அன்பார்ந்த பதிவுலக உறவுகளே!
கூகுள் நிறுவனத்தின் பீட்பர்னர் (Feedburner) தன் மின்னஞ்சல் சேவையை வரும் சூலை 2021 முதல் நிறுத்தவுள்ளது என்கிற வருத்தமான செய்தியோடு வந்துள்ளேன்!
அதாவது, வலைப்பூவில் நாம் ஒவ்வொரு முறை புதிதாகப் பதிவு வெளியிடும்பொழுதும் அது மின்னஞ்சல் வழியே நம்மைப் பின்தொடரும் நேயர்கள் அனைவருக்கும் சென்று சேரும் இல்லையா? அந்தச் சேவை இம்மாத இறுதிக்குப் பின் கிடையாது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்! விரிவான அறிவிப்பைக் காண அழுத்துங்கள் இங்கே!
மின்னஞ்சல் சேவை மட்டும்தான் நிறுத்தப்படுகிறதே தவிர நம் வலைப்பூக்களுக்கான ஊட்டங்கள் (blog feeds) தொடர்ந்து செயல்படும் என்பதாகத்தான் பீட்பர்னர் அறிவித்திருக்கிறது. ஆயினும் இது அதிர்ச்சியான செய்திதான்!
பேசுபுக்கு, துவிட்டர், வாட்சப் என எத்தனை சமுக ஊடகங்கள் வந்தாலும் அத்தனைக்கும் ஆணிவேர் மின்னஞ்சல்தான். நாம் புதிதாக ஒரு பதிவு வெளியிட்டதும் வேறு எங்கிருந்து நேயர்கள் வருகிறார்களோ இல்லையோ, மின்னஞ்சல் வழியே தொடர்பவர்களில் கட்டாயம் சிலராவது வருவார்கள். அவர்கள்தாம் நம் நிலையான நேயர்கள் என்றால் கூட மிகையில்லை. அப்பேர்ப்பட்ட சேவை நிறுத்தப்படுவது கண்டிப்பாகப் பேரிழப்புதான்! ஆனால் ஓர் ஆறுதலான செய்தி என்னவெனில் இஃதொன்றும் ஈடு செய்ய முடியாத இழப்பில்லை என்பதுதான்!
ஆம் நண்பர்களே! பீட்பர்னர் போலவே மின்னஞ்சல் சேவை வழங்கும் வேறு இணையத்தளங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொள்வதன் மூலம் நாம் தொடர்ந்து நம் நேயர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதிவுகளை அனுப்ப முடியும்!
ஆனால் அதற்கு முன் இப்பொழுது நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது, ஏற்கெனவே பீட்பர்னர் மூலம் நம்மோடு இணைந்திருக்கும் நேயர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தரவிறக்கிக் (download) கொள்வதுதான். அதை எப்படிச் செய்வது என்பதை ஒரு சிறிய காணொளி மூலம் கீழே விளக்கியிருக்கிறேன்.
இதை முதலில் செய்து விடுங்கள்! பின்னர் வேறு மின்னஞ்சல் சேவைக்கு எப்படி மாறுவது என்பதை விரிவான பதிவாக / காணொளியாகத் தனியே காண்போம்!
இதற்கெனவே புதிதாக யூடியூபு வலைக்காட்சி (YouTube Channel) தொடங்கியுள்ளேன் நண்பர்களே! காணொளி விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் காணொளியின் வலக்கீழ் மூலையில் (right bottom corner) உள்ள ‘அகச் சிவப்புத் தமிழ்’ச் சின்னத்தின் மீது காட்டியைக் (cursor) கொண்டு சென்று, அங்கே தோன்றும் ‘SUBSCRIBE’ பொத்தானை அழுத்தி வலைக்காட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள்! அடுத்த கட்ட விளக்கம் உங்களுக்குத் தானாக மின்னஞ்சலில் வந்து சேரும்!
படம்: நன்றி பீட்பர்னர்.