.

வெள்ளி, மே 12, 2017

மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு (நீட்) – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்

NEET Atrocities

ருத்துவப் பொதுநுழைவுத் தேர்வே கொடுமை என எல்லாரும் புலம்பிக் கொண்டிருக்க, அது நடத்தப்பட்டுள்ள விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது!

நீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு காரணமாகத் தேர்வு வளாக வாசலிலேயே சட்டையைக் கிழித்துக் கொடுத்து விட்டுக் கந்தல்கோலமாகப் போனதைப் பார்த்தோம். இதன் உச்சக்கட்டமாக, கேரளத்தில் மாணவி ஒருவர் சோதனையின் பெயரால் தன் உள்ளாடையைக் கழற்றும்படி பணிக்கப்பட்டிருப்பது நாட்டையே கொதிக்கச் செய்திருக்கிறது!

இதை விடச் சிறப்பான ஒரு தேர்வுமுறை உலகின் வேறு எந்த நாட்டிலாவது இருக்க முடியுமா? இதை விட மரியாதையாக ஒரு நாடு தன் மக்களை நடத்தத்தான் முடியுமா?

ஆனால், நம் பா.ஜ.க., பெருமக்களின் பேச்சுத் திறமைக்கு முன் இவையெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை. “அரசா அப்படி நடக்கச் சொன்னது? தேர்வுப் பரிசோதகர்களில் யாரோ சிலர் செய்த தவற்றுக்கு அரசை எப்படிக் குற்றம் சொல்லலாம்?” என்பார்கள் அவர்கள் இப்பொழுதும். நடுவணரசுப் பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) இதையே ஒரு விளக்கமாகவும் கூசாமல் கொடுத்திருக்கிறது, "பரிசோதகர்களில் யாரோ சிலர் ‘ஆர்வமிகுதியால்’ எல்லை மீறிவிட்டார்கள்" என்று. 

அட அறிவார்ந்த பெருமக்களே! ஆடையில் பெரிய பொத்தான்கள் இருக்கக்கூடாது என்கிற வரைக்கும் தீவிரமான நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்து அவ்வளவு கறாராக இந்தத் தேர்வை நடத்தச் சொன்னது யார்? அந்த அளவுக்குக் கடுமையான முறையை இந்தத் தேர்வில் கடைப்பிடிக்கச் சொன்னதுதானே இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் காரணம்? எனில், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது யார்? பாகிஸ்தான் அரசா?

The South Indian Female Medical Students who faced Mental Agony because of NEET checkings

நடந்த இந்தத் தேர்வில், படிக்கிற மாணவர்கள் சோதனை எனும் பெயரால் தீவிரவாதிகளைப் போல ஆய்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்! அடிமைகளைப் போல் நடத்தப்பட்டிருக்கிறார்கள்! பெண்கள் உளவியல் அளவில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்! முதல் முறை நடத்திய தேர்விலேயே நாட்டையே தலைக்குனிய வைத்து விட்ட இந்தப் புதிய முறைதான் ஈடு இணையற்ற மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தி விடப் போகிறது; வருங்கால மருத்துவர்களையே மனநோயாளியாக்கி விடக்கூடிய இந்தக் கல்விக் கொள்கைதான் நோயற்ற பாரதத்தைப் படைத்து விடப் போகிறது எனவெல்லாம் இந்த பா.ஜ.க., மாண்புமிகுக்கள் கூறுவதை நாம் இன்னும் நம்பினால் நம்மை விடப் பித்துக்குளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

நீங்கள் கேட்கலாம், “தேர்வு நடத்தப்பட்ட விதம் தவறு என்பதற்காக இந்தத் தேர்வே தவறு என எப்படிச் சொல்ல முடியும்?” என்று.

சரி, இதை விடுங்கள்! மருத்துவப் படிப்புக்கான இந்தப் பொதுநுழைவுத் தேர்வினால் என்னவெல்லாம் கெடுதிகள் ஏற்படும் எனக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் பக்கம் பக்கமாகப் பட்டியலிடுகிறார்களே! அவற்றுக்கு என்ன பதில்? கல்வியாளர்கள் தவறு எனச் சொல்ல சொல்ல மதிக்காமல் ஓர் அரசு கல்வித்துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால், அப்படிப்பட்ட அரசின் நோக்கம்தான் என்ன? சிந்திக்க வேண்டாவா? மருத்துவப் படிப்புக்குப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்தால், 
ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகும்
ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறாமல் போகும்
தாய்மொழி வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்புப் பயில முடியாமல் போகும்
நடுவணரசுப் பாடத் திட்டத்தைத் (CBSE) தவிர மற்ற பாடத்திட்டங்களில் படித்தவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை உருவாகும்
மருத்துவக் கல்வி பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இதனால் முழுக்க முழுக்க நடுவணரசின் கைக்குப் போவதால் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக் காலம் அரசுப் பணி புரிய வேண்டும் என்பது போன்ற மாநில அரசின் கட்டுப்பாடுகள் தளர்ந்து வெளிநாடுகளுக்குப் பறக்கும் மருத்துவர் எண்ணிக்கை உயரும்
எனவெல்லாம் பெரிய பெரிய குண்டுகளைத் தூக்கிப் போடுகிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், இவற்றில் எதற்குமே வாய் திறக்காமல் “நான் நுழைவுத்தேர்வு வைக்கத்தான் செய்வேன். முடிந்தால் எழுது! இல்லாவிட்டால் போ!” எனச் சொல்லாமல் சொல்கிறது அரசு.

பொதுமக்களான நாமும் ‘தேசியமய அடிப்படையிலான எல்லாத் திட்டங்களையுமே தமிழ்நாட்டினர் எதிர்க்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் இதுவும்’ என நினைக்கிறோம். நம்மைப் பொறுத்த வரை, தேசிய அளவிலான எல்லா முயற்சிகளும் சரியானவை. மாநில அளவிலான எல்லாச் சிந்தனைகளும் குறுகிய மனப்பான்மை!

நான் பெரிய கல்வியாளனோ, சிந்தனைச் சிற்பியோ இல்லை. எனவே, நீட் தேர்வு சரியா தவறா எனக் கருத்துக் கூறும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவன் எனும் தகுதியின்பால், இந்நுழைவுத் தேர்வை வலியுறுத்தும் அரசிடமும் மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

நீங்கள் எல்லாரும் கூறுகிறபடி, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நல்லது என்பதாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால், மருத்துவக் கல்விக்குள் நுழைய ஏற்கெனவே இருக்கும் படிநிலைகள் போதாதென இப்படிப் புதிதாக மேலும் படிநிலைகளைக் கொண்டு வருகிற அளவுக்கு நம் நாட்டில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு (Basic Medical Status) உயர்ந்திருக்கிறதா? இதுதான் என் கேள்வி!

இது என்ன கேள்வி? நாட்டின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புக்கும் மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையே 80 விழுக்காட்டுக்கும் மேல் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாட்டில் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆட்களை எப்படித் தெரிவு செய்வார்கள்? பட்டப் படிப்பு முடித்திருக்கிறாரா, முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாரா எனவெல்லாமா பார்ப்பார்கள்? இல்லை! குறைந்தது பள்ளிக் கல்வி முடித்தவராக இருந்தால் கூடப் போதும் ஆசிரியராகி விடலாம் என்பதாகத்தான் தகுதி வரையறையை வைத்திருப்பார்கள். மாறாக பட்டப் படிப்பு, பல்கலைக்கழகச் சான்றிதழ், முன் அனுபவம் என ஆயிரத்தெட்டுத் தகுதிகள் இருந்தால்தான் கல்வித்துறையிலேயே நுழைய முடியும் என வைத்தால் அந்நாடு என்னாகும்? நினைத்துப் பாருங்கள்!

அப்படித்தான் இதுவும். இந்தியாவின் இன்றைய மக்கள்தொகை 134 கோடி! ஒரு நாட்டில் இத்தனை பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என ஓர் அடிப்படைக் கணக்கு இருக்கிறது. அத்தனை மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்களா என்பது அப்புறம். முதலில் இத்தனை கோடிப் பேருக்குத் தேவையான மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

India the Great - Patients are in big queue and Number of Doctors are unsufficient

“பொதுமக்களின் உடல்நலம் தொடர்பாகப் பல்வேறு சவால்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 2015-இல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் முதல் வரியே என்ன தெரியுமா? “உலகின் மொத்த நோய்ச் சுமையில் 21 விழுக்காட்டை இந்தியாதான் சுமக்கிறது” என்பதுதான். “உலகிலேயே பேறுகால இறப்பு, குழந்தைகள் இறப்பு, பச்சிளம் குழந்தை (newborn) இறப்பு ஆகியவற்றில் இந்தியாதான் உச்சத்தில் இருக்கிறது” என்பது இதை விடத் திகைப்பான அடுத்த வரி! (சுருக்க அறிக்கையின் முழு வடிவம் இங்கே!).

அவ்வளவு ஏன், கடந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆணையம் (Medical Council of India) வெளியிட்டுள்ள அறிக்கையே, “இந்தியாவில் 1674 நோயாளிகளுக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்” என்கிறது. (பார்க்க: இந்தியா டுடே). இந்தியாவில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என்பதற்கு இதை விடச் சான்று தேவையா?

இப்படிப்பட்ட ஒரு நாட்டில், மருத்துவம் படிக்க மேலும் மேலும் படிநிலைகளைக் கூட்டிக் கொண்டே போவது முட்டாள்தனம் இல்லையா? பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றால் போதாது, அதில் பெற்றிருக்கும் தகைவு மதிப்பெண் (cut off mark) போதாது, கூடுதலாக நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்களே, இதை விடக் கிறுக்குத்தனம் உண்டா? மருத்துவப் படிப்புக்கு இத்தனை படிநிலைகள் வைத்து வடிகட்டி மாணவர்களைத் தேர்வு செய்யும் அளவுக்கா இந்நாட்டில் மருத்துவர் எண்ணிக்கை உயர்ந்து கிடக்கிறது? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டா?

அட, இந்தப் புள்ளிவிவரங்கள், துறைசார்ந்த அறிக்கைகள் போன்றவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள்! இன்னும் எளிமையாகப் பார்ப்போம்.

இத்தனை காலமாக ஏழைகள், பணக்காரர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், உயர்த்தப்பட்ட வகுப்பினர், தாய்மொழி வழியில் படித்தவர்கள், மாநிலக் கல்வியில் பயின்றவர்கள் என இத்தனை பிரிவுகளிலிருந்தும் மருத்துவர்கள் உருவாகி வந்தே நாட்டின் நல்வாழ்வு நிலைமை (Health Status) இப்படிக் கிடக்கிறதே, இன்னும் பணக்காரர்களும் நடுவணரசுப் பள்ளியில் படித்தவர்களும் மட்டும்தாம் மருத்துவராக முடியும் எனும் நிலைமையை உண்டாக்கும் இந்த மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு முறை வேறு அமல்படுத்தப்பட்டால் நம் நிலைமை என்னாகும்? அதைச் சிந்தித்தீர்களா? அவசரத்துக்கு ஒரு மருத்துவர் கிடைப்பாரா? மருத்துவக் கல்வி எட்டாக்கனியாவது கிடக்கட்டும், மருத்துவமே எட்டாக்கனியாகி விடாதா?

நுழைவுத் தேர்வு மூலம்தான் தரமான மருத்துவர்களை ஆளாக்க முடியும் எனப் பிதற்றுபவர்களே! குப்பை வண்டித் தொழிலாளிக்கு ஊசி குத்துபவர் முதல் குடியரசுத் தலைவரின் நாடி பிடிப்பவர் வரை நாட்டில் இன்றுள்ள அத்தனை ஆயிரம் மருத்துவர்களுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் வந்தவர்கள்தாமே? மாநிலக் கல்வித்திட்டத்தில் பெற்ற தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் மட்டுமே தகுதியாகக் கொண்டு மருத்துவ அங்கியை அணிந்தவர்கள்தாமே? இவர்கள் எல்லோருமே தகுதியற்றவர்களா? இது நாட்டிலுள்ள அத்தனை மருத்துவர்களையும் இழிவுபடுத்துகிற கருத்தில்லையா? ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்களே உங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கொந்தளித்த மருத்துவர்களே! இப்பொழுது உங்கள் காதுகள் எந்த அடகுக் கடையில் இருக்கின்றன?

தரம், தகுதி எனக் கூப்பாடு போடுபவர்களே! எது தரம்? எது தகுதி? ஏழை எளியவர்கள், தாய்மொழி வழியில் படிப்பவர்கள், மாநிலக் கல்வித்திட்டத்தில் பயில்பவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் வருபவர்கள் போன்றோரெல்லாம் தரமான மருத்துவர்களாக மிளிர முடியாதா? எனில், இப்படிப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாகக் கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் எப்படி இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக உருவானது? உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்த்துச் செல்கிறார்களே எப்படி?

ஆக, மாநில அடிப்படையிலான சிந்தனையோ தேசிய அளவிலான பார்வையோ, எப்படிப் பார்த்தாலும் இந்த மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மக்களுக்கு நாட்டுக்கு என அனைவருக்கும் அத்தனை வகையிலும் தீங்கானதுதான் என்பதே உறுதியான உண்மை!

மொத்தத்தில், இந்த நுழைவுத் தேர்வு மருத்துவத்துறையின் தரத்தை உயர்த்துவதற்கானது இல்லை; தங்களுக்குப் பிடிக்காத நாடுகள் மீது வல்லரசு நாடுகள் போடும் பொருளாதாரத் தடை போல தமிழ்நாடு போன்ற தங்களுக்குப் பிடிக்காத மாநிலங்கள் மீது இந்திய நடுவணரசு போடும் கல்வி - நல்வாழ்வுத் தடை!

எனவே, அரசியலாளர்களின் வா(மா)ய்மாலங்களுக்கு இரையாகாமல் இனியாவது துறைசார் வல்லுநர்களின் கருத்துக்களுக்குக் காது கொடுப்போம்! உருப்படுகிற வழியைப் பார்ப்போம்!
(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀

கலைச்சொற்கள்: நன்றி அகரமுதல இணைய இதழ், விக்சனரி

படங்கள்: நன்றி தினமணி, மாலைமலர், நியூசு ஹண்ட்டு, ஹாண்டு இன் ஹாண்டு யு.எஸ்.ஏ

தொடர்புடைய வெளியிணைப்புகள்:
நீட் தேர்வு கூடாது - ஏன்?

நீட் தேர்வு – ஆடைகளை கலைத்து தமிழக மாணவிகளை இழிவுபடுத்தி கெடுபிடி காட்டிய சி.பி.எஸ்.சி அதிகாரிகள், வட மாநிலங்களில் இதைச் செய்யாதது ஏன்?

நீட் தேர்வில் மாபெரும் மோசடி! குசராத்தில் மட்டும் எளிய கேள்விகள்! மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

16 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    வழமை போலவே சிந்திக்கத் தூண்டும் கட்டுரை.

    படிக்க அனுமதிக்கப்படும் இடங்கள் குறைவாகவும் சேரவிரும்பும் மாணவர்கள் அதிகமாகவும் இருக்கின்ற இடத்து இதுபோன்று வடிகட்டும் முறையை அரசு கொண்டுவருகிறது. படிக்கவிரும்பும் எல்லாருக்கும் இடம் கொடுக்க முடியாமை அதற்குக் காரணம்.

    எனவேதான் குறைந்தபட்சக் கல்வித்தகுதியின் உயர்மதிப்பெண்ணைக் கணக்கில் கொண்டு, இட ஒதுக்கீடுசார்ந்து இது போன்ற சேர்க்கை அனுமதிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவம் பொறியியல் போன்ற போட்டி அதிகமுள்ள படிப்புகளுக்கு முன்பு
    நுழைவுத்தேர்வினை மாநில அரசு நடத்தியிருக்கிறது. பின், அதற்கென புற்றீசல்போல முளைத்த பயிற்சியகங்கள், இந்நுழைவுத்தேர்வினால் அடிப்படைக் கல்வித்தகுதியில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கிராமப்புற, பின்தங்கிய வகுப்பு மாணக்கர் நுழைய முடியாத நிலை இதனைக் கருத்தில் கொண்டு அந்நுழைவுத் தேர்வு முறை கைவிடப்பட்டது.

    ஆனால் இப்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்வில் நம் மக்கள் உணராத, உணரவேண்டிய பேரபாயம் உள்ளது.

    நம் வரியில், நம் மாநில நிதியில் இருந்து கோடி கோடியாகச் செலவு செய்து கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் இந்தியாவெங்கும் இருந்து வந்து மாணவர்கள் சேரப்போகிறார்கள். இதுவரை நம் தமிழக மாணவர் மட்டுமே துய்த்த இடங்கள் இவை. தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணாக்கருக்கான இடத்தை எவ்வித முதலீடும் இன்றி பிற மாநில மாணவர்கள் பங்கிட்டுக் கொள்ளும் வசதி.

    நம் மாநிலப் பாடத்திட்டமின்றி மத்தியப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் என்ற அபாயமும்தாண்டி, மாநிலத்திற்கொரு வினாத்தாள் என்ற பேரபாயத்தைக் கேள்விப்படுகிறேன்.

    எடுகோளாய், குஜராத் மாநில மாணாக்கருக்கென வழங்கப்பட்டிருந்த வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது என்ற பத்திரிக்கை செய்தி. இது உண்மையாயின், அம்மாநில மாணாக்கர் அதிக அளவில் இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளை ஆக்கிரமித்துக் கொண்டுவிட முடியும்.

    பீகார் போன்ற மாநிலங்களில் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது ஏழுலகும் அறிந்தது,

    இங்குத் தமிழ்நாட்டின் வினாத்தாள் கடினமாய் இருந்திருக்கிறது.

    இந்நிலையில்,

    இந்தியா மொத்தமும் தேர்வு எழுதும் மாணவர்களின் ஒட்டுமொத்த தரவரிசைப்படி மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்ற அறிவிப்பு எவ்வளவு மோசடியானது?

    தமிழகம் முழுக்க உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நம்மாணவர் படிக்க இடமில்லாமல், பிற மாநில மாணவர்களால் நிரப்பப்படுவதற்காக நாம் நமது வரிப்பணத்தைச் செலவிட்டோம்?

    முதுகெலும்பற்ற மாநில அரசு.... !

    தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதுபற்றி அறியாத அக்கறை இல்லாத தமிழ் மக்கள்.

    ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைவிட பேரெழுச்சியுடன் நீட் தேர்விற்கு எதிராகப் போராட வேண்டிய தேவை நமக்குண்டு.

    இன்னும் என்னவெல்லாம் தாங்க வேண்டுமோ?!!!

    கேள்வி எழுப்பினால் நான் தேசபக்தனில்லை.

    “விதியே, விதியே, தமிழச் சாதியை.
    என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?”

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! ஏறத்தாழ ஒரு பதிவின் அளவிலான இவ்விரிவான கருத்துரைக்கு என் முதல் நன்றி!

      //படிக்க அனுமதிக்கப்படும் இடங்கள் குறைவாகவும் சேரவிரும்பும் மாணவர்கள் அதிகமாகவும் இருக்கின்ற இடத்து இதுபோன்று வடிகட்டும் முறையை அரசு கொண்டுவருகிறது// - ஐயா! ஏறத்தாழ இப்படி ஒரு கருத்தையும் சேர்க்கவே எண்ணியிருந்தேன். அதாவது, "படிக்க விரும்புவோர் மிகுதியாகவும் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைவாகவும் இருப்பதால் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலைமையில் இருக்கிறது பொறியியல் கல்வி. இப்படிப்பட்ட வடிகட்டல்களை அதில் வைத்தால் சேரும் மாணவர் எண்ணிக்கை குறையும்; படிப்பவர் அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க உதவும். ஆனால், அதை விட்டுவிட்டு, பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் குறித்து அணுவளவேனும் அக்கறை இல்லாமல், தொடர்ந்து எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிச் சேர்க்கைகளை நடத்தி வரும் அரசு, இன்னும் இன்னும் ஆட்கள் தேவைப்படுகிற மருத்துவத் துறைக்கு இது போன்ற வடிகட்டல்களை வைப்பது எவ்வளவு பொறுப்பில்லாத்தனம்?" என்று எழுத எண்ணியிருந்தேன். ஆனால், அதுவும் ஒரு வகையில் பொது நுழைவுத்தேர்வு முறையை ஊக்குவிக்கும் கருத்தாக அமைந்து விடும் என்பதால் தவிர்த்து விட்டேன்.

      இந்த மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு முறையால் இந்தி தெரிந்த, நடுவணரசுப் பாடத்திட்டத்தில் பயின்ற வட மாநில மாணவர்கள் இவை இரண்டும் அறியாத தமிழ்நாட்டின் கல்வியிடங்களை, தமிழ்நாட்டு மாணவர்க்கேயுரிய கல்வியிடங்களை அள்ளிக் கொள்ளும் வாய்ப்பிருப்பது பற்றி முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவில் படித்தேன். அதே போல், எந்தப் பாடத்திட்டத்தைச் சார்ந்த மாணவராக இருப்பினும் நடுவணரசுப் பாடத்திட்டத்தின்படிதான் இந்த நுழைவுத்தேர்வில் கேள்வி கேட்போம்; அதில் தேறினால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்கிற பட்டப் பகல் இனவெறிக் கொள்கையையும் கேள்விப்பட்டேன்.

      ஆனாலும், இப்படிப்பட்ட காரணங்களை முன்வைத்தால்தான், குறுகிய மனப்பான்மையில் பேசுகிறோம், தேசியமயச் சிந்தனை நமக்கில்லை, நாட்டுப்பற்றில்லை எனவெல்லாம் உளறுகிறார்களே! அதனால்தான், தேசிய அளவிலான காரணங்களை மட்டும் முன்வைத்து, "பாருங்கள் மூடர்களே! உங்கள் சொல்படியே தேசிய அளவிலான பார்வையில் அணுகினால் மட்டும் இந்த மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு முறை நாட்டுக்குப் பலனளிக்கும் விதமாய் இருக்கிறதா?" என்று கேட்பதற்காக இப்படி ஒரு பதிவை எழுதினேன். அதனால்தான் மேற்படி காரணங்களையெல்லாம் பதிவில் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.

      ’பொது’ நுழைவுத்தேர்வு எனப் பெயரில் மட்டும் குறிப்பிட்டு விட்டு மாநிலத்துக்கு ஒரு வினாத்தாள், மொழிக்கு ஒரு தன்மை என இவர்கள் தேர்வு நடத்திய அட்டூழியம் பற்றிய செய்தி கட்டுரையை எழுதி முடிக்கும் வரை வரவில்லை. ‘கீற்று’ மின்னிதழில் கட்டுரை வெளியான பிறகுதான் அந்தச் செய்தி வந்தது. அதை மனதில் கொண்டுதான், புதிதாக, "இந்த நுழைவுத் தேர்வு... தங்களுக்குப் பிடிக்காத நாடுகள் மீது வல்லரசு நாடுகள் போடும் பொருளாதாரத் தடை போல தமிழ்நாடு போன்ற தங்களுக்குப் பிடிக்காத மாநிலங்கள் மீது இந்திய நடுவணரசு போடும் கல்வி - நல்வாழ்வுத் தடை!" என்ற வரியைச் சேர்த்தேன்.

      முதுகெலும்பில்லாத அரசுகளை என்பிலதனைக் காயும் வெயில் போல் அறம் காயட்டும் என்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால்?

      மற்றபடி, தமிழர் நமக்கு நாட்டுப்பற்று இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கேள்வி எழுப்பவோ விமர்சிக்கவோ வேறு எவனுக்கும் இங்கு தகுதி இல்லை என நினைக்கிறேன் ஐயா! இந்திய விடுதலைக்கு முதல் குரல் எழுப்பியவர்களே தமிழர்கள்தாமே? எனவே, மலையைப் பார்த்துக் குரைக்கிற நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கட்டும். நாம் கேள்விக்கற்களை எறிந்தபடியே இருப்போம்! இன்று நாம் வீசும் கற்களே நாளை நம் வெற்றிக் கோட்டைக்குப் படிக்கற்களாய் மாறும்!

      நம்புவோம் ஐயா! எவ்வளவு நீளிரவுக்குப் பின்பும் ஒரு விடியல் கட்டாயம் உண்டு இல்லையா!

      நீக்கு
  2. அருமை நண்பரே விரிவான அலசல் இந்த நிகழ்வுகள் எல்லாம் பிற நாட்டில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்பதை இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று கூச்சலிடுபவர்கள் உணரவேண்டும்.

    மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்

    எங்கே.... சசிகலாவும், தினகரனும் தவறு செய்து விட்டதால் சிறையில் கிடக்கின்றார்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து எல்லா ஊர்களிலும் நாஞ்சில் சம்பத் ஆர்ப்பாட்டம் ???

    எப்படி நல்ல அரசு கிடைக்கும் ?

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே! இன்றைய நிலையைப் பொறுத்த வரை, இரட்டை இலையில் ஆளுக்கு ஒன்றையாவது பிய்த்துக் கொண்டு போய்விடுமா என்கிற அளவுக்கு வெறி பிடித்துத் திரிகிறார்கள் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும்.

      பா.ச.க-வைப் பொறுத்த வரை, உலகமே உற்று நோக்கினாலும் சரி, அவர்கள் செய்வதை அவர்கள் எந்தவித வெட்கமும் இன்றிச் செய்வார்கள். எல்லாமே வெளி ஒப்பனைதான்.

      இந்நிலையில் வல்லரசாவது நல்லரசாவது? சந்தானம் சொன்னது போல் ’டல்’லரசுதான்!

      பாராட்டுக்களுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றி கவிஞரே! தங்கள் தொடர் வருகை என்னை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது!

      நீக்கு
  4. சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. அன்றே படித்துவிட்டேன் சகோ! கருத்திட முடியவில்லை தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.

    எல்லாமே விரிவாகச் சொல்லப்பட்டுவிட்டதால் விஜு சகோ அவர்களும் சொல்லிவிட்டார்...

    நீட் தேர்வு அல்ல எந்தத் தேர்வாக வேண்டுமானாலும் இருக்கட்டும் சகோ எனது கருத்து இது. நமது சாதாரண கிராமத்துக் குழந்தைகள் - சாதாரண என்று நான் சொல்லுவது அறிவில் அல்ல, வாழ்வியல் நடைமுறையில் - எந்த ஒரு தேர்வையும் சந்திக்கும் வகையில் நமது கல்வி முறை அமைய வேண்டும் என்பது எனது கனவு. ஏன் நகரத்துக் குழந்தைகள் மட்டும் தான் அறிவாளிகளா என்ன? அவர்களுக்கு வசதிகள் இருப்பதால்? எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியில் ஆர்வம் ஏற்படும் படியான கல்வி இருக்க வேண்டும்.

    எனது பகுதியில் இருக்கும் ஒரு ஏழை மாணவர்....மிக மிக வறுமையில் வாழ்பவர். ஆசிரியர்களே சரியாகப் போதிக்காத தரமற்ற அரசுப்பள்ளியில் படிப்பவர்....அவருடைய வீட்டைப் பார்த்தால் நமக்குக் கண்ணில் நீர் வரும். வீட்டில் விளக்கு கூட சரியாகக் கிடையாது. அம்மாவும் அப்பாவும் அவ்வப்போது கிடைக்கும் ஏதாவது ஒரு கூலி வேலைக்குப் போய்வருபவர்கள். வேலை இருந்தால் கூழ்...இல்லை என்றால் அதுவும் இல்லை. வறுமை இருந்தாலும் குடும்பம் விரியாமலா போகிறது.??!! 5 குழந்தைகள். இந்த மாணவர் மூத்தவர். ஆனால், எங்களுக்கு அறிமுகமான போது அவர் 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். எனது மகன் 10 வது. அப்போது அவரும் என் மகனும் பேசும் போது என் மகன் தான் கால்நடை மருத்துவம் படிக்க விரும்புவதைச் சொன்ன போது அந்தப் பையன் தான் மருத்துவராக வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். என் மகனும் நானும் அவருக்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தோம்...அவருக்குப்பயம் கிடைக்குமா? கிடைத்தாலும் அதிகம் செலவாகுமா? தன்னால் இயலுமா என்றெல்லாம். நான் எனது மகனுக்கு எப்படி அறிவுறுத்தினேனோ அப்படியே அப்பையனுக்கும் அறிவுறுத்த, அந்தப் பையன் கோடை விடுமுறையில் மளிகைக் கடைகளில் பொட்டலம் கட்டும் வேலை எல்லாம் செய்து அதே சமயம் மாநிலக் கல்விப் பாடப்புத்தகங்கள் தவிர எனது மகன் கொடுத்த புத்தகங்களையும் படித்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் அவருக்குக் காட்டிக் கொடுக்க அங்கும் சென்று படித்து, காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் சுமாரான மதிப்பெண்கள் பெற்றாலும் 10 ஆம் வகுப்புப் பொது தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று, இதோ இப்போது 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நன்றாக எழுதியிருப்பதாகச் சொன்னார். நீட் தேர்வும் எழுதியிருக்கிறார். அதற்கான கேள்விகளும், விடைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது இல்லையா அதனை எங்கள் வீட்டிற்கு வந்து சரி பார்த்தார். நம்ப மாட்டீர்கள்! 650 கிடைக்கும். இங்கு நான் சாதியைப் பற்றிப் பேச மாட்டேன். அவருக்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் கட் ஆஃப் மதிப்பெண்ணை விடக் கூடுதல். இப்போது பொதுத் தேர்வில் அவருக்கு நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டால் நல்ல கல்லூரியில் அதாவது அரசு சார்ந்த கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், இப்படியான ஒரு மாணவரால் தகுந்த வழிகாட்டுதல் இருந்தால் முடியும் என்றால் நமது அனைத்து கிராமப்புற மாணவர்களாலும் ஏன் முடியாது? இத்தனைக்கும் இந்த மாணவரும் 5 ஆம் வகுப்பிற்கு முன் வரை தருமபுரியில் ஏதோ ஒரு கிராமத்தில் படித்து வந்தவர் தாம். சுய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நமது கல்வி இருக்க வேண்டும். பகல் கொள்ளை அடிக்கும் மருத்துவக் கல்லூரிகள் இத்தனை பெருக யார் காரணம்? அவை தேவையா? அதற்குப் பதில் அவை அனைத்தையும் அரசு நடத்தும் கல்லூரிகளாக மாற்ற முடியாதா? மாற்றினால் எத்தனை சாதாரணக் குழந்தைகளுக்கும் மருத்துவப் படிப்பு எளிதாகும்? நீட்டோ இல்லை வேறு எதுவுமோ...எது வேண்டுமானாலும் வைத்துத் தொலைக்கட்டும்...இல்லை ரத்து செய்யட்டும் அதை விட முக்கியம்...நல்ல தரம் வாய்ந்த கல்வி...முதலில் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க அரசு விழைய வேண்டும். தரமான அரசுப் பள்ளிகள், தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். வெறும் ஏட்டுக் கல்வி அல்ல. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறமை அல்ல. எந்த ஒரு சிக்கலானக் கேள்வியையும் விடை கிடைக்கிறதோ இல்லையோ அதனை உடைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அப்படியான கல்வி வராத வரையில் நாம் எந்தவகையுலும் கல்வியில் முன்னேற முடியாது.

    அடையாறில் உள்ள சில அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நகரத்துப் பள்ளிகளே இப்படி என்றால் கிராமத்துப் பள்ளிகளை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்...முதலில் அடிப்படை சரியாக அமைந்தால்தானே கட்டிடம் உறுதியாக இருக்க முடியும்? அடிப்படையே இல்லை எனும் போது வடிவேலு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சகோ! கருத்தின் தொடக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டதையே நானும் இங்கு சொல்லிக் கொள்கிறேன் - தாமதத்தைப் பொறுத்தருள்க!

      வெறும் ஏட்டுச் சுரைக்காய்களின் அடிப்படையில் அமைந்த மேற்படி கட்டுரையில், உங்கள் வாழ்வின் பட்டறிவை இணைத்து உயிரோட்டமான கருத்தை வழங்கியமைக்கு முதலில் என் நன்றி! என்னைப் போல் வெறும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயலளவிலும் நீங்கள் பலவற்றை சாதித்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன். அவ்வரிசையில் ஏழை மாணவர் ஒருவரின் வாழ்வில் ஒளியூட்டத் துணை புரிந்த இச்செயலுக்கும் என் போற்றுதல்கள்!

      நீங்கள் கூறுவது சரிதான். முதலில் கல்வித்தரம் உயர வேண்டும். பாடத்திட்டம் சீரடைய வேண்டும். கற்பிக்கும் முறை உயிர் பெற வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் இவர்கள் காணும் வல்லரசுக் கனவுகள் ஒருநாளும் இயலாது. ஆனால், இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் மீதும் அக்கறையில்லை நாட்டை வல்லரசாக்கும் எண்ணமும் இல்லை. நாடு முழுக்கத் தங்கள் காவிக்கொடி பறக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்கள் அவா. இந்நிலையில் நீங்கள் (நாம்) ஏங்குவது போல் மருத்துவக் கல்லூரிகள் அரசுடைமை, அரசுப் பள்ளிகளின் தர உயர்வு, ஆசிரியர்கள் தர உயர்வு போன்றவற்றையெல்லாம் செய்வது யார்?

      உண்மை என்னவெனில், இந்த மருத்துவப் பொது நுழைவுத்தேர்வு என்பதே இப்படிப்பட்ட மட்டமான கல்வித்தரமுள்ள அமைப்பிலிருந்தும் இந்த நாட்டுப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன்னுக்கு வந்து விடுகிறார்களே என்பதால் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிப் பணம் உள்ளவனுக்கு மட்டுமே கல்வி என்கிற நிலையை உருவாக்கத்தான். எனவே, இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் நம்மைப் போன்றோர் இன்னும் பின்னால் போய் எண்பதுகளில் பேசிக் கொண்டிருந்த முன்னேற்றக் கருத்துக்களையெல்லாம் முன்வைப்பது சிரிப்பதா அழுவதா என அரசியலாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வேலை.

      நீக்கு
  6. வட இந்திய மாணவர்கள் தமிழ்நாட்டில் சேருவதற்கான வாய்ப்பு உண்டு என்பதைக் குறிப்பிட்டிருக்கிறிறீர்கள் இல்லையா...சகோ எனக்குத் தெரிந்து எனது மகனும் விண்ணப்பித்து இருந்ததால்...இங்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும்...மட்டுமல்ல டொமிசைல் சான்றிதழ் முக்கியம். அதாவது மேல்நிலைப்படிப்பு 9,10,11, 12 இந்த நான்கு வருடமும் இங்குதான் கற்றிருக்க வேண்டும். இல்லையேல் இங்கு சேர முடியாது. அதனாலேயே நாங்கள் எனது கணவர் வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் நாங்கள் 8 ஆம் வகுப்பு வரை மாறி வந்தவர்கள் அதன் பின் சென்னையிலேயே தங்கிவிட்டோம். .69 % கணக்கில் கொள்ளப்படும்....அதன் பின்னர்தான் வட இந்திய மாணவர்களுக்கு பிற மாநில கோட்டாக்களில் கிடைக்கும்...பணம் கொடுத்து வேண்டுமென்றால் சேரலாம்.அதாவது தனியார்க் கல்லூரிகளில். அதன் பின்னான மேற்படிப்புகளில் இடத்தைப் பொருத்து நாம் கேட்கும் கல்லூரிகளைப் பொருத்து 69% ற்குள்ளா இல்லை என்ன கோட்டா என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டுத்தான் இடம் கொடுக்கப்படுகிறது. இதுவும் நாங்கள் மகனின் மேற்படிப்பு ரேங்கில் வந்த போது கலந்தாய்விற்கு தில்லி சென்ற பொது அறிந்தது. தமிழ்நாட்டு மாணவர்கள் வடக்கும், வடக்கு மாணவர்கள் இங்குமாக அவர்களது சாதி, மாற்றுத் திறனாளிகள் கோட்டா, வளர்ச்சியடையாத மலைவாழ் மாநிலங்கள் கோட்டா, மதிப்பெண் கட் ஆஃப் தகுதியில் வழங்கப்பட்டது...அப்படித்தான் இப்போதும் தமிழ்நாட்டில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுத்தான் வழங்கப்படும் என்றே அறிகிறேன். எங்களுக்குத் தெரிந்த மருத்துவர் இருப்பதால்..அண்ணா பல்கலையிலும் கணவரின் நண்பர் இருப்பதால்...நான் மேற்சொன்ன பையனுக்காகக் கேட்டதால் அறிய நேர்ந்ததும்...
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ! நீங்கள் கூறுவதும் உங்கள் மருத்துவ நண்பர் கூறுவதும் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தானே? அதுவே நடக்காது என்பதுதானே இங்கு கல்வியாளர்கள் கதறக் காரணம்? இந்த மருத்துவப் பொது உநுழைவுத் தேர்வு முழுக்க முழுக்க நடுவணரசுப் பள்ளிக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்துடைய அடிப்படையில் நடதப்படுவது. தமிழ்நாட்டிலோ மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (என் சிற்றிவுக்கு எட்டிய வரையில் ஏறக்குறைய 90 விழுக்காடு) நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் பள்ளிகளில் படிக்காதவர்களே! எனவே, இவர்கள் இந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைவது என்பதே குதிரைக்கொம்பு. அதன் பிறகுதானே நீங்கள் கூறும் 69% ஒதுக்கீடு, மாநில முன்னுரிமை எல்லாம்?

      நீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்