|
கவிஞர்.தாமரை மகனுடன் போராட்டத்தில் |
உண்ணாநிலைப் போராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், புகழ் பெற்ற போராளி ஒருவரை நோக்கியே அப்படி ஒரு போராட்டம் எழுந்திருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
தோழர் தியாகு! – தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்! பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர். தீவிரப் பொதுவுடைமையாளர்! நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியதற்காகப் பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தவர். அதே நேரம், ஈழ ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியை விட்டே வெளியேற்றப்படவர்! ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ எனும் பெயரில் பல தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தி, தமிழருக்காகப் போராடுவதோடு மட்டுமின்றித் தமிழைக் காக்கவும் பெருமுயற்சியெடுத்து வரும் பெருந்தகையாளர்! மாவீரர்.திலீபன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் ஈந்தபொழுது ஈழத்துக்காகக் குரல் கொடுத்தது முதல் முல்லைப் பெரியாறு போன்ற அண்மைக்காலத் தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமாடுவது வரை இவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இலங்கையில் பொதுநலவாய (commonwealth) மாநாடு’ நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற பெயரில் இவர் நடத்திய ‘சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்’ பன்னாட்டளவில் அறியப்பெற்ற ஒன்று!
இப்பேர்ப்பட்ட போராளியை நோக்கியே ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார் பெண்மணி ஒருவர். அதுவும், யாரோ தெருவில் போகிற பெண்மணியில்லை; இவர்தம் சொந்த மனைவி! அதுவும், பெற்ற பிள்ளையுடன் இவர் இருக்குமிடமெல்லாம் தேடித் தேடித் தொடர்ந்து சென்று ஏழு நாட்களாகத் தன் போராட்டத்தைக் கடைப்பிடித்து வருகிறார் அந்தப் பெண்மணி. அவர் வேறு யாருமில்லை; உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கறிந்த திரைப் பாடலாசிரியரும், தமிழ்ப் போராளியுமான கவிஞர்.தாமரை அவர்கள்தாம்!
ஈழ இனப்படுகொலையின்பொழுதும் அதன் பின்புமான போராட்டங்களில் கவிஞர்.தாமரை அவர்களின் பங்கு நாம் அறியாததில்லை. தமிழனென்று மீசை முறுக்கிய ஆண் கவிஞர்கள் பலர் வீட்டிலிருந்தபடி ஈழத் தமிழர்களுக்காகத் தங்கள் கண்ணீரால் கவிதை வடித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், பெண்ணென்று தயங்காமல் போராட்ட மண்ணில் நேரடியாகக் கால் பதித்த வீராங்கனை! “இலங்கைத் திரைப்பட விழாவுக்குப் போக வேண்டா” என்று கமல்காசனையே வலியுறுத்திய துணிச்சல்காரர்! அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குப் பெற்ற நடிகர்களும் தலைவர்களுமே ஈழத்துக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் மட்டுமே குரல் கொடுப்பதோடு வாயைப் பூட்டிக் கொண்ட அந்த நாளிலே, தமிழினத்தை அழிக்கத் துணை நின்ற இந்திய அரசை நேரடியாகவே சாடிய மறத் தமிழச்சி! ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய அந்தக் கவிதை இந்த உலகப் பந்து உருளும் வரை தமிழினப் பேரழிப்புக்கான சான்றாவணமாய் நிலைத்து நிற்கும்!
அப்பேர்ப்பட்ட பெண்மணி பெற்ற பிள்ளையுடன் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்! ஆனால்,