நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா!
எந்த அனிதா?...
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!...
தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!...
இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!...
உண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மருத்துவர்! நடுவணரசு, மாநில அரசு, நீதித்துறையினர் எனப் பலரும் சேர்ந்து இந்தத் தற்கொலைக்கு அவரைத் தூண்டியிருக்கிறார்கள் என்பதே நாடறிந்த உண்மை! தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய இவர்களுக்கு என்ன தண்டனை? நீலத் திமிங்கல விளையாட்டை உருவாக்கியவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றத்துக்காகச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அதே போலத் தற்கொலையைத் தூண்டும் இந்தத் தேர்வை உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள், “எல்லா மாநிலங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் ஏன் வழக்காட வந்திருக்கிறது?” என்று.
ஐயா நீதிபதிகளே! இந்நாட்டில் முதன் முதலாக இந்தித் திணிப்பு கொண்டு வரப்பட்டபொழுது எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் எதிர்த்துப் போராடியது. அன்று முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேச எதிர்ப்புச் செயலாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை என்ன? இந்தித் திணிப்புக்கு எதிராகக் கருநாடகம் கொடி உயர்த்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்துக்கு ஒடியாவில் பதில் அனுப்பித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர். இந்தி எதிர்ப்பால் தமிழ்நாடு பெற்றவையும் தாங்கள் இழந்தவையும் குறித்து சமூக ஊடகங்களில் புலம்புகிறார்கள் பிற மாநிலத்தவர்கள்.
நாங்கள் காட்டிய எதிர்ப்பு சரி என்பதைப் பிற மாநிலத்தினர் உணர எண்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! அதே போல, இந்த மருத்துவத் தகுதித் தேர்வு முறை தவறு என்பதையும் மற்ற மாநிலங்கள் உணரும் நாள் ஒன்று வரும். ஆனால், அதுவரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் எங்களை, சிந்திக்காத மற்றவர்களோடு சேர்ந்து சிரமப்படச் சொல்வது என்ன நியாயம்?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது அனிதாவின் உயிரிழப்பு!
ஆனால், இப்படி ஒரு கொடுமைக்குப் பின்னும் இங்கே மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகச் சல்லியடிக்கும் கும்பல் திருந்தவில்லை. போதாததற்கு, இப்பொழுது அனிதாவையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது அந்த ஈனக் கூட்டம்.
“தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் உயரவில்லை. அவர்களை அதற்குத் தகுதிப்படுத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டுக் கல்வி முறையின் தரம் இல்லை. அதனால்தான் விலக்குக் கேட்கிறார்கள்” என்கிறது மேற்படி கும்பல். முட்டாள்களே! நாங்கள் திறமை இல்லாமல் விலக்குக் கேட்கவில்லை. அப்படி ஒரு தேர்வை எழுத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, அதனால் வேண்டா என்கிறோம், புரிகிறதா?
எந்த விதமான தகுதித் தேர்வும் இன்றி, இன்னும் சொன்னால், தவறான தேர்ந்தெடுப்பு முறையென நீங்கள் காலம் காலமாகத் தூற்றும் இட ஒதுக்கீட்டு முறைப்படிதான் இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மருத்துப் படிப்புக்கான மாணவச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனாலும், நல்வாழ்வு அளவுகோலில் (Heath parameters) தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறித்தான் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்கெடுத்தாலும் கைகாட்டுகிறீர்களே, அந்த குசராத்தையே ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) குசராத்தில் 1000-க்கு 38; தமிழ்நாட்டில் 1000-க்கு 21. பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) குசராத்தில் ஒரு இலட்சத்துக்கு 122; தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கு வெறும் 79. குசராத்தில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 66.8; தமிழ்நாட்டில் 68.9. உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை குசராத்தில் 41.6%; அதுவே தமிழ்நாட்டில் 30.9%.
குசராத்தோடு மட்டுமில்லை கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தாலும் நல்வாழ்வுக் குறியீடுகளில் உயர்ந்துதான் விளங்குவது தமிழ்நாடுதான் (கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது). அட்டவணையைப் பாருங்கள்!