ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.
காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் பதிலாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் டேவிட் ஐயா கடந்த 11.10.2015, ஞாயிறு அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.
ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர் விடுதலை, தனி ஈழம் போன்ற சர்ச்சைக்குரிய எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் ராஜசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும், பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.
ஆனால், இப்படி முழுவதும் மக்கள் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய