.

திங்கள், செப்டம்பர் 14, 2015

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்


Godfathers of Reservation in India

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

கேள்வி # ௧ (1): அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய அரசு, இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்குவது முறையா?

நான் பார்த்த வரையில், நம் சமூகத்தில் மிகப் பெரும்பாலானோர் இட ஒதுக்கீட்டை சலுகை என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே முதல்பெரும் தவறு! இட ஒதுக்கீடு என்பது சலுகையே இல்லை. அனைவருக்கும் சரிநிகராக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நுட்பமான ஓர் ஏற்பாடு அது, அவ்வளவுதான்.

Is this Not Reservation?ஓட்டப் போட்டி (running race) பார்த்திருக்கிறீர்களா? அதில் வீரர்களை எப்பொழுதும் நேர்க்கோட்டில் நிறுத்த மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத்தான் நிறுத்துவார்கள். ஏன்? இப்படி நிறுத்தினால், முன்னால் நிற்பவர் முதலில் ஓடிப் போய் எல்லைக்கோட்டைத் தொட்டு விட மாட்டாரா? அப்படியானால், ஓட்டப் போட்டிகளில் முதலில் நிற்பவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனப் பொருளா?

அப்படி இல்லை! ஓட்டப்போட்டிகள் நடத்தப்படும் திடல்கள் (மைதானங்கள்) எப்பொழுதும் வட்ட அல்லது நீள்வட்ட வடிவில்தான் இருக்கும். ஒரு வட்டம், அதற்குள் இன்னொரு வட்டம் என வரையும்பொழுது ஒன்றை விட ஒன்று சிறிதாக இருப்பது இயல்பு. ஓட்டப்போட்டித் திடல்களும் இப்படித்தான். அவற்றில் ஓடுதடங்கள் (runways) வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன.

இந்நிலையில் எல்லோரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்திப் போட்டியை நடத்தினால், ஓட வேண்டிய தொலைவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். திடலின் உள்வட்ட ஓடுதடத்தின் சுற்றளவு குறைவாகவும், அதற்கு அடுத்தடுத்த ஓடுதடங்களின் சுற்றளவு கூடுதலாகவும் இருப்பதால், உள்வட்டத்தில் ஓடுபவரை விட வெளிவட்டத்தில் ஓடுபவர் கூடுதலான தொலைவைக் கடக்க வேண்டியிருக்கும். இதனால்தான் ஓட்டப்போட்டிகளில் எப்பொழுதும் ஒருவர் பின் ஒருவராக வீரர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீடு என்பதும் இப்படித்தான் நண்பர்களே!

தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.

நெஞ்சைத் தொட்டுச் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அன்றும் இன்றும் இடையிலும் தொடர்ந்து கல்வி கற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருகைக்கு முன்பான தமிழ் அரசர்கள் காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையிலாகட்டும், பிரிட்டிஷ் இந்தியா காலத்தின் திண்ணைப் பள்ளிக்கூடக் காலத்திலாகட்டும், விடுதலை பெற்ற இந்தியாவிலாகட்டும், முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றுதான் வருகிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து படிக்க வருகிற மாணவர்களுக்கு மரபணு வாயிலாகவே கல்வியறிவு ஓரளவுக்கு உண்டு. படிப்பு என்பது அவர்கள் குருதியில் (blood) ஊறியது. தவிரவும், படிப்பில் ஏதாவது ஐயங்கள் எழுந்தால் கற்பிக்க அவர்களுக்கு வீட்டிலேயே ஆட்கள் உண்டு. படிக்கிற பிள்ளைக்கு எப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற புரிதல் அவர்கள் குடும்பத்தினருக்கு உண்டு. கல்வி என்பது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு உண்டு. வீட்டிலும் வெளியிலும் அவர்கள் பழகும் இடங்களில் படித்த சமூகச் சூழல் அவர்களுக்கு உண்டு. என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவெல்லாம் வழிகாட்ட நிறைய பேர் அவர்களுக்கு உண்டு.

இதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக இல்லை. படிப்பில் ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தனியாகச் செலவு செய்து மாலை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலை. சரியாகப் படிக்காவிட்டால், பெரியவர்களை மதித்து நடக்காவிட்டால் எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழல்.

இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் கொண்ட இருவேறு பின்னணிகளிலிருந்து வருகிற இந்த மாணவர்களில், கல்விக்கு உகந்த சூழல் இல்லாத இடத்திலிருந்து வரும் மாணவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும், முழுக்க முழுக்கக் கல்வி சார்ந்த பின்னணியிலிருந்து வருகிற மாணவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! உண்மையில், உவப்பில்லாத (adverse) பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கும் அந்த ஐம்பது மதிப்பெண், நல்ல பின்னணியிலிருந்து வரும் மாணவர் எடுக்கிற நூறு மதிப்பெண்ணை விடப் பெரியது இல்லையா? அப்படிப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களை விட மதிப்பெண் தகுதியைக் (mark eligibility) குறைத்து வரையறுப்பது எப்படித் தவறாகும்?

அப்பாவோ அம்மாவோ படித்தவர்களாக இல்லாத நிலையில் ஆங்கிலம், கணிதம், இந்தி என ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியே சிறப்பு வகுப்புகளுக்குச் செலவழித்துப் படிக்க வேண்டியிருக்கிற இட ஒதுக்கீட்டு வகுப்பினரிடம், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை விடக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கட்டணத்தைக் குறைத்து வாங்குவது எப்படி சலுகையாகும்?

சரியான சூழல் இல்லாததால் படிக்க முடியாமல் தேர்வுகளில் தோல்வியுறுவது, கல்வி இடைநிறுத்தப்படுவது போன்ற பல காரணங்களால் உரிய வயதுக்குள் படிப்பை முடிக்க முடியாத அவர்களுக்காக வயது வரம்பைத் (age limit) தளர்த்துவது எப்படிப் பாகுபாடு (discrimination) ஆகும்?

இப்பொழுது, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள்! இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

கேள்வி # ௨ (2): ஏழைகள் எல்லா சாதிகளிலும்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க, குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது ஏன்?

இப்படிக் கேட்கும் நாம் முதலில் ஒரு விதயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருவது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கைதானே தவிர, பொருளாதார அடிப்படையிலானது இல்லை. காரணம், இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் படிக்கக்கூடாது, இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன தொழில்களை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நூற்றாண்டுக் கணக்காக இருந்து வந்த, வருகிற அடக்குமுறைகள் அனைத்தும் சாதியை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டனவே தவிர, பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இல்லை. ஏழை என்கிற காரணத்தால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை, குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்கிற காரணத்தைக் காட்டித்தான் மறுக்கப்பட்டது. எனவேதான், அதே சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இங்கு மட்டுமில்லை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா என நிறம், இனம், பாலினம் போன்ற பிறப்பு அடிப்படையிலான காரணங்களைக் காட்டி எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அப்படிப்பட்ட நாடுகளிலெல்லாம் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை மேலே கொண்டு வர அவர்களுக்கெனத் தனியே ஒதுக்கீடு வழங்குவது வழக்கமான ஒன்றுதான்.

கேள்வி # ௩ (3): இட ஒதுக்கீடு பெறும் சாதிகளிலும் வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களிலும் ஏழைகள் பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க, இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் செயல்படுத்தி வசதி படைத்தவர்களும் அதன் பலனைப் பெறும்படியும், உண்மையாக அரசு உதவி தேவைப்படும் ஏழைகள் பலருக்கு அது கிடைக்காமல் போகும்படியும் செய்வது எப்படி முறையாகும்?

இட ஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சேர்ந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

முதல் தலைமுறை மாணவர்கள், படிப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். அவை அனைத்தும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்தானே? எனில், இதில் ஏழை – பணக்கார வேறுபாடு எங்கிருந்து வந்தது?

இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.

ஆக, முன்பே கூறியபடி, இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டமே, குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட, குறிப்பிட்ட தொழில் தவிர மற்றவற்றைச் செய்யக்கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும், விரும்பிய பணியைச் செய்யும் உரிமையும் கிடைப்பதற்காகத்தான். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழைகளிலும் இருக்கிறார்கள், பணக்காரர்களிலும் இருக்கிறார்கள் எனும்பொழுது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படவில்லை எனக் குறை சொல்வதும், அவ்வாறு மாற்றியமைக்கக் கோருவதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி # ௪ (4): இப்படி வகுப்புவாரியாகக் கல்வி இடங்களையும் பணியிடங்களையும் வழங்குவதால் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எத்தனையோ பேர் திறமையும், தகுதியும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்களே?

உண்மைதான். ஆனால், அப்படிப் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேற்கொண்டு படிப்போ, வேலைவாய்ப்போ கிடைக்காமல் போய்விடுவதில்லை. அரசுக் கல்வியோ, அரசுப் பணியோ கிடைக்காமல் போனாலும் தனியாரிடமிருந்து அவர்கள் தங்களுக்குண்டான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். காரணம், மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களை விட அவர்கள் பெறும் மதிப்பெண் கூடுதல். ஆனால், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை விடக் குறைந்த மதிப்பெண் பெறும் மற்ற சாதி மாணவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடும் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை என்னாகும்? எந்தத் தனியார் நிறுவனம் அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வரும்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இந்தியாவில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!

அதே போல, இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டும் இன்னும் அவர்களில் பெரும்பாலோர் கல்வி பெறாதவர்களாகவும், பல விதங்களிலும் பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு சாரார் இப்படி அடிப்படை நல்வாழ்வைக் கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது, சாதிய அமைப்பு முறையை உருவாக்கி அவர்களின் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த முற்பட்ட வகுப்பினர், அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு மட்டும் தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய இடம் தொடர்ந்து எல்லாக் காலக்கட்டங்களிலும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனிதத்தன்மையா?

கேள்வி # ௫ (5): வகுப்புவாரி இட ஒதுக்கீடு எனும் பெயரில் இப்படித் திறமையான மாணவர்கள் எல்லாரையும் ஒதுக்கிவிட்டுத் திறமையில்லாதவர்களைப் பணியில் அமர்த்தினால் நாடு எப்படி முன்னேறும்?

குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் முட்டாள்களோ, கூடுதலான மதிப்பெண் பெறுபவர்கள் எல்லாரும் மேதாவிகளோ கிடையாது. அப்படியே இருந்தாலும், திறமை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் பணியில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் (guarantee) இல்லை.

என்னதான் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையாக இருப்பினும் குறைந்தளவு (minimum) தேர்ச்சியாவது பெற்றவர்களுக்குத்தான் இடங்கள் வழங்கப்படுகின்றனவே தவிர, எல்லாருக்கும் தூக்கிக் கொடுத்து விடப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு பணியைத் திறம்படச் செய்ய என்னென்ன தகுதிகளெல்லாம் தேவைப்படுமோ அவைதான் அந்தப் பணிக்கான குறைந்தளவுத் தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. ஆகவே, போதுமான தகுதியைப் பெற்ற பிறகுதான் எல்லோரும் அவரவர் இருக்கைகளை அடைந்திருக்கிறார்கள், அடைகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் ஆய்வு முடிவு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொருளாதாரப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், இட ஒதுக்கீட்டால் திறமையோ உற்பத்தித் திறனோ பாதிக்கப்படுவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. சொல்லப் போனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உயர் பதவிகளில் அமர்த்தப்படும்பொழுது தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்காக மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். (மேலும் விவரங்களுக்கு: http://goo.gl/yMZrp3).

தன்னிடம் இருக்கும் மனித ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதன் மூலம்தான் ஒரு சமூகம் முழு வேகத்தோடு முன்னேற முடியுமே ஒழிய, மேல் மட்டத்தில் இருக்கும் மிகச் சிலருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து, மற்றவர்கள் எப்படியோ போகட்டும் என விட்டுவிட்டால் அது நடக்காது. சலுகையோ, முன்னுரிமையோ, நெறித் தளர்வோ (relaxation) எந்தப் பெயரில் வேண்டுமானாலும் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், அப்படி ஏதாவது ஒன்றை வழங்கியாவது அனைவரையும் படித்தவர்களாகவும், துறைசார் திறமையுள்ளவர்களாகவும் மாற்றுவதுதான் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் ஒரே வழி. ஆக, இட ஒதுக்கீடு என்பது நாட்டின் முன்னேற்றத்தை விட்டுக் கொடுத்து மக்களை வளர்ச்சி அடையச் செய்வது இல்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் மற்ற எல்லாத் திட்டங்களையும் போலத்தான் அதுவும். எனவே, இட ஒதுக்கீட்டின் மூலம் நாடு முன்னேறாமல் போகிறது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

கேள்வி # ௬ (6): அந்தக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்தன என்பதற்காக இன்றும் இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமா?

இந்தக் காலத்தில் மட்டும் என்ன வாழ்கிறது? இன்றைக்கும் நம் சமூகத்தில் இரட்டைச் சுடுகாட்டு முறை இருக்கத்தான் செய்கிறது. இன்றும் ஊர்ப்புறங்களில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கத்தான்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் நாய் தங்கள் எல்லைக்குள் நுழையக்கூடாது எனப் பட்டப் பகலில் வெட்ட வெளிப்படையாகப் பலகை மாட்டியிருக்கும் கிராமங்கள் இன்றும்தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.

'நாட்டாமை' படம் பார்த்திருப்பீர்கள். அதில், பெரிய வணிகராகவும், ஆளுநர் முதலானோர் மதிக்கும் அதிகாரமும் செல்வாக்கும் உடையவராகவும் உள்ள ஜெய்கணேஷ் தன் ஊரின் நாட்டாமையான சரத்குமாரிடம் கைகட்டிக் குனிந்து பணிந்து பேசும் காட்சி ஒன்று வரும். அதுதான் இன்றும் இந்திய கிராமங்களின் நிலைமை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அளவுக்கு சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும், இங்கும் பொதுமக்கள் வாழும் பகுதியும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியான சேரிகளும் தனித் தனியாகப் பிரித்துத்தான் வைக்கப்பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படத்தான் செய்கிறது; தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதனால் மனம் குமுறத்தான் செய்கிறார்கள்.

ஆக, இன்னும் எதுவும் அவ்வளவு மாறிவிடவில்லை நண்பர்களே! பார்க்கப் போனால், முன்பை விட நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.

‘கௌரவக் கொலை’ என்கிற பெயரில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கொடுமை இதற்கு முன் தமிழ்நாடு காணாத பேரிழிவு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதற்காகப் பெற்ற தாயே மகளைக் கதறக் கதற நஞ்சு கொடுத்துக் கொல்வது, இதற்கென ஓர் அமைப்பே நடத்திக் கொண்டு, முற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கூடத் தூக்கிக் கொண்டு போய்த் தலையை வெட்டிவிட்டுத் தண்டவாளத்தில் வீசுவது போன்றவையெல்லாம் அம்பேத்கர் - பெரியார் காலத்தில் கூட நடந்ததில்லை.

இவை ஒருபுறம் இருக்க, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய மட்டங்களில் பார்க்கும்பொழுது, இத்தனை நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்தியும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலோர் இன்றும் அடிமட்டத் தொழில்களைச் செய்பவர்களாகவும், மிகவும் கடைமட்ட வாழ்க்கை முறையில் உழல்பவர்களாகவும், சேரி - குப்பம் போன்ற மிக மிக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிலும் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறை மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இன்றும் இருக்கிறது என்பதே உண்மை!

கேள்வி # ௭ (7): இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கியும் பெரும்பான்மையினர் இன்றும் படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும்தான் இருக்கிறார்கள் எனில், அந்தத் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகத்தானே பொருள்? அப்புறம் ஏன் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்?

ஒரு காலத்தில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அரசு ஊழியர், ஆசிரியர் வேடம் என்றாலே பஞ்சகச்ச வேட்டியோ, நாமமோதான் ஒப்பனை (make-up). எண்பதுகள் வரைக்கும் அப்படித்தான்.

ஆனால், இன்றைக்கு அரசு அலுவலகங்களில் சென்று பார்த்தால் தெரியும், எத்தனை விதமான சாதி - சமயங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு கலந்து பணிபுரிகிறார்கள் என்பது. அந்த அளவுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதிகளின் மக்கள்தொகைப்படி பார்க்கும்பொழுது முன்னுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட வராதவர்களின் எண்ணிக்கை கூடுதல், அவ்வளவுதான். அதற்காக, இட ஒதுக்கீட்டால் பலன் இல்லை என்பதில்லை.

கேள்வி # ௮ (8): எவ்வளவுதான் படித்தாலும், உயர்ந்தாலும் அதனால் ஒருவரின் சாதி மாறிவிடுவதில்லை, குறிப்பிட்ட சாதி சார்ந்த அடக்குமுறைகளுக்கு அவரும் ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது எனும்பொழுது இட ஒதுக்கீடு எதற்காக?

பொதுமக்கள் மட்டுமில்லை அரசு, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் போன்றோர் கூடத் தவறு செய்யும் இடம் இதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சாதியத்தையும், அதன் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அது பிழை! சாதி காரணமாக மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டே இரண்டு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. அந்த வகையில் அது சரியாகத்தான் பலனளித்து வருகிறது. தொடர்ந்து அதற்கான தேவையும் இருந்தே வருகிறது. ஆனால், இட ஒதுக்கீடு எனும் ஒன்றை மட்டுமே வைத்து சாதி அடிப்படையிலான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என நினைத்தால் அது மிகப் பெரிய மூடநம்பிக்கை!

கேள்வி # ௯ (9): மற்ற சாதிகளுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வழங்குவது போல முற்பட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கி விட்டால் இப்படி எந்தச் சர்ச்சைக்குமே இடமில்லாமல் போகும் இல்லையா?

மற்ற சாதியினரின் இன்றைய கீழ் நிலைக்குக் காரணமே முற்பட்ட சாதியினர்தான். அப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முன்னுரிமையை அவர்களுடைய பாதிப்புக்குக் காரணமானவர்களுக்கும் எப்படி வழங்க முடியும்?

மேலும், பல தலைமுறைகளாகக் கல்வியே கற்காதவர்கள் என்பதால்தான் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பெண், வயது, கட்டணம் என எல்லாவற்றிலும் தளர்வு (relaxation) வழங்கப்படுகிறது எனும்பொழுது தலைமுறை தலைமுறையாகப் படித்த சாதிகளிலிருந்து வருகிற முற்பட்டோருக்கு எந்தக் காரணத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியும்?

கேள்வி # ௧௦ (10): பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும்தான். ஆனால், அதற்காக முற்பட்ட சாதியினர் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வரும் முன், சாதியைக் காரணம் காட்டிப் பெரும்பாலான மக்களைக் கல்விப் போட்டியிலிருந்து அறவே ஒதுக்கிவிட்டு, கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரிய தனிச் சொத்தாகவே பல நூற்றாண்டுகளாகத் துய்த்து (அனுபவித்து) வந்தனர் முற்பட்ட பிரிவினர். அப்படியோர் அட்டூழியமான இட ஒதுக்கீட்டின் பலனை அத்தனை காலமாகப் பெற்று வந்தவர்கள், அதைச் சரி செய்வதற்கான இந்த இட ஒதுக்கீட்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது கடமை இல்லையா?

Equality Vs. Reservation

எனக்குத் தெரிந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகள் இவ்வளவுதான்.

சுருக்கமாகச் சொன்னால், பிறப்பைக் காரணம் காட்டிப் பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குத் திடீரென அந்த உரிமைகளைத் திருப்பி வழங்கும்பொழுது, அவற்றைப் பெற்றுக் கொண்டு மற்றவர்களோடு சரிநிகராகப் போட்டியிட அவர்களால் முடியாது என்பதால் அவர்களுக்காக நெறிமுறைகளையும், வரம்புகளையும் ஓரளவு தளர்த்திக் கொண்டு முன்னுரிமை அளிப்பதற்குப் பெயர்தான் இட ஒதுக்கீடு. சிலருக்கு முன்னுரிமை தருவது என ஆகி விட்டாலே அதனால் சிலருக்குப் பாதிப்பும் ஏற்படத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. ஆனால், அதனால் ஒரேயடியாக அவர்களின் வாழ்க்கைத்தரமே பாதிக்கப்பட்டு விடுவதில்லை எனும்பொழுது தங்களோடு சேர்ந்து வாழ்கிற சக மனிதர்களான தாழ்த்தப்பட்டோருக்காக முற்பட்டோர் விட்டுக் கொடுப்பதே மனிதத்தன்மை.

இவ்வளவுக்குப் பிறகும், இட ஒதுக்கீடு தவறானது என யாருக்காவது தோன்றினால், அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி!
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா?
ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால், சாதி காரணமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே. ஆக, சாதி ஒழிந்து விட்டாலே இட ஒதுக்கீட்டுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, முற்பட்ட வகுப்பினர் தங்களுக்கு சாதி தேவையில்லை எனப் புறக்கணித்து, சாதிய அமைப்பிலிருந்து வெளியே வந்தால் அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் வெளியேறுவார்கள். அதன் தொடர்ச்சியாக, சில தலைமுறைகளில் சாதி என்பதே முற்றிலும் ஒழிந்து போகும். அதற்குள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எல்லா சாதியினரும் முன்னேறியும் விடுவார்கள் என்பதால், இட ஒதுக்கீட்டையும் எடுத்து விடலாம்.

ஆனால், இட ஒதுக்கீட்டைத் தவறு எனக் கூறும் முற்பட்டவர்கள் அதற்கான தேவையை ஏற்படுத்தும் சாதிய அமைப்பிலிருந்து மட்டும் வெளியே வருவதில்லை. சாதி தவறுதான், அதனால் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது உண்மைதான் என்பவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்காத அவர்கள் அப்படிப்பட்ட சாதி அமைப்பிலிருந்து வெளிவருவதற்கு மட்டும் விரும்புவதில்லை. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாகக் கருதுபவர்களே தங்கள் சாதிய அடையாளத்தை உதற முன்வராதபொழுது இட ஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் எப்படி அதை விட்டு வெளிவருவார்கள்?

இப்படி எல்லோரும் சாதி முத்திரையைத் தங்கள் நெற்றியில் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தால் சாதி உயிர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். சாதி உயிரோடு இருக்கும் வரை அதன் காரணமாக விளையும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருக்கத்தான் செய்யும்.

ஆகவே, முற்பட்ட சாதியினரே புரிந்து கொள்ளுங்கள்! இட ஒதுக்கீட்டை அப்புறப்படுத்துவது அரசின் கையிலோ, அதனால் பலனடைபவர்களின் கையிலோ, வேறு யார் கையிலுமோ இல்லை. உங்கள் கையில்தான் இருக்கிறது! அதன் பின் உங்கள் விருப்பம்! 

The Ball is in Your Court!

(நான் கீற்று இதழில் 0-0-௨0அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி Hero News Online, FlickreviewR, MitchellKweli,

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!  
 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

19 கருத்துகள்:

  1. வணக்கம்! நான் தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்கள் ஆய்வுகட்டூரை அருமை!!!! எனக்கு சில சந்தேகங்கள்!! முற்பட்டவரோ பிற்பட்டவரோ! இருவரும் பள்ளியில் ஒன்றாகத்தான் படிக்கிறேம்!! ஆசிரியர் இருவருக்கும் ஒரேமாதிரிதான் பாடம் நடத்துகிறார்!!! இருவருக்கும் தேர்ச்சி மதிப்பண் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது (1-12 வகுப்புவறை)
    இதில் சலுகயையே இட ஒதுக்கீடே இல்லை!! ஆனால் வேலை என்னும் போதும் மட்டும் ஏன் இந்த ஒதுக்கீடு?? இதில் அறிவு திறமை என்பதற்கல்லாம் மதிப்பு கிடையாதா??? 2013 ல் நடந்ந ஆசிரியர் தகுதி தேர்வில் எத்தனை குளறுபடிகள் நடந்தது?? முதலில் 90மார்க் எடுத்தவர்களுக்குதான் வேலை என்றார்கள்!!! இதில் இட ஒதுக்கீடு பிரச்சினை என்றுகோர்ட் தலையிட்டதும்! அரசு தரப்பில் திறமைமிக்கவர்களை உருவாக்கும் ஆசிரிய பணியில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு இடமில்லை என்றார்கள்! அடுத்த தேர்வில் 85மதிப்பண் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலை உன்டு என்றார்கள்!! (பாராளுமன்ற தேர்தலை வைத்து) அனைவருக்கும் எப்படி வேலை கொடுப்பார்கள்?? பிறகு எப்படியே வேலைவழங்கிவிட்டார்கள்! பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது!! பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி இதுதான்!! அறிவு தறமைகளில் இட ஒதுக்கீடு எதற்கு???? இது என்னுடைய கேள்விதான்? ஏதும் தவறுஇருப்பின் சினம் கொள்ளாது விளக்கம் அய்யா நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா! தங்கள் முதல் வருகைக்கு என் வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீங்கள் கூறுகிறபடி, முற்பட்டவர்கள் பிற்பட்டவர்கள் என அனைவரும் பள்ளியில் ஒன்றாகத்தான் படிக்கிறோம். இருவருக்கும் ஆசிரியர்கள் ஒரே மாதிரிதான் பாடம் நடத்துகிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவரவர் வாழ்க்கை, வசதி, சூழல், பின்புலம் முதலான பல காரணிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்பதை நீங்கள் திறந்த மனதுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! குறிப்பாக முற்பட்ட, பிற்பட்ட குடும்பங்களில் படிப்புக்குத் தரப்படும் முதன்மை மாறுபடுவதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்! இது போல் எத்தனை விதங்களில் எத்தனை எத்தனை வேற்றுமைகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் மேலே விவரித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை!

      மேலும், "திறமைக்கு மதிப்புக் கிடையாதா" என்று கேட்டீர்கள். அதற்கும் முதல் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. தனக்கு உவப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வருகிற ஒருவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும், சரியாகப் படிக்காவிட்டால் மாடு மேய்க்கப் போக வேண்டியிருக்கிற, எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழலில் இருக்கிற குடும்பத்திலிருந்து வருபவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அந்த நூற்றை விட இந்த ஐம்பது பெரியது என்பதை உங்களால் உணர முடிந்தால் திறமை பின்னுக்குத் தள்ளப்படுகிறது என உங்களுக்குத் தோன்றாது.

      அது மட்டுமில்லாமல், என்னதான் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகப் பாடம் நடத்தினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்வி கற்ற தலைமுறையினராகவே இருப்பவர்களும், முதல் தலைமுறையாகப் படிக்க வருபவர்களும் ஒரே மாதிரியாக அந்தப் பாடத்தை உள்வாங்க முடியுமா என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

      இவை அனைத்தும் மேலே கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருப்பவைதாம். அப்படியிருந்தும் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்கிறீர்கள்!

      மற்றபடி, ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குளறுபடிகள் எல்லாம் வழக்கம் போலப் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதயம் எனும் பொறுப்பே இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் அரசு இயந்திர மெத்தனப் போக்கின் பின்விளைவுகள். அதற்காகச் சட்டத்தைக் குறை சொல்ல முடியுமா ஐயா?

      இதில் சினம் கொள்ள ஏதுமில்லை. இதை எழுதியவன் எனும் முறையில், இதைப் படிப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது என் கடமை! :-)

      நீக்கு
  2. ஹும்ம்ம்ம்!!! நான் இனிக்கு எழுத நினைச்சா டாபிக்கை இப்படி சுட்டுடீங்களே சகா:(((
    நான் உங்க பதிவை படிக்கவே இல்லை:(( பின்ன நீங்க எழதினபின்ன நான் எழுத எந்த பாயிண்ட் இருக்கபோகுது:)) இப்போ போறேன். மறுபடி வருவேன். வலைப்பதிவர் திருவிழா போட்டியில் உங்களுக்கு ஏற்ற இரு தலைப்புக்கள் பார்த்தேன். எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! நீங்கள் இது பற்றி எழுத நினைத்திருந்தீர்களா? தெரியாமல் போய்விட்டதே!

      //நான் உங்க பதிவை படிக்கவே இல்லை:(( பின்ன நீங்க எழதினபின்ன நான் எழுத எந்த பாயிண்ட் இருக்கபோகுது:))// - இது உங்களுக்கே சற்று மிகையாகத் தெரியவில்லையாம்மா? நீங்கள் இந்தக் கருத்தை இட்டிருக்கும் இதே நாள்தான் 'கீற்'றில் ஓர் அன்பரால் மடக்கப்பட்டு இங்கு வருகிறேன். கிரீமி லேயர் சரியா தவறா என்பது பற்றி நான் இதில் எழுதவேயில்லை. மறந்து விட்டேன். தவிர, கட்டுரையைப் படித்த பின்னும் அதிலிருக்கும் பல கேள்விகளை மீண்டும் பலர் கருத்துரையில் கேட்பதிலிருந்தே தொடர்புடைய பலருக்கு அந்தப் பதில்கள் நிறைவளிக்கவில்லை என்பதை உணர முடிகிறது. எனவே, இதே விதயம் பற்றி இதை விட நன்றாக, முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சரிதான் என ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் எழுதுங்கள்! நான் காத்திருக்கிறேன்.

      //வலைப்பதிவர் திருவிழா போட்டியில் உங்களுக்கு ஏற்ற இரு தலைப்புக்கள் பார்த்தேன். எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!// - ஆம்! அப்படித்தான் நானும் எதிர்பார்க்கிறேன் சகா! ஆனால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை. :-) பார்க்கலாம்!

      நீக்கு
  3. தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.// அருமை அருமை! கேள்விகளும் விளக்கங்களும் அனைத்தும் அருமை. முற்பட்டோர் அவர்கள் சாதியிலிருந்து வெளிவருவார்களா என்ற கேள்விக்கு பெரும்பான்மையோரைப் பற்றிச் சொல்ல முடியாது எனினும் வெளிவந்த இருவர் பற்றி தெரியும்....ஒன்று கமல்....மற்றொருவர் எங்கள் தளத்தில்....

    அருமையான கட்டுரை...வேறு வார்த்தைகள் இல்லை நண்பரே! வேறு வார்த்தைகள் எதற்கு!!!...அக்மார்க்!

    சாதிகள் ஒழிந்துவிட்டால் இந்தியா முன்னேறி எங்கேயோ சென்றிடும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி ஐயா! கீதா அம்மணி! இருவருக்கும் நேச வணக்கம்!

      மற்ற யாருடைய கருத்தையும் விட இந்தப் பதிவுக்கு நான் உங்கள் கருத்தைத்தான் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஏன் என்பது தங்களுக்கே தெரியும். "இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டேன்" என்று கூறிய தாங்களே இதை ஏற்றுக் கொண்ட பிறகு வேறு எவன் இதை ஏற்றுக் கொண்டால் என்ன, கொள்ளாவிட்டால் என்ன! தங்கள் வார்த்தைகள் எனக்கு மிக... மிக... மிக நிறைவளிக்கின்றன! மிக்க நன்றி!

      முற்பட்டோரைப் பார்த்து அந்தக் கேள்வியை எழுப்பும்பொழுது ஆணையாகத் தங்கள் இருவரின் நினைவும் எனக்கு வந்தது. "மற்றவர்கள் உனக்கு முன்னால் அமர்ந்து அசைவம் சாப்பிட்டாலும் முகம் சுளிக்கக்கூடாது" என்றெல்லாம் சொல்லிப் பிள்ளையை வளர்த்த கீதா அம்மணியையும், "சாதிகள் சாகவில்லை பாப்பா! அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா" என்றெழுதிய துளசி ஐயாவையும் மனதில் வைத்துக் கொண்டுதான் நான் அதை எழுதினேன். ஆனால், உங்களைப் போன்றவர்கள் வெகு அரிது. பெரும்பான்மையான மற்றவர்களைப் பார்த்து எழுப்பப்பட்ட கேள்வி அது. எனவே, நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ளவும் இல்லை என்பதை உங்கள் கருத்திலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காகவும் நன்றி!

      மீண்டும் சொல்கிறேன், இந்தக் கட்டுரையைத் தாங்கள் ஏற்றுக் கொண்டது எனக்குப் பெருத்த மகிழ்ச்சி! இருந்தாலும், மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இருப்பினும் தாங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம். மிக்க நன்றி!

      நீக்கு
    2. இபு ஞா நண்பரே! நாங்களும் தங்களை மதிப்பதால்தானே தங்களது கருத்துகளையும், தங்கள் எண்ணங்களையும், பதிவுகளையும் படிப்பதற்கு ஆர்வமுடனும் அதில் அறிவு பூர்வமான கருத்துகள் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தங்களை மிகவும் மதிக்கின்றோம். தாங்களும் எங்களை அதே போன்று எண்ணியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

      மாற்றுக் கருத்துகள் என்றில்லை...ஆனால் முற்பட்டோரிலும் மிகவும் திறமை வாய்ந்தவர் ஏழைகளாகவோ, நடுத்தரவர்கத்தினராகவோ இருந்தால் அவர்களால் தங்கள் திறமையை முன்னிறுத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல வாய்ப்புகளும் நழுவுகின்றன என்பது மட்டுமே வருத்தம் அளிக்கின்றது. மற்றபடி அதற்காக நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்படுபவையே...அருமையான கருத்துகள். வலுவான கருத்துகள். கட்டுரை அருமையான நல்ல விளக்கமான கட்டுரையே நண்பரே.

      நீக்கு
    3. மிக்க நன்றி ஐயா, அம்மணி! பதிலளிக்கத் தாமதமானதற்காக வருந்துகிறேன்! நீங்கள் இருவரும் இந்தக் கட்டுரையை, - குறிப்பாக, முற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது பற்றிய என் விளக்கங்களை - ஏற்றுக் கொண்டது இந்தக் கட்டுரையின் நடுநிலைத்தன்மைக்குக் கிடைத்த நற்சான்றிதழாகக் கருதுகிறேன்!

      மிக்க நன்றி! மிகுந்த மகிழ்ச்சி!

      நீக்கு
  4. வணக்கம் நண்பரே
    அருமையான அலசலை,
    ஆணித்தரமாக,
    இதமாகவும்,
    ஈர்ப்புடனும்,
    உண்மையை,
    ஊராருக்கு,
    எல்லா மனிதரையும்,
    ஏற்றத்தாழ்வின்றி,
    ஐயமில்லாமல்,
    ஒலித்தது,
    ஓங்கிய உங்கள் குரல் முடிவில் கேட்டீர்களே கேள்வி எந்தக் கொம்பனும் இதற்க்கு முன் வரமாட்டான் வாழ்த்துகள் நண்பரே அருமையாக அலசி இருக்கின்றீர்கள் அரசின் கல்வித்துறை குழுவில் இடம் பெறவேண்டியவர் தாங்கள் 80 எமது கருத்து.

    //இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா ?//

    நெத்தியடி போஸ்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வானளாவிய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயா! மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!!! என்னுடைய வினாகளுக்கு தாங்கள் மதிப்பளித்து விளக்கியதற்கு முக்க நன்றிகள்!!!! தங்கள் கட்டூரையில் 0%கூட குறை இல்லை!!! நீண்ட நாட்கள் புரியாத கேள்வி இது!! அதனால்தான் கேட்டேன்!! மற்றபடி ஒன்றும் இல்லை!! பதிவுலகத்திற்கு புதியவனான நான் முதன் முதலில் பார்த்தேன்!! அனைத்து பதிவுகளும் நெத்தியடி பதிவுகள்தாம்!! உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும்!!!! நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கள் மிகவும் பெரியவை. அந்தளவுக்கு நான் தகுதியுடையவனா எனத் தெரியவில்லை. இருந்தாலும், உங்களைப் போன்றவர்களின் இப்பேர்ப்பட்ட பாராட்டுகளுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்ளத் தொடர்ந்து முயல்வேன்! மிக்க நன்றி!

      நீக்கு
  6. ஐயா! அற்புதமாக விவாதித்திருக்கிறீர்கள்
    //இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.//
    பட்டேல் பிரிவினர் பொருளாதாரம் சார்ந்து முன்னேற்றம் பெற்றிருகிறார்களே தவிர கல்வி தேவைப் படும் உயர் பதவிகளில் இருப்பதாக தெரியவில்லையே. உங்கள் கூற்றுப் படி எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதில் பெரிய பிழை இருப்பதாக தெரிய வில்லையே

    தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு செய்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதிலும் கூட சலுகை பெற்று முன்னுக்கு வந்தோர் மட்டுமே மீண்டும் மீண்டும் சலுகை பெறுகிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்து பொருளாதார ரீதியில் முன்னேறினாலும் தங்கள் அடுத்த சந்ததியினர் மீண்டும் பலன் பெறவே இட ஒதுக்கீடு ஒழிக்கப் படக் கூடாது என்று விரும்புகிறார்களே தவிர தங்கள் இனத்தின் வளர்ச்சிக்கு இவர்களே தடைக்கற்களாகத் தான் இருக்கிறார்கள் .
    /தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.//
    அப்படியானால் இட ஒதுக்கீடு இதற்கான தீர்வு அல்ல என்பது உண்மைதானே.அவர்களை நாம் ஏன் உயர்வாக கருத வேண்டும்.
    முன்னேறியபின் பெரும்பாலோர் உயர் சாதியாக கருதிக் கொள்ளும் இனப் பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகவே உள்ளது.உருவாகும் அடுத்த சந்ததியனர் இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற முனைகின்றனர். உண்மையான ஏழைகளும் தாழ்த்தப் பட்டோரும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள் அல்லவா?/

    பிற்பட்டோரில் பலரும் முற்பட்டோருக்கு இணையாக ஏன் அதற்கு மேலாகவே தேர்வுகளில் மதிப்பெண் பெறுகிறார்கள் . இவர்களின் பெற்றோரும் வசதியானராகவே இருக்கும் பட்சத்தில் சலுகைகளை மற்றவர் பெற விட்டுக் கொடுப்பதுதானே நியாயமானது.?
    முற்பட்ட இனத்தவர் என்று குறிப்பிடும் பலரும் ஆதி காலத்தில் இருந்தே வசதி படைத்தவர்களாகவோ நில உடமைக்காரர்களாகவோ மன்னர்களாகவோ இருந்ததில்லை.தங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே பொருளாதரத்தில் உயர்ந்த ஆதிக்க சாதியினரிடத்தில் அடிபணிந்தே வாழ்க்கை நடத்தி வந்தனர்.அவர்களை நம்பியே இவர்களுடைய பிழைப்பு நடந்தது. கோவில்களில் பணிபுரியும் பலர் நாம் காண்பிக்கும் ஐந்துக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்துபவர்களாகத் தானே காண முடிகிறது .அவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வது அவர்களின் பிழை நாம் அவர்களை தாழ்வாகவும் கருதமுடியும்
    //அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!//
    எனக்குத் தெரிந்து பெரும்பாலான துறைகளில் உயர் அலுவலர் பதவியில் முற்பட்ட இனத்தவரிக் காணபது மிக அரிதாகவே உள்ளது . கல்வித் துறையில் ஒருவர் கூட இருப்பதாக தெரியவில்லை .தமிழ் நாட்டை சேர்ந்த ஐ ஏ., எஸ் அதிகாரிகளிலும் முற்பட்டவரின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டுவது அரிது.

    சமையல் எரிவாய் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று அரசு வேண்டுகோள் விடுப்பது போல இட போதுகீட்டு சலுகைகளை விட்டுக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம். அதன் பலன் இன்னொருவருக்கு கிடைக்கக் கூடும் அல்லவா
    நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. இட ஒதுக்கீடு உண்மையில் தேவைப்படும் உரியவர்களுக்கு .சேர வேண்டும் என்பதே என் விருப்பம் . ஆண்டாண்டு காலமாக ஏழுமை நிலையில் உள்ளவர்களின் நிலை கட்டாயம் மாறவேண்டும் என்பதில் ஐயமில்லை. முற்பட்ட இனத்தவரும் தங்கள் உயர்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்பதும் கட்டாயமே
    இதை எழுத உதவிய நண்பருக்கு நன்றி
    கிருஷ்ணமூர்த்தி
    சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணமூர்த்தி அவர்களே! தங்கள் முதல் வருகைக்கு முதலில் என் அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      தங்கள் விரிவான நடுநிலையான கருத்துக்கள் கண்டேன். அருமை! நன்றி! ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன்.

      படேல் இனத்தவரின் போராட்டம் பற்றிச் செய்தியாக அறிவேனேயன்றி அவர்களின் நிலைமை பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் நிலையில் அவர்களும் இட ஒதுக்கீட்டுக்கு உரியவர்களே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

      இட ஒதுக்கீடு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் அதைப் பெறுவதால் தங்கள் சமூகத்திலேயே பிறர் முன்னேற அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்கிற உங்கள் குற்றச்சாட்டை இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் சிலரும் கூட இதற்கு முன் கூறியிருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் சமூகவியலாளர்களில் சிலர் இதை ஏற்கிறார்கள் சிலர் மறுக்கிறார்கள். அவரவர் தரப்பைப் பார்க்கையில் இருவர் கூறுவதுமே சரி என்பது போலத்தான் தென்படுகிறது. எனவே, இஃது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது. இது குறித்துப் பதிலளிக்கும் அளவுக்கு இது தொடர்பாக நான் இன்னும் தெளிவு பெறவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்!

      தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவுதான் முன்னேறினாலும் முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குப் போய்ப் பெண் கேட்டு விட முடியாது எனில், இட ஒதுக்கீடு இதற்கான தீர்வு இல்லைதானே என்று கேட்டிருக்கிறீர்கள். ஆம்! கண்டிப்பாக இல்லைதான். அதைத்தான் நான் பதிவிலும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறேன். சாதியைக் காரணம் காட்டித் தாழ்த்தி வைக்கப்பட்டவர்களை மேலே கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே தவிர, சாதியையோ சாதி ஏற்றத்தாழ்வையோ ஒழிப்பதற்கான திட்டம் இல்லை அது. முன் எப்பொழுதையும் விட சாதி தற்பொழுது பன்மடங்கு வீரியத்துடன் பேருருக் கொண்டு வரும் வேளையில் இனியாவது சாதியை ஒழிக்கத் தனிச் சட்டங்களை நாம் இயற்றியே ஆக வேண்டும்! அதற்கான என் சிந்தனைகள் தனிப் பதிவாக விரைவில்.

      நீக்கு
    2. //அவர்களை நாம் ஏன் உயர்வாக கருத வேண்டும்// - சாதி என்கிற அடையாளத்தை நாம் ஏற்றிருக்கும் வரை அவர்களை நாம் உயர்வாகக் கருதித்தான் ஆக வேண்டும்! அந்த அமைப்பு முறை அப்படித்தான் இருக்கிறது.

      //முன்னேறியபின் பெரும்பாலோர் உயர் சாதியாக கருதிக் கொள்ளும் இனப் பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகவே உள்ளது.உருவாகும் அடுத்த சந்ததியனர் இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற முனைகின்றனர். உண்மையான ஏழைகளும் தாழ்த்தப் பட்டோரும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள் அல்லவா?// - இப்படி எங்கும் நிகழ்ந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது பெற்றோர் ஒப்புதலுடன் நடைபெறும் காதல் மணங்களைப் பற்றி எனில், அஃது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட நிலைமைகளிலும் அந்த முதல் தலைமுறை இணைவு என்பது பல்லாண்டுக்கால அடக்குமுறைக்கான பதிலீடாக இருக்குமென நான் கருதவில்லை. இத்தனை காலமாக அடக்கி வைக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் குருதியுறவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதால் இத்தனை ஆண்டுக்கால அடக்குமுறைக்கான இழப்பீடாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தர மறுப்பது சரியாகுமா என்ன?

      //பிற்பட்டோரில் பலரும் முற்பட்டோருக்கு இணையாக ஏன் அதற்கு மேலாகவே தேர்வுகளில் மதிப்பெண் பெறுகிறார்கள் . இவர்களின் பெற்றோரும் வசதியானராகவே இருக்கும் பட்சத்தில் சலுகைகளை மற்றவர் பெற விட்டுக் கொடுப்பதுதானே நியாயமானது// - இட ஒதுக்கீட்டை ஒருமுறை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பெறுவது பற்றி நீங்கள் முன்பு எழுப்பிய கேள்விக்கான என் பதிலே இதற்கும். மேலும், இப்படி விட்டுக் கொடுப்பது என்பது அவரவர் தனிப்பட்ட நிலைமையைப் பொறுத்தது. யார் யார் அப்படி இருக்கிறார்கள் என நாம் துல்லியமாகக் கண்டறிந்து சட்டத்தை இயற்றவோ திருத்தவோ இயலாது. சட்டம் என்பது பெரும்பான்மை நிலைமைகளின் அடிப்படையை வைத்து மட்டுமே உருவாக்கப்படவும் திருத்தப்படவும் முடியும்.

      //முற்பட்ட இனத்தவர் என்று குறிப்பிடும் பலரும் ஆதி காலத்தில் இருந்தே வசதி படைத்தவர்களாகவோ நில உடமைக்காரர்களாகவோ மன்னர்களாகவோ இருந்ததில்லை.தங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே பொருளாதரத்தில் உயர்ந்த ஆதிக்க சாதியினரிடத்தில் அடிபணிந்தே வாழ்க்கை நடத்தி வந்தனர்.அவர்களை நம்பியே இவர்களுடைய பிழைப்பு நடந்தது. கோவில்களில் பணிபுரியும் பலர் நாம் காண்பிக்கும் ஐந்துக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்துபவர்களாகத் தானே காண முடிகிறது// - உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களுடைய அந்த நிலைமையை மாற்றிக் கொள்ளக் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் சாதி என்பது. அஃது எந்த அளவுக்கு அவர்களுக்குப் பலன் அளித்து மற்றவர்களைச் சீரழித்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே, அதனால் ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஏற்றத்தாழ்வுகளை நீக்க இட ஒதுக்கீடு தேவைப்பட்டது. இப்பொழுதும் அது தேவைப்படுகிறது என்பது காரண ஏரணங்களுடன் பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

      //அவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வது அவர்களின் பிழை நாம் அவர்களை தாழ்வாகவும் கருதமுடியும்// - அது முடியாது. ஏன் என்பது முந்தைய பதிலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் நம்மைத் தாழ்வானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதற்காகப் பதிலுக்கு நாம் அவர்களைத் தாழ்வாகக் கருதுவது மனிதநேயமாகாது. அனைவரும் நிகர் எனும் நிலையை எட்டுவதே ஒழுங்கான மனித சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்! அதற்கான ஒரு வழிதான் இட ஒதுக்கீடும்!

      //பெரும்பாலான துறைகளில் உயர் அலுவலர் பதவியில் முற்பட்ட இனத்தவரிக் காணபது மிக அரிதாகவே உள்ளது . கல்வித் துறையில் ஒருவர் கூட இருப்பதாக தெரியவில்லை .தமிழ் நாட்டை சேர்ந்த ஐ ஏ., எஸ் அதிகாரிகளிலும் முற்பட்டவரின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டுவது அரிது// - இருக்கலாம். ஆனால், நான் கூறுவது அரசுத்துறையை மட்டுமில்லை, தனியார் துறைகளிலும் சேர்த்து. "அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள்" எனும் வரியை மேற்கோள் காட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ள நீங்கள் அதிலுள்ள 'சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும்' எனும் குறிப்பைக் கவனிக்க வேண்டுகிறேன்!

      நீக்கு
    3. இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கக் கோரிக்கை விடுக்கும் உங்கள் சிந்தனை சரியா தவறா என எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை, இட ஒதுக்கீட்டை ஏற்கவே செய்யாதவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத்தான் இந்தப் பதிவே தவிர, மற்றபடி இட ஒதுக்கீடு தொடர்பான இத்தகைய நுட்பமான விதயங்களில் எனக்கு அறிவு போதாது. மற்றபடி, இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதோடு, அனைவருக்கும் அது போய்ச் சேர வேண்டும் எனவும் விரும்பும் உங்கள் நல்லுள்ளத்துக்கும், ஏழ்மை - உயர்வு மனப்பான்மை முதலானவை குறித்த உங்கள் உறுதியான தெளிவான கருத்துக்களுக்கும், இன்னொருவர் உதவியோடாவது இதற்குக் கருத்துரைக்க வேண்டும் எனும் அளவுக்கு இந்தப் பதிவுக்கு நீங்கள் தந்த பெருமதிப்புக்கும் என் பணிவார்ந்த நன்றி! வணக்கம்!

      நீக்கு
  7. அனைவருக்கும் புரியும்படி மிகசிறப்பாக தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்.தமிழ் சமூகத்தில் உங்களை போன்ற அறிவு நுட்பம் கொண்டவர்கள் இன்னும் பெருகவேண்டும்

    இருந்தாலும் என் சில கருத்துக்க்கள்,

    ஓட்ட பந்தயத்தில் ஒட முடியாதவருக்கு தேவையான உடல் வலிமைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது இன்னும் உகந்ததாக இருக்குமே (ஊட்டசத்து உணவுகள்,பாதுகாப்பு பொருள்கள் போன்று..).ஆனால் ஓடி முன்னால் வர வேண்டியது அவரவர் பொறுப்பு.

    அது போல படிக்க முடியாத சூழலில் இருக்கும் நபர்களுக்கு அவர்கள் தங்களை படிப்பில் மேம்படுத்தி கொள்ள(இட ஒதுக்கீடு தேவைபடாத சூழலில் உள்ளவர்களை போல்) என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம். (இலவச உணவு,இலவச கல்வி,இலவச உபகரணங்கள்,சிறப்பு பயிற்சி,கூடுதல் வகுப்புகள்,இலவச உண்டு உறைவிட பள்ளி இன்னும் பல) ஆனால் தேர்வில் சிறப்பாக செயலாற்றி முன்னே வரவேண்டியது சம்பந்தபட்ட மாணவருக்கு உரியது.
    இப்படி செய்யாவிடின் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடரும் என தெரியாது.முன்பு அவர்களை அவர்களை அடிமை படுத்தியதற்கு தண்டனை இப்போது அனுபவிக்கிறோம் (வரலாறு திரும்புகிறது)இதேபோல் சில காலங்கள் கழித்து வரலாறு திரும்பாதா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான கேள்வியைத் தொடுத்திருக்கிறீர்கள் நண்பரே! என் மனதிலும் வெகு நாட்களாக இருந்து வரும் கேள்விதான் இது. ஆனால், கட்டுரையின் நீளம் கருதித் தவிர்த்துவிட்டேன். யாராவது இதைக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இத்தனை நாட்கள் கழித்து நீங்கள்தான் அதை நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள். அதற்காக முதலில் நன்றி!

      முற்காலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவிர மற்றவர்களுக்குக் கல்வி முற்றிலுமாகவே இல்லாமல் போனதுதான் இன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டினால் இன்று முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்படும் பாதிப்பு என்பது விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போவது மட்டும்தானே தவிர அவர்களின் கல்வி உரிமை இதனால் எந்த இடத்திலும் பறிக்கப்படவில்லை. கல்வியில் நாட்டமில்லாமல் போகும் மனநிலையையும் அவர்களிடம் தோற்றுவிக்கவில்லை. எனவே, அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

      அப்படியை ஏற்படுதாக இருப்பினும், இன்றைய நிலைமையில், நம் சமூகத்தில் முதல் தலைமுறை மாணவர்களும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுமே இன்றும் நிறைந்திருக்கும் சூழலில் அப்படியொரு திருப்பம் ஏற்படக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வாய்ப்பு இல்லை.

      அதே நேரம், இப்படியெல்லாம் சொல்வதால் இட ஒதுக்கீட்டைக் காலகாலத்துக்கும் தொடர்ந்து நிரந்தரமாக நடைமுறைப்படுத்தியபடியே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் என நினைத்து விடாதீர்கள்! எல்லா வகுப்பினரும் கல்வி, பொருளாதாரம், சமூக நிலை ஆகியவற்றில் தன்னிறைவை எட்டிய பிறகு கண்டிப்பாக இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே முறை! ஆனால், அப்படியொரு நிலைமை ஏற்பட அனைவருமே பாடுபட வேண்டும்! பின்தங்கிய வகுப்பினரைக் கைதூக்கி விட ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற வரையில் முயற்சி எடுக்க வேண்டும்! அதே நேரம், சாதிகளை ஒழிக்கவும் தங்களால் இயன்ற அளவு ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்! அப்பொழுதுதான் இட ஒதுக்கீடு இனி தேவையில்லை எனும் நிலைமையை நம் சமூகம் விரைவில் எட்ட முடியும்.

      தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட சமூக வலைத்தளப் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! வணக்கம்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்