போரின் பின்னணியிலிருந்து ஓர் அன்புக் குறியீடு! |
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
- என்று 2000 ஆண்டுகள் முன்பே பொதுவுடைமைக்கு வரைவிலக்கணம் வகுத்தவர்கள் நாம்! பொதுவுடைமை நம் இயல்பு!
ஆனால் இன்றோ நம் பெருமதிப்புக்குரிய தோழர்கள் பலர் உக்கிரேன் போரை நடத்துவது இரசியா என்கிற பொதுவுடைமை நாடு எனும் ஒரே காரணத்துக்காக இந்தப் போரில் இரசியாவை ஆதரித்துப் பேசுகிறார்கள். இது போரை ஆதரித்துப் பேசுவது போலவே அமைந்திருக்கிறது. நண்பர்களே, போரைத் தொடங்குவதற்கு எப்பொழுதும் ஆட்சியாளர்கள் ஏதாவது ஒரு சாக்குச் சொல்லத்தான் செய்வார்கள். ஆப்கானிசுத்தான் மீது போர் தொடுக்கத் தீவிரவாத ஒழிப்பு என்றும், சிரியா மீது போர் தொடுக்க வேதியியல் ஆயுதங்கள் ஒழிப்பு என்றும், லிபியா மீது போர் தொடுக்க ஆதிக்கவாத ஒழிப்பு என்றும் அமெரிக்க சொல்லாத சாக்குகளா? அப்படி ஒரு சாக்குத்தான் இன்று இரசியா சொல்வதும். சாக்குகள் அல்லது காரணங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். சமயங்களில் அவை சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட காரணமும் ஒரு போரைச் சரி எனச் சொல்லப் போதுமானதாகாது. அதுவும் மக்களான நாம் போரைச் சரி எனச் சொல்லக்கூடாது! அதிலும் போர் எனும் பெயரில் நடந்த இனப்படுகொலையில் 1,50,000 பேரை இழந்த தமிழர்களான நாம் சொல்லக் கூடாது! காரணம் எந்தப் போரிலும் குண்டு ஆட்சியாளன் தலையில் விழப் போவதில்லை, மக்களான நம் தலையில்தான் விழும்!
எனவே பொதுவுடைமை எனும் ஒரே காரணம் பற்றி இரசியாவை ஆதரிக்காதீர்! எக்காரணம் கொண்டும் போரை ஆதரிக்காதீர்!
படம்: நன்றி தமிழ் இந்தியன் எக்சுபிரசு
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக