.

வியாழன், செப்டம்பர் 07, 2017

அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி

Anitha - The Brave Girl who fought for Educational Right of Tamils!
நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா!

எந்த அனிதா?...

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!...

தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!...

இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!...

Mark sheet of Anitha the Anti NEET Fighterஉண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மருத்துவர்! நடுவணரசு, மாநில அரசு, நீதித்துறையினர் எனப் பலரும் சேர்ந்து இந்தத் தற்கொலைக்கு அவரைத் தூண்டியிருக்கிறார்கள் என்பதே நாடறிந்த உண்மை! தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய இவர்களுக்கு என்ன தண்டனை? நீலத் திமிங்கல விளையாட்டை உருவாக்கியவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றத்துக்காகச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அதே போலத் தற்கொலையைத் தூண்டும் இந்தத் தேர்வை உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள், “எல்லா மாநிலங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் ஏன் வழக்காட வந்திருக்கிறது?” என்று.

ஐயா நீதிபதிகளே! இந்நாட்டில் முதன் முதலாக இந்தித் திணிப்பு கொண்டு வரப்பட்டபொழுது எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் எதிர்த்துப் போராடியது. அன்று முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேச எதிர்ப்புச் செயலாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை என்ன? இந்தித் திணிப்புக்கு எதிராகக் கருநாடகம் கொடி உயர்த்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்துக்கு ஒடியாவில் பதில் அனுப்பித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர். இந்தி எதிர்ப்பால் தமிழ்நாடு பெற்றவையும் தாங்கள் இழந்தவையும் குறித்து சமூக ஊடகங்களில் புலம்புகிறார்கள் பிற மாநிலத்தவர்கள்.

நாங்கள் காட்டிய எதிர்ப்பு சரி என்பதைப் பிற மாநிலத்தினர் உணர எண்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! அதே போல, இந்த மருத்துவத் தகுதித் தேர்வு முறை தவறு என்பதையும் மற்ற மாநிலங்கள் உணரும் நாள் ஒன்று வரும். ஆனால், அதுவரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் எங்களை, சிந்திக்காத மற்றவர்களோடு சேர்ந்து சிரமப்படச் சொல்வது என்ன நியாயம்?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது அனிதாவின் உயிரிழப்பு!

ஆனால், இப்படி ஒரு கொடுமைக்குப் பின்னும் இங்கே மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகச் சல்லியடிக்கும் கும்பல் திருந்தவில்லை. போதாததற்கு, இப்பொழுது அனிதாவையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது அந்த ஈனக் கூட்டம்.

“தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் உயரவில்லை. அவர்களை அதற்குத் தகுதிப்படுத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டுக் கல்வி முறையின் தரம் இல்லை. அதனால்தான் விலக்குக் கேட்கிறார்கள்” என்கிறது மேற்படி கும்பல். முட்டாள்களே! நாங்கள் திறமை இல்லாமல் விலக்குக் கேட்கவில்லை. அப்படி ஒரு தேர்வை எழுத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, அதனால் வேண்டா என்கிறோம், புரிகிறதா?

எந்த விதமான தகுதித் தேர்வும் இன்றி, இன்னும் சொன்னால், தவறான தேர்ந்தெடுப்பு முறையென நீங்கள் காலம் காலமாகத் தூற்றும் இட ஒதுக்கீட்டு முறைப்படிதான் இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மருத்துப் படிப்புக்கான மாணவச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனாலும், நல்வாழ்வு அளவுகோலில் (Heath parameters) தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறித்தான் இருக்கிறது.

Tamil Nadu's Rank in Economy, Power, Roads and Health

எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்கெடுத்தாலும் கைகாட்டுகிறீர்களே, அந்த குசராத்தையே ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) குசராத்தில் 1000-க்கு 38; தமிழ்நாட்டில் 1000-க்கு 21. பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) குசராத்தில் ஒரு இலட்சத்துக்கு 122; தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கு வெறும் 79. குசராத்தில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 66.8; தமிழ்நாட்டில் 68.9. உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை குசராத்தில் 41.6%; அதுவே தமிழ்நாட்டில் 30.9%.

குசராத்தோடு மட்டுமில்லை கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தாலும் நல்வாழ்வுக் குறியீடுகளில் உயர்ந்துதான் விளங்குவது தமிழ்நாடுதான் (கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது). அட்டவணையைப் பாருங்கள்!

பெருவாரியான மாநிலங்களில் நல்வாழ்வுக் குறியீடுகள் (Health Indicators) அட்டவணை எண்: 12.1
பிரிவு
தோ.பி.வி (CBR)
தோ.இ.வி (CDR)
ப.கு.இ.வி (IMR)
மொ.க.வி (TFR)
பே.இ.வி (MMR)
பி.எ.வா (LEB)
2002
2012
2002
2012
2002
2012
2002
2011
2004
2010
2001
2006
-6
-12
-5
-10
ஆந்திரம்
20.7
17.5
8.1
8.6
62
41
2.2
1.8
154
110
64.0
65.8
அசாம்
26.6
22.5
9.2
7.9
70
55
3.0
2.4
480
328
58.7
61.9
பீகார்
30.9
27.7
7.9
6.6
61
43
4.3
3.6
312
219
61.1
65.8
குசராத்
24.7
21.1
7.7
6.6
60
38
2.8
2.4
160
122
63.9
66.8
அரியானா
26.6
21.6
7.1
6.4
62
42
3.1
2.3
186
146
65.8
67.0
கருநாடகம்
22.1
18.5
7.2
7.2
55
32
2.4
1.9
213
144
65.2
67.2
கேரளம்
16.9
14.9
6.4
6.9
10
12
1.8
1.8
95
66
73.8
74.2
மத்திய பிரதேசம்
30.4
26.6
9.8
8.1
85
56
3.8
3.1
335
230
57.7
62.4
மகாராட்டிரம்
20.3
16.6
7.3
6.3
45
25
2.3
1.8
130
87
67.0
69.9
ஒடிசா
23.2
19.9
9.8
8.5
87
53
2.6
2.2
303
235
59.2
63.0
பஞ்சாப்
20.8
15.9
7.1
6.8
51
28
2.3
1.8
192
155
69.1
69.3
இராசத்தான்
30.6
25.9
7.7
6.6
78
49
3.9
3.0
388
255
61.7
66.5
தமிழ்நாடு
18.5
15.7
7.7
7.4
44
21
2.1
1.7
111
90
66.0
68.9
உத்திரப் பிரதேசம்
31.6
27.4
9.7
7.7
80
53
4.4
3.4
440
292
59.7
62.7
மேற்கு வங்கம்
20.5
16.1
6.7
6.3
49
32
2.3
1.7
141
117
64.7
69.0
இந்தியா
25.0
21.6
8.1
7.0
63
42
3.0
2.4
254
178
63.1
66.1
குறிப்பு: தோ.பி.வி (CBR) – தோராயப் பிறப்பு விகிதம் (Crude Birth Rate), தோ..வி (CDR) – தோராய இறப்பு விகிதம் (Crude Death Rate), .கு..வி (IMR) – பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate), மொ..வி (TFR) – மொத்தக் கருவள விகிதம் (Total Fertility Rate),
பே..வி (MMR) – பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate), பி..வா (LEB) – பிறக்கும்பொழுது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் / சராசரி வாழ்நாள் (Life Expectancy at Birth).
மூலம்: மாதிரிப் பதிவுத் திட்டம் (SRS), பொதுப் பதிவாளர், புது தில்லி. மேலும் விவரங்களுக்கு: தமிழ்நாடு அரசு அறிக்கை, டைம்சு ஆப் இந்தியா செய்திக் கட்டுரை.
நல்வாழ்வுத் துறையில் இப்படி ஓர் உயர்நிலையைத் தமிழ்நாடு அடையக் காரணம் உங்கள் நடுவண் பள்ளிக் கல்வி முறை (CBSE method) இல்லை. நீங்கள் எப்பொழுதுமே கீழ்ப் பார்வையில் அணுகும் மாநிலக் கல்வித் திட்டம், அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர்க் கல்வித் திட்டம், சிறிது காலம் முன்பு வரை இருந்த தனியார் கல்வித் திட்டம் (Matric) போன்றவைதாம். தகுதித்தேர்வு மூலமோ, மதிப்பெண்கள் மூலமோ கூட இல்லை; 69% இட ஒதுக்கீடு மூலம் வந்த மருத்துவர்கள்தாம் இப்படி ஒரு முன்னேற்றத்தை அடையச் செய்திருக்கிறார்கள்.

ஆக, ஏற்கெனவே சரியான வழியில் வெற்றிநடை பயின்று கொண்டிருக்கும் எங்களுக்கு எதற்கு இந்தத் தகுதித் தேர்வு? எங்கள் பாடத்திட்டம், கல்விமுறை எல்லாம் சரியானவை என்பதை எங்கள் வளர்ச்சியின் மூலமாக நாங்கள் கண்கூடாக உறுதிப்படுத்தியிருக்கிறோம். அப்படியிருக்க, நாங்கள் எதற்காக நடுவண் பள்ளிக் கல்வித் திட்டத்தின்படி (CBSE Syllabus based) அமைந்த ஒரு தேர்வின் மூலம் எங்கள் திறமையை மெய்ப்பிக்க வேண்டும்? தகுதி, தரம் என மீண்டும் மீண்டும் கூச்சலிடும் மண்டூகங்களே, தமிழ்நாட்டுக் கல்விமுறையும் பாடத்திட்டமும் தரமில்லாதவையாக இருந்தால் இப்படி ஒரு முன்னேற்றத்தை இம்மாநிலம் எப்படி அடைந்திருக்க முடியும்?

இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் கூட ஒருபுறம் இருக்கட்டும். “நீ எந்தப் பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும், நடுவண் பள்ளிக்கல்வித் திட்டப்படியான தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராக முடியும்” என்பது அடிப்படையிலேயே பித்துக்குளித்தனமாக இல்லையா? படிப்பு ஒரு முறையில், தேர்வு இன்னொரு முறையிலா? இப்படி ஓர் அடிமுட்டாள்தனமான தேர்வு முறை உலகில் வேறெங்காவது இருக்குமா? ஒரு பாடத்திட்டத்தில் பயின்றவர் இன்னொரு பாடத்திட்டத்தின்படி ஏன் தன் கல்வியறிவை மெய்ப்பிக்க வேண்டும்? தான் படித்த பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர், இன்னொரு பாடத்திட்டத்தின்படியான தேர்வில் மீண்டும் ஏன் தேர்ச்சி அடைய வேண்டும்? இப்படி ஒரு கோட்பாட்டை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த மாமேதை யார்?

ஒருவர் தான் படித்த படிப்பைப் போதுமான அளவு உள்வாங்கியிருக்கிறாரா எனச் சோதித்துப் பார்ப்பதுதான் தேர்வு! ஆனால், நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் இந்த தேசியத் தகுதித்தேர்வு என்பது யாருமே தொட முடியாத ஓர் உயரத்தில் தகுதிக்கான வரையறையை வைத்துவிட்டு அதை எட்டுவதற்காக மாணவர்களைச் சவுக்கால் அடித்து விரட்டுவதாக அமைந்திருக்கிறது. இதற்குப் பெயர் தேர்வா? இல்லை, இதற்குப் பெயர் ஓட்டப்போட்டி!

சரி, ஒரு பேச்சுக்காக இதுதான் சரியான தேர்வு முறை என்றே வைத்துக் கொள்வோம். மாணவர்களின் படிப்பு, தகுதி முதலானவற்றுக்கு ஏற்றபடி தகுதி வரையறையைத் தீர்மானிக்காமல், தகுதி வரையறையை எட்டும் அளவுக்கு மாணவர்களைத் தரம் உயர்த்துவதுதான் சரி என்கிற உங்கள் வாதப்படியே பார்த்தாலும், தேர்வு மட்டும் உயர்தரமாக இருந்தால் போதுமா? அதை எட்டும் அளவுக்குக் கல்வி உயர்தரமாக இருக்க வேண்டாவா? அட அறிவாளிகளே, தேர்வின் தரத்தை உயர்த்துவது மூலம் ஒருவரின் தகுதியை உயர்த்த முடியுமா அல்லது கல்வித்தரத்தை உயர்த்துவதன் மூலமா? அப்படிக் கல்வியின் தரத்தை உயர்த்த இதுவரை நடுவணரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன?

முதலில், தங்கள் மக்களைப் படிக்க வைப்பதற்கு என இதுவரை இந்திய நடுவணரசுகள் செய்ததுதான் என்ன? பாலைவனத்தில் முளைத்த பேரீச்சை மரங்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் நான்கைந்து கேந்திரிய வித்தியாலயங்களும் நவோதயா பள்ளிகளும் திறந்து விட்டால் இத்தனை கோடி பேரும் கல்வியறிவு பெற்று விடுவார்களா? இத்தனை புதுக்கல்லுக்கு (கிலோ மீட்டருக்கு) ஒரு பள்ளி, இத்தனை பேருக்கு இத்தனை ஆசிரியர், இத்தனை பள்ளிகளுக்கு ஓர் அதிகாரி என அடி முதல் நுனி வரை செம்மையான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, மக்களைப் படிக்க வைக்கும் பொறுப்பு முழுவதையும் கவனிப்பவை மாநில அரசுகள். ஆனால், கல்விக்கான அதிகாரம் மட்டும் நடுவணரசின் கையில் இருக்க வேண்டுமா? பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கசக்கிறது, அதிகாரம் செலுத்த மட்டும் இனிக்கிறதோ!

அப்படி அதிகாரம் தங்கள் கையில்தான் இருக்க வேண்டும் என விரும்பினால், நடுவணரசினர் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்! நாடு முழுக்கப் பள்ளிக்கூடங்களைத் திறவுங்கள்! வானளாவ வளர்ந்து வீங்கியிருக்கும் தங்கள் தேர்வுகளையெல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்குக் கல்வி முறையை அங்கே புகுத்துங்கள்! நாட்டு மக்கள் அனைவரையும் படிக்க வையுங்கள்! இவற்றையெல்லாம் செய்து விட்டு அதன் பிறகு நீங்கள் வைக்க வேண்டும் உங்கள் தகுதித்தேர்வு, தராதரத் தேர்வையெல்லாம்.

அதைச் செய்யாமல், நடுவணரசு வருகிற வருவாய்க்கெல்லாம் ஆயுதம் வாங்கிக் கொண்டும், செயற்கைக்கோள் விட்டுக் கொண்டுமே உட்கார்ந்திருக்கும்; படிக்க வைப்பது, பயிற்றுவிப்பது எல்லாம் மாநில அரசுகள் செய்ய வேண்டும்; எல்லாம் முடிந்த பிறகு நுழைவுத்தேர்வு மட்டும் நடுவணரசின் அளவுகோல்படி வைத்துப் பார்த்து விட்டு, தொடர்பே இல்லாத அதில் தேர்வாகா விட்டால் படித்த கல்விமுறை தரமானது இல்லை என்பீர்களா? தெரியாமல்தான் கேட்கிறேன், நாட்டு மக்களின் கல்விக்கே பொறுப்பேற்காத நடுவணரசினரே, தகுதித் தேர்வு நடத்த முதலில் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

மாணவர்களுக்காகத் தேர்வு இல்லை; தேர்வுக்காகத்தான் மாணவர்கள் எனும் புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்களே! அப்படியெல்லாம் இல்லாமல் வழக்கமான தேர்வு முறையில் மருத்துவரானவர்களிலேயே எத்தனை பேர் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார்கள் என்கிற விவரம் உங்களுக்குத் தெரியுமா?

The Doctors who have migrating to abroad from India for money

2012ஆம் ஆண்டு ‘டைம்சு ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரையின்படி, ஆண்டுதோறும் 1100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். மேற்படிப்புக்காகச் செல்லும் இவர்கள் பின்னர் அங்கேயே தொழில் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். 2012-க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் சென்ற மூவாயிரம் பேர் திரும்பி வரவேயில்லை. ஏற்கெனவே இந்தியாவில் மருத்துவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், இருக்கிற மருத்துவர்களும் இப்படி வெளிநாடுகளுக்குச் சென்று விடுவது இந்திய நல்வாழ்வுத் துறைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்கிறது அந்தக் கட்டுரை. (மேலும் படிக்க: 1,333 doctors migrated abroad last year)

தகுதி பற்றியும் தரம் பற்றியும் வாய் கிழியப் பேசுபவர்களே! இந்நாள் வரைக்கும் எந்தத் தகுதித் தேர்வும் இல்லாமல் உருவாகி வந்த நம் மருத்துவர்கள் உலகத் தரமான மருத்துவர்கள் இல்லை என்றால் வெளிநாடுகள் எப்படி அவர்களை மேற்படிப்புக்கும் வேலைக்கும் சேர்த்துக் கொள்கின்றன? எப்படி அவர்களைத் தங்கள் நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்ய விடுகின்றன? உலகத் தரத்திலான மருத்துவர்களுக்கே உரிய மேலைநாட்டு மேற்படிப்புகளில் இங்கிருந்து செல்லும் நம் மருத்துவர்கள் எப்படித் தேர்ச்சி பெறுகிறார்கள்? அங்குள்ள மருத்துவர்களுக்கு இணையாக எப்படி அங்கே மருத்துவத் தொழில் புரிகிறார்கள்?

இப்படி, நாட்டில் என்ன நடக்கிறது, நாட்டின் மருத்துவத்துறை எப்படி இருக்கிறது, துறை சார்ந்த புள்ளி விவரங்கள் என்ன, நல்வாழ்வுத் துறையில் இருக்கும் அறைகூவல்கள் (சவால்கள்) என்ன எனவெல்லாம் எதுவுமே தெரியாமல் எந்த அடிப்படையில் மருத்துவத் தகுதித் தேர்வுக்கு ஆதரவாகக் குதி குதியென குதிக்கிறீர்கள்? என்ன தெரியும் என அனிதா பற்றிப் பேசுகிறீர்கள்?

The Ruthless comments on Anitha's suicide and a Chappal shot meme for it

ஒருவன் கேட்கிறான், “ஏழைக் கூலித் தொழிலாளியின் மகளுக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடக் காசு எங்கிருந்து வந்தது?” என்று. ஏனடா, வருமான வரித்துறையில் வெட்டி முறிக்கும் பெரிய வெள்ளைப் பூண்டா நீ? உன்னிடம் கணக்குத் தாக்கல் செய்து விட்டுத்தான் அந்தப் பெண் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா? நாட்டில் அவனவன் ஆயிரம் கோடி, இலட்சம் கோடி என ஊழல் செய்து விட்டு உலா வருகிறான்; அவனையெல்லாம் கணக்குக் கேட்கத் துப்பில்லை. சமூகத்துக்காகப் பாடுபடுபவர்களைப் பார்த்துக் கணக்குக் கேட்கிறீர்களே, இந்த நாடு எப்படியடா உருப்படும்?

இன்னொரு இழிபிறவி சொல்கிறது, “இதெல்லாம் அனிதாவின் வெறும் நாடகம்” என்று. மூளை எனும் உறுப்பே இல்லாத முண்டமே! உயிரைக் கொடுத்தாடா நாடகம் நடிப்பார்கள்? எங்கே, நீ நடத்து பார்க்கலாம் அப்படி ஒரு நாடகத்தை?

தவிர, “அனிதாவின் சாவை வைத்து அரசியல் செய்கிறீர்கள்!” என்கிற குற்றச்சாட்டு வேறு! தமிழினப் படுகொலையின்பொழுதும் இப்படித்தான், “பிணத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள்” என்று நாக்கூசாமல் பேசின சில கீழ்த்தரப் பிறவிகள். அடேய்! நீங்கள் எங்களைக் கொல்வீர்கள்; “ஏனடா கொல்கிறீர்கள்” என நாங்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பெயர் பிண அரசியலா? எங்கள் பிள்ளைகளை வாழ விடாமல் தற்கொலைக்குத் தூண்டிச் சாகடிப்பீர்கள். அதைத் தட்டிக் கேட்டால் சாவு அரசியலா? ஏய்! நீங்களெல்லாரும் உண்மையிலேயே மனிதப் பிறவிகளாடா?

சிலர் கேட்கிறார்கள், “என்ன இருந்தாலும், தற்கொலை கோழைத்தனம் இல்லையா? அனிதா செய்தது தவறில்லையா” என்று. இதில் சரி, தவறு எனச் சொல்ல என்ன இருக்கிறது? அவரவர் உடம்பும் உயிரும் அவரவர்க்குச் சொந்தம். வேண்டுமானால் வைத்துக் கொள்கிறார்கள்; வேண்டாவிட்டால் தூக்கி எறிகிறார்கள். அவரவர் விருப்பம் அது. அதில் தலையிடவோ கருத்துச் சொல்லவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால், இப்படியெல்லாம் எவ்வளவுதான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்டாலும் இன்னும் எவ்வளவு தரவுகளை (Data) அடுக்கினாலும் இந்தத் தேர்வு முறையை ஆதரிக்கும் பெரும்பாலோர் துளியும் மனம் மாறப் போவதில்லை என்பதை நான் அறிவேன். ஏனெனில், உங்களில் சிலர்தான் இது சரி என நினைத்து ஆதரிப்பவர்கள். மற்றவர்கள், ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் நம்மை விடக் குறைவான மதிப்பெண் பெற்றும், இட ஒதுக்கீடு எனும் பெயரால் மருத்துவக் கல்வியை அடைந்து விடுகிறார்களே!’ என்கிற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த முறையை ஆதரிக்கிறீர்கள். அது உங்கள் சொற்களிலேயே பச்சையாகத் தெரிகிறது. 

இந்தத் தேர்வு முறை சரி என்று நினைத்து ஆதரிப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு மேலே சொன்ன புள்ளி விவரங்களும் இன்ன பிற சான்றுகளுமே மனம் மாறப் போதுமானவையாக இருக்கும் என நினைக்கிறேன். அவ்வாறு இல்லாமல், இன்னும் இது குறித்து உங்களுக்குக் குழப்பமோ மாற்றுக் கருத்தோ இருக்குமானால், ஒன்றே ஒன்றைச் சிந்தித்துப் பாருங்கள்!

கல்வித்துறை சார்ந்த இந்தச் சிக்கலில் கல்வியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், அறிஞர்கள் எனத் துறை சார்ந்த அத்தனை பேரும் எதிர்ப்பவர்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதே நேரம், இந்தத் தேர்வு முறையை ஆதரிப்பவர்கள் யாரெனப் பார்த்தீர்களானால், கல்வித்துறைக்குத் தொடர்பில்லாதவர்கள்தாம். இவர்களில் யார் சொல்வது சரியாக இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! என்னைப் பொறுத்த வரை, எந்தச் சிக்கலாக இருந்தாலும் அதன் துறை சார்ந்த வல்லுநர்கள் சொல்வதைக் கேட்பதே அறிவுடைமை.

மற்றபடி, இது தவறெனத் தெரிந்தே ஆதரிக்கும் வெறியர்களுக்கு நான் இன்னும் இரண்டே இரண்டை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நீங்கள் என்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், சமச்சீர்க் கல்வி முறையில் படிப்பவர்கள் இந்தப் புதிய தேர்வு முறையை எதிர்கொள்ள முடியாது; நடுவண் பள்ளிக் கல்வித் திட்டத்தில் படிக்கும் உங்கள் மாணவர்கள் எளிதாக வென்று விடுவார்கள்; மருத்துவக் கல்வியிடங்கள் எல்லாம் இனி உங்களுக்கே வள்ளிசாய்க் கிடைத்து விடும் என்று. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், டிசம்பர் 32ஆம் நாளில் கூட அப்படி ஒன்று நடக்கப் போவதில்லை.

இந்த நுழைவுத் தேர்வே முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கல்விப் பயிற்சி மையங்கள் இந்தியாவில் கடை விரிக்கத்தான். இப்படியே போனால், இன்னும் ஓரிண்டு ஆண்டுகளில் அது நடந்து விடும். அதன் பின், நடுவண் பள்ளிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்தத் தகுதித்தேர்வு வெல்ல முடியாததாகத்தான் இருக்கப் போகிறது. பயிற்சி மையங்களுக்குச் சென்று படித்தால்தான் மருத்துவராக முடியும் எனும் நிலை அப்பொழுது வரும். அன்று புரியும் உங்களுக்கு, ஏழை அனிதாக்களின் வலியும் நிலையும்.

அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் இன்னொரு பெரும் சிக்கலும் வரும்.

நாட்டில் வசதி இருப்பவர்கள் எண்ணிக்கையே குறைவு. அவர்களிலும் எல்லோரும் மருத்துவம் படிக்க வந்து விட மாட்டார்கள்; சிலர்தான் வருவார்கள். இப்படி மிக மிகக் குறைவான பேர் மருத்துவர்களாகி 134 கோடி பேருக்கும் மருத்துவம் தந்து விட முடியுமா?

ஆக, இந்த மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வால் இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவர்களுக்கு நாட்டில் மிகப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். அப்பொழுது கையில் பணம் இருந்தாலும் நினைத்த நேரத்தில் மருத்துவரிடம் போய்விட முடியாது. அன்று ஒருநாள், திடீரென இடப் பக்க நெஞ்சு விக்கித்து நிற்கும்பொழுது, அவசரத்துக்கு மருத்துவர் கிடைக்காமல் சாயும் அந்த நிமிடம்தான், உங்களைப் போன்றவர்களுக்குப் புரியும் எங்கள் அனிதாவின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது!
ஆம்! மனதில் ஈரமில்லா ஈனப் பிறவிகளே!
என்பிலாதவற்றைக் காயும் வெயில் போல

அன்பிலாத உங்களைக் காயும் அறம்!

விரைவில் அப்படி ஒரு நாள் வரும்!
அதே நேரம், இந்த மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடுபவர்களே! உங்களிடம் ஒன்றே ஒன்றை வலியுறுத்த விருப்பம்!

The Youth Protest against NEET and for Anitha

ஒருவரின் தற்கொலையைப் பற்றி மற்றவர்கள் கருத்துச் சொல்வது எப்படித் தவறானதோ, அதே போல் அதைப் புகழ்ந்துரைப்பதும் தவறானதுதான்! ஆனால், இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அனிதாவின் உயிர் துறப்பைப் போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்றும் மிகப் பெரிய தீரச் செயல் என்றும் இன்னும் பலவாறாகவும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தவறு! தற்கொலைக்கு ஒருபொழுதும் கதாநாயகத்தன்மை அளிக்கக்கூடாது! அது மேலும் அப்படிப்பட்ட கதாநாயகர்கள் பலரை உருவாகத் தூண்டும்.

மக்களுக்கு அழிவு தரும் எனத் தெரிந்தேதான் இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அப்படியிருக்க, நம்மை நாமே அழித்துக் கொள்வதன் மூலம் அப்படிப்பட்டவர்களை எப்படி மனம் மாறச் செய்ய முடியும்? தமிழர்களை அழிப்பதும் ஒழிப்பதும்தாம் தமிழின எதிரிகளின் நோக்கம். எனவே, நம்மை நாமே அழித்துக் கொண்டால் அஃது அவர்களின் நோக்கத்தை நாமே நிறைவேற்றி வைப்பதாகத்தான் அமையும். நாம் செய்யும் ஒவ்வொரு தற்கொலையும் தமிழின எதிரிகளின் வெற்றி! அதை மட்டும் மறந்து விடாதீர்கள் நண்பர்களே!

ஆகவே, அனிதாவின் தற்கொலையைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்துவோம்! அதற்கு மாறாக, எதற்காக அவர் தன் இன்னுயிரை நீத்தாரோ, அந்த உயர்பெரும் நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டுவோம்! ஒற்றைப் பெண்ணாக நாட்டின் அத்தனை அதிகார மையங்களையும் எதிர்த்து நின்ற அந்தப் பெருமகளுக்கு அதுதான் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்! 
(நான் ‘கீற்றுஇதழில் ௭-௯-௨௦௧௭ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி மின்னம்பலம், இணையம், இன்வெசுட்டிங் இன் தமிழ்நாடு, எகனாமிக் டைம்சு வலைப்பூ, ஹரீஷ், நியூ இந்தியன் எக்சுபிரசு.

உசாத்துணை: நன்றி மே பதினேழு இயக்க வெளியீடுகள், தமிழ்நாடு அரசு அறிக்கை, டைம்சு ஆப் இந்தியா, விகடன், விக்கிப்பீடியா, டுவிட்டர், செய்தி ஊடகங்கள்.

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

 1. இந்தியா முழுமைக்கும் ஒரே சீரானகல்வி உயர்வு தாழ்வற்ற ஏழை பணக்காரன் என்னும் வித்தியாசம் பார்க்காத கல்வி எல்லோருக்கும் இலவசக் கட்டாய உணாவு சீருடை என்று கட்டாயப்படுத்தும் கல்வியே மனதளவில்மாற்றம்கொண்டு வரும் என்று எழுதி வருகிறேன் அப்படி இல்லாதவரை இந்தமாதிரி உயர்வு தாழ்வு நிலைமாறாது என்றே தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! முதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! நீங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே சீரான கல்வி என்று குறிப்பிட்டதை ஒரே கல்வி இல்லை என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். காரணம், கல்வியாளர்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி சரி வராது என்றே கூறுகிறார்கள். இவ்வளவு சரியான பார்வை கொண்டவராக இருக்கும் தாங்கள் அனிதா பிரச்சினை குறித்து எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! மிக்க நன்றி!

   நீக்கு
 2. தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி என்பதே தவறான கருத்து என்றே எண்ணுகின்றேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! நாடு முழுமைக்கும் ஒரே கல்வி என்பது சரி வராதுதான். நான் அறைகூவலுக்காகத்தான் (just for a challenge) அப்படிச் சொல்லியிருக்கிறேன்; வலியுறுத்தவில்லை. அது நடுவணரசால் இயலாத ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டவே அப்படிக் கூறியிருக்கிறேன். ஆழமான கருத்துக்கு மிக்க நன்றி!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்