.

ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஏன் இவர்கள் மாவீரர்கள்?

Tamil Eelam Heroes Day

தமக்குப் பின்னால்

ஒரு நாடே இருக்கிறது

எனும் துணிவில் துப்பாக்கி தூக்குபவர்கள்

வீரர்கள்!

ஆனால்

இவர்கள்

தங்களை எதிர்த்து

மொத்த உலகமே நிற்கிறது

என்று தெரிந்தும்

துப்பாக்கியை இறக்காதவர்கள்!

அதனால்தான் இவர்கள்

மாவீரர்கள்!🫡

❀ ❀ ❀ ❀ ❀

திங்கள், அக்டோபர் 10, 2022

தாய்மொழி வழிக் கல்வி - மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவுக்கு எனது கோரிக்கை

Education in Mother Tongue medium

அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு!

நீங்களும் இது போல் உங்கள் கருத்துருவை அனுப்பி வைக்கத் தேவையான விவரங்கள் கட்டுரையின் முடிவில்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022

மகான் - திரைப்பட மதிப்புரை | Mahaan - Cinema Review

Mahaan - Cine Review

"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!  

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

நம் பரதேசி அவர்களின் நூல்கள் - ஓர் அறிமுகம்

'Paradesi' Alfred Rajasekaran Thiyagarajan's Book releasing function notice

ரதேசி என்றதும் எல்லாருக்கும் ஏழ்மையான ஒருவரின் தோற்றம் நினைவுக்கு வரும்; சிலருக்கு இயக்குநர் பாலா அவர்களின் திரைப்படம் நினைவுக்கு வரலாம்; ஆனால் பதிவர்களான நம் நினைவுக்கு வருபவர் பரதேசி @ நியூயார்க் என்கிற வலைப்பூவை நடத்தும் ஆல்ஃபிரட் தியாகராசன் அவர்கள்.

அமெரிக்க வாழ் தமிழரான ஆல்ஃபி அவர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக நகைச்சுவை, வாழ்வியல், சுற்றுலா, கவிதை எனப் பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவராகவும் திகழ்வதில் வியப்பில்லை.

வலைப்பூவில் மட்டுமே மணம் வீசிக் கொண்டிருந்த தன் எழுத்துக்களை நூலாய் வெளியிட ஆர்வம் கொண்டு ஆல்ஃபி அவர்கள் நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்களை நாட, முத்துநிலவன் ஐயா என்னைக் கை காட்ட, அப்படித்தான் முகிழ்த்தது எங்கள் இருவருக்குமான நட்பு.

திருத்தப் (proof reading) பொறுப்பை நானும், தொகுக்கும் பணியைத் தோழர் கோமதி அவர்களும் அட்டை வடிவமைப்பை நண்பர்கள் சந்தோஷ், ஜெகதீஷ் ஆகியோரும் ஏற்றுக் கொள்ள வண்ணமயமான வானவில் போல இதோ ஆல்ஃபி அவர்களின் ஏழு நூல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் பரதேசி, இலங்கையில் பரதேசி, மெக்சிகோவில் பரதேசி, இஸ்தான்புல்லில் பரதேசி, போர்ட்டோ ரிக்கோவில் பரதேசி, டெக்சாசில் பரதேசி எனத் தான் சுற்றிப் பார்த்த துய்ப்புகளைப் (experience) பற்றி ஆறு சுற்றுலா நூல்களையும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை பற்றி நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1) எனும் ஒரு வாழ்வியல் நூலையும் இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளார் ஆல்ஃபி அவர்கள்.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35ஆவது ஆண்டு விழாவில் ஓர் இணை அமர்வாக ஆல்ஃபி அவர்களின் இந்நூல்களைப் புகழ் பெற்ற எழுத்தாளரும் தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் வெளியிட சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக் கொண்டது என்றென்றும் இனிக்கும் நிகழ்வு!

Famous writer Dr.Thamizhachi Thangapandian MP releasing the books written by 'Paradesi' Alfred R.Thiyagarajan and the celebrity writer Su.Venkatesan MP receiving the first copies

உங்கள் பதிவுலக நண்பர் எழுதிய இந்நூல்களை, பதிவுலகில் உங்கள் இன்னொரு நண்பனான எனக்கும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான இந்நூல்களைப் படித்து மகிழுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்!

இதில் ஒவ்வொரு சுற்றுலா நூலிலும் அந்தந்த நாடுகளையே நாம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதாக மட்டுமின்றி அந்த இடங்களின், நாடுகளின் வரலாற்றையே மிகச் சில பக்கங்களில் மணிச் சுருக்கமாகத் தரும் ஆல்ஃபியின் எழுத்துக்களில் இதுவரை அறியாத பல புதிய, அரிய தகவல்களை நாம் சுவைக்க முடிகிறது. மேலும் மொழி தெரியாமல், பழக்க வழக்கம் புரியாமல் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கிக் கொண்டு ஆல்ஃபி படும் அவதிகளை அவர் விவரித்துள்ள விதம் நம்மை விலாநோகச் சிரிக்க வைக்கிறது.

சீனாவில் பரதேசி’ நூல் இவற்றில் உச்சம்! இது வெறும் சீனா பற்றிய சுற்றுலா நூல் மட்டுமில்லை அந்நாட்டைச் சுற்றிப் பார்க்க விழையும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டிய வழிகாட்டியும் கூட!

அதே போல் ‘நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1)’ நூல் அமெரிக்கா செல்லத் துடிக்கும் தமிழர்களுக்கான கையேடு! அங்கு நிலவும் தட்பவெப்பச் சூழல், விந்தையான பழக்க வழக்கங்கள், மேலைநாட்டு வாழ்க்கைப் பாணி, மண் மணத்தை நினைத்துப் பார்க்கும் தமிழர் ஏக்கங்கள், கடல் தாண்டியும் தாய்மொழி வளர்க்கும் தமிழர் நிகழ்ச்சிகள் என அயல்நாட்டு வாழ்வியலையும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் ஒரு தமிழர் பார்வையில் நகைச்சுவை கொப்பளிக்க விவரிக்கும் இந்நூல் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் தவம் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

அமேசானில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களை நீங்கள் மின்னூல் (E-Book), அச்சுநூல் என உங்கள் வசதிக்கேற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும் வாங்கலாம். இதோ அதற்கான இணைப்பு - https://amzn.to/3Jvafb2.

படித்துப் பாருங்கள்! கூடவே உங்கள் மேலான கருத்துக்களை அந்தந்த நூலுக்கான அமேசான் பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள்!

வெள்ளி, ஜூலை 01, 2022

என் படைப்புக்கு உங்கள் மதிப்பீடு என்ன?

Mannukkulle Sila Moodar-Short Story

ன்புசால் நட்புலகே!

‘இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளருக்கான தேடல்’ எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது Notion Press இணையத்தளம். படைப்பார்வம் கொண்டவர்கள் தங்கள் நூலை இணையத்தில் தாங்களே வெளியிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இது, ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இவர்கள் நடத்தும் சிறுகதைப் போட்டியில் இதோ உங்கள் விருப்பத்துக்குரிய நானும்!

கதையை படித்தவர்களின் எண்ணிக்கை, அப்படிப் படித்தவர்கள் தந்த மதிப்பீடு (ratings), ஆசிரியர் குழுவின் மதிப்பெண் மூன்றையும் சேர்த்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தாம் நாட்டின் அடுத்த மாபெரும் எழுத்தாளராக அறிவிக்கப்படுவார் என்பது போட்டியின் நெறிமுறை. எனவே என் படைப்புக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் இதோ இணைப்பு உங்கள் பார்வைக்கு - https://bit.ly/3I74NKK.

போட்டி ஒருபுறம் இருக்கட்டும்! உலகின் எல்லா நாடுகளிலும்தாம் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் நடக்காத ஒரு கொடுமை நம் மண்ணில் மட்டும் நடப்பது ஏன்? என்னுடைய இந்த நெஞ்சக் கொதிப்புதான் இந்தக் கதை. படித்துப் பார்த்து உங்கள் மேலான தரமதிப்பீட்டையும் கருத்துரையையும் கட்டாயம் வழங்க வேண்டுகிறேன்!

மதிப்பீடும் கருத்தும் வழங்கும் முறை:

1. இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் - https://bit.ly/3I74NKK.

2. கதையைப் படியுங்கள்.

3. கதையின் முடிவில் ஒரு நீல நிறப் பெட்டி இருக்கும். அதன் வலப் பக்கத்தில்  கீழே காண்பது போல் ஐந்து விண்மீன் குறியீடுகள் இருக்கும். கதையின் தரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கேற்ப அந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் அழுத்தலாம். எ.டு.: 50 புள்ளிகள் தர விரும்பினால் 5-ஆவதை அழுத்தலாம்.

Rating Area-Notion Press

4. விண்மீன் குறியீட்டை அழுத்தியதும் தளத்தில் கணக்கு தொடங்கக் கோரிக் கீழ்க்காணுமாறு ஒரு பெட்டி வரும். அதில் உங்கள் பெயர் (ஆங்கிலத்தில்),  மின்னஞ்சல் முகவரி, இந்தத் தளத்தை இனி பயன்படுத்துவதற்கெனப் புதிதாக ஒரு கடவுச்சொல் (password) மூன்றையும் கொடுத்துக் ‘கணக்கைத் தொடங்கவும்’ எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

Sign Up box-Notion Press

(குறிப்பு: நீங்கள் ஏற்கெனவே இந்தத் தளத்தில் கணக்கு வைத்திருப்பவராகவோ ‘Bynge தமிழ்’ குறுஞ்செயலி (app) பயன்படுத்துபவராகவோ இருந்தால் மேற்கண்ட பெட்டியில் கீழே உள்ள ‘லாகின் செய்யுங்கள்’ எனும் பொத்தானை அழுத்தி உங்கள் பழைய கணக்கு மூலமே மதிப்பீடும் கருத்தும் இடலாம்.)

5. பொத்தானை அழுத்தியதும் நீங்கள் எத்தனை விண்மீன் குறியீடு அளித்திருக்கிறீர்கள் என்கிற  எண்ணிக்கையும் அதன் கீழே கருத்துரை இடுவதற்கான கட்டமும் வரும். தளத்தின் நெறிமுறைப்படி கருத்துரை எழுதுவது கட்டாயமில்லை என்றாலும் கதையைப் படித்த உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அறிய நான் விரும்புகிறேன். எனவே உங்கள் கருத்தை எழுதி (அல்லது உங்களுக்கு நேரமில்லாவிட்டால் எழுதாமலே கூட) பெட்டியில் உள்ள ‘சமர்ப்பிக்கவும்’ எனும் பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும். அவ்வளவுதான், வேலை முடிந்தது! (குறிப்பு: கருத்து வழங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘சமர்ப்பிக்கவும்’ பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும். அதுவரை மதிப்பீடு பதிவாகாது.)

6. தரமதிப்பீடு அளித்தவுடன் ‘கதை பிடித்திருக்கிறதா?’ எனக் கேட்டு இன்னொரு பெட்டி முளைக்கும். அதில் கதையைச் சமுக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப் பொத்தான்கள் இருக்கும். நம் வீட்டுப் பெண்கள் மீதான அந்தக் கொடுமைக்கு எதிராக நீங்களும் உங்கள் பங்குக்கு ஒருமுறை சாட்டையைச் சுழற்ற விரும்பினால் அந்தப் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் கதையைக் கொண்டு சேர்க்கலாம்.

மதிப்பீட்டைப் பதிவு செய்யக் கடைசி நாள்: சூலை 25, 2022

"சரி, இவ்வளவு சொல்கிறாயே? நீ மட்டும் போட்டியில் கலந்து கொண்டால் போதுமா?" எனக் கேட்கிறீர்களா? வருக வருக நண்பர்களே! சூலை 10,  2022 வரை கதைகளைப் பதிவேற்ற நேரம் இருக்கிறது. இதோ போட்டியில் கலந்து கொள்வதற்கான நெறிமுறைகளைக் கீழே தந்திருக்கிறேன். படித்துப் பார்த்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

National Writing Competition Announcement-Notion Press
போட்டியில் கலந்து கொள்பவர்கள் உங்கள் கதைக்கான இணைப்பை எனக்கு இங்கே கருத்துப்பெட்டி மூலம் தெரிவியுங்கள்! சமுக ஊடகங்களில் #NWC_Tamil எனும் சிட்டையில் பதியுங்கள்! நானும் உங்கள் வெற்றிக்கு உதவக் காத்திருக்கிறேன்.

உங்கள் வசதிக்காக என் கதையின் இணைப்பு இங்கே மீண்டும்: https://bit.ly/3I74NKK.

வியாழன், மே 19, 2022

ஒரு முதல் வெற்றி! - பேரறிவாளன் விடுதலைக் கவிதை


வெற்றி!...
வெற்றி!...
வெற்றி!...

நீதியின் வெற்றி!
நேர்மையின் வெற்றி!
பொறுமையின் வெற்றி!

அறப் போராட்டத்தின் வெற்றி!
மறத் தமிழரின் வெற்றி!
முதுமையிலும் சாதிக்க
முடியும் எனக் காட்டியுள்ள
ஒரு
அற்புதத் தாயின் வெற்றி!

தாய் அவருக்குத் தோள் கொடுத்த
தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!
பல காலமாய்ப் போராடிய
தலைவர் வை.கோ-வின் வெற்றி!

கூட்டாட்சிக் கோட்பாட்டை
எந்நாளும் முழங்கி வரும்
திராவிட அரசியலின் வெற்றி!

ஆளுநர் பதவிக்கெதிராக
ஆண்டாண்டுகளாய்க்
குரல் கொடுக்கும்
தமிழ் மண்ணின் வெற்றி!

எல்லோருக்கும் மேலாய்
இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்
உயிர் விளக்கேற்றிய
ஈகி செங்கொடியின் வெற்றி இது!

இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை
உறுதிப்படுத்த முடிந்திருந்தால்
இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!
ஆனாலும் இது வெற்றிதான்!
ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!

கொண்டாடுவோம்!
கொண்டாடுவோம்!
தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...
காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...
பா.ச.க., பதறியெழப் பறையினை ஒலித்து...
தோழர்களை அணைத்து...
ஆனந்தக் கண்ணீர் உகுத்து...
பட்டாசுகள் வெடித்து...
தப்பட்டை அடித்து...
கொண்டாடுவோம் இன்று!
இது நம்
முதல் வெற்றி என்று!...

ஆம்...
காலமெல்லாம் போராடும்
தமிழினத்துக்கு
இஃது ஊக்க மருந்து!
இனி
இருக்கிறது பார் எங்களுக்கு
மென்மேலும் வெற்றி விருந்து!

(18.02.2014 அன்று இதே தளத்தில் வெளியிட்ட கவிதை. இற்றைக்கேற்பச் சில மாற்றங்களுடன்)

புதன், மே 18, 2022

கடவுளின் தீர்ப்பா இலங்கையின் வீழ்ச்சி? | 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் ஓர் எச்சரிக்கையும்

Rajapaksas' family house burned by Sinhalese

ற்றி எரிகிறது இலங்கை!

சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது!

தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை.

சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது?

சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை?

காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்?

எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்!

Sinhalese participated in Tamil genocidal remembrance programme 2022

இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல!

சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும்.

கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான்.

இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்!

கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம்.

தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது.

எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்!

இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை.

எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்!

நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!

தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்!

நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்!

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! 

❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு
 
தொடர்புடைய பதிவுகள்📂 நினைவேந்தல்

தொடர்புடைய வெளி இணைப்புகள்:
 
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த விழிப்புணர்வு சென்றடைய உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு ஒன்பதாம் பிறந்தநாள்!

9th anniversary of AgaSivappuThamizh

ள்ளம் உறை தமிழ்ப் பற்றாளர்களே!

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூ ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து நேற்று முதல் (23.04.2022) பத்தாம் ஆண்டில் பாதம் எடுத்து வைத்துள்ளது என்பதைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

இந்த ஆண்டு நான் எழுதியவை மொத்தம் ஏழே பதிவுகள்தாம்! ஆனாலும் 15,200 பார்வைகளை இந்த ஆண்டு தளம் பெற்றிருக்கிறது என்பதை அறியும்பொழுது நான் அடையும் நெகிழ்ச்சி கொஞ்சமல்ல!

Hits of AgaSivappuThamizh in the year 2021-22

நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த எதிர்பார்ப்புக்காகவாவது நான் வரும் ஆண்டில் அதிகம் எழுத வேண்டும்! முயல்கிறேன்!

எழுதியதே குறைவு என்பதால் இந்த ஆண்டில் பழைய பதிவுகளே அதிகம் பார்வையிடப்பட்டுள்ளன. என்றாலும் இந்த ஆண்டு வெளியிட்ட ‘நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு’ எனும் கட்டுரை 260 பார்வைகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதைப் பார்க்கையில் ஆழமான பதிவுகளை என்றும் நம் மக்கள் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கை உறுதிப்படுகிறது. மிக்க நன்றி!

Top 5 posts of the year 2021-22

இந்த ஆண்டு பதிவுலகில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு, பீட்பர்னரின் (Feedburner) சேவை நிறுத்தம் பற்றிய அறிவிப்பு. இந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு இனி பீட்பர்னரின் மின்னஞ்சல் சேவை நிறுத்தப்படும் என்று நினைத்து வேறு மின்னஞ்சல் சேவைக்கு மாறிய மேதாவிகளில் (?) நானும் ஒருவன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. புதிதாக யாரும் மேற்கொண்டு இணைய முடியாதபடிதான் போயிற்றே தவிர மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது தெரியாமல் நான் சேவை மாறியது மட்டுமின்றி வேறு சில பதிவர்களையும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது, இன்னும் இருக்கிற எல்லாரையும் மாறச் சொல்லிக் காணொளிப் பதிவு வெளியிட்டது, அதற்கெனவே வேலை வினைகெட்டு யூடியூபு வலைக்காட்சி தொடங்கியது எல்லாம் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் இடம்பெற முடியாமல் போனாலும் இந்த வலைப்பக்கத்திலாவது பதிவு செய்யப்படட்டும் என எழுதி வைக்கிறேன்.

இதைப் படித்து விட்டு "அட டேய்! தேவையில்லாம எங்கள வேற பீட்பர்னர்லேர்ந்து விலக வெச்சிட்டியேடா" என யாரும் கட்டையை எடுத்துக் கொண்டு வராமல் இருந்தால் சரி.

இந்த ஆண்டுப் பதிவுலகின் பேரிழப்பு நெல்லை சித்திக் ஐயா அவர்களின் மறைவு!

கடந்த ஆண்டுப் பிறந்தநாள் பதிவிலேயே ஐயாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆண்டுப் பதிவுக்குள் அவரைப் பற்றி எழுத எப்படியும் பல தகவல்கள் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் இப்படி அவருடைய இறப்பைப் பற்றி எழுத வேண்டி வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

எவ்வளவுதான் இணையத்தில் நண்பா, தோழா எனப் பழகினாலும் எதிர்க் கருத்துடையவர்களோடு சண்டை என வந்தால் அதுவரை பழகிய யாரும் நம்மோடு உடன் நிற்க மாட்டார்கள் (விலக்கானவர்களும் உண்டு!). ஆனால் ஒரு தமிழ்ச் சொல் தொடர்பாக எனக்கும் ஒரு காவி நிறத்தானுக்கும் இடையில் நடந்த சண்டையில் தானாக முன்வந்து கருத்தாயுதம் கொடுத்ததோடு உடன் நின்றும் சண்டையிட்டவர் சித்திக் ஐயா!

என்னுடைய ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து, கருத்திட்டு, பகிர்ந்தளித்து, பாராட்டி ஊக்குவித்தவர். நான்கு சொற்கள் கூட்டி எழுதத் தெரிந்தாலே எழுத்தாளர் என அறிவிப்புப் பலகை வைத்துக் கொள்பவர்களுக்கிடையில் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தும் ஒரு மாணவன் போல அடக்கம் கொண்டு திகழ்ந்த மாண்பாளர்!

தமிழில் நல்ல வேர்ச்சொல் அறிவு கொண்டவர். தமிழாய்வு செய்து கொண்டிருந்தவர். ஒன்றுக்கு இரண்டு வலைப்பூக்கள் (எனக்குத் தெரிந்து) எழுதி வந்தவர். தமிழில் ‘அயற்சொல் அகராதி’ எழுதிக் கொண்டிருந்தவர். தமிழில் எப்பொழுது, என்ன ஐயம் கேட்டாலும் நான்கைந்து வரிகளில் அவ்வளவு அழகுற விளக்குவார்! சிறந்த ஆசான்! ஆனால் இளைஞர்களைக் கூட அவ்வளவு மதிப்புடன் விளிப்பார், நடத்துவார்.

அப்பேர்ப்பட்டவர் மகுடைத் (Corona) தொற்றால் திடீரென மறைந்தது (சூன் 2021) மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது! ஐயா மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து வரும் அவர் மனைவியார் மன்சூரா பீவி அம்மையாருக்கு என் சிரம் தாழ்ந்த போற்றுதல்கள்! ஐயாவின் புகழ் வாழ்க!

இந்த ஆண்டுப் பதிவுலகப் பயணத்தின் பெருமகிழ்ச்சி, வலைப்பதிவர்கள் சிலரை நேரில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு!

பதிவுலகில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்கள் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன், அவர் கணவர் ‘மலர்த்தரு’ கஸ்தூரிரங்கன் ஆகியோர். 2014 முதல் பதிவுலகில் நட்பாடி வந்த நாங்கள் தனிப்பட்ட முறையிலும் தோழமையாகி ஒரு கட்டத்தில் ஒரே குடும்பம் போலவே ஆகி விட்டாலும் முதன் முறையாகக் கடந்த 02.03.2022 அன்றுதான் நேரில் சந்தித்தோம்!

சென்னை நூல் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்ததும் எதிர்பாரா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்! மைதிலி, கஸ்தூரிரங்கன் இருவரையும் விடக் குழந்தைகள் நிறைமதிவதனாவும் மகிமாவும் என் மீது கொண்டிருக்கும் அன்புக்கு உலகில் எதையுமே ஈடு சொல்ல முடியாது! அதே போல, புது மனிதர்கள் யாரைக் கண்டாலும் ஓடி ஒளியும் எங்கள் வீட்டுச் செல்லம் மகிழினி இவர்கள் நால்வரையும் பார்த்ததும் பலநாள் பழகியது போல் ஒட்டி உறவாடியதும் அவர்கள் கிளம்பும்பொழுது தானும் வருவதாகச் சொன்னதும் இன்று நினைத்தாலும் நம்ப முடியவில்லை! உண்மையான அன்புக்குத் தொலைவு ஒரு பொருட்டில்லை!

அடுத்து, புகழ் பெற்ற பதிவரும் ‘நியூயார்க் தமிழ்ச் சங்க’ இலக்கியக் குழுத் தலைவருமான ‘பரதேசி @ நியூயார்க்’ ஆல்ஃபிரட் ராஜசேகரன் தியாகராஜன் அவர்கள் என் வீட்டுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வு!

பரதேசி எனும் புனைபெயரில் பல ஆண்டுகளாக எழுதி வரும் ஆல்ஃபி அவர்கள் தனது வலைப்பதிவுகளைத் தொகுத்து நூலாக வெளியிட இருக்கிறார். அதற்கான பணிகளை நான்தான் அவருக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதால் அது தொடர்பாக என்னைச் சந்திக்கக் கடந்த மாதம் வந்திருந்தார்.

அயல்நாடு வாழ் தமிழர்களில் தமிழ் வளர்ப்போர் ஏராளம். ஆனால் தமிழனையும் வளர்ப்போர் ஓரிருவரே! ஆல்ஃபி அப்படிப்பட்டவர்!

தமிழ்நாட்டின் சவ்வாது மலைப் பகுதியில் நீலகிரி மாவட்டத்தில், பின்தங்கிய ஓர் ஊரைத் தானாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களுக்குக் கல்வியும் அடிப்படை வசதிகளும் தன் சொந்தச் செலவில் செய்து கொடுத்து வரும் ஆல்ஃபி அவர்களின் தொண்டு உண்மையில் சிரமேற்கொண்டு போற்றுவதற்குரியது! அப்பேர்ப்பட்டவர் என்னைச் சந்திக்க வந்தது பெருமைக்குரிய தறுவாய்!

விரைவில் அவருடைய நூல்கள் வெளியாக உள்ளன. நம் மக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்!

மற்றபடி, நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வருகை தந்து என் எழுத்துக் கடமையை நினைவூட்டிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி!

பதிவுலகம் முன்பு போல் இயங்காததாலும் வலைப்பதிவில் எழுதுவதை விடச் சமுக ஊடகங்களில் எழுதுவது பன்மடங்கு எளிதாகவும் பெருத்த வரவேற்புக்குரியதாகவும் இருப்பதாலும் இனி வலைப்பூ என்பது நமது முக்கிய பதிவுகளைத் தொகுத்து வைப்பதற்கான ஒரு சேமிப்பகம் போலத்தான்!

எனவே என் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க விரும்பும் அன்பர்கள் கீழ்க்காணும் சமுக ஊடகங்களில் பின்தொடர வேண்டுகிறேன்!

துவிட்டர் : https://twitter.com/Gnaanapragaasan

பேசுபுக்கு : https://www.facebook.com/gnaanapragaasan.e.bhu

இன்சுடாகிராம் : https://www.instagram.com/gnaanapragaasan_e_bhu/

கோரா : https://ta.quora.com/profile/இ-பு-ஞானப்பிரகாசன்-Gnaanapragaasan

தமிழ் நலனும் தமிழர் நலனுமே இலக்கு! அதை எங்கு செய்தால் என்ன? எங்கு அதிக வரவேற்புக் கிடைக்குமோ அங்கே செய்வோம்!

அதற்காக இனி வலைப்பூ எழுத மாட்டேன் என நினைத்து விடாதீர்கள்! எத்தனை நாடு போனாலும் தாய்மண்ணுக்கு வந்துதானே ஆக வேண்டும்? நம் வேர்கள் அங்குதானே இருக்கின்றன?

எனவே நேரம் கிடைக்கையில் வலைப்பூவில் மலர்வோம்!

சமுக ஊடகங்களில் எந்நேரமும் தொடர்வோம்!

வாழ்க தமிழ்!

வெல்க தமிழர்!

செவ்வாய், மார்ச் 01, 2022

ஏன் இரசியாவை ஆதரிக்கக்கூடாது?


Hearteen from a War field
போரின் பின்னணியிலிருந்து ஓர் அன்புக் குறியீடு!
மிழர்கள் எப்பொழுதுமே பொதுவுடைமையாளர்கள்தாம்! இது நாம் மார்க்சிடமோ லெனினிடமோ கற்றதில்லை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

- என்று 2000 ஆண்டுகள் முன்பே பொதுவுடைமைக்கு வரைவிலக்கணம் வகுத்தவர்கள் நாம்! பொதுவுடைமை நம் இயல்பு!

ஆனால் இன்றோ நம் பெருமதிப்புக்குரிய தோழர்கள் பலர் உக்கிரேன் போரை நடத்துவது இரசியா என்கிற பொதுவுடைமை நாடு எனும் ஒரே காரணத்துக்காக இந்தப் போரில் இரசியாவை ஆதரித்துப் பேசுகிறார்கள். இது போரை ஆதரித்துப் பேசுவது போலவே அமைந்திருக்கிறது. நண்பர்களே, போரைத் தொடங்குவதற்கு எப்பொழுதும் ஆட்சியாளர்கள் ஏதாவது ஒரு சாக்குச் சொல்லத்தான் செய்வார்கள். ஆப்கானிசுத்தான் மீது போர் தொடுக்கத் தீவிரவாத ஒழிப்பு என்றும், சிரியா மீது போர் தொடுக்க வேதியியல் ஆயுதங்கள் ஒழிப்பு என்றும், லிபியா மீது போர் தொடுக்க ஆதிக்கவாத ஒழிப்பு என்றும் அமெரிக்க சொல்லாத சாக்குகளா? அப்படி ஒரு சாக்குத்தான் இன்று இரசியா சொல்வதும். சாக்குகள் அல்லது காரணங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். சமயங்களில் அவை சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட காரணமும் ஒரு போரைச் சரி எனச் சொல்லப் போதுமானதாகாது. அதுவும் மக்களான நாம் போரைச் சரி எனச் சொல்லக்கூடாது! அதிலும் போர் எனும் பெயரில் நடந்த இனப்படுகொலையில் 1,50,000 பேரை இழந்த தமிழர்களான நாம் சொல்லக் கூடாது! காரணம் எந்தப் போரிலும் குண்டு ஆட்சியாளன் தலையில் விழப் போவதில்லை, மக்களான நம் தலையில்தான் விழும்!

எனவே பொதுவுடைமை எனும் ஒரே காரணம் பற்றி இரசியாவை ஆதரிக்காதீர்! எக்காரணம் கொண்டும் போரை ஆதரிக்காதீர்!

படம்: நன்றி தமிழ் இந்தியன் எக்சுபிரசு


திங்கள், பிப்ரவரி 21, 2022

நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு

Naming a child with the letter of birth star is really a Tamil culture?
ப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நாள்மீனைத் (நட்சத்திரம்) தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம்.

அதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 நாள்மீன்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் நாள்மீனுக்கும் உரியவையாகச் சில எழுத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துக்களில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும் நம் மக்கள் அப்படிப்பட்ட பெயர்களை இணையத்தில் தேடித் துழாவுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கிடைக்காவிட்டால் அவற்றுக்கு மாற்றாகச் சோதிடம் பரிந்துரைக்கும் தொடர் எழுத்துக்களிலாவது கிடைக்குமா எனத் தவிக்கிறார்கள்.

இப்படி நாள்மீன் எழுத்தில் பெயர் வைப்பது தமிழ் மரபா?...

இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?...

இதோ, பார்க்கலாம்!...


தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்

இது தமிழர் வழக்கமா என்பதை நாம் அறிய வேண்டுமானால் பண்டைக் காலம் முதல் அண்மைக்காலம் வரையான பலரின் பெயர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆனால் அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவெனில், நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களைப் பற்றியவைதாம்; வரலாற்றிலோ மன்னர்களின் பட்டப்பெயர், பட்டமேற்புப் (பட்டாபிசேகம்) பெயர் போன்றவைதாம் காணப்படுகின்றனவே தவிர இயற்பெயர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இயற்பெயர் தெரிந்த மன்னர்கள் - அல்லது மன்னரல்லாத பிறர் - பற்றிய விவரங்களிலோ அவர்களின் பிறந்த நாள்மீன் பற்றிய குறிப்பு இல்லை. இரண்டு விவரங்களும் ஒன்றாய்க் கிடைப்பது மிக மிகச் சிலரைப் பற்றித்தாம். அப்படிச் சிலரின் பெயர்களைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.

❖ முதலாம் இராசராச சோழன்:

சனி, பிப்ரவரி 05, 2022

இது தமிழ் மக்களுக்கு அ.தி.மு.க., செய்யும் இரண்டகம் (Betrayal) - ஒரு போன்மி (meme)

ருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து (NEET) தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டமுன்வடிவை (bill) இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் தமிழ்நாட்டு மக்களின் அந்த ஒருமித்த எதிர்பார்ப்பையும் நலன்களையும் காலில் போட்டு மிதிக்கும் விதமாய் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். இது குறித்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முறையே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் சற்றும் கூச்சமே இல்லாமல் அதைப் புறக்கணிப்பதாக அறிவிக்கிறது அ.தி.மு.க. இந்த நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் பா.ச.க., கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் இதே நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஆளும் தி.மு.க., அரசு சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் ஆதரவளிப்பதாகச் சட்டமன்றத்தில் கூறிவிட்டு அ.தி.மு.க., இன்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வடிகட்டிய இரண்டகம் (betrayal)! எனக்கு இதைப் பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா? இதோ கீழே பாருங்கள்:-

ADMK & BJP refused to participate in all parties' conference on NEET exception bill

படம்: நன்றி மோகனா மூவீசு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்