.

திங்கள், அக்டோபர் 28, 2013

'கருத்துரைக் கண்காணிப்பு' (Comments Follow Up) இப்பொழுது பிளாகரிலும்!


Comments Follow Up now in Blogger also!

திவுக்கு வரும் கருத்துக்களைப் பரப்புவது, அதன் மூலம் வருகையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது ஆகியவற்றில் முகநூல் கருத்துப் பெட்டிக்கு நிகர் எதுவும் கிடையாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களின் எண்ணிக்கைதான் பதிவின் முகப்பில் காட்டப்படுகிறது என்பதாலும், கருத்துத் திரட்டிகள் (Comment aggregators), கருத்துப் பட்டியல் செயலிகள் (Recent Comments widgets) ஆகியவை கூட பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களைத்தான் திரட்டுகின்றன என்பதாலும் பிளாகர் கருத்துப் பெட்டியும் தவிர்க்க முடியாத முதன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பிளாகர் கருத்துப் பெட்டியில் ஒரு புதிய மேம்பாட்டைச் செய்திருக்கிறது கூகுள்.

சில இணையத்தளங்களில் கருத்துரை இடும்பொழுது, நம் கருத்து வெளியிடப்படுவதை நாம் அறியவும், மேற்கொண்டு யாராவது அந்தப் பதிவுக்குக் கருத்து தெரிவித்தால் அதை நாம் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கீழ்க்காணும் படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பது போல.  


Comments Follow Up in other sites
வேர்டுபிரசு வலைப்பூக்களில் கூட இந்த வசதி உண்டு. ஆனால், பிளாகரில் இத்தனை காலமாக இஃது இல்லாமல் இருந்தது. பிளாகர் வலைப்பூ ஒன்றில் நாம் ஏதேனும் கருத்து தெரிவித்தால், நம் கருத்து வெளியிடப்பட்டதா இல்லையா, மற்றவர்கள் –குறிப்பாகப் பதிவை எழுதியவர்- நம் கருத்துக்கு என்ன பதிலளித்தார்கள், குறிப்பிட்ட பதிவு பற்றி மற்றவர்கள் கருத்து என்ன என்பவற்றையெல்லாம் அறிய அந்தப் பக்கத்தை நூற்குறியிட்டுக் கொண்டு அவ்வப்பொழுது சென்று பார்த்து வர வேண்டியிருந்தது.

எத்தனையோ பக்கங்கள் படிப்போம்; எவ்வளவோ கருத்துக்கள் இடுவோம். ஒவ்வொன்றையும் இப்படி நேரில் சென்று கண்காணிப்பது முடியாது. அதனால், பிளாகர் வலைப்பூக்களில் நாம் இடும் பல கருத்துக்கள், குறைந்தது, நம்மாலேயே கூடக் கவனிக்கப்படாமல் போய்க் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இதோ, ‘கருத்துரைக் கண்காணிப்பு’ (Comments Follow Up/ Notify me of follow-up comments via email) வசதி இப்பொழுது பிளாகரிலும்!*

தனது 13-ஆம் பிறந்தநாளை ஒட்டித் தனது சேவைகளையெல்லாம் கூகுள் மேம்படுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இந்தப் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.

இனி, பிளாகர் வலைப்பூக்களில் கருத்துரை இட்டு அனுப்பியதும் பாருங்கள்! கருத்துப் பெட்டியின் அடிப் பக்கம் ஒரு சிறு கட்டம் வரும். (பார்க்க: கீழே உள்ள படம்).

செவ்வாய், அக்டோபர் 15, 2013

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்!


Chennai people

மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’!

கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான்.

பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்தில் நிலைபட நிலைபட நாளடைவில் அது தனிமொழியாக (Dialect) மாறிவிடும். அதனால், எந்த மொழியிலிருந்து அந்த வட்டார வழக்கு தனிமொழியாகக் கிளர்ந்ததோ அந்தத் தாய்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். அப்படி அந்த மொழியின் எல்லா வட்டார வழக்குகளும் தனிமொழியாக மாறினால் கடைசியில் தாய்மொழியே அழிந்து போகும். இதை நான் மட்டும் சொல்லவில்லை, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நடுவம் (UNESCO) மொழிகள் அழிவதற்கான காரணிகளின் பட்டியலில் முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிட்டுள்ளது. பார்க்க: அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?! – ‘கூடல்’ தளத்தின் கட்டுரை.

இப்படி, வட்டார வழக்கு என்பதே தாய்மொழியை அழிக்கப் பிறந்ததுதான் எனும்பொழுது அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என நினைப்பது எப்பேர்ப்பட்ட மடத்தனம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்!

அப்படியானால், வட்டார வழக்குகளுக்கென எந்தச் சிறப்புமே இல்லையா எனக் கேட்டால், இருக்கிறது. அதுதான் அவற்றின் ‘சொற்களஞ்சியம்’ (Vocabulary). பொதுத் தமிழில் கூட இல்லாத அரிய, பழம்பெரும் சொற்கள் பல இன்றும் வட்டார வழக்குகளில் உயிர்ப்போடு விளங்குகின்றன. வட்டார வழக்குகளுக்கு இருக்கும் ஒரே பெருமை இதுதான். இந்தப் பெருமை சென்னைத் தமிழுக்கும் உண்டு. மற்ற வட்டார வழக்குகளிலோ பொதுத் தமிழிலோ தென்படாத பல பழம்பெரும் அருந்தமிழ்ச் சொற்கள் சென்னைத் தமிழில் உள்ளன. அவற்றின் ஒரு சிறு பட்டியல், விளக்கத்துடன் இங்கே: 

செவ்வாய், அக்டோபர் 01, 2013

சிறுவர் இலக்கியமும் சிறுவர்களின் எதிர்காலமும் - பெற்றோர்களின் கனிவான பார்வைக்கு!

Children and Stories


சிறுவர் இலக்கியம் பற்றிய எனது முந்தைய பதிவைத் திரளாக வந்து படித்து, பகிர்ந்து ஆதரவளித்த அன்பார்ந்தோர் அனைவருக்குமான நன்றிகளுடன் இந்தப் பதிவைத் தொடங்குகிறேன்! 

அந்தப் பதிவில், சிறுவர் இலக்கியத்தை மீட்டெடுப்பது தமிழ்மொழி அழியாமலிருக்க எந்தளவுக்கு இன்றியமையாதது எனப் பார்த்தோம். இம்முறை, குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவர் இலக்கியம் எந்தளவுக்குத் தலையாய பங்காற்றுகிறது என்பதைப் பார்க்கலாமா?

வீட்டில் பிள்ளைகளுக்குக் கதைப் பொத்தகம்/சிறுவர் இதழ் வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னால் உடனே பெற்றோர்கள் சொல்பவை,

“உக்கும்! இருக்குற பாடப் புத்தகத்தையே படிக்கக் காணோம்.”

“பாடப் புத்தகத்தைப் படிக்கவே நேரம் சரியா இருக்கு.”

“இருவத்திநாலு மணி நேரமும் டி.வி பாக்கறதுக்கே நேரம் போதல. அதை விட்டா வீடியோ கேம். இது ரெண்டையும் தூக்கிப் போட்டுட்டு, அமைதியா உக்காந்து அதுவாவது கதைப் புத்தகம் படிக்கிறதாவது.”

இப்படி ஏகப்பட்ட சலிப்புகள், கேள்விகள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதை விட, சிறுவர்களின் வளர்ச்சியில் படிக்கும் பழக்கம், குறிப்பாகச் சிறுவர் இலக்கியம் எந்த அளவுக்கு முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டினாலே பெற்றோர்கள் இதன் தேவையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

மனித வளர்ச்சி புற வளர்ச்சி, அக வளர்ச்சி என இரு வகைப்படுகிறது. அவற்றுள் புற வளர்ச்சி பற்றி நமக்கே தெரியும், உடல் வளர்ச்சி. அடுத்ததான அக வளர்ச்சி மூன்று வகைப்படுகிறது. அவை,

  • பண்பு வளர்ச்சி (Characteristic Growth).
  • உளவியல் வளர்ச்சி (Mental Growth/Maturity).
  • அறிவு வளர்ச்சி (Intelligence Growth).

இந்த மூன்று வளர்ச்சிகளுக்கும் சிறுவர் இலக்கியம் எப்படி உதவுகிறது என்பதைத்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

நாடாளலாமா நம் நாயகர்கள்? – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்!


The Real Hero!

நடிகர்கள் நாடாளலாமா, அரிதாரம் பூசுபவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பவையெல்லாம் உலகின் வேறெந்த மக்களாட்சி நாட்டிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேடு கெட்ட கேள்விகள்! மக்களாட்சி நாடு ஒன்றில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அல்லது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை அளிக்கும் நாடுதான் மக்களாட்சி நாடாகும்! இதில், நடிகர்கள் வரலாமா, நாட்டுப்புறக் கலைஞர்கள் வரலாமா, பெட்டிக் கடைக்காரர்கள் வரலாமா, பிரம்புக் கூடை பின்னுபவர்கள் வரலாமா எனவெல்லாம் தனித் தனியாகக் கேள்வி எழுப்ப இடமேயில்லை.

அதே நேரம், திரைப்படத்தில் நடிக்க வருவதையே ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகக் கருதும் மடத்தனமும் உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்!

திரைப்படம், அரசியல் இரண்டும் இரண்டு வெவ்வேறு துறைகள். இதற்கான தகுதிகள் வேறு, அதற்கான தகுதிகள் வேறு. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்வதில் நம் அரசியலாளர்களும், நடிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே இல்லை. விளம்பரம், புகழ், செல்வாக்கு இம்மூன்றையும் - ஆம், இந்த மூன்றே மூன்றையும் – உடனே தருபவை என்பதைத் தவிர இந்த இரண்டு துறைகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. அப்படியிருக்க, எந்தத் தகுதியின் அடிப்படையில் நம் நடிகர்கள் அரசாட்சிக் கனவு காண்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கென ஒரு தகுதி வேண்டாமா? திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் நீங்கள் என்னென்ன வகைகளில், எப்படியெல்லாம் பயிற்சி எடுத்து உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்? தனியாகப் பயிற்சியாளர்களை வைத்துச் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள், உடற்பயிற்சி கற்றுக் கொள்கிறீர்கள், ஆடக் கற்றுக் கொள்கிறீர்கள், அன்றாட உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது வரை நுணுக்கமாகக் கேட்டு அறிந்துகொண்டு கடைப்பிடிக்கிறீர்கள்! ஆனால், அரசியலுக்கு வருவதற்கு இப்படி என்ன பயிற்சி எடுத்தீர்கள்? வில்லனைக் குத்துவதற்கு மடக்குவது போல் ஐந்து விரல்களையல்ல, ஒரே ஒரு விரலை மடக்குங்கள் பார்க்கலாம் இந்தக் கேள்விக்கு!

பத்தாயிரம் ஆண்டுகால வரலாறும் பத்துக் கோடி மக்களும் கொண்ட தேசிய இனம் ஒன்றை ஆள, அதற்கான பன்னாட்டுப் பிரதிநிதியாக அமர ஆடவும், பாடவும், நடிக்கவும், பேசவும் தெரிந்தால் போதுமா? வேறெந்தத் தகுதியும் வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் வரவில்லையா என்றால், அவர் என்ன சும்மாவா வந்தார்? தகுதிகளை வளர்த்துக்கொண்டு வந்தார். தன் திருமண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ, தன் திரைச் செல்வாக்குக்கும் முதல்வரின் அரசியல் செல்வாக்குக்கும் இடையிலான உரசல் காரணமாகவோ (ரஜினி), தன் படத்தை வெளிவர விடாமல் தடுத்ததற்காகக் கோபப்பட்டோ ஓர் இரவில் முடிவெடுத்து அவர் அரசியலுக்கு வரவில்லை. கருணாநிதி தன்னை முதுகில் குத்தி, கட்சியிலிருந்து நீக்கித் தனிக் கட்சி தொடங்க வேண்டி வந்ததற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே அவர் அரசியலில் இருந்தார். நடிகனாக ஓரளவு நிலைபெற்றிருந்த புதிதிலேயே தி.மு.க-வில் சேர்ந்தார். திரையுலகில் தனக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு முழுவதையும் திராவிடக் கொள்கைகளை, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்தினார். அண்ணாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபொழுது கூட அவர் தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடாமல் கருணாநிதியைத்தான் அந்த அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார்!

Black M.G.R?இப்படி, ஆண்டுக்கணக்கில் அரசியல் அனுபவம், நேர்மையான அரசியல் தலைவர்களுடனான தொடர்பினால் விளைந்த அரசியல் - சமூகத் தெளிவு, பொதுமேடைகளில் பல முறை மக்களை நேரடியாகச் சந்தித்ததால் உண்டான பொதுக் கருத்தை அறியும் திறன், மக்கள் – சமூக – இனப் பிரச்சினைகள் பற்றிய புரிதல், தலைவர் பதவியை விரும்பாத அரசியல் பக்குவம், பொதுநல நோக்கு முதலான பல தகுதிகள் கொண்ட அவர் எங்கே? அடுத்த எம்.ஜி.ஆர் ஆகக் கனவு காணும் நம் இன்றைய நடிகர்கள் எங்கே? இவற்றுள் எந்தத் தகுதி இவர்களுக்கு இருக்கிறது?
இவற்றையெல்லாம் வளர்த்துக் கொள்ள இவர்கள் என்ன அக்கறை காட்டுகிறார்கள்? இப்படி எந்த ஒரு தகுதியை இவர்கள் இதுவரை வெளிப்படுத்தினார்கள்? தனக்கிருந்த அரசியல் தகுதிகளுக்குண்டான இடத்தை அடையத் தன் திரையுலகப் புகழைப் பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆருக்கும், திரைப்படத்தால் கிடைத்த விளம்பரத்தை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லையா?

உடனே, இப்பொழுது பதவியில் இருப்பவர்களுக்கும், இதுவரை அந்தப் பதவியில் இருந்தவர்களுக்கும் மட்டும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றனவா எனக் கேட்கலாம். இல்லைதான்! அதற்காகத்தானே மாற்று (Replacement) தேடுகிறோம்? அடுத்து வருபவர்களும் அவர்களைப் போலவே தகுதியில்லாதவர்களாக இருப்பதா? சிந்தியுங்கள் மக்களே! 

“தகுதி... தகுதி... தகுதி! அப்படி என்னதான் தகுதி வேண்டும் என்கிறாய்” எனக் கேட்கிறீர்களா? சரி! தமிழர்களின் தலைவராக, தமிழ்நாட்டு முதல்வராக வருவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன? நம் நடிகர்களுக்கு அந்தத் தகுதிகள் இருக்கின்றனவா? மேலோட்டமாக ஒரு கண்ணோட்டம் விடலாம் வாருங்கள்!

திங்கள், செப்டம்பர் 09, 2013

புலிகள் போர்க்குற்றவாளிகளா? - விளக்கமும், தமிழினத் தலைவர்களுக்கொரு விண்ணப்பமும்


Navaneetham Pillai

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது காலம் காலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் உச்சக்கட்டம், நடந்த இனப்படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில், அதுவும் தமிழர்களுக்கு எதிராக ஈடுபட்டதாகச் சொல்வது! பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் நலனுக்காக ஐ.நா சார்பில் இலங்கைக்கு வந்திருக்கும் நவநீதம் பிள்ளை இப்பொழுது மீண்டும் இந்த அருவெறுப்பான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசப் போக, தற்பொழுது மீண்டும் இது உலக சமுதாயத்தின் விவாதப் பொருளாகியிருக்கிறது!

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!

'Like' Button problem


தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நான் ஒன்றும் பெரிய பிரபு கிருஷ்ணாவோ, அப்துல் பாசித்தோ, பொன்மலரோ கிடையாது. ஆனாலும், தமிழ்ப் பற்றாளன் எனும் முறையில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் சார்ந்த மாறுதல்களை எடுத்துச் சொல்ல எனக்குள்ள உரிமையால் இதை எழுதுகிறேன்.

நீங்கள் முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவரா? அல்லது, நீங்கள் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவரா? அப்படியானால், குறிப்பாக உங்கள் கவனத்துக்காகத்தான் இந்தப் பதிவு! கனிவு கூர்ந்து முழுக்கப் படியுங்கள்!

அண்மையில், முகநூலின் ‘விருப்பம்’ பொத்தானில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைத் தமிழில் முகநூல் பயன்படுத்தும் அனைவருமே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முகநூல் தமிழ்ப் பயனர்களுக்கு இத்தனை நாட்களாக ‘விருப்பம்’ என்று காட்சியளித்து வந்த முகநூல் பொத்தான், கடந்த சூலை 24ஆம் நாள் முதல் ‘பிடித்திருக்கிறது’ எனக் காட்சியளிக்கிறது. இதனால் முகநூல் பொத்தான்கள் அனைத்திலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது!

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நமக்கு விடுதலைக் கொண்டாட்டம் ஒரு கேடா?

தலைப்பைப் பார்த்துவிட்டு “என்னடா இவன், இப்படிக் கேட்கிறான்!” எனத் திகைக்காதீர்கள்! சுதந்திரத் திருநாள் என்பது பிறந்தநாளைப் போன்றது இல்லை, குறிப்பிட்ட மனிதர் இருந்தாலும், மறைந்தாலும் கொண்டாடுவதற்கு. அது மணநாளைப் போன்றது. குறிப்பிட்ட கணவரும் மனைவியும் சேர்ந்து வாழும் வரைதான் அந்த மணநாளைக் கொண்டாட முடியும். இருவரும் உறவு கசந்து பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த மணநாளை யாரும் கொண்டாட முடியாது; அப்படிக் கொண்டாடினால் அதை விடப் பித்துக்குளித்தனம் எதுவும் இருக்க முடியாது!

அதே போலத்தான், சுதந்திர நாளைக் கொண்டாடுவது என்றால், நீங்கள் கொண்டாடும்பொழுது அந்த சுதந்திரம் உங்களிடம் இருக்க வேண்டும்! ஆனால், தமிழர்கள் உண்மையிலேயே சுதந்திரக் குடிமக்களா?


‘பூவரசன்’ எனும் ஒரு (மொக்கை) படத்தில், கவுண்டமணியிடம் செந்தில் கேட்பார், “என்ன! இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சிடுச்சா?! அப்படின்னா, அந்த சுதந்திரம் இப்ப யாருகிட்டண்ணே இருக்கு?” என்று. அதற்குக் கவுண்டமணி, அப்பொழுது தெருவில் எடுத்துச் செல்லப்படும் பிணத்தைக் காட்டி, “அதோ மல்லாக்கப் போறானே? அவன்கிட்ட போய்க் கேளு!” என்பார்.

அந்தப் படம் வந்தபொழுது அப்படி இருந்ததோ இல்லையோ, ஆனால் இப்பொழுது, இந்தியாவில் சுதந்திரத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கு போலப் பயனில்லாமல்!

விளையாட்டுக்கோ வெறுப்பிலோ சொல்லவில்லை. சிந்தித்துப் பாருங்கள்! சுதந்திரக் குடிமக்களுக்கான எந்த உரிமையாவது, வசதியாவது இங்கு நமக்கு இருக்கிறதா?

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

முதல்வர் மறந்த வாக்குறுதி - மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு!


Jayalalitha's Election Report


தமிழ்நாட்டு மீனவர்கள் 65 பேரை இலங்கை அரசு கூண்டோடு பிடித்துச் சென்று மூன்று நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அடுத்ததாக ‘இந்திய அரசின் கடலோரக் காவல்படையே’ நேரடியாக வந்து காரைக்கால் மீனவத் தமிழர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்கியிருக்கிறது!

இதை அறிந்ததும், “இத்தனை நாட்களாக, இலங்கைக் கடற்படைதான் மீனவர்களைத் தாக்கியது. இப்பொழுது, இந்தியக் கடலோரக் காவல்படையும் அதையே செய்கிறதென்றால்... தவறு மீனவர்கள் பக்கம்தான் இருக்கும் போலிருக்கிறதே” எனக் கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், விவரம் புரியாத அப்பாவிகள் சிலர்!

தெரியாமல்தான் கேட்கிறேன், மீனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் நம்மைப் போல இதே நாட்டில், நாம் வாழும் இதே அரசியல், சமூகச் சூழலில் வாழ்பவர்கள்தானே? காவல்துறை அலுவலர் கோபத்தோடு ஓர் அதட்டல் போட்டாலே தொடை உதறத் தொடங்கிவிடுகிற நம்மைப் போன்ற சராசரித் தமிழ்க் குடிமக்கள்தானே அவர்களும்? கடலோரக் காவல்படையினர், அதுவும் துப்பாக்கிகளோடு வரும்பொழுது, உண்மையிலேயே தங்கள் பக்கம் தவறு இருந்திருந்தால் மீனவர்கள் உடனே அஞ்சிப் பின்வாங்கத் தொடங்கியிருக்க மாட்டார்களா? சிந்தித்துப் பாருங்கள்!

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது உங்களுக்குத் தெரிய வந்ததா?

செவ்வாய், ஜூலை 30, 2013

இழிவானதா இனப்பற்று?

Senkodi - Identification of Ethnicity

தே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று’! ஆனால், இன்று இனப்பற்று எனும் சொல்லைக் கூட யாரும் பயன்படுத்துவதில்லை,இன உணர்வுஎன்றுதான் குறிப்பிடுகிறோம். மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வுஎன் இரத்தத்திலேயே ஊறியதுஎன்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று!

என்னதான், தமிழ்நாட்டு இளைஞர் படை வீறு கொண்டு எழுந்து உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனி ஈழத்துக்குப் போராட்டம் நடத்தினாலும்,

திங்கள், ஜூலை 22, 2013

தமிழ்த்தாயின் தூவல் உடைந்துவிட்டது! – கவிஞர்.வாலிக்கு ஒரு கண்ணீர்க் கவிதாஞ்சலி



Kavingyar.Vaali

இயைபின் கொற்றவனே! 
தன்னிகர் அற்றவனே! 
உனைப்போல் எழுத இங்கு 
ஏது மற்றவனே! 
நீ இன்றித் தமிழன் இனி 
ஏதுமற்றவனே!

உனக்கு இரங்கல் பா எழுதவா 
வலைப்பூ தொடங்கினேன் 
என்று 
எனக்குள்ளாக அழுது - மன 
மூலையில் முடங்கினேன்! 
ஆனால் 
நடமாடிய தமிழே! 
உனக்கே இரங்கல் பா 
எழுதாததற்கு 
நான் கற்ற தமிழ் 
எனக்கெதற்கு?

சிலப்பதிகாரம், 
மணிமேகலை... 
என 
புதுக்கவிதையால் நீ 
புதுப்பிக்க வேண்டிய 
பழந்தமிழ்க் கருவூலங்கள் 
இன்னும் எவ்வளவோ 
இருக்க 
அதற்குள் என்ன அவசரம் 
இறக்க? 
எப்படி மனம் வந்தது 
தமிழுலகைத் 
துறக்க? 
இனி எங்கு போவோம் 
அப்படியொரு தமிழைச் 
சுவைக்க?!

கருணாநிதியுடன் ஒரு கையைக் 
குலுக்கிக் கொண்டே 
பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியதைக் 
கண்டித்து 
மறுகையால் 
பாட்டெழுதிய 
தமிழ்ப் பொற்செண்டே! 
நீயன்றோ 
உண்மைக் கவி! 
உனையிழந்து 
இனி என் செய்யும் 
தமிழ்ப் பெரும் புவி?!

விருப்ப மொழியாய்த் 
தமிழ் படிக்கும் 
காலத்தில் 
அதை 
விருப்பு மொழியாய் 
ஆக்கியது 
உன் தமிழ்! 
இனி எங்களுக்கு 
எங்கு கிடைக்கும் அந்தச் 
செந்தமிழ்?!

‘முக்காலா முக்காபுலா’ 
‘கலாசலா கலசலா’ 
என்றெல்லாம் 
இளைஞர்களுக்கு வைப்பாய் 
சொக்குப்பொடி மருந்து 
பின்னர் 
‘முன்பே வா! அன்பே வா’ 
‘நங்காய்! நிலாவின் தங்காய்!’ – என்று 
அவர்களுக்குப் படைப்பாய் 
இலக்கிய விருந்து!

இப்படித் 
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது 
வாலி பாணி! 
உனக்குப் பின்னே 
இந்தச் 
சேவை செய்ய 
யாரும் 
பிறக்கும் முன்னே 
போகலாமா 
வாலிபா நீ?

தீர்ந்து விட்டதா 
இதற்குள் 
உன் மை? 
சொல்லியிருந்தால் 
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்! 
இது உண்மை!

வந்திருக்கலாம் 
உன் உடலுக்கு 
முதுமை! 
ஆனால் 
உன் எழுத்திலே 
தீரவில்லையே இன்னும் அந்த 
இளமை! 
அதற்குள் நீ 
ஓய்வெடுத்துக் கொண்டதென்ன 
புதுமை!

பாடியிருக்கலாமே 
காலனை நோக்கி 
அறம்? 
காட்டியிருப்பானே 
அவன் உனக்குப் 
புறம்!

மறந்ததேன்? – எங்களைப் 
பிரிந்ததேன்?

நீ போனாலும் 
உன் படைப்புகள் இருப்பதாக 
ஆறுதல் கொள்வதா? 
அதைப்போல் வேறு 
மடத்தனம் உள்ளதா?

நீ எழுதியவையெல்லாம் அமுதம்தான் 
மறுக்கவில்லை; 
ஆனால் 
சுரபியே போய்விட்டதே 
அதுதானே 
பொறுக்கவில்லை!

பார்வதியை வேண்டினாய் 
கவிதையில் ஒருமுறை 
“திருஞான சம்பந்தன் 
அருந்தியது போக 
மிச்சத்தை எனக்குக் கொடு” 
என்று! 
நினைவை அது 
தீண்டுகிறது இன்று

சம்பந்தன் அருந்தியது 
உமையவள் 
கிண்ணத்தில் தந்த ஞானப்பால்; 
ஆனால் 
எங்கள் வாலிநீ பருகியதோ 
தமிழ்த்தாய் 
மடியமர்த்தி ஊட்டிய சொந்தப்பால்! 
அப்பேர்ப்பட்ட உனக்கும் 
இறப்பு என ஒன்றிருக்கும் – என 
நினைக்கவில்லை இதுவரைக்கும்!

ஆனால் 
அது நடந்தே விட்டது! 
உயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது! 
கடைசியில் 
தமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது!


*********

பெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி அவர்களின் பாடல்களைப் படித்து மகிழ: http://www.tamilpaa.net/tamil-lyricist-list/vaali 

படம்: நன்றி http://www.moviegallary.in/ 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்