கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1)
கணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம்.
ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்.
கணித்தமிழ் முன்னோடிகளான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, மா.ஆண்டோ பீட்டர் போன்றோர் முதல் இன்றைய வலைப்பதிவர்கள் வரை அனைவருமே தன்னார்வமாக, எந்த விதப் பொருளாதார நோக்கமும் இன்றியே இவை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்படி மக்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு துறை எத்தனை காலத்துக்கு நீடிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆங்கிலம், பிரெஞ்சு என மற்ற மொழிகள் கணினித்துறையிலும், இணையத்துறையிலும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு, இப்படியெல்லாம் நம் மொழியும் மிளிர வேண்டும் எனும் அவாவினால் இன்று நாம் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடலாம். ஆனால், அப்படி மற்ற மொழிகளுக்கு இணையாக எல்லா வகைகளிலும் தமிழும் கணித்துறையில் வளர்ந்த பிறகு, தொடர்ந்து கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கெனப் பொருளாதார அடிப்படை ஒன்று இருத்தல் இன்றியமையாதது.
எழுத்தாளர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் என எழுத்துத்துறை சார்ந்த பயனர்களுக்கு மட்டுமேயானதாகக் கணித்தமிழ்ப் பயன்பாடு சுருங்கி விடாமல், தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகப் பெருவளர்ச்சி பெற வேண்டுமானால் இதழ்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றைப் போல் இணையமும் முழுமையான ஓர் ஊடகமாக உருவெடுத்தாக வேண்டும்! சுருக்கமாகச் சொன்னால், கணித்தமிழின் எதிர்காலம் இணையத்தமிழின் வளர்ச்சியைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இத்தனை ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கணித்தமிழ் தொடர்ந்து வருங்காலத் தலைமுறைகளாலும் பயன்படுத்தப்பட வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இணையத்தை நாம் முழுமையான ஊடகமாகக் கட்டியெழுப்ப வேண்டும்! இயல், இசை, நாடகம் என மற்ற தமிழ்த் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவாவது அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பது போல் நான்காம் தமிழ் எனப் போற்றப்படும் கணித்தமிழ்த்துறையிலும் வருவாய் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்! எதையுமே பொருளியல் (materialistic) கண்ணோட்டத்துடனே அணுகப் பழகி விட்ட இன்றைய உலகில் இதன் முதன்மைத்தனம் (importance) எத்தகையது என்பது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை.
இணையத்தமிழ் முழுமையான ஊடகமாக வளர்ச்சியுற வேண்டுமானால், முதலில் அதற்கான வணிகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊடக வணிகத்தின் வருமான வாயிலே விளம்பரங்கள்தாம். ஆனால், இணையத்தில் தமிழுக்கான விளம்பர வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்ற உடனடித் தீர்வு, நிலையான தீர்வு என இரண்டு தீர்வுகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் மேலான பார்வைக்கு இங்கே முன்வைக்கிறேன்!
உடனடித் தீர்வு!
பெரிதாக ஒன்றுமில்லை; கூகுள் ஆட்சென்சு பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு அந்நிறுவனத்திடம் விண்ணப்பிப்பதுதான் இதற்கான உடனடித் தீர்வாக நான் முன்மொழிய விரும்புவது.
இப்படிச் சொன்னதும் சிலர் முகம் சுளிக்கலாம். ‘மற்ற மொழிகளையெல்லாம் கூகுள் தானாக முன்வந்து ஆட்சென்சு பட்டியலில் சேர்த்திருக்கும்பொழுது, தமிழர்களாகிய நாம் மட்டும் அதைக் கேட்டுப் பெறுவது நன்றாக இருக்குமா?’ என்று அவர்கள் நினைக்கலாம். அதுவும் தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் இப்பொழுது கூகுளின் தலைமைச் செயலாளராக (CEO) வீற்றிருக்கும் நேரத்தில் இப்படி நாம் இதை விண்ணப்பித்துப் பெற்றால், தமிழர் ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழர்கள் வருமானம் பார்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று மற்ற மொழியினர் நினைப்பார்கள் என்றும் சிலர் கருதலாம்.
நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இல்லாவிட்டால், நாம் இப்படிக் கேட்டுப் பெறுவது இழிவானது. ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தும், மாநில மொழியாக இருக்கிற ஒரே காரணத்தால் நம் மொழிக்குரிய இடம் மறுக்கப்படுமானால் அதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தவறு?
அண்மையில், இந்தி கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே! இந்தி என்ன, தமிழை விட இணையத்தில் முந்தி நிற்கிறதா?
உலகத்திலேயே ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான இணையத்தளங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ்!2 இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக இணையத்தில் அடியெடுத்து வைத்த மொழியும் தமிழே!3 அப்படிப்பட்ட தமிழை விட்டுவிட்டு கூகுள் இந்திக்கு ஆட்சென்சு பட்டியலில் இடம் கொடுக்க ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்கிற தவறான பரப்புரையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும், தகுதியுள்ள தமிழைப் புறக்கணித்து, ஏதோ சில தவறான காரணங்களின் அடிப்படையில் இந்திக்கு கூகுள் முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், நமக்குரிய இடத்தை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை தோழர்களே!
வடநாட்டு அரசியலாளர்கள் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணாக, மாநில மொழி4 ஒன்றை இந்நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்துவதுதான் கூகுள் மட்டுமன்றி எல்லா இணையச் சேவை நிறுவனங்களிலும் அண்மைக்காலமாக இந்தி முதன்மை பெற்று வரக் காரணம். அப்படி முறைகேடான வழியில் அவர்கள் தம் மொழியை வளர்த்துச் செல்லும் நிலையில், தகுதியிருந்தும் நாம் வாளாவிருந்தால் இளித்தவாயர்களாகத்தான் வரலாற்றில் இடம் பெறுவோம்.
எனவே, உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!
தமிழ் வலைப்பதிவர்களில் மிகப் பெரும்பாலோர் கூகுளுடைய ‘பிளாகர்’ சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள்5. கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் தமிழர்களிடையில் சங்கம், மாநாடு போன்றவை இல்லாத நிலையில், கூகுளின் தமிழ்ப் பயனர்களில் பெரும்பாலானோர் ஒன்று கூடும் நிகழ்வாகத் திகழ்வது வலைப்பதிவர் திருவிழாக்கள்தாம். ஆக, புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாதான் இதற்கான பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை!
நிலையான தீர்வு!
கூகுள் ஆட்சென்சு போலவே தமிழுக்கென விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாக இருக்கும்.
இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவுடைய தமிழ்நாட்டிடம், எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட உலகளாவிய தமிழினத்திடம் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள் எண்ணற்ற அளவில் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இணையத்தில் விளம்பரப்படுத்த நமக்கென இணைய விளம்பரச் சேவை நிறுவனம் ஒன்று கட்டாயம் தேவை! ஆனால், இந்திய இணைய விளம்பர நிறுவனங்கள் எல்லாமே மகாராட்டிர, ஆந்திர, கருநாடக மாநிலத்தவருடையவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழில்தான் மிகுதியான இணையத்தளங்கள் இருக்கின்றன எனில், தமிழ் இணையத்தளங்களுக்கென விளம்பர நிறுவனம் தொடங்குவது எவ்வளவு பெரிய வருவாய் வாய்ப்பு என்பதைத் தமிழ் இளைஞர்களும், தமிழ்நாட்டு நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
கணித்தமிழ் முயற்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் பேராதரவு அளித்து வரும் தமிழ்நாடு அரசு இந்த வகைத் தொழில் முனைவுகளையும் முன்னெடுக்க ஊக்குவித்தல் வேண்டும்! இப்படியொரு கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் இணைந்து நடாத்தும் ஒரு போட்டியில் தெரிவிப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன்!
ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் முழுமையான இணைய ஊடகத்தை உருவாக்குவோம்!
கணித்தமிழ் முயற்சிகளை நிலையாக்குவோம்!
தமிழை என்றும் அழியா மொழியாக்குவோம்!
படம்: நன்றி கம்ப்யூட்டர் பிரம் வில்லேஜ்.
இக்கட்டுரை “என் சொந்தப் படைப்பே” எனவும், இப்படைப்பு, “‘வலைப்பதிவர் திருவிழா-2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015’க்காகவே எழுதப்பட்டது” எனவும் உறுதிமொழி அளிக்கிறேன். மேலும், இது “இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது” எனவும் உறுதிமொழிகிறேன்.
❀
❀ ❀ ❀ ❀
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான
கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க
விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!