இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் பந்தாடிய விதம், ஊழல் குற்றச்சாட்டுகள், இன்னும் எத்தனையோ...
ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. அதுதான், அடுத்தவர்களிடத்தில் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத இவருடைய குணம்!
கன்னடர் என்று முத்திரை குத்தினோம். ஆனால், மற்ற யாரை விடவும் காவிரிப் பிரச்சினையில் இவர்தான் ஈடு இணையற்ற கடுமை காட்டினார்.
1993-இல் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதில் தொடங்கி, கடைசியாக 2013-இல் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது வரை காவிரிப் பிரச்சினையில் ஒருபொழுதும் கருநாடகத்துக்காக விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை உறுதி காத்தவர் ஜெயலலிதா. கன்னடர்கள் இவர் படத்தையும் கொடும்பாவியையும் கொளுத்திக் கொந்தளிக்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை அறுவடை செய்தார். எந்த அளவுக்குக் கன்னடர்கள் இவரை வெறுத்தார்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் கீச்சகத்தில் (twitter) வலம் வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையிலும் மலையாளிகளிடம் தமிழர் உரிமையைச் சொட்டுக் கூட விட்டுத் தரவில்லை ஜெயலலிதா அவர்கள்.
அணை வலுவிழந்து விட்டது, நீர் தேக்கும் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையாள மாநிலமும் மல்லுக்கட்டியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உண்மை நிலையை எடுத்துக்காட்டி, கேரள அரசு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் செய்த எல்லாச் சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கினார். அணையின் நீர்த் தேக்க அளவான 142 அடியில் ஓர் அங்குலம் கூடக் குறைய விடாமல் இறுக்கிப் பிடித்தார். தவிர, “இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால்தான் இனி புதிய அணைகள் கட்ட முடியும். கேரள அரசு தன் முடிவைத் தமிழ்நாடு அரசு மீது திணிக்க முடியாது. அணைக்கு நடுவண் தொழில்நுட்பப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெற்று இனி எக்காலத்திலும் முல்லை பெரியாறு அணை விதயத்தில் கேரளம் வாலாட்ட முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமையை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.
வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றில் மட்டுமில்லை, முல்லை பெரியாறு அணை பற்றிப் பொய்ப் பரப்புரை செய்ய வந்த ஒரு திரைப்படத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ஜெ அவர்கள்.
‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’யான இந்திரா காந்தியே அரசியல் சூழல்களுக்குப் பணிந்து கச்சத் தீவைத் தாரை வார்த்து விட்ட நிலையில், இந்தத் ‘தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி’ அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை போனார். அண்டை நாட்டு உறவு, வெண்டைக்காயின் வரவு என்றெல்லாம் நடுவண் அரசுகள் கதை பேச, இதே போன்ற வேறொரு சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி “நீங்கள் கச்சத் தீவைக் கொடுத்ததே சட்டப்படி செல்லாது” என்று கடைக்காலிலேயே கை வைத்தார்!
பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியர்களின் உடலையே வேதிக் குவியலாக மாற்றியது போதாதென்று, அடுத்ததாக நம் மரபணுவையே மாற்ற மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதற்கு நடுவண் காங்கிரசு அரசு துடித்தபொழுது அதைத் தமிழ்நாட்டுக்குள் காலடி வைக்கவே இடம் தராமல் விரட்டியடித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில், தமிழினத் தலைவர் என்று புகழப்பட்ட கருணாநிதியும் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் எம்.ஜி.ஆரும் கூடச் செய்யாததை ஜெயலலிதா செய்தார். ‘தனி ஈழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்! ‘இலங்கையை நட்பு நாடு எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நடுவணரசுக்கே அறிவுரை கூறினார். போதாததற்கு, ‘தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை போட வேண்டும்’ என்றும் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஜெயலலிதாவின் இந்த வரலாறு காணா நடவடிக்கைகளைப் பார்த்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளனும் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்தியவனுமான கோத்தபயா இராசபக்ச, “ஜெயலலிதா இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு வருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. தமிழகம் என்பது இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்றெல்லாம் படபடத்தான்.
இப்படி, எழுத்தளவிலான முயற்சிகளோடு நின்று விடாமல், அடுத்து செயல் அளவிலும் சிங்கள நாட்டின் சிண்டை உரசினார் ஜெயலலிதா. “தமிழ்நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அமைப்பாளர்கள் என யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறிக் கலந்து கொள்வதாக இருந்தால் இங்கு நடத்த விட முடியாது!” என்று கொந்தளித்தார். ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு இவருக்குப் பணிந்து இலங்கையைச் சேர்ந்த யாரையும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
இவை மட்டுமல்லாமல், எந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தான் தடை கொண்டு வந்ததாகக் காலமெல்லாம் பெருமை பேசினாரோ, அதே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், “இப்படிப்பட்ட நிலையில் நடுவணரசின் கருத்தைக் கேட்டு விட்டுத்தான் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் இருப்பதால் கேட்கிறேன். மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்க வேண்டும்! இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும்” என்று தடாலடியாக நடுவணரசுக்கே கெடு வைத்தார். ஆனால், சட்டத்துக்கே புறம்பாக, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடை பெற்றது சோனியா தலைமையிலான நயவஞ்சக நடுவணரசு.
இப்படி, சிங்களக் காடையர் முதல் வடநாட்டு ஆரியர் வரை, சித்தராமையா முதல் கோத்தபயா வரை யாரிடமும் தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்காத முதல்வராகத் திகழ்ந்தார் ஜெயலலிதா அவர்கள். ஒரு தலைவருக்குண்டான அடிப்படைத் தகுதியே அதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, ஒற்றையாட்சித் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்தாலும் சரி, ஆட்சியாளர் என்பவர் ஒருபொழுதும் மக்களை விட்டுக் கொடுத்து விடக்கூடாது! அதுதான் இன்றியமையாதது! தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்! அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகரான ஒரு (தமிழ்) மக்கள் பிரதிநிதி தமிழ்நாட்டில் வேறு யாருமே இப்பொழுது இல்லை என்றால் அது மிகையாகாது.
ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், தொடக்கக் காலத்தில் ஜெயலலிதா பல தவறுகளை இழைத்தவர்தாம். இந்தியாவில் அடைக்கலம் தேடி வரும் மற்ற நாட்டு மக்களெல்லாரும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் வாழ்கையில், ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றும் தனியாக முகாம்களில் சிறை வைக்கப்பட்டுக் குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு ஜெ-வும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், ஒரு வகையில் பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலான நடவடிக்கைதான் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.
இராஜீவ் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனி ஈழக் கோரிக்கைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் பேராதரவு இருந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழானது. இராசீவ் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதமும் அதனால் தமிழ்நாட்டின் மீது விழுந்த பழியும் சேர்ந்து மக்களின் சிந்தனையையே முடக்கி விட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இங்குள்ள மக்கள் வெறுக்கும் அளவுக்குப் போனார்கள். அதனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வராக வந்த ஜெயலலிதாவும் மக்கள் எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
ஆனால், 2011-இன் நிலைமையே வேறு. இராசீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தானா என்பதே சரியாகத் தெரியாத நிலையில், அப்படிப்பட்ட ஐயத்துக்குரிய குற்றச்சாட்டை முன்னிட்டுத் தங்கள் கண்ணெதிரிலேயே மொத்த இனமும் கொன்று குவிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கதறித் துடித்து வந்த நேரம் அது. ஒரே ஒரு மனிதனின் உயிரை விட இலட்சக்கணக்கான மக்களின் உயிரும் மானமும் வாழ்வும் வருங்காலமுமே பெரிது என்பதை உணர்ந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த வேளை அது. எனவே, அந்த நேரத்தில் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா மக்களின் அன்றைய மனநிலைக்கேற்ப மாறி நடந்தார். ஜெயலலிதா தமிழினத் தலைவர் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர் மட்டும்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்களின் அவ்வப்பொழுதைய மனநிலைகளுக்கேற்ப அவர் நடந்து கொண்டார்.
ஆம்! ஜெயலலிதா சிறந்த தலைவரோ இல்லையோ, அருமையான அரசியலாளரோ இல்லையோ, நல்ல ஆட்சியாளரோ இல்லையோ, ஆனால் மிகச் சிறப்பான மக்கள் பிரதிநிதி, தமிழர் பிரதிநிதி! மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், அதன் மூலம் தேசிய இனங்களுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதிலும் காங்கிரசை விடப் பத்து மடங்கு தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இன்றைய நாளில் நமக்குத் தேவை இப்படி எதற்காகவும் அசைந்து கொடுக்காத ஒருவரின் தலைமைதான். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஜெ அவர்களை நாம் இழந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்குமே கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் அணுவளவும் ஐயமில்லை!
காவிரி தந்த கலைச்செல்வியாய்த்
தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவரே!
காவிரியைத் தந்த புரட்சித்தலைவியாய்
மண்ணைவிட்டு மறைந்தவரே!
மண்ணைவிட்டு மறைந்தவரே!
ஒருபொழுதும் எவரிடத்தும் எங்களை
எதற்காகவும் விட்டுத் தராத தங்களை
போற்றிச் செலுத்துகிறோம் அஞ்சலி! - இது
தமிழர் மனமலர் மஞ்சரி!
படங்கள்: நன்றி தமிழ் வெப்துனியா, தமிழ் ஒலி, இந்தியா டுடே லைவ்.
தொடர்புடைய வெளியிணைப்புகள்:
↪தமிழுக்கு முதலிடம் தந்த ஜெயலலிதா - தெரிவிப்பவர் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குநர்
↪ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல் அறிக்கை
தொடர்புடைய வெளியிணைப்புகள்:
↪தமிழுக்கு முதலிடம் தந்த ஜெயலலிதா - தெரிவிப்பவர் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குநர்
↪ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல் அறிக்கை
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
முதலில் மிக அருமையான ஓர் இரங்கல் பதிவுக்குப் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஜெஜெ அவர்கள் தமிழர் தான். கன்னடர் அல்ல.
தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்!// அதனால்தான் தமிழக மக்கள் அவரை அம்மா என்று அழைத்தார்களோ?!!!! ஓர் அம்மா தன் வீட்டில் குழந்தைகளை மிகுந்தக் கட்டுபாட்டுடன், கண்டிப்புடன், சில சமயங்களில் இராணுவக் கட்டுப்பாடுடன் கூட நடத்துவதுண்டு. ஆனால் அதே தாய் அண்டை அயலாரிடம் தன் குழந்தையை விட்டுக் கொடுக்கமாட்டார்.!!
மிக அழகாகப் பல நேர்மறைக் கருத்துக்களையும் சொல்லி, அதே சமயம் அவர் ஒரு நல்ல பிரதிநிதி என்று கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது அருமை சகா. மிக மிக அழகான இரங்கல்பாவுடன் முடித்திருப்பது மேலும் சிறப்பைக் கூட்டுகிறது. அவர் மட்டுறுத்தி நிறுத்தி வைத்திருந்த சிலவற்றிற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் தற்போதைய முதல்வர் நன்றாகச் செயல்படுவதாக ஜூனியர் விகடன் கழுகார் சொல்லியிருக்கிறார் என்பதையும் இங்குக் குறிப்பிடுகின்றேன். அவரும் ஜெஜெயின் நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லப்பட்டடுதானே! பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கீதா
முதல் ஆளாக வந்து கருத்திட்டு ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி சகா!
நீக்கு//ஜெஜெ அவர்கள் தமிழர் தான். கன்னடர் அல்ல// - ஒருவர் தமிழரா பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிப்பது பிறப்பு இல்லை, நடத்தை. அவ்வகையில் ஜெயலலிதா தமிழர்தாம் என்பதே என் கருத்தும்.
//அதனால்தான் தமிழக மக்கள் அவரை அம்மா என்று அழைத்தார்களோ?!!!!// - ஜெயலலிதாவை நம் மக்கள் 'அம்மா' என்றழைத்தது அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுப் பரபபிவிட்ட ஒரு பழக்கம். ஆனால் பழக்கி விட்டவர்கள் மறந்தாலும், அழைக்கப்பட்டவர் மறைந்தாலும் மக்கள் பேர் சொல்லும் பிள்ளைகளாக இன்றும் வலம் வருகிறார்கள்.
//மிக மிக அழகான இரங்கல்பாவுடன் முடித்திருப்பது மேலும் சிறப்பைக் கூட்டுகிறது// - உங்களுடைய பாராட்டுகளுக்கு உளமார்ந்த நன்றிகள்!
ஜெயலலிதாவை நம் மக்கள் 'அம்மா' என்றழைத்தது அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுப் பரபபிவிட்ட ஒரு பழக்கம். ஆனால் பழக்கி விட்டவர்கள் மறந்தாலும், அழைக்கப்பட்டவர் மறைந்தாலும் மக்கள் பேர் சொல்லும் பிள்ளைகளாக இன்றும் வலம் வருகிறார்கள். //
நீக்குஓ! அப்படியா! அது சரி...
ஆம் சகா! முதலில் பொதுமக்கள் அவரை ஜெயலலிதா என்றுதானே அழைத்து வந்தார்கள்? அ.தி.மு.க-வினர் அழைப்பதைப் பார்த்துத்தானே இவர்களும் அப்படி அழைக்கத் தொடங்கினார்கள்? அதனால்தான் சொன்னேன்.
நீக்குமீள்வருகைக்கு நன்றி!
தங்கள் கட்டுரைக் கருப்பொருளை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது.
அதுதான், அடுத்தவர்களிடத்தில்
தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத
இவருடைய குணம்!
தங்களுடைய ஒத்த கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குஉங்கள் பெரும்பாலான கருத்துகளுடன் எனக்கும் உடன்பாடுதான்.
பதிலளிநீக்குஓ அப்படியா? மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! நன்றி!
நீக்குஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
பல நாட்கள் கழித்து மீண்டும் உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா! வாழ்த்துக்கு நன்றி! கண்டிப்பாய் வருகிறேன்.
நீக்கு