.

திங்கள், டிசம்பர் 28, 2020

தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்

stalin invites suggestions from people for DMK manifesto 2021
டந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மக்களிடம் கேட்டிருந்தார் தி.மு.க., தலைவர்.
 
கடந்த முறை எழுதி அனுப்பியதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பிருந்ததால் இந்த முறையும் அனைத்துத் தரப்புத் தமிழ் மக்கள் சார்பாகவும் நான் சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளேன். வழக்கம் போல் இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல, இந்திய அரசின் புதிய வேளாண் சட்டம் போன்ற வல்லாதிக்கச் சட்டங்களைத் தவிடுபொடியாக்கி மக்களைக் காப்பதற்கான அதிரடித் திட்டங்கள்! சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள்! படித்துப் பாருங்கள்! உங்கள் ஆதரவைத் தாருங்கள்!
☟    ☟    ☟
திப்பிற்குரிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்தல் அறிக்கைக் குழுவினருக்கும் வணக்கம்!

நாடாளுமன்றத் தேர்தல் போலவே சட்டமன்றத் தேர்தலின்பொழுதும் உங்கள் அறிக்கையை வடிவமைக்க மக்களான எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு நனி நன்றி!

கடந்த முறை நான் எழுதியனுப்பிய பதினொரு பரிந்துரைகளில் ஆறை ஏற்றுக் கொண்டது போலவே இந்த முறையும் என் பெரும்பாலான பரிந்துரைகளை உங்கள் அறிக்கையில் பார்க்கும் மகிழ்ச்சியை எதிர்நோக்கி இதோ என் பட்டியல்.

1) சட்டம்

1.1) நாட்டிலேயே உயரிய அளவாக 69% இட ஒதுக்கீடு வழங்கி சமுகநீதியில் இந்தியா முழுமைக்கும் வழிகாட்டியாகத் திகழ்வது தமிழ்நாடு. ஆனாலும் தனியார்துறையில் சமுகநீதி என்பது இன்னும் தணியாத வேட்கையாகவே உள்ளது. மாநிலத்தின் துறைசார் வேலைவாய்ப்பில் 39 விழுக்காட்டைத் தன்னகத்தே கொண்ட தனியார்துறையில் இட ஒதுக்கீடு எனும் பேச்சுக்கே இடமில்லை என்பது சமுகநீதியை முன்னெடுப்பதில் நாம் அரைக் கிணறுதான் தாண்டியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. எனவே தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கலைஞர் உட்பட எத்தனையோ சமுக ஆர்வலர்களின் பல்லாண்டுக் காலக் கனவை நிறைவேற்றும் வகையில் மாநில அளவில் தனியார் துறையிலும் 69% சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்!

1.2) தற்பொழுதைய மாநில அரசு இருக்கிற அத்தனை அரசுப் பணியிடங்களையும் வட மாநிலத்தவர்களுக்கே முறைகேடான வழிகளில் வாரி வழங்கி வருவது மாநில அதிகாரத்தையே வட இந்தியர்கள் கையில் தாரை வார்க்கும் செயல்! ஏற்கெனவே இதற்கு எதிராக ஆந்திரம், அரியானா ஆகிய மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்து விட்டன. அவை போல் தமிழ்நாட்டிலும் அரசுத்துறை - தனியார்துறை இரண்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கென 80% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான புதிய சட்டம் வேண்டும்!

1.3) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு அதே சாதியின் பெயரால் அந்த உரிமைகளைத் திருப்பி அளிப்பதுதான் சரியான தீர்வு என்கிற வகையில் இட ஒதுக்கீடு தேவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சமுகநீதியை எப்பொழுதும் நாம் இந்த முறையில் மட்டுமே முன்னெடுத்து வந்தால் சாதியிலிருந்து வெளியேறக் கடைசி வரை யாரும் முன்வர மாட்டார்கள் என்பதே நடைமுறை சார்ந்த உண்மை. ஆகவே சாதியற்ற சமுகமாகத் தமிழ் மண்ணை மாற்றுவதற்கான முதல் படியாக சாதியற்றவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்பவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்!

2) வேளாண்மை

தஞ்சை கழிமுகப் (Delta) பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இன்றைய அரசு அறிவித்த பின்னும் எட்டு வழிச் சாலை முதலான பேரழிவுத் திட்டங்கள் எதுவும் அதன் அடிப்படையில் நீதிமன்றத்தால் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதிலிருந்தே போதுமான அளவுக்கு அது வலுவுள்ள சட்டமாக அமல்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது. அதனால் அரசு – தனியார் என யாரும் எந்தத் திட்டத்தின் பெயராலும் தஞ்சைக் கழிமுகப் பகுதியில் காலடி வைக்க முடியாதபடி உறுதியான ஒரு சட்டமாகக் கழக ஆட்சியில் அதை மீண்டும் திருத்தி அமல்படுத்த வேண்டும்.

3) சுற்றுச்சூழல்

3.1) மழைக்காலம் வந்தாலே மாநிலத் தலைநகரம் வெள்ளத்தில் மிதக்கத் துவங்கி விடுவதைத் தவிர்க்கச் சென்னை முழுதும் நீர்நிலைகள் மீதான அனைத்துக் கையகப்படுத்தல்களும் அகற்றப்பட வேண்டும். மேலும் சென்னையின் முக்கிய வடிகால் அமைப்பான பக்கிங்காம் கால்வாயும் அதில் கலக்கும் கூவம் ஆறும் முற்றிலும் தூய்மையாக்கப்பட்டு இனி எக்காலத்திலும் எவ்வளவு மழை வந்தாலும் சென்னையில் வெள்ளம் வராமல் தடுக்க வழி செய்ய வேண்டும்!

3.2) உலகின் முக்கியமான சில சதுப்பு நிலப் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணைச் சதுப்பு நிலப் பகுதி வளர்ச்சியின் பெயரால் வெகு வேகமாக அழிந்து வருவதை உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டும். நில - நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு வாழ்விடம் தரும் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாகவும் தலைநகரத்தை ஆழிப்பேரலையிலிருந்து காக்கும் இயற்கை அரணாகவும் திகழ்வது இந்த இயற்கை அற்புதம்! ஆனால் இதைக் காப்பாற்றும் நடவடிக்கை எனும் பெயரால் தற்பொழுதைய மாநில அரசு வெறும் மாநகராட்சிக் குடிநீர்த் தொட்டியைப் போல் இதைக் கையாள முனைகிறது. ஆகவே நீங்கள் ஆட்சி அமைத்ததும் தக்க துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டுதல்களோடு இந்த இயற்கை வளத்தைப் புனரமைத்துத் தலைநகரின் சுற்றுச்சூழல் தகவமைப்பைப் பாதுகாக்க வேண்டும். தவிர, மேற்கொண்டு ஒரு விரற்கடை அளவு கூட இந்த இடம் யாராலும் கையகப்படுத்தப்படாமல் (occupation) தடுக்கும் பொருட்டு இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்களில் (Biosphere reserves of India) ஒன்றாகப் பள்ளிக்கரணைச் சதுப்பு நிலப் பகுதியை அறிவிக்குமாறு ஐக்கிய நாட்டுக் கல்வி – அறிவியல் – பண்பாட்டு மையத்திடம் (UNESCO) விண்ணப்பிக்க வேண்டும்! 
 
3.3)* சென்னை, காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டம் சென்னையின் பேரழிவுக்கு வித்திடும் முயற்சி எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். கடல் பகுதி, நிலப் பகுதி என இரண்டும் சேர்த்து 6000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் கட்டமைக்கப்பட உள்ள இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீன்பிடித் தொழில், வேளாண்மை ஆகியவை அழிவதோடு கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலான இயற்கை அரண் அழிந்து மாபெரும் அளவில் கடல் நீர் உட்புகும் பெருங்கேடும் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும் சதுப்பு நிலக் காடுகள், அலையாத்திக் காடுகள் ஆகியவை நிறைந்த இப்பகுதி பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இருப்பதால், இதில் கை வைப்பது மிகப் பெரிய அளவில் உயிரினங்களின் அழிவுக்கு வழி வகுத்து இயற்கைச் சமநிலையைச் சீர்குலைக்கும் என்பதும் தெளிவாகிறது. தவிர, கொசஸ்தலை ஆறு உட்பட சென்னையின் பல நன்னீர் நிலைகளையும் இதனால் நாம் இழக்க நேரிடும் என்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் இயக்கமான ‘பூவுலகின் நண்பர்க’ளும் போராட்டத்தில் இருப்பதால் இது வெறும் இணையப் புரளியில்லை என்பது உறுதியாகிறது. எனவே தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கே உலை வைக்கும் இந்தத் திட்டம் உடனடியாக முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.

4) அரசு ஊழியர் நலன்

அரசு ஊழியர்களின் ஊதியத்தொகையில் ஒரு பகுதியைப் பல்வேறு திட்டங்களின் பெயரால் பிடித்தம் செய்த அரசு அதை வாக்களித்தபடி முதலீடும் செய்யாமல் அவரவர்களுக்கு உரிய காலத்தில் பணத்தைத் திருப்பியும் தராமல் இழுத்தடித்து வருவது பட்டப்பகல் கொள்ளை. இதற்கு எதிராகத்தான் அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜேக்டோ-ஜியோ கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி வேலைநிறுத்தத்திலும் இன்ன பிற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. எனவே அரசு ஊழியர்களின் பணத்தை அவர்களுக்கே உரிய வட்டியுடன் திருப்பித் தர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இது தொடர்பான போராட்டங்களுக்காக அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துறைசார் நடவடிக்கைகள் முதல் சட்ட நடவடிக்கைகள் வரை அனைத்தும் கைவிடப்பட வேண்டும்!

5) மீனவர் நலன்

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுவதையும் தாக்கப்படுவதையும் நிறுத்தத் தமிழ்நாட்டுக் காவல்துறையின் கீழ் மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்பட வேண்டும். இப்படை தமிழ்நாட்டுக் கடல் பகுதியில் எந்நேரமும் உலாக்காவல் (ரோந்து) புரிந்து தமிழ் மீனவர்கள் மீது இலங்கைப் படை தாக்குதல் தொடுத்தால் உடனே தலையிட்டுக் காப்பாற்றுவதோடு தேவைப்பட்டால் இலங்கைப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரம் பொருந்தியதாக விளங்க வேண்டும்.

6) குடும்ப நலன்

தாசுமாக்கில் (TASMAC) மக்களின் உயிரைக் குடிக்கும் மது வகைகளுக்கு மாறாக உடலுக்கும், நாட்டுப்புறப் பொருளாதாரத்துக்கும் நலம் தரும் கள் விற்பனை தொடங்கப்பட வேண்டும்! மது விற்பனை படிப்படியாகக் குறைக்கப்பட்டுக் கள் மட்டுமே விற்பனை செய்ய இலக்கு தீர்மானிக்கப்பட வேண்டும்! அதே நேரம் தாசுமாக்கு விற்பனைக்கான சட்ட நெறிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வழிபாட்டுத் தளங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றின் அருகில் சட்டப்புறம்பாக நடைபெற்று வரும் கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்! அத்துடன் மதுவிலக்குப் போராட்டத்துக்காகத் தன் உயிரையே ஈந்தவரான சசிபெருமாள் அவர்கள் பெயரில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநோயாளிகளைக் குணப்படுத்துவதற்கான சிறப்புப் பிரிவு திறக்கப்பட வேண்டும்!

7) தமிழ் வளர்ச்சி

7.1) இயல், இசை, நாடகம் எனத் தமிழின் பிற துறைக் கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கும் தமிழ்நாடு அரசு நான்காம் தமிழான இணையத் தமிழைப் பாராமுகமாக நடத்துவது வேதனை! கடந்த ஓரிரு பதிற்றாண்டுகளில் நான்காம் தமிழ் கண்டுள்ள வளர்ச்சி மலைக்கத்தக்கது. இணையத்தில் ஆங்கிலத்தோடு போட்டி போட்டு முன்னேறி வரும் தமிழ் 2017ஆம் ஆண்டு கூகுள் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தி, தெலுங்கு முதலான அனைத்தையும் முந்திச் சென்று அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழியாக மகுடம் சூடியது. இப்பேர்ப்பட்ட புதுப்பெரும் தமிழ்த்துறையைச் சிறப்பிக்க வேண்டியது அரசின் கடமை. ஆதலால் இணையத்தில் தமிழ் வளர்க்கும் தொழில்நுட்பர்கள், சிறந்த இணையத்தமிழ் எழுத்தாளர்கள், வலைப்பூ - உயூடியூபு போன்ற இணைய ஊடகங்களை நடத்தும் சிறந்த இணையத் தமிழ்ப் பதிவர்கள் போன்றோருக்கும் இனி ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கப்பெற வேண்டும்.

7.2) இணையத்தில் தமிழின் சந்தையானது மரபுசார் ஊடகங்களின் சந்தைக்கு அறைகூவல் விடும் வகையில் இன்று செழித்தோங்கி இருக்கிறது. கூகுள் 2018ஆம் ஆண்டிலிருந்து தமிழிலும் இணைய விளம்பரச் சேவையைத் தொடங்கியிருப்பதே தமிழின் இணையச் சந்தை எந்தளவுக்கு உலகெங்கும் கிளை பரப்பி நிற்கிறது என்பதற்கான அத்தாட்சி. ஆகவே நாளிதழ்களுக்கும் பிற மரபுசார் ஊடகங்களுக்கும் வழங்குவது போல இனி இணையத்தமிழ் இதழ்கள், வலைப்பூக்கள் (blogs), வலைக்காட்சிகள் (YouTube Channels) ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை வழங்க முன்வர வேண்டும்!

8) பண்பாட்டுப் பாதுகாப்பு

8.1) தமிழர் கட்டடக்கலையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோயிலில் ஆங்காங்கே சுவரில் செடிகள் முளைத்துக் கட்டடம் சிதிலமடையத் தொடங்கியுள்ளது. கலைஞர் ஆட்சியில் எழுப்பப்பட்ட திருவள்ளுவர் பெருஞ்சிலை பராமரிப்பின்றிக் கிடக்கிறது. தமிழ்நாடெங்கும் இப்படிப் பராமரிப்பின்மையால் பாழ்படும் பழந்தமிழ் அடையாளங்கள், சின்னங்கள் போன்றவற்றை உரிய வல்லுநர் குழு அமர்த்தி ஆராய்ந்து அவற்றின் பழமை மாறாமல் புனரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!

8.2) கோயில் என்பது பார்ப்பனர்கள் எனும் கொடியவர்களின் கூடாரமாக மாறி நூற்றாண்டுகள் ஓடி விட்டன என்றாலும் அம்மன், ஐயனார், கருப்பண்ணசாமி போன்ற தமிழ்த் தெய்வங்களின் கோயில்களில் தமிழர்களே இத்தனை காலமும் பூசாரிகளாக இருந்து வந்தார்கள். அண்மைக்காலமாக இந்த மரபும் மாற்றப்பட்டு இங்கேயும் பார்ப்பனர்களைப் பூசாரிகளாகப் பணியமர்த்தும் போக்கு தற்பொழுது அதிகரித்து வருகிறது. இவர்கள் பூசாரிகளாக வந்தாலும் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு ஒழுங்காக இருப்பதும் இல்லை. ஏற்கெனவே ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் தமிழர் பூசை முறைகளில் தலையிடுவது – எடுத்துக்காட்டாக, கூழ் வார்க்கும்பொழுது கூடவே கருவாட்டுக் குழம்பும் படைத்தால் “இதையெல்லாம் கோயிலுக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்வது, இறையன்பர்களை சாதி அடிப்படையில் பாகுபாடாக நடத்துவது என முறைகேடாக நடந்து கொள்கிறார்கள். எனவே அம்மன் கோயில்களிலும் இன்ன பிற நாட்டுப்புறத் தெய்வங்களின் கோயில்களிலும் மீண்டும் பழையபடி தமிழர்களையே பூசாரிகளாகப் பணியமர்த்தவும் தமிழர்கள் தவிர வேறு யாரையும் இந்தக் கோயில்களின் பூசாரிகளாகப் பணியமர்த்த முடியாதபடி சட்டப் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்தல் வேண்டும்!

8.3) கேரளத்தில் தாழ்த்தப்பட்டோரும் பூசாரிகளாக அமர்த்தப்படுவது எப்படி என்பதை ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அதை அமல்படுத்துவதன் மூலம் அனைத்து சாதியினரும் பூசாரியாக வேண்டும் எனும் கலைஞரின் கனவு இந்த ஆட்சியால் நனவாக்கப்பட வேண்டும்!

8.4) தமிழர்களின் அடையாளத்தை அழிப்பதற்காகப் பார்ப்பனர்கள் புகுத்திய இந்து மதத்தைத் தங்கள் மதமாகக் கருதித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டதுதான் இந்து மதத்தின் இழிவுகளான வருணம், சாதி, பெண்ணடிமைத்தனம் முதலான அனைத்தும் இங்கே காலூன்றக் காரணமாகி விட்டது என்பது வரலாறு. இவற்றையெல்லாம் சரி செய்ய சாதி ஒழிப்பு நடவடிக்கைகள், பெண் விடுதலை முன்னெடுப்புகள் எனத் தனித் தனியே பல நடவடிக்கைகளை நாம் காலங்காலமாக மேற்கொண்டு வந்தாலும், குறிப்பிட்ட அந்தப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான தனி நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது! ஆதலினால் தமிழினத்தின் வீழ்ச்சிகள் அத்தனைக்கும் மூலக் காரணமான இந்து மத அடையாளத்தைத் தமிழர்கள் மீதிருந்து அகற்றும் வகையில் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிற சட்டத்தை நிறைவேற்றி வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்! கருநாடகத்தில் இலிங்காயத்துகள் தனி மதமாக அறிவிக்கப்பட்டது போலத் தமிழர்களும் தனி மதத்தினராகச் சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டும். இனி படிவங்களை நிரப்பும் பொழுது ‘மதம்’ என்கிற பத்தியில் ‘தமிழர்’ என்றே குறிப்பிடும் உரிமை தமிழருக்கு அளிக்கப்பட வேண்டும்.

8.5) வன்முறையில் ஈடுபடும் இசுலாமிய அமைப்புகள் தடை செய்யப்படுவது போலவே அத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆர்.எசு.எசு., (RSS) அமைப்பும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட வேண்டும்! இந்து மதப் பரப்பல் மூலம் தமிழ், திராவிட அடையாளங்களை அழிக்கத் தொடர்ச்சியாக முயன்று வரும் பா.ச.க-வுக்கு ஒரு கடிவாளமாகவாவது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

9) ஈழத் தமிழர் நலன்

9.1) ஈழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டு ஏதிலியர் (refugee) முகாம்கள் உண்மையில் சிறைக்கூடங்களாகத்தாம் இயங்குகின்றன என்பது கண்கூடு. வெளியில் போனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பி வர வேண்டும், சற்றுத் தாமதமானாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவெல்லாம் அங்குள்ள கட்டுப்பாடுகள் மனிதநேயத்துக்கே எதிரானவை. எந்தவிதக் குற்றச் செயலிலும் ஈடுபடாத ஆயிரக்கணக்கான மனிதர்களை இப்படிச் சட்டத்தின் பெயரால் ஆண்டுக்கணக்காகச் சிறையில் வைத்திருப்பதும் அங்கே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் பிறப்பு முதலே சிறைக்கைதிகள் போல் வளரச் செய்வதும் மனதாலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. இவையெல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை என்றாலும் எந்த வகையிலாவது ஏதாவது ஒரு வழியில் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தடைகளைத் தகர்க்கப் புதிய ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இயலாவிட்டால், பன்னாட்டு ஏதிலியர் சட்டப்படி இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் சரியானவைதாமா என ஆராய்ந்து, இந்திய அரசின் இந்த நடைமுறைக்கு எதிராகப் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்திலும் ஐ.நா-விலும் தமிழ்நாடு அரசின் சார்பில் முறையான நடவடிக்கைகளைத் துவங்க வேண்டும்! 
 
9.2)* ஆண்டுதோறும் தமிழினப் படுகொலை நாட்களில் மெழுகுத்திரி ஏந்தி ஈழத்தில் கொல்லப்பட்ட நம் மக்களுக்கும் போராளிகளுக்கும் நினைவஞ்சலி செலுத்துவது கடந்த பதினொரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அ.தி.மு.க., அரசு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இந்த நினைவேந்தலைத் தடை செய்வதும், நிகழ்வுக்கு இசைவு தர மறுப்பதும், மீறி நடத்தினால் கைது செய்வதுமாகத் தொடர்ந்து இடையூறுகளைச் செய்து வருகிறது. இதனால் தமிழ் மக்கள் இறந்து போன தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் அடிப்படை உரிமை கூட இல்லாதவர்களாகத் தங்கள் தாய்மண்ணிலேயே ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் உணர்கிறார்கள். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மே 17 / 18 / 19 ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு பொருத்தமான நாளைத் ‘தமிழினப் படுகொலை நாளாக’ முறைப்படி அறிவித்து அரசுத் துக்க நாளாக இதைக் கடைப்பிடிக்கவும் குறிப்பிட்ட நாளில் யார் வேண்டுமானாலும் எத்தனை பேர் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் உரிய இசைவு பெற்று நினைவேந்தல் நடத்திக் கொள்ளவும் வழி செய்யப்பட வேண்டும். இப்படி ஓர் அரசாணை வெளியிடப்பெற்றால் அது தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை மீட்டுத் தருவது மட்டுமில்லாமல் ஈழ இனப்படுகொலை அரசியலில் ஒரு முக்கிய துவக்கப்புள்ளியாகவும் அமையும். எப்படியெனில், ஈழத்தில் நடந்ததை இனப்படுகொலை என உலக நாடுகள் ஒப்புக் கொள்ள மறுப்பதே அந்த மக்களுக்கு நீதி கிடைப்பதில் அடிப்படைச் சிக்கலாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு இனப்படுகொலை நாள் அறிவித்தால் நடந்தது இனப்படுகொலைதான் என ஒரு மாநில அரசாவது ஏற்பிசைவளித்ததாக அமைந்து ஈழ இனப்படுகொலை விவகாரத்தில் அஃது ஒரு சிறு முன்னேற்றமாக இருக்கும்.  
 
கடைசியாக ஒரு புதிய திட்டத்தை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன்!

மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை என மக்களுக்கு எதிரான சட்டங்கள் ஒவ்வொன்றையும் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்தபொழுதெல்லாம் கல்வியை மீண்டும் மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் இதற்குத் தீர்வு என்று கூறப்பட்டது. ஆனால் இன்று மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கும் வேளாண்மைக்கு எதிராகப் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்திருப்பதிலிருந்து மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இந்த மதவெறி ஆட்சியாளர்களிடமிருந்து மக்களைக் காக்க வேண்டுமானால் குறைந்தது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளிலாவது அவர்கள் தலையிட இயலாதபடி சட்டப் பாதுகாப்பை வகுத்துக் கொள்வது இன்றியமையாதது. அதற்கு ஒரே வழி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வரும் எந்தத் துறை தொடர்பாகவும் ஒன்றிய அரசு சட்டமோ அரசாணையோ இயற்றக்கூடாது என முன்நாளிட்ட (pre-dated) தடை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பதுதான்!

தி.மு.க., அரசு அமைந்ததும் முதல் வேலையாக, ஒன்றிய அரசுக்கு எதிரான மற்ற மாநில அரசுகள் அனைத்தையும் கூட்டு விண்ணப்பதாரர்களாகச் சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இப்படி ஒரு வழக்குத் தொடுக்க வேண்டும். மட்டுமின்றி, மாநிலங்களில் நாளை ஆட்சி மாறினாலும் வழக்கு நீர்த்துப் போகாமல் தடுக்கும் பொருட்டு நாட்டில் பா.ச.க-வுக்கு எதிரான எல்லா மாநிலக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளையும் கூட்டு விண்ணப்பதாரர்களாகக் கொண்டு தி.மு.க., சார்பிலும் ஒரு தனி வழக்காக இதைத் தாக்கல் செய்ய வேண்டும்!

இவ்வளவு நேரம் இந்த நீண்ட மடலைப் படித்தமைக்கு நன்றி! ஏதோ எனக்குத் தெரிந்த வரையில் அனைத்துத் தரப்பு மக்கள் நலனையும் உள்ளடக்கும் விதமாக மேற்படி பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறேன். இவற்றில் சிலவற்றை நீங்கள் வெளிப்படையாகத் தேர்தல் அறிக்கையில் பட்டியலிட முடியாது என்பதை அறிவேன். எனினும் தனிப்பட அவற்றை மனதில் கொண்டு ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி வைப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு முன்வைத்திருக்கிறேன். தவிர ஏழு தமிழர் விடுதலை, செயலலிதா அவர்கள் இறப்புக்கு நீதி, அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாருதல் ஆகியவை ஏற்கெனவே உங்கள் பட்டியலில் இருக்கும் என நம்புவதால் அவற்றைத் தனியே வலியுறுத்தவில்லை.

தமிழர்களுக்கு மட்டுமின்றி மனிதகுலத்துக்கே எதிரான பார்ப்பனிய ஆட்சி நாடு முழுவதும் தொற்றிப் படர்ந்து வரும் இவ்வேளையில் அதை அழித்தொழிக்கும் பெரியாரியப் பேரூசியாய்த் தி.மு.க., ஆட்சி மலரும் எனும் நன்னம்பிக்கையோடு உங்கள் வெற்றிக்கு வாழ்த்துரைத்து விடைபெறுகிறேன்!

வணக்கம்!

இவண்: 
- இ.பு.ஞானப்பிரகாசன் 
நாள்: 24.12.2020 
 
* மறந்து போய்ப் பின்னர் 30.12.2020, 06.01.2021 ஆகிய நாட்களில் தனி மடலில் அனுப்பப்பட்ட பரிந்துரைகள்.


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. யட்சிதா அவர்களே! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. வெறுமே ஓர் இணையத்தளத்துக்கான இணைப்பை மட்டும்தான் கொடுத்திருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்பதை விரிவாகத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்