சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!
பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.
ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!
பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.
முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.
அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!
காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!
இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை: