ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையால் புண்பட்டுப் போயிருக்கின்றன தமிழ் அன்புள்ளங்கள்! இருக்கிற கொந்தளிப்பைப் பார்த்தால் பலர் இந்த முறை பொங்கலே கொண்டாடாமல் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது! அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால் அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள் தமிழர்களே! காரணம், அது நம் எதிரிகளுக்குத்தான் வெற்றி!
பீட்டா (PETA) போன்ற விலங்கு நல அமைப்புகளும் மற்றுமுள்ளோரும் ஏறு தழுவலைத் தடை செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்குப் பின்னணியில் பல வணிகக் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருவது உண்மைதான். அவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழர் மரபு - பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் நோக்கமும் இதனுள் இருப்பது நாம் அறியாததில்லை. எனவே, ஏறு தழுவல் எனும் ஒரு மரபு அடையாளத்துக்காக நாம் பொங்கலையே தவிர்த்தால் தமிழர் திருநாள், உழவர் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு முதலான இன்ன பிற அடையாளங்களையும் நாமே விட்டுக் கொடுத்ததாக ஆகி விடும் தோழர்களே! தமிழ் இன அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் அற்பர்களுக்கு இது மேலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத்தான் இருக்கும்.
ஆகவே, முன்னெப்பொழுதையும் விட இந்தாண்டுப் பொங்கலை இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவோம்! ஏறு தழுவல் எங்கும் போய்விடாது. அதற்கான ஒப்புதல் கிடைக்கும்பொழுது கிடைக்கட்டும்! அதற்காக மற்ற அடையாளங்களை நாமே அழித்துக் கொள்ள வேண்டா!
தமிழ்ப் பகைவர்களின் மருள் நெஞ்சை அடுப்பாக்கி
அவர்தம் வயிற்றெரிச்சலையே நெருப்பாக்கி
எதிரிகளின் காதுகள் செவிடுபடக் குலவையிட்டு
ஏறுதழுவல் குறித்த விழிப்புணர்வை உலகுக்கே படையலிட்டு
தமிழர் இல்லந்தோறும் பொங்கல் பொங்கட்டும்!
தமிழ் மரபின் சிறப்புக்கள் ஒளிருக திக்கெட்டும்!
போகி, பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப் புத்தாண்டு, காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
படங்கள்: நன்றி ஜல்லிக்கட்டு Jallikattu, நகர்முரசு,
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!