.

திங்கள், ஜனவரி 09, 2017

இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?

Tanjore farmers in the clutches of death

ந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!

விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!

ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?

நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.

தமிழ்நாடு அரசே!...

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?

எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!

உண்மையில் உழவர்கள் உயிரிழக்கக் காரணம் பயிர் கருகிப் போய் விட்டது என்பதால் இல்லை. இப்படி மொத்த முதலீடும் வீணாகி விட்டதே, இதற்காக வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று அஞ்சித்தான். எனவே, தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தாலே போதும். உழவர்கள் உயிரிழப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தலாம்.

கூடவே, உழவர்கள் தனியாரிடம் வாங்கிய கடன்களுக்கு அரசே பொறுப்பேற்றுக் கொள்வது, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிப்பது, உழவர்கள் – வேளாண் தொழிலாளர்கள் ஆகிய அனைவருக்கும் இழப்பீடு அளிப்பது என உழவர்களின் மற்ற கோரிக்கைகளையும் அரசு இந்த நிமிடமே நிறைவேற்ற வேண்டும்.

மேலும், கள் விற்பனைக்குத் தடையை நீக்கச் சொல்லி உழவர் பெருமக்கள் பல காலமாக விடுத்து வரும் வேண்டுகோளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உடலையே உருக்குலைக்கும் சாராயமே ஆறாய் ஓடுகிற மாநிலத்தில் போதை தவிர வேறு எந்தத் தீங்கும் செய்யாத கள்ளைத் தடை செய்து வைப்பதால் உழவர்களின் வீடு இழவு வீடாவதைத் தவிர வேறு என்ன பயன்? எனவே, கள் மீதான தடையை அரசு உடனே நீக்க வேண்டும். இதைச் செய்தால், எப்பொழுது வேண்டுமானாலும் காலை வாரி விடக்கூடிய உழவுத்தொழிலை மட்டுமே வேளாண் குடும்பங்கள் அடிப்படை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் நிலை மாறும். உணவு, உடை முதலான அடிப்படைத் தேவைகளையாவது சமாளிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

இவை தவிர, கொள்ளிடத்திலும் மற்றுமுள்ள காவிரிப் பகுதிகளிலும் உழவர்களின் கோரிக்கைக்கேற்ப தடுப்பணைகள் கட்டி, காவிரியில் நீர் வரும்பொழுதாவது சேமித்து வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட வேண்டும்! கூவம் முதல் நொய்யல் வரை எல்லா நதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்! நீர் நிலைகள் அனைத்தையும் தூரெடுக்க வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இடங்களிலெல்லாம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதை முற்று முழுதாகக் கண்டறிந்து அத்தனை நீர்நிலைகளையும் - ஒரு சிறு வாய்க்கால் கூட விடாமல் - மீட்டெடுக்க வேண்டும்!

இவை அனைத்தையும் செய்தால்தான் மீண்டும் இப்படி உழவர்கள் உயிரிழக்காமலும் குடிநீர்ப் பஞ்சம் வராமலும் தடுக்க முடியும். இல்லாவிட்டால், தமிழ்நாடு உணவும் தண்ணீரும் கிடைக்காத, உயிர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறி விடும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அரசியலாளர்களே, தமிழ்நாடு என ஒன்று இருக்கும் வரையிலும் இங்கு மனிதர்கள் வாழும் வரையிலும்தாம் நீங்கள் அரசியல் செய்ய முடியும்! இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால், குடிமக்கள் நாங்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் போய்க் கூடப் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்கள் நிலை...? தமிழ்நாட்டுக்கு வெளியே போய் திராவிடம், தமிழ் தேசியம், ஈழம், காவிரி என்றெல்லாம் உங்களால் அரசியல் செய்ய முடியுமா? ஆக, உழவர்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ இல்லாவிட்டாலும் உங்களுக்காகவாவது தமிழ்நாட்டு உழவுத்துறையைக் காப்பாற்ற முன்வாருங்கள்!

இந்திய அரசே!...

குடிமக்களில் 60% பேர் வேளாண்மை எனும் ஒற்றைத் துறையை, ஒரே தொழிலைச் சார்ந்திருக்கும் நாடு இது. ஆக, அந்த ஒரு தொழிலை இலாபகரமானதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும்; நாட்டில் பெரும்பான்மை மக்கள் முன்னேறி விடுவார்கள். இதனால் சமூகத்தின் வாங்கும் திறன் உயர்வதால் உற்பத்தி, சேவை என மற்ற துறைகளும் செழிப்படையும். மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டிலுள்ள அத்தனை பேரின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விடும். ‘குடி உயரக் கோன் உயர்வான்’ என்பது போல, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டால் நாடும் வல்லரசு ஆகும்.

ஆம்! வேளாண்மை எனும் ஒரே ஒரு தொழிலைச்  சீரமைத்தாலே மொத்த நாட்டையும் முன்னேற்றி விடலாம். அதை விட்டுவிட்டு 70 ஆண்டுகளாகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

உள்நாட்டு உற்பத்தியே முன்னேறாத நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அழைப்பது, வங்கிச் சேவையே நாடு முழுக்கச் சென்று சேராத நிலையில் தொகையற்ற பொருளாதாரத்தைக் (Cashless Economy) கட்டாயப்படுத்துவது, இணைய வசதியே எல்லார் கைக்கும் போய்ச் சேராத சமூகத்தில் இணைய வழிப் பணப் பரிமாற்றத்தைத் திணிப்பது, குடிநீருக்காக நாள்தோறும் கால் ஒடிய அலையும் மக்களின் வரிப் பணத்தை வைத்து நிலாவில் நீர் கண்டுபிடிப்பது என இல்லாத கிறுக்குத்தனங்களையெல்லாம் செய்து திரியும் இந்த ஆட்சியாளர்கள் என்றாவது ஒருநாள் நாட்டை வல்லரசாக்கி விடுவார்கள் என இன்னும் நம்புகிறார்கள் கோமாளி மக்கள். அதனால்தான் ஒரே அறிவிப்பில் நாட்டையே தூய்மைப்படுத்தி விட்டார், புதிய இந்தியா பிறந்து விட்டது என்றெல்லாம் குதித்தார்கள்.

இப்படிப்பட்ட மேதைமை மிகுந்த மக்களுக்கும் மேன்மை தங்கிய இந்திய ஆட்சியாளர்களுக்கும் இந்த நேரத்தில் நான் முன்வைக்க விரும்பும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்! மனிதர்கள் உயிர் வாழக் கூட வக்கில்லாமல் சாகிற ஒரு நாட்டை, தொகையற்ற பொருளாதார வசதி இருப்பதால் மட்டும் வல்லரசு நாடு என எந்த உலக அரங்கும் ஏற்றுக் கொள்ளாது என்பதை அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது! 


மேற்படி கருத்துக்களை அன்றே சொன்ன மருதகாசியாரின் அரிய பாடல்!

பி.கு: கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்துத் தமிழ்நாடெங்கும் மாணவர்களும் இளைஞர்களும் பெரும் திரளாகப் போராடி வருகிறார்கள். தமிழ்ப் பற்றாளர்கள் எதிர்பார்ப்பும் இதுதான். ஆனால், உழவர்களே இப்படி வரிசை வரிசையாகச் செத்து விழும்பொழுது, அதற்காகக் குரல் எழுப்பாமல் இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டுக்குப் போராடுவது சரியா என்பதை அன்பு கூர்ந்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்! அதற்காக ஜல்லிக்கட்டுக்குப் போராட வேண்டா எனச் சொல்லவில்லை. இதே தளத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும் பீட்டாவைத் தடை செய்தால் என்ன என்று கேட்டும் போன ஆண்டே பதிவு எழுதியவன் நான். ஜல்லிக்கட்டுக்குப் போராடும்பொழுதே, கூடவே உழவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும்படியும் சேர்த்துக் குரல் எழுப்பினால் என்ன என்பதே என் கேள்வி. மாட்டுப் பொங்கல் என்பதே உழவர்களுக்கானதுதான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்களே அவர்கள்தாம். எனவே, அவர்கள் உயிர், வாழ்வுரிமை, குடும்பம், குழந்தை குட்டி பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜல்லிக்கட்டுப் பற்றி மட்டும் பேசுவது ஒரு சிறிதும் பொருளற்றது என்பதைத் தம்பி, தங்கைகள் உணர வேண்டும் எனக் கை கூப்பிக் கோருகிறேன்! 

❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி வினவு.

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

13 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை நண்பரே!/சகா

    தெளிவாக எல்லா கருத்துக்களையும் முன்வைத்துள்ளீர்கள். விவசாயம் எப்போது அரசியலில் சிக்காமல், உழவர்கள், மக்கள், மற்றும் நாட்டின் நலன் குறித்து ஆராயப்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு கவனிக்கப்படுகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டில் விவசாயம் வளர்ச்சி அடையும். அரசியலால், அரசின் மெத்தனத்தால் எவ்வளவு இழப்பு? உயிரிழப்பு? வேதனைதான். உங்கள் கருத்துக்களை கவனிக்க வேண்டியவர்கள் கவனித்தால் நல்லது...

    கீதா: மேற் சொன்ன கருத்துகளுடன்...நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பது பாமரனுக்கும் தெரியும். ஒரு நாடு விவசாயத்தில் வளர்ச்சி அடைந்து, சுய சார்புடன், நிறைவடைந்தான் அந்த நாடு வளர்ச்சியடைந்த நாடு எனப்படும். நம் நாட்டின் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போறா. பிற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அளவிற்கு இல்லை எனலாம்.

    விவசாயத்தில் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட வேண்டும். இணைய வழி விற்பனை என்பதெல்லாம் ஒழிய வேண்டும். விவசாயிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேணும் ஆனால் அதே சமயம், இயற்கையுடன் இணைந்து இலாபகரமாக இருக்க வேண்டும் என்றால் இப்போதைய தேவை காந்தீய பொருளாதாரம். அது கிராமங்களின் வளர்ச்சிக்கும், குடிசைத் தொழிகளின் வளர்ச்சிக்கும் உதவும். கிராமங்கள் சார்ந்த நம் நாட்டிற்கு மிக மிக அவசியமான ஒன்று. இப்போது கிராமங்கள் அழிந்து வரும் நிலையில் இப்பொருளாதாரம் பல வகைகளில் உதவும். உழவர்கள் தங்கள் விளைச்சல் பொருட்களை அவர்களே நேரடியாகச் சந்தைப்படுத்த வேண்டும். இடைத்தரகர்களாகப் பன்னாட்டுநிறுவனங்களோ, என் இந்திய நிறுவனங்களோ கூட அதில் வரக் கூடாது!

    நல்ல கட்டுரை சகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான, கட்டுரையில் நான் சொல்லத் தவறிய பல கருத்துக்களையும் நினைவூட்டி மறுமொழி இட்டமைக்குத் துளசி ஐயா, கீதா அம்மணி இருவருக்கும் மிக்க நன்றி!

      எப்பொழுதும் கீதா சகோதான் கருத்திடுவார். இந்த முறை நீங்களும் உங்கள் கருத்தைத் தெரிவித்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் துளசி ஐயா!

      குறிப்பாக, "அரசியலால், அரசின் மெத்தனத்தால் எவ்வளவு இழப்பு? உயிரிழப்பு?" என்கிற உங்கள் கருத்தை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஒரே ஓர் அறிக்கை ஐயா! மிஞ்சிப் போனால் அதை வெளியிட ஓர் ஒரு மணி நேரம் ஆகுமா, இதனால் ஏற்படும் இழப்பு எவ்வளவு அதை ஈடுகட்டுவது எப்படி எனத் துறைசார் வல்லுநர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க? அதைக் கூடச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஆறு, எட்டு, பத்து என உழவர்கள் செத்து விழுந்து கொண்டே இருப்பதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்களெல்லாரும் மனிதப் பிறவிகள்தாமா என்கிற ஐயம் எழுகிறது நமக்கு.

      கீதா சகா! நீங்கள் கூறிய கருத்துக்களையும் கூட நான் அப்படியே வழிமொழிகிறேன். ஒன்றே ஒன்று தவிர.

      "இணைய வழி விற்பனை ஒழிய வேண்டும்" என்றிருக்கிறீர்கள். அதை விட, இணையத்தில் உழவர்களே நேரடியாய் விற்பனை செய்ய அரசு வசதி செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அல்லது இணைய வழி விற்பனையில் தனியார்களை அறவே தடை செய்து, அரசே எல்லா விளைபொருட்களையும் மொத்தமாக நல்ல விலைக்கு வாங்கி இணையத்தில் நேரடி விற்பனை செய்தாலும் தேவலாம்.

      இந்தப் புதுச் சிந்தனைகள் எல்லாம் உங்கள் கருத்துக்களைப் படித்ததால் தோன்றியவை. மிக்க நன்றி!

      நீக்கு
    2. சகா அதைத்தான் தொழில்நுட்பத்துடன் என்று சொல்லியிருக்கிறேன்...தனியாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன்....இணையப் பயிற்சி கொடுத்து....இல்லை என்றால் ஒவ்வொரு கிராமத்திட்கும் கூட்டுறவு மையம் வைத்து, அங்கு இணையச் சேவை வைத்து அதற்குப் படித்த இளைஞர்கள் ஒரிருவரை நியமித்து உழவர்களுக்கு இணையம் வழிச் சந்தைப்படுத்த உதவலாம்....இன்னும் பேசலாம் நிறைய...

      கீதா

      www.tamilvaasi.com/2015/02/whatsapp-chrome.htmlள்

      நீக்கு
  2. நல்லதொரு கட்டுரை.

    தொடரும் சோகம்..... அரசு நல்ல நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! வெகுநாள் கழித்து மீண்டும் உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி! உங்கள் பாராட்டுக்கும் இசைவான கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. நண்பரே! உங்கள் பதிவுகளை, அரையாண்டுத் தேர்வு, திருத்துதல், விடுமுறை என்று வாசிக்க முடியவில்லை. இது கீதா எனக்கு விடுமுறையில் இருக்கும் போது மின் அஞ்சலில் வந்திருப்பதை உடனே தெரிவிக்கவும், நான் வாசித்து உடனே கருத்தை மின் அஞ்சலில் அனுப்ப முடிந்தது. அந்த நேரத்தையும் தவற விட்டிருந்தால் வாசித்துக் கருத்துச் சொல்லியிருக்க முடியாது. இனி வாசிக்கிறேன். இதற்கு முன்னான பதிவுகளையும் கீதா எனக்கு அனுப்பித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். வாசித்துக் கருத்து சொல்கிறேன்.

    மிக்க நன்றி நண்பரே! புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லவே இல்லையே! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! இணையத்தைப் படிப்பதிலும் கருத்திடுவதிலும் தங்களுக்குள்ள நடைமுறைச் சிக்கல்களை விரிவாகவே அறிவேன். இருந்தும், என் பதிவுகளைப் படித்துக் கருத்திடுவதாகச் சொன்னது குறித்து மிக மிக மகிழ்ச்சி!

      தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், பிறந்தநாள் தவிர வேறு எதற்கும் நான் வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இல்லை ஐயா! அதனால்தான் தங்களுக்கும் சொல்லவில்லை. ஆனால், யாராவது வாழ்த்தினால் பதில் வாழ்த்துச் சொல்லும் நாகரிகம் மட்டும் உண்டு! :-D

      எனவே, தங்களுக்கும் கீதா சகாவுக்கும் தங்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :-)

      நீக்கு
  4. சகா! பேசாமல் என்னை விவசாயத்துறையின் மந்திரியாக்கச் சொல்லுங்கள்!!! இல்லை என்றால் அதன் செயலர் பதவியைக் கொடுக்கச் சொல்லுங்கள். ஏன் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டுவதற்கு தொகுதியில் நின்று ஓட்டுகள் பெற வேண்டுமா என்ன? அரசியல் வேண்டுமா என்ன? ஹ்ஹஹஹஹஹ் சும்மா விளையாட்டிற்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, வேளாண் அமைச்சர் மட்டுமில்லை சகா, வேறு எந்த அமைச்சருக்கும் பெரிய அதிகாரங்கள் இல்லை. எனவே, பேசாமல் முதலமைச்சராகி விடுங்கள்! ஒரே நாளில் தமிழ்நாட்டையே தூய்மையாக்கி விடலாம்! :-D

      நீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்படி கருத்து, கருத்திட்டவரின் விருப்பத்திற்கிணங்க நீக்கப்பட்டது.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்