தருமபுரியின் இளவரசன்-திவ்யா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடக் கதையாகி விட்டது.
போதாததற்கு, தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துக்களையும் வன்முறைகளையும் பரப்ப இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும் வயதிலேயே பிள்ளைகள் காதலிப்பது போல் படம் எடுத்து அதையே பெரிய காப்பியம் போலப் பீற்றிக் கொண்டது நம் திரையுலகம். இன்று அதுவே, படிக்கும் இளைஞர்கள் கையிலிருந்து நூலைப் பிடுங்கி விட்டு “மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டு” என சாதித் துருவேறிய அரிவாளைத் திணிக்கிறது!
இப்படிக் காதலுக்கு எதிராகச் செயல்படும் அனைவருமே அதற்குப் பண்பாடு, ஒழுக்கம், கற்பு போன்றவற்றைக் காரணம் காட்டுகிறார்கள்.
அப்படியானால் காதல் தமிழ்ப் பண்பாடு இல்லையா?...
காதலிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா?...
காதல் திருமணம் கற்புநெறிக்கு எதிரானதா?...
எனும் கேள்விகள் இதனால் இயல்பாகவே எழுகின்றன!
இவற்றுக்கு விடை காணச் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘கலித்தொகை’ நமக்கு உதவும் என நினைக்கிறேன்.
சங்க இலக்கிய நூல்கள் மொத்தம் பதினெட்டு இருந்தாலும் அவற்றுள் பண்டைக் காலத் தமிழர்களின் ஒழுக்க வழக்கங்கள், மரபுகள், இயல்புகள், அந்தக் காலத்தின் தன்மை, இயற்கைச் சூழல் என அனைத்தையும் அறியச் சிறந்த நூலாகப் பரிந்துரைக்கப்படுவது கலித்தொகைதான்.
அப்படிப்பட்ட தமிழர் காலப்பெட்டகத்திலிருந்து (time capsule) இதோ ஒரு காட்சி.