வரலாறு, பண்பாடு போன்றவை பற்றியெல்லாம் நாட்டில் யார்தான் பேசுவது என வர வர வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அதுவும் தமிழர்களுடையவை என வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காரணம், போயும் போயும் தமிழர்கள்தானே! என்ன செய்துவிட முடியும்? அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே?
அந்த வகையில், தமிழர் பண்பாட்டு அடையாளம் ஒன்றைப் பற்றி அண்மையில் திருவாய் மலர்ந்திருப்பவர், தமிழினத்தை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மேனகா காந்தி அவர்கள்!
“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்று இவர் பேசியிருப்பது தங்கள் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்துவிட்டார்களே என ஏற்கெனவே வெந்து போயிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் வேண்டுமென்றே வேல் பாய்ச்சும் வேலை!
நேற்று வரை விலங்கு நல ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட மேனகா காந்தி எப்பொழுது முதல் வரலாற்று ஆசிரியரானார்? இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? இதோ, சில வரிகளில்...