.

வெள்ளி, மார்ச் 10, 2017

நெடுவாசல்! – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்!

Save Neduvasal
நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நான் ‘கீற்று’ மின்னிதழில் எழுதிய கட்டுரை...
 மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை, நாட்டின் தலைவாசல் எடுத்திருக்கும் தவறான முடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது தமிழ்நாட்டின் எளிய சிற்றூரான நெடுவாசல்! 

H.Raja
பா.ஜ.க., சார்பில் பல அரிய கருத்துக் கருவூலங்களைத் தொடர்ந்து அள்ளி அள்ளி வழங்கி வரும் எச்.ராஜா, இந்தப் பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாரும் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்று. ஆனால், போராட்டக்காரர்களைப் பார்த்து அதே பா.ஜ.க-வினர் கேட்கும் கேள்வி என்னவெனில், “இந்த நீரகக் கரிமத் (Hydro Carbon) திட்டத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமா கொண்டு வருகிறோம்? இந்தியா முழுக்க 31 இடங்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுவது போல ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்பது.

பா.ஜ.க-வினரின் இந்தக் கேள்வியிலேயே எச்.ராஜாவின் குற்றச்சாட்டு எவ்வளவு தவறு என்பதற்கான சான்றும் அடங்கியுள்ளது.

ஆம்! இந்த நீரகக் கரிமத் திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் கொண்டு வரப்படவில்லை. நாடு முழுக்கப் பல்வேறு இடங்களிலும் கொண்டு வரப்பட இருக்கிறது. ஆக, இப்பொழுது நடப்பது வெறும் தமிழர் உரிமைப் போராட்டம் இல்லை. இதே போல் நாடெங்கும் பாதிக்கப்படவிருக்கும் 31 பகுதிகளைக் காக்கத் தொடங்கப்பட்டிருக்கும் மொத்த இந்தியாவுக்கான போராட்டம்! நாங்கள் வெறும் தமிழர்களுக்காக மட்டும் போராடவில்லை. நாடு முழுக்க உள்ள இந்தியர்கள் எல்லாருக்காகவும்தான் போராடுகிறோம். சாதி, சமயம், மொழி, இனம், மாநிலம் என அத்தனை எல்லைகளையும் கடந்து மொத்த நாட்டுக்காகவும் போராடும் நாங்கள் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்றால் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் யார்? எப்பொழுது பார்த்தாலும் இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதலை மூட்டும் விதமாகவே பேசி வரும் சமயவெறியர்களா?... 

Kids of Jammu & Kashmir Supports Neduvasal
நீரகக் கரிமத் திட்டத்துக்கு எதிரான தமிழர் போராட்டம் இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை அரசுகள் உணராவிட்டாலும் இந்தியக் குழந்தைகள் உணர்ந்திருக்கிறார்கள்!
இந்தத் தமிழர், இந்தியர் என்கிற அடையாளங்களையெல்லாம் தாண்டி, மாபெரும் சுற்றுச்சூழல் தாக்குதலை நிகழ்த்த விடாமல் தடுக்கும் ஒரு போராட்டம் இது என்பது நாம் முதன்மையாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.  மனிதர்களின் எரிபொருள் வெறியால் உலகமே அழிவின் விளிம்பில் நிற்கிறது. இந்நிலையில் மீண்டும் இம்மண்ணுலகில் இன்னொரு பசுமைப் பகுதி அழியாமல் தடுக்கும் சிறப்பான முயற்சியே இது. அவ்வகையில் பார்த்தால் இது தமிழர்களுக்கான போராட்டம் மட்டுமில்லை... இந்தியாவுக்கான போராட்டம் மட்டுமில்லை... மொத்த உலகத்துக்கான போராட்டம்! உலக நன்மைக்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றால் குண்டு வைப்பவர்களெல்லாரும் பெரிய தியாகிகளா?...

La.Ganesan
இப்பொழுதெல்லாம் தியாகி, தியாகம் என்கிற சொற்களைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் இல.கணேசன் அவர்கள்தாம். நெடுவாசல் போராட்டம் பற்றி ஊடகங்களிடம் பேசிய அவர், “ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும் என்பது வடமொழிப் பழமொழி!” என்கிறார். “ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; ஒருவனது ஆன்மாவுக்காக முழு உலகத்தையும் தியாகம் செய்யலாம்” என்கிற விதுரநீதியையே கொஞ்சம் மேல்பூச்சோடு சொல்லியிருக்கிறார் அவர். அந்தப் பூச்சுவேலையை நீக்கி விட்டுப் பார்த்தால், “நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் மாநிலத்தையே காவு கொடுக்கலாம்” என்பதுதான் அதன் உண்மையான பொருள்.

இந்த அரிய பேருண்மையை எடுத்துரைத்ததற்காக, இல.கணேசனாரைத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். என்னைக் கேட்டால், ஐயா அவர்களுக்குத் தமிழர்கள் நாம் நன்றி நவிலக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்வேன்.

பா.ஜ.க-வின் கட்சிக்காரர்கள் முதல் அதன் ஆதரவாளர்களான பொதுமக்கள் வரை எல்லோருமே இந்தத் திட்டத்தால் எந்தப் பாதிப்புமே இருக்காது எனக் கதை அளந்து கொண்டிருக்க, இல.கணேசன் அவர்கள் மட்டும்தான் ‘மாநிலத்தையே தியாகம் செய்ய வேண்டிய அளவுக்குப் பூதாகர அழிவைத் தருகிற திட்டம் இது’ என்பதை இப்படி வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்! அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறத்தானே வேண்டும்?

ஆனால், அதே நேரம், இல.கணேசன் அவர்கள் தியாகம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்! நாட்டுக்காகச் செய்வதற்குப் பெயர்தான் தியாகம். உங்கள் சித்தேஸ்வர ராவும், அதானியும் கொள்ளை லாபத்தில் குளிக்க வேண்டும் என்பதற்காகச் சோறு போடும் நிலத்தைக் கூறு போட்டு விற்பதற்குப் பெயர் தியாகம் இல்லை. அது, இந்த நிலத்தையே உணவுக்காக நம்பியிருக்கிற மக்களுக்குச் செய்யும் துரோகம்! பல கோடி மக்கள் விடுதலை பெறச் சில ஆயிரம் பேரின் உதிரத்தைக் கேட்டார் நேதாஜி அன்று! ஆனால், இரண்டொரு பண முதலைகள் கொழுக்கப் பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரத்தைப் பலி கேட்கிறீர்கள் நீங்கள் இன்று! நீங்கள் செய்யச் சொல்வதற்குப் பெயர்தான் தியாகம் என்றால் அன்று நேதாஜி செய்யச் சொன்னதற்குப் பெயர் என்ன ஐயா?...

அதே நேர்காணலில் தொடர்ந்து பேசிய இல.கணேசன் அவர்கள், “நலத்திட்டங்களுக்கு நிலம் தர மாட்டோம் என்றால் அவற்றை நாங்கள் என்ன வானத்திலா நடத்த முடியும்?” எனக் கேட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர் கூறுவது போல இது பெரிய நன்மை பயக்கும் திட்டம் என்றால், தியாகம் செய்வது பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அந்த அளவுக்கு வளைகுடா நாடுகளில் இருப்பது போன்ற மாபெரும் எண்ணெய் வயல்களா இங்கு புதைந்திருக்கின்றன? இல்லையே! அப்படி இருந்திருந்தால், அரசே இந்த ‘நலத்’ திட்டத்தைக் கையிலெடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

ஏனெனில், அரசே களமிறங்குகிற அளவுக்குப் பெரிய அளவிலான வளம் ஒன்றும் இங்கு கொட்டிக் கிடக்கவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே ‘சிறிய வயல்கள் கண்டுபிடிப்புக் கொள்கை’யின் (Discovered Small Field) கீழ்தான். தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதாயம் தருகிற அளவுக்குச் சிறிதளவு இயற்கை வளம்தான் இந்த 31 இடங்களிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால்தான் நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனியாருக்குக் கொடுத்து விட்டார்கள். இப்படிச் சொல்வது நான் இல்லை. அரசுத் தரப்பிலேயே கூறப்படும் விளக்கமே இதுதான்!

ஆக, குறிப்பிட்ட காலக் கட்டத்துக்கு (ஆகக்கூடி 30 ஆண்டுகள்) மட்டுமே ஆதாயம் தருகிற ஒரு குறுகிய காலத் தொழிலுக்காக, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமானாலும் வளங்களை வாரி வழங்கக்கூடிய தொழிலை ஒரேயடியாக அழித்துப் போடுவதற்குப் பெயரா நலத்திட்டம்? ஓரிரு தனி ஆட்களின் ஆதாயத்துக்காக இப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் மண்ணுக்கும் பல்லாயிரங் கோடிக்கணக்கான சிறு உயிரினங்களுக்கும் ஒரேயடியாகப் பேரழிவைத் தருகிற திட்டத்தைத் திணிக்கிற நீங்களா வளர்ச்சிக்குப் பாடுபடுகிறவர்கள்? அப்படிப்பட்ட ஒரு பேரழிவு நடந்துவிடாமல் காக்கத் துடிக்கும் நாங்களா வளர்ச்சிக்கு எதிரானவர்கள்? தப்பித் தவறிக் கூட இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி விடாதீர்கள்! வெளிநாட்டுக்காரர்கள் கேட்டால் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

அடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள். “இந்தத் திட்டத்தை எதிர்க்கிற அரசியல் கட்சியினர் என்ன அறிவியல் அறிஞர்களா? என்ன அருகதை இருக்கிறது அவர்களுக்கு இதை எதிர்க்க?” எனக் கேட்கிறார்.

எச்.ராஜா சொன்னதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போன்ற கடுமையான சொற்களுக்குப் பதிலாக மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அரசியலாளர்கள் எனும் நாகரிகச் சொல்லைப் பயன்படுத்துகிறார், அவ்வளவுதான். 

Pon.Radhakrishnan
ஒரு திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்தால், அந்தத் திட்டம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டியதுதான் பொறுப்பில் இருப்பவர்களின் கடமை. மாறாக, எதிர்ப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றியே இவர்கள் மீண்டும் மீண்டும் கருத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ‘தங்கள் திட்டத்தை எதிர்க்கிற அனைவருமே அரசுக்கு எதிரான குறிப்பிட்ட சிலர்தானே தவிர, பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை’ என்கிற ஒரு பொய்யான தோற்றத்தை இவர்கள் கட்டமைக்க முயல்கிறார்கள். மக்களான நாம் இந்த உள்நோக்கத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இவர்கள் பயன்படுத்தும் தீவிரவாதிகள், தியாகம், அருகதை போன்ற சில சொற்களை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது அறிவீனம்!

ஐயா சொல்வது போல், அரசியலாளர்கள் ஒன்றும் அறிவியல் அறிந்தவர்கள் இல்லைதாம். ஆனால், அரசியலாளர்கள் என்கிற முறையில் இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கே இன்று வரை பா.ஜ.க., தரப்பினரால் சரியான விடை அளிக்க இயலவில்லையே! இன்னும் அறிவியலாளர்கள் வேறு களத்தில் இறங்கினால் ஆளுங்கட்சிப் பரப்புரைப் பீரங்கிகளின் நிலைமை என்னாகும்? எடுத்துக்காட்டாக, அண்மையில் சீமான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபொழுது,

“எரிபொருள் இருந்தால்தானே சமைக்க முடியும்?” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். “சரி... இருக்கிற விளைநிலங்களையெல்லாம் அழித்துவிட்டு எடுக்கிற அந்த எரிபொருளை வைத்து எதைச் சமைப்பீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார் சீமான். இன்று வரை அதற்குப் பதில் இல்லை.

ஏன், அரசியலாளர்கள் மட்டும் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? தவறான ஒரு திட்டத்தால் நாடு பாதிக்கப்பட்டால் அவர்களும் அதனால் பாதிக்கப்படப் போவதில்லையா? அப்படியிருக்க, அவர்களுக்கு மட்டும் திட்டத்தை எதிர்க்கும் உரிமை எப்படி இல்லாமல் போய்விடும்? இந்த நாட்டின் குடிமக்கள், கேள்வி கேட்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை விட வேறென்ன அருகதை வேண்டும்?

சரி, ஒரு பேச்சுக்காக அரசியலாளர்களுக்கு அந்த அருகதை இல்லை என்பதாகவே வைத்துக் கொள்வோம். “அணு உலைகள் ஆபத்தானவை! அவற்றை மூட வேண்டும்!” என இந்தியா எங்கும் உள்ள அணு அறிவியலாளர்கள் எத்தனையோ பேர் தொடர்ந்து ஆண்டுக்கணக்காக எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்களே! நாடெங்கும் பரப்புரை கூடச் செய்கிறார்களே! அவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் என்ன நடவடிக்கையை இதுவரை மேற்கொண்டு விட்டீர்கள்? அறிவியல் அறிஞர்களே கூறி விட்டார்களே என்று ஆட்சிக்கு வந்தவுடனே அணு உலைகளையெல்லாம் இழுத்துப் பூட்டி விட்டீர்களா?

ஆக, அருகதையுள்ளவர்கள் அறிவு சார் வாதங்களை முன்வைத்தால் அவர்களை மதிப்பது கிடையாது. அறிவுக்குத்தான் மதிப்பில்லையே என்று அறப் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தால் எந்த அருகதையில் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்பது! இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா பொன்னார் அவர்களே?

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்பொழுது போராடும் தமிழர்களுக்குத் துணையாக அறிவியல் அறிந்தவர்களும் களமிறங்கி விட்டார்கள். இதோ, எட்டாண்டுக் காலம் அமெரிக்காவில் பொறியாளராக இருந்துவிட்டுச் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும் பிரேமானந்த் சேதுராஜன் பேசுவதைக் கேளுங்கள்! 


ஆக மொத்தம், இந்த ஒரு திட்டத்தில்தான் எத்தனை எத்தனை பொய்கள்!!!...

சாணவளி (மீத்தேன்) என்பதே ஒரு வகை நீரகக் கரிமம்தானாம். (நாங்கள் சொல்லவில்லை, அறிவியல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்). அவரைக்காய், கொத்தவரங்காய், பீர்க்கங்காய் எல்லாவற்றுக்கும் காய் எனப் பொதுப்பெயர் இருப்பது போல் சாணவளி (ஓர்க்கரிமம்), ஐங்கரிமம் (Pentane), அறுங்கரிமம் (Hexane) போன்ற பல கரிமங்களுக்குப் பொதுப் பெயர் நீரகக் கரிமம். இது அடிப்படை அறிவியல் உண்மை! பாறை எரிவளித் (shale gas) திட்டமும் இதேதான். ஆக, சாணவளித் திட்டத்துக்கு மக்களிடையில் எதிர்ப்பு என்றதும், பாறை எரிவளித் திட்டம் என்று மாற்றி, பின் அதுவும் சரிவராது என்று நீரகக் கரிமத் திட்டம் என மீண்டும் பெயரை மாற்றிப் புறவாசல் வழியே நெடுவாசலுக்குள் நுழைக்கப் பார்ப்பது முதல் பொய்!

இப்படி, பழைய கள்ளையே மொந்தையை மட்டும் புதிதாக மாற்றிக் கொண்டு வந்து வைத்துவிட்டு “சாணவளி எடுப்பதற்குத்தான் நீரழுத்த உடைப்பு முறை (Hydraulic fracturing) பயன்படுத்தப்படும். இந்த நீரகக் கரிமத் திட்டத்தில் அதற்கு வேலை இல்லை” என முழுப் பூசணிக்காயை அந்தக் கையகல மொந்தையிலேயே சேர்த்து மூட இவர்கள் முயல்வது இரண்டாவது பொய்!

இந்தத் திட்டத்தைப் பொறுத்த வரையில் எரிவளியைத் தோண்டி எடுப்பது, அதற்கு விலை தீர்மானிப்பது, சந்தைப்படுத்துவது, வருமானம் அடையப் போவது அத்தனையும் இதில் ஈடுபடத் துடித்துக் கொண்டிருக்கும் 22 நிறுவனங்கள்தாம். (அவற்றில் நான்கே நான்குதாம் அரசு நிறுவனங்கள் மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தாம்). மற்றபடி, இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கப் போவது வெறும் உரிமத் தொகையும் (royalty), சிறிதளவு பங்கும்தாம். உண்மை இப்படி இருக்க, இது ஏதோ அரசுத் திட்டம் என்பது போல நாட்டு நலத்திட்டம், சமூக வளர்ச்சித் திட்டம் எனவெல்லாம் இவர்கள் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பது இன்னொரு பொய்!

மிஞ்சி மிஞ்சிப் போனால் 30 ஆண்டுகள் மட்டுமே செயல்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை ஏதோ காலகாலத்துக்கும் பணமழையைப் பொழிந்து நாட்டையே செல்வச் செழிப்பாக்கி விடக்கூடிய திட்டம் போல இவர்கள் ஊதிப் பெருக்குவது மற்றுமொரு பொய்!

உழவர்கள், கிழவர்கள், பெண்கள், பிள்ளைகள், அறிவியலாளர்கள், அரசியலாளர்கள் என அத்தனை பேரும் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்க, ஏதோ சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இதை எதிர்க்கிறார்கள் என இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது மேலும் ஒரு பொய்! 

From yester's generation to tomorrow's Generation in protest field for future generation!

இவை எல்லாவற்றையும் விடப் பெரியது... சாணவளித் திட்டம் கைவிடப்பட்டதாக முறையற்ற வகையில் ஓர் அறிவிப்பை இவர்கள் வெளியிட்டது! அது பொய் கூட இல்லை, கபட நாடகம்! (அந்த அறிவிப்பு வந்தவுடன் நாம் அனைவருமே வரவேற்றபொழுதும் தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு குரல், “இதை நம்ப முடியாது! திட்டத்தைக் கைவிடுவதாயிருந்தால் அரசு அதை முறையாக அறிவிக்க வேண்டும்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் குரலுக்குரியவர் வைகோ! கடைசியில் அவர் சொன்னதுதான் உண்மையாயிற்று. அதற்காக “அன்றே சொன்னார் அறிஞர்” என்று பாராட்டத் தேவையில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைக்காகத் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் அவரை இழிவுபடுத்தாமலாவது இருக்கலாம் இல்லையா? ஆனால் நம்மவர்களோ, நன்றி கிலோ எவ்வளவு எனக் கேட்கிறார்கள்!).

இப்படி, தலைமுடி முதல் கால் நகம் வரை பொய்களாலேயே ஒப்பனை செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காகத்தான் நம்பி நாட்டைக் கொடுக்கச் சொல்கிறார்கள் இந்த நல்லவர்கள்! கொடுப்பதும் கொடுக்காததும் அந்தந்த நில உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது; கூடாது! ஆனால், திட்டம் தொடங்கும்பொழுதே இத்தனை பொய்கள் என்றால், தொடங்கிய பின்?... இதனால் உழவுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த ஆபத்தும் வராது என இவர்கள் சொல்பவையெல்லாம்?... 

(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧) ஆம் நாங்கள் தமிழர்கள், சென்னை மீம்சு, ௨) தமிழ் வெப்துனியா, ௩) பான் பீட்டா இந்தியா, ௪) Vaithy123, ௫) லைவ்டே, ௬) ம.அரவிந்த், த.யோகேஸ்வரன், ௭) சமூக ஊடகப் போராளிகள்.

விழியம்: நன்றி லெட்சு மேக் இஞ்சினியரிங் சிம்பிள்.

இது தொடர்பாகக் கட்டாயம் படிக்க வேண்டியவை:
நிலநடுக்கங்களுக்கு காரணம் ஹைட்ராலிக் பிராக்சரிங்தான் - தடை செய்த அமெரிக்க மாகாணங்கள்!
ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த ஓ.என்.ஜி.சி குழாய்! - நெடுவாசல் நிஜங்கள்! #SpotVisit
அப்போ வாடிவாசல், இப்போ நெடுவாசல் - அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. என்னமோ போங்க...

    இன்றைய செய்தி : தற்காலிகமாக போராட்டம் வாபஸ்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! ஆனால், கட்டுரை போராட்டம் திரும்பப் பெறப்படுவதற்கு மூன்று இரண்டு நாட்கள் முன்னரே எழுதப்பட்டது. சில காரணங்களால் வெளியிடத் தாமதமாகி விட்டது. எனவேதான், தொடக்கத்தில் உரிய விளக்கத்தைச் சேர்த்தேன். எனக்கென்னவோ உணர்வும் அறிவும் செறிந்த நம் மக்கள் பின்வாங்கியிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காகத் தற்காலிகமாகப் போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த அளவுக்குப் பெரிய எதிர்ப்பு எழுந்ததே போதும்; இனி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு துணியாது என நம்புகிறேன். பார்ப்போம் ஐயா!

      முதல் நேயராக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. ஒப்பனை செய்யப்பட்ட திட்டம் என்ற ஒரே சொற்றொடர் அனைத்தையும் உணர்த்திவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! தங்கள் நறுக்குத் தெறித்தாற் போன்ற பாராட்டுக்கும் இசைவான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. தங்கள் பதிவுகள் யாவும்
    ஆய்வுக் கண்ணோட்டங்களே!
    இப்பதிவும்
    உயிரோட்டமான பதிவாகவே
    எனக்குப் படுகிறது.
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! மிகுந்த நன்றி ஐயா! தங்களைப் போன்றோரின் தொடர் வருகையும் ஊக்குவிப்புமே காரணம். மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்