யாருக்காவது பிறந்தநாள் என்றால் நூறாண்டு வாழ்க என்போம். நூறாண்டு எப்படி வாழ வேண்டும் எனக் கேட்டால் "நல்லகண்ணு போல் வாழ்க" எனலாம்.
வியாழன், டிசம்பர் 26, 2024
நல்லகண்ணு 100
இ.பு.ஞானப்பிரகாசன்26.12.24அரசியல், நூற்றாண்டு, பிறந்தநாள், பொதுவுடைமை, பொதுவுடைமைக் கட்சி, வாழ்த்து
கருத்துகள் இல்லை
நேர்மை, நாணயம், உழைப்பு, தொண்டு, உரிமைப் போராட்டம் அனைத்துக்குமான பருவடிவம் தோழர் நல்லகண்ணு!
இவர் மட்டும் ஓர் 5 ஆண்டுகள் இங்கு தலைமையமைச்சராக இருந்திருந்தால் தேர்தல் என்பது இருப்பவர்களுள் குறைந்த கெட்டவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையாக மாறியிருக்காது.
இவர் மட்டும் ஓர் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருந்தால் அரசியல் என்பது தகாத சொல்லாக ஆகியிருக்காது.
இவர் ஏன் அத்தகைய பதவிகளையெல்லாம் அடையவில்லை? ஏனெனில் இவருடைய ஆட்சியில் வாழும் அளவுக்கு நமக்குத் தகுதியில்லை.
அந்தத் தகுதி நமக்கு வரும் வரை ஐயா வாழட்டும்!
செம்மை செழிக்கட்டும்!
செவ்வாய், ஜூன் 25, 2024
தமிழோடு ஓர் இன்மாலைப்பொழுது!
இ.பு.ஞானப்பிரகாசன்25.6.24அனுபவம், சந்திப்பு, தமிழறிஞர் முத்துநிலவன், நட்பு, நூல்கள், பதிவுலகம்
2 கருத்துகள்
நேற்று (24.06.2024) இதே நேரம் சுவைத்த அந்தத் தித்திப்பு இன்னும் கூட இனித்துக் கொண்டே இருக்கிறது நெஞ்சில். ஆம், தமிழறிஞர் நா.முத்துநிலவன் ஐயாவுடன் கழிந்தது நேற்றைய இன்மாலைப் பொழுது!
தமிழ் வலைப்பூக்கள் திசையெட்டும் மணம் பரப்பிக் கொண்டிருந்த 'தமிழ்மணம்' காலத்திலிருந்தே ஐயாவுடன் பழக்கம் உண்டு. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தப் பழக்கம் அடிக்கடி தொலைபேசும் வழக்கமாயிற்று. குறிப்பாக, போன ஆண்டு 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் அவர் எழுதிய, இன்னும் மிகச் சில நாட்களில் புத்தகமாக வெளியாக இருக்கிற 'தமிழ் இனிது' தொடர் எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.
புதன், ஏப்ரல் 10, 2024
சிற்றலை மீதமர் தும்பி – நூல் மதிப்புரை
சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!
பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.
ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!
பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.
முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.
அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!
காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!
இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை:
சனி, ஜனவரி 27, 2024
கனவின் இசைக்குறிப்பு - வாழ்த்துரை
இ.பு.ஞானப்பிரகாசன்27.1.24அனுபவம், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன், நட்பு, நிகழ்வுகள், நூல்கள், பதிவுலகம்
1 கருத்து
தகைசால் தமிழ்ப் பெருமக்கள் நிறைந்த அவைக்குப் பணிவன்பான வணக்கம்!
நான் உங்கள் இ.பு.ஞானப்பிரகாசன். என் உடன்பிறப்பின் உதவியோடு உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளைக் களவாட இது ஒரு சிறு முயற்சி!
கனவின் இசைக்குறிப்பு - கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய பல்லாண்டுக் காலக் கனவின் அச்சு வழி அரங்கேற்றம்!
நம் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள் பதிப்புரையில் சொல்லியிருந்தார், இந்த அரங்கேற்றத்தைச் சாத்தியப்படுத்தியவனே நான்தான் என்று. ஆனால் எனக்கும் முன்னதாக இதற்கு அடிக்கல் நாட்டியவர் அவர்கள் மூத்த மகள் நிறைமதிவதனா.
“வெறுமே தாளில் வெளியிடுவதில் என்ன இருக்கிறது? இணைய வழியில் இக்கவிதைகள் உலகெங்கும் போகின்றனவே, போதாதா?” என்று நாங்கள் நினைத்திருந்த நேரத்தில், நிறைமதி வலியுறுத்திய பிறகுதான் இனி மைதிலி அவர்களின் கவிதைகளைத் தொகுப்பாக்குவது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தோம். அந்த வகையில் இந்தக் கவிமலர்கள் செண்டானதில் நிறைமதியின் பங்கு இன்றியமையாதது.
அடுத்து, இந்தத் தொகுப்பு வெளியீடு தள்ளிப் போகக் காரணம் தான்தான் என்றும் தோழர் கஸ்தூரிரங்கன் பதிப்புரையில் சொல்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும் இது இன்று இவ்வளவு வேகமாகப் புத்தக வடிவம் பெறக் காரணமும் அவர்தான்.
யார் யாரிடம் எந்தெந்த வேலையை ஒப்படைத்தால் விரைந்து முடிவடையும் என்பதைத் துல்லியமாகக் கணித்து ஒரே வாரத்தில் அவ்வளவு நேர்த்தியாக, அழகாக இதை நூலாய்க் கோத்து வாங்கி விட்டார் அவர்.
இக்கட்டான இறுதி மணித்துளிகளில் அவர் எடுத்த உடனடி முடிவுகள்தாம் இவ்வளவு எழில்மிகு புத்தகமாக இதை உருவாக்கியிருக்கின்றன.
இதுவரை அவரை ஒரு நல்ல ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்று தன் இணையருடன் கைகோத்துப் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கண்டிப்பாக அவர் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும்; மலர்த்தரு பதிப்பகத்தில் பூக்கும் புத்தக மலர்களின் மணம் தமிழுலகம் எங்கும் கமழ வேண்டும் என என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரம் கவிஞர் யாழி கிரிதரன், எழுத்தாளர் லட்சுமி சிவகுமார் ஆகிய இருவர் மட்டும் இல்லாதிருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வெளியீடு சாத்தியமாகியிருக்காது.
பத்தாண்டுக் காலமாக இந்தத் துறையில் இருப்பவன், ஓரிரு பெரிய பதிப்பகங்களுக்குப் பணியாற்றியவன் எனும் சிறு தகுதியில் சொல்கிறேன், லட்சுமி சிவகுமார் அவர்களின் பணித்திறத்தைப் போல் இதுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. உண்மையிலேயே அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு! இந்தப் புத்தகத்தைப் பிழை திருத்தியவன் எனும் முறையில் இதை இங்கே பதிவு செய்வது என் கடமை.
அவருடைய இணையற்ற திறமையைத் தமிழுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப் படைப்பாளிகள் நிறைந்த இந்த அவையில் பணிவன்புடன் பரிந்துரைக்கிறேன்.
இன்னும் கூடப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டிய வியத்தகு பங்கேற்பாளர்கள் இந்த நூலாக்கத்தில் உண்டு. இருந்தாலும் அதை விழாநாயகி அவர்கள் செய்வதுதான் முறை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு இனி கவிஞர் பற்றியும் நூல் பற்றியும் சில சொற்கள்.
வானில் மேகங்கள்
வரையும் கோலங்கள்
ஒரு சமயம்
பாயும் புலியாகும்
மறுநொடியே
வீழும் துளியாகும்
ஒருமுறை
அசைகிற தேராகும்
மறுமுறை
விசையுறும் பந்தாகும்
இந்தப் படைப்புகளையெல்லாம்
மேகம் யாருக்காகச் செய்கிறது?
யார் பார்க்கவும் அல்ல!
அது மேகத்தின் தன்னியல்பு.
அப்படித்தான் நம் கவிஞரும். கவிதை எழுதுவது என்பது அவருடைய இயல்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும் கவிதை, சோகமாக இருந்தாலும் கவிதை, கல்வியைப் பற்றியும் கவிதை, தங்கையின் கம்மலைப் பற்றியும் கவிதை, பட்டாம்பூச்சிக்காகவும் கவிதை, பார்ப்பனியத்தை எதிர்த்தும் கவிதை என எதை வேண்டுமானாலும் கவிதை எனும் சிமிழுக்குள் அடைத்து விடுகிற அவருடைய மாயச்சாலம் ஒவ்வொரு தடவையும் வியக்க வைப்பது!
நானும் அவர்தம் பிற நண்பர்களும் அடிக்கடி கேட்போம். உங்களைப் போல் கவிதை எழுத எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று. அவர் எங்களுக்குக் குறியீடு, படிமம் போன்றவை பற்றி விளக்குவார். என்னைப் பொருத்த வரையில் அது அப்பொழுதுக்குப் புரியும். பின்னர் குழம்பி விடும்.
இப்பொழுது கவிஞரின் படைப்புகளையெல்லாம் தொகுத்து, மீண்டும் மொத்தமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தபொழுதுதான் புரிந்தது. கவிதை என்பது வெறும் இலக்கிய வடிவம் இல்லை; அது ஒரு தனி மொழி! தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்துக் கவிதை மொழியையும் அவர் கற்றிருக்கிறார். உண்மையில் அவர் கவிதையை எழுதவில்லை. தான் பார்க்கிற, சுவைக்கிற, தன்னைப் பாதிக்கிற அனைத்தையும் கவிதை எனும் மொழியில் மொழிபெயர்த்து வைக்கிறார், அவ்வளவுதான்.
இதை உணர்ந்த அந்த மணித்துளியில் ஓரிரு கவிதைகள் அவர் போலவே எழுத எனக்கும் கைவந்தது. சில நாட்கள் நானும் மீண்டும் கவிப்பித்துப் பிடித்துத் திரிந்தேன்.
ஆனால் இதுவே, மைதிலி அவர்களின் எளிய படைப்புகள் தொடர்பான என் அனுபவம் மட்டும்தான். மறுபுறம், சராசரி வாசகனுக்குப் புரியாத நுட்பமான கவிதைகளை எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர் என்பது நாம் அறிந்ததே! பெரிய கவிஞர்கள் பலர் அவருடைய அந்தக் கவிதைகளைக் குறிக்கலைப்பு (Decode) செய்து அந்தக் கவித்தமிழில் திளைத்து மகிழ்வதையும் நாம் பேசுபுக்கில் பார்த்திருக்கிறோம்.
இப்படி வாசகர்களையே கவிஞர்களாகவும் கவிஞர்களையே வாசகர்களாகவும் மாற்றிவிடும் இந்த ரசவாதத்தில் மூழ்கி முத்தெடுக்கப் படிப்போம், பரப்புவோம் இந்தக் கனவின் இசைக்குறிப்பை!
அனைவருக்கும் நனி நன்றி! நேச வணக்கம்!
படம்: நன்றி மலர்த்தரு பதிப்பகம்.
ஞாயிறு, ஜனவரி 07, 2024
கனவின் இசைக்குறிப்பு - வாழ்வின் ஒரு முக்கியமான மாலைப்பொழுது
இ.பு.ஞானப்பிரகாசன்7.1.24அனுபவம், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன், நட்பு, நிகழ்வுகள், நூல்கள், பதிவுலகம்
2 கருத்துகள்
அன்பிற்கினிய பதிவர், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய கனவின் இசைக்குறிப்பு நூல் வெளியீடு நேற்று (2024, சனவரி 06) மனம் நெகிழ நிறைவேறியது.
இரண்டு இறக்கைகளிலும் கவிதைகளையே சிறகுகளாய்ச் சுமந்து இணைய வானில் உலவிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பறவையின் கனவு நனவான அந்தச் சிறந்த நாள் உலகம் போற்றும் பெருங்கவிஞர் கலீல் கிப்ரானின் பிறந்தநாளாகவும் அமைந்தது காலம் செய்த வாணவேடிக்கை!
மாபெரும் படைப்புலகப் பயணத்தில் சகா மைதிலி அவர்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த முதல் அடிக்கு என்னாலும் உதவ முடிந்ததில் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்!
என் அம்மா புவனேசுவரி அவர்களுக்கு சனவரி 1-இலிருந்தே கடுமையான கால்வலி. சகாவைத் தன் மகளாகவும் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களைத் தன் மகனாகவும் கருதுபவர் அவர். அவர்களும் அப்படித்தான். அப்படிப்பட்டவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் என்ன மாயமோ! ஐந்து நாள் மருந்துகள் சேர்த்து வைத்துப் பலனளித்தது போல் நேற்றுக் காலையிலிருந்தே அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு தேறத் தொடங்கி விட்டது. மாலை, விழாவுக்குக் கிளம்பியே விட்டார்!
தவிர என் பாசத் தங்கை சிரீதேவி, நேச மைத்துனர் ரசாக், தம்பி மனைவி உமையாள், எங்கள் செல்லக்குட்டி மகிழினி, அப்பா இளங்கோவன், நான் மகனாகவே போற்றும் குட்டித்தம்பி சங்கர மகேசு, அன்புச் சித்தி குணலட்சுமி, சித்தப்பா மோகன்குமார் என எங்கள் குடும்பத்தில் சிலரைத் தவிர மற்ற எல்லாருமே கலந்து கொண்ட குடும்ப விழாவாகவே இது அமைந்தது.
இந்தப் பத்தாண்டுக் கால நட்புறவில் ஒருபொழுதும் கவிஞர் என்னை ஒருமையில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று ஏற்புரையில், "...என் நண்பன், இங்க வரலைன்னாலும் அவன் மனசெல்லாம் இங்கதான் இருக்கும்..." என்று பேசியபொழுது மதிப்பு எனும் கரையையெல்லாம் தகர்த்துக் கொண்டு பாய்ந்த நட்பு வெள்ளம் இருவர் கண்ணிலும் சற்றே எட்டிப் பார்த்தது!
நிகழ்ச்சி முடிந்ததும் இந்தப் புத்தகப் பதிப்புப் பணியைப் பொறுப்பேற்று முடித்துத் தந்த கவிஞர் யாழி கிரிதரன் அவர்கள் அழைத்துப் பேசி விழா இனிது நடந்ததாகத் தெரிவித்ததோடு "ஏன் வரவில்லை?" என்றும் கேட்டார். உடல்நிலை காரணமாக வர இயலவில்லை என்றதும் வருத்தப்பட்டதோடு பிறகு வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அன்பு கண்டு மகிழ்ச்சி!
தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களுடன் பேசியபொழுது பதிவர் மெக்னேசு திருமுருகன் அவர்களோடும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தற்பொழுது எழுதுவதில்லை என்றது வருத்தமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊக்கம் அவர் தூவலுக்கு மீண்டும் மையூற்றும் என நினைக்கிறேன்.
வீட்டுக்கு வந்த அம்மா நிகழ்ச்சிக்குப் போன உடன் தன்னைக் கட்டியணைத்து வரவேற்ற கவிஞரின் மூத்த மகள் நிறைமதிவதனா, கடைசி வரை கூடவே இருந்து கலகலப்பூட்டிய அவர் இரண்டாவது மகள் மகிமா, தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள்தம் தங்கை வசுமதி அண்ணி, அங்குமிங்கும் ஓடிய குட்டித் தேவதையான அவர் மகள் பிரதன்யா, திரீ ரோசசு கவியணியின் இதர ரோசாக்கள் ரேவதி, கீதாஞ்சலி மஞ்சன் என அனைவரைப் பற்றியும் குதூகலமாகக் குறிப்பிட்டார். மேலும் தங்கள் இனிய அன்பை என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிய எழுத்தாளுமைத் தோழர்கள் யோகானந்தி, சிரீமலையப்பன், மேனகா ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். தேடிப் போய்க் கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களுடன் தான் படமெடுத்துக் கொண்டதையும் தெரிவித்தார். தன் இணையருடன் கைகோத்து இதே மேடையில் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் தோழர் கஸ்தூரிரங்கன் நன்றியுரையில் என்னுடனான நட்பு பற்றிச் சொன்ன விதத்தையும் குறிப்பிட்டார். அது அவ்வளவு அன்பு தோய்ந்திருந்தது!
மறதி காரணமாய்ப் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து என் நட்பார்ந்த கைக்குலுக்கல்கள்!
இந்த விழா வெறும் முன்னோட்டம்தான் (Trailer), முழுப் படம் புதுகையில் என்றார் தோழர் கஸ்தூரிரங்கன்!
காத்திருப்போம்! அடுத்த கலக்கலுக்கு!! 😊🎆🎇🎉🎊