.

வெள்ளி, டிசம்பர் 05, 2014

மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!



Nature Dispose Us! - Just 5 Rules to Stop Global Warming!

சாபூமி கண்ணைக் குத்தும்! (Nature Disposes Us!)

‘டைட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ மாட்டோமோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நாயகனையும் நாயகியையும் துப்பாக்கியால் சுட்டபடி துரத்திக் கொண்டு ஓடுவான் அந்த வில்லன்!

அதைப் பார்க்கும்பொழுது, ‘நாம இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம்னே தெரியாத நேரத்துல கூட அடுத்தவங்களை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறான் பாரு’ என்று அவன் மேல் நமக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும். ஆனால், இன்றைய உலகில் நாம் எல்லோருமே ஏறத்தாழ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் எனச் சொன்னால்...

வியக்க வேண்டாம்! இப்படி நான் சொல்லக் காரணம் நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மை!...

புவி வெப்ப உயர்வால் உலகம் வெகு வேகமாக வெந்து கொண்டிருக்கிறது! இமயமலை உருகுகிறது! துருவப் பகுதிகள் உருகி ஓடுகின்றன! பல்லாயிரம் ஆண்டுகளாகப் பனிப் போர்வைக்குள்ளேயே மறைந்திருந்த பல பனிமலைகள் இன்று வெளியே எட்டிப் பார்த்து நம்மை எச்சரிக்கின்றன! “ஐயா! என் கெணத்தைக் காணோம்” என வடிவேல் சொல்வது போல, “அண்மையில்தானே பார்த்தோம் இங்கே பெரிய பெரிய பனிப் பாளங்களை! எங்கே அவை?” என அலறுகிறார்கள் சூழலியலாளர்கள் (ecologists)! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இமயக் குளிர்நீர்க்கோள்’ (Himalayan Tsunami) எனும் பெயரில், உலகம் எப்படி அழியப் போகிறது என்பதற்கு ஒரு குட்டி முன்னோட்டமே (Trailer) காட்டி விட்டது இயற்கை!

ஆனால் நாம் இன்னும் சாதி, மொழி, மதம், இனம், மாநிலம், நாடு என ஏதாவது ஒன்றின் பெயரால் அடுத்தவரிடம் சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்! மக்களுக்குள் எவ்வளவுதான் பிரிவினைகள் இருந்தாலும், எல்லாரின் உரிமைக்கும், வாழ்வுக்கும் பிரச்சினை என வரும்பொழுது அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், உயிருக்கே ஆபத்து, உலகமே அழியப் போகிறது என்கிற நிலைமை வந்தும் நாம் இன்னும் ஒன்றுபடாவிட்டால் இனியும் எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்?

ஆம்! உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் அடுத்தவருடன் கைகோத்துச் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் காப்பாற்றுவதற்கான பணிகளில் மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, “இன்னும் சில ஆண்டுகளில், தமிழ்நாட்டில் குடிநீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும்” என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் அவரை ஏற இறங்கப் பார்த்திருப்போம். இன்று, “இன்னும் சில ஆண்டுகளில், மக்கள் ஆக்சிசன் சிலிண்டரோடு அலைய வேண்டி வரும்” எனச் சிலர் கூறி வருகிறார்கள். நாம் அதையும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு, கூடவே காது குடைந்த பிளாச்டிக் குச்சியையும் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறோம். எப்பொழுது மாறப் போகிறோம் நாம்?

தனி மனிதர்களை மட்டும் சொல்லவில்லை, குறிப்பாக நாடுகள்தான் இதில் கடும் கண்டனத்துக்குரியவை!

ஆற்று மணல் கொள்ளை முதல் அணுமின் நிலையம் வரை எதையுமே தடுக்க முயலாத இந்தியா போன்ற நாடுகள் முதல் பெருமுதலாளிகள் சிலரின் இலாபங்களுக்காக உலகமே அழிந்தாலும் அழியட்டும் எனக் கியோட்டோ ஒப்பந்தத்தை வெற்று வேட்டாக்கிய மேலை நாடுகள் வரை அனைவரிடமும் நமக்கு எழும் ஒரே கேள்வி, “இப்படி மொத்த பூமியையும் அழித்துச் சம்பாதிக்கும் பணத்தை எந்தக் கோளில் கொண்டு போய்ச் செலவு செய்யப் போகிறீர்கள்?”

ஆமாம் மச்சி! ஆள்பவர்கள் மட்டுமில்லை, நாமும் இன்று சிந்திக்க வேண்டியது இதுதான். எவ்வளவுதான் கோடி கோடியாகச் சேர்த்து வைத்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் தேவை ஒரு பூமி! அதை எவ்வளவுக்கு, எந்தப் பன்பொருள் அங்காடியில் (Super Market) அல்லது இணையத்தளக் கடையில் வாங்கப் போகிறோம்? வாய்ப்பே இல்லை!

நாம் மாறியே ஆக வேண்டும்! வேறு வழியே கிடையாது!

“நீ உயிரோடிருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்” என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்யத்தான் முயல்வோம் இல்லையா? அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மாறாவிட்டால் துளியும் தயங்காமல் தள்ளி விட்டு விடும்.

ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் கிடக்கட்டும். முதலில், தனி மனிதர்களாகிய நாம் மாறுவோம்! பூமி நம் கண்ணைக் குத்தும் முன் நாமாகவே விழித்துக் கொள்வோம்!

இயற்கை சார் வாழ்வு
பிளாச்டிக் போன்ற செயற்கைப் பொருட்களை முடிந்த அளவு தவிர்த்து இயற்கைப் பொருட்களையே நாடுவோம்! அவற்றையும் குறைவாகச் செலவிடுவோம்! செயற்கைப் பொருட்களைத் தவிர்த்தால் மக்காத குப்பைகள் உருவாகாது. இயற்கைப் பொருட்களை ஒரேயடியாகச் செலவழித்துத் தீர்த்து விடாமல் குறைவாகப் பயன்படுத்தினால்தான் தொடர்ச்சியாக அவை நமக்குக் கிடைக்கும்.

சிக்கனம்
தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என எதுவாக இருந்தாலும், ஆம்... எதுவாக இருந்தாலும் முடிந்த அளவுக்குச் சிக்கனம் செய்வோம்! பயன்பாட்டைக் குறைக்கக் குறைக்க உற்பத்தியின் அளவு குறையும். அஞ்சாதீர்கள், அளவுதான் குறையும்; உற்பத்தி நின்றும் விடாது, யாருடைய வேலைவாய்ப்புக்கோ தொழிலுக்கோ இதனால் பாதிப்பும் இருக்காது.

குப்பை மேலாண்மை
ஆண்டுக்கு ஒருமுறை கைப்பேசியை மாற்றுவது முதல் வீட்டுக் குப்பையை வெளியில் கொட்டிவிட்டுக் காசு கொடுத்து உரம் வாங்குவது வரை எல்லா வீணடிப்பையும் நிறுத்துவோம்! குப்பை போடுவது குறையக் குறையத்தான் நிலம், நீர், காற்று எல்லாம் தூய்மையடையும்.

விழிப்புணர்தல்
உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை எப்படி இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்வது எனக் கற்பிக்கும் நூல்கள், இதழ்ப் படைப்புகள், இணையப் பதிவுகள் ஆகியவற்றைத் தேடித் தேடிப் படிப்போம்! கல்வி கற்பது, வேலை செய்வது போன்றவற்றைப் போல உயிர் வாழ்வதற்கு இதுவும் இன்றியமையாதது என்பதை உணர்வோம்!

விழிப்புணர்த்தல்
இது பற்றி மற்றவர்களிடமும் விழிப்புணர்வு தூவுவோம்! பேச்சு, எழுத்து, இணையப் பகிர்வு, நூல்கள் – இதழ்கள் - துண்டு வெளியீடுகள் போன்றவற்றை இரவல் கொடுப்பது, சூழலியல் (Ecological) போராட்டங்களில் கலந்து கொள்வது என முடிந்த வழிகளிலெல்லாம் இதைப் பரப்புவோம்! நாம் மட்டும் மாறினால் போதாது. உலகம் கூடி இழுக்க வேண்டிய தேர் இது! நம்மைச் சுற்றியிருப்பவர்களும் மாறினால்தான் நாம் மாறியதற்கான பலன் நமக்குக் கிடைக்கும்.

அவ்வளவுதான், இந்த ஐந்தே ஐந்து நெறிகளைக் கடைப்பிடிக்க முடியாதா நம்மால்? நினைத்துப் பார் மச்சி!

இப்படி, மக்களாகிய நாம் மாறினால் ஆட்சியாளர்களும் மாறித்தானே ஆக வேண்டும்? நம்முடைய எண்ணிக்கை கூடுதலா பெருமுதலாளிகளின் எண்ணிக்கை கூடுதலா? நாம் அவர்களை நம்பி வாழ்கிறோமா அவர்கள் நம்மை நம்பி வாழ்கிறார்களா? நம் வாழ்க்கை முறையால்தான், நாம் பயன்படுத்துவதால்தான் கண்ட கண்ட பொருட்களையெல்லாம் இயற்கையைச் சீரழித்துப் பெருநிறுவனங்கள் உருவாக்குகின்றன. அப்படிப்பட்ட தங்கள் தொழில் பாதிக்காமல் இருக்கத்தான் அந்த நிறுவனங்கள் ஆட்சியாளர்களையும் ஆட்டுவிக்கின்றன. எனவே, நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், நாம் வாங்குவதை நிறுத்தினால், நாம் விழிப்புணர்வு பெற்று விட்டால் அவர்களும் தங்கள் கடையை மூடிவிட்டுப் போய்த்தான் ஆக வேண்டும்!

மாறுவோம்! மாற்றுவோம்! 

--பகிர்வேன்...

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி யுவா தொலைக்காட்சி.

(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்.)

முந்தையவை:

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!
மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!

இதை பதிவை முடிந்த அளவு மற்றவர்களுடன் பகிர்ந்து பூமியைக் காக்க, உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள உதவுவீர்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், தளத்தின் அடிப்பகுதியில் உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

33 கருத்துகள்:

  1. அன்பு நண்பரே,,, வணக்கம் பொதுநலம் வேண்டி தாங்கள் எழுதியிருக்கும் இந்தப்பதிவு கண்டு மன மகிழ்ச்சியடைகிறேன் இருப்பினும் எவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி நாம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் கணக்கிறது... டைட்டானிக் திரைப்படத்தின் காட்சியை முன்னிருத்தி சொன்னது விசயம் அருமை ஆம் இன்றைய மனிதன் பெரும்பாலும் இந்த மாதிரித்தானே இருக்கிறன் ஆகவேதான் நான் எனது பதிவுகளில் மனிதன் என்பவனை அடிக்கடி ‘’மனிதப்பிண்டம்’’ என்றே குறிப்பிடுகிறேன் தாங்கள் சொல்வதுபோல் சாதி, மொழி, மதம், இனம், என்ற கூண்டை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் வேறு வழியே இல்லை ஆனால் மனிதன் மதுவுக்குள் மூழ்கி மதியிழந்து போய் விட்டானே யார் இவணை வெளிக்கொண்டு வருவது எனது இந்தக் கோபத்தின் வெளிப்பாடே எனது தளத்தில் எழுதியிருப்பேன்
    \\நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து இறந்திருக்க வேண்டும்\\ என.... வேறு வழியில்லை நண்பா....
    \\உலகம் சமநிலை பெறவேணேடும்
    உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்\\
    அன்றே எழுதினான் ஒரு கவிஞன் இதில் முதல் வரியின்மீது எமக்கு நம்பிக்கை உண்டு ஆம் இவ்வுலகம் ஒருநாள் அழிந்து சமநிலை பெறும்.
    சிறந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    (எமது பதிவுக்கு வராவிடினும் நான் தங்களைத் தொடர்வேன் காரணம் தங்களது எழுத்தின் ஈர்ப்பு சக்தி)
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! ஆனால், இதில் 'பொதுநலம்' எனக் கூற ஒன்றுமில்லை என்பதே என் பணிவன்பான கருத்து. காரணம், இதே உலகத்தில்தானே நானும் வாழ்கிறேன். ;-)

      உலகம் அழிந்து மீண்டும் உருவாகும்பொழுது சமநிலை பெறும் என்கிறீர்கள். இது வரை உலகம் ஐந்து முறை அழிந்து மீண்டும் உருவாகியிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்த முறை அழிந்தால் மீண்டும் உருவாகக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதுதான் பெருந்திகைப்பை அளிக்கும் தகவல்! காரணம், அணு ஆயுதங்கள்! உலக நாடுகளின் வல்லரசுப் போட்டியால் பெரிய நாடுகள் அனைத்திடமும் போர் போராகக் கொட்டிக் கிடக்கின்றன அணு ஆயுதங்கள். இவை தற்பொழுதுக்கு மிகப் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளன என்றாலும், ஊழிக் காலம் எனக் குறிப்பிடப்படும் உலகப் பேரழிவு நேர்ந்தால் இந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறும் ஆபத்து உள்ளதாகவும், அப்படி மட்டும் நடந்து விட்டால், (மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்) பூமி மட்டுமல்ல, இந்தக் கதிரவ மண்டலத்தின் சுற்றுப் பாதையே பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்!

      ஆக, இயற்கை தன் ஊழித் தாண்டவத்தைத் தொடங்கும் நாம் அதன் காலில் விழுந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பிண்டம் எனக் குறிக்கும் மனிதனும் பிற உயிரினங்களும் ஒரு துண்டு கூடத் தேற மாட்டாமல் அண்டவெளியில்... வேண்டா! இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. //எமது பதிவுக்கு வராவிடினும் நான் தங்களைத் தொடர்வேன் காரணம் தங்களது எழுத்தின் ஈர்ப்பு சக்தி// - மிகப் பெரிய பாராட்டு ஐயா இது! உண்மையில், மற்றவர்களுக்குப் புரியும்படியாக, பிடிக்கும்படியாக எழுதுகிறேனா என்பதே எனக்கு ஐயமாக இருந்தது. ஆனால், நீங்களோ என் எழுத்துக்கு ஈர்ப்பு ஆற்றலே இருப்பதாகக் கூறுகிறீர்கள். உங்களைப் போன்றவர்களின் இப்படிப்பட்ட பாராட்டுக்கள், எழுதுவதற்கு எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. மிக்க நன்றி ஐயா!

      ஆனால், நான் உங்கள் தளத்துக்கு வராவிட்டாலும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அதுதான் இடிக்கிறது! நான் உங்கள் தளத்துக்கு வந்து கொண்டுதானே இருக்கிறேன்? பழைய சில பதிவுகளைத்தான் படிக்க நேரமில்லை. விரைவில் அவற்றையும் படித்து விடுவேன்.

      நீக்கு
  2. மாறியே தீர வேண்டும்... வேறு வழியில்லை.... அந்த நாள் தான் எப்போது என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! வலைச்சித்தரே! வர வேண்டும்! வர வேண்டும்! எத்தனை நாட்களாயிற்று உங்களைச் சந்தித்து! பதிவுலகமே தேடிக் கொண்டிருக்கிறதே, எங்கே போனீர்கள்? பதிவர் திருவிழா நடத்திய களைப்போ! உங்கள் பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட வாக்குப்பட்டைகள் மூலம், உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் சென்று சேர உதவுங்கள்! நன்றி! வணக்கம்!

      நீக்கு
  3. அய்யா,
    வணக்கம். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்துதான் தொடங்கவேண்டும்.
    ஓசை காளிதாஸ் அவர்களின் எழுத்தைப் படித்திருப்பீர்களே அய்யா!
    வளர்ந்த நாடுகள் நம் போன்ற நாடுகளை எப்படிக் குப்பைத் தொட்டி ஆக்குகின்றன..
    அவர்கள் மட்டும் நன்றாய் இருந்தால் போதும் என்ற எண்ணம்...!
    நம்மிடமும் இருக்கிறது.
    நான் நன்றாய் இருந்தால் போதும்.!
    நான் நன்றாக இருக்க வேண்டுமானால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு மாறாய் வளரவேண்டும்.

    இன்றைய கணத்தைப் பற்றிச் சிந்திக்கும் நமக்கு நாளைய சிக்கலைக் குறித்தான ஓர்மையும் வேண்டும் எனப் புலப்படுத்துகிறது தங்களின் பதிவு!
    அதிலும் குறிப்பாக,

    ““இப்படி மொத்த பூமியையும் அழித்துச் சம்பாதிக்கும் பணத்தை எந்தக் கோளில் கொண்டு போய்ச் செலவு செய்யப் போகிறீர்கள்?”“

    என்ற கேள்வியை இன்னும் கேட்காமல் இருந்தால் நிச்சயம் “பூமி கண்ணைக் குத்தும்“
    நான் மாறுகிறேன்.
    நாடும் மாறும்.
    என்று சொல்ல வைத்த பதிவு.
    நன்றி அய்யா!
    த ம3


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குறிப்பிட்ட வரியை எடுத்துக்காட்டிப் பாராட்டும் அளவுக்கு இந்தப் பதிவு தங்களைக் கவர்ந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா! பாராட்டுக்களுக்கு நன்றி!

      'ஓசை' செல்லா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; 'ஓசை' காளிதாஸ் என்று கேள்விப்பட்டதாக நினைவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நீங்கள் கூறுவது போல, வல்லரசு நாடுகள் நம் நாட்டைக் குப்பைத்தொட்டியாய் மாற்ற முயல்வது குறித்தும், அதன் அபாயங்கள் குறித்தும் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவு குடிமக்களுக்கானது என்பதால் அது குறித்து இதில் பேச முடியவில்லை. புதிய கோணம் ஏதும் கிடைத்தால் நாடுகளைப் பற்றியும் தனியாக ஒரு பதிவு 'போட' வேண்டும்! நன்றி ஐயா! வணக்கம்!

      நீக்கு
  4. மனிதன் மாறிவிட்டான்...மதத்தில் ஏறிவிட்டான்.இந்தப்பாடலையும் கவனத்தில் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகட்டும் ஐயா! வருகைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட வாக்குப்பட்டைகள் மூலம், உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களுக்கும் சென்று சேர உதவுங்கள்! நன்றி! வணக்கம்!

      நீக்கு
  5. அப்பப்பா, அரிதிலும் அரிதாக குறிஞ்சி மலராக வருகிற உங்க பதிவு "worth waiting" என சொல்லவைக்கின்றது!! வாழ்த்துகள்!
    __________________________
    அப்புறம் சகா இந்த முறை ஒரு நண்பனிடம் பேசும் தொனி அருமையாக வந்திருகிறது!
    ____________________

    அளவுக்கு அதிகமாக சமைப்பது மட்டுமல்ல, சாப்பிடுவதால் கூட குளோபல் வார்மிங் அதிகப்படும் என்று படித்த நினைவு! இதைப்பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்றுகூட யோசித்து வைத்திருந்தேன்:) முதல் மூன்று கட்டளைகளை கொஞ்சம் பின்பற்றி கொண்டுதான் இருக்கிறேன். நான்காவது இதோ இப்போ கூட பண்ணினேனே! கட்டளை ஐந்து இதை google பிளஸ் ல ஷேர் பண்ணிட்டேன் பாஸ்! அப்படா எல்லா அசைன்மெண்ட்டயும் முடிச்சாச்சு:) அடுத்த ப்ரஜெக்ட் காக வெய்டிங். (என்னது இதெல்லாம் யூத் க்கு கொடுத்த அசைன்மெண்ட் அப்படினா சொன்னீங்க.அவ்வ்வ்வ்)
    ----------------
    சொல்ல மறந்துட்டேனே! தலைப்பை முதலில் தப்பா வாசித்து விட்டு குழம்பிவிட்டேன். நல்ல தலைப்பு சகா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரிதிலும் அரிதாக குறிஞ்சி மலராக வருகிற உங்க பதிவு "worth waiting" என சொல்லவைக்கின்றது!!// - உண்மையாகவா?! அவ்வளவு நன்றாகவா எழுதுகிறேன்? மிக்க நன்றி!

      //இந்த முறை ஒரு நண்பனிடம் பேசும் தொனி அருமையாக வந்திருகிறது!// - அப்படியா? மிக்க நன்றி சகா! இப்படியெல்லாம் நுட்பமாகக் கவனித்து யாரும் சொல்ல மாட்டார்கள். மிகவும் நன்றி!

      //அளவுக்கு அதிகமாக சமைப்பது மட்டுமல்ல, சாப்பிடுவதால் கூட குளோபல் வார்மிங் அதிகப்படும் என்று படித்த நினைவு! இதைப்பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்றுகூட யோசித்து வைத்திருந்தேன்:)// - ஆம்! அதுவும் ஒரு பயன்பாடுதானே? எல்லாப் பயன்பாடுகளிலும் சிக்கனம் கடைப்பிடித்தால்தான் பூமி பிழைக்கும். எழுதுங்கள்! வந்து படிக்கிறேன்.

      //என்னது இதெல்லாம் யூத் க்கு கொடுத்த அசைன்மெண்ட் அப்படினா சொன்னீங்க. அவ்வ்வ்வ்// - அப்படியெல்லாம் இல்லையே! இந்த எல்லா நெறிகளும் உலகிலுள்ள அனைவருமே பின்பற்றத்தான். [இதற்குப் பொருள் நீங்கள் இளைஞர் இல்லை என்பதில்லை! :-) ]

      உங்களுடைய எல்லாப் பாராட்டுக்களுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் மிகவும் நன்றி!

      நீக்கு
  6. நண்பரே தாங்களும் இடம் பெற்ற எமது புதிய பதிவு காண அழைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐ! அப்படியா? இதோ வருகிறேன்.

      என்றால் ? இடம் பெறாவிடில் வரமாட்டீர்களோ....

      நீக்கு
    2. அப்படியில்லை ஐயா! நான் வலைப்பூக்களை வெவ்வேறு வகைகளில் பின்தொடர்கிறேன். சிலவற்றை பிளாகர் பின்பற்றுவோர்க் குறுஞ்செயலி மூலமாக, சிலவற்றை மின்னஞ்சல் வழியாக, வேறு சிலவற்றை கூகுள்+ மூலம் - இப்படி. இவற்றுள் முதல் இரண்டின் மூலமாகப் பின்தொடரும் வலைப்பூக்களுடைய பதிவுகள் பற்றி மட்டும்தான் உடனுக்குடன் தெரிய வருகிறது. மற்றவற்றை நான் முன்பு போல் அடிக்கடி இப்பொழுது பயன்படுத்துவதில்லை என்பதால் அவற்றின் வழியாகப் பின்தொடர்பவற்றில் புதிய பதிவுகள் வெளியிடப்பட்டால் எனக்கு அவை பல சமயங்களில் தெரிய வருவதில்லை. அதனால்தான் உடனுக்குடன் உங்கள் பதிவுகளைக் காண நான் வர முடிவதில்லை. தவறாக நினைக்க வேண்டா! மேலும், நீங்களும் திண்டுக்கல் தனபாலன் ஐயாவும் பதிவு வெளியிட்டவுடன் மின்னஞ்சல் மூலமோ, சமூகவலைத்தளங்கள் மூலமோ நேரடியாகவே தொடர்பு கொண்டு தெரிவித்து விடுகிறீர்கள் என்பதால், உங்கள் இருவருடைய வலைப்பூக்களையும் பொறுத்த வரை, புதுப் பதிவு வெளியிட்டால் நீங்களே தெரியப்படுத்துவீர்கள் என்றுதான் நான் காத்திருக்கிறேன், வேறொன்றுமில்லை.

      நீக்கு
  7. தலைப்பும் பதிவும் அருமை! அனைவரையும் கவரும்படி அழகாக எழுதுகிறீர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து வெல்வோம் . நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இனியா அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  8. ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும் கிடக்கட்டும். முதலில், தனி மனிதர்களாகிய நாம் மாறுவோம்! பூமி நம் கண்ணைக் குத்தும் முன் நாமாகவே விழித்துக் கொள்வோம்!//

    ஆம் மிக மிக உண்மை! அரசைக் குற்றம் சொல்லுவதை விட, நாமே அதற்கு முனைந்தால் மாற்றத்தை வரவழைக்கலாம். நல்ல ஒரு பதிவு!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! ஆனால், நான் இந்த ஒரு விதயத்தில் மட்டும்தான் இப்படி. பொதுவாக, எனக்கு மக்களைக் குற்றம் சொல்வது பிடிக்காது. ஆனால், இந்த ஒரு விதயத்தைப் பொறுத்த வரை, இஃது உலகம் கூடி இழுக்க வேண்டிய தேர். அதனால்தான், இந்த ஒன்றில் மட்டும் இப்படி வழக்கத்துக்கு மாறான நிலைப்பாடு.

      நீக்கு
  9. அருமை! அருமை! மிகவும் அருமை! ஆம் உண்மைதான் நண்பரே! மனிதன் தான் மிகவும் சுயநலவாதியாயிற்றே! நாமே நம் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டு, நம் சவக் குழியையும் தோண்டிவைத்துள்ளோம். மாற்றம் வர வேண்டும். நாம் தானே மாற வேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்லுவோம்...அதனால் தான் எத்தனையோ விசயங்களில் மாறிக் கொண்டிருக்கும் நாம் இதில் மாறாமல் இருக்கின்றோமோ?!! பாராட்டுக்கள் அருமையான படைப்பிற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா / அம்மணி!

      ஆனால், 'மாற்றம் ஒன்றுதான் மாறாதது' என்கிற கோட்பாட்டின்படி பார்த்தால், இந்த விதயத்திலும் நாம் மாறித்தானே இருக்க வேண்டும்? ஆனால், அந்தக் காரணத்தினால்தான் இந்த விதயத்தில் நாம் மாறாமல் இருக்கிறோமோ என்கிற உங்கள் ஏரணம் (logic) புரியவில்லையே!

      நீக்கு
  10. இன்றைய உலகின் தலையாய கவலையாக இதுதான் இருந்திருக்க வேண்டும்... ஆனால் நீங்கள் குறிப்பிட்டதை போல ஜாதி, மதம், மொழி என இன்னும் அடித்துகொண்டிருக்கிறோம் !

    அரசாங்கங்களுடன் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கும் பூமியை வன்புணர்ச்சி செய்வதில் பெரும்பங்குண்டு !

    ராவீந்திரநாத் தாகூரின் வரிகள்தான் ஞாபகம் வருகின்றன...

    " இன்னும் குழந்தைகள் பிறப்பதே கடவுள் இன்னும் மனிதனை கைவிடவில்லை என்பதற்க்கான சாட்சி ! "

    இறைவனோ, இயற்கையோ... பழிவாங்க முடிவெடுத்தால்... மனித குலத்தின் கதி....


    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! பிரபல பதிவரான தாங்கள் முதன்முறையாக என் வலைப்பூவுக்கு வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி! நீங்கள் உங்கள் இடுகை பற்றித் தெரிவித்துக் கருத்துக் கூற அழைத்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். கண்டிப்பாக வருகிறேன் ஐயா! பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  11. நண்பரே தங்களை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் வருகை தரவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே! வலைச்சரத்தில் எழுதுகிறீர்களா? மிக்க மகிழ்ச்சி! மிக்க மகிழ்ச்சி! கண்டிப்பாக வருகிறேன்! என்னை நீங்கள் பரிந்துரைத்த பதிவு மட்டுமின்றி எல்லாவற்றையும் படிக்கிறேன். பரிந்துரைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, அம்மணி இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்! நானும் எனது நல்வாழ்த்துக்களைத் தங்கள் இருவருக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர், சுற்றத்தார் ஆகியோருக்கும் நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்கிறேன்! தாமத வெளியீட்டுக்கு மன்னியுங்கள்!

      நீக்கு

  13. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்காகத் தனி வெண்பாவெல்லாம் எழுதி வாழ்த்தும் தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா! நானும் எனது நல்வாழ்த்துக்களைத் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர், சுற்றத்தார் ஆகியோருக்கும் நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்கிறேன்! தாமத வெளியீட்டுக்கு மன்னியுங்கள்!

      நீக்கு
  14. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துச் செறிவான வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா! நானும் எனது நல்வாழ்த்துக்களைத் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர், சுற்றத்தார் ஆகியோருக்கும் நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்கிறேன்! தாமத வெளியீட்டுக்கு மன்னியுங்கள்!

      நீக்கு
  15. அருமையான பதிவு தோழரே !

    ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்தது முதல் புவி வெப்பமயமானது வரை அனைத்தும் மனிதனின் தவறான பாதை தான் காரணம். இந்தியாவில் 33% இருந்த காடுகள் இப்போது 22% எனச்சுருங்கி விட்டதாம். இழந்த 11% காடுகளை மீட்க நாம் 54 கோடி மரங்களை நட வேண்டுமாம்.

    காடுகள் வளமாக இருக்க புலிகள் எண்ணிக்கை ஏன் அதிகம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா ?

    அப்போது தான் சாதாரண விறகு வெட்டிகள் காட்டிற்குள் சென்று மரங்களை வெட்டி காடு அழிப்பு வேளையில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், இங்கே நடப்பது என்ன ? உதகையில் காட்டிற்குள் சென்ற மனிதர்களை தாக்கிய புலி கொலை செய்யப்பட்டு விட்டது. கொன்ற பிறகு அதில் ஒருவன் சொல்கிறான் இது அவர்களை தாக்கிய புலி இல்லையாம். அப்படி புலியை கொள்வதில் கூட சரியான திட்டமிடல் இல்லை.

    கிழட்டு புலிகள் தான் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்து எளிதான இலக்குகளான மனிதர்களை வேட்டையாடும். கொல்லப்பட்ட புலி நான்கு வயது ஆண் புலி.

    சமூக காடுகள் எனப்படும் பூங்காக்களில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களும் சாலையை விரிவு படுத்துகிறோம் என்று சகட்டு மேனிக்கு வெட்டி தள்ளபடுகின்றன. எங்கள் நகரமான கோவையில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுபாளையம் சாலை மற்றும் தடாகம் சாலைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் ஆகாய மார்க்கமாகவோ அல்லது உயர்ந்த கட்டிடங்களில் இருந்து புகை படம் எடுத்தாலோ சாலைகளே தெரியாத அளவுக்கு பச்சை பசேலென்று இருந்தது பசுமை. நடந்து செல்பவர்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சாலைகள் என்று எண்ணும் வகையில் சோலைகளாக இருந்த புளிய மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டு விட்டன.

    மாலை வேளையில் ஊட்டியில் இருப்பது போல் இருக்கும் அந்நாட்களில். இன்று சென்னையில் இருப்பது போல் இருக்கிறது. சாலை அகல படுத்துகிறோம் என்று சொல்லி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டு விட்டன.

    சுற்று சூழல் மீது அக்கறை இல்லாமல் தொடர்ந்து செயல்படுவோம் ஆனால் ஓசோனில் இப்போது விழுந்திருக்கும் ஓட்டை பெரிதாகி கொண்டே தான் இருக்குமே தவிர அடைக்க ஒரு வழியும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் போல் பெருநகரங்களில் இருப்பவர்கள் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றி ஊடகங்கள் மூலம்தான் தெரிந்து கொள்கிறோம். அதுவே இவ்வளவு வேதனையைத் தருகிறது எனில், கண்ணெதிரேயே பார்க்கும் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

      புலிகள் எண்ணிக்கையில் அரசுகள் கூடுதலாக அக்கறை செலுத்தக் காரணம் விறகுவெட்டிகள் காடுகளை அழிக்காமல் இருப்பதற்காக என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அஃது இன்றைய காலத்துக்குப் பொருந்தும் எனத் தோன்றவில்லை. காரணம், மற்ற துறைகளைப் போலவே வேட்டைத் தொழில்நுட்பமும் இன்று மிகவும் முன்னேறி விட்டது. வைரமுத்து அவர்களின் 'மூன்றாம் உலகப் போர்' படித்துப் பார்த்தீர்களானால் இன்றைய விறகுவெட்டிகள் எப்பேர்ப்பட்ட மலைவிழுங்கிகள் என்பதை உணரலாம்.

      மற்ற காட்டுயிரிகளை விடப் புலிகள் எண்ணிக்கை கூடுதலாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேறு காரணம் உண்டு ஐயா. அதாவது, பெருமளவு பரந்து விரிந்த புல்வெளியும், பசுமையான மரங்களும் நிரம்பியிருக்கும் காட்டில்தான் அவற்றை உண்டு வாழும் மான், காட்டெருமை முதலான தாவரக் காட்டுயிரினங்கள் பெருக முடியும்; அப்படி இத்தனை சதுர அடிக்கு இத்தனை தாவர உண்ணி விலங்குகள் வாழும் காட்டில்தான் ஒரே ஒரு புலி வாழ முடியும் என ஒரு கணக்கு இருக்கிறது. எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு புலிகள் எண்ணிக்கை ஒரு பகுதியில் கூடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தப் பகுதியில் பன்மடங்கு மான்களும் காட்டெருமைகளும் காட்டுப் பன்றிகளும் இன்ன பிற தாவர உண்ணி விலங்குகளும் இருப்பதாகப் பொருள். அத்தனை தாவர உண்ணி விலங்குகள் உயிர் வாழ்ந்தால், அந்த அளவுக்கு அந்தக் காட்டுப் பகுதியில் போதுமான மரம், செடி, கொடி, புல் வகைகள் பெருகியிருப்பதாகப் பொருள். எனவே, புலி என்கிற ஒரு விலங்கினத்தின் உயர்வு மற்ற எல்லா விலங்கினங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தும் என்பதால்தான் காட்டிலுள்ள எல்லா உயிரினங்களையும் விடப் புலிகளின் பெருக்கத்துக்குக் கூடுதல் முதன்மை தரப்படுகிறது.

      உங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்