நடிகர்கள்
நாடாளலாமா, அரிதாரம் பூசுபவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பவையெல்லாம் உலகின்
வேறெந்த மக்களாட்சி நாட்டிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேடு
கெட்ட கேள்விகள்! மக்களாட்சி நாடு ஒன்றில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு
வரலாம்; அல்லது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை அளிக்கும் நாடுதான்
மக்களாட்சி நாடாகும்! இதில், நடிகர்கள் வரலாமா, நாட்டுப்புறக் கலைஞர்கள் வரலாமா,
பெட்டிக் கடைக்காரர்கள் வரலாமா, பிரம்புக் கூடை பின்னுபவர்கள் வரலாமா எனவெல்லாம்
தனித் தனியாகக் கேள்வி எழுப்ப இடமேயில்லை.
அதே
நேரம், திரைப்படத்தில் நடிக்க வருவதையே ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான குறுக்கு
வழியாகக் கருதும் மடத்தனமும் உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்க முடியாது என்பதை நாம்
ஒப்புக் கொண்டேயாக வேண்டும்!
திரைப்படம்,
அரசியல் இரண்டும் இரண்டு வெவ்வேறு துறைகள். இதற்கான தகுதிகள் வேறு, அதற்கான
தகுதிகள் வேறு. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்வதில் நம்
அரசியலாளர்களும், நடிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே இல்லை. விளம்பரம்,
புகழ், செல்வாக்கு இம்மூன்றையும் - ஆம், இந்த மூன்றே மூன்றையும் – உடனே தருபவை
என்பதைத் தவிர இந்த இரண்டு துறைகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது.
அப்படியிருக்க, எந்தத் தகுதியின் அடிப்படையில் நம் நடிகர்கள் அரசாட்சிக் கனவு
காண்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கென ஒரு தகுதி வேண்டாமா?
திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் நீங்கள் என்னென்ன வகைகளில், எப்படியெல்லாம்
பயிற்சி எடுத்து உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்? தனியாகப்
பயிற்சியாளர்களை வைத்துச் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள், உடற்பயிற்சி கற்றுக்
கொள்கிறீர்கள், ஆடக் கற்றுக் கொள்கிறீர்கள், அன்றாட உணவுமுறை எப்படி இருக்க
வேண்டும் என்பது வரை நுணுக்கமாகக் கேட்டு அறிந்துகொண்டு கடைப்பிடிக்கிறீர்கள்!
ஆனால், அரசியலுக்கு வருவதற்கு இப்படி என்ன பயிற்சி எடுத்தீர்கள்? வில்லனைக்
குத்துவதற்கு மடக்குவது போல் ஐந்து விரல்களையல்ல, ஒரே ஒரு விரலை மடக்குங்கள்
பார்க்கலாம் இந்தக் கேள்விக்கு!
பத்தாயிரம்
ஆண்டுகால வரலாறும் பத்துக் கோடி மக்களும் கொண்ட தேசிய இனம் ஒன்றை ஆள, அதற்கான
பன்னாட்டுப் பிரதிநிதியாக அமர ஆடவும், பாடவும், நடிக்கவும், பேசவும் தெரிந்தால்
போதுமா? வேறெந்தத் தகுதியும் வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!
எம்.ஜி.ஆர்
வரவில்லையா என்றால், அவர் என்ன சும்மாவா வந்தார்? தகுதிகளை வளர்த்துக்கொண்டு
வந்தார். தன் திருமண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ, தன் திரைச்
செல்வாக்குக்கும் முதல்வரின் அரசியல் செல்வாக்குக்கும் இடையிலான உரசல் காரணமாகவோ
(ரஜினி), தன் படத்தை வெளிவர விடாமல் தடுத்ததற்காகக் கோபப்பட்டோ ஓர் இரவில்
முடிவெடுத்து அவர் அரசியலுக்கு வரவில்லை. கருணாநிதி தன்னை முதுகில் குத்தி,
கட்சியிலிருந்து நீக்கித் தனிக் கட்சி தொடங்க வேண்டி வந்ததற்குப் பல ஆண்டுகள்
முன்பிருந்தே அவர் அரசியலில் இருந்தார். நடிகனாக ஓரளவு நிலைபெற்றிருந்த புதிதிலேயே
தி.மு.க-வில் சேர்ந்தார். திரையுலகில் தனக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு முழுவதையும்
திராவிடக் கொள்கைகளை, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பவே
பயன்படுத்தினார். அண்ணாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபொழுது கூட அவர்
தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடாமல் கருணாநிதியைத்தான் அந்த அரியணையில் அமர
வைத்து அழகு பார்த்தார்!
இப்படி,
ஆண்டுக்கணக்கில் அரசியல் அனுபவம், நேர்மையான அரசியல் தலைவர்களுடனான தொடர்பினால்
விளைந்த அரசியல் - சமூகத் தெளிவு, பொதுமேடைகளில் பல முறை மக்களை நேரடியாகச்
சந்தித்ததால் உண்டான பொதுக் கருத்தை அறியும் திறன், மக்கள் – சமூக – இனப்
பிரச்சினைகள் பற்றிய புரிதல், தலைவர் பதவியை விரும்பாத அரசியல் பக்குவம், பொதுநல
நோக்கு முதலான பல தகுதிகள் கொண்ட அவர் எங்கே? அடுத்த எம்.ஜி.ஆர் ஆகக் கனவு காணும்
நம் இன்றைய நடிகர்கள் எங்கே? இவற்றுள் எந்தத் தகுதி இவர்களுக்கு இருக்கிறது?
உடனே,
இப்பொழுது பதவியில் இருப்பவர்களுக்கும், இதுவரை அந்தப் பதவியில்
இருந்தவர்களுக்கும் மட்டும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றனவா எனக் கேட்கலாம்.
இல்லைதான்! அதற்காகத்தானே மாற்று (Replacement) தேடுகிறோம்?
அடுத்து வருபவர்களும் அவர்களைப் போலவே தகுதியில்லாதவர்களாக இருப்பதா?
சிந்தியுங்கள் மக்களே!
“தகுதி...
தகுதி... தகுதி! அப்படி என்னதான் தகுதி வேண்டும் என்கிறாய்” எனக் கேட்கிறீர்களா?
சரி! தமிழர்களின் தலைவராக, தமிழ்நாட்டு முதல்வராக வருவதற்கான அடிப்படைத் தகுதிகள்
என்ன? நம் நடிகர்களுக்கு அந்தத் தகுதிகள் இருக்கின்றனவா? மேலோட்டமாக ஒரு
கண்ணோட்டம் விடலாம் வாருங்கள்!