தமிழ்நாட்டு
அரசியலாளர்களுள் தன் பெயரைத் தானே கெடுத்துக் கொள்வதில் தன்னிகரற்றவர் முதல்வர்
ஜெயலலிதா!
தாழ்த்தப்பட்ட
சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை நடுவண் அரசின் பட்டியலில் சேர்த்து அதை நிரந்தரச்
சட்டமாக்கித் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்றிக்கு ஆளாவார்; கையோடு, “கோயில்களில்
உயிர்ப்பலி கூடாது” என்று அறிவித்துப் போற்றியவர் வாயாலேயே தூற்றவும் படுவார்!
மழைநீர்ச்
சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே நன்மதிப்பு
பெறுவார்; சூட்டோடு சூடாக, டாஸ்மாக்கை அறிமுகப்படுத்திச் சமூக ஆர்வலர்களால்
கரித்துக் கொட்டவும் படுவார்!
3600
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம் முதல் ஆங்கிலவழி வகுப்புகள்
(English Medium classes) தொடங்கப்படவுள்ளன என்ற தமிழக
அரசின் அண்மைய அறிவிப்பும் இந்தப் பட்டியலில்தான் சேர்கிறது!
இலங்கை
வீரர்கள் கலந்துகொள்வதாக இருந்தால் ‘ஆசிய விளையாட்டுப் போட்டிக’ளைத் தமிழ்நாட்டில்
நடத்த முடியாது என்று அறிவித்தது, தமிழீழம் கோரி வரலாறு காணாத போராட்டத்தில்
தமிழ்ப் பிள்ளைகள் ஈடுபட்டபொழுது அதை அடக்காததன் மூலம் மறைமுக ஆதரவளித்தது, தனி
ஈழம் வேண்டும் என்று தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க
தீர்மானத்தை நிறைவேற்றியது என்று தன் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தமிழ்
மக்களிடமும், குறிப்பாகத் தமிழ்ப் பற்றாளர்களிடையிலும் மிகுந்த செல்வாக்கைத்
திரட்டி வைத்திருந்தார் முதல்வர். ஆனால் இந்தப் புது அறிவிப்பின் மூலம்,
நந்தவனத்து ஆண்டி போல் அதை அவரே தூக்கிப்போட்டு உடைத்து விட்டார், அவர்
வழக்கத்திற்கேற்ப!
ஜெயலலிதா
இதுவரை நான்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ஒருமுறையாவது தமிழர் பிரதிநிதியாக அவர்
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாரா என்றால், கிடையாது! ஆம்! தமிழ் மக்கள்
ஒவ்வொரு முறையும் அவரைத் தங்கள் ஆட்சியாளராகத்தான் தேர்ந்தெடுக்கிறார்களே தவிர,
தங்கள் பிரதிநிதியாக இல்லை! அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரைத்
தங்கள் தொகுதியின் பிரதிநிதியாக ஆக்குவதற்காகத்தானே தவிர, இனத்தின் பிரதிநிதியாக
ஏற்பதற்கு இல்லை.
அதற்குக்
காரணம் அவரைப் பார்ப்பனர் என்றும், கன்னடக்காரர் என்றும் தொடர்ந்து கருணாநிதி
செய்துவரும் பரப்புரை என்பார்கள் சிலர். தவறு! இதே போன்ற பரப்புரையை
எம்.ஜி.ஆருக்கு எதிராகவும்தான் செய்தார் கருணாநிதி, அவர் மலையாளி என்று. ஆனால்,
அஃது அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால், அதே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான
ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த விமர்சனம் மட்டும் எடுபடுகிறது என்றால், அதற்குக்
காரணம் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள்.
ஆனால்,
அவை அனைத்தையும் மறந்து, மன்னித்து ஜெயலலிதாவைத் தங்கள் இனத் தலைவியாகவே
அறிவித்துப் பல்லக்குத் தூக்கும் அளவுக்கு, ஈழப் பிரச்சினை தொடர்பான அவருடைய நடவடிக்கைகளால்
தமிழ் மக்கள் உருகிப் போயிருந்த வேளையில் பல்லக்கின் திரைவிலக்கி மீண்டும் தன்
உண்மை முகம் காட்டிவிட்டார் ஜெயலலிதா! தனது 31 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் இதற்கு
முன் அவர் என்றும் அடைந்திராத, அடைய முடியாத ஒரு செல்வாக்கை இப்பொழுது அடைந்தும்
வெகு இலகுவாக அதைத் தூக்கி எறிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!
பொதுவாக,
தமிழ்நாட்டின் படித்த மக்களுடைய தேர்வாகக் கருதப்படுபவர் ஜெயலலிதா. ஆனால்,
தமிழ்நாட்டின் படித்த மக்களுக்கு ஒருபொழுதும் அறிஞர்களுடைய, துறை சார்ந்த
வல்லுநர்களுடைய கருத்தைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. அதற்குச் சிறந்ததோர்
எடுத்துக்காட்டு இதே ‘தாய்மொழிவழிக் கல்வி’ பற்றிய அவர்களின் நிலைப்பாடு!
அன்றும்
இன்றும் என்றும் உலகப் பேரறிஞர்கள் அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது
‘தாய்மொழிவழிக் கல்வி’. ஆனால், தமிழ்நாட்டின் படித்த சமூகம் ஒருபொழுதும் அதை
ஏற்றுக்கொண்டதில்லை. பொதுவாக, அறிஞர்களிடையில் பெரும்பாலும் கருத்தொற்றுமை
காணப்படாது. இந்த நாட்டுக் கல்வியியலறிஞர் ஒப்புக்கொண்டதை இன்னொரு நாட்டுக்
கல்வியியலறிஞர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒரு நாட்டு அறிவியலாளரின் கருத்தை அதே
நாட்டைச் சேர்ந்த இன்னொரு அறிவியலாளர் மறுத்துப் பேசுவார். ஆனால், அகில உலக அளவில்
அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சில கருத்துக்களுள் ஒன்று ‘தாய்மொழிவழிக்
கல்வியே அறிவை வளர்க்கும்’ என்பது! ஆனால், நம் படித்த நண்பர்கள் அதை
ஏற்றுக்கொள்வதேயில்லை.
அதே
போலத்தான் இருக்கிறார் அவர்களின் அரசியல் தேர்வாக விளங்கும் ஜெயலலிதாவும்!
தமிழ்நாட்டின் கல்விச்சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனை வழங்குவதற்காகச் சிறந்த
கல்வியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு நிறுவப்பட்ட ‘முத்துக்குமரன் குழு’ அளித்த
பரிந்துரைகள் மொத்தம் 109 இருக்கின்றன. அவற்றில் முதன்மையான சில பரிந்துரைகளை
நிறைவேற்றினாலே தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப்
பள்ளியிலேயே விரும்பிச் சேர்க்கும்படிச் செய்யலாம். கல்வி பற்றி முடிவெடுக்க
வேண்டிய தகுதி உள்ளவர்களான அவர்களுடைய அந்தப் பரிந்துரைகளையெல்லாம் திரும்பிக்
கூடப் பார்க்காமல், மக்கள் விரும்புகிறார்கள் என்பற்காக ஆங்கிலவழிக் கல்வியைக்
கொண்டு வர முனையும் ஜெயலலிதாவின் போக்கு, துறை சார்ந்த அறிஞர்களின் கருத்தை
மதிக்காமல் தானாக அந்தத் துறை பற்றி ஒரு முடிவுக்கு வரும் தமிழ்நாட்டுப் படித்த
மக்களின் () பிரதிநிதிதான் அவர் என்பதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது!
சரி,
அப்படியே இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் சேரும் பிள்ளைகளின்
எண்ணிக்கை உயருமா என்று கேட்டால்... வாய்ப்பேயில்லை! ஏனெனில், பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கு ஆங்கில மோகம் மட்டும்
காரணமில்லை. அரசுப் பள்ளிகளின் தரக்குறைவும் மிக முதன்மையான காரணம்!
- 10,714 ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. (சான்று: http://crsttp.blogspot.in/2012/12/8718-10714.html). இது முதல்வருக்குத் தெரியுமா?
- 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதத்தையே தாண்டக்கூடாது என்கிறது முத்துக்குமரன் குழு அறிக்கை. ஆனால், மொத்தப் பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் என்ற ஓராசிரியர் பள்ளிகள் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கின்றன! தனியார் பள்ளிகள் எத்தனை இப்படியோர் அவலநிலையில் இருக்கின்றன?
- ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கூட வெளியில் அனுப்ப அஞ்சக்கூடிய அளவுக்கு இன்று பாலியல் குற்றங்கள் தலைவிரித்தாடும் சூழலில், பெண் மாணவர்கள் தயக்கமின்றிப் பள்ளிக்கு வரும் அளவுக்கு எத்தனை அரசுப் பள்ளிகளில் போதுமான கழிப்பிட வசதி இருக்கிறது?
- மேசைகள், கரும்பலகைகள் போன்ற அடிப்படை வசதிகள் எத்தனை அரசுப் பள்ளிகளில் நல்ல முறையில் இருக்கின்றன?
- விளையாட்டுப் பொருட்கள், பரிசோதனைக் கூடம், நூலகம் போன்றவை எத்தனை அரசுப் பள்ளிகளில் இடம்பெற்றிருக்கின்றன?
இப்படி,
அடிப்படையிலேயே ஆறு வண்டிக் கோளாறுகள் இருக்கும்பொழுது, அவற்றைச் சரிசெய்யாமல்,
எடுத்த எடுப்பில் கல்விமுறையில் கைவைப்பது என்பது முகக் காயத்துக்கு முதலில்
மருந்து தடவாமல் உதட்டுக்குச் சாயம் பூசும் அறிவாளித்தனம்!
மாறாக,
வசதி வாய்ப்புகளும், தரமான கல்விச்சூழலும் இருந்தால் கண்டிப்பாகப் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்குக்
கண்கூடான எடுத்துக்காட்டு உடுமலை அருகேயுள்ள ‘சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி’. இப்பள்ளியில் கழிப்பிட வசதி முதலான அனைத்து அடிப்படை வசதிகளும்
நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு, விளையாட்டு, இசை, கணினி போன்ற பிற
பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், தமிழ்நாட்டின் மற்ற அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வரும் இந்நாளில் இந்தப் பள்ளியில் மட்டும் அஃது
அதிகரித்துள்ளது! (சான்று: http://kalvimalar.dinamalar.com/tamil/news-details-eng.asp?cat=1&id=14396).
சரி,
அப்படியே ஒரு பேச்சுக்காக, ஆங்கிலவழிக் கல்வி அளித்தால் அரசுப் பள்ளியில் மாணவர்
சேர்க்கை அதிகரிக்கும் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அரசு உடனே ஆங்கிலவழிக்
கல்வியைத் தொடங்கி விடுவதா? அப்படிப் பார்த்தால், தனியார் பள்ளிகளில் மக்கள்
தங்கள் பிள்ளைகளை விரும்பிச் சேர்க்க முக்கியக் காரணம், தனியார் பள்ளி மாணவர்கள்
பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறுவது. அந்த மதிப்பெண் ரகசியம்
வேறொன்றுமில்லை, தனியார் பள்ளிகள் அனைத்தும் 9ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே 10ஆம்
வகுப்புப் பாடங்களையும், 11ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே 12ஆம் வகுப்பு பாடங்களையும்
மாணவர்களுக்கு நடத்தி விடுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் ஓராண்டு படிக்கும்
பாடங்களை, தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் ஒன்றரை ஆண்டுகள் படிக்கிறார்கள்.
அவர்கள் ஊறும் அதே குட்டையில், அவர்களை விட ஆறு மாதங்கள் இவர்கள் கூடுதலாக
ஊறுகிறார்கள் (). இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான பாடமுறை என்றாலும்
இதனால்தான் சென்னை முதலான மாநகரப் பள்ளி மாணவர்களால் மட்டும் தொடர்ந்து மிக மிக
அதிகமான மதிப்பெண்களைப் பொதுத்தேர்வில் அள்ள முடிகிறது என்பது மாநிலமறிந்த
ரகசியம்.
அப்படியானால்,
இன்று பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வியை
அறிமுகப்படுத்தும் அரசு, நாளைக்கு, இதே மக்களால் பெரிதும் விரும்பப்படும் இந்தச்
சட்டவிரோதமான கல்விச்சேவையையும் (!) வழங்குமா? மக்கள் விரும்புகிறார்கள்
என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? செய்ய முடியுமா? செய்யத்தான்
முன்வருவாரா முதல்வர்?
இதில்
இன்னொரு நகைமுரண் என்னவென்றால், ஜெயலலிதாவின் தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையைக்
கண்டித்து முதல் ஆளாக அறிக்கை விட்டிருக்கிறார், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியைத்
தனியார் கையில் ஒப்படைத்து, இந்த எல்லாத் தமிழ், கல்விச் சீர்கேடுகளுக்கும்
அடிக்கல் நாட்டிய கருணாநிதி!
(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).
படம்: நன்றி http://www.keetru.com/
**********
இந்தப் படைப்பு பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!
தமிழில் கருத்திட மென்பொருள் இல்லையா? கீழே 'தமிழ்ப் பலகை'யில் உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்தில் தட்டெழுதினால் (எ.டு: Nandraaga irukkiradhu), அது தமிழில் உருமாறும். அதை அப்படியே கருத்துப் பெட்டியில் இட்டு உங்கள் செம்மையான கருத்துக்களை அனுப்பலாம்! நேரமில்லையா? கூகுள்+, முகநூல் பொத்தான்களை அழுத்தியும், திரட்டிகளின் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கியும் உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம்! இவை எவற்றிலும் நீங்கள் உறுப்பினர் இல்லையா, 'எண்ணம்' எனும் தலைப்பில் இருக்கும் பொத்தான்களில் ஒன்றை அழுத்தி உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அவரது சமச்சீர் கல்விக்கு கடைசிவரை கடும் எதிர்ப்பு அவர் யார் எனக் கூறியது.வெளிப்படையாக, வெட்கமில்லாமல் 2102 அவ்வை விருது ’இளமையில் கல்’ என்றுகூறிய அவ்வையின் அறிவுரையை நடைமுறைப்படுத்த போராடிய சமச்சீர் கல்வி போராளி திருமதி ஒய்.ஜி.பி.க்கு வழங்கியவரே இவர்.
பதிலளிநீக்குஅதுமட்டுமா ? 2103 அவ்வை விருது புற்றுநோய் மருத்துவமனைத் தலைவி மருத்துவர் சாந்தா தமிழின எதிரி கூடன்குள அணு உலை ஆதரவாளர் போன்ற தகுதிகள் உள்ளவருக்கு பரிசு வழங்கி, இன்று தமிழ் வழிக் கல்விக்கு சாவு மணி அடித்தவரே இந்த அணுத்தாய்,புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை முகம்.
இதை விடக் கேவவலமாக அய்யாவும் நடந்திருப்பார் .நல்லவேளை அப்பழியை இவர் ஏற்றார் .
உங்கள் கருத்துக்கு நன்றி! ஆனால், அதென்ன, கடைசியில் ஐயாவுக்குப் பதிலாக இந்தப் பழி அம்மா மேல் விழுந்ததில் உங்களுக்கு அவ்வளவு ஆறுதல்!
நீக்கு5000 ஆண்டுக்குமுன் ஆர்யா பட்டர் இந்திய வந்தனர் . ராஜாஜி கூரியபடி ஒரு செம்பு தண்ணிரில் கழுவி விட்டு ஆட்சிபுரிந்தனர்- அந்தணர் இன்றும் உண்டு
நீக்குஇருக்கட்டுமே! அதனால் என்ன? அதே அந்தண இனத்தைச் சேர்ந்த உ.வே.சா-தான் அழிவின் விளிம்பிலிருந்த பல தமிழ் நூல்களைக் காப்பாற்றி நமக்களித்தார். அவர் இருந்திராவிட்டால் தமிழர் பெருமை எனக் காட்ட எதுவும் இருந்திருக்காது.
பதிலளிநீக்கு