என் தம்பிகள், நண்பர்கள் பலரும் “சீமானுக்கு வாக்களியுங்கள்” என்கிறார்கள் என்னிடம். அவர்களுக்கு நான் அளித்த விளக்கத்தை இங்கே பொதுவிலும் வைக்க விரும்புகிறேன்.
நாம் தமிழருக்கு வாக்களிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. உண்மையைச் சொன்னால், திராவிடம் எனும் கோட்பாட்டுக்கும் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா எனும் தனி மனித ஆளுமைக்கும் இடையிலானதாகவே இத்தனை காலம் இருந்து வந்த தமிழ்நாட்டு அரசியல், சீமானின் வெற்றி மூலம் திராவிடம் – தமிழ்த் தேசியம் எனும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலானதாக மாற வேண்டும் என்பதே என் அவா. எப்பொழுது அது நடக்கும் எனக் காத்திருப்பவன் நான்.
ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை, எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். இந்த முறை நான் நாம் தமிழருக்கு (அல்லது மக்கள் நீதி மய்யத்துக்கு அல்லது அ.ம.மு.க-க்கு) வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பதுதான் அது!
தண்ணீருக்குள் விழுந்த நீச்சல் தெரியாதவன் மூச்சுக்குத் தவிப்பது போல, இந்த பா.ஜ.க., ஆட்சியிலிருந்து எப்பொழுது விடுபடலாம் என ஒவ்வொரு நொடியும் நாம் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறோம். நமது பொருளாதாரம், வாழ்வாதாரம், தனி மனித உரிமை, இன – மொழி அடையாளங்கள் என அத்தனையும் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட வரலாறு காணாத நெருக்கடியில், மீள்வதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்தப் பாராளுமன்றத் தேர்தல்தான். இந்தளவுக்கு முக்கியம் வாய்ந்த இந்தத் தேர்தலில், எந்தத் தேசியக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லாத சீமானுக்கோ கமலகாசனுக்கோ தினகரனுக்கோ வாக்களித்தால் ஆட்சி மாற்றம் எப்படி வரும் என்பதே என் அச்சம்!
என் இணைய நண்பர்களில் பலர் நா.த.க-யின் வேட்பாளர்களுடைய தகுதி பற்றி எடுத்துரைக்கிறார்கள். உண்மையிலே மிகவும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை, அந்தந்தத் தொகுதியுடைய மண்ணின் மைந்தர்களைக் களமிறக்கி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது நாம் தமிழர்! உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டிய அணுகுமுறை இது! அதே நேரம், இந்தத் தேர்தலில் நமக்குத் தேவை தகுதியான நாடாளுமன்றப் பிரதிநிதிகளா அல்லது ஆட்சி மாற்றமா என்கிற கேள்வி எழும்பொழுது ஆட்சி மாற்றம்தான் என்பதுதான் நமது தவிர்க்க முடியாத பதிலாக இருக்கிறது! அதற்குத் தி.மு.க-காங்கிரசுக் கூட்டணிக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது என்பதுதான் கசந்தாலும் உண்மை!
ஏனெனில் சீமானைப் பொறுத்த வரையில், அவர் நாற்பது தொகுதிகளிலுமே வென்றால் கூட ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த காங்கிரசுடன் (தமிழர்களுக்கு எதிரான அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்து வரும் பா.ஜ.க-யுடனும்) கூட்டணி வைக்க மாட்டார்.
மொத்த நாடும் பா.ஜ.க., ஆட்சியைக் கழுவி ஊற்றிய, ஊற்றுகிற நிலையிலும் தொடக்கம் முதலே அவர்கள் விதயத்தில் வழவழ கொழகொழவென்றே பேசி வந்த கமல்ஹாசன் அவர்களுக்கு வாக்களித்தால் வென்றதும் அவர் பா.ஜ.க-யுடன்தான் கூட்டணி வைப்பார் என நான் மட்டுமில்லை, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முதற்கொண்டு உணர்வாளர்கள் அனைவருமே சொல்கிறார்கள்.
தினகரனோ ஏற்கெனவே பல சட்டச் சிக்கல்களிலும் அரசியல் நெருக்கடிகளிலும் தவிக்கிறார். ஆகவே அவர் வென்றால் தேர்தல் முடிவைப் பொறுத்து எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கைகோக்கலாம். அவர் காங்கிரசுடன் சேர்வார் எனவோ பா.ஜ.க-யுடன் சேர மாட்டார் எனவோ எந்த உறுதிப்பாடும் கிடையாது. அவர் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் அதில் யாருக்கும் எந்த வியப்பும் கூட ஏற்படாது.
எனவே மிச்சமிருக்கும் தி.மு.க-காங்கிரசுக் கூட்டணிதான் மோடி ஆட்சியிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெற இருக்கும் ஒரே தேர்வு என்பதுதான் இன்றைய கள நிலவரம்!
ஆக, ஏன் நான் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன் என்பதற்கான முதல் தலைபோகும் காரணம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போகும் என்பது. இரண்டாவது என்னவென்றால், துவக்கத்திலேயே குறிப்பிட்டபடி நான் சீமான் தமிழ்நாட்டு முதல்வராக வர வேண்டும் என உண்மையாகவே விரும்புகிறேன் என்பது!
புரியவில்லையா? சொல்கிறேன் கேளுங்கள்!
இந்த முறை மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் நடந்த கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வசந்தி தேவி போன்ற பெரும் கல்வியாளர்கள், ‘மூடர் கூடம்’ நவீன் போன்ற சமூக அக்கறையுள்ள படைப்பாளிகள், முன்னாள் நீதியரசர்கள், மேனாள் துணைவேந்தர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் என அனைவருமே இப்படித்தான் சொல்கிறார்கள்.
எனவே சீமான் (அல்லது கமல் அல்லது தினகரன்) முதலமைச்சராக அமர வேண்டும் என்றாலே அதற்குச் சட்டமன்றத் தேர்தல் என ஒன்று நடந்தாக வேண்டும். அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க., தோற்றாக வேண்டும். அது நிகழ வேண்டும் என்றால் பா.ஜ.க-க்கு எதிராகத் தேசிய அளவில் போட்டியிடும் ஒரே கூட்டணியான காங்கிரசுக் கூட்டணி இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டும்!
ஆம்! மோடி மீண்டும் தலைமையமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமில்லை எதிர்காலத்தில் சீமான், கமல், தினகரன் போன்றோர் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த முறை இவர்களுக்கு நான் வாக்களிக்க மறுக்கிறேன்! ஏனெனில் இருப்பது ஒரு வாக்குத்தானே! எனவே நண்பர்களே,
சிந்தித்து வாக்களியுங்கள்!
சிந்தாமல் வாக்களியுங்கள்!
சிதறாமல் வாக்களியுங்கள்!
தவறாமல் வாக்களியுங்கள்!
✎ ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்
✎ தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
மாறுபட்ட சிந்தனை...
பதிலளிநீக்குவழக்கம் போல் இந்தப் பதிவிலும் தங்கள் கருத்துத்தான் முதலாவது! மிக்க மகிழ்ச்சி ஐயா! மாறுபட்ட சிந்தனை ஏதுமில்லை. விளைவைச் சொன்னேன் அவ்வளவுதான். மிக்க நன்றி!
நீக்குஇவர்கள் தேர்தலில் நிற்பதால் வாக்குகள் சிதறும் என்பதே சரி
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் ஐயா! தங்கள் இசைவான கருத்துக்கு மிக்க நன்றி!
நீக்குநான் நோட்டாவுக்கு வாக்களித்தேன்
பதிலளிநீக்குமீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் தாங்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமலிருக்கும் பொருட்டு, நல்ல வேட்பாளர்களையே நிறுத்தினாலும் சீமான், கமல், தினகரன் ஆகியோரில் யாருக்கும் வாக்களிக்க வேண்டா என வலியுறுத்துகிறோம். இந்த மாதிரி நேரத்தில் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என வாக்களிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைச் சிதறடித்து மீண்டும் பா.ச.க., ஆட்சிக்கு வரத்தான் உதவும்.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஉங்கள் கருத்து தவறான பொருள் தருவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை. மேலும் நீங்கள் கருத்து இட விரும்பினால் உங்கள் பெயருடன் அதைப் பதிவு செய்வதுதான் நல்லது, நாகரிகமானது.
நீக்குஒரு வேளை நீங்கள் நினைத்தபடி மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரசும் ஆட்சி அமைத்து விட்டால் அடுத்த தேர்தல் நேரத்தில் செப்டிக் தொட்டிக்குள் வீழ்ந்துவிட்டவன் போல் மயங்கி கிடப்பீர்கள் .
பதிலளிநீக்குஅதிமுக கூட்டணி மோடி பிரதமர் என அறிவித்து விட்டது , காங்கிரஸ் கூட்டணியில் ஸ்டாலின் மட்டும்தான் அவசரக்குடுக்கை போல் ராகுல் பிரதமர் வேட்ப்பாளர் என அறிவித்துள்ளார் . ஏனைய காட்சிகள் கப்சிப் என வாய் மூவடி இருக்கின்றனர் .
காங்கிரசே கூட ராகுல் பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை .
இந்த நிலையில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ தனிப்பெரும்பான்மை பெறா விட்டால் ராகுல் , மோடி தவிர்ந்த இன்னொரு தலைவர் வரும் வாய்ப்பு இருந்தால் தினகரன் கட்சிக்கு கிடைக்கும் எம்பிக்கள் அந்த தலைவர் பிரதமராக வருவதற்கு ஒரு முக்கிய வகிபாகத்தை வகிக்கலாம் . அதில் தமிழ் நாட்டுக்கு மிகப்பெரும் அனுகூலமும் உண்டு .
எதையுமே கொஞ்சமாவது நடைமுறை சார்ந்து சிந்திக்கப் பழக வேண்டும். போட்டியிடுவது இரண்டு கூட்டணி. அவற்றில் ஒன்று ஏற்கெனவே ஆட்சியில் இருப்பவர்களின் அணி. ஆக, ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் அனைவரும் சேர்ந்து எதிர் அணிக்கு வாக்களிப்பதுதான் ஒரே வழி, சரியான முறை. அதை விட்டுவிட்டு, தேசிய அளவில் போட்டியும் இடாத, தேசிய அளவிலான கூட்டணியிலும் இல்லாத ஒரு மாநிலக் கட்சிக்கு வாக்களித்து விட்டு, அதை விட ஆயிரம் மடங்கு பெரும் வலிமை கொண்ட அந்த எதிர் அணி ஒருவேளை தோற்றுவிடாதா, அப்படி நடந்து அதன் மூலம் நாம் வாக்களித்த சிறு கட்சியின் ஆதரவிலான ஓர் ஆட்சி அமைந்து விடாதா என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பது, அப்படி வாக்களிக்குமாறு பரிந்துரைப்பது என்பது ஒரே வரியில் சொன்னால் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் வழிமுறை.
நீக்கு//ஒரு வேளை நீங்கள் நினைத்தபடி மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரசும் ஆட்சி அமைத்து விட்டால் அடுத்த தேர்தல் நேரத்தில் செப்டிக் தொட்டிக்குள் வீழ்ந்துவிட்டவன் போல் மயங்கி கிடப்பீர்கள்// - என்ன ஒரு நாகரிகமான உவமை!! வாழ்க உங்கள் கற்பனைத்திறன்!