.

திங்கள், ஏப்ரல் 18, 2016

தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!


Tamilnadu BJP leaders

மிழ்நாட்டில் தேசியக் கட்சி ஒன்று - அதுவும் பா.ஜ.க - ஆட்சிக்கு வருவது என்பதெல்லாம் தமிழிசை சௌந்தர்ராஜனின் கனவில் கூட நடக்காத கதை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், அதற்காகத் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளுக்குச் செல்வாக்கே இல்லை எனப் பொருளாகாது. அதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்தடுத்து அளித்து வரும் ‘பொற்கால’ ஆட்சிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பும், நதிநீர்ப் பங்கீடு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சினைகளில் இவர்கள் அடைந்துள்ள முழுத் தோல்வியும், இதே இடத்தில் தேசியக் கட்சி ஒன்று இருந்திருந்தால் நம் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமோ என்கிற எண்ணத்தை மக்களிடையே அண்மைக் காலமாகத் தளிர் விட வைத்துள்ளன. இந்த அபாயகரமான மூட நம்பிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே, பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகளை மொத்தமாகப் பார்ப்போம்.

மாற்றுத் தேர்வா பா.ஜ.க?

இங்கே ஏற்கெனவே அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்று விளங்கும் அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் விட்டுவிட்டு இன்னொரு கட்சிக்கு நாம் வாக்களிக்கச் சிந்திக்கிறோம் எனச் சொன்னாலே அதற்கு அடிப்படைக் காரணம்... ஆட்சி மாற்றத்தின் மீதான விருப்பம்! ஆனால், பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதால் அப்படி ஒரு மாற்றம் ஏற்படுமா என்பதுதான் முதல் கேள்வி! எந்த வகையில் பா.ஜ.க-வினர் அ.தி.மு.க, தி.மு.க இரண்டையும் விட மேம்பட்டவர்கள்? அவர்களை விட இவர்கள் ஊழல் செய்வதில் குறைந்தவர்களா? கொள்கைகளில் சிறந்தவர்களா? தமிழர் பிரச்சினைகளில் நிரம்பவும் அக்கறை உள்ளவர்களா?... எதுவுமே கிடையாது! சொல்லப் போனால், அந்த இரண்டு கட்சிகளையும் விட பா.ஜ.க பல விதங்களில் மோசமானது என்பதுதான் உண்மை! அப்படியிருக்க, பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் எப்படி ஏற்பட முடியும் என்பது நாம் முதன்மையாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று!

ஆம்! காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, தமிழ் மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல், ஈழப் பிரச்சினை என எல்லாத் தமிழர் பிரச்சினைகளிலும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தோல்விதான் அடைந்திருக்கின்றன. ஆனால் அதற்குக் காரணம், இவர்கள் மாநிலக் கட்சியாக இருப்பதா அல்லது இந்தப் பிரச்சினைகளில் இவர்களுக்கு மெய்யான அக்கறை இல்லாமல் இருப்பதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

கருணாநிதியின் கண்ணசைவுக்கும், ஜெயலலிதாவின் விரலசைவுக்கும் கட்டுப்பட்டு இந்திய அரசியலே நடைபெற்ற காலங்களும் உண்டு. இவர்கள் ஆதரவில்லாமல் நடுவணரசில் ஆட்சியே நடக்க முடியாது என்கிற அளவுக்கு மிக அண்மைக்காலம் வரை கூட நிலைமை இருந்தது. ஆனால், அந்த இமாலயச் செல்வாக்கை இவர்கள் எந்த அளவுக்குத் தமிழர் நலன் காக்கப் பயன்படுத்தினார்கள்?...

தான் கேட்ட துறையைத் தரவில்லை என்பதற்காக, தன் விருப்பப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க முடியவில்லை என்பதற்காக, மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைக் கால் தூசாக நினைத்து, தன் ஆதரவில் நடைபெற்று வந்த வாஜ்பாய் அரசை 1999-இல் ஒரு குவளைத் தண்ணீரைத் தட்டிவிடுவது போல் கவிழ்த்தவர்தானே ஜெ? அவ்வளவு ஏன், தமிழ் இனத்தின் வரலாறு காணாத பேரழிவான தமிழினப் படுகொலையே தி.மு.க ஆதரவு இல்லாவிட்டால் அடுத்த நொடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்கிற அளவுக்குக் கருணாநிதி இந்திய அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்ததுதானே? அதை மறந்து விட முடியுமா? ஆக, இவர்களின் அக்கறையின்மைதான் தமிழர் பிரச்சினைகள் அத்தனையும் தீராமல் தொடரக் காரணமே தவிர, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மாநிலக் கட்சிகள் என்பதால் இல்லை. எனவே, தேசியக் கட்சி ஒன்று ஆட்சிக்கு வந்தால் மட்டும் தமிழர் பிரச்சினைகளில் திருப்பம் ஏற்பட்டு விடும் என நினைப்பது மாயை. மாநிலக் கட்சியோ தேசியக் கட்சியோ நம் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதுதான் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வை நல்குவதாக இருக்கும். ஆனால், பா.ஜ.க அப்படி உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கட்சியா?...

தமிழர்கள் மீதான பா.ஜ.க-வின் ‘பேரன்பு’!

Modi maintains friendship with Srilanka
நரேந்திர மோடி தன் பதவியேற்பு விழாவுக்கு இராசபக்சவை அழைத்தபொழுது தமிழ்நாடே அதை எதிர்த்தது. ஆனால், தமிழ்நாட்டு பா.ஜ.க-வினரோ “தொடக்கத்திலேயே உறவை வலுப்படுத்தினால்தானே நாளைக்கு ஈழத் தமிழர் உரிமை குறித்து வலியுறுத்த முடியும்? அதற்காகத்தான் மோடி இப்படி ஒரு அரசத்தந்திர முடிவை மேற்கொண்டிருக்கிறார்” என மோடியைக் கூடக் கேட்காமலே இவர்களாக அள்ளி விட்டார்கள்! ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆனால், தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை மோடி!

நடந்த இனப்படுகொலை தொடர்பாக முந்தைய காங்கிரசு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, 2011ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் முன்பாக வைகோ ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர் நலனுக்காக இலங்கை மீது ஆயுதங்கள் இன்றிப் போர் தொடுப்போம்” என்று அறிவித்தார்! இலங்கை மீது அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத் தடை போடாததைக் கண்டித்துக் குரல் எழுப்பினார்! இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை விடப் போவதில்லை என்று இதே பா.ஜ.க-வினர் அன்று முழங்கினார்கள்! ஆனால், இன்று வரை ஒரு துண்டுத் தாளைக் கூடக் கிழிக்கவில்லை! மாறாக, இலங்கைப் படைகளுக்குப் பயிற்சி உட்பட அத்தனை போக்குவரத்துகளும் இவர்கள் ஆட்சியிலும் செவ்வனே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அட, குறைந்தது இலங்கை அதிபரைச் சந்திக்கும்பொழுது கூட, ஒரு பேச்சுக்காகக் கூட ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்துவதில்லை இந்தியப் பிரதமர்!

சரி, வெளிநாட்டுத் தமிழர்கள் குறித்த இவர்களுடைய நிலைப்பாடுதான் இப்படியென்றால், உள்நாட்டுத் தமிழர் பிரச்சினைகளிலாவது ஒழுங்காகச் செயல்படுகிறார்களா என்றால் அதுவும் கிடையாது. அணு உலைத் திட்டம், சாணவளித் (மீத்தேன்) திட்டம், நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனத் தமிழ்நாட்டையே பாலைவனமாக்கும் அத்தனை திட்டங்களிலும் பா.ஜ.க-வின் நிலைப்பாடும் காங்கிரசின் நிலைப்பாடும் முழுக்க முழுக்க ஒன்றேதான். ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) விவகாரத்திலும், தெரிந்தே பயனற்ற ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து இரட்டை வேடம் போட்டார்கள். போராட்டமோ கோரிக்கையோ தமிழர்கள் எந்த வகையில் குரல் எழுப்பினாலும், எதற்காகக் குரல் எழுப்பினாலும் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நாடு விடுதலையடைந்த அன்று முதல் இன்று வரை தமிழர்களைக் கீழ்ப் பார்வையிலேயே அணுகும் பா.ஜ.க, தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கட்சியா? முதலில் தமிழர்களை மனிதர்களாக மதிக்கிற ஒருவராவது பா.ஜ.க-வில் உண்டா?

The cheap persons who have the full time job to slam the Tamils!சரி, அப்படியே பா.ஜ.க-வை நாம் தேர்ந்தெடுத்தாலும் அதனால் தமிழ்நாட்டின் முதல்வராகப் போவது யார்?... தமிழ்நாடே கொள்ளை போனாலும் கட்சித் தலைமையிடம் கேட்காமல் கருத்துச் சொல்லக் கூட வாய் திறக்காத தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்களா? அல்லது, தமிழர்களைப் ‘பொறுக்கி’கள் என வெளிப்படையாக வசை பாடும் சுப்பிரமணியன் சாமியா? அல்லது, தமிழ்ப் பெண்களை, தமிழ்ப் பெரியவர்களை, தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்துவதையே வேலையாகக் கொண்ட எச்.ராஜாவா? இவர்களில் யார் இங்கே முதல்வரானால் தமிழர் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து திக்குமுக்காடி விடும் என்பதற்காக நாம் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பது? சொல்லுங்கள் நண்பர்களே!

இவ்வளவுக்கும் பிறகும், “பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களிப்பேன்” என்பவரா நீங்கள்? சரி, மூன்றே மூன்று கேள்விகளை உங்களிடம் முன்வைக்கிறேன். அவற்றுக்கு மட்டும் நீங்கள் நேர்மறையாகப் (positive) பதிலளிக்க முடிந்தால் தாராளமாக அக்கட்சிக்கு வாக்களித்துக் கொள்ளுங்கள். நான் வேண்டா எனச் சொல்லவில்லை.

பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க விரும்புவோரிடம் மூன்றே மூன்று கேள்விகள்

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தமிழர் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் தோல்விதான் அடைந்திருக்கின்றன என்றாலும், ஓரளவுக்காவது கண்துடைப்புக்காகவாவது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வந்திருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.

தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ நெய்வேலியிலிருந்து கருநாடகத்துக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி, காவிரித் தண்ணீரை விட்டுத்தான் ஆக வேண்டும் எனக் கருநாடகத்துக்கு நெருக்கடி ஏதும் கொடுத்து விடவில்லைதான். ஆனால், கருநாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்றவற்றையாவது செய்துதான் வருகிறார்கள்...

இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏதுமறியாத் தமிழர்களை விடுதலை செய்யக் கருணாநிதியோ ஜெயலலிதாவோ இதுவரை உள்ளன்போடு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை என்பது முற்றிலும் உண்மை. அதே சமயம், அவர்களைத் தூக்குக் கயிறு இன்னும் நெருங்காமல் இருக்கக் காரணமும் இவர்களேதாம்...

இப்படி, எந்தப் பிரச்சினையையுமே இவர்கள் தீர்க்காவிட்டாலும் இவை எதுவும் தமிழர்களிடமிருந்து ஒரேயடியாகக் கைவிட்டுப் போகாமலிருக்கவும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் இவை தொடர்பாக நாம் தொடர்ந்து நம் உரிமைகளை வலியுறுத்த முடிகிறது. ஆனால், இதே பிரச்சினைகளில் பா.ஜ.க, காங்கிரசு ஆகிய இரு தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது இங்கு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலைமையில், தப்பித் தவறி ஒருமுறை பா.ஜ.க (அல்லது காங்கிரசு) இங்கே ஆட்சியைப் பிடித்துவிட்டால், அந்த அரிய வாய்ப்பை அவர்கள் தமிழர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார்களா அல்லது ஒரேயடியாக இந்தப் பிரச்சினைகளில் தமிழர் உரிமைகளைத் தாரை வார்ப்பார்களா என்பதுதான் என் முதல் கேள்வி.

நாளைக்கே பா.ஜ.க இங்கே ஆட்சி அமைத்தால், ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இங்கே காலூன்றக் கூட விடாத தமிழர்களுக்காகக் காவிரிப் பிரச்சினையில் கருநாடகத்தைப் பகைத்துக் கொள்வார்களா? அல்லது, மறுபடியும் மறுபடியும் தங்களுக்கு ஆட்சி வாய்ப்பைத் தரும் கருநாடக மக்களுக்காக, சாணவளித் (மீத்தேன்) திட்டத்தை இங்கே அமல்படுத்தி இனி ஒருபொழுதும் தமிழர்கள் காவிரித் தண்ணீரே கேட்க முடியாதபடி செய்யப் பார்ப்பார்களா? இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக இதுவரை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்த சிற்சில சட்ட முயற்சிகளையாவது தொடர்வார்களா அல்லது அப்சல் குரு போன்றோரைச் செய்தது போல வெளியில் தெரியாமல் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இனி அது தொடர்பாக நாம் யாரும் போராடவே முடியாதபடி செய்வார்களா? இவை இரண்டும் வெறும் எடுத்துக்காட்டுகள்தாம். இதே போன்ற கேள்விகளை இன்ன பிற தமிழர் பிரச்சினைகளுக்கும் நீங்கள் பொருத்திப் பார்க்கலாம்.

இரண்டாவது கேள்வி, பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு கட்டுரையில் எல்லோரும் வழக்கமாக எதிர்பார்க்கக் கூடியதுதான். சிறுபான்மையினர் பாதுகாப்பு!

வட இந்தியாவில் மாட்டுக்கறி தொடர்பான வன்முறைகள் நடந்தபொழுது தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில், இனியும் தங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றும், வட இந்தியாவில் நடப்பது போல் தமிழ்நாட்டிலும் விரைவில் நடக்கும் என்றும் அருமையாகத் திருவாய் மலர்ந்தருளினார். இதே நாட்டுக் குடிமக்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அவர் விடுத்த இந்த வெளிப்படையான கொலை மிரட்டலுக்கு எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாய்த் தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலேயே இப்படி என்றால், இன்னும் பா.ஜ.க-வே இங்கு ஆட்சியில் அமர்ந்து விட்டால் அர்ஜுன் சம்பத் போன்றோர் பேச்சளவில் நிறுத்தாமல் செயலளவில் இறங்கினாலும் என்ன பெரிய நடவடிக்கை இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்! அப்படியெல்லாம் நடக்காது, சமயச் சிறுபான்மையர் பாதுகாப்புக்கு பா.ஜ.க ஆட்சியில் எந்த அச்சுறுத்தலும் இருக்காது என யாராவது உறுதி கூற முடியுமா? இதுதான் இரண்டாவது கேள்வி. கடந்த பதிவில் சொன்ன அதே வார்த்தைகளைத்தாம் இங்கு மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். சிறுபான்மையினர் எக்கேடு கெட்டால் என்னவென நாம் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் தமிழர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன என இராசபக்சவுக்கு வாக்களிக்கும் சிங்களக் காடையர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?

மூன்றாவது. ஒருபுறம் இதுவரை ஆண்ட இருபெரும் கட்சிகள்; மறுபுறம் தமிழர் பிரச்சினைகள் அத்தனையிலும் முன்நிற்கும் போராட்டக் கட்சிகளின் மாபெரும் கூட்டணி; இன்னொருபுறம் இளைஞர்களின் புத்தம் புதுத் தேர்வாக வந்திருக்கும் இளம் போராளித் தலைவர் சீமான் என இத்தனை பேரையும் விட்டுவிட்டு இதுவரை தமிழர்களுக்காகத் தங்கள் சுட்டு விரலைக் கூட அசைக்காத பா.ஜ.க-வுக்கு எத்தனை பேர் வாக்களிப்பார்கள் என்பது மிகப்பெரும் கேள்விக்குறி. அப்படியிருக்க, தேசியக் கட்சியாயிற்றே என நீங்கள் வாக்களித்து, அவர்களும் சில இடங்களை வென்றால், தேர்தலுக்குப் பின் அவர்கள் தி.மு.க-வுடனோ அ.தி.மு.க-வுடனோ கூட்டுச் சேர மாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படி ஆகிவிட்டால், மாற்று ஆட்சி வேண்டி நீங்கள் வாக்களித்ததற்கு என்ன பலன்? இதுதான் மூன்றாவது கேள்வி! 

மொத்தத்தில் தமிழ்நாட்டின் எல்லா... எல்லா... எல்லாப் பிரச்சினைகளிலும் தமிழர்களுக்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கும் ஓர் ஆட்சியை நாம் தேர்ந்தெடுத்தால் அதை விட வடிகட்டிய மடத்தனம் வேறு உண்டா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே!
இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பா.ஜ.க-வா உங்கள் தேர்வு? 
- தொடரும்...

(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ௧) கீற்று, ) தரவு, ) இணையம்.


தொடரின் முந்தைய பகுதிகள்:


பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கே எதிரானவர்கள்
    இவர்கள்...நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! அப்படி ஒரு வரி சேர்த்திருக்க வேண்டும்! மறந்து விட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்தார்ந்த நினைவூட்டலுக்கும் நன்றி!

      நீக்கு
  2. நம் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதுதான் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வை நல்குவதாக இருக்கும். ஆனால், பா.ஜ.க அப்படி உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கட்சியா ?
    நியாயமான கேள்வி நண்பரே

    முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது மக்களில் 100 சதவீதமும் நல்ல எண்ணம் கொண்டவர்களா ? என்பதே யார் அதிக பணம் தருகின்றார்களோ... அவர்களுக்கே எங்கள் வாக்கு என்ற கொள்கையாளர்கள் இருக்கின்றார்கள் ஏழைகள் என்று மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரும் இதில் அடக்கம்.

    இந்நிலை மாறும்வரை யாருமே தமிழ் நாட்டுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது இதுதான் நடைமுறை உண்மை மாற்றம் வேண்டும்தான் அது மக்கள் மனதில்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! நூறு விழுக்காட்டு மக்களும் நல்ல எண்ணம் கொண்டவர்களாகவே இருந்துவிட்டால் அப்புறம் இந்த நாடு, அமைச்சு, மேலாண்மை, மக்களாட்சி, தேர்தல் என்பவையெல்லாம் எதற்கு? தேவையேயில்லையே! அப்படி இல்லாததுதானே இவற்றுக்கெல்லாமான இடங்களை அளிக்கிறது? எனவே, மக்களைக் குறை சொல்லி ஒரு பலனும் இல்லை என்பதே நான் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் கருத்து. மேலும், பணம் கொடுத்தவர்களுக்கே வாக்களிப்பவர்கள் எல்லாம் அந்தக் கால மக்கள். இன்று அப்படியெல்லாம் இல்லை. பணத்தையும் வாங்கிக் கொண்டு தாங்கள் விரும்புபவர்களுக்கே வாக்களிக்கும் அளவுக்கு மக்கள் தேறி விட்டார்கள் என்பதையே மாறி மாறி வரும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ;-)

      உங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. நல்ல அலசல்.ஆழ்ந்து நோக்கப்பட்ட கருத்துகள். உங்கள் கேள்வியும் நியாயமானதே! நம்மீது அக்கறை உள்ள ஒரு தலைவர்! கட்சியையும், நாட்டையும் நன்கு வழி நடத்தும் தலைவர் அமைந்து விட்டால் அப்புறம் என்ன கவலை. ஆனால் அதுதானே இங்கு இல்லாமல் மக்கள் நாம் தவிக்கின்றோம்.

    இவர்களா...ஹும் நாட்டிற்கே சரிவராத போது தமிழ்நாட்டிற்கா...?? வரும் வாய்ப்பு இல்லை சகோ...தமிழக மக்கள் இன்னும் அந்த அளவிற்கு மோசமாகிவிடவில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழக மக்கள் இன்னும் அந்த அளவிற்கு மோசமாகிவிடவில்லை// - போட்டீர்களே ஒரு போடு! அருமை சகோ! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. தமிழ்நாட்டில் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கே எதிரானவர்கள்
    இவர்கள். ( திமுக, அதிமுக. . ) இனி
    தே சிய கட்சி வருவது தான் சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கமாகச் சொன்ன பிறகும் நீங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது! அப்புறம் உங்கள் விருப்பம்!

      நீக்கு
  5. பதில்கள்
    1. இசைவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்