.

சனி, நவம்பர் 24, 2018

உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்

What is the place of your Mother tongue in your lifestyle?

தன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - தமிழர் வாழ்வில் தமிழை முதன்மை பெறச் செய்ய - தமிழின் எதிர்காலத்தை உறுதி செய்ய, தமிழர் தமிழராக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு முழுமையான செயல்திட்டமாகவே பார்க்கலாம்.

நான்கு காரணங்கள், நாலாவிதமான வழிமுறைகள்

தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கான இடம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், தாய்மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு இருக்கும் அக்கறையின்மைக்குக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும்! அவற்றைக் களைந்தாலே தமிழ்ப் பயன்பாடு தானாகப் பெருகும்.

இதற்கு மொத்தம் நான்கு காரணங்கள் இருக்கலாம்.
 
     ✖ தாய்மொழியைப் பயன்படுத்துவதில் கூச்சம்
     ✖ ஆங்கிலம் இருக்கத் தமிழை எதற்காக நாட வேண்டும் என்னும் போக்கு
     ✖ தமிழ் மொழியின் சிறப்பு உயர்வு முதலானவற்றை அறியாமை
     ✖ தமிழில்லாத சூழலில் வளர்தல்

இந்தக் காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்து இவற்றைக் களைவதற்கான வழிகளைப் பார்ப்போம்.

தாய்மொழியைப் பயன்படுத்தக் கூச்சம்

Mr.T.Udhayachandran, I.A.S., Commissioner of Archaeology
திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., தமிழ்நாடு அரசுத் தொல்லியல் ஆணையர்
தமிழிலேயே பேசுவது, எழுதுவது என இருந்தால் பார்ப்பவர்கள் தம்மைத் தாய்மொழி தவிர வேறு மொழி அறியாதவர், படிக்காதவர் என நினைத்து விடுவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால், இது வெறும் மூடநம்பிக்கையே!

சிறந்த ஆங்கில அறிவுடையவர்களான இ.ஆ.ப (I.A.S) அலுவலர்கள், நீதியரசர்கள், கல்வியாளர்கள், பன்மொழி அறிஞர்கள் முதலான பலரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்பொழுது வெகு சரளமாகத் தமிழில் உரையாற்றுவதைப் பார்க்கிறோம். மற்றவர்களுடன் பேசும்பொழுதும் இவர்கள் இயல்பாகத் தமிழில்தான் பேசுகிறார்கள்.

இதற்கு நேர்மாறாக, ஆங்கிலமே சரியாக அறியாத எத்தனையோ பேர் சில ஆங்கிலச் சொற்களையும், சொற்றொடர்களையும் மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு இடையிடையே அவற்றைக் கலந்து பேசுவதன் மூலம் நன்கு ஆங்கிலம் அறிந்தவர்கள் போலக் - படித்தவர்கள் போல – காட்டிக் கொள்வதையும் நாம் அறிவோம்.

இதிலிருந்தே, ஆங்கிலம் சார்ந்த வாழ்க்கைமுறையால் மட்டுமே நாம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்றோ, படித்தவர்கள் என்றோ பெயரெடுத்து விட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்!

பள்ளி - கல்லூரி போன்றவற்றில் சொற்பொழிவாற்றச் செல்லும் பெரிய மனிதர்கள், சிறப்பு வகுப்பு நடத்தச் செல்பவர்கள் முதலானோர் இது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். உண்மையில், நன்கு ஆங்கிலம் அறிந்த பலர் அதைத் தேவையான இடங்களில் மட்டும்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, மற்றபடி வெளியிலும் வீட்டிலும் எங்கும் எப்பொழுதும் அவர்கள் தாய்மொழியையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைச் சான்றுகளோடு இளைஞர்களுக்கு விளக்க வேண்டும்.

ஆங்கிலம் இருக்கத் தமிழ் ஏன்?

Tamil is not humility it is the identity

பெரும்பாலான இளைஞர்கள் இன்று இப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி. எனவே, சில கோடிப் பேரை மட்டுமே தொடர்பு கொள்வதற்கான கருவியை விடப் பல கோடிப் பேரைத் தொடர்பு கொள்ளக்கூடிய கருவியையே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டும் இல்லை. அது மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான அடையாளம். மக்கள் எல்லாரும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை, மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் சமுதாய அடையாளமாகவும்தாம் இருந்தன. ஆனால், எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட உலகமயமாக்கல் காலம் (Globalization Era) இது. ஆகவே, இனி வெளிநாட்டுக்குப் போய் ஒருவர் தன் நாட்டின் பெயரைத் தன் அடையாளமாக முன்னிறுத்தினால், எத்தனையோ சமய, இன, பண்பாடு சார்ந்த மக்கள் வாழும் அவருடைய நாட்டில் இவர் யார், என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில், தன் இனத்தின் பெயரையோ, மொழியின் பெயரையோ சொன்னால்தான் தன் அடையாளத்தை அவர் புரிய வைக்க முடியும்.

ஆம்! நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தாம் இன்று ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளங்களாக விளங்குகின்றன! இதை உணராமல் ஆங்கிலத்தை மட்டுமே கட்டிக் கொண்டு அழுதால், உலகளவில் தமிழர்கள் அடையாளமற்றுப் போவோம்.

தவிர, ஆங்கிலத்தைப் பயன்படுத்த உலகெங்கும் கோடிக்கணக்கானோர் உள்ளனர்; ஆனால், நம் தமிழன்னைக்குத் தமிழர்களாகிய நாம் மட்டும்தானே இருக்கிறோம்? அதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா! எடுத்துக்காட்டாக, உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களை நம்பித்தான் இன்று கணினி - கைப்பேசி – ஊடக - இணைய நிறுவனங்கள் எல்லாம் தமிழ்ச் சேவை அளிக்கின்றன. தமிழர்கள் நாமே அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் வேறு யார் பயன்படுத்துவார்கள்? இப்படியே போனால், யாருமே பயன்படுத்தாததற்கு எதற்காகத் தனியே செலவழித்து அந்தச் சேவையை அளிக்க வேண்டும் என அந்நிறுவனங்கள் தமிழ்ச் சேவையை நிறுத்தி விடாதா? அப்படி நிறுத்தப்பட்டு விட்டால் அதை விடப் பெரிய மானக்கேடு நமக்கு உண்டா?

ஆகவே, ‘ஆங்கிலம் தெரிந்திருக்க, தமிழை ஏன் பயன்படுத்த வேண்டும்’ என்னும் மனப்போக்கை நாம் கைவிட வேண்டும். எழுத்தாளர்கள், இதழாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனத் தமிழ் சார்ந்த துறைகளில் இயங்கும் பெருமக்கள் இவற்றையெல்லாம் இன்றைய தலைமுறையினரிடம் எடுத்துக் கூற வேண்டும்!

தமிழ் மொழியின் சிறப்பை அறியாமை

Tamil the sweet language

உலகின் முதல் தலைமுறை மொழிகள் ஆறில் இன்றும் வழக்கிலிருப்பவை இரண்டுதான். அவற்றில் ஒன்று சீனம்; மற்றொன்று தமிழ்!

பொதுவாக ஷ, ஜ, ஸ, ஹ ஆகிய நான்கு ஒலிகள் இன்றி மொழிகள் இயங்க முடியாது. ஆனால், இவை நான்கும் இல்லாமலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வந்த மொழி தமிழ்!

உலகம் முழுவதிலும் எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே பதினெட்டாவது இடத்தில் உள்ளது!

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் இடத்தை வகிக்கிறது!

இவையெல்லாம் தமிழின் சிறப்புகளுள் ஓரிரு துளிகளே! இவை போல் இன்னும் எவ்வளவோ தனிச் சிறப்புகளும் பெருமைகளும் உடையது தன்னிகரில்லா நம் தாய்மொழி! இவற்றையெல்லாம் இன்றைய தலைமுறையினரிடமும் நாளைய தலைமுறையினரான குழந்தைகளிடமும் கொண்டு சேர்த்தால் எவ்வளவு உயர்வான மொழிக்குச் சொந்தமானவர்கள் நாம் என்கிற பெருமிதம் அவர்கள் உள்ளத்தில் ஊறும். அதுவே இம்மொழியின் மீதான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்.

தமிழில்லாத சூழலில் வளர்தல்

Tamilnadu Students in a school

நடப்புக் காலத்தில் வீடு - பள்ளி எனப் பிள்ளைகள் வளரும் இரு இடங்களிலும் தமிழ் மணமற்ற சூழலே நிலவுகிறது. தமிழில் ஒரு சொல் பேசினாலும் அதற்குத் தண்டம் (அபராதம்) போடும் கல்விக்கூடங்கள் ஒருபுறம். “அம்மா - அப்பான்னு சொல்லாதே! ‘மம்மி - டாடி’ன்னு சொல்லு” என வலியுறுத்தும் பெற்றோர்கள் மறுபுறம். இவர்களுக்கிடையில் ஒரு பிள்ளை தமிழுணர்வோடு வளர்ந்தால்தான் விந்தை! இந்தச் சூழலை மாற்றாத வரை தமிழின் பயன்பாடும் முதன்மையும் குறைந்து கொண்டுதான் போகும்.

பள்ளிச் சூழலைப் பொறுத்த வரை, அதை மாற்ற அரசு மனம் வைத்தால்தான் முடியும். “தமிழ்நாட்டில், தமிழ்ப் பிள்ளைகள், தமிழில் பேசுவது குற்றமா?” எனக் கல்விக்கூடங்களைத் தமிழ்நாடு அரசு (அ)தட்டிக் கேட்க வேண்டும்! தமிழ் இனத்தின் ஆணி வேரையே பிஞ்சு மனங்களிலிருந்து பிடுங்கியெறிய முயலும் இந்தப் போக்குக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்!

அதே நேரம், பள்ளிச் சூழலை மாற்றுவது மட்டும் போதாது. கல்விச்சூழலும் மாற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

மேதைகள் ஒருபொழுதும் கருத்தொற்றுமை கொள்ள மாட்டார்கள் என்பார்கள். ஆனால், உலக அறிஞர்கள் பலரும் ஒற்றுமையோடு ஒப்புக் கொண்டிருக்கும் மிகச் சில கருத்துக்களுள் ஒன்று “தாய்மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும்” என்பது.

‘கற்பிக்கும் முறைகளில் சரியானது ஆங்கில வழிக் கல்வியா – தாய்மொழி வழிக் கல்வியா?’ எனக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் நடத்தப்பெற்ற ராமிரஸ் எட் அல் 1991 ஆய்வு, தாமஸ் அண்டு காலியர் ஆய்வு, தமிழ்நாட்டு முத்துக்குமரன் குழு ஆய்வு ஆகிய அனைத்தின் முடிவுகளும் தாய்மொழி வழிக் கல்விமுறையையே பரிந்துரைக்கின்றன.

இருந்தும், தமிழ்நாடு அரசு தாய்மொழிவழிக் கல்விக்காகப் போதுமான நடவடிக்கைகளை எடுத்தபாடில்லை. மாறாக, தமிழ் வழிக் கல்வி மட்டுமே அளிக்கப்பட்டு வந்த அரசுப் பள்ளிகளிலும் கடந்த 2013-14 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பாடு செய்து, தாய்மொழி வழிக் கல்விமுறைக்கே சாவுமணி அடித்து விட்டது.

“ஆங்கிலவழிக் கல்வியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்; அதனால் தனியார் பள்ளிகளை நோக்கி அவர்கள் படையெடுப்பதால் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என அரசு கூறுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளின் தரக்குறைவினாலேயே தனியார் பள்ளிகளை நோக்கி மக்கள் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தகுந்த சான்றுகளோடு அன்றே சுட்டிக்காட்டின நம் ஊடகங்கள்.

கரும்பலகைகள், படிக்கும் மேசைகள் போன்ற அடிப்படை வசதிகளே பல பள்ளிக்கூடங்களில் சரியில்லை. பல பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. இருக்கிற ஆசிரியர்களும் கடமையுணர்வோடு பாடம் நடத்தாமல் கடமைக்குப் பாடம் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். இப்படி, அரசுப் பள்ளிகள் பற்றி இன்னும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிப்படையிலேயே இவ்வளவு கோளாறுகள் இருக்க, இவற்றையெல்லாம் சரி செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே கல்விமுறையில் அரசு கைவைத்தது. அஃது எவ்வளவு தவறு என்பதைத்தான் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்ட பின்னரும் அடுத்தடுத்து நடக்கும் அரசுப் பள்ளிகளின் மூடுவிழாக்கள் உணர்த்துகின்றன.

தவிர, சரியான உட்கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, கணினிப் பயிற்சி, நல்ல ஆசிரியர்கள் நிறைந்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல நிலையில் உள்ளதையும் மக்களிடமும் இந்தப் பள்ளிகளுக்கு நல்ல மதிப்பும் வரவேற்பும் இருப்பதையும் பற்றி இதழ்களில் அடிக்கடி செய்திகள் வருகின்றன. உரிய முறையில் இயக்கினால் அரசுப் பள்ளியை நோக்கி மக்கள் வருவார்கள்; அதற்குத் தாய்மொழி வழிக் கல்வி ஒரு தடையில்லை என்பதற்கு இவை கண்ணெதிர் சான்றுகளாக விளங்குகின்றன.

ஆகவே, இருக்கிற குறைபாடுகளையெல்லாம் சரி செய்து, அரசுப் பள்ளிக்கூடங்களைத் தரமுயர்த்தித் தாய்மொழிவழிக் கல்வியையே மாநிலம் முழுதும் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியாளர்கள் வற்புறுத்த வேண்டும்! தாய்மொழி வழிக் கல்வியினால் சமூகத்துக்கும் அரசுக்கும் விளையக்கூடிய நன்மைகள் குறித்து ஆட்சியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் விளக்க வேண்டும்!

அத்துடன் நில்லாமல், தாய்மொழிவழிக் கல்வியையே இந்திய அரசின் கல்விக் கொள்கையாக அறிவிக்கவும், இந்தியா முழுக்க அப்படி ஒரு கல்விமுறையை மட்டுமே நடைமுறைப்படுத்தவும் நடுவணரசுக்குக் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்க வேண்டும்!

இப்படித் தாய்மொழியில் கல்வி கற்றால் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குவதோடு, இயல்பாகவே தங்கள் வாழ்வில் தாய்மொழிக்கு முதன்மை தர முன்வருவார்கள்.

இவ்வாறு கல்விமுறை, கல்விக் கொள்கை எனப் பெரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட முறையில் மக்களை விழிப்புணர்த்த வேண்டியதும் இன்றியமையாதது. அதற்குக் கீழ்க்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்!

இன்னும் சில...

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் தமிழ் உணர்வுள்ள ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களின் வீடுகளுக்குப் போய்ப் பெற்றோர்களைச் சந்தித்து, வீட்டில் தமிழ் சார்ந்த சூழலைக் குழந்தைகளுக்கு அளிக்குமாறு கேட்க வேண்டும். ஒருவேளை, பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இதைச் செய்வது அவர்கள் பணிக்கு அச்சுறுத்தலாக இருக்குமானால், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இதற்காக முன் வர வேண்டும்.

தன்னைச் சுற்றி உள்ள மனிதர்கள் பேசுவதைப் பார்த்துத்தான் ஒரு குழந்தை பேசக் கற்றுக் கொள்கிறது. அப்படிப் பார்த்தால், இன்றும் நம் சமூகத்தில் நம்மைச் சுற்றிலும் உள்ள பெரும்பான்மை மக்கள் தமிழில்தான் பேசுகிறார்கள்; அதைத்தான் குழந்தைகளும் எதிரொலிக்கின்றன; அதுதான் இயல்பானது. இதற்கு மாறாக, மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் பேசுமாறு பிள்ளைகளை வற்புறுத்துவது அவர்களின் மொழித்திறன், பேச்சாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும். அந்தப் பாதிப்பு கல்வி கற்கும் திறனிலும் - ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளும் திறனிலும் சேர்த்துத்தான் - பரவும். இது பற்றி அறிவியல்படியும் உளவியல்படியும் பெற்றோர்களுக்கு விளக்கி, குழந்தைகளை இயல்பாக – அதாவது, தாய்மொழியிலேயே - பேச, எழுத விடுமாறு ஆசிரியர்கள் கூற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் தமிழ்ச் சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.

Children Literature in Tamil

ஒரு மொழியின் எழுத்து வடிவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கல்விக்கு அடுத்தபடியாகப் பெரும் பங்கு வகிப்பவை சிறுவர் இதழ்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சிறுவர்களிடம் அந்தப் படிக்கும் பழக்கம் மறைந்தே விட்டது எனலாம். நல்ல பண்புகள், அறிவுக் கூர்மை, தாய்மொழிப் பற்று ஆகியவற்றை வளர்க்கும் சிறுவர் இதழ்கள் படிக்கும் வழக்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்!

தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொண்டு, சிறுவர் இலக்கியம் படிப்பது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் உளவியல் நலனுக்கும் எந்த அளவுக்கு நலம் பயக்கும் என்பதை விளக்க வேண்டும். குழந்தைகள் கதை படிப்பது பயனற்றது, நேர விரயம் எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொண்டிருக்கும் பொதுக் கருத்தை மாற்ற வேண்டும். இதற்காகப் புகழ் பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், குழந்தை உளவியலாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களை அழைத்து வந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடையே பேச வைக்க வேண்டும்.

முன்பெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களே நாடகம் நடத்தும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது ஆண்டு விழா என வந்தாலே ஆட்டம், பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள்தாம் நடத்தப்படுகின்றனவே தவிர, நாடகங்கள் ஏதும் அரங்கேற்றப்படுவதில்லை. மறைந்து விட்ட அந்தப் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரச் சொல்லிப் பள்ளி, கல்லூரி முதல்வர்களிடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் முதலானவை வலியுறுத்த வேண்டும்.

தற்காலத்தில், சிறுவர்களின் தலையாய பொழுதுபோக்காகத் திகழ்பவை காணொலி விளையாட்டுக்கள் (video game). அவற்றைத் தமிழில் தயாரிக்கத் தமிழார்வமுடைய மென்பொருள் நிறுவனங்களும் வல்லுநர்களும் முன் வர வேண்டும். கணினி, கைப்பேசி இரண்டிலும் காணொலி விளையாட்டுகள் தமிழிலும் இலவசமாக வெளியிடப்பட வேண்டும். இவை தமிழில் இருப்பது மட்டுமின்றித் தமிழ் ஆர்வத்தையும் தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தையும் பிள்ளைகள் உள்ளத்தில் விதைப்பவையாக இருக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், வரலாறு, பண்பாடு போன்றவை பற்றிய அரிய தகவல்களை விளையாட்டுப் போக்கில் குழந்தைகள் மனதில் பதியச் செய்பவையாகவும் அமைய வேண்டும்.

இப்பொழுதெல்லாம், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் இணையத்தில் நிறைய நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனவே, சிறுவர்களுக்கான தமிழ் இணையத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவை குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், அதே நேரம் அவர்களுடைய கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உதவும் வகையிலும் திகழ வேண்டும்.

இவையனைத்துக்கும் உச்சமாக, பெரியவர்களுக்காக நடத்துவது போல் பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளிடையேயும் தமிழ் மாநாடுகள் நடத்த வேண்டும். கதை – கவிதை- கட்டுரை படித்தல், ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தல், கருத்தரங்குகள், உரையாடல்கள் எனத் தமிழ் மாநாடுகளின் அனைத்துக் கூறுகளும் இவற்றிலும் இடம்பெற வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்ய ஆசிரியர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், உளவியல் மருத்துவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், தமிழ் அமைப்புகள் எனத் தமிழ் உணர்வுள்ள அனைத்துத் துறையினரும் முன்வர வேண்டும்!

மொத்தத்தில், மக்களுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதே தமிழர்கள் வாழ்வில் தாய்மொழிக்கு முதன்மை கிடைக்கச் செய்ய ஒரே வழி!

உணர்வுள்ள அனைவரும் அதற்காக ஒன்றிணைவோம்!
உயரிய இக்குறிக்கோளை நாளை வென்றடைவோம்!

Tamils and Tamil

உசாத்துணை :

1. ‘கற்றதும் பெற்றதும்’ - சுஜாதா நூல்.

2. தாய்மொழிவழிக் கல்வி குறித்த அமெரிக்க ஆய்வுகள்! - ஜெயப்பிரகாஷ் நாராயணன் கட்டுரை.

3. தமிழ் விக்கிப்பீடியா.

4. தினமலர் - கல்விமலர் இதழ்.

5. ஆனந்த விகடன் கட்டுரை. 

(பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற தலைப்பில் நான் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧, ௪) சமயம்,  ௨) TN குரு, ௩) தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture பேசுபுக்குக் குழு, ௫) வினவு, ௬) விக்கிப்பீடியா, ௭) சிறகு இதழ்

தொடர்புடைய பதிவுகள்:
 உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி
 வேடம் கலைந்த ஈழத் தாய்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

7 கருத்துகள்:

  1. நம் தமிழ்
    அவமானம் அல்ல
    நம் அடையாளம்
    நம் பெருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! அந்தப் பெருமை நிலைபெற என்னென்ன செய்யலாம் எனச் சிந்தித்ததன் விளைவே இப்பதிவு. மிக்க நன்றி!

      நீக்கு
    2. வெளியிட மிகவும் தாமதமாகி விட்டது. பொறுத்தருள வேண்டும் ஐயா!

      நீக்கு
  2. இன்றைய நிலை :-

    தமிழின் பெருமை அறிய இன்றைய "நீயா நானா" பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் சி(ப)லர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிட மிகவும் தாமதமாகி விட்டது. பொறுத்தருள வேண்டும் ஐயா!

      அந்த ’நீயா நானா’ நிகழ்ச்சியும் இந்தப் பதிவு போன்றதுதானே ஐயா? அப்படிப் பார்த்தாவது நம் மக்கள் தம் தாய்மொழியின் பெருமை உணர்ந்தால் மகிழ்ச்சிதானே நமக்கு? இருந்தாலும் நீங்கள் சொல்லும் பொருளும் எனக்குப் புரிகிறது. தங்கள் கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  3. உங்கள் கருத்துக்கள் வீடியோ வடிவில் கிடைக்குமா ?
    உங்கள் விடியோவை பதிவேற்ற https://TamilStatus.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை வெளியிடத் தாமதமானதற்கு வருந்துகிறேன். உங்கள் தளம் பார்த்தேன். நானும் சில நாட்களாக என் கருத்துக்களைக் காணொலி வடிவில் வெளியிடலாமா என்கிற சிந்தனையில்தான் இருக்கிறேன். சரியான நேரத்திலான உங்கள் அழைப்புக்கு நன்றி! முயன்று பார்க்கிறேன்.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்