நேற்று நிதிநிலை அறிக்கைத் தாக்கலின்பொழுது நாடாளுமன்றத்தில் சுவையான ஒரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
தங்கள் ஆட்சியின் வரிமுறை பற்றி விளக்க முயலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூற்றிலிருந்து "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே..." எனத் தொடங்கும் பாடலை மேற்கோளாகக் காட்டி அதற்குப் பொருள் என்ன என்று கேட்கிறார். உரையின் தொடக்கத்தில் பாடலை இயற்றியவரின் பெயரை அவர் தவறாகப் படித்தபொழுது திருத்திய தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடலுக்குப் பொருள் கூறத் தெரியாமல் விழிக்க அவை சிரிக்கிறது. எதிர்வினையாகச் சிரித்தபடியே தலையாட்டுகிறார்கள் மாறனும் ராசாவும். இதோ நிகழ்வின் காணொலி கீழே.
இந்தக் காணொலி வாட்சாப்பில் தற்பொழுது பரவி வருகிறது. இதைப் பார்ப்பவர்கள் எல்லாரும் பொதுவாக என்ன நினைப்பார்கள்?
"இந்தத் தி.மு.க-காரர்கள் அன்று பதவியேற்பு விழாவின்பொழுது பெரிதாகத் ‘தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க...' என்று முழங்கினார்கள்; அதற்கு எதிராக ‘பாரத மாதா கீ சே’ என்று கத்திய பா.ஜ.க-வினரைத் தமிழின் எதிரிகள் என்று கரித்துக் கொட்டினார்கள். இன்றோ அதே பா.ஜ.க-வின் அமைச்சர் ஒரு புறநானூற்றுப் பாடலுக்குப் பொருள் கேட்டால், அது கூடத் தெரியாமல் விழிக்கிறார்கள்! அவருக்குத் தெரிந்த தமிழ் கூட இவர்களுக்குத் தெரியவில்லையே! இவர்களா தமிழர்கள்? இவர்களா தமிழ்ப் பற்றுள்ளவர்கள்?" - இப்படித்தான் நினைப்பார்கள் பெரும்பாலோர். ஆனால் கொஞ்சமாவது ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்வின் உண்மையான கோணம் புரியும்.
ஒரே ஒரு தமிழ்ப் பாடலை மனப்பாடம் செய்து வந்து ஒப்பித்து விடுவதால் உடனே
நிர்மலா சீதாராமன் பெரிய தமிழ்ப் பற்றாளராகி விட முடியுமா? அல்லது அதற்குப்
பொருள் கூறத் தெரியாததால் தி.மு.க., உறுப்பினர்கள் தமிழர்களின் பிரதிநிதி
எனச் சொல்லிக் கொள்ளத் தகுதியில்லாதவர்களாகி விடுவார்களா? கேட்கவே சிறுபிள்ளைத்தனமாக இல்லையா இது?
கீழடியைத் தோண்டினால் எங்கே தமிழின் தொன்மை வெளியே வந்து விடுமோ என்று அஞ்சி அதன் ஆய்வாளரையே மாற்றி, வேண்டுமென்றே அவர் தோண்டிக் கொண்டிருந்த திசைக்கு எதிர்த் திசையில் ஆராய்ச்சியை நடத்த உத்தரவிட்ட இவர்களுக்கு இன்று திடீரெனத் தமிழ் மீது பற்று பொத்துக் கொள்ளக் காரணம் என்ன? நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வழங்கிய செருப்படிதான் காரணம் வேறென்ன?
கேரளாவைத் தவிர இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் காவிக் கொடி பறக்கும்பொழுது தமிழ்நாடு மட்டும் இவர்களைக் கால் தூசியாகக் கூட மதிக்காமல் உதறி எறிந்து விட்டது. மாறாக பா.ஜ.க-வின் முதன்மை எதிரியான தி.மு.க-வைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இவர்கள் இங்கே கால் பதிப்பதாக நினைத்தாவது பார்க்க வேண்டுமானால் முதலில் இங்கே முழுக்கப் பரவிப் படர்ந்து நிற்கும் தி.மு.க-வைத் தமிழ்க் கட்சி இல்லை எனச் சித்தரித்தாக வேண்டும். அதற்காக இரவோடிரவாக ஒரு புறநானூற்றுப் பாடலைப் பிசிராந்தையார் பெயரைக் கூடச் சரியாக மனப்பாடம் செய்யாமல் வந்து கக்குகிறார் நிதியமைச்சர்.
தெரியாமல்தான் கேட்கிறேன், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு தமிழ்ப் பாடலுக்கே பொருள் தெரியவில்லையா என்பது போல் கைதட்டிச் சிரிக்கிறார்களே ‘செய் சிரீராம்’ கூட்டத்தினர்? அவர்களில் எத்தனை பேருக்கு இராமாயணப் பாடலை சமற்கிருதத்தில் சொன்னால் உடனே பொருள் கூறத் தெரியும்? ஆக, இதெல்லாம் ஒரு பொருட்டில்லை.
தமிழ் மக்கள் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் சமூக அக்கறை, பொது அறிவு, மக்கள் பிரச்சினைகள் பற்றிய புரிதல், தொகுதி மக்களுடனான நெருக்கம் என அரசியல் சார்ந்த காரணிகளை முன்வைத்துத்தானே தவிர அவர்களின் தமிழ்ப் புலமையை வைத்து இல்லை என்பதை முதலில் பா.ஜ.க-வினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருக்கத் தமிழர் பிரச்சினைகளையும் தேவைகளையும் தெரிந்தவர்கள்தாம் தேவையே தவிர தமிழ்ப் புலவர்கள் இல்லை. அப்படிப் புலவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க இது பட்டிமன்றமும் இல்லை; ராமன் பெயரைச் சொன்னவுடன் வாக்குகளைக் கொண்டு வந்து கொட்டி விடும் வடநாட்டினரைப் போல் புறநானூறும் அகநானூறும் சொன்னால் உடனே மயங்கி வாக்குகளைக் கொட்டி விடும் அளவுக்குத் தமிழர்கள் முட்டாள்களும் இல்லை.
மாறாக, நேற்று வரை தமிழை நீச பாசையென்றும் பைசாச பாசையென்றும் பேசி வந்த இவர்கள் இன்று அதே மொழியின் பாடலை இவ்வளவு பெருமிதமாக, எனக்கும் இந்த மொழி தெரியும் பார்த்தாயா என்கிற மதர்ப்பு முகத்தில் தெறிக்கத் தெறிக்க முழங்குகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் எதிரே வீற்றிருக்கும் அந்த 37 பேர். அதே இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாராவது உட்கார்ந்திருந்தால் எனக்கும் தமிழ் தெரியும் என இவர்கள் இவ்வளவு மதர்ப்பாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்திருக்குமா?
இந்தக் கடைசிக் கேள்வி ஒன்றைச் சிந்தித்தால் கூடப் போதும்! ராசாவும் மாறனும் அப்படிச் சிரித்ததன் பொருள் என்ன என்பது புரியும். அட, புறநானூற்றுக்கே பொருள் விளக்கும் அமைச்சருக்கு இந்தப் பொருளை நாம் விளக்க வேண்டுமா என்ன!
படம், காணொலி: நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி
படம், காணொலி: நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி
✎ ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்
✎ இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
✎ தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!
பதிவின்
கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே! கூடவே, உங்கள் செம்மையான
கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க
விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
//தமிழ் மக்கள் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் சமூக அக்கறை, பொது அறிவு, மக்கள் பிரச்சினைகள் பற்றிய புரிதல், தொகுதி மக்களுடனான நெருக்கம்// - அப்படியா? அப்படி யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அப்போ இந்த தகுதிகள் இல்லாதவரா காமராசர்?
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கு முதலில் நன்றி! உங்களுக்கான மறுமொழி கீழே!
நீக்கு//அப்போ இந்த தகுதிகள் இல்லாதவரா காமராசர்?// - ஒரு முறை தோற்கடித்துவிட்டால் காமராசரை மக்கள் தகுதியில்லாதவராகக் கருதியதாகப் பொருளாகி விடுமா? அப்படியானால் அதற்கு முன் காமராசர் வென்ற தேர்தல்களில் அவருக்கு வாக்களித்தவர்கள் யார், வெளிநாட்டுக்காரர்களா? மக்கள் எப்பொழுதும் அந்தந்தக் காலக்கட்டத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதைப் பார்த்துத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியாவின் மற்ற பல மாநிலங்களை விடத் தமிழ்நாடு பல வகைகளிலும் முன்னேறியிருப்பதே அதற்குச் சான்று.
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி பார்த்திபன் அவர்களே! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு. தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களையும் சென்றடைய சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்துங்கள்!
நீக்குஅலசல் நன்று...
பதிலளிநீக்குஎனது தளத்தில் கடந்த 12 பதிவுகளும் குறள் வழியாக அரசியல் குறித்தே... அவ்வாறு எழுத ஆரம்பிக்கும் போது, முதல்முதலில் பிசிராந்தையார் பாடலும் உதவி புரிந்தன... விரிவாக அதைப் பற்றி எழுதுகிறேன்...
அடடே! எப்பொழுதும் குறளை மேற்கோள் காட்டித்தான் எழுதுவீர்கள். இப்பொழுது புறநானூறுமா? கட்டாயம் வருகிறேன் ஐயா!
நீக்குஅவங்க நம்ம வடமொழி படிக்கவைக்க தலையால தண்ணி குடிக்கிறாங்க. நாமோ அசால்டா அவங்கள தமிழ் படிக்க வச்சிட்டோம். அதானே சகா!!!
பதிலளிநீக்குஅட, இதில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா?!
நீக்குஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகா! ஆக கருத்துரைப்பதில் உங்களுக்கு இருந்த சிக்கல் சரியாகி விட்டது இல்லையா?
நீக்கு