நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நான் ‘கீற்று’ மின்னிதழில் எழுதிய கட்டுரை...
மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை, நாட்டின் தலைவாசல் எடுத்திருக்கும் தவறான முடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது தமிழ்நாட்டின் எளிய சிற்றூரான நெடுவாசல்!
பா.ஜ.க., சார்பில் பல அரிய கருத்துக் கருவூலங்களைத் தொடர்ந்து அள்ளி அள்ளி வழங்கி வரும் எச்.ராஜா, இந்தப் பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாரும் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்று. ஆனால், போராட்டக்காரர்களைப் பார்த்து அதே பா.ஜ.க-வினர் கேட்கும் கேள்வி என்னவெனில், “இந்த நீரகக் கரிமத் (Hydro Carbon) திட்டத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமா கொண்டு வருகிறோம்? இந்தியா முழுக்க 31 இடங்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுவது போல ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்பது.
பா.ஜ.க-வினரின் இந்தக் கேள்வியிலேயே எச்.ராஜாவின் குற்றச்சாட்டு எவ்வளவு தவறு என்பதற்கான சான்றும் அடங்கியுள்ளது.