.

புதன், அக்டோபர் 21, 2015

காந்தியவாதி டேவிட் ஐயாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்ன?



David Aiya - Gandhiyan Activist


ழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.

காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் பதிலாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் டேவிட் ஐயா கடந்த 11.10.2015, ஞாயிறு அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.

ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர் விடுதலை, தனி ஈழம் போன்ற சர்ச்சைக்குரிய எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் ராஜசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும், பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.

ஆனால், இப்படி முழுவதும் மக்கள் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய
இந்த மாமனிதரை சிங்கள அரசு, ஈழ விடுதலைப் போராளிகளைச் சந்தித்ததை ஒரு சாக்காக வைத்துத் தீவிரவாத முத்திரை குத்திச் சிறையில் தள்ளியது. சிறையில் தானும் மற்ற தமிழர்களும் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி இவர் கூறுவதைப் படித்தால் தமிழர் அல்லாதவர்க்கும் கடும் சீற்றம் பிறக்கும். (படிக்க: டேவிட் ஐயா – தமிழ் மக்களின் துயர் தீர்க்க காந்திய வழியில் போராடிய அறப் போராளி).

David Aiya - the last momentசமூகச் சேவை செய்த ஒரே குற்றத்துக்காக மேற்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்ட இந்தப் பெருமனிதர் அன்று இடப்பட்ட அந்தத் தீவிரவாதி எனும் முத்திரை கடைசி வரை மங்காமல் மறையாமல் 90 வயதிலும் ‘அபாயமானவர் பட்டியலி’லேயே வைக்கப்பட்டிருந்து, அந்த அடையாளம் மாறாமலே இதோ நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

இந்த மனிதர் செய்த குற்றம்தான் என்ன? தன் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டதா? படிக்காத மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் அளித்ததா? காந்தியத்தைப் பரப்ப முயன்றதா? காந்திய வழியில் தன் மக்களை முன்னேற்ற முடியும் என்று நம்பியதா? “ஈழத் தமிழர்கள் என்ன காந்திய வழியிலா போராடினார்கள்” என்று மீண்டும் மீண்டும் கேட்டு, வயிற்றிலிருந்த தளிர் முதல் தலை நரைத்த கிழம் வரை எந்தப் பாகுபாடும் இல்லாமல் துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இனப்படுகொலையை நியாயப்படுத்த முயல்பவர்களே! இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? இவர் என்ன தனிநாடு கேட்டாரா? தன்னாட்சி கோரினாரா? அரசுக்கு எதிராகக் கலகங்கள் தூண்டினாரா? புரட்சி செய்தாரா? போர்க்கொடி தூக்கினாரா? ஒன்றுமே இல்லை!

குற்றம் எனச் சொல்ல வேண்டுமானால், காந்தியவாதியான இவர், கூடவே ஆயுதப் போராளிகளோடும் தொடர்பு கொண்டிருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவியதைச் சொல்லலாம். ஆனால், அது கூட மனிதநேயத்தின் அடிப்படையில் அவர் செய்த ஓர் உதவிதானே தவிர, மற்றபடி ஆயுதப் போராளிகளை அவர் ஆதரிக்கவோ அவர்கள் வழியைப் பின்பற்றவோ இல்லை. தன்னளவில் அவர் எப்பொழுதும் காந்தியவாதியாகவே இருந்தார். ஆனால், அப்படிப்பட்டவருக்கு இலங்கை சிங்கள அரசு அளித்த அடையாளம் ‘தீவிரவாதி’! இதற்கே இவருக்கு இந்த நிலைமை எனில், இன்னும் காந்திய வழியில் விடுதலை வேறு கேட்டுப் போராடியிருந்தால் இவர் நிலை என்ன?

மற்றவர்களைப் பொறுத்த வரை வேண்டுமானால், டேவிட் ஐயா ஈழத் தமிழர்களின் காந்திய முகமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை, அவர் சிங்களர்களின் ஈவிரக்கமற்ற குணத்துக்கு முன்னால் காந்தியம் எப்பேர்ப்பட்ட தோல்வியைத் தழுவும் என்பதற்கான நடமாடிய எடுத்துக்காட்டு!

இப்படி, ஈழத்து காந்தி செல்வநாயகம் அவர்கள் முதல் காந்தியம் டேவிட் அவர்கள் வரை இலங்கையில் தமிழர்களுக்காக காந்திய வழியில் போராடிய தலைவர்கள் அனைவரும் தோல்வியாளர்களாகவே வரலாற்றில் நிலைபெற்றிருக்க, நாம் மறுபடியும் மறுபடியும் விடுதலைப்புலிகளின், ஈழத் தமிழர்களின் போராட்ட முறையை “என்ன இருந்தாலும் ஆயுதப் போராட்டம்தானே?” எனப் போகிற போக்கில் இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலான காந்தியம், அறம் என எனக்குப் புரியவே இல்லை.

ஈழப் போராட்டம் பற்றி ஓரளவாவது அறிந்த யாருமே இரண்டு சிறை நிகழ்வுகளைப் பற்றிக் கண்டிப்பாய்க் கேள்விப்பட்டிருப்பார்கள்.

முதலாவது, வெலிக்கடைச் சிறை இனவெறித் தாக்குதல்!

தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்டே தொடுக்கப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலில்தான் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலான ஏராளமானோர் மிகக் கொடூரமான முறையில் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர். வாய் வார்த்தையாகக் கேட்டால் கூட உள்ளத்தை நடுங்கச் செய்யும் இந்தக் கொடிய நிகழ்வில் தானும் கொல்லப்பட இருந்தபொழுது கடைசி நொடியில் நல்லவேளையாகத் தப்பிய டேவிட் ஐயா, அங்கிருந்து மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்பொழுதுதான் நடந்தது, ஈழ வரலாற்றின் அடுத்த முதன்மைச் சிறை நிகழ்வான மட்டக்களப்புச் சிறை உடைப்பு!

தமிழர்கள் மீது அன்றைய சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலையால் எங்கெங்கும் தமிழரின் உயிர் ஓலம் எதிரொலித்த அந்த நேரத்தில், அதுவரை சிங்களர்கள் அடித்தாலும் மிதித்தாலும் கொன்றாலும் கொளுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே முயன்று வந்த தமிழர் கரங்கள் முதன் முறையாக வேறு வழி இல்லாமல் திருப்பி அடித்தன! அதன் ஒரு பகுதியாக, வெலிக்கடையில் நடந்தது போலவே மட்டக்களப்பிலும் தமிழர் குருதி மீண்டும் பெருக்கெடுக்காதிருக்க அந்தச் சிறை தமிழ்ப் போராளிகளால் தகர்க்கப்பட்டுக் கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர். அதில் உயிர் பிழைத்தவர்களில் ஐயாவும் ஒருவர்.

இவ்வாறு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் காந்தியத்தின் தோல்வி, இலங்கை ஆட்சியாளர்கள் அந்தக் காலத்திலேயே எப்பேர்ப்பட்ட இனவெறி கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றான வெலிக்கடைச் சிறைத் தாக்குதல், எப்படிப்பட்ட கையறு நிலையில் வேறு வழியேயில்லாமல் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள் என்பதற்குச் சான்றான மட்டக்களப்புச் சிறையுடைப்பு எனத் தமிழீழ வரலாற்றின் தலையாய மூன்று திருப்புமுனைகளுக்குக் கண்கூடான சான்றாளராய் நம்மிடையே இத்தனை ஆண்டுக் காலமாக வாழ்ந்து வந்த டேவிட் ஐயா, இவையெல்லாம் முறைப்படி விசாரிக்கப்பட்டு உலக சமுதாயத்தின் முன்னால் உறுதிப்படுத்தப்படும் முன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது பெரும் வேதனை!

ஐயா அவர்களைப் பற்றி நான் முதன் முதலில் அறிந்தது ஆனந்த விகடன் மூலமாகத்தான். செய்தியாளர் அருள் எழிலன் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலில் கேட்போர் உளம் உருகும் தன் வரலாற்றை எடுத்துரைத்த ஐயா அவர்கள், நடந்து முடிந்த அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னிடமிருந்த நூல்களைப் பற்றித்தான் கவலையுடன் குறிப்பிட்டார். ஒன்றில்லை இரண்டில்லை, ஆயிரத்து ஐந்நூறு தமிழ் நூல்களை அவர் பாதுகாத்து வந்தார்!

விடுதலை பெற்ற தமிழீழ நூலகத்தில் தன் நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் விடுதலையடைந்த ஈழத் தமிழ் மண்ணில் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும்தாம் அவருடைய கடைசி விருப்பங்களாக இருந்தன. ஆனால் இதோ, வரலாறு காணாத தமிழினப் பெரும்படுகொலையால் சிவந்து போயிருக்கும் இலங்கை மண்ணின் நிறம் மாறும் முன்பே கிளிநொச்சியில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது! மிஞ்சியிருப்பது தன் நூல்கள் பற்றிய அவருடைய விருப்பம் மட்டும்தான். அதையாவது நாம் நிறைவேற்றி வைக்கலாமே?

தற்பொழுது தமிழ்நாடு அரசின் ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ 2016 - பொங்கல் திருநாளுக்குள் ஒரு இலட்சம் நூல்களை மின்னுருவாக்கும் அரும்பெரும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடெங்கும் அரிய நூல்களை எல்லோரிடமிருந்தும் தேடிச் சேகரிக்கும் பெருமுயற்சியை அந்நிறுவனம் முடுக்கி விட்டிருப்பதாக அண்மையில் ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’இல் பேசிய அந்நிறுவன உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் அறிவித்தார். முறைப்படி அரசு அறிவிப்பாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் நூல்கள் நிலைபேறு அடைய இப்படியொரு சிறப்பான முயற்சியில் இறங்கியிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம், ஈழத் தமிழர்களுக்காக அறவழியில் பாடுபட்ட காந்தியவாதி டேவிட் ஐயாவின் அரிய நூல்களையும் தங்கள் திட்டத்தின் கீழ்ச் சேர்த்துக் கொண்டு அந்த நூல்களை அழியாமல் பாதுகாக்க முன் வர வேண்டும் என மிகவும் பணிவன்போடு வேண்டுகிறேன்! சொல்ல முடியாது, ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஒருவேளை யாழ் நூலக எரிப்பில் நாம் இழந்த அரிய நூல்களில் ஏதேனும் கூட ஐயா அவர்களின் சேகரிப்பில் இருக்கலாம். அப்படி இருந்தால், தமிழர் வரலாற்றிலேயே மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படும் அந்த நிகழ்விலிருந்து பிழைத்த ஒரு நூலையாவது தமிழ் இணையக் கல்விக்கழகம் மின்னுருவாக்கம் செய்து விடுமானால், அந்நிறுவனத்துக்கு அதை விடப் பெரும் புகழ் சேர்க்கக்கூடியது வேறேதும் இருக்க முடியாது. எனவே, நிறுவனத்தினர் உடனே இதற்கான முயற்சியில் இறங்க முன்வர வேண்டும்!

தமிழருக்காகவும், காந்தியத்துக்காகவும் தன் வாழ்க்கையையே காணிக்கையாக்கி விட்ட இந்த மாமனிதரின் இறுதி விருப்பங்கள் இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. நம்மால் இயன்ற இந்த இன்னொன்றையாவது நிறைவேற்றலாமே? கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதை விட ஒரு மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி வேறென்ன இருக்க முடியும்? எனவே தமிழ்நாடு அரசே! தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரே! தமிழ்த் தலைவர்களே! அருள் கூர்ந்து இதற்கு ஆவன செய்யுங்கள்! 

(நான் அகரமுதல தனித்தமிழ் இதழில் 20.10.2015 அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀


படங்கள்: நன்றி வெளிச்சவீடு, தமிழ்வின்.

உசாத்துணை: நன்றி அகரமுதல, விக்கிப்பீடியா, ஈழம் செய்திகள், ஆனந்த விகடன், திண்டுக்கல் தனபாலன்

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. காந்தியவாதி திரு. டேவிட் ஐயாவைப் பற்றிய விடயங்கள் தங்களின் மூலம் அறிந்தேன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்
    தங்களின் கோரிக்கையும் நியாயமானதே நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஐயா வணக்கம்.

    சாலமன் டேவிட் ஐயா குறித்து அவர் மரணத்தினூடாகத்தான் நான் அறிய நேர்ந்தது என்பது சொல்லுதற்கு அவமானமாய்ச் சுடுகிறது.

    விகடன் கட்டுரையை நான் பார்க்கவில்லை.

    வளமான வாய்ப்புகள் இருந்தும், வசதிகள் சேவகம் செய்யக் காத்திருக்கும்போதும்,நாடென்றும் மொழியென்றும் இனமென்றும் எல்லாம் இழந்து அலைந்த ஒரு கூட்டம், ஏமாளியாய் ஏதிலியாய் எள்ளப்படுவராய் அச்சமுதாயத்தாலேயே பார்க்கப்படுவது என்பது எவ்வளவு துயரகரமானது?

    இந்த மரணம் அவருக்கு அமைதியையும் நாணமற்ற இந்தச் சமுதாயத்திற்குச் சிறுதேனும் வெட்கத்தையும் தரட்டும்!

    நூற்களின் அருமை அதைத் தேடித் தொகுப்பவர்க்கே தெரியும்.

    அவரது சேகரிப்புக் காக்கப்பட வேண்டும்.

    அவரது கனவு இந்தக் கட்டுரை வழியாக உரியோர் கவனத்தைச் சென்றடையட்டும்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விரிவான, உணர்ச்சிமிகு கருத்துக்கு மிக்க நன்றி ஐயா! எல்லா இருட்டுக்குப் பிறகும் வெளிச்சம் ஒன்று வந்தே தீரும் என நம்புவோம்! காத்திருப்போம்! நன்றி!

      நீக்கு
  3. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  4. நன்றி யாழ்பாவாணன் ஐயா! தங்களுக்கும் தங்கள் சுற்றத்தாருக்கும் கூட என் அன்பான நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. //“தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர் விடுதலை, தனி ஈழம் போன்ற சர்ச்சைக்குரிய எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். // என்ன நல்லதொரு சிந்தை இல்லையா சகோ?!! எவ்வளவு அரும்பணி ஆற்றியிருக்கின்றார். இப்போதுதான் அறிய நேருகின்றது சகோ. தங்களின் பதிவு வழி. அவரது நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. உங்களது வேண்டுகோளை செவிமடுக்க வேண்டியவர்கள் செவிமடுக்க வேண்டும். நம்புவோம். அருமையான பதிவு டேவிட் ஐயாவைப் பற்றிய பதிவு. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

    உங்களது இந்தப்பதிவுமே இப்போதுதான் காண நேர்ந்தது. தங்களின் பதிவுகளை மின் அஞ்சல் வழியாகப் பெற வழி செய்திருந்தும் ஏனோ வரவில்லை.

    மிக்க நன்றி சகோ..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! அம்மணி! உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! ஏதோ என்னால் முடிந்த ஓர் அஞ்சலியாக இதைச் செய்தேன்.

      மின்னஞ்சல் வழிச் சிக்கல் பற்றி உடனே கவனிக்கிறேன்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்