தி.மு.க., பற்றிய என் கருத்து என்ன என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கும் என் எழுத்துக்களை அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் "தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் மக்களும் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை முன்னேற்ற ஒரு வாய்ப்பு" என்கிற ஸ்டாலினின் அழைப்பைக் கண்டதும் எந்தத் தயக்கமும் இன்றி நான் உடனே தீர்மானித்து விட்டேன், என் எதிர்பார்ப்புகளையும் எழுதி அனுப்புவது என்று. தனித் தமிழீழத் திருநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பு என நான் முன்வைக்கும் இந்த அதிரடிப் பரிந்துரைகளையெல்லாம் தி.மு.க., ஏற்குமா இல்லையா என்பது அப்புறம். ஆனால் இதை மட்டும் நாம் செய்யாமல் விட்டுவிட்டால் நாளைக்கு இதே தி.மு.க-வினர் என்ன சொல்வார்கள் தெரியுமா நண்பர்களே?
"நாங்கள் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வடிவமைப்பையே மக்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் யாருமே தனி ஈழம் பற்றியோ, அது தொடர்பான இன்ன பிற கோரிக்கைகளையோ முன்வைக்கவில்லை" என்பார்கள். அதற்காகவாவது, அப்படி ஒரு சொல்லுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதற்காகவாவது, ஈழம் போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கும் அக்கறையைத் தி.மு.க-வுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவாவது அவர்களின் அழைப்பை ஏற்பது என்று முடிவெடுத்து எழுதியும் அனுப்பி விட்டேன். இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன்.
என்னுடைய இந்த முடிவு சரிதான் என உங்களுக்கும் தோன்றினால், அருள் கூர்ந்து இதே கோரிக்கைகளை நீங்களும் எழுதி dmkmanifesto2019@dmk.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்! அல்லது துவிட்டர் (twitter), பேசுபுக்கு (facebook) ஆகியவற்றில் உள்ள #DMKmanifesto2019 எனும் சிட்டையில் (hashtag) பகிருங்கள்! தமிழர் எதிர்காலத்துக்கான இந்த முயற்சிக்கு வலுச் சேர்த்து உதவுங்கள்! அதற்கு முன் இதோ என் பரிந்துரைகளைப் படித்து விடுங்கள்!
☟ ☟ ☟