சமூகநலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்த காந்தியவியலாளர் ஒருவரின் உயிர்த்தீ இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது!
நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்! தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார் அவர்கள்; இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி அவர்கள்; அவ்வளவு ஏன், இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கூட சங்கரலிங்கனார் அவர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரிசையில் மதுவிலக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தித் தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவியலாளர் சசிபெருமாள் அவர்கள்!
இன்றில்லை, நேற்றில்லை, ௪௬ (46) ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ
அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள் ஐயா. இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் ஈந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. குறைந்தது, அவரது இந்த ஈகைச் (தியாகம்) சாவு குறித்து நம் முதல்வர் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடும்பத்தினரையும் அரசு கைது செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டது அட்டூழியத்தின் உச்சம்!
ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் ஈகை, மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம்.
ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக நினைத்த மாத்திரத்தில்