‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் அப்படி
வாக்குமூலம் கொடுக்கவே இல்லை’ என்று 22 ஆண்டுகளுக்குப்
பின் வாய் திறந்து கூறியுள்ளார், அந்த வாக்குமூலத்தைப் பெற்ற விசாரணை அலுவலர்
தியாகராஜன் அவர்கள்.
‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்றரிகளை (Batteries) வாங்கிக்
கொடுத்தேன். ஆனால், அது
ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் என்பது எனக்குத் தெரியாது’
என்றுதான் பேரறிவாளன் வாக்குமூலம் தந்ததாகவும், ஆனால் அந்த இரண்டாவது வரியைத்
(எதற்காகப் பயன்படப் போகிறது என்பது தெரியாது) தான் வாக்குமூலத்தில் பதிவு
செய்யவில்லை எனவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அவர்! இதை நீதிமன்றத்தில்
சொல்லவும் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் பெருந்தன்மையோடு முன்வந்திருக்கிறார்!
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது உண்மையைத்
தயங்காமல், அதுவும் இவ்வளவு உறுதியாக, தெளிவாக வெளியிட முன்வந்தமைக்காக, அதிலும்
நீதிமன்றத்திலும் சொல்ல ஒப்புக்கொண்டமைக்காக முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர்
திரு.தியாகராஜன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி உரைத்தே ஆக வேண்டும்! எனினும்,
இன்னும் கொஞ்சம் முன்பாகவே அவர் இதை வெளியிட்டிருக்கலாம் என்பதே அனைவரின்
ஆதங்கமும். சரி, இப்பொழுதாவது சொன்னாரே என ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
பெரிய சான்றுகளோ, ஐயம் திரிபற்ற உறுதிப்பாடுகளோ (Non questionable proof) இல்லாமல்
எந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் இத்தனை நீதிமன்றங்களும்
இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கினவோ, அந்த வாக்குமூலங்களில் ஒன்றே தவறானது
என்று ஆகிவிட்ட நிலையில் இனி மற்றவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் மறு ஆய்வுக்குரியவை
என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்! இந்த
மூவரின் உயிர் காக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஐயா பழ.நெடுமாறன் முதலானோர்
இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முழுமையாகத் தொடக்கத்திலிருந்து
மறு விசாரணை செய்ய வேண்டி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்!
காரணம், இவர்கள் மூவரும் இந்தக் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பது இவர்களையும்
இவர்கள் குடும்பத்தினரையும் மட்டும் பாதிக்கவில்லை; தமிழ் இனத்தையே பாதிக்கிறது!
இந்தக் கொலைப் பழி விடுதலைப்புலிகள் மீது
விழுந்ததால்தான் அந்த இயக்கத்தின் மீது இந்தியா தடை போட்டது.
தங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி அயல்நாட்டில்
இப்படி ஒரு தீவிரவாதச் செயலைச் செய்ததாகக் கூறி இந்தியா போட்ட அந்தத் தடைதான்,
ஒன்றுமறியாத தங்கள் அப்பாவி மக்களின் பாதுகாப்புக்காகத் தனிநாடு கோரிப் போராடிய
விடுதலை இயக்கம் ஒன்றைப் பன்னாட்டுத் தீவிரவாத இயக்கமாக உருவகப்படுத்தியது.
அதைத் தொடர்ந்துதான், உலகின் மற்ற நாடுகளும்
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது தடை போட்டு அதைப் பன்னாட்டுத் தீவிரவாத அமைப்பாக
அறிவித்தன. அதன் விளைவு, 2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்,
உலகின் எல்லா ஆயுதக் குழுக்களையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற அமெரிக்காவின்
முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கமும் பலியானது; அத்தோடு சேர்ந்து நம் இனமும்
அழிந்தது.
ஆக, அனைத்துக்கும் மூலக் காரணம் ராஜீவ் காந்தி
கொலை! அந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தவறான விசாரணை முறைகள்!
“அஃது எப்படி? பேரறிவாளன் ஒருவரின் வாக்குமூலம்
தவறாகப் பதியப்பட்டதாலேயே இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற விடுதலைப்புலிகளின் பங்கு
இல்லையென்றாகி விடுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இந்தக் கொலைக்கும்
தொடர்பு இல்லையென்றுதான் ஆகிவிடுமா?” எனக் கேள்வி எழலாம்.
இந்த ஒன்றை மட்டும் வைத்து அப்படிச்
சொல்லமுடியாதுதான். ஆனால் எப்பொழுது, வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட
ஒருவரின் வாக்குமூலமே தவறாகப் பதியப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டதோ, இனி
மொத்த வழக்கையுமே மறு விசாரணைக்கு உட்படுத்துவதுதான் முறை. அதுவும்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
வழங்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இது சிறிதும் மறுக்க முடியாதது! அப்படியொரு விசாரணை
மேற்கொள்ளப்படும்பொழுது திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவரும் எனவும், அவற்றுள், விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தக் கொலையைச் செய்யவில்லை
என்பதும் ஒன்றாக இருக்கும் எனவும்தான் பலரும் நம்புகிறார்கள்! அதற்கு ஏராளமான
காரணங்கள் இருக்கின்றன.
ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்பதற்கான வாதங்கள்!
திருச்சி வேலுசாமி |
‘ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை இலங்கையில்
செய்த அட்டூழியங்களுக்குப் பழி வாங்கவே விடுதலைப்புலிகள் அவரைக் கொன்றார்கள்’
என்பதுதான் அந்த அமைப்பு மீதான இந்தக் கொலைக் குற்றச்சாட்டு குறித்து நடுவண்
புலனாய்வுத்துறையினர், நீதியரசர்கள் என அனைவரும் கற்பிக்கும் காரணம் (Motive).
அப்படிப் பார்த்தால், அன்றைய இலங்கைப் பிரதமருக்கும் இது பொருந்துமே! ராஜீவ்
அமைதிப்படையை அனுப்பியது விடுதலைப்புலிகளுக்கு மட்டுமில்லை, இலங்கைப் பிரதமர்
பிரேமதாசாவுக்கும்தான் பிடிக்கவில்லை. ஆக, ராஜீவைக் கொன்றது அன்றைய இலங்கை
ஆட்சியாளர்களின் கைவரிசையாக ஏன் இருக்கக்கூடாது எனும் கேள்வியும் எழுகிறது.
(பார்க்க பழ.நெடுமாறன்அவர்களின் நேர்காணல்!).
மேலும், ராஜீவ் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக,
இலங்கைப் பிரதமர் பிரேமதாசா அதே முறையில் கொல்லப்பட்டிருப்பதும், அதைச்
செய்தவர்கள் இந்திய உளவுத்துறையினர்தான் என ஒரு பரவலான குற்றச்சாட்டு நிலவுவதும்
மேற்கண்ட ஐயத்துக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. (இது பற்றித் தலைவர்.விடுதலை
இராசேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே!).
சிவராசன், சுபா முதலானோருக்கு
அடைக்கலமளித்ததற்காகச் சிறைப்படுத்தப்பட்டு, கடுமையான விசாரணைகளுக்கு
ஆட்படுத்தப்பட்ட ரங்கநாத், சந்திராமிதான் இந்தக் கொலையைச் செய்ததாகவும், ஆனால்
அவரேதான் இந்த வழக்கையே மொத்தமாகத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்ததாகவும், இந்தக்
வழக்கில் இப்பொழுது தண்டனை அளிக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையில் இதற்குச் சற்றும்
தொடர்பில்லாதவர்கள் எனவும் கூறி வருகிறார். சிவராசன் குழுவினரோடு பதினைந்து
நாட்கள் தங்கியிருந்தவரான, அவர்களுடைய எல்லாத் திட்டங்களையும் செயல்பாடுகளையும்
கண்ணால் பார்த்தவரான இவருடைய இந்தப் பேச்சு எந்த அளவுக்கு முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதைப் படிப்பவர்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். (பார்க்க: இங்கே).
சந்திராசாமி |
ராஜீவ் சாவால் ஆதாயம் அடையக்கூடியவர்கள் யார்
என்கிற கோணத்தில் பார்க்கும்பொழுது, ராஜீவுக்கு அடுத்து காங்கிரசிலிருந்து
பிரதமரான நரசிம்மராவுக்கு ஏன் இதில் பங்கு இருந்திருக்கக் கூடாது என்கிற ஒரு
கேள்வியும் உண்டு. மேலும், நரசிம்மராவின் ஆட்சியில்தான் ராஜீவ் கொலை பற்றிய பல
கோப்புகள் மாயமாயின. சந்திராசாமியின் சீடரான நரசிம்மராவ் தன் குருவைக் காப்பாற்றவே
அந்தக் கோப்புகளை அழித்தார் என ஐ.பி, ரா உளவுத்துறையினரே ஒப்புக்கொள்வதாக
அவுட்லுக் இதழ் (24.11.1997) எழுதியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் பல கோப்புகள்
திருத்தப்பட்டது உண்மைதான் என அதைத் திருத்தியவரான அன்றைய, இன்றைய அமைச்சர்
ப.சிதம்பரம் ஜெயின் விசாரணைக் குழுவிலேயே ஒப்புக்கொண்டுள்ளார். (அவுட்லுக்
24.11.1997).
இவையெல்லாம் போக, இந்த வழக்கை விசாரித்த
புலனாய்வுத்துறையினரும், நீதியரசர்களும் தவிர இந்தியாவிலுள்ள அனைவருமே ஒருமித்த
குரலில் சொன்ன ஓர் ஊகம், இஃது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பது!
மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களைக் கொல்வதை ஒரு
செயல்திட்டமாகவே (Agenda)
நிறைவேற்றி வந்த, நிறைவேற்றி வருகிற அமெரிக்கா இதையும் ஏன் செய்திருக்கக்கூடாது
என்று மொத்த இந்தியாவும் பேசியது! இதற்கேற்ப, ராஜீவ் இறுதி அஞ்சலிக்கு வந்த
பாலத்தீனத் தலைவர் யாசர் அராபத் அவர்களும்,
“சில அயல்நாட்டுச் சக்திகள் உங்களை ஒழித்துக்கட்டத்
திட்டமிட்டுள்ளதால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் பத்து
பதினைந்து நாட்களுக்கு முன்பே ராஜீவ் காந்தியை எச்சரித்தேன். ஆனால், என்னுடைய
எச்சரிக்கையை அவர் கவனத்தில்
எடுக்காமல் போனதால்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது”
என்று பேசியிருக்கிறார். அவர் ‘அயல்நாட்டுச் சக்தி’
என்று குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்று நாடே பேசியது. “அரசியல் கொலை ஒன்றுக்காக
சி.ஐ.ஏ, மொசத் (இசுரேலிய
உளவு நிறுவனம்) ஆகியவை இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாகப் பாலத்தீன விடுதலை இயக்கப்
புலனாய்வுப்பிரிவு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ள விவரத்தை அராபத் தெரிவித்தார்”
என்று புரோப் இதழ் எழுதியது (1991
- ஜுலை) அந்தக் கூற்றை மேலும் உறுதிப்படுத்தியது. வழக்கம் போல் இதைப்
பற்றியும் நடுவண் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை. (சுப்பிரமணியன் சுவாமி
அமெரிக்க உளவாளிகளுள்
ஒருவர் என்கிற உலகறிந்த இரகசியம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டிய ஒன்று).
விடுதலைப்புலிகளே கொன்றிருந்தாலும் அவர்களைத் தூக்கிலிட
முடியாது!
யாசர் அராபத் அவர்களின் தகவல் உண்மையாக
இருக்குமானால், விடுதலைப்புலிகளே இதைச் செய்திருந்தாலும், அதுவும் இதே ஆட்களை
வைத்துச் செய்திருந்தாலும் அதற்காக இவர்களுக்கோ, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுக்கோ
தூக்குத் தண்டனை போன்ற பெரிய தண்டனைகளை வழங்க முடியாது. காரணம், ‘கொலையைச்
செய்தவன் வெறும் ஏவலாளிதான். அவனைச் செய்யச் சொன்னவன்தான் உண்மையான கொலையாளி.
அவனுக்குத்தான் உச்சக்கட்டத் தண்டனை’ என்பது சட்டம். எனவே,
விடுதலைப்புலிகளே, அதுவும் இதே ஆட்களை வைத்தே இந்தக் கொலையைச் செய்திருந்தாலும்
அப்படி அவர்களைச் செய்யச் சொன்னவர்களைத்தான் தூக்கில் போட வேண்டும்! அதுதான்
சட்டம்! அதுதான் நீதி!
ஆனால், இந்த வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பில்,
“இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய
அட்டூழியங்களுக்குப் பழி வாங்கவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனிப்பட்ட
பகை காரணமாக இதை நடத்தினார்” என்று கூறப்பட்டுள்ளது.
செய்தவர் மேதகு.பிரபாகரன் அவர்கள்தான் என ஒரு
பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும், அவரை விசாரிக்காமல், நேரில் கூடப் பார்க்காமல்,
ஒரு கேள்வி கூடக் கேட்காமல், அவர் இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தக் கொலையைச்
செய்தார் என்று நீதிமன்றம் தானாக எப்படி ஒரு முடிவுக்கு வரலாம்? ஒருவரைத் தண்டிக்க
அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கட்டாயமில்லைதான். அவருக்கு
எதிராகச் சான்றுகள் இருந்தாலே போதும்தான். ஆனால், விசாரிக்கக் கூட வேண்டாமா?
ஒருவர் தன் தரப்பை எடுத்துச்சொல்ல வாய்ப்பளிக்காமலே அவர்தான் ஆட்களை அனுப்பிக்
கொன்றார் எனத் தீர்ப்பு சொல்ல நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம்
அதற்கு இடமளிக்கிறதா? சட்டம் அறிந்தவர்கள், மனச்சாட்சி இருக்கும் மனிதர்கள்
சிந்திக்கட்டும்!
குற்றம் நிகழ்த்தப்பட்டதற்கான காரணத்தைப்
பிடிபட்டிருப்பவர்கள் மீதோ அவர்களை அனுப்பியதாகச் சொல்லப்படுபவர் மீதோ
சுமத்தாவிட்டால் வழக்கு நிற்காது, இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்க முடியாது,
முக்கியக் குற்றவாளியைத் தொடர்ந்து தேட வேண்டி வரும் என்பனவற்றைத் தவிர, இப்படிச்
சட்டத்தையே மீறும் வகையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு வேறென்ன காரணம்
இருக்க முடியும்?
கொலை
வழக்குகளைப் பொறுத்த வரை, ஒரு சிறு ஐயம் ஏற்பட்டாலும் அதைக்
குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக்கி அவரை விடுதலை செய்வதுதானே முறை? அமெரிக்க
உளவுத்துறை முதல் உள்நாட்டு அரசியல் கேடிகள் வரை இப்படி ஏராளமானோர் மீது நாடளாவிய,
உலகளாவிய ஐயப்பாடுகளும், ஆணித்தரமான குற்றச்சாட்டுகளும் இருந்த நிலையில், விசாரணைக்
குழுவால் பரிந்துரைக்கப்பட்டபடி விசாரணை முழுவதும் நிறைவடையாத நிலையில், பற்பல
முக்கிய ஆவணங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இவற்றையெல்லாம்
குற்றவாளிக்குச் சாதகமாகக் கருத்தில் கொள்ளாமலே உச்சக்கட்டத் தண்டனை வழங்கும்
அளவுக்குப் போனது எப்படி?
இத்தனை குற்றச்சாட்டுகளும் ஐயப்பாடுகளும் இருக்கும்பொழுது இவற்றுள் ஒன்றையும் பரிசீலனை கூடச் செய்யாமல்,
விடுதலைப்புலிகள்தாம் இதைச் செய்தார்கள் என்று புலனாய்வுத்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டு
அந்தக் கோணத்திலேயே தொடக்கம் முதல் இறுதி வரை விசாரணை நடத்தி முடித்தது ஏன்?
இவையெல்லாம்
விசாரிக்கப்படாமலே கைகழுவப்பட்டது யாரைக் காப்பாற்றுவதற்காக?
சரி, இவற்றையெல்லாம் சொல்பவர்களான பழ.நெடுமாறன்,
வை.கோ, சீமான், விடுதலை இராசேந்திரன் போன்றோர்தான் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக,
தன்னலத்துக்காக, தமிழ்ப் பற்று காரணமாக இப்படிக் கூறுகிறார்கள் என
வைத்துக்கொண்டால், இருபதாம் நூற்றாண்டு அரிச்சந்திரன் () எனப்
புலனாய்வுத்துறையினர், நீதியரசர்கள் போன்ற அனைவராலும் நம்பப்படும் சுப்பிரமணியன்
சுவாமி என்ன கூறுகிறார்?
எந்தச் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சைக்
கேட்டு, சேணம் கட்டிய குதிரை போல், விடுதலைப்புலிகள்தாம் இந்தப் படுகொலையைச்
செய்தார்கள் என்ற கோணத்திலேயே முழு விசாரணையையும் நடத்தி முடித்தார்களோ, அவரே
இப்பொழுது, ‘அதை விடுதலைப்புலிகள் மூலம் செய்தவரே சோனியா காந்திதான்’
எனப் பேசத் தொடங்கியுள்ளார். (பார்க்க: இங்கே!)
அன்று, இதே சுப்பிரமணியன் சுவாமியின் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை
ஏற்றுக்கொண்ட நடுவண் புலனாய்வுத்துறையினர், இன்று அதே சுப்பிரமணியன் சுவாமி
மீண்டும் மீண்டும் எல்லா ஊடகங்களிலும் கூறிவரும் இந்தக் குற்றச்சாட்டை ஏன்
கண்டுகொள்ளவில்லை?
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம்
ஒன்று விடாமல் பதிலடி கொடுக்கும் சோனியாவோ, ராகுல், பிரியங்கா,
காங்கிரசுக்காரர்கள் ஆகியோரோ சுப்பிரமணியன் சுவாமியின் இந்த மாபாதகக்
குற்றச்சாட்டுக்கு இன்று வரை வாய் திறக்காதது ஏன்?
‘சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க
வேண்டும்’ என்ற
ஜெயின் குழுவின் பரிந்துரையை ஏற்று அமைக்கப்பட்ட பல்முனைநோக்குப்புலன் விசாரணைக் குழு, இன்று வரை அவர்களை
விசாரிக்காததைப் பற்றிச் சோனியா கவலைப்படவே இல்லையே ஏன்?
அப்படியானால் சுப்பிரமணியன் சுவாமி கூறுவதிலும்
ஏதோ ஓர் உண்மை ஒளிந்திருக்கிறதா?
அப்படியானால், நாம் எல்லோரும் நினைப்பது போல்,
சோனியா விடுதலைப்புலிகளை ஒழிக்க அப்படி முழு மூச்சுடன் களமிறங்கியது பழி
வாங்குவதற்காக இல்லையா, இது பற்றிய உண்மை தெரிந்த அவர்களை விட்டுவைப்பது தனக்கு
ஆபத்து என்பதனால்தானா? (கொலை நடந்த மூன்றாம் நாள், விடுதலைப்புலிகளின்
பன்னாட்டுச் செயலகத்துடைய எழுத்தாளராக இருந்த மாவீரர்.கிட்டு இலண்டனிலிருந்து “இந்தக்
கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும், “உண்மையான
கொலையாளிகள் பற்றி எங்களிடமும் சில தகவல்கள் உள்ளன. இந்திய அரசு என்னை அணுகினால்
அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்” என்றும்
வெளிப்படையாக அறிவித்தது இங்கே
குறிப்பிடத்தக்கது).
தண்டனைக்குரியவர்கள் இவர்கள் என்றே வைத்துக்கொண்டாலும்
புலிகள் மீதான தடை செல்லாது!
இவை எல்லாவற்றையும் விட உச்சநீதிமன்றத்
தீர்ப்பில் மிக மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொன்று, “இந்நிகழ்வு ராஜீவ்
காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்குச் சான்று இல்லை.
மேலும் இஃது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லை.
எனவே, இது தீவிரவாதச் செயல் இல்லை!” எனக்
கூறப்பட்டிருப்பது. (சான்று: விக்கிப்பீடியா!).
இஃது கடலளவு வியப்பைத் தருகிறது!!! தீவிரவாதச்
செயல் இல்லையென உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்ட ஒரு செயலைச் செய்ததற்காக
(அதாவது, இதை விடுதலைப்புலிகள் செய்தார்கள் என வைத்துகொண்டால்) எப்படி ஓர்
இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பு எனத் தடை செய்ய முடியும்? எப்படி அந்த நாளைத்
‘தேசியத் தீவிரவாத ஒழிப்பு நாளாக’க் கடைப்பிடிக்க முடியும்?
இவை முழுக்க முழுக்கச் சட்டத்துக்குப் புறம்பானவை அல்லவா? வெளிப்படையான நீதிமன்ற
அவமதிப்புகள் அல்லவா? இப்படி ஒரு சட்டப் புறம்பான தடையின் அடிப்படையில் மற்ற நாடுகளும்
இந்த இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பு எனத் தடை செய்து வருகின்றனவே, இதை விடக் கொடுமை
உண்டா?
ஆக, விடுதலைப்புலிகளோ அதன் தலைவர் பிரபாகரனோ ராஜீவைக் கொல்லவில்லை என
நம்புவதற்கும் பல காரணங்கள் உள்ளன!
அவர்களே கொன்றிருந்தாலும் அவர்களுக்கு உச்சக்கட்டத் தண்டனை கொடுக்கக்கூடாது எனக் கோருவதற்கும் சட்டப்படி நியாயங்கள் உள்ளன!
முதன்மைக் குற்றவாளிகள் அவர்கள்தான் என்றே ஏற்றுக்கொள்வதாக இருப்பினும், அந்த அமைப்பின் மீதான தடை செல்லாது எனச் சொல்லவும் சட்டத்தில் இடம் உள்ளது!
அவர்களே கொன்றிருந்தாலும் அவர்களுக்கு உச்சக்கட்டத் தண்டனை கொடுக்கக்கூடாது எனக் கோருவதற்கும் சட்டப்படி நியாயங்கள் உள்ளன!
முதன்மைக் குற்றவாளிகள் அவர்கள்தான் என்றே ஏற்றுக்கொள்வதாக இருப்பினும், அந்த அமைப்பின் மீதான தடை செல்லாது எனச் சொல்லவும் சட்டத்தில் இடம் உள்ளது!
இவை அனைத்துக்கும் வலுச் சேர்க்கும் விதமாகத்தான்
முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.தியாகராஜன் அவர்களின் அறிவிப்பு
இப்பொழுது வெளிவந்துள்ளது.
அவரது அறிவிப்புக்கு எதிராக இந்த வழக்கை
விசாரித்த முதன்மை அதிகாரிகளான கார்த்திகேயனும், ரகோத்தமனும் பேசியுள்ளனர்.
அதிலும் ரகோத்தமன், பேரறிவாளனுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும் என்பதாகச் சிறு
பட்டியலே இட்டுள்ளார். (ஜூனியர் விகடன் 4.12.2013). அவர் சொல்லும் அனைத்துக்கும்
ஒரே பதில், இந்த வழக்கின் கடைசித் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி
கே.டி.தாமஸ் அவர்களின் அறிவிப்புதான். தியாகராஜனுக்கு முன்பாகவே இந்த மூவரையும்
விடுதலை செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்ட அவர்,
“07.05.1991 அன்று சிவராசன் புலிகளின்
தலைமையகத்திற்குப் பேசியதை இடைமறித்துக் கேட்டபொழுது, இராசீவ்
காந்தியைக் கொலை செய்யும் இத்திட்டம் தமிழகத்தில் யாருக்குமே தெரியாது என்று அவர்
சொல்லியிருக்கிறார். எனவே, இவ்வழக்கில்
கூட்டுச்சதிக்குரிய சட்டப்பிரிவான 120 (b) பொருந்தாது” என்கிறார்.
அப்பொழுது அந்தக் கம்பியில்லாப் பேச்சை மேம்போக்காக எடுத்துக் கொண்டதாகவும்
குறிப்பிட்டிருக்கிறார். (பார்க்க: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன்அவர்களின் உரை).
வாக்குமூலம் பெற்ற விசாராணை அதிகாரியும்,
தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமே இப்படிச் சொல்லிவிட்டநிலையில்
இனியும் இந்த மூவருக்காக இரக்கம் வேண்டியோ, பொது மன்னிப்பு வேண்டியோ வாதாடுவது
அவர்கள் மீதிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்கும், விடுதலைப்புலிகள் மீதான
தடைக்கும் மென்மேலும் உறுதி சேர்ப்பதாகவே அமையும் என்பதால், இனியும் அப்படிப்பட்ட
வாதங்களை முன்வைக்காமல், முழுமையான மறு விசாரணை கோரி வாதாடி, இவர்கள் குற்றமற்றவர்கள்
என்பதை உறுதிப்படுத்தி வெளிக்கொண்டு வர வேண்டும்!
மூவர் விடுதலையே தமிழீழ விடுதலைக்கான தலைவாசல்!
அப்படி, இவர்கள் குற்றமற்றவர்கள் என்பது மட்டும்
உறுதியாகி விடுதலை கிடைத்துவிட்டால் இந்த வழக்கின் அடிப்படையில் விடுதலைப்புலிகள்
அமைப்பின் மீது போடப்பட்டிருக்கும் இந்திய, பன்னாட்டுத் தடைகள் அனைத்தையும்
தகர்த்தெறிந்து விடலாம்!...
அப்படித் தடை தகர்ந்துவிட்டால், தொப்புள் கொடிச்
சொந்தங்கள் எனும் உரிமையில் அடைக்கலம் நாடி வரும் நம் ஈழத் தமிழ் உடன்பிறப்புகள்
நம் தமிழ்நாட்டு மண்ணிலேயே, நம் கண்ணெதிரேயே முகாம்களில் சிறைவாழ்க்கை
வாழ்கிறார்களே, அந்தச் சகிக்க முடியாக் கொடுமைக்கு உடனடி விடிவு பிறக்கும்!...
அது மட்டுமா? தவறான ஒரு தீர்ப்பின் அடிப்படையில்
இத்தனை ஆண்டுகளாக ஓர் இயக்கத்தைத் தடை செய்து வைத்து, அதன் அடிப்படையில் அவர்கள்
மீது பன்னாட்டுப் போர் தொடுத்து, அவர்களை ஒடுக்கும் சாக்கில் தமிழ் இனத்தையே
அழித்து ஒழித்ததற்கு நாம் பன்னாட்டுச் சமூகத்திடம் நீதி கேட்கலாம்; இழப்பீடு
கேட்கலாம்! ஒன்றரை இலட்சம் பேரின் கொடூரப் படுகொலைக்கு இழப்பீடாக, அவர்கள் ஆன்மா
அமைதியுறும் வகையில் தமிழீழத் தனித்திருநாடு
கேட்கலாம்!...
இவை அனைத்துக்கும் அடிப்படை ராஜீவ் காந்தி
படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை! ஆம்! அவர்களின் விடுதலை
அவர்களுக்கு மட்டும் விடுதலையில்லை, தமிழீழ விடுதலைக்கான தலைவாசல்!
அதற்குச் சிறந்த கொழுகொம்பாக இப்பொழுது
கிடைத்திருக்கும் தியாகராஜன் அவர்களின் இந்த வெளிப்படையான அறிவிப்பைச் சிறந்த
முறையில் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்காக வாதாடி வரும் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்
திட்டமிட வேண்டும்! அவருக்குப் பக்கபலமாகத் தமிழர் தலைவர்கள் வை.கோ, சீமான்,
கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் முதலானோர் முன்னிற்க வேண்டும்!
சுருக்கமாகச் சொன்னால், இத்தனை நாட்களாக இந்த
மூவரின் விடுதலையும், தமிழீழ விடுதலையும் இந்தியாவின் கையிலும் தமிழ்நாட்டு
முதல்வர்கள் கையிலும் இங்கிலாந்தின் கையிலும் ஐ.நா-வின் கையிலும் இருப்பதாகத்
தமிழ்த் தலைவர்கள் கூறி வந்தார்கள். இப்பொழுது அஃது அவர்கள் கைக்கே வந்திருக்கிறது!
அருள் கூர்ந்து அவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக்
கைகூப்பி வேண்டுகிறேன் இத்தனை ஆண்டுக்காலமாக இதற்காகப் போராடி உயிர் துறந்த
விடுதலைப்புலி மாவீரர்கள் சார்பாக, இந்த மாவீரர்த் திங்களில்!
உசாத்துணை:
நன்றி
நம் வாழ்வு, தோழமை, ஈழ இணையம்,
சூரியகதிர் இதழ், தமிழ்வின், கீற்று, புதுச்சேரிஇரா.சுகுமாரன் வலைப்பூ, திங்கள் சத்யா, விக்கிப்பீடியா.
படங்கள்:
நன்றி நிழல்கள், ஆனந்த விகடன், யூடியூபு, மறுபடியும் பூக்கும்,
விக்கிப்பீடியா, அன்சைக்ளோபீடியா, மே பதினேழு இயக்கம், தமிழ்.காம், டூட்டி ஆன்லைன், எ சிறீலங்கா.கொம், என்வழி.
(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).
இந்தப் பதிவைப் பரப்பி இந்த அரிய உண்மைகளை மற்றவர்களும் அறிய உதவுவீர்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக