வட அமெரிக்காவின் மூத்த முதல் தமிழ்ச் சங்கமான நியூயார்க் தமிழ்ச் சங்கம் ‘வெள்ளிதோறும் இலக்கிய உலா’ எனும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள் முதல் பார் போற்றும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் வரை தமிழுலகின் சிறப்புக்குரிய பெருமக்கள் பலரும் உரையாற்றிய அந்த மேடையில் இந்தச் சிறுவனையும் அழைத்துப் பேச வைத்தது சங்கத்தினரின் பெருந்தன்மையே தவிர வேறில்லை. கடந்த 18.12.2021 அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ‘அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையை இதோ உங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன், சங்கத்துக்கு என் பெயரை முன்மொழிந்த அதன் இலக்கியக் குழுத் தலைவரான நம் வலைப்பதிவர் ‘பரதேசி’ ஆல்பிரட் தியாகராசன் அவர்களுக்கும் சங்கத் தலைவர் ராம் மோகன் அவர்களுக்கும் மேனாள் சங்கத் தலைவர் அரங்கநாதன் உத்தமன் அவர்களுக்குமான நன்றியுடன்!
கூகுள் நிறுவனத்தின் பீட்பர்னர் (Feedburner) தன் மின்னஞ்சல் சேவையை வரும் சூலை 2021 முதல் நிறுத்தவுள்ளது என்கிற வருத்தமான செய்தியோடு வந்துள்ளேன்!
அதாவது, வலைப்பூவில் நாம் ஒவ்வொரு முறை புதிதாகப் பதிவு வெளியிடும்பொழுதும் அது மின்னஞ்சல் வழியே நம்மைப் பின்தொடரும் நேயர்கள் அனைவருக்கும் சென்று சேரும் இல்லையா? அந்தச் சேவை இம்மாத இறுதிக்குப் பின் கிடையாது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்! விரிவான அறிவிப்பைக் காண அழுத்துங்கள் இங்கே!
மின்னஞ்சல் சேவை மட்டும்தான் நிறுத்தப்படுகிறதே தவிர நம் வலைப்பூக்களுக்கான ஊட்டங்கள் (blog feeds) தொடர்ந்து செயல்படும் என்பதாகத்தான் பீட்பர்னர் அறிவித்திருக்கிறது. ஆயினும் இது அதிர்ச்சியான செய்திதான்!
பேசுபுக்கு, துவிட்டர், வாட்சப் என எத்தனை சமுக ஊடகங்கள் வந்தாலும் அத்தனைக்கும் ஆணிவேர் மின்னஞ்சல்தான். நாம் புதிதாக ஒரு பதிவு வெளியிட்டதும் வேறு எங்கிருந்து நேயர்கள் வருகிறார்களோ இல்லையோ, மின்னஞ்சல் வழியே தொடர்பவர்களில் கட்டாயம் சிலராவது வருவார்கள். அவர்கள்தாம் நம் நிலையான நேயர்கள் என்றால் கூட மிகையில்லை. அப்பேர்ப்பட்ட சேவை நிறுத்தப்படுவது கண்டிப்பாகப் பேரிழப்புதான்! ஆனால் ஓர் ஆறுதலான செய்தி என்னவெனில் இஃதொன்றும் ஈடு செய்ய முடியாத இழப்பில்லை என்பதுதான்!
ஆம் நண்பர்களே! பீட்பர்னர் போலவே மின்னஞ்சல் சேவை வழங்கும் வேறு இணையத்தளங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொள்வதன் மூலம் நாம் தொடர்ந்து நம் நேயர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதிவுகளை அனுப்ப முடியும்!
ஆனால் அதற்கு முன் இப்பொழுது நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது, ஏற்கெனவே பீட்பர்னர் மூலம் நம்மோடு இணைந்திருக்கும் நேயர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தரவிறக்கிக் (download) கொள்வதுதான். அதை எப்படிச் செய்வது என்பதை ஒரு சிறிய காணொளி மூலம் கீழே விளக்கியிருக்கிறேன்.
இதை முதலில் செய்து விடுங்கள்! பின்னர் வேறு மின்னஞ்சல் சேவைக்கு எப்படி மாறுவது என்பதை விரிவான பதிவாக / காணொளியாகத் தனியே காண்போம்!
இதற்கெனவே புதிதாக யூடியூபு வலைக்காட்சி (YouTube Channel) தொடங்கியுள்ளேன் நண்பர்களே! காணொளி விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் காணொளியின் வலக்கீழ் மூலையில் (right bottom corner) உள்ள ‘அகச் சிவப்புத் தமிழ்’ச் சின்னத்தின் மீது காட்டியைக் (cursor) கொண்டு சென்று, அங்கே தோன்றும் ‘SUBSCRIBE’ பொத்தானை அழுத்தி வலைக்காட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள்! அடுத்த கட்ட விளக்கம் உங்களுக்குத் தானாக மின்னஞ்சலில் வந்து சேரும்!
இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!
இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன.
அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்!
ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம்.
ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அந்தத் தீர்மானம் நீர்த்துப் போனதாக இருக்கும்.
பின்னர் அந்த அரைகுறைத் தீர்மானத்தின் பரிந்துரைகளைக் கூட நிறைவேற்ற மாட்டோம் என இலங்கை திமிராக அறிவிக்கும்; அதையும் இந்த உலக நாடுகளும் ஐ.நா-வும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும்.
இந்தக் காட்சிகளைத்தாம் பன்னிரண்டு ஆண்டுகளாக நாம் பார்த்து வந்தோம்.
இதன் உச்சக்கட்டமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்த தீர்மானத்தின் வரைவில் “இனப்படுகொலை குறித்த ஆதாரங்களைத் திரட்டவும் புலனாய்வு செய்யவும் மனித உரிமை ஆணையர் அலுவலகம் மூலம் சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (International Independent Investigative Mechanism) ஏற்படுத்த வேண்டும்” என்ற அடிப்படையான ஒரே ஒரு பரிந்துரை கூட நீக்கப்பட இருக்கிற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்தார் இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள்.
இங்கிலாந்தின் முன்னாள் குடிமையியல் சேவகரும் பன்னாட்டு இனப்படுகொலைத் தடுப்பு மையத்தின் (ICPPG) இயக்குநர்களில் ஒருவரும் இங்கிலாந்து அரசில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவருமான இவர் இந்தாண்டு பிப்பிரவரி மாதம் 27 அன்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் நீதி வேண்டி இலண்டனில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்தார்.
ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தித் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகைச்சுடர் திலீபன் – அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் போராட்டத்தைத் தொடங்கியபொழுது மீண்டும் நம் கண்ணெதிரே ஒருவர் சிறுகச் சிறுக உயிர் விடுவதைக் காணப் போகிறாமா என்றுதான் உலகெங்கும் உள்ள தமிழ்ப்பற்று கொண்ட நெஞ்சங்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தன.
ஆனால் அன்னை அம்பிகை வரலாற்றை மாற்றி எழுதினார்!
உண்ணாநிலையில் இறங்கும் முன்பு இலண்டன் சாலையில் இறங்கினார். மக்கள் பார்க்க ஈழ விடுதலைப் போராட்டம் பற்றித் தெள்ளத் தெளிவாக ஓர் உரையை வழங்கினார். இந்த விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? இதன் பின்னால் உள்ள நயன்மைகள் (rightness) என்ன? தாங்கள் பட்ட கொடுமைகள் என்ன? கடைசியில் எவ்வளவு கொடூரமான இனப்படுகொலையில் தங்கள் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது? இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். அடுத்து,
1. இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்
2. நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என அனைத்துக்குமான ஆதாரங்களைத் திரட்டக் காலவரையறையுள்ள சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (IIIM) ஏற்படுத்த வேண்டும்
3. மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகச் (Office of the High Commissioner for Human Rights) சார்பில் இலங்கையைக் கண்காணிக்கச் சிறப்பு அறிக்கையாளரைப் பணியமர்த்த வேண்டும்
4. தமிழர்களின் தாய்நிலத்தையும் ஆட்சியுரிமையையும் நிலைநிறுத்தும் அடிப்படையில் ஐ.நா., மூலம் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என மொத்தம் நான்கு கோரிக்கைகளை இங்கிலாந்து அரசிடம் முன்வைத்தார்.
இவற்றையெல்லாம் ஏன் இங்கிலாந்திடம் முன்வைக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் காரணங்களைப் பட்டியலிட்டு, தன்னுடைய இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை இங்கிலாந்துக்கு இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவிப் போராட்டத்தில் அமர்ந்தார்.
‘உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்புப் போராட்டம்’ (Hunger Strike for Truth and Justice) எனும் பெயரில் தன் போராட்டத்தைத் தொடங்கியவர் யூடியூபில் அதற்கெனத் தனி வலைக்காட்சி (YouTube channel) துவங்கினார். ஒவ்வொரு நாளும் உண்ணாநிலைப் போராட்டக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இணைய இதழ்கள் இதைப் பற்றி எழுதின. சமுக ஊடகங்களிலும் தமிழ்ப் பற்றாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மொத்த உலகத்திடமும் நீதி வேண்டி ஒற்றைப் பெண்மணி போராடும் செய்தி உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களிடம் பரவியது.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலான ஈழ ஆதரவுத் தமிழர் தலைவர்கள் இணைய வழிக் காணொளி அழைப்புகள் வாயிலாக அவருடன் நாள்தோறும் உரையாடி ஆதரவளித்தார்கள். கமலகாசன், சத்தியராசு போன்ற திரைக்கலைஞர்கள் அவருக்காகக் குரல் கொடுத்தார்கள். இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தாங்களும் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்தார்கள். பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலங்கள் புறப்பட்டன.
ம.தி.மு.க., தலைவர் வைகோ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தி.மு.க., தலைவர் தாலின் முதலானோர் அன்னையின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும்படி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தினர். தொடர்ந்து ஆத்திரேலியா, கனடா எனப் பிற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவுகள் குவிந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். அதுவும் இங்கிலாந்துத் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி இப்போராட்டத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாகக் காணொளியே வெளியிட்டதோடு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தான் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்க விவகாரம் தீப்பிடித்தது.
நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தக் காவல்துறையை அனுப்பியது இங்கிலாந்து அரசு. ஆனால் இப்பேர்ப்பட்ட அறவழிப் போராட்டத்தை ஒடுக்குவதா என இலண்டன் மாநகர்ச் சாலைகளில் புலிக்கொடி ஏந்தித் திரண்டார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் செல்வங்கள்! காவல்துறை அவர்களை அடக்க முயல, தமிழர்கள் திமிறி எழ, சிறு கைக்கலப்புக்கும் காவல்துறைத் தாக்குதல்களுக்கும் பின்னர் குறைந்தது ஒருவரைக் கைது செய்ததோடு அரசின் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
Met police officers were caught on video handcuffing at least one of the British Tamil protestors in Harrow today.
மக்கள் ஆதரவு முதல் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வரை பெற்று விட்ட இந்தப் போராட்டத்தை இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து இறங்கி வந்தது இங்கிலாந்து அரசு.
அன்னையின் ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து அரசு உறுதியளித்ததன் பேரில் தன் போராட்டத்தை உரிய இடத்துக்கு எடுத்துச் சென்ற அனைவருக்கும் அதன் வெற்றியைக் காணிக்கையாக்கி 17.03.2021 அன்று உண்ணாநிலையை நிறைவு செய்தார் அம்பிகை செல்வகுமார் அவர்கள்.
மறுநாளே நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தார்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரு மணி நேர விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை தேவை என ஒப்புக் கொண்டார்கள்.
இதையடுத்து கனடா, செருமனி என மொத்தம் ஐந்து நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தொடரில் 23.03.2021 அன்று இலங்கைக்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த தடயங்களைத் ‘திரட்டுவதோடு’ அவற்றைத் ‘தொகுத்து’, ‘பகுப்பாய்வு செய்து’, எதிர்காலப் போர்க்குற்ற வழக்குகளில் பயன்படுத்த உதவும் வகையில் ‘பாதுகாக்கவும்’ செய்யுமாறு மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகத்துக்குப் பரிந்துரைத்தது தீர்மானம்.
அன்னை அம்பிகை அவர்கள் வேண்டுகோளுக்கு மாறாக இந்தியா இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்து வழக்கம் போல் ஈழத் தமிழர்களுக்கு இரண்டகம் (betrayal) இழைத்தது.
ஆனாலும் மனிதநேயம் கொண்ட 22 நாடுகளின் பேராதரவில் வெற்றி பெற்றது தீர்மானம்!
ஒற்றைப் பெண்மணியாகத் தன் உயிரையே துச்சமாக மதித்துப் போராடி, உலகையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து, இலங்கையும் அதற்கு ஆதரவான வல்லரசு நாடுகளும் செய்த உலகளாவிய காய்நகர்த்தல்களையெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தவிடுபொடியாக்கி, பன்னாட்டு சமுகத்தின் தீர்மான வரைவையே திருத்தி எழுதிய அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஈடு இணையற்ற ஈகத்தமிழ் மாவீராங்கனையாக என்றென்றும் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார்.
அதே நேரம், இந்தத் தீர்மானம் உண்மையிலேயே பலன் அளிக்குமா இல்லையா எனவெல்லாம் பல்வேறு மாற்றுக் கருத்துக்களும் நிலவுகின்றன. இலங்கை வாழ் ஈழ ஆதரவுத் தலைவர்கள், அமைப்பினர் போன்றோருடன் பி.பி.சி., தமிழ் மேற்கொண்ட செவ்வியில் அவர்கள் யாரும் இது குறித்துப் பெரிய அளவில் வரவேற்பு தெரிவிக்கவில்லை.
ஈழச் சிக்கல் பற்றி அவர்கள் அளவுக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் இனப்படுகொலைக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் பன்னாட்டுச் சமுகம் இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள உருப்படியான ஒரே நடவடிக்கை இதுதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்களெனவே நம்புகிறேன்.
இனி பன்னாட்டு அவைகளில் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாய் எந்த ஒரு நடவடிக்கை முன்மொழியப்பட்டாலும் அதற்கு மிகப் பெரிய தடையாக இந்தத் தீர்மானம் இருந்தே தீரும்.
இலங்கையில் தமிழர்கள் தனி நாடு கோருவதே ஒரே நாட்டில் இணக்கமாய் வாழ முடியாத அளவுக்கு சிங்களர்கள் தங்களை அங்கே கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதால்தான். அந்தக் கொடுமைகளின் உச்சம்தான் 2009-இல் நடந்த தமிழினப்படுகொலை. இதோ இப்பொழுது கூட இந்தப் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தலைக் கூட நடத்த விடாமல் இலங்கை அரசு இனப்படுகொலை நினைவுத்தூணை இடிப்பதையும், மகுடை (Corona) பரவலைக் காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத் தடை பெற முனைவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எனவே தனி ஈழம் மலர வேண்டுமானால் தங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாத சூழல் அந்நாட்டில் நிலவுவதைத் தமிழர்கள் முதலில் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
அதை உறுதிப்படுத்த, நடந்தது இனப்படுகொலைதான், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்கிற உண்மையை நிறுவ வேண்டும்.
அதை நிறுவத் தேவை பாகுபாடற்ற ஒரு பன்னாட்டு உசாவல் (inquiry) அமைப்பு.
அப்படி உசாவல் அமைப்பு ஏற்படுத்தப்படத் தேவையானது இனப்படுகொலை நடந்திருக்கக்கூடும் எனச் சொல்லும் முறையான அறிக்கை.
அப்படி ஓர் அறிக்கை வெளிவர அதற்கு ஆதாரமாக அடிப்படைச் சான்றுகள், தடயங்கள் போன்றவை முறையான அமைப்பால் திரட்டப்படுவது இன்றியமையாதது.
அதற்கான வழிவகையைத்தான் இந்தத் தீர்மானம் ஏற்படுத்தியுள்ளது.
ஆக, கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருப்பினும் அதற்கான முதல் அடியை இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் நாம் எடுத்து வைத்துள்ளோம் என்பதுதான் ஐயம் திரிபற்ற உண்மை.
எனவே இத்தனை ஆண்டுகளும் இழந்த உயிர்களையும் உறவுகளையும் எண்ணித் துயரத்துடன் மட்டுமே நினைவேந்திய நாம் இந்த முறை அவர்களுக்கான நீதியையும் அவர்களுடைய தனி ஈழ வேட்கையையும் நோக்கி ஓரடியாவது முன்னேறியிருக்கிறோம் எனும் பெருமையுடனும் நினைவேந்தலாம் என்பதில் துளியும் ஐயம் இல்லை.
உங்கள் விருப்பத்துக்குரிய ‘அகச் சிவப்புத் தமிழ்’ இந்த 23.04.2021 அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் ஒயில் நடை பயில்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விழைகிறேன்!
பதிவைத் தொடங்கும் முன், மனித இனத்தையே அழித்து வரும் மகுடை (COVID) நோயில் உயிரிழந்த அனைவருக்காகவும் முதலில் என் உளமார்ந்த இரங்கல்!
நிலைகுலைந்து நிற்கும் நேரத்தில் சாயத் தோள் கொடுப்பதுதான் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யக்கூடிய ஆகப் பெரும் உதவி. அந்த அடிப்படை மனிதநேயத்தைக் கூட மனிதருக்கு மனிதர் காட்ட முடியாமல் – நோயால் நலிந்து கிடக்கும் நம் அன்புக்குரியவர்களை நாம் அரவணைத்து ஆறுதல் சொல்லக் கூட விடாமல் – தடுத்து நிற்கும் இந்த மகுடையை விடக் கொடியது வேறெதுவும் இருக்க முடியாது.
இந்தத் தீநுண்மி (virus) முற்றிலும் இந்தக் கோளை விட்டே அழிய வேண்டும். இந்த ஆண்டாவது அது கண்டிப்பாக நடக்கும் எனும் நம்பிக்கையோடு இதோ பதிவைத் தொடங்குவோம்.
காலக்கட்டம்
பதிவுகள்
கருத்துகள்*
பார்வைகள்
அகத்தினர்கள்**
ஏப்ரல் 2013 – ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 - ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 - ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 - ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 - ஏப்ரல் 2019
13
120
38949+
-183
ஏப்ரல் 2019 - ஏப்ரல் 2020
18
103
28298
17
ஏப்ரல் 2020 - ஏப்ரல் 2021
14
129
25437+
26
மொத்தம்
157
1757
3,63,300+
2052
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.
நான் இந்தாண்டு அதிகமாய் எழுதவில்லை. அப்படியும் பார்வைகள், கருத்துக்கள் என நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பில் பெரிய குறைவில்லை. இது நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைத்தான் காட்டுகிறது. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்றும் என் நெஞ்சார்ந்த நன்றி!
கடந்த ஆண்டு அதிக வரவேற்புப் பெற்ற ஐந்து பதிவுகள்
இவற்றில் நான்கு பதிவுகள் கடந்த ஆண்டிலேயே எழுதப்பட்டு அதே காலக்கட்டத்தில் உங்களிடம் இந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி! தொடர்ந்து நான் இயங்கி வருகிறேன் என்பதையும் மக்களான நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதையுமே இது காட்டுகிறது. மிக்க நன்றி!
உள்ளத்தில் உறைந்தவை
கடந்த ஆண்டு எழுதியவை பற்றி நினைக்கையில் முதலில் மனத்தில் இனிப்பது ஆண்டின் முதல் வெளியீடான பிறந்தநாள் பதிவுக்கு நீங்கள் அனைவரும் தெரிவித்திருந்த வாழ்த்து!
வழக்கமாக வருகை புரியும் பதிவுலக அன்பர்கள், பழைய நண்பர்கள் மட்டுமில்லாமல் அதுவரை அறிமுகமாகாத புதியவர்கள் கூட வாழ்த்தியிருந்தார்கள்! மிகவும் குதூகலமாக இருந்தது! தொடர்ந்து பதிவுகள் எழுதப் பெரும் ஊக்கமாகவும் அமைந்தது.
தமிழின் சிறப்பு எழுத்தான ழகரத்தை எழுதத் தெலுங்கு ஒருங்குறியிலும் (Telugu Unicode) ஒரு தனியிடம் ஒதுக்குவது எனும் ஒருங்குறிக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து எழுதிய இந்தக் கட்டுரையைத் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் முரண்பாடாகத் துறைசார் தமிழ் வல்லுநரான மணி.மணிவண்ணன் அவர்கள் இதை எதிர்த்து பேசுபுக்கில் என்னைக் கடுமையாகத் தாக்கி எழுதியதும் நடந்தது. மிகவும் அதிர்ச்சி! மிகுந்த வேதனை!
அந்த மனப்புண்ணுக்கு மருந்திடும் வகையில் தமிழறிஞர் தஞ்சை கோ.கண்ணன் ஐயா அவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆறுதல் கூறினார். தன்னுடைய தமிழ்ப் பணிகள் குறித்த தகவல்களையும் தொடர்ந்து கணித்தமிழில் செய்ய வேண்டியுள்ள பணிகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அதற்கான ஆவணங்களையும் எனக்கு அளித்துக் “காலம் ஒரு நாள் வரும் அன்று உங்களை ஒத்த தமிழர்கள் தமிழைக் காக்க எழுவார்கள் என்ற எண்ணத்தில் உங்களிடம் (இந்த ஆவணங்களை) கையளிக்கிறோம்” என்று அவர் சொன்ன சொற்கள் என்னை மயிர்க்கூச்செறிய வைத்தன!
அவ்வளவு பெரிய தமிழ்த் தொண்டர் ஏதுமறியாச் சிறுவனான என் மீது வைத்த அந்தப் பெரும் நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை. ஐயா சொன்ன அந்தப் பொற்காலத்துக்காக என்றும் காத்திருப்பேன்.
தமிழாய்வாளர் தஞ்சை கோ.கண்ணன்
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து ஒருங்குறிக் கூட்டமைப்பு தன்னுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டதாகத் தமிழறிஞர் நாக.இளங்கோவன் பேசுபுக்கில் அறிவித்திருந்தார் (பார்க்க - https://bit.ly/3u8nZ2P). அளவில்லா மகிழ்ச்சியும் மன அமைதியும் அடைந்தேன். பேரா.பொன்னவைக்கோ அவர்கள், முனைவர் இராம.கி., ஐயா முதலான தமிழறிஞர்கள் கொண்ட வல்லுநர் குழுவும் தமிழ் இணையக்கல்விக் கழகமும் தமிழ்நாடு அரசும் கைகோத்து இதைச் சாதித்ததாக அறிய முடிந்தது. அவர்கள் அனைவரையும் இந்தச் சிக்கலை முதன் முதலாக வெளியுலகுக்குக் கொண்டு வந்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களையும் இது பற்றி நான் தெரிவித்த உடனே இரவென்றும் தயங்காமல் அப்பொழுதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க.காமராசு அவர்களுக்குத் தெரிவித்த ஆருயிர் நண்பரும் மைத்துனருமான பிரகாஷ் சங்கர் அவர்களையும் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!
தமிழினப் படுகொலைக்கு உதவிய தி.மு.க., பற்றி என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது இந்த வலைப்பூவைத் தொடக்கத்திலிருந்து படிக்கும் அனைவரும் அறிந்ததே. எனினும் கடந்த ஓரீர் ஆண்டுகளாக ஈழ விவகாரம் தொடர்பான தி.மு.க-வின் நிலைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிந்தது. இதன் உச்சமாகக் கடந்த மே மாதத் தொடக்கத்தில், ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிக்கை விட்டு அறிவுறுத்தியது.
தி.மு.க-வின் இந்த மாற்றம் நெருங்கி வரும் அரசியலை மனதில் கொண்டது என்பதுதான் என் கருத்து என்றாலும் தமிழர் அரசியலின் முக்கிய புள்ளியான அக்கட்சியுடைய இம்மாற்றத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஈழ ஆதரவுத் தலைவர்களின் கடமை என்று கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன்.
ஈழத் தமிழர் நலனை மனத்தில் கொண்டுதான் அப்படி எழுதினேன் என்றாலும் அது சரிதானா என்கிற ஊசலாட்டமும் உள்ளுக்குள் இருந்தது. எனவே ஈழத் தமிழர்களாலேயே பல ஆண்டுகளாக நடத்தப்படும் ‘யாழ் களம்’ இணைய மடலாடல் குழுவில் கட்டுரையைப் பகிர்ந்தேன்.
நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் வரவேற்பை எனக்கு அள்ளித் தந்தனர். “யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஈழ விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக நிலைப்பாடு எடுக்க வைப்பதே சரியான அணுகுமுறை” என்று எனக்கு அவர்கள் அளித்த ஒப்புதல் கண்டு அகம் குளிர்ந்து போனேன்.
தொடர்ந்து ஈழ விவகாரம் பற்றியும் அதில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அணுகுமுறை பற்றியும் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்கள் முதிர்ச்சி மிக்கவர்கள் என்பதைப் புரிய வைத்தது. கூடவே இவ்வளவுக்கும் பிறகும் தமிழ்நாட்டுத் தமிழர்களான நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு கொஞ்சமும் குறையாதது கண்டு நெக்குருகிப் போனேன் (பார்க்க விரும்புவோருக்கு - https://bit.ly/3eFYQWL).
அதாவது பதிவு பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் இதில் குறிப்பிடப்பட்ட யுவர் கோட் எனும் குறுஞ்செயலியைப் பார்த்துப் பலரும் ஆர்வமாகி விவரம் கேட்டனர். சில நாட்களிலேயே நண்பர்களும் பதிவுலகத் தோழர்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது. எனக்கு இந்தக் குறுஞ்செயலியை அறிமுகப்படுத்திய அன்பு மகள் நிறைமதிவதனாவுக்கே எல்லார் நன்றியும்!
உத்திரப்பிரதேச மாநிலம் அத்திராசில் (Hathras) கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை மனித நெஞ்சம் படைத்த யாரையுமே தூங்க விடவில்லை. நினைத்தாலே இப்பொழுதும் வயிறு பற்றி எரிகிறது! தன்னைப் போன்ற இன்னொரு மனிதப்பிறவியை இந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமா என்கிற கேள்வி அதையொட்டி எழுந்தபொழுதுதான் தலித்து சாதியைச் சேர்ந்தவர்களை இந்த நாடுதான் மனிதர்களாகவே மதிப்பதில்லையே எனும் உண்மையும் உறைத்தது.
ஆகவே “ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை இனி பாலியல் வன்கொடுமை எனச் சொல்லாதீர்கள்; இனப்படுகொலை என்றே சொல்லுங்கள்” என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கட்டுரையை எழுதினேன். மொத்த இந்திய ஊடகங்களுக்குமான வேண்டுகோள் என்பதால் அதை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் சரி என்று தோன்றியது. எனக்கு அந்தளவுக்கு ஆங்கிலப் புலமை போதாதென்பதால் என் தங்கையின் உதவியை நாடினேன்.
அப்படித்தான் உருவானது ‘Hathras Case: Not a Sexual Harassment but Genocide! - A Request to Indian Media’ எனும் கட்டுரை. தமிழ் வடிவத்தின் சூடும் சுருக்கும் துளியும் குறையாமல் வெகு அழகான ஆங்கிலத்தில் எழுதித் தந்தார் அன்புத் தங்கை ஸ்ரீதேவி. என்னுடைய படைப்புகளைத் தொடக்கம் முதல் ஆதரித்து வரும் ‘கீற்று’ இணைய இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் அப்பொழுதுதான் புதிதாக ‘Butitis’ எனும் ஆங்கில இணைய இதழைத் தொடங்கியிருந்தார். கட்டுரையை அனுப்பியதும் உடனே அதை வெளியிட்டு உதவினார். இருவருக்கும் இங்கு என் அன்பார்ந்த நன்றி!
வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து விட்ட இப்பதிவு துவிட்டரிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழைக் கீழ்த்தரமாகப் பேசிய இனவெறியன் ஒருவனுக்கு எதிரடி தருவதற்காக எழுதிய இதைப் படித்து விட்டுத் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வழங்கிய பாராட்டுக்கள் இப்படிப்பட்ட துறைசார் பதிவுகளை எழுதுவதில் எனக்கிருந்த மனத்தடைகளை அசைத்துப் பார்த்தன.
இக்கட்டுரையை எழுதத் தோன்றாத் துணையாய் நின்ற தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர், மேற்கொண்டு எழுத முடியாமல் ஓரிடத்தில் திக்கி நின்றபொழுது வழிகாட்டி உதவிய தமிழாய்வாளர் சேதுபாலா, இதனைத் துவிட்டரில் எல்லார் பார்வைக்கும் கொண்டு சேர்த்து மிகப் பெரிய வெற்றிக்கு வழிகோலிய தமிழாய்வாளரும் பதிவருமான தமிழ் இனியன், எழில், காலம்பன் முதலான நண்பர்கள் பலர் என அனைவருக்கும் என் களிகூர் நன்றி!
தமிழ்ப் போராளி, எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவரான புகழேந்தி தங்கராசு ஐயா இந்தக் கட்டுரை பற்றி நான் சொல்லாமலே தானாக வந்து படித்துப் பாராட்டியது எதிர்பாராத குதூகலம்! பதிவுலகத் தோழர் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் இதற்கெனப் போன்மியெல்லாம் (meme) உருவாக்கிப் பாராட்டியது என்றைக்கும் மறக்க முடியாதது.
2021-சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழக்கம் போல் தி.மு.க., தலைவர் தாலின் மக்களிடம் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகளைக் கேட்டிருந்தார். நான் 19 பரிந்துரைகளையும் ஒரு புதிய திட்டத்தையும் எழுதியனுப்பினேன். அவற்றை மக்கள் பார்வைக்கும் முன்வைக்க விரும்பி ‘தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்’ எனும் பெயரில் இங்கேயும் வெளியிட்டிருந்தேன்.
பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் படித்தவர்களின் பாராட்டை இது பெற்றது. குறிப்பாக, அதுவரை நான் அறியாதவரான கல்வி ஆர்வலர் இரத்தின புகழேந்தி அவர்கள் மடலாடல் குழு ஒன்றில் இதைப் படித்து விட்டுப் பாராட்டியது எதிர்பாரா மகிழ்ச்சி! தோழர் மைதிலி கஸ்தூரிரங்கன் இதற்கும் ஒரு போன்மி அனுப்பிப் பாராட்டியிருந்தார். அவர் அன்பே அன்பு!
கடந்த முறை போல் தி.மு.க-விடமிருந்து மறுமொழி ஏதும் வராவிட்டாலும் இவற்றுள் ஐந்து பரிந்துரைகள் அவர்களின் தேர்தலறிக்கையில் இடம் பிடித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. என்னுடைய இந்த மடலைப் பார்த்து விட்டுச் சேர்த்தார்களோ அவர்களாகச் சேர்த்தார்களோ! எப்படியோ நல்லது நடந்தால் சரி.
அடுத்து தில்லி உழவர் போராட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அறவழிப் போராட்டம் எனும் பெயரில் மக்கள் தங்களை வருத்திக் கொள்வதில் எப்பொழுதுமே எனக்கு உடன்பாடில்லை. மனிதக் குல வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒன்றரைக் கோடிப் பேர் திரண்டு போராடிய தில்லி உழவர் போராட்டத்திலும் போராளிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படவே “இனியும் மக்களான நாம் இப்படி அறவழிப் போராட்டம் எனும் பெயரில் நம்மை வருத்திக் கொள்ளாமல் புதிய போராட்ட வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்” என்று அக்கட்டுரையை எழுதினேன்.
ஆனால் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நடந்த கலவரத்தை ஒட்டிச் சில உழவர் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததைக் கண்டு போராட்டமே முடிந்து விட்டதாக எழுதி விட்டேன். துவிட்டரில் நண்பர் தமிழறிவன் AJ முதலானோர் சுட்டிக்காட்டியதை அடுத்துத் திருத்திக் கொண்டேன். நாட்டு நடப்பு குறித்து எழுத அக்கறை மட்டும் போதாது மிகுந்த கவனமும் வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது. இதற்காக என் வருத்தத்தை இங்கு பதிவு செய்கிறேன்!
தமிழில் நாம் அனைவரும் செய்யும் மிகப் பெரிய பிழையான கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றியும் அதற்குக் காரணமாக இருக்கும் நம் தவறான மொழியியல் அணுகுமுறை பற்றியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் ‘தினச்செய்தி’ நாளேட்டில் எழுதியது இது. வெளியிடச் சரியான வேளை பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் தாய்மொழி நாளதுவுமாய் வெளியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இது பார்வை பெறாதது வருத்தமே!
எனினும் நான் பெரிதும் மதிக்கும் இராம.கி., ஐயா, நெல்லை சித்திக் ஐயா ஆகிய தமிழறிஞர்களிடம் இஃது ஏற்பிசைவு (recognition) பெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் வெகுவாகப் பாராட்டியதையும் மறக்க முடியாது. அனைவருக்கும் இங்கு மீண்டும் என் நன்றி!
இவற்றுக்கிடையே பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், தமிழாய்வாளர் எனப் பன்முகம் கொண்ட நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்கள் கடந்த ஆண்டு தன் மகள் திருமண விழாவில் வெளியிட்ட ‘இலக்கணம் இனிது’ நூலை அச்சிடும் முன்பே எனக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டது இன்ப அதிர்ச்சி!
ஐயாவின் நட்பு வட்டம் எப்பேர்ப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அப்படியிருக்க ஏதுமறியாத என்னிடம் அவர் தன் நூலைப் பற்றிக் கருத்துக் கேட்க முன்வந்தது முழுக்க முழுக்க அவருடைய பெருந்தன்மை மட்டுமே!
நூல் பற்றி நான் எழுதிய விரிவான கருத்துரையை ஐயா தன் வலைப்பூவிலும் வெளியிட்டது எனக்குக் கிடைத்த பெருமை! பார்க்க விரும்புவோர் அழுத்தலாம் இங்கே!
இதே போல் என் பெருமதிப்பிற்குரியவரும் மூத்த பதிவருமான தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் ஐயாவும் கடந்த ஆண்டு தன் நூல்களின் தொகுப்பை அனுப்பி வைத்து, அவை குறித்துத் தன் நூல்கள் பற்றிய திறனாய்வரங்கில் பேச என்னை அழைத்திருந்தார்.
முனைவர்களும் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் நிரம்பிய அவ்வரங்கில் ‘எழுத்தாளர்’ என என்னை அறிமுகப்படுத்தி ஐயா அவர்கள் அளித்த வாய்ப்புக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்! அரங்கில் நான் ஆற்றிய உரை கீழே. முழுக் காணொலி இங்கே!
நன்றிக்கினியோர்!
இணையமே சமுக ஊடகங்களுக்குக் குடிபெயர்ந்து விட்ட இந்நாளிலும் வலைப்பூவில் படைப்புகளை வெளியிட்டு வரும் பதிவுலக அன்பர்கள்…
இன்னும் என் வலைப்பூவை நாடி வரும் அகச் சிவப்புத் தமிழர்கள்...
தாங்கள் விரும்பும் வலைமனைகளின் பட்டியலில் இந்தத் தளத்தையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தும் பதிவுலகத் தோழமைகள்...
பதிவுகளின் வெற்றிக்கு இன்றியமையாக் காரணர்களான வலையுலகத் தோழர்கள்...
தங்கள் பாராட்டுகளாலும் திறனாய்வுகளாலும் தொடர்ந்து எனக்கு ஊக்கமூட்டும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வழிகாட்டிகள், உடன் பணியாற்றுபவர்கள்...
சோம்பல்பட்டு நான் சும்மாயிருந்தாலும் ஏதாவது ஏடாகூடம் பேசி என்னைச் சீறியெழுந்து எழுத வைக்கும் இனிய எதிரிகள்...
பதிவுகளை மக்கள் கண்ணில் காட்ட உதவும் திரட்டிகள், சமுக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...
வலைப்பூவின் ஏறுமுகமும் இறங்குமுகமும் அறிய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...
பதிவுகளுக்கான படங்களும் பிறவும் தந்து உதவும் பல்வேறு இணையத்தளங்கள்...
படைப்புகளை எழுதத் துணை செய்யும் இணையத்தளங்கள், இதழ்கள், நூல்கள்...
எல்லாவற்றுக்கும் மேலாக, இணையத்தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த நற்சேவையை இலவசமாக அளித்து வருவதோடு இதற்குப் பொருளாதார மதிப்பும் வழங்கி வரும் கூகுள் நிறுவனம்...
என யாவருக்கும்...
யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...
காணிக்கை
வலைப்பூ என்கிற ஒன்றை நான் தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துத் தந்த ஏந்தல்
பரந்து விரிந்த தன் தமிழ்ப் புலமை முன் சின்னஞ் சிறுவனான என்னிடம் தன் ஆய்வு முடிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கும் தனிப்பெரும் தகைமையாளர்
நல்லதோ கெட்டதோ என் குடும்பத்தில் எது நடந்தாலும் ஓடோடி வந்து நிற்கும் மாண்புமிகு பெருமனிதர்
இதழாளர், ஊடகவியலர், எழுத்தாளர் எனவெல்லாம் என்னை அடுத்தடுத்த உயரங்களில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் அன்புசால் ஆசான்
ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு இந்த ஆண்டுப் பதிவுலகத் துய்ப்பைப் (experience) காணிக்கையாக்குகிறேன்!
‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!
-
2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை
தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது
என்பதெல்லாம் தனிக்...
பதிவுகளை இமெயிலில் பெற
-
வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய
முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை
எனில் தயவ...
சூக்ஷ்ம தர்ஷினி - திரைப்படம் - ஒரு பார்வை
-
*நல்ல கதை**, **நல்ல திரைக்கதை**, **நல்ல வசனம்**, **நல்ல நடிப்பு**, **நல்ல
ஒலி அமைப்பு மற்றும் நல்ல ஒளி அமைப்பு**. **இவை எல்லாம் அமையப்பெற்றால் நல்ல
திரைப...
black hole கருந்துளை
-
ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை
அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக
(milky w...
அட! இப்படியும் எழுதலாமா?
-
தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி
நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ...
எடப்பாடி க்யாரே டீலிங்கா?
-
*சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு
நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம்
இழைத்துள்ளது.*...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
பெங்களூர் புக் ப்ரம்மா: ஜெயமோகன் உரை
-
*(ஆகஸ்ட் 9, 2024 - பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய நிகழ்வின் முதல் நாளில்
ஜெயமோகன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம் (அவர் தளத்தில் தந்துள்ளபடி -
https:/...
2458. சங்கீத சங்கதிகள் - 350
-
*கானமும் காட்சியும் - 4*
*“நீலம்” *
*‘சுதேசமித்திரனில்’ 1944-இல் வந்தது இந்தக் கட்டுரை. சென்னையில் மாம்பலத்தில்
உள்ள தியாகப் பிரும்ம கான சபையின் முதல்...
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….
-
ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய
தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம்
உங்களோடு க...
தவெக ட்ரெய்லர்
-
த.வெ.க. முதல் மாநாடு வரப்போகும் GOAT 2026ன் ட்ரெய்லர்
மட்டும்தானா!?தமிழ்நாட்டில் கூட்டம் கூடுவதை வைத்து எதையும் தீர்மானிக்க
முடியாது. ஆனால் த.வெ.க. கூட்டம்...