பரதேசி என்றதும்
எல்லாருக்கும் ஏழ்மையான ஒருவரின் தோற்றம் நினைவுக்கு வரும்; சிலருக்கு இயக்குநர் பாலா அவர்களின் திரைப்படம் நினைவுக்கு வரலாம்;
ஆனால் பதிவர்களான நம் நினைவுக்கு வருபவர் பரதேசி @
நியூயார்க் என்கிற வலைப்பூவை நடத்தும் ஆல்ஃபிரட் தியாகராசன் அவர்கள்.
அமெரிக்க வாழ் தமிழரான ஆல்ஃபி அவர்கள் ஏறக்குறைய
பத்து ஆண்டுகளாக நகைச்சுவை, வாழ்வியல், சுற்றுலா, கவிதை எனப் பலதரப்பட்ட பதிவுகளை
எழுதி வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவராகவும் திகழ்வதில் வியப்பில்லை.
வலைப்பூவில் மட்டுமே மணம் வீசிக் கொண்டிருந்த
தன் எழுத்துக்களை நூலாய் வெளியிட ஆர்வம் கொண்டு ஆல்ஃபி அவர்கள் நம்
பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன்
அவர்களை நாட, முத்துநிலவன் ஐயா என்னைக் கை காட்ட, அப்படித்தான் முகிழ்த்தது எங்கள்
இருவருக்குமான நட்பு.
திருத்தப் (proof
reading) பொறுப்பை நானும், தொகுக்கும் பணியைத் தோழர் கோமதி அவர்களும் அட்டை
வடிவமைப்பை நண்பர்கள் சந்தோஷ்,
ஜெகதீஷ் ஆகியோரும் ஏற்றுக் கொள்ள வண்ணமயமான வானவில் போல இதோ ஆல்ஃபி அவர்களின் ஏழு
நூல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் பரதேசி, இலங்கையில் பரதேசி, மெக்சிகோவில்
பரதேசி, இஸ்தான்புல்லில் பரதேசி, போர்ட்டோ ரிக்கோவில் பரதேசி, டெக்சாசில் பரதேசி
எனத் தான் சுற்றிப் பார்த்த துய்ப்புகளைப் (experience) பற்றி ஆறு
சுற்றுலா நூல்களையும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை பற்றி நியூயார்க்
பக்கங்கள் (பாகம்-1) எனும் ஒரு வாழ்வியல் நூலையும் இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளார்
ஆல்ஃபி அவர்கள்.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35ஆவது ஆண்டு விழாவில் ஓர் இணை அமர்வாக
ஆல்ஃபி அவர்களின் இந்நூல்களைப் புகழ் பெற்ற எழுத்தாளரும் தென்சென்னைத் தொகுதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்
வெளியிட சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற மக்களவை
உறுப்பினருமான மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக் கொண்டது என்றென்றும்
இனிக்கும் நிகழ்வு!
உங்கள் பதிவுலக நண்பர் எழுதிய இந்நூல்களை, பதிவுலகில்
உங்கள் இன்னொரு நண்பனான எனக்கும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான
இந்நூல்களைப் படித்து மகிழுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்!
இதில் ஒவ்வொரு சுற்றுலா நூலிலும் அந்தந்த
நாடுகளையே நாம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வெறும் இடங்களைச் சுற்றிக்
காட்டுவதாக மட்டுமின்றி அந்த இடங்களின், நாடுகளின் வரலாற்றையே மிகச் சில
பக்கங்களில் மணிச் சுருக்கமாகத் தரும் ஆல்ஃபியின் எழுத்துக்களில் இதுவரை அறியாத பல
புதிய, அரிய தகவல்களை நாம் சுவைக்க முடிகிறது. மேலும் மொழி தெரியாமல், பழக்க வழக்கம்
புரியாமல் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கிக் கொண்டு ஆல்ஃபி படும் அவதிகளை அவர்
விவரித்துள்ள விதம் நம்மை விலாநோகச் சிரிக்க வைக்கிறது.
‘சீனாவில் பரதேசி’ நூல் இவற்றில் உச்சம்!
இது வெறும் சீனா பற்றிய சுற்றுலா நூல் மட்டுமில்லை அந்நாட்டைச் சுற்றிப் பார்க்க விழையும்
தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டிய வழிகாட்டியும் கூட!
அதே போல் ‘நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1)’
நூல் அமெரிக்கா செல்லத் துடிக்கும் தமிழர்களுக்கான கையேடு! அங்கு நிலவும்
தட்பவெப்பச் சூழல், விந்தையான பழக்க வழக்கங்கள், மேலைநாட்டு வாழ்க்கைப் பாணி, மண்
மணத்தை நினைத்துப் பார்க்கும் தமிழர் ஏக்கங்கள், கடல் தாண்டியும் தாய்மொழி
வளர்க்கும் தமிழர் நிகழ்ச்சிகள் என அயல்நாட்டு வாழ்வியலையும் அது ஏற்படுத்தும்
தாக்கங்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் ஒரு தமிழர் பார்வையில் நகைச்சுவை கொப்பளிக்க
விவரிக்கும் இந்நூல் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் தவம் கிடக்கும் தமிழர்கள்
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
அமேசானில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களை நீங்கள்
மின்னூல் (E-Book), அச்சுநூல் என உங்கள் வசதிக்கேற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும்
வாங்கலாம். இதோ அதற்கான இணைப்பு - https://amzn.to/3Jvafb2.
படித்துப் பாருங்கள்! கூடவே உங்கள் மேலான
கருத்துக்களை அந்தந்த நூலுக்கான அமேசான் பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள்!