.

திங்கள், செப்டம்பர் 18, 2017

மருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை?

Will NEET Eradicate the Management Quota?

“மருத்துவ நுழைவுத் தேர்வு முறை வந்து விட்டால் தரவரிசைப்படிதான் (rank wise) கல்வியிடங்கள் நிரப்பப்படும். மேலாண்மை ஒதுக்கீடு (management quota) எனும் பெயரில் கல்வியிடங்களை இலட்ச இலட்சமாய் விற்றுக் கொள்ளையடிக்க முடியாது. அதனால்தான் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றை நடத்துபவர்களான எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்வு முறையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்; மாணவர் நலன், அது, இது எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்” என்பது இந்த நுழைவுத்தேர்வு முறையை ஆதரிப்பவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

புரியாமல்தான் கேட்கிறேன், கல்விக் கொள்ளையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கென ஒரு தனிச் சட்டம் கொண்டு வர முடியாதா? அதற்கு ஏன் புதிதாக ஒரு தேர்வைக் கொண்டு வந்து மாணவர்கள் உயிரை எடுக்க வேண்டும்?

Anitha the NEET protestor
இவர்கள் நாடு முழுவதற்கும் ஒரு கட்டாயத் தேர்வைக் கொண்டு வருவார்களாம்... வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களிடம் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வி கேட்பார்களாம்... படிக்காத பாடமுறையிலான அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் நம் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டு சாவார்களாம்... ஏனடா கொடுமைக்காரர்களே, இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டால் கல்விக் கொள்ளையை ஒழிக்கிறோம், ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பார்களாம்! யார் காதில் பூச் சுற்றுகிறீர்கள்! எங்களையெல்லாம் பார்த்தால் உங்கள் கண்ணுக்கு எப்படித் தெரிகிறது?

மருத்துவக் கல்வியிடங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது எனும் அக்கறை அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத்தானே எடுக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு நாடு முழுக்க ஒரு தேர்வு, அதற்கென நூற்றுக்கணக்கில் தேர்வு மையங்கள், அதை நடத்த ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், இவர்களுக்கான செலவு என ஏன் இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்? ஏன், கல்விக் கொள்ளையர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்குத் துணிவு இல்லையா? அதற்காக அந்தக் கொள்ளையினால் பாதிக்கப்படும் மாணவர்களே நடவடிக்கையின் சுமையையும் ஏற்க வேண்டுமா? உங்களுக்குப் பிடிக்காத மூட்டைப் பூச்சிகளைக் கொளுத்த எங்கள் வீடுகளில் தீ வைப்பீர்களா?

கல்லூரிப் பேராசிரியர்களைக் கேட்டால், “இப்பொழுதும் மேலாண்மை ஒதுக்கீட்டு முறையின் அடாவடி ஒன்றும் ஒழிந்ததாகத் தெரியவில்லை” என்கிறார்கள்.

ஒருவேளை அப்படி ஒரு நன்மை இதனால் ஏற்படும் என்பதாகவே வைத்துக் கொண்டாலும் அதன் பலன் யாருக்குக் கிடைக்கும்?

இந்தத் தேர்வே நடுவண் இடைநிலைக் கல்விப் பாடத் திட்டப்படிதான் (CBSE syllabus) நடத்தப்படுகிறது. எனவே, அந்தப் பாடத்திட்டத்தில் படிக்கும் அளவுக்கோ, இந்தத் தேர்வுக்கெனச் சிறப்பு வகுப்புகளில் சேர்கிற அளவுக்கோ வசதி இல்லாத மாணவர்கள் இந்தத் தேர்வு மூலமாகவே வடிகட்டப்பட்டுத் தூக்கி எறியப்பட்டு விடுகிறார்கள். எனில், இதில் தேர்ச்சி அடைந்து மருத்துவக் கல்வியைப் பெறுகிறவர்கள் யார்? அத்தனை பேரும் நடுவண் இடைநிலைக் கல்வியில் படிக்கிற அளவுக்கு அல்லது சிறப்பு வகுப்புகளில் பயிலும் அளவுக்கு ஓரளவாவது வசதியான மாணவர்கள்தாமே?

ஆக, ஒருவேளை இந்தத் தேர்வு முறையால் கல்விக் கொள்ளை ஒழியும் என வைத்துக் கொண்டாலும், அது வசதியானவர்களுக்கான சலுகையாகத்தானே அமைந்திருக்கிறது? ஒரு மாதக் கட்டணத்தை மொத்தமாகச் செலுத்தி விட்டால் இரண்டு மாதங்களுக்குப் பேசிக் கொள்ளலாம் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகை தருவது போல, பள்ளிக் கல்விக்காக இலட்சக்கணக்கில் செலவு செய்து விட்டால் கல்லூரிப் படிப்புக்குச் செலவு செய்யத் தேவையில்லை என்பது போலத்தானே இருக்கிறது இது? மாறாக, பொன்னாரும் பா.ஜ.க., அடிப்பொடிகளும் சொல்வது போல் இதில் ஏழைகளுக்கோ நடுத்தர மக்களுக்கோ என்ன பலன் இருக்கிறது? எந்த வகையில் இது ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்கிறது? எந்த ஏழை வீட்டுப் பிள்ளை நடுவண் இடைநிலைக் கல்வியில் படிக்கிறார், இதன் மூலம் பலனடைய?

இது தவிர, மருத்துவ நுழைவுத் தேர்வு முறையால் சமூகநீதி (reservation) பாதிக்கப்படவில்லை என்கிற பொய்யும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது.

“இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் (reservation) அடிப்படையில்தானே கல்வியிடங்கள் வழங்கப்படுகின்றன? அப்படியிருக்கும்பொழுது சமூக நீதி எப்படிப் பாதிக்கப்படும்?” எனக் கேட்கிறார்கள் இந்தக் குள்ளநரிகள்.

அடக் கொலைகாரர்களே, இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி அடைய முடியாதபடிதானே இந்தத் தேர்வே வடிவமைக்கப்பட்டிருக்கிறது? அப்புறம் எப்படி அவர்களுக்கு சமூகநீதிப்படி இடம் ஒதுக்குவார்கள்? தேர்ச்சி அடைந்தால்தானே இடம் ஒதுக்குவதற்கு?

ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மிகப் பெரும்பாலானவர்கள் இன்னும் பொருளாதார அளவில் பின்தங்கியவர்களாகத்தாம் இருக்கிறார்கள். அன்றாடக் கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டடத் தொழிலாளிகள், துப்புரவுப் பணியாளர்கள் எனக் கடைமட்டத் தொழில் செய்பவர்களாகத்தாம் இருக்கிறார்கள். இவர்களால் எப்படிப் பிள்ளைகளை நடுவண் இடைநிலைக் கல்விப் பள்ளிகளிலும் (CBSE Schools) சிறப்பு வகுப்புகளிலும் படிக்க வைக்க முடியும்? இவை இரண்டுமே இல்லாமல் இவர்களின் பிள்ளைகள் எப்படி உங்கள் மருத்துவத் தகுதித்தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற முடியும்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடக்க முடியாதபடி ஒரு தேர்வைக் கொண்டு வந்து வைத்து விட்டு, அதைக் கடந்து வந்தால் சமூகநீதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு தருகிறேன் என்பது “நெருப்பாற்றில் நீந்தி வா! அதன் பிறகும் நீ உயிரோடிருந்தால் கேட்பவையெல்லாம் தருகிறேன்” என்பது போன்ற கொடூரம் இல்லையா?

ஏழைகள் மருத்துவராகவே முடியாதபடி ஓர் ஏற்பாட்டைச் செய்து விட்டு, “அதன் பக்க விளைவாகக் கல்விக் கொள்ளை ஒழியும். அதனால் இது ஏழைகளுக்கான திட்டம்” என்பது உச்சக்கட்டக் கேடித்தனம் இல்லையா?

முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பலனளிக்கிற இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்தி விட்டு, “பணக்காரர்கள் போதுமான கல்வித் தகுதி பெறாமலே, விலை கொடுத்தே மருத்துவக் கல்வி இடங்களை வாங்கி விடுகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் மேலாண்மை ஒதுக்கீட்டு முறையை (management quota system) ஒழிக்கிற இப்படி ஒரு தேர்வைக் கொண்டு வருகிறோம்” என்பது உலகப் பெரும் பொய் இல்லையா?

நீங்கள் கேட்கலாம், “ஆக மொத்தம், பணம் படைத்தவர்களாக இருந்தாலும், இனி தகுதியை உயர்த்திக் கொண்டால்தான் மருத்துவராக முடியும் என்கிற கட்டாயத்தை இந்தத் தேர்வு முறை ஏற்படுத்தியிருக்கிறது, இல்லையா?” என்று. அதுவும் இல்லை. அங்கேயும் இருக்கிறது ஒரு குறைபாடு.

Lots of Accusations Raising on NEET system
மருத்துவத்துக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - அதிகரிக்கும் முறைகேடுகளும் முறையீடுகளும்!
இது இந்திய அரசின் அமைப்பான நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்படுகிற தேர்வாக இருந்தாலும், அந்த வாரியமே நேரிடையாக முன்னின்று இதை நடத்தவில்லை. ‘புரோமெட்ரிக்’ எனும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றிடம்தான் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தெருவுக்கு நான்கு பொறியாளர்கள் உரிய வேலையின்றித் தவிக்கும் ஒரு நாட்டில் – அந்த அளவுக்குப் பொறியாளர்கள் நிறைந்த ஒரு நாட்டில் – எதற்காக இவ்வளவு பெரிய தேர்வை நடத்தும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனத்திடம் தர வேண்டும், என நான் கேட்கப் போவதில்லை. ஒப்பந்தப்புள்ளி (tender) அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் எந்த அடிப்படையில் இந்தப் பணி இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பதையும் நான் கேட்கப் போவதில்லை. இவையெல்லாம் மேக் இன் இந்தியா, பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடுபவர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

நான் கேட்பது, மாநில அரசு நடத்தும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் போன்றவையெல்லாம் ஏதோ நம்பிக்கைக்குரியவையே அல்ல என்பது போல, “இது நடுவணரசே நடத்தும் தேர்வு. நம்பகத்தன்மையானது, நடுநிலையானது” என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தீர்களே! கடைசியில் பார்த்தால், போயும் போயும் ஒரு தனியார் நிறுவனம்தான் இதை நடத்துகிறது. இதற்கு உங்கள் மறுமொழி என்ன?

மேலும், யாராவது இந்நிறுவனத்தின் இணையத்தளத்திற்குள் கள்ளத்தனமாகப் புகுந்து (hack) தங்களுக்கு வேண்டியவர்களுடைய (அல்லது வேண்டாதவர்களுடைய) தேர்வு முடிவுகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைப்பது பெரிய கடினமில்லை எனவும் அச்சம் தெரிவிக்கிறார்கள் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஆர்வலர்கள்.

ஆக, பணத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தேர்வு முடிவுகளைத் தங்கள் விருப்பம் போல மாற்றிக் கொள்வது என்பது இந்தத் தேர்விலும் நடக்கக்கூடியதே! சொல்லப் போனால், பணக்காரர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இனி அதைச் செய்ய முடியும் எனக் கூடுதலாக ஒரு கதவு இதன் மூலம் திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை (இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும்பொழுதே 2016ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வில் இப்படிப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக புரோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிந்திருக்கிறது தில்லிக் காவல்துறை. விவரம் இங்கே). எனவே, இனி யாராக இருந்தாலும் தகுதியை உயர்த்திக் கொண்டால்தான் மருத்துவராக முடியும் என்பது போன்ற இன்றியமையா நிலைமை எதையும் இந்தத் தேர்வு உண்டாக்கி விடப் போவதில்லை.

ஆனால், இப்படி எவ்வளவு சொன்னாலும் இவை எதையும் நீங்கள் மதிக்கப் போவதில்லை. “ஆயிரம் இருந்தாலும், மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தூண்டி விடப்படுபவைதாமே?” என அடுத்த கேள்வியை வைப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்தது கேள்வி எழுப்புவது மட்டும்தான். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எவ்வளவு அதிர்ச்சிகரமானவை என்பது பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. என்றாலும், பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை என்பதால் அதற்கும் பதில் இதோ.

எனக்குத் தெரிந்து, இந்த நுழைவுத் தேர்வு முறையை முதன் முதலாக எதிர்க்கத் தொடங்கியவர்கள் இதழாளர்கள்தாம். அவர்கள்தாம் இது தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரைகளை முதலில் இதழ்களில் எழுதத் தொடங்கினார்கள். அதன் பின், இதழ்களின் நேர்காணல்கள் போன்றவற்றில் கல்வியாளர்கள் இது குறித்துப் பேசலானார்கள். அதற்குப் பின், மருத்துவ மாணவர்கள், மே பதினேழு போன்ற மக்கள் இயக்கத்தினர் போன்றோர் போராடத் தொடங்கினர். பின்னர், தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களில் விவாதங்கள் சூடு பிடித்தன. சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வலுத்தன. இவற்றுக்கெல்லாம் பின்னர்தாம் கட்சிச் சார்பானவர்களின் தலைகளே தென்படத் தொடங்கின.

உண்மை இப்படியிருக்க, எதிர்க் கட்சிகள்தாம் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் என ஆளுங்கட்சியினர் மீண்டும் மீண்டும் ஏன் புகழ்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. அவர்கள் செய்யாத ஒரு நன்மையை, செய்ததாக நீங்களே ஏன் ஏற்றி விடுகிறீர்கள்? எதிர்க் கட்சிகளின் செல்வாக்கை ஏன் ஆளுங்கட்சியினரே உயர்த்தி விடுகிறீர்கள்? முதலில் அவரவர் கட்சிக்கு நல்ல பெயர் வாங்க முயலுங்கள்! நடப்பது முழுக்க முழுக்க மக்கள் போராட்டம். இதற்கான பெருமையை எதிர்க் கட்சியோ ஆளுங்கட்சியோ தட்டிச் செல்வதை ஒருபொழுதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அது மட்டுமின்றி, அப்படியே இது எதிர்க்கட்சிகளால் தூண்டி விடப்பட்ட போராட்டமாகவே இருந்தாலும் அதனால் என்ன தவறு என நான் கேட்கிறேன். மக்கள் தாங்களாகவே முன்வந்து நடத்துவதுதான் நல்ல போராட்டம் என உங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் யார்?

அட அறிவிலிகளே! மக்கள் போராட்டம் என்பதே பெரும்பாலும் யாராவது தனிமனிதராலோ கட்சியாலோ இயக்கத்தாலோ தூண்டி விடப்பட்டுத்தான் நடக்கும்; அதுதான் காலங்காலமாக உலக வழக்கம். இரசியாவின் நவம்பர் புரட்சி எப்படி நடந்தது? இலெனின் தூண்டி விட்டுத்தானே? இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி நடந்தது? பாரதியார், திலகர், வ.உ.சி, காந்தியடிகள் எனத் தலைவர்களும் கட்சிகளும் தூண்டி விட்டதால்தானே? அப்படியானால், அவையெல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லையா? மக்கள் போராட்டங்கள் இல்லையா?

இப்படி, வரலாறும் தெரியாமல் நாட்டில் நடப்பது பற்றியும் புரியாமல் என்ன தெரியும் என “இந்தத் தேர்வு நல்லது… நல்லது” எனப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

The International Educational Politics behind the NEET - Prof.Anil Sadgopal, Delhi
சரி, தமிழர்கள்தாம் அரசியல் ஆதாயத்துக்காகவும் கட்சிக்காரர்கள் தூண்டி விட்டும் எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். நாட்டின் மிகப் பெரிய கல்வியாளர்களில் ஒருவரான அனில் சடகோபால் அவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்? அவர் ஏன் இந்தத் தேர்வு முறை தவறானது என விழிப்புணர்த்துவதற்காக இந்தியா முழுதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்? அவர் என்ன தமிழரா? தமிழ்நாட்டுக் கட்சிகளிலோ இயக்கங்களிலோ உறுப்பினரா? அல்லது, இங்குள்ள கட்சியினரால் தூண்டி விடப்படுகிற அளவுக்குச் சொந்தச் சிந்தனை இல்லாதவரா?

பொதுவாக எல்லாரும் இந்தத் தேர்வினால் ஏழைகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் மருத்துவக் கல்வியை எட்ட முடியாமல் போவது பற்றித்தான் பேசுகிறோம். அனில் சடகோபால் போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இன்னும் தீவிரமானது.

இந்திய நல்வாழ்வுத் (health) துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது முதலான பல ஏற்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டு இந்தியா உலக வணிக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வைக் கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரையான கல்வி முறைப்படி, மருத்துவம் படித்தவர்கள் சிறிது காலம் நாட்டுப்புறப் பகுதிகளில் (கிராமங்களில்) பணியாற்ற வேண்டும் எனவும் அப்படிப் பணியாற்றினால் மேற்படிப்பில் அதற்கென அவர்களுக்கு ஒதுக்கீடு (reservation) உண்டு எனவும் ஒரு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மேலும், இந்தச் சலுகை மூலம் மருத்துவராகிறவர்கள் 58 வயது வரை அரசு மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றும் ஒரு கட்டுப்பாடு உண்டு. அப்படிப் பணியாற்ற விருப்பமில்லாவிட்டால் அந்த மருத்துவர் ஒரு பெரும்தொகையை அரசுக்குத் தண்டமாகச் (penalty) செலுத்த வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம் நாட்டுப்புறப் பகுதிகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் கிடைத்து வந்தார்கள். அரசு மருத்துவமனைகளின் தரம் அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் குறைந்தது மருத்துவர்களையும் அடிப்படை மருத்துவச் சேவையையுமாவது இதுவரை தமிழ்நாடு அரசு அளித்து வந்தது.

ஆனால், இந்த மருத்துவத் தகுதித் தேர்வில் (NEET) இப்படியெல்லாம் எந்த நெறிமுறையும் இல்லை. ஏற்கெனவே இருக்கிற இத்தகைய நெறிமுறைகளும் இந்தப் புதிய தேர்வு முறையால் மொத்தமாக அழித்து அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் ஊராட்சி மருத்துவமனைகள் தொடங்கி மாநகர அரசு மருத்துவமனை வரைக்கும் எதிலுமே பணியாற்ற இனி மருத்துவர்கள் கிடைக்கா நிலை ஏற்படும். பொது நல்வாழ்வுச் சேவை (Public Health Service) என்பதே ஒட்டுமொத்தமாகச் சீர்குலையும். தனியார் மருத்துவமனைகள் மட்டும்தாம் ஒரே தீர்வு எனும் நிலை ஏற்படும். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்தான் இந்திய நல்வாழ்வுத்துறையைத் தனியார்மயமாக்குவதாக உலக வணிக அமைப்பிடம் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் நிறைவேறும்.

அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வு முறையே கொண்டு வரப்படுகிறது என அனில் சடகோபால் போன்ற கல்வியாளர்கள், திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ப் போராளிகள், அரசியல் திறனாய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் என அனைவரும் கூறுகிறார்கள். இந்த மருத்துவ நுழைவுத்தேர்வை ஆதரித்துப் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிற, ஊடகங்களில் எக்காள முழக்கமிடுகிற ஆளுங்கட்சியின் அடிவருடிகளோ மருத்துவ நுழைவுத் தேர்வின் ஆதரவாளர்களோ இன்று வரை இதற்கு எந்த ஒரு மறுமொழியும் அளித்தாகத் தெரியவில்லை.

இவ்வாறு, சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் மருத்துவக் கல்வி, அவர்களுக்கான மருத்துவம் என அனைத்தையும் சிதைத்துப் போடுவதாகத்தான் மருத்துவத்துக்கான இந்தத் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறை (NEET) அமைந்திருக்கிறது. மேலும், இதன் மூலம் நாட்டில் பொதுவாகவே மருத்துவர் எண்ணிக்கை குறையும் என்பதால் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமில்லை பொதுவாக அனைவருக்குமே மருத்துவம் என்பதே இனி அவ்வளவு எளிதில் கிடைக்க முடியாத ஒன்றாக மாறப் போகிறது என்பதுதான் உண்மை.

இவையெல்லாம் தெரியாமல், புரியாமல் இங்கே சில தவளைகள் தத்துப்பித்தெனக் கத்தித் துள்ளுகின்றன. அவை நினைத்துக் கொண்டிருக்கின்றன, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகக் கத்தினால் கடைசி வரை பாதுகாப்பு என்பதாக. ஆனால், அதிகாரத்தின் பெரும் பசி இறுதி வரை அடங்காதது. எல்லாரையும் விழுங்கிய பின் அது தன்னைச் சேர்ந்தவர்களையும் சுவை பார்க்காமல் விடாது. அப்படி விழுங்கப்படும்பொழுதுதான் அந்தத் தவளைகளுக்கு உரைக்கும், அதற்கு முன்பு வரை அதிகாரத்துக்கு இரையானவர்களின் வலி. 

கட்டுரை எழுத உதவி: திரு.ச.பிரகாஷ், உதவிப் பேராசிரியர், புனித தோமையர் கல்லூரி, சென்னை.
(நான் ‘கீற்றுஇதழில் ௧௮-௯-௨௦௧௭ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி தினமணி, மாலைச்சுடர், கூகுள், சோசியல் ஆக்டிவிடி தொலைக்காட்சி. 


தொடர்புடைய பதிவுகள்: 
அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
 மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு (நீட்) – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்
இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்

 தொடர்புடைய வெளியிணைப்புகள்: 
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் 
புட் சட்னி - ஸ்மைல் சேட்டை | பதில் கேள்விகள் (மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் கேள்வி வடிவில்)
தமிழிசை நையாண்டி | ஸ்மைல் இரவுக் காட்சி (மருத்துவத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து மிகத் தெளிவும் சுருக்கமுமான விளக்கம்)

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. இப்போதைய கல்வி முறைகள் சரியாகப் பிடிபடவில்லை ஒரு கொள்கையை இரு புறமும் விளக்கி சுருக்கமாகச் சொல்லி இருந்தால் ஒரு வேளை புரியுமோ என்னவோ இருந்தாலும் எழுத்தில் ஒரு தார்மீகக் கோபம் வெளியாவது புரிகிறது வாழ்த்துக்சள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! முந்தைய பதிவில் மிகவும் சீற்றத்தோடு எழுதியிருந்தேன். அதனால்தான் இந்தத் தேர்வினால் உண்டாகக்கூடிய நன்மைகள் என அவர்கள் சொல்பவற்றையும், அவை தவறு என்பதற்கான காரணங்களையும் தொகுத்து இருபுறமிருந்தும் எழுதும் முயற்சியாக இந்தக் கட்டுரையை வெளியிட்டேன். அதே நேரம், இன்றைய கல்வி முறை அப்படி ஒன்றும் முற்று முழுதாக மாறி விடவும் இல்லை. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. இந்திய அரசின் அமைப்பான நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்படுகிற தேர்வாக இருந்தாலும், அந்த வாரியமே நேரிடையாக முன்னின்று இதை நடத்தவில்லை. ‘புரோமெட்ரிக்’ எனும் அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றிடம்தான் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
    வேதனை அளிக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! தவிரவும் அந்த நிறுவனம் நேர்மையான நிறுவனமும் இல்லை என்பதும் தற்பொழுது அவர்கள் நடத்தை மூலம் தெரிய வந்திருக்கிறது. கருத்துக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. வணக்கம், நலமா ?...

    கோபமும் சீற்றமும் இருந்தாலும், நிறைய கள ஆய்வு செய்து, சமூகத்தின் அனைத்து தரப்பினரின் கேள்விகளையும் ஐய்யப்பாடுகளையும் குறிப்பிட்டு,உணர்ச்சிவசப்படாமல் எழுதப்பட்ட பதிவு !

    நீண்ட காலமாக ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்ந்து, மேல்நாட்டு சுயலாப அரசியலையும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளையும் எனது அறிவுக்கேற்ப ஓரளவு கவனித்த, கவனித்துக்கொண்டிருக்கும் தகுதியில் சிலவற்றை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்...

    இந்தியா பண்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயக நாடு. ஒரு மொழி, ஒரு மத கலாச்சாரத்தை கொண்ட மற்ற ஏனைய ஜனநாயக நாடுகள் எதனையும் இந்தியாவின் தன்மையோடு ஒப்பிட முடியாது. (அதன் ஆன்மாவை இன்று வரை உண்மையாக அறிந்த ஒரே மனிதர் காந்தி மட்டுமே என்பது என் தனிப்பட்ட கருத்து.)

    தேசியம் என்ற பெயரில், காஷ்மீர் முதல் குமரிவரை பரவியிருக்கும் பலதரப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் காவு வாங்குவதே மத்திய அரசின் நோக்கம். சீனாவை போல ஒரு மொழி, ஒரு கலாச்சார நாடாக இந்தியா இருந்த்தால்தான் வல்லரசாக முடியும் என்பது மோடி அரசின் நினைப்பாக இருக்கலாம் ?!!!...

    மாட்டிறைச்சி தடை, புதிய ரூபாய் முயற்சி முதல் நீட் தேர்வு வரை அனைத்துமே இதை நோக்கித்தான் ! இவை அனைத்தையும் செயல்படுத்துவதில் உதவி மேல்நாட்டு தனியார் நிறுவனங்கள் அல்லது மேல்நாட்டு நிறுவனங்களின் யோசனையில் இவை செயல்படுத்தபடுகின்றன !

    ஆகமொத்தம் மோடி அரசு நடத்துவது ஜனநாயக ஆட்சி அல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யும் ஈவு இரக்கமற்ற, மிக தந்திரமான " மார்க்கெட்டிங் " உத்தி !

    எனது கணிப்பு சரியாக இருக்குமானால், இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் மீன்டும் ஒரு முறை இந்தியாவில் பிறக்கும் நாள் தூரத்தில் இல்லை !

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! கவனக்குறைவு காரணமாகத் தங்கள் கருத்தை வெளியிட ஏற்பட்ட தாமதத்துக்காக முதலில் பொறுத்தருள வேண்டுகிறேன்!

      இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றிய தங்களுடைய இந்தக் கருத்து இன்றைய இந்தியர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பாடம்! மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள்! "மோடி அரசு நடத்துவது ஜனநாயக ஆட்சி அல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யும் ஈவு இரக்கமற்ற, மிக தந்திரமான " மார்க்கெட்டிங் " உத்தி !" என்ற வரி உச்சம்!

      ஆனால், உங்கள் கடைசி வரி மட்டும் பலிக்காமல் இருக்க வேண்டுமே என அஞ்சுகிறேன்! :-)

      உங்கள் செறிவார்ந்த கருத்துக்கும் உளமார்ந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்