.

புதன், மார்ச் 02, 2016

தேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள்! ஓட்டுபவர்கள் யார்? ஏன்? - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள்!



Vijaykanth biting his tongue

காளைக்குக் கொம்பு சீவிப் பார்த்திருக்கிறோம். ஆனால், அரசியலாளர்களும் ஊடகங்களும் மனது வைத்தால் கோழிக்குக் கூடக் கொம்பு சீவி விட முடியும் என்பது தே.மு.தி.க-வின் இன்றைய நிலையைப் பார்க்கும்பொழுது தெரிகிறது! 

இரண்டு மாதங்கள் - இரண்டே இரண்டு மாதங்கள் முன்பு வரை இதே விஜயகாந்தைப் பற்றி இதே தமிழ் ஊடகங்கள் எப்படியெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும்படி வெளிச்சம் போட்டுக் காட்டின என்பதை இப்பொழுது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. பொது இடங்களில் அவர் பேசிய விதம், செய்தியாளர்களிடம் அவர் நடந்து கொண்ட ‘முறை’ போன்றவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் ஓட்டிக் காட்டிய தொலைக்காட்சிகளும், பத்தி பத்தியாக விமரிசித்த ஏடுகளும் இன்று அவர்தான் தமிழ்நாட்டு அரசியலுக்கே மையப் புள்ளி என்கிற அளவுக்குப் படச்சுருள் ஓட்டுகின்றன! 

ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், பா.ச.க, காங்கிரசு என இருக்கிற கட்சிகள் அத்தனையும் விஜயகாந்த் வீட்டு வாசலிலேயே ‘தேவுடு’ காத்தால் அதைப் பற்றி ஊடகங்கள் எப்படிச் சொல்லாமல் இருப்பார்கள்? அப்படிச் சொன்னால், விஜயகாந்த் பற்றிய எண்ணம் எப்படி உயராமல் இருக்கும்? 

கேட்டால், தே.மு.தி.க-வுக்குக் கணிசமான வாக்கு வலிமை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏதோ அரசியலாளர்கள் மட்டும் இப்படிச் சொன்னால் தேவலாம். ஆனால் தேர்ந்த அரசியல் நோக்கர்கள், நடுநிலையான தனி மனிதர்கள் கூட இப்படிச் சொல்கிறார்கள். 8 முதல் 10 விழுக்காடு (percentage) அளவுக்குத் தே.மு.தி.க-வுக்கு வாக்கு வங்கி இருப்பதாக வேறு புள்ளி விவரங்களை வைத்துக் கோலமிடுகிறார்கள்.

இவையெல்லாம் உண்மையா?... தே.மு.தி.க-வுக்கு உண்மையிலேயே அவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறதா?... எளிமையாக ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கலாம் வாருங்கள்! 

அவ்வளவு பெரிய அப்பாடக்கரா விஜயகாந்த்?...

DMDK Banner

முதன் முதலில் 2006ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது தே.மு.தி.க. இதில் விஜயகாந்த் தவிர மற்ற வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோற்றாலும் கட்சி பெற்ற வாக்குகள் 8%. முதல் தேர்தலிலேயே இத்தனை விழுக்காடு வாக்குகளைப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் வியந்து பேசப்பட்டது. 

அந்த 8% வாக்குப்பதிவையே முதலீடாக வைத்து அடுத்து வந்த 2011ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி போட்டுத் தே.மு.தி.க கவர்ந்த வாக்குகள் 45%! போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியதும் இந்திய அளவில் விஜயகாந்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தன. 

இதற்குப் பின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிட்டபொழுது ஓர் இடத்தில் கூட அந்தக் கட்சி வெல்லவில்லை என்றாலும் அந்தக் கூட்டணி ஏறத்தாழ 75 இலட்சம் வாக்குகள் பெற்றது. இதே கூட்டணியிலிருந்து பா.ஜ.க, பா.ம.க கட்சியினர் தலைக்கு ஓர் இடங்களைக் கைப்பற்றினாலும் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க-வுக்கு அடுத்ததாகத் தே.மு.தி.க-தான் இருந்தது. 

இப்படி, ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியோ தோல்வியோ எதை அடைந்தாலும் தேர்தலுக்குத் தேர்தல் தே.மு.தி.க-வின் வாக்கு வங்கி மட்டும் உயர்ந்து வருவதைக் (???) காரணமாக வைத்து எல்லாக் கட்சிகளும் இன்று விஜயகாந்தின் கண்ணசைவுக்குக் கைகட்டி நிற்கின்றன. ஆனால், இந்த வாக்கு வங்கிக் கணக்கே முற்றிலும் தவறு! அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு நிமிடமாவது ஏரணமாகச் (logical-ஆக) சிந்திக்க வேண்டும். 

முதன் முறை 2006ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபொழுது தே.மு.தி.க அத்தனை விழுக்காடு வாக்குகள் பெற என்ன காரணம்? விஜயகாந்த் மீது மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பா? அல்லது, அது வரை தமிழ்நாட்டு அரசியலில் இல்லாத அளவுக்குப் பல புரட்சிகரமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைத்து அவர் அந்தத் தேர்தலைச் சந்தித்தாரா?... ஒன்றுமேயில்லை! தி.மு.க, அ.தி.மு.க தவிர வேறு மாற்றுத் தேர்வே (alternate option) இல்லாமல் பல ஆண்டுகளாகத் தவித்து வந்த தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிய தேர்வாக அன்று விஜயகாந்த் வந்தார். அதுவும், “இந்த இரு கட்சிகளுடனும் ஒருபொழுதும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று உறுதிமொழி வேறு கொடுத்தார். அதனால், பல்லாண்டுக் காலமாகக் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் மாறி மாறி வழங்கிய அட்டூழிய ஆட்சிகளால் வெறுத்துப் போயிருந்த மக்கள் விஜயகாந்துக்கு வாக்களித்தார்கள். அப்படிப் பெற்றதுதான் அந்த எட்டு விழுக்காடு வாக்குப்பதிவு. 

ஆனால், தன்னுடைய அந்தத் தலையாய வாக்குறுதியை அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே தலை முழுகிவிட்டு அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் அந்தத் தேர்தலில் ஒரேயடியாக 45% வாக்குகள் - அதாவது, முன்பை விட ஏறத்தாழ 500% வாக்குகள் கூடுதலாகப் - பெற்றிருக்கிறார் என்றால் என்ன பொருள்? கொஞ்சமாவது இந்தத் தலைவர்களும், அரசியல் நோக்கர்களும், ஊடகங்களும் சிந்திக்க வேண்டாவா? யாருடனும் கூட்டணி கிடையாது என்று சொன்னதற்காக வாக்களித்த அதே மக்கள், அந்த முடிவுக்கு மாறாக நடந்து கொண்டாலும் வாக்குகளை அள்ளி வழங்குவார்களா? ஆக, முதலில் வாக்களித்த அந்த 8 விழுக்காடு மக்கள் இந்த 45 விழுக்காட்டில் இல்லை. அதாவது, 2011ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு வாக்களித்தவர்கள் தே.மு.தி.க வாக்காளர்கள் இல்லை; அ.தி.மு.க வாக்காளர்கள்தாம்; அவர்கள்தாம் அந்த 45% வாக்குப்பதிவுக்குக் காரணம் என்பது படிக்காத பாமரனுக்குக் கூடப் புரியக்கூடிய அடிப்படை உண்மை இல்லையா? 

இதே போல, அடுத்த வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது அந்தக் கூட்டணியிலேயே பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாகத் தே.மு.தி.க-தான் மிகுதியான வாக்குகளைப் பெற்றது என்பதும் தவறே! மேலான பார்வைக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம். ஆனால், சற்றே சிந்தித்துப் பார்த்தால், வெறும் ஏழே தொகுதிகளை வைத்துக் கொண்டு 14,17,535 வாக்குகளை ம.தி.மு.க பெற்றிருப்பதையும், எட்டே தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு பா.ம.க 18,04,812 வாக்குகளைத் திரட்டியிருப்பதையும் ஒப்பிட்டால் இவர்கள் இருவரையும் விட இரட்டிப்பான அளவில் தொகுதிகளைக் (14 இடங்கள்) கூடுதலாகக் கேட்டு வம்படியாய் வாங்கிக் கொண்ட தே.மு.தி.க 20,79,392 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது அப்படி ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை. விகிதக் (ratio) கணக்குப்படிப் பார்த்தால் இந்த இரண்டு கட்சிகளை விடத் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் குறைவுதான்! 

ஆக, முதல் முறை 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபொழுது பெற்ற 8% வாக்குகள்தாம் தே.மு.தி.க-வின் வாக்கு வங்கி என்கிறாயா எனக் கேட்டால் அதுவும் இல்லை. 

பொதுவாகவே தேர்தல் அரசியல் என்றால், கட்சி தொடங்கிய புதிதில் தனித்துப் போட்டியிடுவதும், அப்பொழுது கிடைக்கும் வாக்கு விழுக்காட்டைக் காட்டி அதன் பின் மற்ற கட்சிகளோடு கூட்டணி சேர்வதும், ஆட்சியைப் பிடிப்பதும் இவையெல்லாம் வழக்கம்தான். ஆனால், அப்படி ஒரு கட்சி முதல் முறை தனித்துப் போட்டியிட்டுப் பெறும் வாக்குகள் அவர்களுக்கென இருக்கிற தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் மூலம் திரட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். ஆனால், தே.மு.தி.க தன் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகள் அப்படிப்பட்டவை அல்ல. முன்பே சொன்னது போல, விஜயகாந்த் என்கிற தனி மனிதருக்காகவோ, தே.மு.தி.க என்கிற கட்சிக்காகவோ திரண்ட வாக்குகள் அல்ல அவை; “யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று விஜயகாந்த் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் பெறப்பட்டவை அந்த வாக்குகள். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் மீறி ஆண்டுக்கணக்கில் ஆகி விட்டது. அது மட்டுமில்லை, அப்பொழுது தி.மு.க, அ.தி.மு.க - இரண்டையும் பிடிக்காதவர்கள் வாக்களிக்கத் தே.மு.தி.க மட்டும்தான் ஒரே பெரிய தேர்வாக இருந்தது. ஆனால், இப்பொழுது மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் என மக்களுக்கு வேறு தேர்வுகளும் உள்ளன. 

ஆக, மக்களிடம் வாக்குத் தவறிய விஜயகாந்த் தன் சொந்த வாக்கு வங்கியையும் இப்பொழுது தவறவிட்டு நிற்கிறார் (தேர்தலில்) என்பதுதான் உண்மை. 

மொத்தத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் பெற்ற வாக்குகளும் அவருடைய கட்சிக்குச் சொந்தமானவை அல்ல; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்சி ஈட்டிய வாக்குகளும் அதனோடு இணைந்து போட்டியிட்ட மற்ற பெரிய கட்சிகளுக்கு நிகரானவை அல்ல; இன்றைய நிலைமையில் விஜயகாந்துக்குச் சொந்தமாக வாக்கு வங்கி என்றும் ஒன்று இல்லை. இதுதான் உண்மையான நிலவரம்! 

இது புரியாமல் ஏதோ இந்தத் தேர்தலின் முடிவே விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்பது போல் தமிழ்நாடே தாளம் போடுவது தாள முடியாத அசட்டுத்தனம்.

ஆனால், கருணாநிதி முதல் பிரகாஷ் ஜவடேகர் வரை யாருமே இது புரியாதவர்கள் இல்லை. அப்படியிருந்தும் இவர்கள் விஜயகாந்த் பின்னால் போகக் காரணம், இல்லாத ஒன்றை இருப்பது போல் நம்ப வைத்து மக்களின் வாக்குகளைப் பெறும் அரசியல் நரித்தனம்! தே.மு.தி.க-வுக்கு எனப் பெரிய வாக்கு வங்கி இருப்பதாக ஒரு பொய்யான நம்பிக்கை மக்களிடையே (ஊடகங்களால்) உருவாகி விட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க இவர்கள் கணக்குப் போடுகிறார்கள். குறிப்பாக, தமிழர் பிரச்சினைகள் அத்தனையிலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தவர்கள் தி.மு.க, காங்கிரசு, பா.ஜ.க கட்சியினர். இப்பொழுது எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் நம்மிடம் வாக்குக் கேட்டு வருவார்கள்? ஆகவே, அவர்களுக்குத் தேவை இப்பொழுது ஒரு முகமூடி. விஜயகாந்த் அப்படி ஒரு நல்ல முகமூடியாக இருப்பார் என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருக்கிறது. 

அப்படியானால், மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை அழைக்கிறது எனக் கேட்டால், பெரிதாக ஒன்றுமில்லை; தாங்கள் ஊதாவிட்டாலும் ஊரே சேர்ந்து விஜயகாந்த் எனும் பலூனை இப்படி ஊதத்தான் போகிறது. ஆகவே, ஊதப்படும் பலூன், அரசியல் காற்று திசை மாறும்பொழுது இவர்கள் பக்கமும் வரலாமே! வந்தால் இவர்களும் அதைப் பிடித்துக் கொண்டு பறக்கலாமே! 

பொது வாழ்வில் முற்றிலும் பெயரைக் கெடுத்துக் கொண்ட அரசியலாளர்கள் தங்களுக்குப் பதிலாகத் தங்கள் மனைவி / மைத்துனர் / மகன் என யாரையாவது தேர்தலில் நிற்க வைத்து அதன் மூலம் தொகுதியைக் கைப்பற்றுவதும், பின்னின்று ஆட்சி செய்வதும் நாம் பார்க்காதவையல்ல. அது போலத்தான் தே.மு.தி.க-வை இன்று தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளும் அழைப்பதும். இன்று தமிழ்நாட்டில் எந்தப் பெரிய கட்சிக்கும் பெரிய அளவில் முன்பு போலச் செல்வாக்கு இல்லை. ஆகவே, விஜயகாந்துக்குக் கணிசமான மக்கள் செல்வாக்கு இருப்பது போலக் காட்டி அவர் மூலம் மீண்டும் பதவிக் கனியைச் சுவைக்கக் காத்திருக்கின்றன இந்தக் கட்சிகள்.

இப்படி எல்லாரும் தன்னைக் கதாநாயகனாக வைத்து அவரவர் விருப்பத்துக்குப் படம் எடுக்க முனைவது புரிந்தோ புரியாமலோ இதையே சாக்காக வைத்து விஜயகாந்தும் தன் மதிப்பை உயர்த்திக் கொண்டே போகிறார். தனக்கெனச் சந்தை இருக்கும்பொழுது அதற்கேற்ப ஊதியத்தை உயர்த்திக் கேட்க நடிகர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்? இந்த அரசியல் கண்ணாமூச்சியின் முடிவு என்ன ஆகும் என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால், விஜயகாந்த் எனும் ஒற்றை ஆளை வைத்து நடத்தப்பட்டு வரும் இந்த 'தேர்தல்' திரைப்படத்தின் உண்மைக் கதைதுதான் என்பதுதான் இதன் மூலம் நாம் அறிய வேண்டியது.

அப்படியே ஒருவேளை விஜயகாந்துக்கு அவ்வளவு வாக்கு வங்கியெல்லாம் இருப்பதாகவே (ஒரு பேச்சுக்குத்தானப்பா) வைத்துக் கொண்டாலும், அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பையே அவர் கையில் தூக்கிக் கொடுத்து விடுவதா?...

யார் இந்த விஜயகாந்த்?...

Vijaykanth tried to attack people
திருவள்ளூரில் பொதுமக்களை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்!

ஒரு மாநிலத்துக்கே முதல்வராக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதா? நேர்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை, பக்குவம், நாவன்மை, சிந்தனைத் தெளிவு, தொலைநோக்குப் பார்வை என அதற்கு எத்தனை தகுதிகள் தேவைப்படுகின்றன? இவற்றில் ஒன்றாவது விஜயகாந்திடம் உண்டா? 

“தமிழ்நாட்டின் மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்ப்பது எப்படி என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் இப்பொழுது சொல்ல மாட்டேன். சொன்னால், கருணாநிதி அதைக் காப்பி அடித்து விடுவார்” என்று விஜயகாந்த் சொன்னது இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்பது தெரியவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் பாடு, மாநிலத்தின் பின்னடைவு போன்ற எத்தனையோ சீர்கேடுகளைக் கருத்தில் கொள்ளாமல் தன் அரசியல் எதிரிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதில் கருத்தாக இருந்த இவர் ஆட்சிக்கு வந்தால் மட்டும் மக்களுக்கு என்ன பெரிய நன்மைகளைச் செய்து குவித்து விடுவார்?... 

தன் வேட்பாளர் பெயரையே தவறாகச் சொல்லி விட்டு, அதைச் சுட்டிக் காட்டியதற்காக அத்தனை பேர் முன்னிலையில் அவரை வெளுத்து வாங்கியவர்தானே இந்த விஜயகாந்த்? தான் தவறு செய்து விட்டு அதை எடுத்துச் சொன்னதற்காகச் சொன்னவனை அடிக்கும் இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் இவர் தவறு செய்யும்பொழுது சுட்டிக் காட்டவாவது நம்மால் முடியுமா?... 

சொந்தக் கட்சியினர், தன் வேட்பாளர்கள், செய்தியாளர்கள் என எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது போட்டு அடிப்பதும், திட்டுவதும், காறி உமிழ்வதுமாக இருக்கும் விஜயகாந்துக்குத் தமிழ் மாநிலத்தையே கட்டிக் காக்கும் அளவுக்குப் பொறுமை, பக்குவம் உண்டா?... 


துமாரா நாம் கியா ஹை’ன்னு இங்கிலீஷ்ல கேட்டேன்” என்றும், “நடிகை மஞ்சுளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தான் என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்பது கூடப் புரியாமல் பேசும் விஜயகாந்துக்குத் தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கும் அடுக்கடுக்கான பிரச்சினைகள் குறித்துச் சிந்தித்துத் தீர்வு காணும் அளவுக்குத் தெளிவு இருக்குமா?...

தவிர, ஈழப் பிரச்சினை போன்ற தமிழர் இன நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இன்று வரை விஜயகாந்த் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்கவில்லை என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்! 

இவை போக, விஜயகாந்த் பொது இடங்களில் அடிக்கடி பொறுமை இழந்தும், தெளிவின்றியும் நடந்து கொள்ளக் காரணம் அவரது குடிப் பழக்கம்தான் என்கிறார்கள் பலர். “இல்லை, அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதற்காகச் சாப்பிடும் மருந்துகளின் தாக்கத்தால்தான் அப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்” என்கிறார்கள் சிலர். இந்த இரண்டில் உண்மை எதுவாக இருப்பினும், ஆக மொத்தத்தில் தெளிவாகப் பேசக் கூட முடியாத அளவுக்கு அவர் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உறுதி. எத்தனையோ தலை போகிற பிரச்சினைகளில் தமிழினமும் தமிழ்நாடும் சிக்கியிருக்கும் தற்பொழுதைய நிலைமையில் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் என்னாகும்?... தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்! 

ஒருவேளை, நான் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் தவறு; தமிழ்நாட்டு முதல்வர் ஆக விஜயகாந்துக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என யாராவது சொல்வதாக இருந்தால், அப்படியானால் அவருக்குப் பதிலாக அவர் மனைவி பிரேமலதா அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இப்பொழுது தே.மு.தி.க-வில் கலந்துரையாடல் நடைபெற்று வருவது ஏன் என்பதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்!... 

ஊடகங்களும் அரசியலாளர்களும் தரும் தவறான புகழ் வெளிச்சத்தால் மின்னுகிற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத, நான்கு வார்த்தை சேர்ந்தாற் போல் பேசத் தெரியாத, எது பற்றியும் தெளிவான கருத்து இல்லாத, சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாமல் எல்லாவற்றையும் மனைவியையும் மைத்துனனையுமே கேட்டு முடிவெடுக்கிற இவரா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்? 

சொல்லுங்கள் தமிழர்களே! இவருக்கா உங்கள் வாக்கு?! 

(நான் பிரதிலிபி தளத்தில் ௭-௨- அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀

தொடர்புடைய பதிவு: 
நாடாளலாமா நம் நாயகர்கள்? – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்!

நன்றி:

உசாத்துணை: தமிழ் விக்கிப்பீடியா, ஆங்கில விக்கிப்பீடியா


படங்கள்: கீச்சகம், தமிழ் விக்கிப்பீடியா, Adam Jones adamjones.freeservers.com, தமிழ் ஒன் இந்தியா.


விழியம்: dummybaava007.

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி கரிகாலன் அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

      நீக்கு
  2. பதில்கள்
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி பூனிகா அவர்களே! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  3. இணையம் பிரச்சனை பண்ணியதால் இப்போதுதான் வாசித்து முடித்தோம் சகோ. என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அப்படியே சிறிது நேரம் அமைதியாகிவிட்டோம். அதாவது ஒவ்வொரு வரியும் உண்மையைச் சொல்லுகின்றது. தெளிவான பார்வை. மிக மிக அழகாக தீர்க்கமாகச் சிந்தித்து எழுதப்பட்டக் கட்டுரை. ஒரு நல்ல அரசியல் கட்டுரை என்று சொன்னால் மிகையல்ல.

    சிவப்பெழுத்துகள் அகச்சிவப்புத்தமிழின் "ஹைலைட்" (இதற்குத் தமிழில் என்ன சொல்ல என்று தெரியவில்லை நண்பரே!) தெளிவற்ற சிந்தனைகளை உடையவர் தமிழ்நாட்டிற்குத் தலைவராக வர முடியுமா என்றால் முடியும் முடியாது என்பதையும் விட, "கூடாது" என்பதே எங்கள் தரப்பு. இந்த ஊடகங்கள் நினைத்தால் எவ்வளவோ நல்லது செய்யலாம். ஒரு புரட்சியே செய்யலாம். சாதிக்கலாம். அந்த அளவிற்கு உறுதியானவை அந்தத் தூண்கள். ஆனால் நடப்பதோ சுய வியாபாரம், பரபரப்பிற்காகச் செயல்படுதல், சுய ஆதாயம் என்று வேண்டாதவற்றை ஊதிப் பெருக்கிவிட்டன. அரசியல் ஆதாயம் கூட அவர்களுக்குப் பின்புலமே. அதை வைத்துத்தான் செய்திகள். அதற்கு எவ்வளவு பணம் கை மாறியதோ. உங்கள் வரிகள் அனைத்தும் உண்மையைச் சொல்லுவதால் மனம் வேதனைப்படுகின்றது. உண்மை வலிக்கத்தான் செய்யும். தமிழ்நாட்டின் தலைவிதி மாறாதா என்ற ஏக்கம் வருகின்றதுதான். நேர்மை, நல்ல சிந்தனைகள், நல்ல உள்ளம் கொண்ட "கேரிஸ்மாட்டிக்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு தலைவரின் கையில் தமிழ்நாடு எப்போது வரும்? என்ற ஏக்கம்.

    ஒவ்வொரு வரியையும் ஏற்றுக் கொள்கின்றோம் உங்கள் முடிவு முத்தாய்ப்பு உட்பட.

    அருமையான ஓர் அரசியல் கட்டுரைக்கு எங்கள் வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி ஐயா, கீதா அம்மணி! உங்கள் இருவரின் மனம் திறந்த பாராட்டுக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

      ஊடகங்கள் பற்றி நாம் ஒரே சமயத்தில் எழுதியிருக்கிறோம்! :-)

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. விசயகாந்த் பற்றிய இன்றைய அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கு ஊடகங்கள் தலையாய பங்காற்றியிருக்கின்றன. ஆனால், அதன் பின்னணியில் ஒரு நல்ல காரணமும் உண்டு.

      நம்மைப் போலவே மாற்றத்தை விரும்பும் சில நல்ல ஊடகங்கள் கருணாநிதி, செயலலிதா இருவருக்கும் மாற்றாக விசயகாந்த் வந்ததும் அவரை அளவுக்கு மிஞ்சி உயர்த்திப் பிடித்தன. மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவுதான் முதலில் அவர் பெற்ற அந்த 8 விழுக்காடு வாக்குப்பதிவு. ஆனால், அதன் பின் நடந்தவை செயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெருந்தலைகளின் முகமூடித் தேடல் காரணமாகவும், வெளியுலகுக்கே தெரியாமல் அரசியல் காய்களை நகர்த்தும் சோ போன்ற சில பின்னணி நாடகர்களின் சூழ்ச்சிகளாலும்தாம். இதற்கு நாம் ஊடகங்களை நொந்து எந்தப் பலனுமில்லை. ஊடகங்கள் மீது இப்பொழுது இருக்கும் ஒரே குற்றம், இந்தக் கணக்கீட்டுக் குழப்பத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் இருப்பதுதான். நான் மிக மிக மதிக்கும், நேசிக்கும் ஊடகங்களும் இந்தக் குற்றத்தைச் செய்தே வருகின்றன. வருந்துகிறேன்!!

      மற்றபடி பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக, விற்பனைப் போட்டி - இலாபம் போன்றவற்றுக்காகப் பல ஊடகங்கள் செயல்படுகின்றன என்பது உண்மைதான் எனினும், விசயகாந்த் விதயத்தில் அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு தேவையும் விசயகாந்த் தரப்புக்கு இல்லை. மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் தூண்கள் இரண்டும் அடுத்தடுத்துத் தாங்கிப் பிடிக்க ஓடி வரும்பொழுது ஊடக வெளிச்சம் அவர் மீது தானாக விழுகிறது; விழுந்தாக வேண்டி வருகிறது. எனவே, அவர் காசு கொடுத்தோ அல்லது அவர் தரப்பிலிருந்து அப்படி எந்த ஒரு இலாபத்தையும் பெற்றுக் கொண்டோ ஊடகங்கள் இப்படிச் செய்வதாக எண்ண இடமில்லை என்பதே என் கருத்து.

      உங்களுடைய, நம்முடைய அந்த வலிகளும் வேதனைகளும் கண்டிப்பாகத் தீரும்! நம் ஏக்கம் நிறைவேறும்!

      மிக்க நன்றி!

      நீக்கு
    2. "தெளிவற்ற சிந்தனைகளை உடையவர் தமிழ்நாட்டிற்குத் தலைவராக வர முடியுமா என்றால் முடியும் முடியாது என்பதையும் விட, "கூடாது" என்பதே எங்கள் தரப்பு" - அருமையாகச் சொன்னீர்கள்!

      (இதை மேலே குறிப்பிட நினைத்து வழக்கம் போல் மறந்து விட்டேன் :-))

      நீக்கு
  4. மற்றபடி பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக, விற்பனைப் போட்டி - இலாபம் போன்றவற்றுக்காகப் பல ஊடகங்கள் செயல்படுகின்றன என்பது உண்மைதான் எனினும், விசயகாந்த் விதயத்தில் அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு தேவையும் விசயகாந்த் தரப்புக்கு இல்லை. மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் தூண்கள் இரண்டும் அடுத்தடுத்துத் தாங்கிப் பிடிக்க ஓடி வரும்பொழுது ஊடக வெளிச்சம் அவர் மீது தானாக விழுகிறது; விழுந்தாக வேண்டி வருகிறது. எனவே, அவர் காசு கொடுத்தோ அல்லது அவர் தரப்பிலிருந்து அப்படி எந்த ஒரு இலாபத்தையும் பெற்றுக் கொண்டோ ஊடகங்கள் இப்படிச் செய்வதாக எண்ண இடமில்லை என்பதே என் கருத்து.// மனதிற்கு ஒரு சமாதானம் சகோ. இப்படி இல்லை என்பது. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின் போதும் பெட்டிகள் கைமாறி ஊதல்கள் நடந்திருக்கின்றன. ஒரு சில ஊடகங்கள் கட்சி சார்ந்து இயங்குவதால் (மறைமுகமாக). அந்த எண்ணத்தில் வந்தக் கருத்துதான் அது. இப்போது தெளிவாகிவிட்டது. மிக்க நன்றி சகோ.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே அருமையான அலசல் நம்மவர்களுக்கு சினிமாக்காரர்களின் நிழல் சாகசம் உண்மை என்பது போல் மனதில் நுழைந்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டது இது என்று மாறுமோ தெரியவில்லை இதன் ஆரம்ப நிலையாளர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்ற பாமரர்கள் பிறகு இப்படியே தொடர்ந்து ரஜினிகாந்த், இப்பொழுது அஜித் நாளையே இவனும் அரசியலுக்கு வரலாம்.
    (எவனுமே தமிழன் இல்லை என்பது முக்கிய விடயம்)

    உதாரணம் மக்கள் நலனுக்காக பல வருடங்களுக்காக தெருவில் நின்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்காரரை நேற்று வந்த வி.............. குஷ்பு தோற்கடித்து விடலாம் இதுதான் இன்றைய தமிழகம் என்ன செய்வது நண்பரே.... ஏதாவது யோசனை சொல்லுங்கள்.
    மேலே வி.................. இடைப்பட்ட இடத்தில் ஐ.பி போட்டுக் கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாமல்...

    எனது பதிவு Apple TV வாருங்கள் இதைப்பற்றியதே...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் காரமான கருத்துக்கு முதலில் என் நன்றி நண்பரே!

      மற்ற நடிகர்கள் மீதான மக்களின் மோகம் பற்றி நீங்கள் கூறுவது உண்மைதான் என்றாலும், விசயகாந்தைப் பொறுத்த வரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விசயகாந்தை மக்கள் நகைச்சுவைக் கோமாளி போலத்தான் பார்க்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் கைப்பேசிகளை வாங்கிப் பாருங்கள்! தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் வெளியாகும் எத்தனையோ நகைச்சுவை நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு விசயகாந்தின் பேச்சுக்களைத்தான் தரவிறக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது பார்த்தும் பகிர்ந்தும் சிரித்து மகிழ்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டுக் கட்சிகள் விசயகாந்துக்குத் தரும் அளவுக்கு மிஞ்சிய முதன்மைத்தனம்தான் இன்றைய சிக்கல். இது விசயகாந்திடம் இல்லாத செல்வாக்கை இருப்பதாக நம்ப வைத்து அதன் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர்ந்து விடும் என்பதே என் அச்சம். அதைத்தான் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

      மற்றபடி, அசீத் அரசியலுக்கெல்லாம் வர மாட்டார். அவருக்குத் தான், தன் குடும்பம் என வாழ்வதுதான் பிடிக்கும். பொது வாழ்க்கை, பொதுவெளியில் வந்து பேசுவது போன்றவையெல்லாம் அவருக்குப் பிடிக்காதவை. எனவே, அவர் ஒருநாளும் அரசியலுக்கு வர மாட்டார் என்பது உறுதி! ஆனால், விசய் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம்.

      குஷ்பு கதையும் ஏறத்தாழ இதுதான். பொதுவுடைமையாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதில்லை என்பது உண்மைதான். அதற்காக குஷ்புக்கு வாக்களிக்கும் அளவுக்குத் தமிழர்கள் இன்னும் குட்டிச் சுவராகி விடவில்லை என்பதே என் நம்பிக்கை. அரசியலுக்கு வரும் முன்பும், வந்த பின்பும் எப்பொழுது பார்த்தாலும் தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் எதிராகவே பேசி, நடந்து வரும் குஷ்பு இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தாலும் கடைசி வரை சட்டமன்றத்தில் அவர் கடைநிலை ஊழியராகக் கூட ஆக முடியாது என அடித்துக் கூறுவேன்!

      மற்றபடி, பொதுவாகப் பார்க்கும்பொழுது நம் மக்களுக்குத் திரை மோகம் மிகுதிதான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அரசியல் வேறு, திரைப்படம் வேறு என உணரும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. திரைப்படங்களின் தன்மையே இப்பொழுது முற்றிலும் வேறாக ஆகி வருகிறது. முன்பு போல் தனி ஒரு நாயகனை உயர்த்திப் பிடிக்கும் படங்கள் இப்பொழுது அவ்வளவாக வெற்றி அடைவதில்லை. மக்களின் திரைப் பார்வை பன்மடங்கு மேம்பட்டு இருக்கிறது. எனவே, உங்கள் கவலை தீரும் நாள் விரைவில் வரும். கண்டிப்பாக உங்கள் பதிவைப் படிக்க வருவேன்.

      உங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. வருங்கால..... இவரை ஆம்பிளை ஜெயலலிதா என்றே சொல்லாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா!... ஹா!... அந்தளவுக்கெல்லாம் இவர் கனம் பொருந்தியவர் இல்லை ஐயா! தானாகவும் தெரியவில்லை தகுதியுள்ளவர்களை வைத்துக் கொண்டு காய் நகர்த்தவும் தெரியவில்லை. இவராவது ஆண் ஜெயலலிதாவாவது! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  7. ஆண் ஜெயலலிதாவை தெரிந்து கொள்ள இவற்றை படியுங்கள் நண்பரே
    http://www.vinavu.com/2011/01/12/vijayakanth/ வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!..

    பதிலளிநீக்கு
  8. <a href=http://www.vinavu.com/2011/01/12/vijayakanth/p:// வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!
    </a

    பதிலளிநீக்கு
  9. சினிமாக்காரன்
    ஒரு முகமூடியை கிழிப்பதற்குள்
    பத்து முகமூடிகளை அணிந்துகொள்வான்

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்