பாரெங்கும் பரந்திருக்கும்
உயிர்த்தமிழ் உறவுகளே!
இதோ வந்து விட்டது பொங்கல்!
இது நாம்
கடந்த ஆண்டு வைத்தது போல்
கருப்புப் பொங்கல் இல்லை;
தமிழர் மரபை நிலைநாட்டிய
சிறப்புப் பொங்கல்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்று
பயிர்நேயம் பேசிய தமிழர்களுக்கே
உயிர்நேயம் கற்பிப்பதாய்ச் சாக்கிட்டு
வணிகவெறி பிடித்த
வல்லூறுகள்
இம்மண்ணின்
பொருளாதார மையமாம்
பண்பாட்டுச் சின்னமாம்
சல்லிக்கட்டு விளையாட்டை
சட்டத் துணை கொண்டு
ஒடுக்கத் துணிந்தபொழுது...
தொல்பெரும் அடையாளத்தை
அழிக்க அலைந்தபொழுது...
குமுறி எழுந்த தமிழ்ப் பிள்ளைகள்
குமரிக் கடலோரம் திரள...
அதிகார மையங்கள்
அதைப் பார்த்து மிரள...
பன்னாட்டுத் தமிழரும்
ஒரு குரலாய் இணைய...
அரசுகள் எல்லாமே
அதைக் கண்டு பணிய...
உணவு அரசியலுக்கு எதிரான
உலகின் முதற்பெரும் போராட்டத்தை
வரலாற்றின் பொன்னேடுகளில்
தமிழினம் தன்
உதிரத்தால் பொறித்து
தைப்புரட்சியால் தன்
உரிமைமீட்(டு) எடுத்து
அதை அடுத்து
வந்தினிக்கும்
தலைப்பொங்கல் இது!
எத்தனையோ இழந்தோம் இதுவரை
அதில் ஒன்றை மீட்டதிந்த தலைமுறை!
இது வெறும் தொடக்கம்!
இனி அடுத்தடுத்தும் நடக்கும்!
ஒவ்வொன்றாய் மீளும்!
மீண்டும் இக்கூட்டம்
இப்பேருலகை ஆளும்!
இந்தத் தன்னம்பிக்கையோடு
இந்தாண்டுப் பொங்கலை
கொண்டாடுவோம் குலவையிட்டு!
பண்பாடுவோம் பறையிசைத்து!
அனைவருக்கும் அன்பு வழியும்
போகி, பொங்கல்
தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள்,
மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி மதுரை டிசைன்சு பார் யூ.
தொடர்புடைய பதிவுகள்:
✎ ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!
✎ ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7
✎ ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்!
✎ ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஓ! மிக்க மகிழ்ச்சி ஐயா! தங்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்கள்!
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி யாழ்ப்பாவாணன் ஐயா! தங்களுக்கும் ஈழத் தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
நீக்குதாமதமாக வந்தமைக்கு முதலில் மன்னிப்பு. வாசித்தோம் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பொங்கல் முடிந்துவிட்டதால் வாழ்த்துகள் சொல்லவில்லை. ஆனால் எப்போதும் எங்கள் வாழ்த்துகள் உண்டு!
பதிலளிநீக்கு//எப்போதும் எங்கள் வாழ்த்துகள் உண்டு// - மிக்க மகிழ்ச்சி சகோ! ஆனால், மன்னிப்பு போன்ற பெரிய சொற்களைத் தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
நீக்கு