
தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், 

மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி மதுரை டிசைன்சு பார் யூ.

தொடர்புடைய பதிவுகள்: 
ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!

ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்!

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?

திங்கள், ஜனவரி 08, 2018

இதுதான் ரஜினி அரசியலா?

Rajini in a Decision
ரு வழியாக... கட்டக் கடைசியாக... முடிவாக... தான் நடத்தி வந்த 25 ஆண்டுக் காலப் பூவா – தலையா விளையாட்டை முடித்து “இனி என் வழி அரசியல் வழி” எனப் பிடரி சிலிர்த்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார்!

ஆனால், இனி அரங்கேற இருப்பவை அவரே வடிவமைத்த காட்சிகளா?...

அல்லது, திரைப்படத்தைப் போல வேறொருவரின் இயக்கத்துக்கே இங்கும் வாயசைக்கப் போகிறாரா?...

ரஜினி அரசியல் உண்மையிலேயே நலந்தருமா?...

அல்லது, வெறும் விளம்பரமா?...

அவர் சொற்களிலிருந்தே அலசிப் பார்க்கலாம்!

புதன், டிசம்பர் 27, 2017

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்

Vote for Money
 
வாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்...

மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்கள்...

பணத்துக்கு விலை போனவர்கள்...

- இப்படி நாடே திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) மக்களை.

உழைக்கும் மக்களுக்கு நம் நாட்டில் எப்பொழுதுமே மரியாதை குறைவுதான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் கறுப்பர்கள், படிக்காத முட்டாள்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள், நாகரிகம் அறியாதவர்கள், முரடர்கள், ஏமாளிகள், நம்பத்தகாதவர்கள், குடிகாரர்கள்... இன்னும் என்னென்னவோ. இவற்றோடு ‘பணத்துக்கு வாக்களிப்பவர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துச் சொல்வதால் அவர்களுக்குப் புதிதாக எந்த மானக்கேடும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஆம், அவர்கள் பணம் வாங்கினார்கள். பணம் வாங்கிக் கொண்டுதான் தினகரனை வெற்றி பெறச் செய்தார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் அவர்கள் பணத்துக்கு விலைபோனார்கள்!

ஆனால், அம்மக்களின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை நிலைமை என்ன? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இவற்றையெல்லாம் ஆராய வேண்டாவா? இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மக்களாட்சி முறைக்கே அறைகூவல் விடுக்கும் இந்த காசுக்கு வாக்களிக்கும் பிரச்சினையை நாம் சரி செய்ய முடியுமா?

திங்கள், நவம்பர் 27, 2017

மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!

Tamil Eelam National Heroes Day 2017

லகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே!

இன்று மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்!

இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும், அறிக்கை விடுத்தும் கண்ணீர் உகுத்தும் – இப்படியேதான் நாம் காலத்தை ஓட்டப் போகிறோமா? இவை தவிர வேறேதும் நம்மால் செய்ய முடியாதா?

தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்பதற்காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாக்கியவர்கள் மாவீரர்கள். தமிழீழத்தை வென்றெடுத்து அந்த வெற்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்குவதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

இதோ, சிங்கள வல்லூறுகள் மீண்டும் இன்னொரு தமிழின அழித்தொழிப்புக்குத் திட்டம் தீட்டத் தொடங்கி விட்டன. ‘ஒரே நாடு – ஒரே இனம்’ எனும் தங்கள் நெடுங்காலக் கொள்கையைத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகவே அமலாக்க முயன்று வருகிறது இலங்கைப் பேரினவாத அரசு. இது தமிழினத்தைச் சட்டப்படியாகவே ஒழிப்பதற்கான நடவடிக்கை எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழ்ப் பற்றாளர்களும், மனிதநேய ஆர்வலர்களும். போர் என்ற பெயரில் பச்சையான இனப்படுகொலையை இலங்கை நடத்தியபொழுதே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு சமூகம், இப்படிச் சட்டத்தின் பெயரால் அதைச் செய்தால் பெயருக்குக் கூடக் கண்டு கொள்ளாது என்பது நாம் அறியாததில்லை. ஆக, இனியும் வெறுமே அஞ்சலிக் கூட்டங்களும் விழிப்புணர்வு மாநாடுகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிராமல் தமிழீழ விடுதலைக்கான அரசியல் – சட்ட முயற்சிகளை வேகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஈழப் பிரச்சினைக்காகத் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை எனப் பார்த்தால், ஐ.நா–விலும் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்திலும் இனப்படுகொலை குறித்து நாம் எடுத்துரைத்ததுதான். தமிழர்களுக்காகப் பேச உலகில் எந்த நாடும் இல்லாத நிலையில் பசுமைத் தாயகம், நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற இயக்கங்களும் வைகோ, அன்புமணி இராமதாசு, திருமுருகன் காந்தி போன்ற தனிப்பட்ட மனிதர்களும் மட்டுமே சேர்ந்து இந்த உயரத்துக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றதே பெரிதுதான். கண்டிப்பாக அது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இது மட்டும் போதாது; போதவே போதாது!

ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கனவு நிறைவேற வேண்டுமானால், அப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் பன்னாட்டு சமூகத்தின் முகத்தில் அறையும்படி முன் வைக்க வேண்டும்! அந்தக் கோரிக்கை சரியானதுதான் என்பதற்கான பன்னாட்டு அமைப்பு ஒன்றின் ஏற்பிசைவை (அங்கீகாரம்) நாம் பெற்றாக வேண்டும்! அதற்கு ஒரே வழி, நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதுதான்!

பெரும்பாலோர், ஒரு நாட்டின் மீது வழக்குத் தொடுக்க இன்னொரு நாட்டினால்தான் முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நீதிமன்றத்தில்தான் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி இல்லை [பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) என்பது வேறு; பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) என்பது வேறு!). பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பொறுத்த வரை தனி ஒரு மனிதர் கூட அங்கே வழக்குத் தாக்கல் செய்ய முடியும்! (பார்க்க: கீழே உள்ள படம்!) 
How can people report crimes to the ICC?
படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின் மீது சொடுக்குக!
இது குறித்து முழுமையான விவரங்களுக்கு அழுத்துங்கள் இங்கே!

எனவே, இனியும் ஐ.நா–வையோ மனித உரிமை ஆணையத்தையோ நம்பிக் கொண்டிராமல் இனப்படுகொலை குறித்துத் தமிழ் அமைப்புகளே நேரிடையாக வழக்குத் தொடுக்க வேண்டும்!

இதனால் தமிழினத்தை அழித்த இனவெறியர்களுக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நடந்தது இனப்படுகொலைதான் என்பதும், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்பதும் மெய்ப்பிக்கப்படும். அது மட்டும் நடந்து விட்டால் அந்தத் தீர்ப்பை வைத்தே நாம் தமிழீழப் பொதுவாக்கெடுப்புக் கோரலாம். “சொந்த நாட்டு மக்களை அரசே கொன்று குவிக்கும் ஒரு நாட்டில் அந்த மக்கள் எப்படி வாழ முடியும்?” எனப் பன்னாட்டு அவையில் நாம் குரல் உயர்த்திக் கேட்கலாம். “இப்படிப்பட்ட ஓர் அரசமைப்பிடமிருந்து அந்த மக்கள் விடுதலை கோருவதில் என்ன தவறு?” என உலக நாடுகளின் முகத்துக்கு நேராகக் கேள்வி எழுப்பலாம். ஐ.நா–வின் அமைப்புகளுள் ஒன்றான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு எவனும்/எவளும் அதை எதிர்த்துப் பேச முடியாது. அதன் பின் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எதன் உதவியும் நமக்குத் தேவையும் கிடையாது.

தமிழீழ விடுதலை என்பது கண்டிப்பாக ஆகப் பெரிய இலக்குதான். ஆனால், இயலவே இயலாததில்லை. ஆகவே, தொடர்ந்தும் உலக நாடுகளையும் பன்னாட்டு அமைப்புகளையும் எதிர்பார்க்காமல் தமிழ் அமைப்புகள் நேரிடையாகச் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்! தமிழினத்துக்கு நடந்த கொடுமையின் தீவிரத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்! அதை வைத்து ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டும்! புலிகளின் தாகத்தைத் தணிவிக்க வேண்டும்! 

அதுதான்...
தமிழர்களுக்காகவே தங்கள் வாழ்வைத் தத்தம் செய்த மாவீரர்களுக்கும்
தமிழர்கள் என்பதற்காகவே குருதி தோயக் கொல்லப்பட்ட நம் உயிர்ச் சொந்தங்களுக்கும்
தமிழினத்தில் தோன்றிய காரணத்துக்காக வயிற்றிலேயே வதைபட்ட நம் பிஞ்சுகளுக்கும்
நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! 

International Criminal Court and Tamils

(நான் ‘அகரமுதலதனித்தமிழ் இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧) வாகை தொலைக்காட்சி, ௨) ஜஸ்டிஸ் ஹப், ௩) விக்கிப்பீடியா, ௪) கெட்டி இமேஜசு.

தொடர்புடைய பதிவுகள்:
மாவீரர் திருநாள் என்பது என்ன?

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

திங்கள், அக்டோபர் 23, 2017

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

The Tamil forefathers who fought for the Temple Worship Rights of Non-Brahmins
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள்
முன்குறிப்பு: பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய தமிழ்நாடு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி, பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் ‘தமிழ்க் காப்புக் கழக’த் தலைவரும் ஆட்சித் தமிழறிஞருமான திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா அவர்கள் நடத்திய ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் ஐயா அவர்களால் பாராட்டப் பெற்றதும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் 30.01.2016 அன்று வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கப்பட்டதுமான சிறுவன் என் ஆய்வுக் கட்டுரையை இந்த நேரத்தில் உலகத் தமிழ் நெஞ்சங்களின் மேலான பார்வைக்கு விருந்தாக்க விழைகிறேன்! 

டவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...

கடவுள் மீது அன்பு (பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான் உரிமை! மனச்சான்றுள்ள மனிதர் யாராவது இதை ஏற்க முடியுமா? ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து - வழிபட்டு வருகிறார்கள். ஆம்! பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.

இது சரியா? தமிழர்கள் கடவுளைப் பூசிக்கக்கூடாதா? அப்படிப் பூசிப்பது சமய நம்பிக்கைகளுக்கோ வேறு ஏதேனும் நெறிமுறைகளுக்கோ எதிரானதா? இது பற்றி சமயம் - சட்டம் - வரலாறு - குமுகம் (சமூகம்) - இறையியல் என எல்லாக் கோணங்களிலிருந்தும்  அலசுவதே இக்கட்டுரையின் மைய நோக்கம். கூடவே,

தமிழர்கள் இந்துக்களா?...

தமிழர் சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?...
 
கோயில் பூசை முறைகளை உருவாக்கியவர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா?...

உலகில் எங்குமே இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தெய்வச் சிலைகளுக்குத் துணியாலான ஆடை ஏன்?...

தமிழர்களின் சாவுச் சடங்குகளுக்கும் கோயில் பூசைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

தமிழர் இல்லங்களில் உள்ள ‘நடுவீடு’ என்பது என்ன?...

தமிழர்களின் நடுகல் வழிபாட்டு முறைக்கும் நடுவீட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

இது போன்ற பல்லாண்டுக் காலக் கேள்விகள் அனைத்துக்குமான திடுக்கிடும் விடைகளையும் காணலாம் வாருங்கள்!...

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்