.

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

முதல்வர் மறந்த வாக்குறுதி - மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு!


Jayalalitha's Election Report


தமிழ்நாட்டு மீனவர்கள் 65 பேரை இலங்கை அரசு கூண்டோடு பிடித்துச் சென்று மூன்று நாட்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், அடுத்ததாக ‘இந்திய அரசின் கடலோரக் காவல்படையே’ நேரடியாக வந்து காரைக்கால் மீனவத் தமிழர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்கியிருக்கிறது!

இதை அறிந்ததும், “இத்தனை நாட்களாக, இலங்கைக் கடற்படைதான் மீனவர்களைத் தாக்கியது. இப்பொழுது, இந்தியக் கடலோரக் காவல்படையும் அதையே செய்கிறதென்றால்... தவறு மீனவர்கள் பக்கம்தான் இருக்கும் போலிருக்கிறதே” எனக் கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், விவரம் புரியாத அப்பாவிகள் சிலர்!

தெரியாமல்தான் கேட்கிறேன், மீனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் நம்மைப் போல இதே நாட்டில், நாம் வாழும் இதே அரசியல், சமூகச் சூழலில் வாழ்பவர்கள்தானே? காவல்துறை அலுவலர் கோபத்தோடு ஓர் அதட்டல் போட்டாலே தொடை உதறத் தொடங்கிவிடுகிற நம்மைப் போன்ற சராசரித் தமிழ்க் குடிமக்கள்தானே அவர்களும்? கடலோரக் காவல்படையினர், அதுவும் துப்பாக்கிகளோடு வரும்பொழுது, உண்மையிலேயே தங்கள் பக்கம் தவறு இருந்திருந்தால் மீனவர்கள் உடனே அஞ்சிப் பின்வாங்கத் தொடங்கியிருக்க மாட்டார்களா? சிந்தித்துப் பாருங்கள்!

உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது உங்களுக்குத் தெரிய வந்ததா?
மீனவர்கள் எப்பொழுதும் போல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்பொழுது இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த ‘ராஜஸ்ரீ’ என்கிற கப்பலிலிருந்து படையினர் 7 பேர் ஒரு படகில் வந்து மீனவர்களிடம் மீன்பிடிப் படகுக்கான உரிமத்தை கேட்டிருக்கின்றனர். எடுத்துக் காட்டியதும் அதை வாங்கிக் கொண்டு, “இங்கு மீன் பிடிக்கக்கூடாது, திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கின்றனர்.

அதற்கு மீனவர்கள், “இது இந்தியக் கடல் எல்லைப் பகுதிதானே? இலங்கைக் கடற்பகுதிக்குத்தான் செல்லக்கூடாது என்கிறீர்கள், இப்பொழுது இந்திய எல்லைக்குள் கூட மீன் பிடிக்கக் கூடாது என்று சொன்னால், நாங்கள் வேறு எங்கே செல்ல முடியும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். நியாயமான இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத அவர்கள் கோபப்பட்டு, மீனவர்களின் படகு உரிமத்தைப் பறித்துக் கொண்டு, அவர்களையும் தாக்கிக் காயப்படுத்தி, அவர்களின் வலைகளையும் அறுத்தி வீசி அட்டூழியம் செய்திருக்கிறார்கள்! பார்க்க: http://tinyurl.com/pfyjhut.

“அட, இது மீனவர்கள் சொன்னதை வைத்து எழுதியதுதானே? இது உண்மை என எப்படி நம்ப முடியும்” என நீங்கள் கேட்கலாம். சரி, உங்கள் வழிக்கே வருகிறேன். அப்படியே மீனவர்கள் பக்கம் தவறு இருந்திருந்தாலும், படகு உரிமம்/மீன்பிடி உரிமம் அவர்களிடம் இல்லாமல் இருந்திருந்தாலும் காவல்துறையினரான இவர்கள், அதுவும் நிராயுதபாணிகளை மிரட்ட ஆயுதங்களோடு சென்றிருக்கும் இந்தக் காவல் தெய்வங்கள் () ஒரு மிரட்டு மிரட்டியிருந்தால் அவர்கள் உடனே திரும்பிப் போயிருக்க மாட்டார்களா? அதற்காக, விலைமதிப்பு மிகுந்த அவர்கள் வலைகளை அறுத்து, அவர்களையும் தாக்கி, மேற்கொண்டு துப்பாக்கி காட்டியும் மிரட்டியிருக்கிறார்களே காவல்படையினர்! இது முறையா? இதுதான் வீரமா? இதற்குப் பெயர்தான் காவலா? இவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?

இப்பொழுது, நமக்குப் புரியாத புதிர் என்னவெனில், இத்தனை காலமாக, இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தினால் பிரதமருக்கு மடல் எழுதுவார் முதல்வர் ஜெயலலிதா, இப்பொழுது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி என்ன செய்யப் போகிறார்? இந்தியக் கடலோரக் காவல்படை தாக்காமல் தடுக்குமாறு அதே பிரதமருக்கு இனி இவர் மடல்கள் எழுதிக் குவிக்கப் போகிறாரா? ஏன், இன்னொன்று செய்யலாமே! கடற்படையினர் தாக்குதல்களைத் தடுக்கும் ஆற்றல் மாநில அரசுகளுக்கு இல்லவே இல்லை, நடுவண் அரசால் மட்டும்தான் அது முடியும் என்பது உண்மையானால், இனிமேல், தமிழர்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்தியப் பிரதமருக்கும், சிங்களப் படையினரின் தாக்குதல்களை நிறுத்தக் கோரி இராசபக்சவுக்கும் இவர்கள் மடல் எழுதலாமே! இதனால், வீழ்ச்சியில் இயங்கும் அஞ்சல்துறைக்காவது வரும்படி கூடுமில்லையா?

என்னைப் பொறுத்த வரை, இந்தியக் கடலோரக் காவல்படையின் இந்தத் தாக்குதலுக்கு ஒரு வகையில் நம் முதல்வரும்தான் காரணம். தமிழர்கள் மீது –அதாவது மீனவர்கள் மீது- எத்தனை முறை தாக்குதல் நடத்தினாலும், எப்பேர்ப்பட்ட தாக்குதல் நடத்தினாலும் பிரதமருக்கு மடல் எழுதுவதைத் தவிர வேறொன்றும் செய்யப் போவதில்லை என்கிற இவருடைய இந்த மெத்தனப் போக்குதான், ஈழத் தமிழர்களை மட்டுமில்லை தாயகத் தமிழர்களை அடித்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் எனும் துணிச்சலை உலகெங்கும் உள்ள அதிகார வர்க்கத்துக்கும் ஆயுத வர்க்கத்துக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையே இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுக்கக் கோரிப் பிரதமருக்கு முதல்வர் எழுதும் மடல்கள் தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், மீண்டும் மீண்டும் முதல்வர் இந்திய அரசுக்கே அழுத்தம் தந்து கொண்டிருப்பதைக் கண்டு, தங்களுக்குத் தமிழர்கள் மீது எந்த விதமான அக்கறையும் இல்லை என்பதைத் தமிழ்நாட்டு முதல்வருக்கு உணர்த்துவதற்காக இந்திய அரசே திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறதோ எனவும் தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இலங்கைக் கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து முதல்வர், மன்மோகன் சிங்குக்கு மடல் எழுதிய அடுத்த நாளே இந்தத் தாக்குதல் நடந்திருப்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று!

இது உண்மையோ இல்லையோ, ஆக மொத்தம், இந்திய அரசுக்குத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் எந்த விதமான ஆர்வமோ அக்கறையோ இல்லை என்பதற்கு இதை விட ஓர் எடுத்துக்காட்டு இருக்க முடியாது. மீனவத் தமிழர்களை இந்தியக் கடற்படை/கடலோரக் காவல்படை தாக்குவது இது முதல்முறையும் இல்லை! ஆக, இனி நம் தமிழ் மீனவர்களை இலங்கைப் படையினரிடமிருந்து மட்டுமில்லை, இந்தியப் படையினரிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம். அப்படியிருக்க, இனியும் நம் மீனவர்களின் பாதுகாப்புக்காக இந்திய அரசிடம் இறைஞ்சிக் கொண்டிருப்பதில் எந்த விதத்திலும் பொருளில்லை என்பதை நம் ஆட்சியாளர்கள் உணர்ந்தாக வேண்டும்!

Tamil Fishermen
எனவே, மீனவ உடன்பிறப்புக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க இனியும் நடுவண் அரசை நம்பிக் கொண்டிருக்காமல், தமிழ்நாட்டு அரசு நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பும் கோரிக்கையும்!

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்துக்கான கடந்த தேர்தலின்பொழுது, ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதி ஒன்றை நாம் அனைவருமே அறவே மறந்து விட்டோம். அதுதான், “இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களிலிருந்து மீனவர்களைப் பாதுகாக்க ‘மீனவர் பாதுகாப்புப் படை’ அமைக்கப்படும்” என்பது! (சான்று: http://tinyurl.com/o74t224).

தீபாவளிக்குத் தியாகராய நகர் துணிக்கடைகள் வெளியிடும் அறிவிப்பு போல முழுக்க முழுக்க இலவசங்களின் பட்டியலாக இருந்த அந்த அறிக்கையில் காணப்பட்ட சில ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. வழக்கமாக, அரசியலாளர்தான் தான் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிடுவார். ஆனால், இதைப் பொறுத்த வரை, வாக்காளர்களான நாமே இந்த வாக்குறுதியை மறந்து விட்டோம்!

பின்னே? உணவுப் பங்கீட்டுக் கடையில் (ரேஷன் கடை) இலவசப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்து விட்டுப் பின்னர் அதை ஒத்திப் போட்டால் உடனே மறியல், முழக்கம், ஆர்ப்பாட்டம் எனத் தொடங்கும் நாம், இலவச மடிக்கணினி தருவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், தாளாளர் (Correspondent) அறைக்கே சென்று தாளிக்கத் தயங்காத நாம், ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சீரழிக்கப் பார்த்தது, அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை நிறுத்தியது போன்றவற்றையெல்லாம் கிழி கிழியென்று கிழித்த நாம் இத்......தனை முறை இலங்கைக் கடற்படை நம் மீது தாக்குதல் நடத்தியும், ஒவ்வொரு முறையும் மடல் எழுதுவதைத் தவிர நம் முதல்வர் வேறெந்த நடவடிக்கையும் எடுக்காததைப் பார்த்தும் அவருடைய இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோராமல் இருக்கிறோம் என்றால் நமக்கு எவ்......வளவு மறதி?

எனவே தமிழ் நெஞ்சங்களே! இனியும், மீனவர் பாதுகாப்புக்காக முதல்வர் பிரதமருக்கு மடல் எழுதுவதைப் பார்த்துப் பொருமிக் கொண்டிருக்காமல் நாம் நம் முதல்வருக்கு மடல் எழுதலாம் வாருங்கள்!

இருக்கவே இருக்கிறது முதல்வரின் தனிப்பிரிவு. ‘மீனவர் பாதுகாப்புப் படை’ அமைக்கக் கோரி அஞ்சல், மின்னஞ்சல், நேரிடையாக என எல்லா வழிகளிலும் முதல்வரிடம் விண்ணப்பிப்போம். தேர்தலும் நெருங்கும் இவ்வேளையில், இப்பொழுது முதலே நாம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினால், இப்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் கண்டிப்பாக இது நிறைவேற்றப்படும் என நாம் நம்பலாம்.

அப்படியே ‘மீனவர் பாதுகாப்புப் படை’ அமைக்கப்பட்டாலும் அதுவே இந்தப் பிரச்சினையை அறவே தீர்த்து விடுமா என உங்களுக்கு ஐயம் ஏற்படலாம். கண்டிப்பாகத் தீர்த்து விடும்! அதற்கு ‘மீனவர் பாதுகாப்புப் படை’யும் அதன் செயல்பாடுகளும் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா?

  • முதலில் இதன் பெயர், ஜெயலலிதா தன் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ‘மீனவர் பாதுகாப்புப் படை’ என்பதாக இருக்கக்கூடாது! மனிதர்களை இப்படித் தொழில்ரீதியாகப் பிரித்துக் குறிப்பிடுவது மனிதநேயமும் இல்லை, சட்டப்படிச் சரியும் இல்லை. இதுவும் ஒரு வகையில் வருணாசிரமச் சிந்தனையின் தாக்கம்தான். எனவே, இப்படையின் பெயர் ‘தமிழர் பாதுகாப்புப் படை’ அல்லது ‘மீனவத் தமிழர் பாதுகாப்புப் படை’ என்பதாக அமைய வேண்டும்!

  • இந்தப் படை, ஆயுதம் தாங்கிய படையாக இருத்தல் வேண்டும்!

  • கடலுக்கு நம் மக்கள் மீன் பிடிக்கச் செல்லும் நாட்களில் இப்படை தொடர்ந்து சுற்றுக்காவல் (ரோந்து) செய்ய வேண்டும்!

  • சுற்றுக்காவல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, படையின் இன்னொரு குழு, மீன் பிடிக்கச் செல்பவர்களுடன் ஒரு தனிப் படகில் ஏறிக் கூடவே சென்று ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்!

  • மீனவர்களுக்கோ அவர்கள் தொழிலுக்கோ யாராவது இடையூறு செய்ய முற்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும், அயல்நாட்டுப் படையினராக இருந்தாலும் சொந்த நாட்டுப் படையினராக இருந்தாலும் அவர்களைத் தடுக்கவும், திரும்பிப் போகச் சொல்லவும், மீறினால் கண்டிக்கவும், தேவைப்பட்டால் சிறைப்படுத்தவும், வேறு வழியில்லாவிட்டால் தாக்கவும், முன் அனுமதி பெறாமல் துப்பாக்கிச் சூடு நடத்தவும் இப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்! தேவைப்பட்டால் இதற்காக அரசு சிறப்புச் சட்டங்கள் இயற்ற வேண்டும்!

  • இப்படையினரின் இந்த அதிகாரங்கள் அவர்கள் கடலில் இருக்கும்பொழுது மட்டும்தான் செல்லுபடியாகும் என்பது தவறாமல் சட்டத்தில்/ஆணையில் குறிப்பிடப்பட வேண்டும்!

இவையெல்லாம் நடக்கக்கூடியவையா, இப்படியொரு சட்டத்தை மாநில அரசால் இயற்ற முடியுமா, இந்திய அரசியல் சட்டம் அதற்கு இடமளிக்குமா எனவெல்லாம் நீங்கள் சலித்துக் கொள்வது கேட்கிறது. புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! தன் மக்களைக் காப்பாற்றுவதுதான் ஓர் அரசின் அடிப்படைக் கடமை. சட்டங்களெல்லாமே இதற்காகத்தான் இயற்றப்பட்டுள்ளன. அந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றவே தடையாகச் சில சட்டங்கள் இருந்தால் அவற்றை மீறியாவது நாம் இந்தக் கடமையை நிறைவேற்றத்தான் வேண்டும்!

ஆனால், நம் முதல்வர் அப்படிச் செய்வாரா என்று கேட்டால்... செய்வார்! அது நாம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் விதத்தில்தான் அடங்கியிருக்கிறது. மீனவச் சொந்தங்களைப் பாதுகாக்க இப்படியொரு படையை அமைக்கக் கோரி முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கும் நாம், புதுச்சேரி மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதல் நாம் முன்பே பார்த்தபடி, உண்மையில் நம் முதல்வருக்கு விடுக்கப்பட்ட நடுவணரசின் எச்சரிக்கை என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்! அவர் மீண்டும் மீண்டும் நடுவணரசுக்குத் தன் மடல்கள் மூலம் தரும் நெருக்கடிக்குப் பதிலடியாகவே நடுவணரசு இப்படியொரு வன்முறையில் இறங்கியிருக்கிறது என்கிற கோணத்தை அவருக்கு எடுத்துக் காட்ட வேண்டும்! இது தனிப்பட்ட முறையில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்! தமிழ்ப் பற்றாளர்கள், போராட்டக்காரர்கள், இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் இதை ஒரு தமிழ்ப் பணியாக, சவாலாக ஏற்றுக் கொண்டு, முதல்வரை நேரிடையாகச் சந்தித்து இதைச் செய்ய வேண்டும்! முதல்வருக்கு இது பற்றிய விண்ணப்பங்களை அனுப்புபவர்களும் இந்தக் கோணத்தை மறவாமல் குறிப்பிட்டு எழுத வேண்டும்!

முயன்றுதான் பார்ப்போமே! தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. கடவுள் இருக்கிறதோ இல்லையோ, ஒப்பீட்டளவில் பார்த்தால், கடவுளை விடவா பெரியவை இந்த இந்தியச் சட்டங்களும், நடுவணரசும்?

அப்படி ஒருவேளை, முதல்வர் நம்முடைய இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்தப் பிரச்சினையை அடுத்தபடியாக நாம் பன்னாட்டளவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்! அது எப்படியென அப்புறம் பார்ப்போம்!...

தகவல்கள்: நன்றி தினத்தந்தி, அந்நியன்.
படங்கள்: நன்றி கூடல், வினவு.

(அண்மையில் கீற்று மின்னிதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை).

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

9 கருத்துகள்:

  1. இந்தப் பிரச்சினையை அடுத்தபடியாக நாம் பன்னாட்டளவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்!

    தமிழ் மீனவர்வர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்பது பன்னாடுகளுக்கு தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழ் மீனவர்வர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்பது பன்னாடுகளுக்கு தெரியும்// - எப்பொழுது பார்த்தாலும் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று இதை ஒரு குற்றச்சாட்டாகச் சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது! உலகில் எல்லா இடங்களிலும் மீனவர்கள் எல்லை தாண்டத்தான் செய்கிறார்கள். எல்லா நாட்டுக் கடல் எல்லையிலும் இது நடக்கத்தான் செய்கிறது. ஆனால், எந்த நாட்டிலும், அடுத்த நாட்டு மீனவன் எல்லை தாண்டி வந்ததற்காக அவனைக் கொன்று வீசுவது கிடையாது! அவன் நாக்கில் விஷ முள்ளைக் குத்துவது கிடையாது! அம்மணப்படுத்தி அடித்து விரட்டுவது கிடையாது!

      தெரியாமல்தான் கேட்கிறேன், இரண்டு நாடுகளுக்கும் கடல் எல்லை எதுய்யா? பன்னாட்டுக் கடல் எல்லைச் சட்டம் தெரியுமா உமக்கு? ஒரு நாட்டின் எல்லையிலிருந்து 21 கடல் காதம் (Nautical mile) வரையுள்ள பகுதி அந்த நாட்டுக்குச் சொந்தம். ஆனால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அவ்வளவு பெரிய இடைவெளியே கிடையாது. இலங்கையிலிருந்து 21 கடல் காதம் அளந்தால் அது இந்தியக் கடல் எல்லை தாண்டிக் கணிசமான தொலைவு உள்ளே வந்து விடுகிறது. அதே போல், இந்திய எல்லையிலிருந்து 21 கடல் காதம் அளந்தால் அது இலங்கைக் கடல் எல்லை தாண்டிக் கணிசமான தொலைவு அந்தப் பக்கம் போய் முடிகிறது. அதாவது, இரண்டு நாட்டுக் கடல் பகுதிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றன எனச் சொல்லலாம். ஆக, இந்தப் பகுதி இரண்டு நாட்டு மீனவர்களுக்குமே சொந்தமானது. விவரம் தெரியாமல் வார்த்தை விடாதீர்கள் நண்பரே!

      எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லை தாண்டாமலே இப்பொழுது, அதுவும் சொந்த நாட்டுக் கடலோரக் காவல்படையே தமிழனைத் தாக்குகிறது என்பது பற்றியது இந்தக் கட்டுரை. இதில் வந்து கூட எப்படி மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் குற்றஞ்சாட்ட முடிகிறது? தன் உரிமையைச் செயல்படுத்தி அதனால் பாதிக்கப்பட்டாலும் தமிழன்தான் குற்றவாளி; தன் உரிமை பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும்பொழுது பாதிக்கப்பட்டாலும் தமிழன்தான் குற்றவாளியா?

      நீக்கு
  2. FISHERMEN'S LIVELIHOOD PROBLEM
    EVER LASTING NEVER FINDING A SOLUTION
    UNLESS UNTILL SRI LANKA IS ANNEXED

    பதிலளிநீக்கு
  3. ஓரளவுக்கு உங்கள் கருத்து உண்மைதான். ஆனால், பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் என நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் இந்துக்களையும் சேர்த்திருப்பது பச்சைப் பொய்! நாட்டை ஆள்பவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் இந்துக்கள்தாம். இது இந்து, கிறித்துவர், இசுலாமியர் எனச் சமயரீதியாகப் பார்க்க வேண்டிய பிரச்சினை இல்லை. சிங்களர்-தமிழர், ஆரியர்-திராவிடர், திராவிடர்-தமிழர் என இனரீதியாகப் பார்க்க வேண்டிய பிரச்சினை!

    உங்கள் கருத்துக்களைப் பெயருடன் தெரிவிக்கலாமே!

    பதிலளிநீக்கு
  4. On one hand you feed Sri Lankan Tamils on Indian money while the same Sri Lankan Tamil people complain to the Sinhalese government that trawlers from Tamil Nadu are poaching indiscriminately hurting their livelihood. If the fisherfolk did not fight when Indira donated the land they better keep mum now. Anyways bulk of these fish get exported and are not available in the Indian Market sadly.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது சாலமன்! எனக்குத் தெரிந்த வரை, அப்படி எந்த முறையீட்டையும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக இலங்கைத் தமிழர்கள் செய்ததாகத் தெரியவில்லை. நீங்கள் கூறும் இதே கணிப்பில்தான் இந்திரா காந்தியும் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்தார். அதாவது, இப்படி ஒரு பெரும் இயற்கை வளத்தைக் கொடுத்து இலங்கையோடு இந்தியாவுக்குள்ள உறவை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் காலூன்றி விடாமல் தடுக்கவும், கூடவே இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பெரும் வளத்தைக் கொடுத்து அவர்கள் வாழ்வை மேன்மையுறச் செய்யவும் முடியும் என்று நம்பினார். ஆனால், அவருடைய இந்தத் திட்டத்தின் முதல் பகுதி மட்டும்தான் நிறைவேறியது. இரண்டாம் பகுதி வெறும் கனவாய்ப் போனது. காரணம், அடுத்து வந்த அரசியல் மாற்றங்களால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதி முழுக்க முழுக்கச் சிங்களர்கள் கைக்குப் போய்விட்டது. இப்பொழுது கூட, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களில் இலங்கைக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் ஈடுபட்டதாகத்தான் செய்திகள் வருகின்றன. நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால், சிங்கள மீனவர்களைப் போல் இலங்கைத் தமிழ் மீனவர்களும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்களா? அப்படி இதுவரை ஒருமுறையாவது நடந்திருக்கிறதா? அப்படி நிகழ வாய்ப்பே இல்லை. காரணம், கச்சத் தீவுப் பகுதியிலும் சரி, இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையிலான மற்ற கடல் பகுதிகளிலும் சரி, மீன் பிடிப்பதில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில்தான் போட்டியே தவிர, உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளுக்கே போராடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தப் போட்டியில் இடமே இல்லை. உங்களுக்கு மீன் மிகவும் பிடிக்கும் என்பற்காக இரக்கத்துக்குரிய இலங்கைத் தமிழர்களைப் பார்த்து வயிறெரியாதீர்கள்! அங்கே அவர்கள் உயிருடனே எரிந்து கொண்டிருக்கிறார்கள்!!

      நீக்கு
  5. நேயர்கள் கனிவு கூர்ந்து தமிழில் கருத்திட வேண்டுகிறேன்! தமிழ் மென்பொருள் இல்லாதவர்கள், கீழே உள்ள தமிழ்ப் பலகையைப் பயன்படுத்தலாமே! அதற்காகத்தானே அதை வைத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்