எப்படி இருக்கிறீர்கள் அனைவரும்?
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா?
இந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆம்! நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்! 💗
நிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம்! வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம்! அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.
இனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி நம் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம். ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.
இப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்! நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்!
இதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு! 👇