.

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

ஏன் இயலாது மதுவிலக்கு? – தடைகளைத் தகர்க்கும் வகைகளும், அமல்படுத்தும் முறைகளும்




Students Struggle

மூகநலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்த காந்தியவியலாளர் ஒருவரின் உயிர்த்தீ இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது!

நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்! தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார் அவர்கள்; இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி அவர்கள்; அவ்வளவு ஏன், இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கூட சங்கரலிங்கனார் அவர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரிசையில் மதுவிலக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தித் தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவியலாளர் சசிபெருமாள் அவர்கள்!

இன்றில்லை, நேற்றில்லை, ௪௬ (46) ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ
Gandhist Sasiperumal
அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள் ஐயா. இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் ஈந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. குறைந்தது, அவரது இந்த ஈகைச் (தியாகம்) சாவு குறித்து நம் முதல்வர் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடும்பத்தினரையும் அரசு கைது செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டது அட்டூழியத்தின் உச்சம்!

ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் ஈகை, மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம்.

ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக நினைத்த மாத்திரத்தில்
டாரென எல்லா மதுக்கடைகளையும் சார்த்திப் பூட்டி விட முடியுமா? அது முடியும் என்றாலும் அப்படிச் செய்வது சரியா? அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? இவற்றையெல்லாம் பற்றி நடுநிலையான பார்வையில் சிறிய ஓர் அலசல் இதோ!

மதுவிலக்குக்கு எதிரான தடைகளும் அவற்றைத் தகர்க்கும் வழிகளும்


Crowd before Liquor Shop

மதுவிலக்குக்கு எதிராகப் பேசுபவர்கள் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, கள்ளச்சாராயச் சாவுகள் பெருகும் என்பது. அஃது என்னவோ உண்மைதான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில், ‘கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் பலி’, ‘கள்ளச் சாராயம் அருந்தியதால் இத்தனை பேருக்குப் பார்வை பறி போனது’ என்பன போன்ற செய்திகள் தமிழ்நாட்டில் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெற்று வந்தன. கள்ளச் சாராயத்தை ஒழிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் முடியாததால்தான் அதற்கு நிலையான ஒரு தீர்வு காணும் நோக்கில் (!) அரசே மலிவு விலையில் தரமான மதுவை விற்க முடிவெடுத்து டாஸ்மாக் எனும் அரசுப் பிரிவின் மூலம் அதைச் செயல்படுத்தியது. இந்த முறையற்ற முடிவு இன்று ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது உண்மைதான் என்றாலும், மறுபுறம் அதனால் கள்ளச் சாராயம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!

ஆனால், அதற்காகக் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசே நல்ல சாராயம் விற்பது என்பதை ஒருபொழுதும் ஏற்கவே முடியாது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது என்பது சட்டப்படி குற்றம். குற்றங்களை ஒடுக்கி மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அரசு என்கிற ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், குற்றத்தை ஒடுக்க வகையில்லாத அரசு தானே அந்தக் குற்றத்தை வீரியம் குறைந்த அளவில் செயல்படுத்துகிறேன் என இறங்குவது அருவெறுப்பானது!

குண்டர் தடைச் சட்டங்களை அரசு மீண்டும் மீண்டும் எவ்வளவோ வலுப்படுத்திக் கொண்டுதான் வருகிறது. ஆனாலும், இதுவரை கூலிப்படைத் தாக்குதல்களையோ, போக்கிலிகளின் அடாவடித்தனங்களையோ, தாதாத்தனங்களையோ கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதற்காக அரசே குண்டர் படை ஒன்றை உருவாக்கி அரசியலாளர்களுக்கும் பணக்காரர்களுக்கும் குறைந்த வாடகைக்கு விட்டுக் குற்றங்களை அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வந்து முறைப்படுத்தலாம் என இறங்கினால் நன்றாக இருக்குமா? அது போலத்தான் இதுவும். கொலை, கொள்ளை, வன்முறை, ஊழல், கையூட்டு போன்ற மற்ற குற்றங்களை ஒடுக்க அரசு எப்படிச் சட்டத்தின் மூலமாக மட்டுமே முயல்கிறதோ அதே போலத்தான் கள்ளச் சாராயத் தொழிலையும் அணுக வேண்டும்!

உடனே சிலர், “இது வெறும் கொள்கை அளவிலான (theoritical) பார்வை. நடைமுறைப்படி (practically) பார்க்கும்பொழுது, அரசே நேரடியாக மது விற்பதால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடிந்திருக்கிறது எனில் அதைத் தொடர்வதில் என்ன தவறு?” எனக் கேட்கலாம். அப்படியே நடைமுறைப்படி பார்த்தாலும், அரசு விற்பதும் தரமான சாராயம்தானே தவிர அஃது ஒன்றும் பாலோ பழமோ காயோ கறியோ கிடையாது. கள்ளச் சாராயம் உடலுக்கு உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனில், நல்ல சாராயம் அதைத் தாமதமாக ஏற்படுத்தும்; இஃது உடனடியாகக் கொல்லும் எனில் அது தாமதமாகக் கொல்லும், அவ்வளவுதான். மற்றபடி, கள்ளச் சாராயம் மட்டும்தான் நஞ்சு அரசுச் சாராயம் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் என்பதில்லை. அளவுக்கு மீறிப் பெருகி வரும் இந்தக் குடிப் பழக்கத்தினால் இன்னும் சில ஆண்டுகளில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis) மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே, சாராயம் என்பதை அறவே ஒழிப்பதுதான் சாராய உயிரிழப்புகளுக்கும் குடிப் பழக்கத்தினால் ஏற்படும் இன்ன பிற குடும்ப, சமுதாயத் தீமைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசே மது விற்பதன் மூலம் அது நடக்காது!

மதுவிலக்குக்கு எதிராக முன்வைக்கப்படும் இரண்டாவது காரணம், அதுதான் இன்று அரசின் முதன்மையான வருவாயாக இருக்கிறது என்பது.

இதுவும் உண்மைதான். வேளாண்துறை, தொழில்துறை, சேவைத்துறை ஆகிய மூன்று பிரிவுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ மின்சாரத்தையே நம்பி இயங்கும் இன்றைய உலகில் மின்சார உற்பத்தியில் ஒப்புயர்வில்லாத அளவுக்குப் பின்தங்கியுள்ள தமிழ்நாடு, வருமானத்துக்கு நம்பியிருக்கும் முதல் பெரும் வழிவகை சாராய விற்பனை. அதையும் இழுத்து மூடிவிட்டால், ஏற்கெனவே கடனில் தள்ளாடும் அரசு தலைகுப்புறக் கீழே விழுந்து விடும் என்பதுதான் இன்றைய நிலை. ஆளுங்கட்சி அமைச்சர்கள் மட்டுமில்லாமல் மதுவிலக்கை விரும்பும் சமூக ஆர்வலர்களே கூட “மதுவிலக்கு என்பது இயலாத ஒன்று” என மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள் எனில் அதற்குக் காரணம் இதுதான்.

இதற்கு ஒரே வழி, தகுந்த மின்துறை வல்லுநர்களோடு கலந்துரையாடி மின்சாரத்துறை மீண்டும் புத்துயிர் பெறப் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுப்பதுதானே ஒழிய சாராயத்துறையையே சார்ந்திருப்பது இல்லை.

மேற்கண்ட இரண்டு காரணங்கள் தவிர, மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதில் இன்னொரு பெரும் தடையும் இருக்கிறது. அது குடிகாரர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு!

முன்பெல்லாம் குடிகாரர்கள் தெருவுக்கு ஒருவர், இருவர் என்றுதான் இருந்தார்கள். ஆனால், எப்பொழுது அரசே மது விற்கத் தொடங்கியதோ அப்பொழுதே மது அருந்துவது இழிவான, ஒழுக்கக் கேடான, மானக்கேடான பழக்கம் என்கிற பார்வை மாறி அது சமூகத்தின் பொதுவான பழக்க வழக்கங்களில் ஒன்றாக ஆகி விட்டது. கணக்கெடுத்துப் பார்த்தால் ‘வீட்டுக்கு ஒரு குடிகாரர்’ என்கிற அளவில் தமிழ்நாட்டில் குடிப்போர் எண்ணிக்கை பெருகியிருக்குமோ என்கிற அச்சம் மேலிட்டுள்ள நிலையில்தான், மாநிலம் முழுவதும் குடிக்கத் தொடங்கிவிட்டது என்கிற உச்சக்கட்ட நிலைமையில்தான் இன்று நாம் அனைவரும் இதை மாற்றப் போராடி வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடாலடியாக உடனடி மதுவிலக்கைக் கொண்டு வந்து மொத்த மது விற்பனையையும் தடை செய்தால் அது குடிப் பழக்கம் உள்ள அனைவரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும். கள்ளச் சாராயம் காய்ச்சப்படும் இடங்களைத் தேடிச் சென்றோ, வெளி மாநிலங்களுக்குச் சென்றோ மது அருந்துவது எல்லோருக்கும் ஆகக் கூடியதில்லை. ஆகவே, மது அருந்தாததால் கைகளில் நடுக்கம், மன அழுத்தம், படபடப்பு, எரிச்சல், இனம் புரியாத சீற்றம் போன்ற பல பாதிப்புகள் இலட்சக்கணக்கானோரைத் தாக்கும். இஃது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் திரும்பும். குடும்பத் தகராறுகள், அதனால் ஏற்படும் வன்முறை, மன அமைதி இழத்தல் எனத் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவதோ, மதுக்கடைகள், மது ஆலைகள் அனைத்தையும் ஒரு சேர மூடுவதோ பெரிய பாதிப்புகளைத்தான் ஏற்படுத்துமே ஒழிய நன்மை எதையும் விளைவிக்காது. படிப்படியாக, தொலைநோக்குப் பார்வையோடு, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடிநோயாளி ஒருவரைக் குணப்படுத்த மருத்துவர்கள் எப்படிச் சிறிது சிறிதாக அவர் மதுப் பழக்கத்தைக் குறைத்து உரிய மருத்துவத்தையும் அளித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்திலிருந்து அவரை மீட்பார்களோ அப்படித்தான் இதை அணுக வேண்டும்!

அஃது எப்படி என்பதை இனி பார்ப்போம்!

முழு மதுவிலக்கை அமல்படுத்தும் முறை

வெறுமே அரசு மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்துவதோ, மது அருந்துவதற்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதோ, “இன்று முதல் மது விற்பனை தடை செய்யப்படுகிறது” எனக் கொட்டை எழுத்தில் அறிவித்து விடுவதோ முழுமையான மதுவிலக்கு ஆகி விடாது.
முதலில் “மது, புகையிலைப் பொருட்கள் முதலான எந்தப் போதைப்பொருளும் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதே குறிக்கோள்! அதுவே இந்த அரசின் போதைப்பொருள் கொள்கை!” எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு, அதுவே தமிழ்நாடு அரசின் நிலையான கொள்கை முடிவாக நடுவணரசின் ஒன்பதாம் எண் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்! அரசுக்கு வருமானம் குறையும்பொழுது மதுக்கடைகளைத் திறப்பதும், மகளிர் வாக்குத் தேவைப்படும்பொழுது மதுவிலக்கை அமல்படுத்துவதுமாக மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து ஆட்டிப் படைக்கும் ஆட்சி இயந்திரத்தின் அட்டூழியத்துக்கு இதுவே நிலையான முற்றுப்புள்ளியாக இருக்க முடியும்.
அடுத்ததாக, மதுப் பழக்கத்திலிருந்து மக்களைத் திருத்தும் முன் அரசு தான் திருந்தும் முகமாக, இலக்கு வைத்து மது விற்பனை செய்யும் வழக்கத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் கைவிட வேண்டும்!
அடுத்து, மது இல்லாத மாநிலத்தை உருவாக்குதல் எனும் நோக்கத்தைச் செயல்படுத்துவதன் முதற்கட்டமாக வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் இயங்கும் எல்லா மதுக் கடைகளையுமே ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்!
மாநிலத்தில் மொத்தம் எத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் மதுக் கடைகள் மூலமாகவே கணக்கெடுத்து, அனைவருக்கும் இலவசப் புகைப்பட அடையாள அட்டை ஒன்றைப் பதிவு எண்ணுடன் வழங்கி அஃது இல்லாமல் யாருக்கும் மது விற்கப்படாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும்! இதன் மூலம் அகவையில் (வயதில்) குறைந்தவர்களுக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கலாம்.
இவை போக, கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பறக்கும் படை ஒன்றை அரசு அமைத்துப் பொது இடங்களில் அமைந்துள்ள மதுக் கடைகள், அகவை (வயது) குறைந்தவர்களுக்கு மது விற்கும் கடைகள் எனச் சட்டத்துக்குப் புறம்பான வகைகளில் செயல்படும் அரசு, தனியார் மதுக் கடைகளைப் பூட்டி அவற்றின் உரிமத்தைப் பறிமுதல் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்!
திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்பொழுது ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என அறிவிப்பு இடம்பெறுவது போல, குடிப் பழக்கத்தை நியாயப்படுத்துகிற வகையிலான உரையாடல்கள், பாடல்கள் இடம்பெற்றால் அவற்றை நீக்கவும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்!
இவை அனைத்துக்கும் மேலாக, மது எப்படிப்பட்ட தீங்குகளை அருந்துபவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல வகைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
குடியின் தீமைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கி எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘ஒரு மனிதனின் கதை’ எனும் புதினம் ‘தியாகு’ என்கிற பெயரில் பின்னர் திரைப்படமாக வெளிவந்தது. அதை எல்லாத் திரையரங்குகளிலும் மாதம் ஒருமுறை இலவசமாகத் திரையிட ஏற்பாடு செய்யலாம். அதையே தொடராக முன்பு தூர்தர்சன் ஒளிபரப்பி இருந்ததை இப்பொழுது மறு ஒளிபரப்புச் செய்யலாம்.
குடிப் பழக்கம் குறித்து விழிப்புணர்வுக் குறும்படங்கள் எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கலாம்.
புகழ் பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலைவர்கள் ஆகியோரைக் குடியின் கொடுமை பற்றிப் பேச வைத்துப் படமாக்கித் தொலைக்காட்சிகளின் விளம்பர இடைவேளைகளிலும், திரையரங்குகளில் இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கும்பொழுதும் ஒளிபரப்பலாம்.
திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன்னர் புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் படம் திரையிடுவதோடு கூட இனி குடி பற்றியும் விழிப்புணர்வுப் படங்களைத் திரையிடக் கட்டாயச் சட்டம் கொண்டு வரலாம்.
குடியின் தீமைகளைப் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பாடமாக வைக்கலாம்.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரித் திரண்டு எழுந்திருக்கும் மாணவ ஆற்றலை அதற்காகவே பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் மாணவர்களை வைத்துக் குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க ஆவன செய்யலாம்.
இவை தவிர, குடிப் பழக்கத்திலிருந்து மக்களை மீட்க இலவச மருத்துவ முகாம்களை மாநிலம் முழுவதும் அரசு அவ்வப்பொழுது நடத்த வேண்டும்! ஆங்கிலம், சித்தம், ஆயுர்வேதம், ஓமியோபதி என எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடி மீட்பு மருத்துவச் சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும்!
மேலும், குடிகாரர்களைத் திருத்தும் பொதுமக்களுக்கு ஐயா சசிபெருமாள் அவர்களின் பெயரில் விருது வழங்கிச் சிறப்பிக்கவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்!
இவற்றுக்கிடையில், அரசு மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மதுக் கடைகளும், ஆலைகளும் மூடப்பட்ட பின்னர் வேலை இழந்து தவிக்காதபடி வேறு ஏதேனும் அரசுத் துறையில் பணியாற்ற அவர்கள் அனைவருக்குமான மாற்று ஏற்பாடுகளும் இப்பொழுதே தொடங்கப்பட வேண்டும்!
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மதுக்கான சந்தையை ஒழித்து விட்டு அதன் பிறகு அரசு மதுக் கடைகளையும் ஆலைகளையும் மூட வேண்டும்!
தனியார் மது உற்பத்தி செய்ய – விற்க, மாநிலத்துக்கு வெளியிலிருந்து மதுவைக் கொண்டு வர ஆகியவற்றுக்கும் நிரந்தரத் தடை போட வேண்டும்!
இதனால் ஏற்படக்கூடிய கள்ளச் சாராய உற்பத்தியை ஒடுக்க மாநிலக் காவல்துறையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்!
இந்தக் கடைசி மூன்று பரிந்துரைகள் எப்பொழுது நிறைவேற்றப்படுகின்றனவோ அப்பொழுதுதான் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாகப் பொருள்படும்!

இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக அரசு மது விற்பனையையே நம்பியிருக்காமல் மின்சாரத்துறையை மீட்டெடுப்பதன் மூலமும், வேளாண்மைக்குப் புத்துயிர் கொடுப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை விட மாநில உற்பத்தியை ஊக்குவிப்பது, தற்சார்புப் பொருளியல் (self economic) போன்ற சரியான பொருளியல் (economic) கொள்கைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலமும் நிலையான வருவாயைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

அப்பொழுதுதான் மது இல்லாத, எந்தப் போதைப்பொருளும் இல்லாத தமிழ்நாடு என்கிற சசிபெருமாள் ஐயா அவர்களின் கனவும், போராடும் மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேறும்! உண்மையான அக்கறையோடு இவற்றைச் செயல்படுத்தினால், நான் முன்பே குறிப்பிட்டது போல அந்தக் கனவு பலிக்கும் நாள் தொலைவில் இல்லை. 

Salute to Martyr Sasiperumal!

(நான் கீற்று இதழில் 0௭.0.௨0அன்று எழுதியது)


❀ ❀ ❀ ❀ ❀

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உங்கள் வாக்கைப் பதிவு செய்வீர்!

அன்பார்ந்த நண்பர்களே! விகடன் இதழ் மதுவிலக்குக்கு எதிரான வாக்கெடுப்பை நடத்தி வருகிறது. கீழ்க்காணும் படத்தைச் சொடுக்கினால் அதற்கான பக்கம் வரும். அங்கு உங்கள் வாக்கைப் பதிவு செய்து மதுக் கொடுமையிலிருந்து தமிழ்நாட்டை, எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றுவதற்கான இந்தப் பெரும் போராட்டத்துக்கு நீங்களும் உங்களாலான பங்களிப்பை நல்கலாமே!

http://www.vikatan.com/site/news/index.php?spl=96&type=votes

உசாத்துணை: நன்றி மாலைமலர், ‘காலா… அருகே வாடா’ – கிருஷ்ணா டாவின்சி சிறுகதை. 

படங்கள்: நன்றி செந்தூவல், ஈ-குருவி, சிறகு, இளந்தமிழகம், விகடன்,

இந்தப் பதிவு பயனுள்ளது எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

29 கருத்துகள்:

  1. படிப்படியான வழிமுறைகள் ஒவ்வொன்றுமே நன்று... நடக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் உடனடிக் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  2. நடப்பது குடி மக்களுக்கு ஊத்திக் கொடுக்கும் அரசல்லவா ஆட்சி செய்கிறது...

    பதிலளிநீக்கு
  3. கொக்கு பிடிக்கத் தெரியுமா உங்களுக்கு? நல்ல வெயில் நேரத்தில் கொக்கு தலையில் ஒரு கைப்பிடி வெண்ணையை வைத்து விட்டால் அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்து விடும். அப்போது லபக் கென்று ஓடிப்போய் கொக்கின் கழுத்தைப் பிடித்தால் வேலை முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு வினைகெட்டு அந்த வேலையை எனக்குக் கற்றுத் தருவதற்குப் பதிலாக, இவ்வளவு நன்றாக அந்த வேலையைச் செய்யத் தெரிந்த நீங்களே அதைச் செய்து விடலாமே? ;-)

      நான் கூறியுள்ள வழிமுறைகள் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல என்கிற உங்கள் கிண்டல் புரிகிறது. ஒரு கருத்துக்கு மறுப்புத் தெரிவிப்பதாக இருந்தால் அதை விளக்கமாகக் காரண ஏரணங்களோடு கூற வேண்டும். அதை விடுத்துப் பொத்தாம் பொதுவாக இப்படிக் குறை கூறினால் அதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இதை விட நல்ல வழிமுறைகள் உங்களுக்குத் தெரிந்தால் அதை விளக்குங்கள்! தனிப் பதிவாக எழுதுங்கள்! என் பதிவை நான் எப்படி இணையத்தில் விளம்பரப்படுத்துவேனோ அதை விட ஒரு படி மேலாகவே உங்களுடைய அந்தப் பதிவை விளம்பரப்படுத்தித் தர நான் ஆயத்தமாக இருக்கிறேன். அல்லது, என்னுடைய மேற்படி வழிமுறைகள் பலன் தராதவை என நீங்கள் தரக்கரீதியாக நிறுவினால் மேற்படி பதிவை அழித்துக் கொள்ளவும் நான் அணியமாகவே இருக்கிறேன். அதை விடுத்துக் கேலி கிண்டல்களில் இறங்கினீர்களானால் நம் இருவருக்குமே நேரம்தான் வீண்.

      நீக்கு
  4. சிறப்பான வழிமுறைகள்! மது அரக்கனிடம் இருந்து படிப்படியாகத்தான் தமிழகத்தை மீட்க முடியும். முதலில் ஒவ்வொரு வீட்டிலும் குடிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது முழு மதுவிலக்கு சாத்தியமாகும்! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி ஐயா! படிப்படியாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்பதை ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி! ஆனால், குடியர்களை அவரவர் வீட்டில் இருப்பவர்கள் கட்டுப்படுத்தினால்தான் மதுவிலக்கு இயலும் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்! நம் பெண்மணிகள் செய்யாத முயற்சிகளா? மணமாகிப் புகுந்த வீடு வரும் பெண் தன் கணவன் குடிப் பழக்கம் உள்ளவன் என்பதை அறிய வரும்பொழுது எதிர்கொள்ளும் பீதி கொஞ்சநஞ்சமில்லை. அவனைத் திருத்த, கெஞ்சியும் சண்டை போட்டும் உணர்வார்ந்து (emotionally) மிரட்டியும் இன்னும் என்னென்னவோ செய்தும் தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறார்கள் நம் பெண்மணிகள். ஆனாலும், தன் கணவன்மார்கள் குடிப்பதை அவர்களால் நிறுத்த முடிவதில்லை. எப்பொழுதும் வெளியாட்களின் சொல்லுக்கு இருக்கும் மதிப்பு, நம் சொல்லுக்கு வெளியாட்களிடம் இருக்கும் மதிப்பு நெருக்கமானவர்களிடம் கிடைப்பதில்லை.

      மது என்பது உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பிணைந்திருக்கிறது. ஒரே ஒரு குற்றம் கூட நடக்காத ஒரு குமுகத்தை (Society) உருவாக்குதல் என்பது எப்படி ஒரு நினைத்துப் பார்க்க முடியாத கனவாக நீடித்து வருகிறதோ அதே போலத்தான் ஒரு குடியர் கூட இல்லாத முழுமையான மதுவிலக்குக் குமுகம் என்பதும் ஒருபொழுதும் இயலாதது. ஆனால், அதற்காக அதுதான் இயலாத ஒன்றாயிற்றே என எல்லாரும் குடித்துச் சாகுங்கள் என அரசே ஊற்றிக் கொடுப்பதுதான் கொடுமை. அதுதான் வேண்டா என்கிறோம். ஏனெனில், அப்படிச் செய்வதால் குடிக்காதவர்கள் கூடக் குடிக்கிறார்கள். குடியர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. சட்டமீறல்களைத் தடுக்கவே முடியவில்லை என்பதற்காக எல்லாச் சட்டங்களையும் நீக்கி விடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதே போன்றதுதான் இதுவும். எனவே, அரசே விற்பது என்பதையும், மற்றவர்கள் விற்பதையும் தடுப்பது என்கிற வகையிலும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையே தவிர, அதனாலும் முழுக்க முழுக்க மதுவற்ற சமூகம் இயலாது என்பதே உண்மை! யாரோ சிலர் திருட்டுத்தனமாக விற்றுக் கொண்டுதான் இருப்பார்கள், அதை யாரோ பலர் வாங்கிக் குடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், குடிப்போர் எண்ணிக்கை குறையும், வெகுவாகக் குறையும். அது போதும். அதுவே முழு மதுவிலக்கு அடைந்த குமுகமாகத்தான் கருதப்படும், ஏற்றுக் கொள்ளவும் படும்!

      நீக்கு
  5. கள்ளச் சாராயத்தை ஒழிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் முடியாததால்தான் அதற்கு நிலையான ஒரு தீர்வு காணும் நோக்கில் (!) அரசே மலிவு விலையில் தரமான மதுவை விற்க முடிவெடுத்து டாஸ்மாக் எனும் அரசுப் பிரிவின் மூலம் அதைச் செயல்படுத்தியது. இந்த முறையற்ற முடிவு இன்று ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது உண்மைதான் என்றாலும், மறுபுறம் அதனால் கள்ளச் சாராயம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்! //

    இது எப்படி இருக்கிறது தெரியுமா? சிறு குழந்தை நடக்கும் போது சாக்கடையில் விழுந்து விடாமல் காப்பவர்கள், அருகில் நன்நீர் ஓடை இருந்தால் அதில் விழுந்தால் பரவாயில்லை என்று சொல்லுவார்களா? இல்லையல்லவா ஆனால் இவர்கள் அது பரவாயில்லை என்று சொல்லுவது போல்....இரண்டிலுமே உயிர் பறிப்புதான்...

    வழி முறைகள் நன்றாகத்தான் இருக்கின்றன. // அடுத்ததாக, மதுப் பழக்கத்திலிருந்து மக்களைத் திருத்தும் முன் அரசு தான் திருந்தும் முகமாக,// அரசு என்பது நம்மை ஆள்பவர்கள்....தலைவர்கள் குடிப்பழக்கம் இல்லாது இருக்க வேண்டும். மருத்துவர்களே கூட மது அருந்துகின்றார்கள். ஆசிரியர்களும்..அப்படியிருக்க அவர்கள் எப்படி இதை ஆமோதிப்பார்கள்? அறிவுறுத்துவார்கள்? நண்பரே! டாஸ்மாக் மட்டும் மதுக்கடை இல்லையே...தனியார் மதுக்கடைகளும் இருக்கின்றனவே. அவை எல்லாம்?. முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமா என்று தெரியவில்லை....வந்தால் நன்றாக இருக்கும். மதுவை மட்டுமே நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்..எத்தனை பள்ளிக் குழந்தைகள் புகைப்பிடிக்கின்றார்கள்,....எத்தனை பேர் பான்பராக் உபயோகிக்கின்றனர்...பள்ளிக் குழந்தைகள் உட்பட...இவற்றிற்கெல்லம் தடை?

    மட்டுமல்ல, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதை உடனே நிறுத்துவது கடினம். மன பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாலு போச்சு கத்தி வந்ததுனு...ஆகிவிடக்கூடாது...(திரைப்படம் இல்லைங்க....) .வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்....மிகவுமே! அந்த நாளும் வந்திடாதோ....நல்ல கட்டுரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி ஐயா, அம்மணி! நடை பயிலும் குழந்தை எடுத்துக்காட்டு நன்றாக இருந்தது!

      //தலைவர்கள் குடிப்பழக்கம் இல்லாது இருக்க வேண்டும். மருத்துவர்களே கூட மது அருந்துகின்றார்கள். ஆசிரியர்களும்..அப்படியிருக்க அவர்கள் எப்படி இதை ஆமோதிப்பார்கள்? அறிவுறுத்துவார்கள்? நண்பரே!// - நல்ல கேள்விதான். ஆனால், குடிப் பழக்கம் உள்ள தலைவர் ஒருவரே கூட இப்பொழுது நடைபெற்று வரும் மதுவிலக்குப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதை நாம் பார்க்கிறோம். சாராய ஆலைகள் நடத்தும் தி.மு.க-வினரும் மதுவை ஒழிக்கப் போலியாகவேனும் போராடுவதையும் பார்க்கிறோம். மது என்பது கெட்ட பழக்கம் என்கிற ஒழுக்கக் கோட்பாடு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வரை மதிப்புக்குரிய இடத்தில் இருப்பவர்கள் தங்களுடைய அந்த மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளவேனும் மது எதிர்ப்பை ஆதரிப்பார்கள் என்பதே நம்பிக்கை. அது கண்ணெதிர் உண்மையாகவும் இருக்கிறது.

      //டாஸ்மாக் மட்டும் மதுக்கடை இல்லையே...தனியார் மதுக்கடைகளும் இருக்கின்றனவே. அவை எல்லாம்?// - அரசே மூலை முடுக்கெல்லாம் கடை விரித்திருப்பதால் தனியார் கடைகள் அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவையும் இல்லாமலிருக்காது என்பதால்தான் அவற்றையும் கருத்தில் கொண்டுதான் கட்டுரையை எழுதியுள்ளேன். மதுவிலக்கு என்பது அரசு, தனியார் என இரு தரப்பினருக்கும் பொதுவானதுதான். அரசு மட்டும் விற்பனையைக் கைவிட வேண்டும் என்பதில்லை கட்டுரையின் கோரிக்கை. முழுமையான மதுவிலக்கு என்பதே வலியுறுத்தல். பரிந்துரைகள் பட்டியலில் மேலிருந்து ஐந்தாவது பரிந்துரையையும், கீழிருந்து இரண்டாவது பரிந்துரையையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தீர்களானால் தனியாருக்கும் சேர்த்துத்தான் இந்தப் பூட்டு என்பதை உணரலாம்.

      நீக்கு
    2. //முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியமா என்று தெரியவில்லை....வந்தால் நன்றாக இருக்கும்// - இதற்கு மேலே நண்பர் திரு.'தளிர்' சுரேஷ் அவர்களுக்கு அளித்துள்ள பதிலையே இங்கும் மறுமொழிகிறேன்.

      மது என்பது உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பிணைந்திருக்கிறது. ஒரே ஒரு குற்றம் கூட நடக்காத ஒரு குமுகத்தை (Society) உருவாக்குதல் என்பது எப்படி ஒரு நினைத்துப் பார்க்க முடியாத கனவாக நீடித்து வருகிறதோ அதே போலத்தான் ஒரு குடியர் கூட இல்லாத முழுமையான மதுவிலக்குக் குமுகம் என்பதும் ஒருபொழுதும் இயலாதது. ஆனால், அதற்காக அதுதான் இயலாத ஒன்றாயிற்றே என எல்லாரும் குடித்துச் சாகுங்கள் என அரசே ஊற்றிக் கொடுப்பதுதான் கொடுமை. அதுதான் வேண்டா என்கிறோம். ஏனெனில், அப்படிச் செய்வதால் குடிக்காதவர்கள் கூடக் குடிக்கிறார்கள். குடியர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. சட்டமீறல்களைத் தடுக்கவே முடியவில்லை என்பதற்காக எல்லாச் சட்டங்களையும் நீக்கி விடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதே போன்றதுதான் இதுவும். எனவே, அரசே விற்பது என்பதையும், மற்றவர்கள் விற்பதையும் தடுப்பது என்கிற வகையிலும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையே தவிர, அதனாலும் முழுக்க முழுக்க மதுவற்ற சமூகம் இயலாது என்பதே உண்மை! யாரோ சிலர் திருட்டுத்தனமாக விற்றுக் கொண்டுதான் இருப்பார்கள், அதை யாரோ பலர் வாங்கிக் குடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், குடிப்போர் எண்ணிக்கை குறையும், வெகுவாகக் குறையும். அது போதும். அதுவே முழு மதுவிலக்கு அடைந்த குமுகமாகத்தான் கருதப்படும், ஏற்றுக் கொள்ளவும் படும்!

      //மதுவை மட்டுமே நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்..எத்தனை பள்ளிக் குழந்தைகள் புகைப்பிடிக்கின்றார்கள்,....எத்தனை பேர் பான்பராக் உபயோகிக்கின்றனர்...பள்ளிக் குழந்தைகள் உட்பட...இவற்றிற்கெல்லம் தடை?// - உண்மைதான். ஆனால், புகை, பான்பராக் என எல்லா வகைகளிலும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நடுவணரசால் நன்றாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், மதுக்கு எதிராக அந்த அளவுக்கு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் போதையில் தள்ளாடுவதில்லை. அதற்கே மிகுதியான பணத்தைச் செலவிட்டு விட்டு வீட்டுக்குக் கொடுக்காமல் சோம்பித் திரிவதுமில்லை. போதையில் குற்றங்கள் புரிவதுமில்லை. எனவே, ஒப்பீட்டளவில் புகையிலைப் பொருட்கள் மதுவை விட நஞ்சானவையாக இருப்பினும், நடைமுறையளவில் அவற்றை விடப் பன்மடங்குக் கூடுதல் பாதிப்பை மதுதான் ஏற்படுத்துகிறது. அதனால்தான் இதை முதலில் ஒழிக்கப் பலரும் படாதபாடுபடுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இதுவும் தன்னலம்தான். "புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துகிறாயா? சரி, உன் உடம்பை நீ கெடுத்துக் கொள்கிறாய்; எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய். எப்படியோ ஒழி! ஆனால், மது அருந்தினால் உன்னால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எனவே குடிக்காதே!" என்பதுதான் இத்தகைய மதுவிலக்குப் போராட்டங்கள் மூலம் குமுகம் (society) சொல்லும் செய்தி, இல்லையா? ;-)

      மற்றபடி, நீங்கள் கூறியது போல், குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை உடனே விட முடியாது என்பதால் ஒரேயடியாக உடனடி மதுவிலக்கைக் கொண்டு வருவது பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதால்தான் படிப்படியாகக் கொண்டு வரும்படி நானும் வலியுறுத்தியிருக்கிறேன் கட்டுரையில். அந்த ஒத்த கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
    3. உங்கள் கருத்துகள் அத்தனையும் சரிதான் நண்பரே/சகோதரரே! மது ஒரு குடும்பத்தையே பாதிக்கத்தான் செய்கின்றது....புகைப் பூஞ்சுருள் கூடாது என்பது பற்றி ஒருவர் அதனால் பாதிக்கப்பட்டவர் கேரளத்தில் விழிப்புணர்வு, தனிமனிதராக ஏற்படுத்தி வருவதை ஒரு பதிவாகப் போட்டிருந்தோம். புகைப்பிடிப்பவரை விட எதிரில் இருப்பவருக்குத்தானே அதிக பாதிப்பு...கேரளத்தில் பொதுஇடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்று அது பின்பற்றப்படுகின்றது. ஆனால் மக்கள், அங்கு காடுகளும், தோட்டங்களும் அதிகம் என்பதால் காவலர் வருவது இல்லை என்பதால் அங்கெல்லாம் பிடிக்கத்தான் செய்கின்றார்கள்...நம் தமிழ் நாட்டில் இன்னும் சட்டம் இறுக்கப்படவில்லை....
      ஆம் உங்கள் கருத்துகள் படிப் படியாகத்தான் சொல்லுகின்றன...ஏதோ ஒரு ஆதங்கம்....இதே போன்று தான் கல்வி பற்றியும் ஆதங்கத்தை மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் கடிதம் போன்று எழுதினோம்....ம்ம் அரசு ஏதேனும் கொஞ்சம் அக்கறையுடன் செயல்பட்டால் நன்றாகத்தான் இருக்கும்....

      நன்றி நநன்றி! நல்ல கட்டுரை மீண்டும் வாசித்தோம்...இவை எல்லாம் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குக் கண்ணில் படாதோ என்ற ஒரு ஆதங்கம்தான்....

      நீக்கு
    4. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா, அம்மணி! எனக்கும் அதே ஆதங்கம்தான். எனக்கு மட்டுமில்லை, நம்மைப் போன்ற சமூக அக்கறைப் பதிவு எழுதும் அனைவருமே அப்படியோர் ஆதங்கத்திலும், அது நிறைவேறும் எனும் நம்பிக்கையிலும்தான் எழுதி வருகிறோம். ஆட்சியாளர்களும் அரசியலாளர்களும் இவற்றைப் பார்க்காவிட்டாலும், வருங்காலத் தலைமுறையினர் நம் எழுத்துக்களையெல்லாம் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாகப் புதியதொரு விடியலைக் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன், இல்லையில்லை நம்புவோம்!

      மீண்டும் வருகை புரிந்து, படித்து, கருத்திட்டமைக்கு நன்றி!

      நீக்கு
  6. எனக்கு டைம் கொடுங்க சகா! விரிவா பேசணும்:)

    பதிலளிநீக்கு
  7. first of all ஹப்ப்பா !!!!! எவ்ளோ நீளமான கட்டுரை!!!! மலைப்போடு தான் படிக்கதொடங்கினேன். ஆனா இந்த சோம்பேறி மைதிலியையும் ஒரு மூச்சில் படித்து முடிவைக்கிறது உங்க எழுத்து! வாழ்த்துகள் சகா!
    * அதற்காக அரசே குண்டர் படை ஒன்றை உருவாக்கி * நல்ல எடுத்துக்காட்டு சகா! நான் என் மாணவர்களிடம் இதுபற்றி பேசும்போதெல்லாம் இப்படி சொல்வேன்"குழந்தை தெருவில் விளையாடும் போது மண்ணை அள்ளி வாயில் போட்டுக்கொள்கிறது என்பதற்காக எந்த தாயாவது வீட்டிலேயே மண்ணை நன்றாக சலித்து, ஊட்டி விட்டுவார்களா என்ன?".

    *பிரிவுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ மின்சாரத்தையே நம்பி இயங்கும் இன்றைய உலகில் மின்சார உற்பத்தியில் ஒப்புயர்வில்லாத அளவுக்குப் பின்தங்கியுள்ள தமிழ்நாடு* நாம் அதானி விளமர் குழுமத்திடம் பெற்றுவரும் மின்னசாரத்தை பத்து மடங்கு விலை கொடுத்து தான் வாங்குகிறோமாம். ஆனால் அரசே அதை தயாரித்தால் முக்கால் பங்கு தொகையை மிச்சம் செய்ய முடியுமாம். இந்த லட்சணத்தில் அந்த குழுமம் நான்கு ஆண்டுகளாக அரசுக்கு நிலத்திற்கான வாடகை தொகையை கூட நிலுவையில் வைத்திருக்கிறதாம்.:((( இதெல்லாம் ஒரு புத்தகத்தில் படித்தேன். புத்தகத்தின் பெயர் மின்சார அரசியல் என ஞாபகம்.

    படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நீங்கள் செய்திருக்கும் பரிந்துரைகள், இந்த பிரச்சனையின் ஆழ, நீளங்களை எத்துனை நுட்பாமாக நீங்கள் அவதானித்திருக்கிறீர்கள் என காட்டுகிறது சகா! (ரொம்ப பேசீட்ட மைதிலி! he is yawning)

    மது விலக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில், உங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்கும் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகா!

      உண்மையில், வழக்கமாக நான் எழுதுவதை விட இஃது ஒரு பக்கம் குறைவுதான்! பரிந்துரைகள் நிறைய இருப்பதால் நீளமாகத் தென்படுகிறது. ஆனால், ஒரே மூச்சில் படிக்கும் அளவுக்கு என் எழுத்து நன்றாக இருப்பதாக நீங்கள் கூறுவது 'இவ்வளவு நீளமாக எழுதுகிறோமே' என ஒவ்வொரு முறையும் தோன்றும் சங்கடத்தைக் கொஞ்சம் தேற்றுவதாக உள்ளது.

      //* அதற்காக அரசே குண்டர் படை ஒன்றை உருவாக்கி * நல்ல எடுத்துக்காட்டு சகா!// - உண்மையில் இந்த எடுத்துக்காட்டைப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் கூறிப் படித்ததாக நினைவு. ஆனால், அவர் யாரென்று நினைவில்லை. இல்லாவிட்டால், பத்தியின் முடிவில் இதற்கான பாராட்டை அவருக்குத் திசை திருப்பியிருப்பேன். (அதாவது, அவருக்குக் கிரெடிட் கொடுத்திருப்பாராமாம்! பெரிய கலைச் சொல் ஆக்குநர்னு நெனப்பு!).

      //குழந்தை தெருவில் விளையாடும் போது மண்ணை அள்ளி வாயில் போட்டுக்கொள்கிறது என்பதற்காக எந்த தாயாவது வீட்டிலேயே மண்ணை நன்றாக சலித்து, ஊட்டி விட்டுவார்களா என்ன?// - அசத்தல்!!!

      //இந்த பிரச்சனையின் ஆழ, நீளங்களை எத்தனை நுட்பமாக நீங்கள் அவதானித்திருக்கிறீர்கள்// - நன்றி! மிக்க நன்றி!

      //ரொம்ப பேசீட்ட மைதிலி! he is yawning// - அறிவுரை கூறும்பொழுது கொட்டாவி விடுபவர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பாராட்டும்பொழுது யாராவது கொட்டாவி விட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது பனிக்கூழ் போல. எவ்வளவு சாப்பிட்டாலும் பிடிக்கும்.

      மற்றபடி, இப்பொழுதுக்கு மதுவிலக்கு இல்லை என ஆகிவிட்ட நிலையில் நான் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்! :-)) ஆனால், ஆட்சி மாற்றம் என நான் இங்குக் குறிப்பிடுவது கண்டிப்பாகத் தி.மு.க ஆட்சியை இல்லை.

      நீக்கு
  8. * (அதாவது, அவருக்குக் கிரெடிட் கொடுத்திருப்பாராமாம்! பெரிய கலைச் சொல் ஆக்குநர்னு நெனப்பு!).* ஹாஹாஹா:) நீங்க கிரெடிட் எடுத்துக்காட்டியும் உண்மையாவே கலைச் சொல் ஆக்குநர் தான்:)
    *இப்போது ஆகாத ஒன்று எப்போதும் ஆகாது என்பதில்லை என உணர்ந்தே அப்படி கூறினேன் சகா:) மீண்டும் வாழ்த்துகள் (சுதந்திரதின வாழ்த்துகளும்:)

    பதிலளிநீக்கு
  9. தமிழ் மணம் 4
    வணக்கம் நண்பரே சகோ மைதிலி கேட்டதைப்போல் எனக்கும் கொஞ்சம் நேரம் வேண்டும் மீண்டும் வருவேன் நன்றி
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பரே...

    //நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்//

    நண்பரே இதில் எமக்கு உடன் பாடில்லை 80தை முன்வைக்கின்றேன் எத்தனை எத்தனை உன்னதமான உயிர்களை இழந்தோம் மாற்றம் நிகழ்ந்ததா ? இல்லையே காரணம் என்ன ? மனிதன் மதுவின் மயக்கத்தில் வீழ்ந்து நன்றியுணர்வை கொன்று கொண்டு இருக்கின்றான்.
    மக்கள் மனதில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை வாழ்வில்.

    இருப்பினும் 46 ஆண்டுகளாக மதுவை எதிர்த்து போராடியே உயிரை விட்ட ஐயா திரு. சசி பெருமாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    சரி பெருமாள் அவர்களின் மறைவுக்கு முதல்வரிடமிருந்து இரங்கலா ? என்ன நண்பரே ? வேடிக்கையாக இல்லை இருப்பினும் மதுவை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையே ஆனால் ? தற்போது இதில் மாணவர்களை புகுத்தி சில அரசியல் கட்சிகள் ஆதாயம் காண நினைப்பது வேதனைக்குறியதே.. இதில் மாணவர்கள் ஜாக்கிரதையை கையாள வேண்டும் காரணம் நாளை அவர்களின் எதிர்காலம் பாதித்தால் இந்த சமூகம் அவர்களுக்காக போராடவோ, 6தல் சொல்லவோ முன் வராது
    (அது சசி பெருமாளும், முதல்வரும் போலவே)

    //கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் பலி, கள்ளச் சாராயம் அருந்தியதால் இத்தனை பேருக்குப் பார்வை பறி போனது//

    நண்பரே மது குடிப்பது நல்லதா ? கெட்டதா ? 80தை ஒரு அரசு சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவனுக்கு புத்தி எங்கே போயிற்று ?

    சாராயக்கடையை நடத்தும் அரசு நல்ல அரசா ? இதோ வரப்போகிறது தேர்தல் மக்கள் தீர்ப்பளிக்கப் போகின்றார்கள் பார்ப்போமே...
    பெரியவர்கள் எதற்கெடுத்தாலும் சொல்வார்கள் கலிகாலம் என்று அது உண்மையே பி.எஸ். வீரப்பா ஒரு சினிமாவில் சொல்வார் கேட்டிருப்பீர்கள்
    //இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்//
    என்று அது நிச்சயமாக நடக்கும் காரணம் இன்று முட்டாள்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே...... போகிறதே... ஆம் நடிகைக்கு கோயில் கட்டுகின்றான், உயிருடன் இருக்கும் மனிதனுக்கு காவடி எடுக்கின்றான் எதற்க்கு ? அவன் நடிக்கும் சினிமா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக.... இதைச் செய்பவனும் படித்த பட்டதாரியே....
    நண்பரே நான் அகம்பாவத்துடன் சொல்லிக்கொள்கிறேன் நான் படிக்காமலேயே இவ் வகைகளை முட்டாள்தனம் என்று கணிக்கும் எனது மூளைத்திறனுக்கு இறைவனுக்கு(ம்) நன்றி

    //அரசுக்கு வருமானம் குறையும்பொழுது மதுக்கடைகளைத் திறப்பதும், மகளிர் வாக்குத் தேவைப்படும்பொழுது மதுவிலக்கை அமல்படுத்துவதுமாக மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து ஆட்டிப் படைக்கும் ஆட்சி இயந்திரத்தின் அட்டூழியத்துக்கு இதுவே நிலையான முற்றுப்புள்ளியாக இருக்க முடியும்//

    உண்மை உண்மை 100க்கு100 உண்மை இது ஏன் ? மக்களுக்கு விளங்கவில்லை மூளை இல்லையா ?

    //புகழ் பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலைவர்கள் ஆகியோரைக் குடியின் கொடுமை பற்றிப் பேச வைத்துப் படமாக்கித் தொலைக்காட்சிகளின் விளம்பர இடைவேளைகளிலும், திரையரங்குகளில் இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கும் பொழுதும் ஒளிபரப்பலாம்//

    நண்பரே கிரிக்கெட் வீரர்?கள் மதுவுக்கு விளம்பரம் செய்வதை பார்த்ததில்லையா ? இவர்களுக்கு(ம்) ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

    நண்பரே அழகான முறையில் சட்ட வல்லுணர் போல விடயங்களை தொகுத்து வழங்கிய தங்களுக்கு எமது ராயல் சல்யூட்
    ஆனால் ? இவையெல்லாம் யாருக்குப் போய்ச் சேரவேண்டுமோ ? அவர்களுக்கு போகாது போனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கே..
    இருப்பினும் தங்களது சங்கு முழங்கியதே...

    அருமையான பொதுநலப்பதிவுக்கு எமது மனமார்ந்த நன்றி.
    எமது கருத்துகளில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை காரணம் நான் மனதில் பட்ட நியாயத்தை எழுதுபவன் தாங்கள் எமது நண்பர் என்பதற்காக மாற்றி எழுத மாட்டேன் அதேநேரம் தங்களது மனதை காயப்படுத்தி இருந்தால் எமது மன்னிப்பு கோரலையும் முன் வைக்கின்றேன்.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! முதலில் மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் இங்கு தேவையே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுகிறார்கள் என்கிற தவறான தகவலின் அடிப்படையில் நீங்கள் அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள். எனவே, இது குறித்துத் தங்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டியது என் கடமை!

      "மாணவர்களால்தாம் மதுவிலக்கைக் கொண்டு வர முடியும். எனவே, மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும்" என்று வை.கோ அவர்கள் அழைத்தது உண்மைதான். ஆனால், வை.கோ போன்ற மக்கள் போராட்டத் தலைவர்களுக்குத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியைக் கூடக் கொடுக்க முன்வராத இந்தத் தமிழ்ச் சமூகத்தில் அவர் ஒருமுறை அழைத்ததைக் கேட்டு இப்படி மாநிலம் முழுவதும் திகைத்துப் போகும் அளவுக்கு மாணவர் கலகம் ஒன்று வெடிக்க முடியுமா என்பதைத் தாங்கள் நடுநிலைக் கண்ணோட்டத்தோடு ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! ஆக, இப்பொழுது வெடித்திருக்கும் இந்த மாணவர் போராட்டம் எந்த ஒரு கட்சியின் தூண்டுதலாலோ, இயக்கத்தின் பின்புலத்தாலோ நடைபெறுவது கிடையாது. பெற்ற தகப்பன், கூடப் பிறந்த அண்ணன் - தம்பி எனத் தம் நேசம் சுமந்த உறவுகள் தங்கள் கண்ணெதிரே மது எனும் கொடிய நஞ்சால் கொஞ்சம் கொஞ்சமாய்ச் செத்து மடிவதைக் கண்டு பொறுக்க முடியாத பிள்ளைகளின் உள்ளக் குமுறலைச் சசிபெருமாள் அவர்களின் இறப்பு பீறிட்டு எழச் செய்து விட்டதன் வெளிப்பாடே இது. அந்த அளவுக்குத் தமிழ்நாடு மதுவால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைக் கட்சிகளின் தூண்டுதல் என்று கூறுவது போராடும் மாணவர்களின் பொதுமக்களின் வெந்த நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாகும்.

      //எத்தனை எத்தனை உன்னதமான உயிர்களை இழந்தோம் மாற்றம் நிகழ்ந்ததா?// - சரியாகப் பிடித்து விட்டீர்கள்! நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, மேற்படி வரியை எழுத முதலில் திட்டமிட்டபொழுது இதே கருத்து இடக்கு எனக்கும் ஏற்பட்டது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரை இழந்தோம் என்பது உண்மைதான். ஆனால், அதனால் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையே என்று எனக்கும் தோன்றிற்று. எனவே, "நம் சமூகத்தில் எந்த ஒரு விதயம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்" என்றுதான் அந்த வரியை எழுத இருந்தேன். ஆனால், மனதில் கட்டுரையை ஓட்டிப் பார்த்தபொழுது இந்த மாற்றத்தைச் செய்தவன், எழுதும்பொழுது மறந்துவிட்டேன்.

      //இதோ வரப்போகிறது தேர்தல் மக்கள் தீர்ப்பளிக்கப் போகின்றார்கள் பார்ப்போமே// - என்ன பெரிதாகத் தீர்ப்பளித்து விடுவார்கள் ஐயா? மதுவிலக்கை அமல்படுத்தாத அ.தி.மு.க-வைத் தண்டிப்பதாக நினைத்து மீண்டும் தி.மு.க-வை அரியணையில் அமர்த்துவார்கள், அவ்வளவுதானே? அதனால் என்ன பலன்? சொந்தமாக எத்தனையோ மது ஆலைகள் நடத்தும் அவர்கள் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்துவார்களா? தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த நம் மக்களுக்கு மனம் வரும் வரை இங்கு எதுவுமே மாறப் போவதில்லை என்பதே உண்மை!

      //இவையெல்லாம் யாருக்குப் போய்ச் சேரவேண்டுமோ ? அவர்களுக்கு போகாது// - இல்லை ஐயா! நான் இவை ஆட்சியாளர்களுக்கோ, அரசியலாளர்களுக்கோ போய்ச் சேருவதற்காக எழுதவில்லை. அப்படியே இஃது அவர்கள் பார்வைக்குப் போய்ச் சேர்ந்தாலும் அதனால் எந்த ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதும் நான் அறிந்ததே. இவற்றையெல்லாம் நான் எழுதுவது பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக; மாணவர்களின் பார்வைக்காக. காரணம், பொதுமக்களில் பலர் இந்த மதுவிலக்குப் போராட்டங்களை அவ்வளவாக வரவேற்கவில்லை. "இது தேவையில்லாத முயற்சி. டாசுமாக்கை மூடி விட்டால் தமிழ்நாடே நொடித்துப் போய்விடும். அப்படியே மூடினாலும் கள்ளச் சாராயம் பெருகும். மாநிலத்தில் பெரும்பான்மையோர் குடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இனி இதை மூடுவது நடக்காது" எனக் கருதுகின்றனர். போராடும் மாணவர்களோ ஒரே இரவில் மொத்த மதுக்கடைகளையும் மூடிவிட வேண்டும் எனப் புரியாமல் வலியுறுத்துகின்றனர். நான் மதிக்கும் தலைவர் வை.கோ அவர்களும் அதையே வழிமொழிகிறார். இது மிகத் தவறான, கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கை! எனவேதான், பொதுமக்களுடைய, போராடும் மாணவச் செல்வங்களுடைய பார்வைக்காக இதை எழுதினேன். மாணவ இயக்கங்களின் முகநூல் பக்கங்கள் எனக்குத் தெரியும் என்பதால் இதை நேரடியாகவே அவர்களுக்கு அனுப்பியும் இருக்கிறேன். எனவே, இது செவிடன் காதில் ஊதிய சங்காகாமல் கருத்துச் செவிட்டுத்தன்மையைப் போக்கும் சங்கொலியாகவே இருக்கும் என நம்புகிறேன்!

      உங்களுடைய விரிவான கருத்துரைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. விளக்கவுரைக்கு நன்றி நண்பரே...
    மாணவர்களை உசுப்பேற்றி விட்டு அரசியல் கட்சிகள் பின் வாங்கி விடுவார்கள் 80தையே நான் வலியுருத்துகிறேன் வேண்டாம் என்பதாக அர்த்தமல்ல முன் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
    நாளைய இந்தியா யார் கையில் இருக்கிறது மாணவர்கள் கையில்தானே இதைத்தானே ஐயா திரு. அப்துல் கலாம் அவர்களும் சொன்னார்.
    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பிட்ட கட்சிகள் பின்வாங்கினாலும் சரி, கடைசி வரை மாணவர்களோடு நின்றாலும் சரி, சட்டத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக இங்கு எந்தக் கட்சியாலும் அந்த மாணவர்களைக் காப்பாற்றி விட முடியாது என்பதே உண்மை. ஆளுங்கட்சி அப்படிப்பட்ட சட்டங்களின் கீழேதான் அந்த மாணவர்களைக் கைது செய்வதாகத் தெரிகிறது. நாளைய இந்தியா இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நாம் "அதற்காக மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்கிற பொருளில் மட்டும் அதைப் புரிந்து கொள்வது நல்லது இல்லை. "நாளைய இந்தியா இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. எனவே, இவற்றையெல்லாம் மாற்ற அவர்கள்தாம் களத்தில் இறங்க வேண்டும்" எனும் பொருளிலும் அதைப் புரிந்து கொள்ளலாம் இல்லையா? :-)

      பதில் கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  12. கள்ளச் சாராயத்தை ஒழிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் முடியாததால்தான் அதற்கு நிலையான ஒரு தீர்வு காணும் நோக்கில் (!) அரசே மலிவு விலையில் தரமான மதுவை விற்க முடிவெடுத்து டாஸ்மாக் எனும் அரசுப் பிரிவின் மூலம் அதைச் செயல்படுத்தியது. இந்த முறையற்ற முடிவு இன்று ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது உண்மைதான் என்றாலும், மறுபுறம் அதனால் கள்ளச் சாராயம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்! //

    இந்த கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை தோழரே. கள்ள சாராயத்தை ஒழித்ததில் அரசின் இரும்பு கரம் எவ்வாறு செயல் பட்டது என்று தெரியுமா. எங்கள் ஊரில் எனது உறவினர் ஒருவர் அவருடைய பழைய தொழில் கள்ள சாராயம் காய்ச்சுவது. ஒருநாள் காவல் துறை ஏட்டு ஒருவர் வந்து ஆய்வாளர் பார்க்க விரும்புவதாக அழைப்பு வந்தது. அங்கே சென்று பார்த்த போது அந்த ஆய்வாளர் மீண்டும் சாராயம் காய்ச்ச தன்னை பணித்ததாகவும் நெடுநாள் சிறையில் இருந்த காரணத்தால் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்து ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகள் இருக்கும்.

    ஆக, ஒவ்வொரு காவல் துறை ஆய்வாளரின் எல்லையிலும் அவர் கண் அசைவு இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதை நன்றாக புரிந்து கொண்ட சாராய சாம்ராஜ்யத்தை தாங்களே நடத்தும் ஆளும் அரசு போட்ட உத்தரவு என்ன தெரியுமா . கள்ள சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கபட்டால் காவல் துறை ஆய்வாளர் பணி நீக்கம் செய்யபடுவார் என்று சுற்றறிக்கை ஒவ்வொரு காவல் ஆய்வாளருக்கும் சென்றது. அதுவே கள்ள சாராயம் காய்ச்சுவது தடுத்து நிறுத்த மிக பெரிய காரணம். அரசு சாராய தொழிலை விட வேண்டும். இவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது எப்படி இரும்புக்கரம் கொண்டு அழித்தனரோ அப்படி மதுவிலக்கு அமலில் இருக்கும் போதும் ஆய்வாளர்களுக்கு உத்தரவு இருந்தால் கள்ளச்சாராயம் அழிந்து விடும். யாரோ ஒருசிலர் வேண்டுமானால் தேடி சென்று குடித்து செத்து மடிவர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் பலிகடா ஆக வேண்டிய அவசியம் இல்லை.

    இவர்கள் விற்கும் விலை குறைந்த சாராயம் கள்ள சாராயம் போன்றே மிகவும் ஆபத்தானது. இங்கே விற்கப்படும் சரக்குகள் தரமானதாக இல்லை. முதலில் அரசு சாராயம் விற்கும் தொழிலை விட்டு படி படியாக விற்பனையை குறைத்து சமூக சீரழிவில் இருந்து நாட்டை காக்க தவறினால் பேரழிவை சந்திக்க நேரிடும்.

    இங்கே சாராயம் விற்பதை தடுக்க முயல்பவர்கள் கிரிமினல்கள் போல் நடத்த படுகிறார்கள். ஒரு பேரறிஞர் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. When exposing a crime is treated as committing a crime, you are ruled by criminals.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! சமூக அக்கறை வெளிப்பட எழுதும் உங்கள் முதல் வருகைக்கு முதலில் என் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அடுத்து, உங்கள் சிறப்பான விரிவான கருத்துரைக்கு என் நன்றி!

      கள்ளச் சாராயம் மட்டும் இல்லை ஐயா! நாட்டில் எல்லாக் குற்றங்களுமே காவல்துறைக்குத் தெரிந்துதான் நடக்கின்றன. கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமில்லை, மற்ற எல்லா வகைக் குற்றவாளிகளுமே இப்படி அந்தந்த ஊர்க் காவல்துறையினரால் குறிப்பிட்ட குற்றத்தைத் தொடர்ந்து செய்ய ஊக்குவிக்கப்பட்டு அதனால் கிடைக்கும் மாமூலில்தான் காவலர்கள் கொழுக்கிறார்கள். உங்கள் கருத்தில் எனக்கு மாறுபாடே இல்லை.

      இன்னும் சொல்லப் போனால், கள்ளச் சாராயம் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது என்கிற பொருள் வரும்படி நான் எழுதியதே தவறு. மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலமான குசராத்தை விடத் தமிழ்நாட்டில்தான் கள்ளச் சாராயச் சாவுகள் கூடுதல் என்று ஒன்றுக்கு இரண்டு முறை ஆனந்த விகடன் புள்ளி விவரங்களோடு அறிவித்திருக்கிறது. நாளிதழ்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் இப்பொழுதெல்லாம் கள்ளச் சாராயச் சாவுகள் பற்றிச் செய்திகள் ஏதும் வரக் காணாமையால் அப்படி எழுதி விட்டேன். உடனே, அக்கருத்தை நீக்கி விடுகிறேன்.

      //இவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது எப்படி இரும்புக்கரம் கொண்டு அழித்தனரோ அப்படி மதுவிலக்கு அமலில் இருக்கும் போதும் ஆய்வாளர்களுக்கு உத்தரவு இருந்தால் கள்ளச்சாராயம் அழிந்து விடும். யாரோ ஒருசிலர் வேண்டுமானால் தேடி சென்று குடித்து செத்து மடிவர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் பலிகடா ஆக வேண்டிய அவசியம் இல்லை// - உண்மை! முழுக்க முழுக்க உண்மை!

      கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
    2. எல்லோருடைய கருத்துக்களையும் படித்து பதில் பதிவு செய்யும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது தோழரே. நன்றி

      நீக்கு
    3. நன்றி ஐயா! ஆனால், மிகப் பெரும்பாலான பதிவர்களும் அப்படித்தான் ஐயா!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்