.

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!



“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்!”

‘முதல்வன்’ திரைப்படத்தில் சுஜாதா அவர்கள் எழுதிய உரையாடல்! அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது!

Supreme Court convicted Jayalalitha after she died
வழக்கில் முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவரே ஜெயலலிதாதான். அவரே போன பிறகு வெளிவந்திருக்கிறது தீர்ப்பு – அவர் குற்றவாளி என்பதாக. இடைப்பட்ட காலத்தில் ஜெ., மேலும் இருமுறை முதல்வராகி இருக்கிறார். அதாவது, ஜெயலலிதா என்பவர் ஒருமுறை முதல்வராக ஆட்சி செய்தபொழுது தவறு செய்தாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படுவதற்குள் மேற்கொண்டும் இரண்டு முறை அவர் முதல்வராக ஆகி விட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை “நீதியை நிலைநாட்டிய தீர்ப்பு”, “அரசியலாளர்களுக்குப் பாடம் கற்பிக்கும் தீர்ப்பு”, “வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு” எனவெல்லாம் தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என எல்லோரும் புகழ்கிறார்கள்! அது பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், வழக்கின் முதன்மைக் குற்றவாளியே செத்துத் தண்டனையிலிருந்து தப்பும் வரைக்கும் இந்த வழக்கு தாமதமாகியிருப்பது தவறு என்பது உறுதி. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன்.

ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் நம் மக்கள் இல்லை. “எப்படியோ, சசிகலா முதல்வராகாமல் இந்தத் தீர்ப்பு தடுத்ததே!” என மகிழ்கிறார்கள் அவர்கள். ஏனய்யா, அதற்காகவா இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது? இது ஏற்கெனவே முதல்வராக இருந்த ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா அல்லது சசிகலா முதல்வராகாமல் தடுப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா? இந்தத் தீர்ப்பினால் சசிகலா முதல்வராக முடியாமல் போனது ஒரு துணைவிளைவு (side effect), அவ்வளவுதான். புற்று நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்து கூடவே சேர்த்து உடம்பிலிருந்த தேமலையும் குணப்படுத்தியது போலத்தான் இது. ஆனால், நாம் தேமல் குணமானதற்காக மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்; மருந்து சரியான நேரத்தில் கொடுக்கப்படாததால் புற்று முற்றிப் போனதைப் பற்றிக் கவலைப்படாமல். எந்த வகையிலாவது, எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்கிற படிக்காத மக்களின் பரிதாபகரமான மனநிலைக்கு நம் முழு சமூகமும் ஆட்பட்டு விட்டதையே இது காட்டுகிறது.

இந்த நாட்டில், ஒருவர் தன் பொதுவாழ்வின் தொடக்கக் காலத்தில் குற்றம் புரிந்தாரா இல்லையா என்பதை அவர் வாழ்க்கையே முடிந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் தீர்மானிக்க முடியும், அதையும் நாம் வரவேற்போம் என்றால்... அந்த அளவுக்கு நாம் நாட்டின் சீர்கேடான போக்கை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம் என்பதுதான் பொருள்! ஒரு சமூகத்தின் வேறெந்தச் சீர்கேட்டையும் விட அபாயகரமானது சீர்கேடுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளப் பழகும் மக்களின் மனநிலைதான். அது முதலில் மாற வேண்டும்!

அடுத்ததாக மாற வேண்டியது, பணமும் பதவியும் இருந்தால் இறுதி வரைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்கிற இன்றைய நிலைமை. “தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம்” என்பார்கள். இதையே குற்றவாளிகளை மனதில் வைத்துச் சொன்னால், “தாமதிக்கப்படும் தண்டனை விடுதலைக்குச் சமம்”! அதுவும் அரசியலாளர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்குத் தண்டனை தாமதமாகத் தாமதமாக மக்கள்தாம் தண்டனை அனுபவிக்க நேர்கிறது. சமூகம், நாடு, மக்கள், இவர்களின் எதிர்காலம் எல்லாம் நாளை தண்டிக்கப்படப் போகும் குற்றவாளிகள் கையால் தீர்மானிக்கப்படும் பேரிழிவு அதனால் உருவாகிறது. நீதிக்கு இதை விடப் பெரிய தோல்வி வேறு ஏதும் இருக்க முடியுமா? நீதி என்பது உரிய காலத்தில் கிடைத்தாக வேண்டும் என்பதற்கு இதை விடப் பெரிய காரணம்தான் இருக்க முடியுமா?

இப்படிச் சொல்வதால் நான் நீதித்துறையையோ, நீதியரசர்களையோ குறை சொல்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டா!

பெருகிக் கொண்டே போகும் மக்கள்தொகை, அதற்கேற்ப நீதியரசர்கள் இல்லாதது, காலியாக இருக்கும் நீதியரசர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பத் தவறும் அரசுகள் எனப் பல காரணங்கள் இருக்கையில், குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் எனும் ஒரே காரணத்துக்காக நீதியரசர்களைக் குறை சொல்வது தவறு!

மேலும், ஒரு தீர்ப்பு என்பது எல்லா வகையிலான வாய்ப்புகளையும் சூழல்களையும் இண்டு இடுக்கு விடாமல் ஆற அமர ஆராய்ந்து வழங்கப்பட வேண்டியது. காரணம், இதில் வழக்கில் தொடர்புடையவரின் வாழ்க்கை, குடும்பம், மானம், எதிர்காலம் ஆகியவை மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலான நீதியும் அடங்கியுள்ளது. எனவே, தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகளை மட்டும் கருத்தில் கொண்டு எந்த ஒரு வழக்கையும் துரித வேகத்தில் முடித்து வைத்து விட முடியாது என்பதால் நீதித்துறையின் வேகமின்மையையும் ஓரளவுக்கு மேல் நாம் குறை சொல்ல முடியாது.

இதற்கு ஒரே வழி, நீதி வழங்கும் முறையை மாற்றியமைப்பதுதான். தீர்ப்பளிக்கும் முறையில் ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இனி எக்காலத்திலும் எந்தக் குற்றவாளியும் கடைசி வரை தண்டனை பெறாமலே தப்பித்து விடாமல் கண்டிப்பாகத் தடுக்க இயலும். அது எப்படி எனப் பார்ப்போம்!

இந்நாட்டில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கக் கையாளும் தலையாய வழிமுறை, இழுத்தடிப்பு! எடுத்ததற்கெல்லாம் காலக்கெடு (வாய்தா) கேட்பதில் தொடங்கி தனிநீதிமன்றமே கூடாது எனக் கோருவது வரை வழக்கின் ஒவ்வோர் அசைவையும் நகர்வையும் மெதுவாக்கி முடிந்த அளவுக்கு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்கள் குற்றம் புரிந்தவர்கள். இவர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லை. காரணம், அது களங்கம் இல்லை, உண்மைதான் என்பது அவர்களுக்கே தெரிகிறது. தாங்கள் தவறு செய்திருக்கிறோமோ இல்லையா என்பது வேறு யாரையும் விடக் குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தானே நன்றாகத் தெரியும்! ஆகவேதான், எப்படியும் சட்டத்தின் பிடியிலிருந்து தாங்கள் தப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கும் இவர்கள், முடிந்த வரை அந்தத் தீர்ப்பு நாளைத் தள்ளி வைக்கவே தலையால் தண்ணீர் குடிக்கிறார்கள்.

அதே நேரம், குற்றம் செய்யாதவர்கள் ஒருநாளும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. ஏனெனில், அது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வீண் பழி. எனவே, எப்பொழுது அதிலிருந்து மீளலாம், தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். அதுதான் மனித உளவியல்.

ஆக, எப்பொழுது ஒருவர் தன் மீதான வழக்கை இழுத்தடிக்க முயல்கிறாரோ அப்பொழுதே அவர் அந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார். எனவே, இனி வரும் காலங்களில், குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமெனவே வழக்கைத் தாமதப்படுத்த முயன்றால், அதையே அவருடைய குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கருதி, நீதிமன்றங்கள் அதையே போதுமான சான்றாக எடுத்துக் கொண்டு தண்டனை வழங்குதல் வேண்டும்! அரசியலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொதுவான தண்டனை நடைமுறையாக இது வகுக்கப்படல் வேண்டும்!

இப்படிச் செய்தால்தான், எவ்வளவு வலுவான வழக்காக இருந்தாலும் இழுத்தடித்தே இறுதி வரை தப்பித்துக் கொள்ளலாம் என யாரும் மனப்பால் குடிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் காலக்கெடு (வாய்தா) கேட்டுக் கேட்டு நீதிமன்ற நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தையும் வீணடிக்க மாட்டார்கள். சட்டத்தை மதித்து உடனுக்குடன் நீதிமன்றத்தில் வந்து நிற்பார்கள். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால்தான் கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும். ‘வழக்கு, நீதிமன்றம் எனப் போனால் வீண் அலைச்சல்தான்’ என்கிற பொதுமக்களின் எண்ணம் மாறும். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும். அதே நேரம், குற்றவாளிகளுக்கு அச்சமும் பிறக்கும். அதனால் குற்றங்கள் குறையும். குற்றமற்ற சமுதாயமாக இது மாற ஒரு வாய்ப்புத் திறக்கும்!

ஆனால், இப்படி ஒரு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அரசியலாளர்கள் முன்வர மாட்டார்கள். தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிப் பரிபாலனம் புரியும் 650 நீதியரசர்களில் யாராவது ஒரே ஒருவர், நிலுவையிலிருக்கும் கோடிக்கணக்கான வழக்குகளில் ஏதாவது ஒன்றே ஒன்றில் இப்படி ஒரு எடுத்துக்காட்டான தீர்ப்பை வழங்க முன்வர வேண்டும்! வரலாற்றில் எத்தனையோ முறை, சட்டத்தால் பரிந்துரைக்கப்படாத பல புதுமைத் தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கி நீதியை நிலைநாட்டியிருக்கின்றன. அப்படி ஒரு முன்மாதிரித் தீர்ப்பாக இது திகழட்டும்! அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு, இறுதித் தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், பின்னர் அதையே மேற்கோள் காட்டி வருங்காலத்தில் இனி எந்த ஒரு வழக்கிலும் எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் தப்பிக்காமல் தண்டனை அடைய வழி செய்யலாம்.

நாடெங்கும் உள்ள மாண்பமை நீதியரசர்களே! தங்களில் யாரேனும் ஒருவர்... ஒரே ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மனம் வையுங்கள்! பணமும் பதவியும் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் செய்து விட்டுத் தப்பி விட முடியும் என்கிற இந்த இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! மக்களுக்கு நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை பிறக்கச் செய்ய அருள் கூர்ந்து முன்வாருங்கள்!

இது, இக்கட்டுரையை எழுதும் தனிப்பட்ட ஒருவனின் குரல் இல்லை; இந்நாட்டு நீதித்துறை மீதும் நீதியரசர்கள் மீதும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கணக்கான குடிமக்கள் சார்பான சிரம் தாழ்ந்த வேண்டுகோள்! 

(நான் கீற்று தளத்தில் -- அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி தமிழ் வெப்துனியா.
விழியம்: நன்றி எஸ் பிலிம்ஸ்.

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. தாங்கள் சொல்வது போல், "என்றாவது ஒரு நாள் நடக்காதா...? எனும் ஏக்கம் வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரையின் கருத்து விவாதத்துக்குரிய ஒன்று. முதல் ஆளாக வந்து, இசைவான கருத்தை அளித்ததன் மூலம் கட்டுரைக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமெனவே வழக்கைத் தாமதப்படுத்த முயன்றால், அதையே அவருடைய குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கருதி, நீதிமன்றங்கள் அதையே போதுமான சான்றாக எடுத்துக் கொண்டு தண்டனை வழங்குதல் வேண்டும்!

    வரவேற்கப்பட வேண்டிய கருத்து. யோசிக்க வைக்கும் நல்ல கட்டுரை!

    பதிலளிநீக்கு
  3. நம் நாட்டின் சட்டம் அப்படி. முதலில் சட்டத்தை திருத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! உங்கள் ஒத்திசைவான கருத்துக்கு நன்றி! உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட வாக்குப் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்