.

திங்கள், ஜனவரி 08, 2018

இதுதான் ரஜினி அரசியலா?

Rajini in a Decision
ரு வழியாக... கட்டக் கடைசியாக... முடிவாக... தான் நடத்தி வந்த 25 ஆண்டுக் காலப் பூவா – தலையா விளையாட்டை முடித்து “இனி என் வழி அரசியல் வழி” எனப் பிடரி சிலிர்த்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார்!

ஆனால், இனி அரங்கேற இருப்பவை அவரே வடிவமைத்த காட்சிகளா?...

அல்லது, திரைப்படத்தைப் போல வேறொருவரின் இயக்கத்துக்கே இங்கும் வாயசைக்கப் போகிறாரா?...

ரஜினி அரசியல் உண்மையிலேயே நலந்தருமா?...

அல்லது, வெறும் விளம்பரமா?...

அவர் சொற்களிலிருந்தே அலசிப் பார்க்கலாம்!


இதற்குப் பெயர் அரசியலா?

I will come in politics definitely - Rajini's Announcement
போர் என்றால் தேர்தல்தான். இப்பொழுது என்ன தேர்தலா வந்து விட்டது?” – விசிறிகள் தொடர் சந்திப்பின் முதல் நாள் ரஜினி கூறிய கருத்து இது. இதே போல் நிறைவு நாள் உரையில்,

“நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று முழங்கிய கையோடு, அடுத்து வரும் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது, தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது பற்றி உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவது, ஆட்சியைப் பிடிப்பது, வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாவிட்டால் மூன்றே ஆண்டுகளில் பதவி விலகுவது என்று அடுக்கடுக்காகத் தன் திட்டங்களை விவரித்தார் ரஜினிகாந்த்.

“தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லித் தேர்தல் அரசியலே வேண்டா என்று ஒதுங்கியிருந்த பெரியார் முதல் “நான் முதலமைச்சராகத்தான் கட்சி தொடங்கினேன். பின்னே, அடுத்தவனை முதல்வராக்கவா நான் கட்சி தொடங்குவேன்?” என்று வெளிப்படையாகவே கேட்ட சீமான் வரை அரசியலுக்கு வரும் அத்தனை பேருமே மக்களுக்காக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், தொண்டுகள், சட்டப் போராட்டங்கள் போன்றவற்றை நடத்தி, அதற்காகச் சிறை சென்று, ஆட்சியிலிருப்பவர்களின் பகையை அறுவடை செய்து, படாத பாடெல்லாம் பட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்.

ஆனால், கட்சிக்குப் பெயர் சூட்டு விழாக் கூட நடத்தும் முன்பே தேர்தல்... வாக்குறுதி... ஆட்சி... அரியணை... என ரஜினி முழுக்க முழுக்க முதல்வர் நாற்காலியைக் குறி வைத்தே இறங்குவது என்ன வகையான அரசியல்? முதலில், இதற்குப் பெயர் அரசியலா? அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது இல்லை; சமூகத்துக்காக உழைப்பது இல்லை; வெறுமே தேர்தலில் நிற்பதும், ஆட்சிக்கு வருவதும்தாம் என்று ரஜினிக்குச் சொல்லித் தந்த அந்த அறிவுக் கொழுந்து யார்?

நிற்க! சீமானைப் போல் நான் “ரஜினி தேர்தல் அரசியலுக்கே வரக்கூடாது. வேண்டுமானால் சேவை அரசியல் செய்யட்டும்” எனச் சொல்லவில்லை. குடியரசு நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்; ஆட்சிக்கு வரலாம். அஃது அவரவர் உரிமை. யாரும் யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல இங்கு அதிகாரம் கிடையாது.

ஆனால், ஆட்சிக்கு வருவதும் அரசியல் செய்வதும் இரு வேறு பிரிவுகள். ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் எல்லாரும் அரசியல்வாதிகளும் இல்லை; அரசியல்வாதிகள் எல்லாரும் ஆட்சிக்கு வந்து விடுவதும் இல்லை. ஆட்சிக்கே வராமல் கடைசி வரை மக்களுக்காக உழைத்து மொத்த சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த காந்தி, பெரியார், மார்ட்டின் லூதர் கிங் போன்ற அரசியல்வாதிகளும் இங்கு உண்டு; மக்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் வெறுமே அவர்களின் உணர்ச்சியைத் தூண்டி ஆட்சியைப் பிடித்த ஹிட்லர், இராசபக்ச போன்ற கொடுங்கோலர்களும் இங்கு உண்டு. எனவே, அரசியலுக்கு வருவது என்பதே ஆட்சிக்கு வருவதுதான் என நினைப்பது அடிப்படை அரசியல் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனம்.

நேர்மையான அரசியல்வாதி என்பவர் ஒருபொழுதும் ஆட்சிக் கட்டிலை மையப்படுத்தித் தன் அரசியலை அமைத்துக் கொள்ள மாட்டார். மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பார், அவர்களுக்காக உழைப்பார், சமூக நலனுக்குப் பாடுபடுவார், இவற்றுக்கெல்லாம் கைம்மாறாக மக்கள் பதவியை அளித்தால் ஏற்றுக் கொள்வார்; இல்லாவிட்டால், மீண்டும் தன் தொண்டுகளைத் தொடர்வார்.

மாறாக, ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வருவது, அதற்காக வாக்குறுதிகள் வழங்குவது, முடிந்தால் அவற்றை நிறைவேற்றுவது, இல்லாவிட்டால் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்புவது என்பது நேர்மையான அரசியலா இல்லையா என்பதை விட, முதலில் அது அரசியலே இல்லை என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.

சாதி, சமய வேறுபாடில்லாத அரசியலுக்கு வழிகாட்டி பகவத் கீதையா?
 

Bhagavad Gita As it is - Russian Version, the controversial translation of Bhagavad Gita in Russia
அரசியலுக்குத் தான் வருவதற்கான காரணத்தை விளக்கவே பகவத் கீதையை நாடும் ரஜினி, சாதி - சமயப் பாகுபாடற்ற அரசியலைக் கொண்டு வருவதாகச் சொல்வது தொடக்கத்திலேயே இடிக்கிறது.

சாதியத்தை வலியுறுத்துவதாகத் தொடர்ந்து கண்டனத்துக்குள்ளாகும் நூல்களுள் பகவத் கீதையும் ஒன்று. கண்டனம் தெரிவிப்பவர்கள் வெறும் தமிழ்நாட்டு அரசியலாளர்களாகவும், தமிழ் அறிஞர்களாகவும் மட்டுமே இருந்தால் கூட இது வெறுமே இங்கு நிலவும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வின் பகுதி எனச் சொல்லலாம். ஆனால், இவற்றுக்கெல்லாம் சிறிதும் தொடர்பில்லாத வேற்று நாடான இரசியாவில், ‘மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் நூல்’ என பகவத் கீதைக்குத் தடை கோரப்பட்டுள்ளது!

இப்படிப்பட்ட நூலைப் பின்பற்றுவதா வேண்டாவா என்கிற ரஜினி எனும் தனிப்பட்ட மனிதரின் விருப்பத்துக்குள் நாம் நுழைய முடியாது. ஆனால், இப்படிப்பட்ட நூலைப் பின்பற்றுபவரின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

ஏற்கெனவே தமிழர்களுக்கென இங்கே ‘திருக்குறள்’ எனும் வழிகாட்டி நூல் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் திருக்குறளைத்தான் மேற்கோள் காட்டுவார்கள். தான் சொல்ல வரும் கருத்துக்கு வலுச் சேர்க்க, கொண்ட கொள்கையை விளக்க, எடுத்த முடிவை நியாயப்படுத்த என எல்லாவற்றுக்கும் திருக்குறள்தான் இங்கே. ஆனால், ரஜினியோ எப்பொழுதும் பகவத் கீதை, மகாபாரதம், இராமாயணம் எனப் பேசுபவர். அரசியலுக்கு வரும் முடிவு பற்றிய அவரது உரையும் அப்படியே அமைந்திருக்கிறது. எனில், ரஜினி கையிலெடுப்பது திருக்குறளை மையப்படுத்திய அரசியல் இல்லை; பகவத் கீதையை மையப்படுத்திய அரசியல் எனத் தெரிகிறது!

இது சரியா? “எல்லா உயிர்களும் சமம்” என்றுரைக்கிற, உலகே வியந்து போற்றுகிற திருக்குறளை மையப்படுத்திய அரசியலை விட்டுவிட்டு, “நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன்” என்று கடவுளே கூறுவதாகச் சொல்கிற, உலகெங்கும் சர்ச்சைக்குள்ளாகிற கீதையை மையப்படுத்திய அரசியல் தேவையா? தமிழர் வழிகாட்டி நூலை மையமாகக் கொண்ட அரசியலை அப்புறப்படுத்தி விட்டு வடமொழி நூலை மையமாய்க் கொண்ட அரசியல் இங்கு எதற்காக? இக்கேள்விகள் அவ்வளவு எளிதில் புறக்கணித்து விடக்கூடியவை அல்ல.

தமிழ் மண்ணில் ஆன்மிக அரசியல்

திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் எனச் செறிவான கோட்பாடுகளைக் கண்ட தமிழ்நாட்டுக்கு ‘ஆன்மிக அரசியல்’ எனும் புதிய கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த் அவர்கள்.

‘ஆன்மிகம்’ (spirituality) எனும் சொல் வேண்டுமானால் வடமொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதியானதாக இருக்கலாம். ஆனால், ‘இறையியல்’ (spirituality) எனும் துறை தமிழுக்குப் புதிதில்லை.

உலகின் மற்ற பகுதிகளில் மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி, அவற்றையே கடவுளாக எண்ணி மண்டியிட்டுத் தொழுத காலத்திலேயே, “கடவுள் என்பது எங்கோ வேற்றுலகில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் இல்லை. மனிதனின் அடுத்த நிலைதான் கடவுள்” எனப் பகுத்தறிவுக்கு உவப்பான கடவுள் கொள்கையைப் படைத்து இறையியலில் புது இயல் கண்டவர்கள் தமிழர்கள்.

இந்தியாவின் இறையியல் என ரஜினி நம்பும் இந்து சமயப் பண்பாட்டுக்கு இங்கே அடிக்கல் கூட நாட்டப்படாத காலத்திலேயே தங்கள் பண்பாட்டின்படி கோயில் கட்டிக் கோபுரம் எழுப்பியவர்கள் தமிழர்கள்.

ஆனால், ரஜினி பின்பற்றும் இறையியல் (ஆன்மிகம்) இத்தகையதா? “எல்லாமே கடவுள் செயல். கடவுள் அருள் இருந்தால்தான் எல்லாம் நடக்கும். உலகின் ஒவ்வோர் அசைவையும் அவர்தாம் தீர்மானிக்கிறார்” என முழுக்க முழுக்க இந்து சமய அடிப்படையிலான கடவுள் கொள்கையை ஏற்று நடப்பவர் ரஜினி. “நல்லதொரு கொள்கைக்காக அல்லது காரணத்துக்காக வாழ்ந்த/உயிர் விட்ட மனிதர்தாம் கடவுள்” எனும் தமிழரின் கடவுள் கோட்பாட்டுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இப்படித் தமிழர்களின் இறையியல் கோட்பாட்டுக்கு முற்றிலும் மாறான இறையியலைக் கடைப்பிடிக்கும் ஒருவர் இங்கே ‘ஆன்மிக அரசியல்’ செய்கிறேன் எனப் புறப்பட்டால் அவர் வழங்கும் அரசியல்தான் தமிழர்களுக்கானதாக இருக்குமா? அல்லது, அதிலுள்ள ஆன்மிகம்தான் தமிழ் மண்ணுக்குரிய ஆன்மிகமாக இருக்குமா?

தவிர, இறையியல் என்பது எல்லாச் சமயங்களுக்கும் பொது என்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதை அணுகும் விதம் ஒவ்வொரு சமயத்துக்கும் வேறுபடும். அப்படியிருக்க, குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த ஒருவர் செய்யும் ‘ஆன்மிக அரசியல்’ எல்லாச் சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவான அரசியலாக எப்படி இருக்க முடியும் என்பது தவிர்க்க இயலாத கேள்வி. 

Rajini with his Symbol
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் எதிரான இந்து சமய இறையியல், பகவத் கீதை போன்றவற்றைக் கையில் ஏந்திய ரஜினி அவர்கள் “மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என மீண்டும் மீண்டும் பேசுவது இந்த மாற்றத்தைத்தான் அவர் கொண்டு வர விரும்புகிறாரா என்கிற கேள்வியை எழுப்புகிறது. தவிர, அரசியல் என்றால் என்ன என்பது பற்றியே இன்னும் போதுமான புரிதலை எட்டாதவர், எடுத்த எடுப்பிலேயே ஆட்சிக்கு வந்து விடக் கணக்குப் போடுவது அவரது புரிதலின்மையை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைகிறது.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அரசியலில், ஆட்சி முறையில். தமிழர்களின் சமூக – அரசியல் – பண்பாட்டு அடையாளங்களையே உருமாற்றும் மாற்றத்தை இல்லை. 

 
ஏற்கெனவே இப்படி பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் எனவெல்லாம் பேசி, ‘தமிழர்களும் இந்துக்கள்தாம் என எப்படியாவது நம்ப வைத்து விட்டால் வாக்குகளைக் கறந்து விடலாம்’ எனச் சப்புக் கொட்டிக் காத்திருக்கும் பா.ஜ.க, ‘யாருக்கும் வாக்கில்லை’ (NOTA) எனும் போட்டியாளரையே விஞ்ச முடியாமல் விக்கித்து நிற்கிறது. அதைப் பார்த்த பின்னும், அதே வழியில் ரஜினியும் நடை போட நினைப்பது நன்றாக இல்லை. ரஜினி கொண்டு வர விரும்பும் அரசியல் இதுதான் என்றால், ‘இதற்கு மக்கள் நேராக பா.ஜ.க-வுக்கே வாக்களித்து விட மாட்டார்களா’ என்கிற எளிய ஏரணத்தை (logic) அவர் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

நேர்மையான அரசியல் என்பது வெறுமே மக்களைக் கொள்ளையடிக்காமல் இருப்பது மட்டும் இல்லை; அந்த மண்ணுக்கான, மக்களுக்கான, அவர்களின் அடையாளம் – தனித்தன்மை போன்றவற்றுக்கு உவப்பான அரசியலைக் கையிலெடுப்பதுதான் நேர்மையான அரசியல் என்பதை ரஜினி அவர்கள் உணர வேண்டும்!

அதே நேரம், இப்படிப்பட்ட காரணங்களையெல்லாம் ஆங்காங்கே ஒன்று கோத்து ஒட்டி, “ரஜினி பா.ஜ.க தூண்டுதலால்தான் அரசியலுக்கு வருகிறார்” என்று சிலர் பேசுவது வெற்றுவாதம். அரசியல் அறிவுள்ளவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

பா.ஜ.க-வோ அல்லது வேறு யாராவதோ தூண்டி விட்டு ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால், தனிக்கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்க அவரை விட்டிருக்க மாட்டார்கள். அப்படிச் செய்து விட்டால், ரஜினியின் திரைச் செல்வாக்கு அரசியலில் கை கொடுக்குமா இல்லையா என்பது வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தெரிந்து விடும். ரஜினியைப் பயன்படுத்தி அரசியலைக் கைப்பற்ற விரும்பும் யாரும் அப்படி ஒரு தெள்ளத் தெளிவான விடை கிடைத்து விடுவதை விரும்ப மாட்டார்கள். அவரைக் களத்திலேயே இறக்காமல், அவருடைய திரையுலகப் புகழை மட்டுமே மென்மேலும் ஊதிப் பெருக்கிக் காட்டி அதன் மூலம் தாங்கள் ஆதாயம் அடையத்தான் பார்ப்பார்கள்.

அப்படி யாருக்கும் எதற்கும் இடம் கொடுக்காமல், எப்பேர்ப்பட்டவர்களின் நெருக்கடிக்கும் அடி பணியாமல் நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கும் விதத்தில், சூப்பர் ஸ்டாரின் இந்த அரசியல் நுழைவு வரவேற்புக்குரியதே!

ஆனால், சமயச் சார்புள்ளவர்களோடு கைகோத்திருக்கிறாரா இல்லையா என்பதைத் தாண்டி, ரஜினி எனும் தனிமனிதரே சமயச் சார்புள்ளவராகத்தான் இருக்கிறார் என்பதுதான் இங்கே கவலைக்குரியது! ❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ஏ.வி.எம் திரைப்பட நிறுவனம், தந்தி தொலைக்காட்சி, பக்தி வேதாந்தா, தினமணி.

விழியம்: நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி.

தொடர்புடைய பதிவுகள்: 
தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன? அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல் 

நாடாளலாமா நம் நாயகர்கள்? – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்!

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

Related Posts Plugin for WordPress, Blogger...

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

 1. ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான் என்னும் வசனம் நினைவுக்கு ஒரு கருத்தை ஏற்கிறேன் அரசியலுக்கு வருவதென்றால் ஆடிசியி அமர்வதா என்னும் கேள்வி சரியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதன் முதலாக வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா! உங்கள் பாராட்டுக் கண்டு மகிழ்ச்சி! :-)

   நீக்கு
 2. ரஜினி ஒரு அரைவேக்காட்டு அரசியல் தலைமையென்றால் அதை தூபம் போட்டு திணிக்கின்ற தமிழருவி மணியன் ஒரு கைதேர்ந்த சந்தர்ப்பவாதி. ஏன் தமிழகத்தில் தமிழின நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் சீமான் என்ன நல்லவரில்லையா, ரஜினி நெய்யில் பொரித்தெடுக்கப்பட்டவரா? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தூண்டில் புழுவாக பா.ச.க.வால் கொக்கப்பட்ட புழுதான் ரஜினி. இவர் பருப்பு இப்போதல்ல எப்போதும் தமிழகத்தில் வேகாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறச்சீற்றமும் தமிழுணர்வும் மிகுந்த உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி நண்பரே!

   ரஜினி நெய்யில் பொரித்தெடுக்கப்பட்டவரா என்கிற உங்கள் பகடி செம்மை! ஆனால, பா.ச.க தூண்டுதலால்தான் இரசினி அரசியலுக்கு வருகிறார் என்பது பொருந்தவில்லை. காரணத்தைக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

   தொடர்ந்து வருக! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தருக!

   நீக்கு
 3. ஆண்டவன் தான் தீர்மானிக்கவேண்டும் யார் எதைச்செய்வார்கள் என்ற அரசியல்ப்பாதையை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினி பற்றிய கட்டுரைக்கு அவர் பாணியிலேயே கருத்தா? நல்லது!

   நீக்கு
 4. அரசியல் செய்வது, ஆட்சியைப் பிடிப்பது ஆகிய இரண்டும் வேறு வேறு என்று சுட்டிக்காட்டியது மட்டுமின்றி அரசியலுக்கு வருவது என்பதே ஆட்சிக்கு வருவதுதான் என நினைப்பது அடிப்படை அரசியல் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனம் என்று கூறியதையும் பாராட்டுகிறேன். ரஜினி பற்றிய சிறப்பான கட்டுரை. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய கட்டுரையின் முடிவில் உள்ள சமூக ஊடகங்களின் பொத்தான்களை அழுத்துங்கள்!

   நீக்கு
 5. இப்பதிவினை ஒரு நல்ல அலசல் பதிவாகக் காண்கிறேன். முழுக்க முழுக்க அனைத்து நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் சில மாற்றங்கள், நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன. அவற்றில் இதுவும் அடங்கும் என நினைக்கிறேன். வெற்றிடம், ஆன்மிக அரசியல் என்பனவற்றுக்கெல்லாம் அப்பால் அவரை மக்கள் ஏற்கின்றார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! பாராட்டுக்கு மிகுந்த நன்றி! ஆம், தாங்கள் சொல்வது போல் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னவோ, நல்லது நடந்தால் சரி.

   நீக்கு

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

முகநூல் படிப்பகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (6) அஞ்சலி (15) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (59) அழைப்பிதழ் (3) அன்புமணி (1) அனுபவம் (21) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (16) இந்தியா (16) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (10) இனம் (40) ஈழம் (31) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (21) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (13) காவிரிப் பிரச்சினை (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (7) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (3) சுற்றுச்சூழல் (3) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (13) தமிழ் தேசியம் (4) தமிழ்நாடு (7) தமிழர் (26) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தன்முன்னேற்றம் (8) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (2) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (6) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (11) பா.ம.க (2) பா.ஜ.க (12) பார்ப்பனியம் (7) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (4) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (3) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (4) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (4) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (14) வாழ்க்கைமுறை (8) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்