.

ஞாயிறு, ஜனவரி 22, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!

Tamil-flag
லக உருண்டை சுழலத் தொடங்கிய நாள் தொட்டு இல்லாத புதுமையாக முதன் முறையாய்க் காளைகளைக் காப்பாற்றப் புலிகள் களமிறங்கியிருக்கின்றன தமிழ் மண்ணில்!

2017 சனவரி 8 அன்று சென்னை மெரினாவில் தொடங்கிய எழுச்சிப் பேரலை தமிழ்நாடு முழக்கப் பரவி, இப்பொழுது உலகம் முழவதும் ஆழிப் பேரலையாய் விண்ணைத் தொட்டு வீசிக் கொண்டிருக்கிறது! தமிழர்கள் மட்டுமில்லை மலையாளிகள், மகாராட்டிரர்கள், வெள்ளையர்கள், அராபியர்கள் எனப் பிற மாநிலத்தினர் முதல் வெளிநாட்டினர் வரை மனித இனம் மொத்தமும் இன்று தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்கிறது!


“இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசியதெல்லாம் அந்தக் காலம். ஆங்கில வழியில் படித்து, அயல்நாட்டுக்காக இங்கிருந்தே பணி செய்யும் உலகமயமாக்கல் காலக்கட்டம் இது. இனி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை” என்று ஆட்சியாளர்கள் இறுமாந்திருந்த வேளையில் அதுவரை இல்லாத பேரெழுச்சியாய் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் ஈழத்துக்காகப் போராடிய இளைஞர்கள்.

அது நடந்த மிகக் குறுகிய காலக்கட்டத்துக்குள், தமிழினப் படுகொலை போன்ற தலை போகிற பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல தமிழர்களின் ஒரு சிறு பண்பாட்டு அடையாளத்துக்கு ஊறு நேர்ந்தாலும் சரி, விட மாட்டோம் என இதோ களத்தில் வந்து நிற்கிறார்கள் தமிழ்ப் பிள்ளைகள்! இதுநாள் வரையில் நம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் போராடிய அத்தனை பேரும் நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொள்ள வேண்டிய தறுவாய் இது!

ஆனாலும் “நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் ஜல்லிக்கட்டுக்குப் போய் இவ்வளவு பெரிய போராட்டம் தேவையா?” என்கிற கேள்வி இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லாத் தளங்களிலும். முட்டாள்தனம்!

ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருப்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பால் அரசியல்! அதைக் குறி வைத்துத்தான் உயிர்கள் மீதான இரக்கம் எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன பீட்டா போன்ற முதலைகள். இந்தப் பிரச்சினை மட்டும் அவர்களுக்கு சாதகமாக முடிந்து விட்டால் நாட்டு மாடுகளின் இனமும் அவை தரும் பாலும் அழிந்து கலப்பினப் பசும்பால் மட்டுமே இங்கு கிடைக்கும் என்கிற சூழல் உருவாகும். அப்படி நடந்தால், நாளடைவில் மொத்தத் தமிழ்நாடும் நோய்களின் கூடாரமாக மாறி விடும்! இதை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மட்டும் சொல்லவில்லை, மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். கலப்பினப் பசுக்களின் பால் உண்மையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் நஞ்சு என அவர்கள் எச்சரிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, இதோ ஒரு விழியம்!


இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே! ஜல்லிக்கட்டு என்பது சிறிய விதயமா? சரி, அப்படியே இது சிறிய விதயம்தான் என வைத்துக் கொண்டாலும் இந்தப் போராட்டம் என்ன ஜல்லிக்கட்டுக்காக மட்டுமா நடைபெறுகிறது?

பன்னாட்டு சமூகத்தையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பி உட்கார வைத்திருக்கும் இந்த இளைய போராளிகள், முதலில் “ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கு” என்றார்கள். பிறகு, இந்தத் தடைக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பால் விற்பனை நோக்கத்தை உணர்ந்து அதில் தொடர்புடைய கோக், பெப்சி நிறுவனங்களையும் தடை செய்யக் கோரினார்கள். அத்தோடு நில்லாமல், வெளிநாட்டு நிறுவன உணவுப் பொருட்களான பீட்சா, பர்கர் ஆகியவற்றையும் சாப்பிடாதீர்கள் என்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது, “வாடிவாசல் திறந்தால் மட்டும் போதாது! காவிரி மேலாண்மை வாரியமும் சேர்த்துத் திற!” என்று முழங்குகிறார்கள்.

ஆக, எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இல்லை. ஒட்டுமொத்த உணவு அரசியலுக்கு எதிரான பெரும் போர்!

Tamils Sea in Tamil Shore

பொதுவாக, ஆணும் பெண்ணும் அருகருகே உட்காரக் கூடாது, பேசக்கூடாது, பழகக்கூடாது எனவெல்லாம் சட்டம் போடுவார்கள் பழம்பெருச்சாளிகள்! இதோ, இரவும் பகலுமாய்ப் பனியிலும் குளிரிலும் ஆயிரமாயிரம் இளைஞர்களும் இளம்பெண்களும் நாள்கணக்காகப் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! ஒரு சிறு சச்சரவு இல்லை, சஞ்சலம் இல்லை. முறையீடு இல்லை, குறைபாடு இல்லை. கோயிலுக்குள்ளேயே தப்பு நடக்கும் நாட்டில், காதல் கடலாம் மெரினாவில் உட்கார்ந்து கண்ணியம் காக்கிறார்கள் எம் தமிழ்க் கண்மணிகள்!

Paragons of Virtue

ஒழுக்கம் மட்டுமில்லை போராட்ட நாகரிகத்திலும் உச்சம் தொட்டு விட்டார்கள் இவர்கள்! 100 மணி நேரத்தையும் கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், இதுவரை வன்முறையின் நிழல் கூட இல்லை. நள்ளிரவு ஒளிபரப்பில், போராட்டக் களத்திலிருந்து பேசிய சேலம் இளைஞர் கேட்கிறார், “இத்தனை மணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறோமே, இதுவரை ஒரே ஒரு பேருந்துக் கண்ணாடியாவது உடைந்ததா?... உடைந்ததா?... சொல்லுங்கள்!” என்று.

அது மட்டுமா? முதலுதவி ஊர்தி (ambulance) வந்தால் உடனுக்குடன் வழிவிடுகிறார்கள். அன்றாடம் தாங்கள் போடும் குப்பைகளைத் தாங்களே சேர்ந்து அப்புறப்படுத்துகிறார்கள். மின்சாரத்தை நிறுத்தினால் கைப்பேசி ஒளியில் போராடுகிறார்கள். பேசி இணைப்பைத் துண்டித்தால் பயர்சாட் மூலம் தகவல் பகிர்கிறார்கள். இப்படியொரு போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை இந்தியாவுக்கே புதிது!

“ஜல்லிக்கட்டு வழக்குதான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதே! அரசு என்ன செய்ய முடியும்?” என்று கேட்டால், “குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கலாமே” எனக் கிடுக்குப்பிடிக் கேள்வி எழுப்புகிறார்கள். சிறப்புச் சட்டம் இயற்றினாலாவது அடங்குவார்கள் என்று பார்த்தால், “யாரை ஏமாற்றுகிறீர்கள்? நிரந்தரச் சட்டம் கொண்டு வாருங்கள்! இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்” என அடுத்த நிமிடமே அறிவிக்கிறார்கள். ‘குடி, கூத்து, கொண்டாட்டம், பொழுதுபோக்கு - இவைதாம் இளைஞர்களின் இயல்பு என்று கருதியிருந்தோமே! எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இப்பேர்ப்பட்ட அரசியல் தெளிவு!’ என வாயடைத்துப் போயிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

வெறும் இளைஞர்களும் இளம்பெண்களும் மட்டுமில்லை தாய்மார்கள் பலர் பேச்சுக் கூட வராத பிஞ்சுக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். தந்தைமார்கள் பலர் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படித்து முடித்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எனப் பல் போன கிழவிகள் முதல் பத்து நாள் பச்சைக் குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாக மொத்தத் தமிழ்நாடே சிலிர்த்தெழுந்து வந்திருக்கிறது தமிழர் பண்பாட்டைக் காக்க! தமிழின உரிமையை மீட்க!
All age people in Jallikattu protest
வயது முதிர்ந்த பாட்டி, அருகில் நடுத்தர வயதுப் பெண்மணி, மடியில் சிறு பிள்ளை!
இவ்வளவு ஏன்? இதோ, இவை விட உள்ளத்தை நெகிழச் செய்வது வேறென்ன இருக்க முடியும்? கருச் சுமந்த தாய் ஒருவர் வயிற்றில் குழந்தையோடு போராட வந்து விட்டார். அது மட்டுமில்லை, அவர் கையில் இருக்கும் முழக்கத்தைப் பாருங்கள்! உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் கண்ணீர் முட்டுகிறது. இதுவரையான போராட்டப் பெரும் வரலாற்றில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறதா இந்த ஒட்டுமொத்த உலகம்?



ஆயினும், இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வரலாறு காணாத இந்தப் போராட்டத்தின் இலக்கு எந்த அளவுக்குச் சரியானது என்பது குறித்த கேள்விகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுவதைப் பார்க்க முடிகிறது.

“ஆயிரம் இருந்தாலும் ஜல்லிக்கட்டு ஓர் உயர்சாதி விளையாட்டுத்தானே? நிலவுடைமைத்தன அடையாளம்தானே? அதற்குப் போய் எதற்காக இப்படி உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும்?” என்பதுதான் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், மூத்த இதழாளர்கள் எனப் பலரின் கேள்வியாக இருக்கிறது. அதனால்தான் தமிழர் பிரச்சினைகளுக்காக வழக்கமாகப் போராடும் யாரையும் இந்த முறை களத்தில் அவ்வளவாகக் காண முடியவில்லை.

ஆம்! ஜல்லிக்கட்டுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதும் உண்மைதான். தாழ்த்தப்பட்ட சாதியினர் எனப்படும் ஒரு பெரும் சமூகத்தை வெளியே நிறுத்தி விட்டு, மேல்சாதி எனச் சொல்லிக் கொள்வோர் மட்டுமே கலந்து கொள்ளும் தீண்டாமைப் பெருவிழாவாகத்தான் இது நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இது சரி செய்யக் கூடிய ஒரு குறைதானே தவிர, இந்த விளையாட்டின் தவிர்க்க முடியாத கூறு (அம்சம்) கிடையாது! தவிர, இன்று போராடும் பெரும்பான்மை மக்களுக்கு இந்த உண்மையும் தெரியாது! தமிழர் வரலாற்றில் தனியிடம் பிடித்து விட்ட இந்தப் போராட்டத்தில் வெறும் மேல்சாதிக்காரர்கள் மட்டும் அமர்ந்திருக்கவில்லை. எல்லா சாதியினரும் எல்லாச் சமயத்தினரும்தாம் இருக்கிறார்கள். அதனால்தான் மேல்சாதி விளையாட்டு எனப்படும் இதை ஆதரிக்கும் அதே போராட்டக் களத்திலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாகத் திகழும் பறை இசையையும் நம்மால் கேட்க முடிகிறது.

Tamils protest apart from Caste and Religion

இன்னும் சொல்லப் போனால், எந்த சாதியினர் இதில் கலந்து கொள்ளத் தடை இருக்கிறதோ அந்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதியான திருமாவளவன் அவர்களே இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார். வெறும் ஆதரவு கூட இல்லை, இந்தப் போராட்டம் எந்த வகையில் திசை திருப்பப்படும், அதைத் தவிர்த்து எப்படி இது நடத்தப்பட வேண்டும் எனவெல்லாம் விளக்குகிறார். (பார்க்க: திருமாவளவன் நேர்காணல்).

எது எப்படியோ, பீட்டாவும் காங்கிரசும் இணைந்து தீட்டிய கூட்டுக் களவாணித் திட்டம் ஒன்று கடைசியில் நமக்கு நன்மையாகவே முடிய இருக்கிறது!

ஜல்லிக்கட்டு எனும் ஒற்றை விளையாட்டை ஒழிப்பதன் மூலம் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தமிழ்நாட்டுப் பால் சந்தையை அவர்கள் கைப்பற்ற நினைத்தார்கள். ஆனால், பால் அரசியலோடு உணவு அரசியலுக்கும் சேர்த்து வைக்கப்பட்டது ஆப்பு! கூடவே, இத்தனை காலமாய் வேரோடியிருந்த சாதியப் பிரச்சினையிலும் புதிய திருப்பம் பிறக்க வழி ஏற்பட்டு விட்டது!

ஆம்! இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த பழம்பெரும் ஜல்லிக்கட்டு உண்மையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டது. இனி ஜல்லிக்கட்டு என ஒன்று இம்மண்ணில் நடக்குமானால் அது இந்த இளைய தமிழர்கள் பெற்றுத் தந்த புதிய ஜல்லிக்கட்டாகத்தான் இருக்க முடியும். அப்படி சாதி, சமயம் என எதையுமே பாராமல் தமிழர் எனும் ஒற்றை உணர்வுக்காக இத்தனை பேர் போராடி மீட்டுக் கொடுத்த ஜல்லிக்கட்டை இனியும் உயர்சாதி மக்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிவிழாவாகவோ தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைக்கும் தீண்டாமைப் பெருவிழாகவோ யாரும் நடத்த முடியாது. அப்படி நடந்தால், இது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம் என நம்பி உயிரைக் கொடுத்துப் போராடிய அத்தனை இலட்சம் இளைஞர்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்து விடும்!

எனவே, இந்தாண்டு நடக்கப் போகும் வாடிவாசல் திறப்பு விழா இத்தனை காலமாக இறுகிக் கிடந்த சாதியப் பூட்டுக்களின் தகர்ப்பு விழாவாகவும் உணவு, மொழி, பண்பாடு, அரசியல் என அத்தனை தளங்களிலும் தமிழர் உரிமையை உறுதி செய்யும் சிறப்பு விழாவாகவுமே இருக்கும்! கண்டிப்பாக இது நடக்கும்!

Brave Thamizhachi!

இற்றைத் தகவல் (Update Info): பன்னாட்டு சமூகமே உலக வரலாற்றுப் பேரேட்டைப் புரட்டித் தமிழர்களின் இந்தப் புத்தெழுச்சி பற்றி எழுதத் தங்கத் தூவலைத் திறந்த வேளையில், போராட்டத்தை அடக்குகிறோம் என்கிற பெயரில் தூவல் முள்ளைத் தன் தடியால் அடித்து உடைத்தது தமிழ்நாடு அரசின் காவல்துறை! போராட்டத்தைத் திசை திருப்பிய சில கட்சிகளும் அதற்குக் காரணமாய் அமைந்தன. இருந்தாலும், தமிழ்நாட்டு - இந்திய வாழ்வியலில் போராட்டம் எனும் சொல் எப்பொழுதும் விளிம்பு நிலை மக்கள் எனப்படும் சிலருக்கு மட்டுமே சொந்தமாய் இருந்த நிலைமையை மாற்றி நடுத்தர மக்கள் எனப்படும் பெரும்பான்மை மக்கள் உள்ளத்திலும் ‘இனி எதுவாக இருந்தாலும் இதே போல் போராடி வென்றெடுக்க வேண்டும்’ எனும் ஊக்கத்தை விதைத்த வகையில் இந்தத் ‘தைப்புரட்சி’ கண்டிப்பாக ஆகப் பெரிய வெற்றியே என்பதில் ஐயமில்லை! 
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி டுவிட்டர் குழுக்கள்.
விழியங்கள்: நன்றி ௧) தமிழ் ஒன் இந்தியா, ௨) கிரீன் இரெவ்.

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

16 கருத்துகள்:

  1. அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பு, இன்று காலை முதல் ஆரம்பித்து அதிகமாகிக் கொண்டே வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! இப்பொழுது எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. இது நேற்றிரவு எழுதிய பதிவு. ஆனால், தற்பொழுது நிலைமையே வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.

      நீக்கு
  2. இன்றைய நிலை வேறாக இருக்கிறது. நல்ல படியாக முடிய வேண்டும் என்று பலருக்கும் கவலை வந்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! கடைசி நேரத்தில் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது. மாற்றியவர்கள் யார் என்பதும் தொலைக்காட்சியிலேயே வெட்ட வெளிச்சமாகி விட்டது. என்னத்தைச் சொல்ல... ஒன்றே ஒன்று மட்டும் உண்மை! இன்றைய மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் கட்சியினரும்தாம் மிக மோசமானவர்கள்!

      நீக்கு
  3. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!


    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
    தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! ஆனால், முடிவு விரும்பத்தக்கதாக இல்லை. வென்றவர்கள் போய்விட்டார்கள். ஆனால், அவர்களுக்காகப் பாடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் உலகப் பெரும் துன்பங்களைப் பட்டு விட்டனர்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி அம்மணி! ஆனால், நடப்பவற்றையெல்லாம் பார்த்தால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நடந்தால் மகிழ்ச்சிதான்! பிரபல எழுத்தாளரான தாங்களே என் எழுத்தைப் பாராட்டியிருப்பதை எனக்கான சான்றிதழாகக் கருதுகிறேன். மிக்க நன்றி!

      நீக்கு
  5. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது நேற்றுவரை, சகா. ஆனால் நாம் நேற்று பயந்தது போலவே நடந்திவிட்டது. இன்று திசையே மாறி மனதை வேதனைப்படுத்துகிறது. பேசுகிறேன் அப்புறம் உங்களிடம்....இதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியவில்லை சகா...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த பழம்பெரும் ஜல்லிக்கட்டு உண்மையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டது. இனி ஜல்லிக்கட்டு என ஒன்று இம்மண்ணில் நடக்குமானால் அது இந்த இளைய தமிழர்கள் பெற்றுத் தந்த புதிய ஜல்லிக்கட்டாகத்தான் இருக்க முடியும். அப்படி சாதி, சமயம் என எதையுமே பாராமல் தமிழர் எனும் ஒற்றை உணர்வுக்காக இத்தனை பேர் போராடி மீட்டுக் கொடுத்த ஜல்லிக்கட்டை இனியும் உயர்சாதி மக்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிவிழாவாகவோ தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைக்கும் தீண்டாமைப் பெருவிழாகவோ யாரும் நடத்த முடியாது. அப்படி நடந்தால், இது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம் என நம்பி உயிரைக் கொடுத்துப் போராடிய அத்தனை இலட்சம் இளைஞர்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்து விடும்!

    எனவே, இந்தாண்டு நடக்கப் போகும் வாடிவாசல் திறப்பு விழா இத்தனை காலமாக இறுகிக் கிடந்த சாதியப் பூட்டுக்களின் தகர்ப்பு விழாவாகவும் உணவு, மொழி, பண்பாடு, அரசியல் என அத்தனை தளங்களிலும் தமிழர் உரிமையை உறுதி செய்யும் சிறப்பு விழாவாகவுமே இருக்கும்! கண்டிப்பாக இது நடக்கும்!//

    இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.
    கைகொடுங்கள் நண்பரே!
    உயிரோட்டமான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆனால், பதிவை எழுதும்பொழுது இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. மிகுந்த வேதனையுடன் இருக்கிறேன். ஆனாலும் உங்கள் பாராட்டுக் கண்டு மகிழ்ச்சியே! மிக்க நன்றி!

      நீக்கு
  7. சோதனைகளும் வேதனைகளும் தாண்டிச் சென்றுள்ளன. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! நடந்த வன்முறைகள் உள்ளத்தை உடையச் செய்தாலும் நம்பிக்கை காப்போம்! இதமான கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  8. இதுநாள் வரை ஜல்லிக்கட்டு விளையாட்டில் மேல் சாதியினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது. இனி ஜல்லிக்கட்டு நடந்தால் அது சமத்துவ ஜல்லிக்கட்டாகத் தான் நடக்க வேண்டும். அரசியல் சூழ்ச்சி காரணமாக முடிவு வேதனை தருவதாக அமைந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.மாணவர்கள் நடத்தியது அறப்போராட்டம். எனவே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை இவர்கள் தொடர வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள் சகோதரி! எனக்கும் இந்த விளையாட்டில் உள்ள சாதிப் பாகுபாடு தொடக்கத்தில் தெரியாது. மிகப் பெரும்பாலானோருக்கும் தெரியாது. நம்மைப் போல் சமூக ஆர்வலர் ஒருவர் இணைய இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையைப் படித்துத்தான் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.

      சாதி, சமயம் என எந்த வேறுபாடும் பார்க்காமல் இது தமிழர் பண்பாடு என நம்பி இத்தனை இலட்சம் தமிழர்கள் போராடி இதை மீட்டுக் கொடுத்திருப்பதால் இதை இனி அனைவரும் பங்கு கொள்ளும் விழாவாகத்தான் நடத்த வேண்டும் எனக் கார்த்திகேயன் சேனாதிபதி ஐயா அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால், ஏறு தழுவல் நடக்கும் பகுதிகளில் உள்ள சாதிய இறுக்கத்தைப் பார்த்தால் அவராலும் இது எந்தளவுக்கு முடியும் எனத் தெரியவில்லை. பார்ப்போம்! ஏதோ, முடிந்ததைச் செய்தேன். நல்லது நடந்தால் சரி! உறுதி மிக்க உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்