அன்பிற்கினிய பதிவர், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய கனவின் இசைக்குறிப்பு நூல் வெளியீடு நேற்று (2024, சனவரி 06) மனம் நெகிழ நிறைவேறியது.
இரண்டு இறக்கைகளிலும் கவிதைகளையே சிறகுகளாய்ச் சுமந்து இணைய வானில் உலவிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பறவையின் கனவு நனவான அந்தச் சிறந்த நாள் உலகம் போற்றும் பெருங்கவிஞர் கலீல் கிப்ரானின் பிறந்தநாளாகவும் அமைந்தது காலம் செய்த வாணவேடிக்கை!
மாபெரும் படைப்புலகப் பயணத்தில் சகா மைதிலி அவர்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த முதல் அடிக்கு என்னாலும் உதவ முடிந்ததில் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்!
என் அம்மா புவனேசுவரி அவர்களுக்கு சனவரி 1-இலிருந்தே கடுமையான கால்வலி. சகாவைத் தன் மகளாகவும் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களைத் தன் மகனாகவும் கருதுபவர் அவர். அவர்களும் அப்படித்தான். அப்படிப்பட்டவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் என்ன மாயமோ! ஐந்து நாள் மருந்துகள் சேர்த்து வைத்துப் பலனளித்தது போல் நேற்றுக் காலையிலிருந்தே அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு தேறத் தொடங்கி விட்டது. மாலை, விழாவுக்குக் கிளம்பியே விட்டார்!
தவிர என் பாசத் தங்கை சிரீதேவி, நேச மைத்துனர் ரசாக், தம்பி மனைவி உமையாள், எங்கள் செல்லக்குட்டி மகிழினி, அப்பா இளங்கோவன், நான் மகனாகவே போற்றும் குட்டித்தம்பி சங்கர மகேசு, அன்புச் சித்தி குணலட்சுமி, சித்தப்பா மோகன்குமார் என எங்கள் குடும்பத்தில் சிலரைத் தவிர மற்ற எல்லாருமே கலந்து கொண்ட குடும்ப விழாவாகவே இது அமைந்தது.
இந்தப் பத்தாண்டுக் கால நட்புறவில் ஒருபொழுதும் கவிஞர் என்னை ஒருமையில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று ஏற்புரையில், "...என் நண்பன், இங்க வரலைன்னாலும் அவன் மனசெல்லாம் இங்கதான் இருக்கும்..." என்று பேசியபொழுது மதிப்பு எனும் கரையையெல்லாம் தகர்த்துக் கொண்டு பாய்ந்த நட்பு வெள்ளம் இருவர் கண்ணிலும் சற்றே எட்டிப் பார்த்தது!
நிகழ்ச்சி முடிந்ததும் இந்தப் புத்தகப் பதிப்புப் பணியைப் பொறுப்பேற்று முடித்துத் தந்த கவிஞர் யாழி கிரிதரன் அவர்கள் அழைத்துப் பேசி விழா இனிது நடந்ததாகத் தெரிவித்ததோடு "ஏன் வரவில்லை?" என்றும் கேட்டார். உடல்நிலை காரணமாக வர இயலவில்லை என்றதும் வருத்தப்பட்டதோடு பிறகு வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அன்பு கண்டு மகிழ்ச்சி!
தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களுடன் பேசியபொழுது பதிவர் மெக்னேசு திருமுருகன் அவர்களோடும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தற்பொழுது எழுதுவதில்லை என்றது வருத்தமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊக்கம் அவர் தூவலுக்கு மீண்டும் மையூற்றும் என நினைக்கிறேன்.
வீட்டுக்கு வந்த அம்மா நிகழ்ச்சிக்குப் போன உடன் தன்னைக் கட்டியணைத்து வரவேற்ற கவிஞரின் மூத்த மகள் நிறைமதிவதனா, கடைசி வரை கூடவே இருந்து கலகலப்பூட்டிய அவர் இரண்டாவது மகள் மகிமா, தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள்தம் தங்கை வசுமதி அண்ணி, அங்குமிங்கும் ஓடிய குட்டித் தேவதையான அவர் மகள் பிரதன்யா, திரீ ரோசசு கவியணியின் இதர ரோசாக்கள் ரேவதி, கீதாஞ்சலி மஞ்சன் என அனைவரைப் பற்றியும் குதூகலமாகக் குறிப்பிட்டார். மேலும் தங்கள் இனிய அன்பை என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிய எழுத்தாளுமைத் தோழர்கள் யோகானந்தி, சிரீமலையப்பன், மேனகா ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். தேடிப் போய்க் கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களுடன் தான் படமெடுத்துக் கொண்டதையும் தெரிவித்தார். தன் இணையருடன் கைகோத்து இதே மேடையில் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் தோழர் கஸ்தூரிரங்கன் நன்றியுரையில் என்னுடனான நட்பு பற்றிச் சொன்ன விதத்தையும் குறிப்பிட்டார். அது அவ்வளவு அன்பு தோய்ந்திருந்தது!
மறதி காரணமாய்ப் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து என் நட்பார்ந்த கைக்குலுக்கல்கள்!
இந்த விழா வெறும் முன்னோட்டம்தான் (Trailer), முழுப் படம் புதுகையில் என்றார் தோழர் கஸ்தூரிரங்கன்!
காத்திருப்போம்! அடுத்த கலக்கலுக்கு!! 😊🎆🎇🎉🎊
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
பாராட்டுகள், மேலும் பற்பல நூல்கள் வெளியிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலில் ஜிப்ரான் போல ஜன7 எனக்கும் முக்கியமான நாள்தான், என் மகனின் பிறந்தநாள்..
பதிலளிநீக்குதங்கள் அன்பு கமழ் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நனி நன்றி தோழரே!
நீக்குஆனால் கலில் கிப்ரான் பிறந்தநாள் சனவரி 7 இல்லை 6. நான்தான் பிழையாகக் குறிப்பிட்டு விட்டேன். பொறுத்தருள்க! இப்பொழுது திருத்தி விட்டேன்.
தங்கள் பிள்ளை யூப்பிட்டர் கோளின் நான்கு நிலவுகளை கலிலியோ கண்டறிந்த நாளில் 5ஆம் நிலவாய் உதித்திருக்கிறார்!🥳